Loading

அத்தியாயம் 16

திருமணத்திற்கு முதல்நாள் மாலை நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ளலாமென ஏற்கனவே பேசி வைத்திருந்தனர். அதன்படி அன்று இரு வீடுகளும் உறவுக் கூட்டங்களால் நிறைந்திருந்தது.

விடியும் முன்பே விழித்துக்கொண்ட நிவர்த்திகாவின் எண்ண அலைகளில் மூழ்கி, மிதந்து, நீந்தி, எழுந்து என பிரமோத் மட்டுமே வலம் வந்து கொண்டிருந்தான்.

வேலைக்கு சென்ற கடைசி நாளன்று பிரமோத் வந்திருக்கிறானா என ஆவல் கொண்டு தேடியபடி சிற்றுந்தில் இருந்து இறங்க, அவனும் அவளை ஏமாற்றாமல் வந்திருந்தான். அன்று அவன் கண்கள் தன்னை என்னமாய் ஊடுருவி ஆராய்ந்தது என்ற வியப்பு இன்றளவிலும் அவளுக்கு இருக்கிறது.

நிச்சயம் இதற்குமுன் பிரமோத்தை இவள் அப்படியோர் தீவிர, அழுத்த, ஆராயும் பாவனையில் பார்த்ததேயில்லை. சின்னப் பிள்ளையிடம் பொம்மையைப் பிடுங்கிக்கொண்டு, அதன் அழும் முகத்தை ரசிக்கும் பாவனையிலேயேதான் இதுவரை அவனைக் கண்டிருக்கிறாள். சித்தாராவிடம் அவன் அப்படித்தான் வேடிக்கையாக நடந்துகொள்வான்.

தன்னுடனான தனித்த முதல் சந்திப்பில் கோபமுகம் காட்டினான். இரண்டாம் சந்திப்பில் திருமணத்திற்கு சம்மதமா எனக் கேட்டு, தன்னைக் குழப்பிவிட்டு சென்றதாக உணர்ந்தாள். அதன்பின் மறுநாள் பார்த்தபோது தான் அந்த ஆராயும் பார்வை. அது குறுகுறுப்பூட்டினாலும், இவள்‌ மனதிற்கு பிடித்திருந்ததுதான் இவளுக்கே விசித்திரம். பின் அவன் நட்பாக பேசிய போது இன்னும் பிடித்தது.

ஆனால் அவன் என்னுடனான திருமணம் பிடித்தமா எனக் கேட்ட போது ஏனோ உள்ளுக்குள் நடுக்கமேற்பட்டதை இவளால் தடுக்கவே முடியவில்லை. சித்தாராவைக் காதலித்துவிட்டு எப்படி அவனால் தன்னுடன் மனம் ஒன்றி வாழ முடியும்? ‘நீ சித்தாராவை மறந்து முழு மனதுடன் முற்றுமுழுதாக என்னை ஏற்க சித்தமாக இருக்கிறாயா?’ என்ற மாபெரும் மகத்தானக் கேள்வியை அவனிடம் கேட்க முடியாது மௌனமேற்றாள்.

பிரமோத்துடனான வாழ்வு எப்படியிருக்குமோ என்ற கலக்கத்தின் வெளிப்பாடே அன்றைய அவள் கண்களின்‌ பரிபாஷை!

தன் கண்முன்னேயே வேறொரு பெண்ணிடம் காதல் என்று சுற்றியவனை ஏன் திடமாக மறுக்கவில்லை? தன் மனம் அவன்‌ பின்னே போவது நிஜமென்றால் ஏன் அவனைத் திடமாக ஏற்கவுமில்லை? அன்பிருக்குமிடத்தில் பீதி இருக்கக்கூடாதே என்ற குழப்பம் வேறு! ஏதோ கண்ணுக்குத் தெரியாத ஒரு சிறு பிசிறில் இவளுள்ளம் ஊசலாடியது.

அதன்பின் திருமண உடைகள், நகைகள் வாங்க வேண்டி குடும்பத்தாருடன் ஓரிரு முறை இருவரும் சந்தித்தனர். அப்போது பேசவில்லை. ஆனால் அப்போதும் சில காணொளி அழைப்பிலும் அவன் தன்னை நன்றாக பார்வையிடுகிறான் என்றும் அந்தப் பார்வையும் ஆழமாய், ஆராய்ச்சியாய் தன் முகத்தில் படிகிறது என்றும் உணர்ந்திருந்தாள்.

