Loading

வீட்டின் கூடத்தில் மொத்த சொந்தமும் கூடியிருக்க, அறையினுள், முகம் முழுதும் படபடத்து சோகம் பூசிய தோரணையில் இருக்கும் தோழியை பார்க்கவே சாய்க்கு பாவமாக இருந்தது. ‘தற்போதுவரை தன்னிடம் எப்படி வாயடித்துக் கொண்டிருந்தாள்? தற்போது முகம் வாடி இருக்கின்றாளே’ என்று வேதனையுடன் சாய் நின்றிருக்க, மெல்லவே கலங்கிய அஞ்சுவின் விழிகளிலிருந்து நீர்த்துளி கோடாக வடிந்தது. 

 

சட்டென கதவை தாழ் போட்ட சாய், அஞ்சுவிடம் வந்து “அஞ்சுமா.. விடுடா” என்க “அழுகையா வருது சாய். ஆனா அழுதா அதுக்கும் எதாவது சொல்லுவாங்க. நல்ல நாள்லயே ஒப்பாரி வைக்குறானு சொல்வாங்க. சிரிச்சது ஒரு குத்தமா சாய்? இது என் வீடு என் ரூம். இங்க எனக்கு சிரிக்க உரிமை இல்லையா? ச்சை.. சந்தோஷமான மூடே போச்சு சாய்” என்றாள்.

 

அவளை பாவமாக பார்த்த சாய் “அவங்கள பத்திதான் தெரியும்ல அஞ்சு. அப்பறம் எதுக்கு நீ அழற” என்று வினவ, “அம்மா முகத்த பார்த்த தானே? என்ன என்ன பேச்சு” என்று மேலும் கலங்கினாள்.

 

அறையில் தயாராகி தோழியோடு சிரித்தபடி பேசிக் கொண்டிருந்த அஞ்சு புகைப்படங்கள் எடுத்துக் கொள்ள, காயுவுடன் உள்ளே வந்த அவளது மூத்த அத்தை, “என்ன இது இப்படி சிரிச்சுகிட்டு இருக்க. கீழ அத்தனை பேரு இருக்காங்க. எட்டு ஊருக்கு சிரிப்ப போலயே. பொண்ணு சரியான வாயாடி போலன்னு எல்லாரும் நினைக்கப் போறாங்க. உனக்கு கல்யாணம் ஆக போகுது. இனியாவது பொறுப்பா இருக்க பாரு அஞ்சலை. இப்படி சத்தம்போட்டு எல்லாரும் இருக்கும்போது சிரிச்சா என்ன நினைப்பாங்க. ரெடியாகிட்டு அமைதியா உக்காந்திரு” என்று கூறிட, அத்தனை நேரம் சிரித்துக் கொண்டிருந்தவளுக்கு என்னவோ போலானது.

 

“ஏன் அண்ணி இதெல்லாம் அவளுக்கு சொல்லி கொடுங்க. நாளைக்கு வேற வீட்டுக்கு போக போறவ” என்றவர் “ஏன்டி புடவை இவ்வளவு சாதாரணமா வாங்கிருக்க? நமக்கு ஒன்னுமே வசதியில்லை போலனு நினைக்க போறாங்க. புடவைக்கே இப்படி கஞ்சம் பாக்குறாங்களே  சீரெல்லாம் உங்கப்பா செய்வானோ மாட்டானோனு கேட்டா முகத்தை எங்க கொண்டுபோய் வச்சுப்பீங்க அண்ணி? எங்கண்ணன் இவளுக்காக இராவும் பகலும் உழைக்குறான்” என்று படபடவென பேசிட, காயத்ரியின் முகத்தில் ஈயாடவில்லை. 

 

மூத்த நாத்தனாரின் குணமே இதுதான் என்று தெரிந்து இத்தனை வருடத்தை ஓட்டிய பிறகும் இவ்வாறான சுடுசொற்களை அத்தனை எளிதில் கடக்க இயலவில்லை அவருக்கு. முகம் கொள்ளா புன்னகையுடன் சிரித்துக் கொண்டிருந்த மகளை ஆசையாகக் காண உள்ளே நுழைந்தவர் தற்போது வாடிய முகத்துடன் தலைகுனிந்து அவள் நிற்பதைக் கண்டு பெற்ற வயிறு பிசைந்து நின்றாள்.

