Loading

அத்தியாயம் 15

நிவர்த்திகாவிற்கு வேலையில் மனம் செல்லவேயில்லை.

பேருந்து நிறுத்தத்தில் பிரமோத்தைப் பார்த்ததும் யாரோ திடுமென நெஞ்சுக்குள் ஒற்றைப் பனித்துளியை உருட்டிவிட்டாற் போலிருந்தது. அவன்‌ தன்னைப் பார்க்கத்தான்‌ வந்திருக்கிறான் என்றதும் அந்தப் பனித்துளி பிரம்மாண்டமாய் உருவெடுத்துவிட்டாற் போன்ற பிரமை!

முதலில், ‘அத்தனை நாட்கள் சித்தாராவின் பின்னே சுற்றிவிட்டு இன்று அவளிடத்தில் தன்னை வைக்க நினைக்கிறானோ?’ என்று எண்ணமிட்டவள், ‘ச்சச்ச! இப்படி யோசிக்கக்கூடாது என்று விஜி சொல்லவில்லை?’ எனத் தலையில் குட்டிக்கொண்டாள்.

பூ வைத்துவிட்டு போனபின் அவன் வீட்டுப் பெண்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இவளைப் பார்க்க வந்தனர். ஆனால் அவனிடமிருந்து சிறு தகவலும் வந்திருக்கவில்லை.

அன்று சத்துணவுக் கூடத்து வேப்பமரத்தினடியில் சந்தித்ததுதான்… சண்டையிட்டது என்று‌ சொல்ல வேண்டுமோ? அன்று அப்படி கோபமாய் திருமணத்தை நிறுத்திவிடு என்றுவிட்டு போனவன், இன்று உனக்கு விருப்பமா என்று கேட்கிறான்!

என்னவாயிற்று இவனுக்கு?

‘பத்து மாதங்களில் சித்தாராவை மறந்துவிட்டானோ? அதனால்தான் தன் ஞாபகம் வந்துவிட்டதோ? அய்யோ! மறுபடியும் சித்தாராவா? நிவர்த்தீ…. தப்பு தப்பு!’

இப்படியாக அலைக்கழிந்தது பெண்மனம். தொடர்ந்து ஐந்து மாதங்களாக, விடுமுறை நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் தினமும் சின்னத்திரைத் தொடரைப் போல் காதலர்கள் என்ற முறையில் அவர்கள் இருவரையும் நேரடியாக பார்த்திருக்கிறாள். அதனால் அத்தனை சீக்கிரம் அவர்களின் காதலை(?) மறக்க முடியவில்லை. பிரமோத்தை நினைத்தால், அவனைத் தொடர்ந்த எண்ணங்களில் சித்தாராவும் சேர்ந்தே வருவதைத் தவிர்க்க முடியாது தவித்தாள்.

நாளைதான் அவள் வேலைக்கு வருவதில் கடைசி நாள். திருமண வேலைகளை ஆரம்பிக்கவிருப்பதால் அவளை ராஜினாமா எழுதிக் கொடுத்துவிடும்படி அறிவுறுத்தியிருந்தார் கதிரவன். திருமணத்திற்கு பிறகு அவர்கள் அனுமதித்தால் போய் கொள் என்றுவிட்டார்.

ஆக நாளைதான் அலுவலகத்திற்கு வருவது கடைசிநாள். ‘நாளையும் அவன் வருவானா?’ என்ற கேள்வியுடன் தன் முன் இருந்த கணினியை வெறித்திருந்தாள் நிவர்த்திகா .

****************

மாலையில் ஸ்ரீதரனுடன் வீட்டிற்கு வந்த பிரமோத் வரும்போதே, “சித்திம்மா, செம டயர்ட்!” என்று செல்லம் கொஞ்சிக்கொண்டு வந்தான்.

“காலைல எங்கேடா போய்த் தொலைஞ்ச? நீ திரும்ப வருவே… அந்தப் பிள்ள என்ன சொல்லுச்சுன்னு கேட்கலாம்னு காத்துக் கிடந்தேன்.” என அமலா கேட்கவும் திருதிருத்தான் பிரமோத்.