இப்படியாக சோகமும் சுகமுமாய் பிரமோத்தின் நினைவுகளில் லயித்துக் கிடந்தவளின் கவனத்தை, ‘எங்கிருந்து வந்தாயடா எனைப் பாடுபடுத்த – நீ எனைப் பாடுபடுத்த…’ எனப் பாடி தன்னிடம் திருப்பியது அவளின் சாம்சங். அவன்தான்.

‘இப்போதானே நினைச்சேன்?’ என்றதொரு மென்முறுவலுடன் அழைப்பை ஏற்றாள்.

“ஹோய்!” -அவன் குரல்.

நானிங்கே மரித்துவிட்டேனா என்ன?
ஏனிந்த சில்லிப்பு?

“என்ன இவ்ளோ காலைலயே?”

“ம்ம், சும்மாதான்.”

இரு அலைப்பேசிகளும் இரண்டு நிமிடங்கள் ஏகாந்தமானதொரு மௌனத்தை அனுஷ்டித்தன.

இந்த இரண்டு மாதங்களில் அவ்வப்போதான காணொளி உரையாடலில் பிரமோத் நிவர்த்திகாவை அறிந்துகொள்ள முயன்றிருந்தான். அதன்படி அவள் எப்போது இதழ் மலர்வாள், இமை மலர்த்துவாள் அல்லது தாழ்த்துவாள், எப்போது சங்கடமாக அல்லது நாணத்துடன் கழுத்தின் பக்கவாட்டு பூனைமுடிகளைத் தடவிவிட்டுக் கொள்வாள் என்றெல்லாம் அவளின் உணர்ச்சி வெளிப்பாடுகளை ஆழ்ந்து உள்வாங்கி மனதில் தேக்கி, தேக்கி அங்கே இடப்பற்றாக்குறையை ஏற்படுத்தியிருக்கிறான்.

மற்ற பெண்களின் இயல்பு போல் இவளிடம் இதழ் சுழிப்பது, வளைப்பது, மூக்கை சுருக்குவது, போன்ற எந்த பாவனைகளும் இல்லை. எல்லாவற்றுக்கும் சேர்த்து புருவங்களும் இமைகளும் கண்களுமே அதிக வேலைகள் செய்தன. பிரமோத் அவற்றை விரும்பியே ரசித்தான்.

தினமும் அழைப்பெடுத்துப் பேசிவிடுவான். ஒருமுறை இருவரும் பேசியபோது,

“என் கேள்விக்கு நீ இன்னும் பதிலே சொல்லலையே?” எனக் கேட்க, அந்தப்பக்கம் வழக்கம்போல் நிசப்தம்.

“நிவர்த்திகா!”

“டெய்லி இதே கேட்கறீங்க.”

“பொண்ணோட அபிப்பிராயம் கேட்காம கல்யாணம் செஞ்சுட்டாங்கன்னு யாரும் கிளப்பிவிட்றக் கூடாது பாரு…”

சற்று மௌனத்தின் பின் அழைத்தாள், தயக்கமாக ஆனால் அழுத்தமாக! “பிரமோத்!”

“ம்ம்.”

வார்த்தைகளைக் கற்றுக் கொண்டு அதன்பின் பேசுகிறாளோ எனும்படி ஒவ்வொருமுறையும் கால் நிமிட மௌனத்தின் பின்னேயே பேசினாள். “இனி இந்தக் கேள்வியைக் கேட்க வேணாமே ப்ளீஸ்…”

ஏனென்று அவன் கேட்கவில்லை. ஏனோ அவள் குரலுக்கு கீழ்படியத் தோன்றியது. இத்தனை நாள் அவள் முகபாவத்தைக் கற்றிருந்ததில், இனிய‌ மென்குரலில் திளைத்திருந்ததில் விருப்பமின்மையை அவன் காணவில்லை; ஆயினும் அந்தக் கலக்கமும் மாறவில்லை. ஆக அவள் வாய்மொழி வாயிலாக கேட்டு விடவேண்டியே தினமும் ஒரே கேள்வியை மறக்காமல் கேட்டுக்கொண்டிருந்தான்.

இப்போது பரீட்சை எழுதாமலேயே ‘பாஸ் மார்க்’ கிடைத்துவிட்டதைப் போலிருந்தது. அதற்கான உற்சாகம் ஏதுமில்லாமலேயே, “சரி.” என்றிருந்தான்‌ அமைதியாக!