 

ஏதோ வேலையை கூறி அவரையும் இழுத்துக் கொண்டு அவர் கீழே சென்றிட, அப்படியே அமர்ந்திட்ட அஞ்சிலை தற்போது தோழியிடம் தன் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தாள்.

 

“அஞ்சு.. அழாதடா. பாரு மையெல்லாம் கலையுது” என்ற சாய் துணியை எடுத்துத் துடைத்துவிட, “என்னோட நாத்தனாரும் இப்படி பண்ணுவாங்களா சாய்? பயமா இருக்குடி” என்றாள். “ஏ அஞ்சு! என்னடி பேசுற? லூசு கீசு புடிச்சுக்கிச்சா உனக்கு? தேவையில்லாம எதையாவது புலம்பாம ஜாலியா இருடி. அவங்க கிடக்குறாங்க” என்று சாய் கூற, பெருமூச்சுடன் தலைகுனிந்தாள்.

 

இதோ இன்னும் சில நிமிடங்களில் நிச்சயம் மறுநாள் திருமணம் என்ற நிலையில் இருக்கும் தோழி இப்படி பேசுவதில் ஒருநொடி திக்கென்று தான் உணர்ந்தாள் சாய். சில நிமிடங்கள் தொடர்ந்த அந்த மௌனத்தினை கதவு தட்டப்படும் சத்தம் கலைக்க, சாய் சென்று கதவை திறந்தாள்.

 

உள்ளே வந்த அர்ஜுன் “ஏ அஞ்சு.. என்ன முகமே வாட்டமா இருக்கு? தம்பிய மிஸ் பண்ணுவோம்னு கவலையா?” என்க, “ஆமா நீ பெரிய இவன்.. உன் தொல்லை முடிஞ்சதுனு ஜாலியா போகபோறா பாரு” என்று சாய் கூறினாள்.

 

தன்னை அத்தை திட்டியதை அறிந்து தான் அர்ஜுன் வந்திருக்க வேண்டும் என்று சரியாக யூகித்த அஞ்சு மென்மையாக புன்னகைக்க, அவளிடம் வந்தவன், தன் கையிலிருந்த கவரிலிருந்து ஒரு டப்பாவை எடுத்தான். “ஏ என்னதுடா?” என்று அஞ்சு வினவ, “இவ்வளவு நேரம் ஏதோ ஒன்னு எதையோ தின்னது போல முகத்தை வச்சுகிட்டு இப்ப பெட்டிய பார்த்ததும் முகத்தை பார்த்தீங்களா க்கா?” என்று அர்ஜுன் சாயை பார்த்து கேட்டான்.

 

அதில் சாய் சிரித்துக் கொள்ள, “ஏ.. சொல்லுடா” என்று அஞ்சு கெஞ்சியதும், அதை அவளிடமே கொடுத்தவன் “பிரிச்சு பாரு” என்றவனிடமிருந்து அதை வாங்கி பிரித்துப் பார்த்தாள். அவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களின் தொகுப்பு மென்தகடாக மின்னியதைக் கண்ட அஞ்சுவின் விழிகள் சாசரைப் போல் விரிந்துக் கொள்ள, “எப்புடி?” என்று கேட்டு காலரை தூக்கிவிட்டுக் கொண்டான், அர்ஜுன்.

 

“ஏ அஜு.. செம்மயா இருக்குடா” என்று அஞ்சு கூற “அஜு.. உனக்குள்ள இப்படியொரு ரசனையா? வியக்குறேன்டா.. வியக்குறேன்” என்று சாய் கூறினாள். இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே காயத்ரி வந்திட, அர்ஜுனின் பரிசைக் கண்டு முகம் மலர பாராட்டியவர், மகளின் முகத்தில் புன்னகை மீண்டதைக் கண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

 

