326 views

எபிலாக் : 

சில மாதங்களுக்குப் பிறகு,

“நான் தான் கையைப் பிடிச்சு இருக்கேன்ல ம்மா! பதறாமல், மெதுவாக நடந்து வா” என்று மனைவியைக் கைப்பிடித்து அழைத்து வந்தான் தன்வந்த்.

மணப்பெண் அறையில் தயாராகிக் கொண்டிருந்த யாஷிகாவிற்கு அவளது தோழி காஜலின் வரவு அறிவிக்கப்பட்டது.

“வந்துட்டாளா?” என்று அலங்காரம் செய்திருந்தால் அவள் வெளியே செல்ல அனுமதி இல்லை. ஆதலால், காஜலுக்குக் கால் செய்தாள் யாஷிகா.

“ஹலோ. கல்யாணப் பொண்ணு!” என்று அழைத்துப் பேசினாள்.

“சாரி டி காஜல்! நான் வெளியே வரக் கூடாது” என்று மன்னிப்பு வேண்டினாள்.

“அதனால் என்ன யாஷ்? அதிரூபாவும் வரட்டும். நாங்க சேர்ந்து வந்து உன்னைப் பார்க்கிறோம்” என்று மெல்லியதாக புன்னகை புரிந்தாள்.

“ஓகே டி. அவ வந்ததும் வா” என்று அழைப்பை வைத்து விட்டு, தன் அலங்காரத்தை மேற்பார்வையிட்டாள் யாஷிகா.

காரை மண்டப வாசலில் நிறுத்தி விட்டு, “மண்டபத்துக்கு வந்துட்டோம் அதி!” என்று மனைவியை இறங்கச் சொன்னான் பிரித்வி.

“லேட் ஆ வந்ததுக்கு அவகிட்ட நல்லா திட்டு வாங்கப் போறோம் பாருங்க” என்று தன்னவனுடன் வேகவேகமாக உள்ளே வந்தாள் அதிரூபா.

“காஜல்!”

“வந்துட்டீங்களா அதிரூபா! உங்களுக்காகத் தான் வெயிட்டிங்” என்று அவளிடம் கூறி விட்டு பிரித்வியைப் பார்த்து இயல்பாகப் புன்னகைத்தாள் காஜல்.

இவர்களது சம்பாஷணைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான் தன்வந்த்.

“ஹாய் சார்” என்று மரியாதைக்காக வணக்கம் செலுத்தினாள் அதிரூபா.

“ஹாய் சிஸ்டர்” என்று நிமிர்ந்து நின்று வணக்கம் சொன்னவனைக் கண்ட  பிரித்வியிடம்,

“உங்களுக்கும் ஹாய்!” என்று சல்யூட் வைத்தான்.

“ம்ம்” என அவன் ஏற்றுக் கொண்டதும்,

இவர்களைத் தனியே பேச அனுமதிக்கும் நோக்கத்துடன், “யாஷிகாவைப் பார்த்தியா காஜல்?” என வினவினாள் அதிரூபா.

“அவளுக்கு இப்போ தான் மேக்கப் முடிஞ்சிருக்கு . சோ, நாம தான் போய்ப் பார்க்கனும் ரூபா” என்று சற்று முன்பு நடந்ததைக் கூறினாள்.

வா போகலாம்” என்று அவர்கள் இருவரும் தத்தமது கணவர்களிடம் கண்களால்  விடைபெற்றுக் கொண்டு, மணப்பெண் அறைக்குச் சென்றனர்.

“தன்வந்த்! எனக்கு இப்போ உங்கிட்ட பேசறதுக்கு ரொம்பவே பெருமையாக இருக்கு. ஏன்னா, நீ சொன்ன மாதிரியே  இப்போ வரைக்கும் என் கூட நேர்மையாக மோதிக்கிட்டு இருக்கிற! அதுவும் பிஸினஸில் மட்டும்!” என்று எதிரிலிருப்பவனை எடை போடும் பார்வையைத் தவிர்த்து விட்டு, ஸ்நேகமாகப் பேசினான்.

“எனக்கும் இது பிடிச்சிருக்கு பிரித்வி! இனிமேலும் இப்படியே தொடருவோம்” என கணீரென்ற குரலில் உறுதியாக கூறினான் தன்வந்த்.

🌸🌸🌸

“யாஷ்!” என்ற இருவரின் ஆரவாரக் குரல் கேட்டு, அவர்களைத் திரும்பிப் பார்த்தாள் மணப்பெண்.