அவள் எதையோ மனதில் வைத்து மருகுகிறாளெனப் புரிந்தது. அதன்பின் அந்தக் கேள்வியை அவன்‌ மறந்தும் கேட்கவில்லை. ஆனால் இன்று அவன் மௌனம் அதைக் கேட்பதாக அவளுக்கு தோன்றியது.

அழைத்தாள். “பிரமோத்!”

“ம்ம்.”

“என்… எனக்கு விருப்பம்தான்.” என அவன் கேட்காத கேள்விக்கு இவள் பதில் சொல்ல,

“ம்ம், உங்கப்பாம்மாவுக்காக!” என்றான் அவன், அதே அமைதியோடு!

அதுவும் உண்மைதானே என மௌனத்தை நீட்டித்தவள், தன்‌ மனதினைத் திறந்து மீட்டவில்லை. “நீங்களும் உங்கத் தாத்தாவுக்காக தானே…” என இழுக்க,

‘தாத்தா பார்த்த பெண்தானே?’ என அவனும் கால்நிமிட காலம் அவளின் மௌனத்தைக் கடன்வாங்கினான்.

பிரமோத் ஏன் தன்னிடம் மட்டும் இப்படியோர் ஆழ்ந்த மனோபாவத்துடன் இருக்கிறானென எப்போதும் போல் இப்போதும் யோசித்தாள் நிவர்த்திகா. அவன் எதிலும் நேர்த்தியும் ஆழ்ந்த செறிவும் உடையவனென்றும், அப்படிப்பட்டவன் தன் சரிபாதியாக வர இருப்பவளின் அழுத்த குணத்தை ஆழ்ந்து புரிந்துகொள்ள முயல்கிறானெனவும் இவளுக்கு தெரியவில்லை.

“தாத்தா பார்த்த பொண்ணுதான். ஆனா தாத்தாவுக்காக மட்டுமில்ல.”

‘அப்படியெனில் அவனுக்காகவும் தானென சொல்கிறானோ?’

“எங்க வீட்ல எல்லாருக்குமே உன்னைப் பிடிச்சிருக்குது.” அவள் சொல்லாமல் தானும் நேரடியான பதிலைத் தர இவனுக்கு மனமில்லை. அவர்கள் வீட்டில் அவனும்தானே அடக்கம்?

‘உங்களுக்கு?’ என்று தொண்டை வரை வந்த வார்த்தையை, அவளின் குண இயல்பு வெளிக்கொணர விடவில்லை‌.

அதன்பின் இருவரும் கதைக்காமல் நொடிகளை வதைத்து, சலிக்காமல் மௌனத்தின் மடியில் கதகதப்பைத் தேடினர்.

“பிரமோத்.”

அவள் அழைப்பில் நள்ளிரவு மழையின் கதகதப்பை
உள்ளிருந்து அனுபவிப்பது போலிருந்தது அவனுக்கு. “ம்ம்.”

‘ம்ம்’-ல் மட்டுமே மனதை மயக்கக்கூடிய ரசவாதத்தின் மகிமையை நெய்து வைத்திருக்கிறானா என்றிருந்தது அவளுக்கு. “உங்க வீட்ல எப்போ சாமி கும்பிடறாங்க?” பேச்சை நீட்டிக்க வேண்டி தெரிந்த பதிலுக்கான கேள்வியைக் கேட்டாள்.

அங்கே சுப காரியத்தின் போது மணமக்களின் தத்தம் வீடுகளில் முந்தைய நாள் காலையில் புத்தாடைகள், நகைகளை பூஜையறையில் வைத்து நமஸ்கரிப்பது வழக்கம். அந்த சுப நிகழ்விற்கு நெருங்கிய சொந்தங்களை மட்டும் அழைப்பார்கள். சம்பந்தக்காரர்கள் வீட்டிற்கு செல்வது வழக்கத்திலில்லை.

அதனால் அவளுக்கான பதிலைச் சொன்னவன் வேண்டுமென்றே கேட்டான். “பத்துமணிக்குன்னு சொன்னாங்க. நீ வர்றியா?”

களுக்கென சிரித்தாள். “நீங்க வந்து கூட்டிட்டு போறதுன்னா வர்றேன்.”

“பார்றா! சரி, இன்னிக்கு டியூக்’கிட்ட சொல்லி வைக்கறேன்.”

“என்னன்னு?”