பின் யாவரும் கீழே வந்திட, மாப்பிள்ளை வீட்டார் ஒருபுறமும், பெண்வீட்டார் எதிர்ப்புறமும் அமர்ந்து கொண்டனர். திருமணப் பத்திரிகை வாசிக்கப்பட்டு பெரியோர்களால் அத்திருமணம் நிச்சயிக்கப்பட, வெகு நேரமாக அவளை உற்று நோக்கிக் கெண்டிருந்த ருத்ரன் அவள் மறந்தும் நிமிர்ந்து பார்த்திட விரும்பாது தலைகுனிந்திருந்தது கண்களை உறுத்தியது. அவள் முகத்தில் எப்போதும் காணும் அந்த புன்னகை கூட ஒரு இன்ச் குறைந்தார் போன்று உணர்ந்தவன், அர்ஜுனை நிமிர்ந்து பார்க்க, அர்ஜுனும் தற்செயலாக ருத்ரனை ஏறிட்டான்.

 

அஞ்சுவை கண்களால் காட்டி ‘என்ன?’ என்பதுபோல் அவன் வினவ, தனது அலைப்பேசியை எடுத்துக் காட்டிய அர்ஜுன் அதில் ஏதோ தட்டச்சு செய்தான். சில வினாடிகளில் ருத்ரன் மடியில் இருந்த அலைப்பேசி குறுஞ்செய்தி வந்ததை பறைசாற்றும்படி மின்ன, அர்ஜுனை கண்டு ஒரு முறை முறைத்தான்.

 

‘நான் இப்ப எப்படிடா ஃபோன எடுத்து பார்ப்பேன்?’ என்ற கேள்வி அதில் தேங்கி இருக்க, பக்கென சிரித்த அர்ஜுன் ‘சாரி மாமா’ என்று இதழசைத்தான். இவற்றைக் கண்ட சாய், “டேய் அஜு.. என்னடா உங்க மாம்ஸோட கண்ணாலயே பேசுற?” என்று வினவ, “என்ன செய்ய? இதெல்லாம் எங்க அக்கா பேசவேண்டியது. தலையெழுத்து இங்கயும் அவளுக்கு நான்தான் தூதுவனா இருக்கேன். நானே மாமாவ பொண்ணு பார்த்துட்டு போனப்பவே நம்பர் வாங்கி அவர்கூட கடலைபோட ஆரம்பிச்சுட்டேன். இவ இன்னும் நம்பர் வாங்கலையாம். சரினு அவருக்கு இவ நம்பர அனுப்பி வைச்சா, அவளா பேசினா பேசிக்குறேன்னு சொல்லிட்டார். கேட்டா இவளுக்கு டிஸ்கம்ஃபோர்டா இருக்குமாம்” என்று கூறினான்.

 

“டேய்.. சோ சுவீட்டா. உங்க அக்காக்கு ஏற்ற சாய்ஸ்” என்று சாய் கூற “அதான்க்கா நானும் நினைச்சேன்” என்று திருப்தியாகக் கூறினான். நிச்சயப் பத்திரிகை வாசிக்கப்பட்டு இருவரும் மோதிரம் மாற்றிக் கொள்ள, அப்போதுகூட அவள் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை‌. பெயருக்கு ஓர் புன்னகை, ஒட்டிவைத்தார்போல் அவள் முகத்தில் இருந்தும், அது அவள் கண்களை எட்டாததை உணர்ந்தான்.

 

பின் யாவரும் உண்ணுவதற்கு எழுந்து மொட்டைமாடிக்கு செல்ல, தனது அலைப்பேசியை எடுத்துப் பார்த்தவன், ‘அத்தை திட்டிட்டாங்க. அதான் சேடாகிட்டா மாமா’ என்று அர்ஜுன் அனுப்பியதை பார்த்தான். ‘எதுக்கு?’ என்று ருத்ரன் கேள்வியை அனுப்ப, நடந்தவற்றை சுருக்கமாக கூறியிருந்த அர்ஜுன், ‘இதெல்லாம் அடிக்கடி நடக்குறது தான் மாமா. அவ ஓகே ஆகிடுவா. ஃபீல் பண்ணாதீங்க’ என்று கூறினான்.