‘ஆஹா… கண்ணைப் பார்த்து நின்னுட்டு கேள்விக்கு பதில் வாங்காம வந்துட்டோமேடாவ்..?’

“நா… நாளைக்கு கேட்டுடறேன் சித்திம்மா.”

“எந்தப் பிள்ள? என்னக் கேட்கணும் சித்தி?” என சோபாவில் தளர்வாக அமர்ந்தபடி ஸ்ரீ கேட்க, அமலாவும் நிவர்த்திகாவைக் குறித்த பிரமோத்தின் உள்ளக்கிடக்கையை, மனத்தாங்கலைச் சொன்னார்.

பாய்ந்து சோபாவின் நுனியில் வந்து அமர்ந்த ஸ்ரீ, “காலைல நிவர்த்தியைப் பார்க்க போனயாடா? அதான் சபரியக்கா கிட்ட அப்டி உளறி வச்சியா?” என வெடித்துக் கிளம்பும் சிரிப்பை நிறுத்தி வைத்துக்கொண்டு, எதையோ கண்டுபிடித்தவன் போல் கேட்க,

பிரமோத் கடுப்பாகிப்‌போனான். “அம்மு, இன்னிக்கு ஹோம்வொர்க் உங்கப்பாகிட்ட படிப்பியாம். போடா, பிள்ளைக்கு பாடத்தைச் சொல்லி கொடு. வந்துட்டான் கதையடிக்க…”

“என்ன உளறினான் ஸ்ரீ?” எனக் கேட்ட அமலாவிற்கும் ஸ்ரீயின் சிரிப்பைக் கண்டு ஆர்வம் தொற்றிக்கொண்டது.

“சபரியக்கா மக சடங்காகிட்டாளாம்.”

“ஆமா, காலைல வந்து சொல்லிட்டு போனா. உங்கம்மாவும் பிரியாவும் அங்கேதான் இப்போ போயிருக்காங்க.”

“ஆங்! அந்தக்கா காலைல ரைஸ்மில்லுக்கு போன் அடிச்சு பொன்னியரிசி ஒரு மூடை வேணும்னு கேட்டுச்சு. நானும் பில்லைப் போட்டு நம்ம பையன் ஒருத்தன்கிட்ட கொடுத்தனுப்பிவிட்ருந்தேன்.”

“ஸ்ரீ, வேணாம்…” பிரமோத் போலி எச்சரிப்பு விடுக்க, கண்டுகொள்ளவேயில்லை அண்ணன்காரன்.

“அந்தக்கா அதுக்கு ரெண்டாயிர ரூவா நோட்டை பையன்கிட்ட தந்திருக்குது போல. அவன் ‘இது செல்லாக் காசு, அதுவும் போக என்கிட்ட சொச்சம் (மீதி பணம்) இல்லை’ன்னு சொல்ல, ‘அதெல்லாம் செல்லும். நான் ஸ்ரீ’கிட்ட பேசிக்கறேன்’னு சொல்லியனுப்பி விட்ருச்சு.”

“சித்திம்மா, காஃபி தருவீங்களா மாட்டீங்களா?” – சிணுங்கலானதொரு கோபத்துடன் பிரமோத்.

அவர், “அட இருடா! அப்புறம்?” என ஸ்ரீ சொல்லும் கதையை ஆர்வமாக கவனித்தார். இதற்குள் சப்தம் கேட்டு அரவிந்தன் வர, அவனும் ஜோதியில் ஐக்கியமானான்.

“எனக்கு மதுரைக்கு லோடு அனுப்ப வேண்டிய வேலை இருந்ததால, பையன் வந்து இப்டின்னு சொல்லவும், நான் இவனைத்தான் தேடினேன். அப்போ தான் இவன் வந்தான். ‘எங்கேடா போன?’ன்னு கேட்டதுக்கு இன்ஸ்டிடியூட்ல இருந்தேன்னு சொன்னான். மறுபடியும் ஆரம்பிக்காதேடா’ன்னு அட்வைஸைப் போட்டுட்டு, விஷயத்தைச் சொல்லி சபரியக்கா வீட்டுக்கு போயிட்டு வரச் சொன்னேன்.”

“ஆமா அந்தக்கா லூசு மாதிரி சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்லி என்னைக் குழப்பிவிட்ருச்சு. அதுக்குப் போய்…” நொடித்துக் கொண்டான் பிரமோத்.