“உன்னைச் சொந்தம் கொண்டாட‌ புதுசா ஒருத்தி வரப் போறான்னு!”

புதரின் கும்மிருட்டுக்குள் எதிர்பாராமல் விழுந்த ஏகாந்தத்தூறலில் பதறியோடி, அறிமுகமற்ற கரம்பற்றி, அலாதியாய் ரீங்கரிக்கும் மின்மினிகளாய், நிவர்த்திகா – பிரமோத்!

*************
நிச்சயதார்த்த நிகழ்வு அழகாய், கவிதையாய் அரங்கேறிக் கொண்டிருந்தது.

விஜி எம்சிஏ முதல் வருடம் முடித்திருந்தாள். அவளுக்கும் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நிவர்த்திகாவின் மனநிலையை நினைத்து கவலையில் இருந்தவளுக்கு, இன்றைய அவள் முகத்தின் தெளிவு நிம்மதியை அளித்தது.

“ஏ பிள்ள விஜி, இங்கே வா!” என ஒரு நடுத்தர வயதுப் பெண் அழைக்க,

மேடையில் நிவர்த்திகாவை விட்டு நகர்ந்து அழைத்தவளின் அருகே போய் கேட்டாள். “என்னக்கா?”

அந்தப் பெண் மிக மிக ரகசியமாக விஜியின் காதருகே வாய் குவித்து கேட்டாள். “இந்தப் பிள்ள எப்டி அவனைக் கட்டிக்க சம்மதிச்சா? மினி பஸ்ல அவன் அந்த மேனாமினுக்கி பின்னாடி அலைஞ்சதை இவளும்தானே பார்த்தா?”

அவளைப் போலவே விஜியும் மிக மிக ரகசியமாக, “நான் சொல்றதை யார்க்கிட்டேயும் சொல்லிடாதீங்க.” எனச் சுற்றிலும் பார்த்துவிட்டு, தன்னை ஆர்வத்துடன் நோக்கியிருந்த அக்காவிடம், “அவர் சித்துவைப் பார்க்க வரல யக்கோவ்! நிவியைப் பார்க்கத்தான் நெதமும் வருவார். அவளும் அவர் நிற்கறது நல்லா தெரியுற மாதிரி லெஃப்ட் சைட் ஸீட்லயே உட்காருவா! கவனிச்சிருக்கீங்களா?” எனக் கேட்டாள்.

“என்ன பிள்ள சொல்ற? இந்தப் பக்கம் வா!”

நன்றாக மேடையின் ஓரத்தில் வந்து நின்றுகொண்டு, “ஆமாக்கா! ரெண்டு பேருக்கும் ரொம்ம்ப நாளாவே லவ்வு. நம்மூர்ல தான் லவ்வு கிவ்வுன்னா செவுள்ளயே சாத்தி, அத்துவிட்டுடுவாகளே… அதான் யாருக்கும் சந்தேகம் வராம ரெண்டு பேரும் இப்டி பார்த்துக்கிட்டாக! உங்களுக்கு தெரியாதுக்கா. நெதம் காலைல காலேஜ்க்கு வர்றது கூட நிவிக்காக தான்! இல்லைன்னா சித்து வேற கல்யாணம் செஞ்சிருப்பாளா? இவரும்தான் சும்மா இருந்திருப்பாரா?”

“ஆத்தாடி!! இது புது டெக்னிக்காவுல்ல இருக்குதுஉ…”

‘ம்க்கும்! இவ்ளோ நேரம் கூட இந்த டெக்னிக் என்‌ லிஸ்ட்லயே இல்லயாம்!’ என மனதினுள் நினைத்தவள், “ஆமாக்கா. இதை நிவி என்கிட்ட மட்டும்தான் சொல்லிருக்கா. இப்போ நான் உங்களுக்கு சொல்லிருக்கேன். ப்ளீஸ்கா யாருக்கும் தெரியாம உங்க மனசோடயே வச்சுக்கோங்க.” என, இன்னும் சற்று நேரத்தில் மண்டபமே இந்த செய்தியில்தான் ஜகஜோதியாய் இருக்கப் போகிறது என்று தெரிந்தே கெஞ்சும் பாவனையில் சொல்லிவிட்டு, அந்தப் பெண் விடுவிடுவென கீழே இறங்குவதை நமுட்டுச் சிரிப்புடன் பார்த்திருந்தாள்.