 

சரியென்ற ருத்ரன் மேலே செல்ல, அஞ்சிலை அவனுக்காக் காத்திருந்தாள். அவளுடன் அமர்ந்து உணவு உண்டவன், கை கழுவுவதற்கு எழுந்து செல்ல, அவளும் உண்டு முடித்து வந்தாள். கைகளை கட்டிக் கொண்டு அவன் நிற்பதைக் கண்டவள் பின்னே திரும்பிப் பார்க்க, வெயிலை மறைக்க போடப்பட்ட பந்தல் அவள் சொந்தங்களை அவள் கண்களிடமிருந்து மறைத்திருந்தது.

 

ஒரு பெருமூச்சுடன் வந்தவள் தன் கைகளை கழுவிக் கொள்ள, “எதுக்கு இப்படி முகம் உம்முனு இருக்கு” என்றான். சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தவள் “இ..இல்லையே. நல்லா தான் இருக்கேன்” என்று சமாளிக்க, “எனக்கு எல்லாம் தெரியும்” என்றான்.

 

அவனை நம்பாத பார்வையுடன் “என்ன தெரியும்?” என்று அவள் வினவ, “அர்ஜுன் சொல்லிட்டான்” என்றான். ‘இவன..’ என்று உள்ளுக்குள் அவள் பல்லை கடிப்பது உணர்ந்து சிரிப்பை அடக்கிக் கொண்ட ருத்ரன், “ஓய்” என்று ஒரு அடி முன்னே வர, “எ..என்னங்க?” என்றாள்.

 

அவன் மற்றொரு அடி அவளை நெருங்க, அச்சத்துடன் அவனையும் பந்தலையும் மாற்றி மாற்றி பார்த்தாள். ‘அய்யோ‌ அத்தை உள்ளதான சாப்டுட்டு இருக்காங்க. வந்துட்டா இதுக்கும் திட்டுவாங்களே’ என்று மனதினுள் எண்ணி மருண்டவள் “என்னங்க?” என்க, “உன்கிட்ட ஒன்னு சொல்லனும்” என்றான்.

 

“என்ன சொல்லனும்?” என்று அஞ்சு வினவ, மேலும் அவளை நெருங்கி வந்தவன், அவள் முகம் நோக்கி குனிய, அச்சத்துடன் தற்போது புதுமையாக நாணமும் வந்த அவள் கன்னங்களை மெருகேற்றியது. படபடப்புடன் விழி தாழ்த்தியவள், ‘என்ன பண்ண போறாங்களோ தெர்லயே’ என மனதோடு புலம்ப, அவள் முகத்தில் வந்துபோன உணர்வுகளைக் கண்டு சிரிப்பை அடக்கிக் கொண்டவன், அவள் காதருகே குனிந்து “நாளைக்கு நமக்கு கல்யாணம்” என்று கூறிவிட்டு நகர்ந்து சென்றான்.

 

செல்லும் அவனையே வியப்புடன் பாரத்தவள் முகமெல்லாம் வியர்த்திருக்க, மனதோடு சிறு ஏமாற்றத்தினை உணர்ந்தாளோ? ‘அது எங்களுக்கு தெரியாதாக்கும். இதை சொல்லத்தான் இவ்வளவு அலம்பலா’ என்று நொடித்துக் கொண்டவள், இடம்விட்டு நகர, அவளை திரும்பிப் பார்த்து கள்ளத்தனமாக ஒரு புன்னகையை சிந்தவிட்டுச் சென்றான்.

 

அன்றைய நாளின் கலைப்பில் பாவை வெகு சீக்கிரமே உறங்கிவிட, மறுநாள் காலை உறங்கியதைவிட வேகமாக எழுப்பப்பட்டாள். கண்கள் எரிந்து கண்ணீராக வர, “எதுக்குமா இவ்வளவு சீக்கிரம் எழுப்புற?” என்றபடி கண்ணை கசக்கினாள். “அடியே.. நீ பரிட்சை எழுதின காலமெல்லாம் மலையேறி போச்சுடி. இன்னிக்கு உனக்கு கல்யாணம். அதுக்குத்தான் எழுப்பிருக்கேன். சீக்கிரமா குளிச்சுட்டுவா. ரெடியாகி கிளம்பனும்” என்று காயத்ரி கூறினார்.