“என்னடா சொன்னா அந்த சபரி?” -அமலா.

“நான் சொல்றேன் சித்தி.” என்ற ஸ்ரீ தொடர்ந்தான். “அந்தக்கா, ‘பேங்க்ல குடுத்து மாத்திக்க தம்பி. அக்கா எங்கே போய் மாத்துவேன்’னு ஸீன் போட, ‘அப்போ பேங்க்ல மாத்தினப்புறம்தான் சொச்ச காசை தருவேன்’னு இவன் சவுண்ட் விட்ருக்கான்.”

அரவிந்தன் நமுட்டுச் சிரிப்புடன், “கஸ்டமர்கிட்ட டீஸன்ட்டா பேசிப் பழகு ப்ரோ!” என,

அவனும், “டீஸன்ட்டா பேசினா இந்தக்கா மாதிரி கஸ்டமர் சல்லிக்காசு கூட தராம சாம்பிராணியைப் போட்டு விட்டுடும் வ்ரோ!” என்றான் எள்ளலாக.

ஸ்ரீ சொன்னான். “அந்தக்கா மறுபடியும் எனக்கு போன் போட்டு, ‘ஏன்ப்பா இந்த ரோஸ் கலர் ரெண்டாயிர ரூவா நோட்டு செல்லாதாமே… நீ பேங்க்ல பணம் கட்டும்போது மாத்திக்கோயேன். பிள்ளைக்கு சடங்கு வைக்க இப்ப அக்காவுக்கு ரூவா தேவைப்படுது. உன் தம்பியைச் சொச்சத்தைத் தர சொல்லு’ன்னு என்கிட்ட பேசிட்டிருக்கும் போது, இவன்…”

“ஸ்ரீஇஇ…” -பிரமோத்.

“என்ன சொன்னான்? என்ன சொன்னான்?” – அரவிந்தன்.

“‘ஆமா, ரோஸ் நோட்டு செல்லாது ரோஸ் பூ தான் செல்லும்’னு இவன் சொல்றது லைன்ல இருந்த எனக்கே கேட்டுச்சுடா அர்வி. ‘பூ மட்டும் வச்சிட்டு கல்யாணத்தை ஒரு வருஷம் தள்ளிப் போட்டா அவனும் என்ன செய்வான்’னு அந்தக்கா சொல்லி சொல்லி சிரிக்குது.”

“செல்லம்… நிவர்த்தி இன்னிக்கு ரோஜா பூவா வச்சிருந்தா?” என அமலா அவர் பங்கிற்கு மகனை வார,

சிவந்துவிட்ட முகத்துடன், “அதுலாம் எவன் பார்த்தான்?” என அசட்டையாகச் சொல்லிவிட்டு எழுந்து போக, அந்தக் காரைவீடு சிரிப்பு சப்தத்தில் அதிர்ந்தது.

உண்மைதான். நிவர்த்திகா இன்று இளஞ்சிவப்பு வண்ண சுரிதார், துப்பட்டாவிற்கு தோதாக ரோஜா மலரைத் தான் வைத்திருந்தாள். முதன்முதலாக அவளிடம் கண்களுடன் சேர்த்து மற்றவற்றையும் உள்வாங்கியிருந்தான் பிரமோத்.

‘உன்னால இன்னிக்கு என்‌ மானம்‌ போச்சுடி.’ என மானசீகமாக நிவர்த்திகாவிடம் சொல்லிக்கொள்ள,

“செல்லம், நிவர்த்தி நாளையோட வேலைல இருந்து நிற்கிறாளாம்.” என்றார் அமலா.

மாடியேறிக் கொண்டிருந்தவன் விருட்டென கீழே அமலாவின் முன் வந்து கேட்டான். “என்ன? ஏன்?”

“இனி கல்யாண வேலையைப் பார்க்கணும். பிள்ள வீட்டோட இருக்கட்டும்னு கதிரண்ணே சொல்லிட்டாராம். போன வாரம் வெள்ளிக்கிழமை போனப்ப சொன்னார்.”