சங்கரன் பூரிப்புடன் பேரனின் கல்யாணக் கோலத்தைக் கண்களில் நிறைத்துக் கொண்டிருந்தார்.

“மிஷன் வெற்றியடைஞ்சதுக்கு வாழ்த்துகள் தாத்தா.” என்றான்‌ அவரின் மகிழ்வில் பங்கெடுத்துக் கொண்ட பாலா.

“நீயும் ரொம்ப உதவி செஞ்சிருக்கப்பா.” என அவன் தோளில் தட்டினார் சங்கரன்.

“ஆங்! மிஷன் சக்ஸஸ் ஆனதுக்கு ட்ரீட் வேணுமாக்கும்.”

“உனக்கு ஒரு பொண்ணைப் பார்த்துடவா?”

“ஆத்தாடி… எஸ்கேப்!”

“ஹஹ்ஹஹ… அவன் கூடப் போய் நில்லுடா. இல்லைன்னா அவனுக்கு சந்தேகம் வந்துடும்.” என்றவர், வந்திருந்த உறவினர்களை வரவேற்க போனார்.

வாசலில் நின்றிருந்த ஆர்த்தியின் கணவன் வசந்த், “நாளைக்கு காலைல குறிச்ச நேரத்துக்கு கொண்டு வந்து தரலைன்னா காசைக் கண்ல காட்டமாட்டேன்.” எனப் பூக்கடையில் இருந்து வந்த பையனிடம் கறாராக பேசிக் கொண்டிருந்தான்.

ஸ்ரீ, “அதெல்லாம் கொண்டு வந்துடுவான். நீங்க வாங்க வசந்த், எல்லாரும் ஒண்ணா ஃபோட்டோ எடுத்துக்கலாம். உங்க வீட்ல (ஆர்த்தி) தேடறாங்க. அத்தை, மாமாவையும் கூப்பிடுங்க.” என்றழைத்தான்.

இப்படியாக ஒவ்வொருவரும் நிறைந்த மனதுடனும் உள்ளன்புடனும் விழாவை சிறப்பித்தனர்.

ஏற்கனவே பிரமோத் வசீகரமும் கம்பீரமுமானவன்தான். இன்று அந்த அழுத்தமான பச்சைநிற நீண்ட கால்சட்டையிலும் டக் இன் செய்திருந்த ஆலிவ் பச்சை முழுக்கைச் சட்டையிலும் பேரழகனாய் இருந்தான்.

நிவர்த்திகாவும் அவன் உடை நிறத்திலேயே லெஹங்கா அணிந்திருந்தாள். அது அவளின் வனப்பை கூடுதலாய் எடுத்துக் காட்டியது. அளவான ஒப்பனையில் அழகு மெருகேறியிருக்க, அவள் கண்கள் அவனைக் காணும்‌ போதெல்லாம் ஒளிர்ந்தது.

பிரமோத் மனதில் இன்னதென்று புரியாத உணர்வில் தத்தளித்தான். இமை தூக்க மறுக்கிறாளென்று மருகியவனுக்கு, அவள் இன்று அந்த இமைகளை விலக்கி, விழிகளில் அப்பட்டமான காதலுணர்வை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறாள். அதன் எதிரொலியாய் அந்த புன்னகை வேறு!

நிச்சயம் அவன் அவளிடம் அப்படியோர் காதல் பார்வையை எதிர்பார்த்திருக்கவே இல்லை. நிமிடத்திற்கு நிமிடம் பார்த்தாள்; விரலில் மோதிரம் அணிவிக்கும்போது பார்த்தாள். யாரிடமாவது அறிமுகப்படுத்த வேண்டியிருந்தால் பார்த்தாள்; வந்தவர்கள் வாழ்த்தும்போது பார்த்தாள். பிரமோத் தான் திணறிப் போனான்.

‘தான் தான் அவளைத் தவறாக புரிந்துகொண்டோமோ? அந்தக் கண்கள் பேசும் மொழியைப் படிப்பதில் இன்னும்‌ பயிற்சி வேண்டுமோ?’

ஸ்ரீதரன் சொன்ன, சிரிப்பை இயற்கையாகவே ஒட்ட வைத்த முகம், பிரியா சொன்ன சின்ன சிரிப்பிற்கும் ரசிகனாக்கும் முகம், அவனின் அஷோக் சித்தப்பா சொன்ன லட்சுமி கடாட்சம் பொருந்திய முகம், அவன் அன்னை சொன்ன லட்சணமான முகம், அமுதினி சொன்ன ஸ்மைலிங் முகம்… அது இன்று இவனைப் பித்தனாக்கிக் கொண்டிருந்தது.