“ரூபா! காஜல்!” அவர்களைப் பார்த்ததில் யாஷிகாவின் மனமோ ஆனந்தக் களியாட்டம் ஆடியது.

 

“பார்க்க மங்களகரமாக இருக்கிற!” என்றாள் அதிரூபா.

“ஆஹான்!” என்று முத்துப் பற்கள் மின்ன சிரித்த யாஷிகா,

“உட்காருங்க முதல்ல” என்று நாற்காலி எடுத்துப் போடச் சொன்னாள்.

“என்ன விட நீங்க ரெண்டு பேரும் தான் அழகாக இருக்கீங்க!” என்றாள்.

நிறைவான தாம்பத்தியத்தின் அடையாளமாக அதிரூபாவின் முகமும், நிறைமாத தாய்மையின் திருவுருவாக காஜலின் முகமும் பொலிவுடன் காணப்பட்டது. அதை தான் பாராட்டினாள் யாஷிகா.

“ஹேய் தாங்க்ஸ் டி” என்ற இருவரின் வெட்கத்தை ரசித்தவள் , “நான் தான் இங்கே வெட்கப்படனும் லேடீஸ்” என்று அறிவித்தாள்.

“பொண்ணை அழைச்சுட்டு வர சொல்றாங்க” என்று உறவினர் ஒருவர் சொல்லி விட்டுப் போகவும், யாஷிகாவை மணமேடைக்கு அழைத்து வர ஆள் வந்து விட்டார்.

அதனால், “கங்கிராட்ஸ்” என்று வாழ்த்துச் சொல்லி அனுப்பி விட்டு பழைய இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

“பேசி முடிச்சாச்சா?” என தங்கள் கணவன்மார்களிடம் கேட்க,

“ஓஹ் பேசியாச்சே” என்று இருவரும் மலர்ந்த முகத்துடன் கூறினர்.

பிரித்வியும், தன்வந்த்தும் இருவருடைய முகங்களும் ஆரோக்கியமான தொழில் போட்டியில் இருப்பதால், தனிப்பட்ட வஞ்சகம் இன்றி ஒருவருக்கொருவர் பேசிச் சிரித்துக் கொண்டனர்.

அதை வழக்கம் போல பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர் அதிரூபாவும், காஜலும்.

யாஷிகாவின் மணமகன் வருணன் அவள் வெண் கழுத்தில் மங்கல நாண் பூட்டுவதைக் கண்குளிர பார்த்து அர்ச்சதை தூவினர் இரு தம்பதிகளும்.

சாப்பிட்டு விட்டு , மணமக்களுக்குப் பரிசு வழங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.

🌸🌸🌸

வீட்டிற்குச் சென்றதும்,

“எங்களை விட நீங்க பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ் ஆகிடுவீங்க போலிருக்கே?” என்று புருவம் உயர்த்திக் கூறினாள் அதிரூபா.

“இதுவும் குட் ஐடியா ம்மா! தப்பில்லையே!” என்று கூறிச் சிரித்தான்.

“தப்பே இல்லை!” என்று ஆமேதித்தாள் மனைவி.

அவளை ஆசையாகத் தழுவிக் கொண்டு, கட்டிலில் விழுந்தான் பிரித்வி.

இனிமையான இல்லறத்தின் அடுத்த நிலை மகவின் வரவு, அதற்கு இருவராலும்  செவ்வனே அச்சாரம் போடப்பட்டது.

🌸🌸🌸

“நீங்களும், பிரித்வியும் ஃப்ரண்ட்ஸ் ஆகிட்டீங்களோ? என்ன?” என்று வினவிய மனைவியின் பொற்ப் பாதங்களை மெதுவாக பிடித்துக் கொண்டிருந்தவனோ,

“கூடிய சீக்கிரம் ஆகிடுவோம் காஜல்!” என்ற தன்வந்த்தின் இதழ்கள் குமிண்சிரிப்பில் விரிந்தது.

“ஹப்பாடா!” என தானும் குறுநகை புரிந்தாள் காஜல்.

அவளது நெற்றியில் முத்தம் பதித்து விட்டு, தோளில் சாய்த்துக் கொண்டு தன் குழந்தை இருக்கும் வயிறைத் தடவிக் கொடுத்தான் தன்வந்த்.

– முற்றும்

எபிலாக் கொடுத்து கதையை நல்லபடியாக முடிச்சுட்டேன் நண்பர்களே! உங்கள் அனைவரது ஆதரவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள் 🙏💕

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்