‘ஓ! அப்போ நாளைக்கு விட்டா அடுத்து கல்யாணத்தப்போ தான் பார்க்க முடியுமா? கரிசகொளத்துல போய் பார்க்கறதுலாம் ரிஸ்க்! எவனாவது எதையாவது கிளப்பிவிட்ருவானுக!’ அவளுக்காக எவ்வளவு தூரம் யோசிக்கிறோம் என்று அவனுக்கே அவனைக் குறித்து வியப்புதான்!

**************

நேற்றைய மழையில் பிரதான சாலை மட்டும் கழுவிவிட்டாற் போலிருக்க, ஏனைய இடங்கள் நம்மூர் மாசுபாட்டின் காரணமாக அழகியலில் வர்ணிக்க ஏதுவாக இருக்கவில்லை. இந்த வானத்திற்கு பிடித்திருந்த ஜலதோஷமும் இன்னும் குணமாகியிருக்கவில்லை.

இன்று சிற்றுந்தில் இருந்து இறங்கும்போதே பிரமோத்தை எதிர்பார்த்தவள் போல், அவனையே பார்த்துக்கொண்டு இறங்கினாள் நிவர்த்திகா. கையில் மழையை மறுக்கும் குடை! அவள் தன்னைக் கண்டு இமைதாழ்த்தவில்லை என்பதே அவனுக்குள் பூஞ்சாரல் தெளித்தது.

நிவர்த்திகா சந்தனநிற பிண்ணனியில் பழுப்புநிறத்தில் கன்னாபின்னாவென்று இழுக்கப்பட்டிருந்த கோடுகள் போட்ட ஃபிட் அண்ட் ப்ளேர் டைப்பில் ஒரு டாப், அடர் பழுப்புநிறத்தில் ஆங்க்லெட் எனும் கால்சராய் அணிந்திருந்தாள். இதுபோன்ற உடைகள் ஆன்லைனில் பட்ஜெட்டிலேயே கிடைப்பது நகர்ப்புறத்தில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வெகுவசதி தான்.

‘இது அம்முக்குட்டி போடற கௌன் மாதிரி இல்ல?’ என நினைத்தவன் உடனேயே அவ்வெண்ணத்தை மனதிலிருந்து அழிக்க முயன்றான். நேற்றும் இப்படித்தான் ஏதோ மனதில் நினைக்கப் போக அதை அப்படியே சபரியக்காவிடம் உளறிக் கொட்டி, அது ஸ்ரீக்கும் தெரிந்து… அதிலும் இந்த அர்வி கழுதை என்னமாய்த் தன்னை ஓட்டியெடுத்தான்! ச்ச அவமானம்! அதனால் இனி அவள் உடைக் குறித்தோ, பூக்கள் குறித்தோ எந்த கருத்தும் மூளையில் பதிவேற்றிக் கொள்வதாக இல்லை.

பிரமோத்தின் டியூக், ‘ஃபிகரைப் பார்த்ததும் ஃப்ரெண்ட்ஷிப்பை கட் பண்ணிட்டான்.’ எனும் விவேக்கைப் போல் ஓரமாய்ப் பிணங்கிக்கொண்டு நின்றிருந்தது.

இன்று அவள் ஓடவில்லை. தனக்காகத்தான் வந்திருக்கிறானென, பக்கவாட்டில் விழிகளை நகர்த்தி அவன் உடன் வருவதை உறுதிசெய்தபடி மெதுவாக நடந்தாள்.

“நிவர்த்திகா!” என்றழைக்க, நின்று திரும்பி இமைகளைக் கொஞ்சமாக உயர்த்தி, அவன் சட்டைப் பட்டனை நோக்கினாள்.

“‘நிவர்த்திகா பிரமோத்’ஆ பிரமோட் ஆக ரெடியாகிட்டியா?” எனக் கேட்க, சரேலென உயர்ந்தன அவள் இமைகள்.

அந்தக் கண்களில் அப்பட்டமான பீதியைக் கண்டான் பிரமோத். ‘ஏனாம்?’ என்று நைந்தது இவன்‌ உள்ளம்.