‘இப்டி‌ மனுஷனைப் பைத்தியமா அடிக்கற சிரிப்பை வாங்கறதுக்கு பிரம்மன்கிட்ட என்ன டீலிங் பேசிருப்பா? யோவ் பிரம்மா! பார்த்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கே!’

விழா முடிந்து, இருவரும் மேடையை விட்டு இறங்கி சாப்பிட செல்லும்போது சொன்னான். “சும்மா சொல்லல. நிஜமா அழகா இருக்கே.”

“உங்க பக்கத்துல நிற்கறேன்ல?”

அதிகம் பேசாத, அழுத்தமான பெண்கள் பதில் கொடுக்கையில் நறுக்கு தெறித்தாற் போல் பேசிவிடுவார்கள். இவளும் அப்படித்தான். அவளிடம் பிரமோத் ரசிக்கும் அம்சங்களில் அதுவும் ஒன்று. இப்போதும் அவள் சொன்ன பதில் பிடித்திருந்தது. வசீகரமாய்ப் புன்னகைத்தான்.

விழா நன்முறையில் நிறைவடைந்த மகிழ்விலும் களைப்பிலும் மற்றவர்கள் கண்ணயர்ந்திருக்க, ஆர்த்தியின் கணவன் வசந்த், ஸ்ரீதரன், அசோகன், கதிரவன் என இன்னும் சில ஆண்கள் மறுநாளைய திருமணத்திற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தனர். அம்மண்டபத்துடன் மணமக்களும் விழித்திருந்த நள்ளிரவு நேரம்.

நேரங்காலம் தெரியாமல், ‘எங்கிருந்து வந்தாயடா…’ எனப் பாடிய சாம்சங்’ஐ துள்ளியெழுந்து எடுத்தாள் நிவர்த்திகா. சப்தத்தில் ஆர்த்தி புரண்டு படுப்பது தெரிந்தது.

அழைப்பை ஏற்றாள் இவள்.

“ஹோய்!”

“தூங்கலையா நீங்க?”

“உன் ரூம்க்கு வெளியேதான் நிற்கிறேன். வெளியே வா!”

“இந்நேரத்துக்கா?”

“ஆமா, சீக்கிரம் வா!” என்றவன் அழைப்பைத் துண்டித்துவிட்டான்.

நிவர்த்திகா தன்னைச் சுற்றி இருந்தவர்களைப் பார்த்தாள். ‘இத்தனைப் பேரைத் தாண்டி எப்டி?’

இவள்‌ மலைத்துக் கொண்டிருந்த இரு நிமிடங்களுக்குள் மீண்டும் அழைத்துவிட்டான். ஒருவாறாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, மெதுவாக கதவைத் திறந்து வெளியே வர, அவனைக் காணவில்லை.

இவள் இடப்பக்கம் தேட, வலப்பக்கத்திலிருந்து வந்தவன் அவள் கைப்பிடித்து இழுத்துச் சென்றான். அது பந்திக் கூடத்திற்கு போகும் பாதை.

மறுகோடியில் சமையல்காரர்களின் வேலைகள் நடந்துகொண்டிருக்க, இங்கே அவளை ஒரு தூணில் சாய்த்து, “தூக்கமே வரல. நீதான் ஏதோ பண்ணிட்ட!” என்று அவள்மேல் காதல் குற்றச்சாட்டு வைத்தான் பிரமோத்.

“நானும்தான் தூங்கல.” என்றாள் வெட்கம் மேலிட!

“அப்டியா? ஆனா நான் எதுவுமே பண்ணலயே… இப்ப பண்ணிடவா?”

“ம்ம்?” என நிமிர்ந்தவளிடம்,

“ஃபர்ஸ்ட் டைம், அட்ஜஸ்ட் பண்ணிக்கோ!” என்றபடி
அவனுக்கு மிகப் பிடித்த, அவளின் கழுத்தோரம் வரிவரியாய் படிந்திருக்கும் சின்ன முடிகளில் நான்கு விரல்களைப் பதித்து, பெருவிரலால் கன்னம்பற்றி, அவள் அதரங்களை ஐந்து நொடிகள் அவனுக்கு சொந்தமாக்கிக்கொண்டான்.