ஐந்து விநாடிகள் அவன் விழிகளுக்குள் பார்த்தவள், முதல் தூறல் அவள் கண்ணோரத்தில் வந்து விழ, சட்டென்று வலப்பக்கம் திரும்பி சாலையைப் பார்த்தபடி, சங்கடமாய் கழுத்தின் பக்கவாட்டில் விரல்கள் கொண்டு தேய்த்து விட்டுக்கொண்டாள். அப்போது அவன் கண்களுக்கு நேராக தென்பட்டது ‘baby hair’ என்று சொல்லப்படும் அவள் கழுத்தோரமாய்ப் படிந்து கிடந்த பூனை முடிகள். அதைத்தான் நுனிவிரல்களால் அழுந்தத் தேய்த்தாள் அவள்.

‘அதைத் தொட்டால் எப்படியிருக்கும்? இழுத்துப் பார்த்தால்…’ அவன் எண்ணத்திற்கு தடைபோடும் விதமாய் மீண்டும் இவன் முகம் பார்த்தாள்.

“மழை வருது, போறேன்.”

“ஹோய்!”

“பிரமோத்.” -இறைஞ்சல்.

“அங்கே சிவன் கோவில் இருக்குது. அங்கே போய் பேசலாம், வா!”

“ம்ஹூம்!”

“போறவன் வர்றவனெல்லாம் டூயட் ஸாங் ஷூட்டிங் பார்க்கற மாதிரி பார்த்துட்டு போறான். அதான் வேணுமா உனக்கு?”

இறைஞ்சிய விழிகள் கேள்வியாய் விரிந்தன.

“என்ன?” ‘இந்தப் பார்வைக்கு ஏதோ அர்த்தம் இருக்கிறது. என்ன அது? கண்டுபிடிடா பிரமோத்!’

அவன் மண்டைக் காய்ந்து கிடக்கட்டும். அவள் பார்வையின் அர்த்தத்தை உங்களுக்கு மட்டும் சொல்கிறேன். ‘சித்தாராவின் பின் சுற்றிய நாட்களில் ஒருபோதும் தங்களை வேடிக்கைப் பார்ப்பவர்களைப் பற்றி பிரமோத் கவலை கொண்டதில்லையே… இப்போதென்ன புதிதாக?’ என்பதே அவளின் விழிகள் விடுத்த வினா!

“இல்ல, ஒண்ணுமில்லை.”

“சரி, வா போகலாம்.” என்றான்‌ அழுத்தமாக!

“இருங்க!” என்றவள், குடையை விரித்து வைத்துக்கொண்டு, தோள்பையில் இருந்த அலைப்பேசியைக் கவனமாக எடுத்து அலுவலகத்திற்கு அழைத்து, ஒரு மணிநேரம் தாமதமாகும் என்று பர்மிஷன் சொல்லிவிட்டு அவனோடு நடக்க,

“நம்பர் சொல்லு.” என்றான்.

அவளுக்கு மீண்டும் சித்தாராவின் நினைவு வரப் பார்க்க, அந்நினைவினை ‘ஒளிந்து போ தீய சக்தியே!’ என்று துரத்தியடித்தவாறு அவனுக்கு தன் எண்களைச் சொன்னாள்.

இவர்கள் அந்தப் பழமையான கோவிலினுள் நுழைய, அதற்காகவே காத்திருந்தாற் போல் மழைப் பெரிதாக ஊற்றத் தொடங்கியது. சில அர்ச்சகர்கள் தவிர்த்து, எண்ணி ஐந்து பக்தர்கள் இருந்தார்கள். மழையும் மகேசனும், அமைதியும் ஆதி சக்தியும் என இருவருமே மனதில் அதிநிறைவை, உன்னதத்தை உணர்ந்தனர்.

மனம் தழும்பிக்கிடந்த அவ்வேளையில், அவன் கருவறையில் மூலவரையும் அம்மனையும் தரிசிக்கையில் அவள் தோளுரசியபடி சேர்ந்து நின்று கை கூப்பி வணங்க, ஏற்றுக்கொண்டவள் போல் அவளும் விலகாது அவனோடு சேர்ந்து வணங்கினாள். பக்தியோ, பந்தமோ… ஏனென்று புரியாமலேயே அவள் விழிகள் லேசாய்க் கலங்கியது. இருவரும் ஒன்றாகவே பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டனர்.

மழை ஊற்றியதால் பிரகாரத்தைச் சுற்றி வர முடியாமல், கருவறை வாசலிலேயே படிக்கட்டின் இருபுறங்களிலும் இருந்த யானைச் சிலைகளில் ஒன்றின் அருகே அமர்ந்துகொண்டனர்.

நிவர்த்திகா கோவில் மண்டபத்தின் வெளிப்புறத்தில் ஏகாந்தமாய் ஓடிவந்து தரை தொட்ட மழைத்தாரைகளையே பார்த்திருக்க, “இப்போ சொல்லு.” என்ற பிரமோத்தின் குரலில் அவன் முகம் பார்த்தாள்.

“என்ன சொல்லணும்?”

“ஹேய், உன் பூ கீழே விழுந்துடுச்சு பாரு…” எனவும், பின்னால் தலையைத் தொட்டபடி திரும்பி கீழே தேட,

“சோ, உனக்கு காது நல்லா தான் கேட்குது? அப்போ நான் கேட்ட கேள்வியும் புரிஞ்சிருக்குமே?” என இடக்காகக் கேட்டான்.

“ஸ்மார்ட்.” என்றவள், “வேலைக்கு போகணும் டைமாச்சு.” என்றாள்.

“நாங்க மட்டும் வெட்டியா அன்ன ஊஞ்சல் ஆடிக்கிட்டு இருக்கோம் பாரு! கடுப்பேத்துறா…”

“நீங்க வெட்டி பீஸு தானாமே?”

“அடிங்! எவடீ சொன்னா உனக்கு?”

“ஆங்… விஷயம் தெரிஞ்சவங்க சொல்லிருப்பாங்க.”

“ஓஹோ! அவுக அப்டி சொல்லியும் இந்த வெட்டிப் பீஸைக் கல்யாணம் கட்டிக்க ரெடியா இருக்க போல?” பேச்சை எந்த திசையில் இழுத்துச் சென்றாலும் அவன் கேள்விக்கே வந்து நின்றான்.

“டைமாச்சு, போகணும்.”

“ஸ்ஸப்பா… ஆத்தா வையும் காசு குடு’ன்னு ரீப்பிட் மோட்ல சொல்லிட்டே இருக்கா.”

“நீங்க மட்டும் பாம்பு புத்துல கையை விடற, கடிக்கலையா?ன்னு ஒரே கேள்வியைத் திருப்பி திருப்பி கேட்கறீங்க?”

மந்தகஸித்தவன் சொன்னான். “லைஃப் போரடிக்காம போகும் போலருக்குதே…”

அவளின் கடையிதழோர சுழி, அவள் சிரிப்பையடக்க பிரயத்தனப்படுகிறாளென்றது. பிரமோத் மலர்ந்தும் மலராத அந்தப் புன்னகையைக் கண்டு மனதையடக்க முடியாது தவித்தான். அவள் தலையை அதிகம் அசைக்கவில்லை. விழிகளைத் தான் நடனமாட விடுகிறாள். அவ்விழியின் ஆலாபனையில் பூஜிக்கப்பட்டன இவன் உணர்வுகள். பழக்கத்தில் தலைக்கோத இடக்கையுயர்த்தியவன் அதிலிருந்த விபூதி, குங்கும பிரசாதத்தை அவள் கைக்கு இடம்மாற்றினான்.

அவளும் இயல்பாக வாங்கிக்கொண்டு, எழுந்துபோய் ஒரு தூணில் கட்டி வைக்கப்பட்ட கூடையிலிருந்து காகிதத்தை எடுத்து அதில் பிரசாதத்தைச் சேகரித்துக்கொண்டு, அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, ‘போகலாமா?’ எனும் அவள் விழியின் கேள்வி புரிந்து, அவள் வைத்துவிட்டு போயிருந்த குடையையும் எடுத்துக்கொண்டு எழுந்தான்.

பிரகாரவெளியில் காலெடுத்து வைக்கும்முன் அவள் குடைக்கு கை நீட்ட, அவன் கேட்டான். “பிடிச்சிருக்கா?”

மெதுவாக இமை தாழ, தலையாட்டினாள். “ம்ம்!”

“மிச்சமிருக்க வாழ்க்கையைச் சேர்ந்தே வாழணும். தெரியும்ல?”