அதன் மென்மையும் அது தரும் இதமும் இன்னும் வேண்டி, சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு மீண்டும் இதழ் நோக்கி செல்ல, அவள் விழிகள் என்னவோ சொல்லிக் கொண்டிருந்தன. கவனித்தான்.

சொல்லவில்லை. ஏதோ கேட்கிறது.

“இப்போ என்னவாம்?” முத்தத்திற்கு ஆயத்த நிலையாக, தலை சாய்த்தபடியே கேட்டான்.

“அது… இது… உங்களுக்கு…”

இன்னும் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தவன், எப்போதும் அது விடுக்கும் விடுகதைகளை நினைத்துக்கொண்டு சொன்னான். “குறுக்கெழுத்து விளையாட்டு மாதிரி இன்ட்ரஸ்டிங்கா தான் இருக்குது. ஆனா ‘இந்த’ மாதிரி டைம்லயும் குறுக்கே வந்து டிஸ்டர்ப் பண்றது நியாயமே இல்லை.” என்றுவிட்டு, இந்த உரையாடல் நிகழ்ந்த நேரத்தையும் ஈடு செய்பவன் போல், அவள் இதழ்களில் இதமாய் பதிந்து, விரும்பியதைச் செய்து கதி மோட்சம் பெற்றவனாய் நிமிர்ந்தான்.

ஆனால் அவள் அம்முத்தத்தில் லயிக்கவில்லை. நினைவுகள் வேறெங்கோ பிடித்தமில்லா இடத்தில் இருந்தது. மூடியிருந்த விழிகளைத் திறந்தாலும் முன்பு போல் இமைதாழ்த்தியே இருந்தாள். அதில் ஏனோ இவனுக்கும் முன்பு போலவே சிறு எரிச்சல் எட்டிப்பார்த்தது. அது நாணமல்ல என்பது இவனுக்கு நிச்சயம். அந்த லேசான புருவ நெளிப்பு அவள் கலங்குகிறாளென்றது. ஏனாம்? ‘இது’ பிடிக்கவில்லையோ?

“நிவர்த்திகா.”

“……”

“லுக் அட் மீ!”

“யாராவது பார்த்தா வம்பாகிடும். போறேன்.” என்று திரும்பியவளின் கரம்பற்றி நிறுத்தினான்.

“லுக் அட் மீ, நிதி!” -கண்டிப்பானக் குரல்.

“கல்யாணத்துக்கு முன்னாடி தனியா பேசறதுலாம் ஒரு த்ரில்லிங்தான். ஆனா ரொம்ப நேரமாகிடுச்சு. ரெண்டு பேரும் தூங்கப் போங்க!” என்று சிரித்தபடி ஆர்த்திகா அங்கே வர, இவன் அவள் கரத்தை விட வேண்டியதாயிற்று. அதற்காகவே காத்திருந்தாற் போல் நிமிர்ந்தே பாராமல் ஓடிப்போனாள் நிவர்த்திகா.

“நீ எழுந்து போகும்போதே எனக்குத் தெரியும். கொஞ்சம் நேரம் கொடுக்கலாம்னு தான் பத்து நிமிஷம் கழிச்சு வந்தேன். என்னடி சொன்னார்?” என்று கேலியில் இறங்கிய ஆர்த்திக்கு பதிலுரைக்காமல், போர்வைக்குள் அமிழ்ந்துவிட்டவளின் கண்ணீர் அவள் காதுமடலைத் தொட்டு விளையாடியது.

‘ஃபர்ஸ்ட் டைமாம்! எவ்ளோ பெரிய பொய்! என் பிரமோத் என்கிட்ட உண்மையா இருக்கணும்னு நினைக்கறது தப்பா? ச்ச, நானே மறக்கணும்னு நினைச்சாலும் ஏன்தான் அவன் ஞாபகப்படுத்தறானோ!’ என‌ மனதோடு புலம்பினாள்.

‘இதை மனசுல வச்சுக்கிட்டு வாழ்க்கையை ஆரம்பிக்காதே நிவி!’ என்ற விஜியின் அறிவுரையைப் பின்பற்ற வேண்டும் என முயன்று தீர்க்கமாக சங்கல்பம் செய்தவள், கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

மூடிய கண்களுக்குள் பிரமோத் வந்து சொன்னான். ‘ஃபர்ஸ்ட் டைம்!’

 

தூறல் தூறும் 🌧️🌧️🌧️

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்