‘இந்தக் கேள்விக்கு மட்டும் வாய்க்கு பதிலா கண்ணு தான் பதில் சொல்லும்.’ என மனதினுள் புகைந்தவன், அவள் விழி தெளிக்கும் உணர்வுக்கான அர்த்தத்தைப் படிக்க நினைத்து, இம்மியும் விழி விலக்காமல் காத்திருந்தான்.

நினைத்ததைப் போலவே தாழ்ந்த இமைகள் உயர்ந்தன. இத்தனை நேரம் பேசியதில் ஓர் நட்பிணக்கம் தோன்றியிருந்தாலும், கல்யாணம் என்றதும் கலக்கமும் தயக்கமும் இன்னும் சிறு பீதியுமாகப் பார்த்தாள்.

‘பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு ஏன் கலங்கணும்?’ புரியவில்லை அவனுக்கு.

குடையை அவள் கையில் தந்துவிட்டான். விரித்ததும் அவன் வருவானென பார்க்க, அவன் நகர்வதாகத் தெரியவில்லை.

“எப்டி போவீங்க?”

“குளிச்சிக்கிட்டே!”

களுக்கென சிரித்தாள். ‘எப்படி விநாடிக்கு விநாடி மனநிலை மாறுகிறது இவளுக்கு?’ என்ற மலைப்பு அவனிடம்.

“நீ போ!” எனவும், தலையாட்டிவிட்டு குடைக்குள் நடந்தவள், நேற்று போலவே திரும்பி திரும்பிப் பார்த்தபடி போக, அப்போது அந்த விழிகளில் பயமோ கலக்கமோ இல்லாது உரிமைப்பட்டவனைப் பார்ப்பதாக இருந்ததில், இவனின் உதடுகள் மலரப் போகிறோம் என்றன. ஆனால் அவன் உதடுகளை மலர்த்தவில்லை. முளைத்து மூன்று நாட்கள் ஆன தாடைமயிர்கள் அவன் சிரிக்கிறான் என்பது எங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் என்று சிலுப்பிக்கொண்டது.

புருவங்களை உல்லாசமாய் நெரித்தவன் டியூக்’கை நோக்கி நடந்தான். புதுவித உணர்வில் மனசுக்குள் பெய்த மழை, வெளியே பெய்த மழையை உணர விடவில்லை. நனைந்தபடி கருவேலம்பட்டிக்கு பயணிக்க, எண்ணம் முழுவதும் அவள் மட்டுமே!

ஒரு விஷயம் நன்றாக புரிந்தது. நட்பாக பேசும்போது அவ்வப்போது தன் விழிகளைச் சந்திப்பவள் பட்டென்று பதிலும் தருகிறாள். கல்யாணம் என்ற பேச்செடுத்தால் மட்டும் அவ்விழிகள் பீதியைக் காட்டுகின்றன. ஏன்? தான் நினைத்ததைப் போல் சித்தாராவின் காதலன் என்பதாலா? இப்படி பயம் கொள்வதற்கு அவனென்ன புலியா? சிறுத்தையா? இல்லை! வேறு ஏதோ காரணம் இருக்கவேண்டும்.

சிலம்பக் கம்பும், சீறும் ‘டியூக்’குமென சுற்றியவனுக்கு, பட்டுநூல் கொண்டு தீண்டுவதைப் போன்ற மெல்லிய உணர்வினையும் இனம்பிரிக்க கற்றுக் கொடுக்க ஆரம்பித்தன அவள் விழிகள்.

‘இப்டியே கண்ணு பேசற பாஷைக்கு அர்த்தம் கண்டுபிடிச்சே நம்ம வாழ்க்கை போயிடும் போலயேடா பிரமோத்! அப்போ மத்ததெல்லாம்?’ என்று சிரித்துக் கொண்டவன், அவள் நேரிடையான பதிலைத் தராததால் ஒரு தெளிவற்ற நிலையிலேயே இருந்தான்.

டியூக்கிடம் கேட்டான். “அவளுக்கு நிஜமா என்னைப் பிடிச்சிருக்கா? பிடிக்கலையா?

 

தூறல் தூறும் 🌧️🌧️🌧️

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
7
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்