 

மிகவும் அவசியம் என்னும் பட்சத்தில் மட்டுமே அதிகாலை எழுந்து பழகியவளுக்கு தற்போது எழுவது சிரமமாகவே இருந்தது. தட்டுத்தடுமாறி எழுந்து குளித்து வந்தவளுக்கு கண்கள் இரண்டும் அத்தனை எரிந்தது. “அம்மா.. எப்படிமா கல்யாணம் பண்ணிகிட்ட. இவ்வளவு சீக்கிரம்.. அய்யோ கண்ணெல்லாம் எரியுது” என்று மகள் புலம்ப, “அதுசரி.. ஒருநாள் எழுறதுக்கே இப்படி சளிச்சுக்குற. இனி தினமும் சீக்கிரம் எழனும்” என்று புலம்பியடி அவளுக்கு முகூர்த்த புடவையை கட்டிவிட்டுக் கொண்டிருந்தார்.

 

“பாரு அஞ்சுமா.. போற வீட்ல நல்ல பொண்ணா நடந்துக்கோ. உன்னால பிரச்சினைனு ஒன்னு உருவாக்கிட கூடாது. மாப்பிள்ளையோட நல்லா பொருந்தி வாழனும். இனியும் விளையாட்டு போல இருக்கக் கூடாது. ஒரு குடும்பத்தையே தாங்கப்போற பதவிக்கு நீ போகப்போற. அதனால பொறுப்பா நடந்துக்கனும்” என அன்னையாக அவளுக்கு அவர் அறிவுரை வழங்க, அதை தவறாமல் கேட்டுக்கொண்டபோதும் ஏனோ அன்னை தன்னை ‘பத்திரமாக இரு, சந்தோஷமா இரு, எதுனாலும் அம்மா இருக்கேன்’ இப்படி ஏதும் கூறவில்லையே என்று ஆதங்கமாகத்தான் இருந்தது.

 

சடசடவென அவளை தயார் செய்தவர், “ஏ..அப்பவே சொன்னேன் பியூடீசியன் யாரையும் வரவச்சுக்கலாம்னு. எனக்கு எதுவும் பண்ண தெரியாது. சாய் வருவாளா?” என்று வினவ, “இல்லைமா. அவ நேரா கோவிலுக்கு தான் வரா. நானே பண்ணிக்குறேன். பியூடீஷியன்லாம் வேணாம்மா” என்றாள்.

 

சரியென்று மற்ற வேலையை பார்க்க அவர் கீழே சென்றிட, தானே தயாராகிவிட்டு கீழே வந்தாள். அனைத்து தந்தைக்கும் தோன்றும் அதே எண்ணம் தான்.. நேற்றுவரை தன் மார்பு ரோமங்களை பிடித்திழுத்து விளையாடிய பிஞ்சு குழந்தையாக தெரிந்தவள் இன்று திருமணமாகி வேறோர் குடும்பத்தின் முக்கிய அங்கமாக மாறப்போவதை எண்ணி வியப்பாக உணர்ந்தார், குணா.

 

அப்பாவிடம் வந்தவள் எப்போதும் கல்லூரிக்கு தயாராகிவிட்டு கேட்பதுபோல் “எப்படியிருக்கேன் அப்பா?” என்று வினவ, “உனக்கென்னடா குட்டி. தேவதை மாதிரி இருக்க” என்றார். “அப்பா.. முன்ன பின்ன நீங்க தேவதைய பார்த்தது இல்லையா?” என்று அர்ஜுன் கேலி செய்ய, “அம்மாகூட தான் உன்னை ராஜா மாதிரி இருக்கனு சொல்றாங்க. அப்ப அவங்களும் முன்ன பின்ன ராஜாவ பார்த்தது இல்லையோ?” என்று தம்பிக்கு மூக்கொடை கொடுத்தாள்.

 

அதில் சிரித்துக் கொண்ட தந்தை மகளுடன் ஐ-ஃபை அடித்துக் கொள்ள, “பேசிகிட்டே இருக்காம சீக்கிரம் எல்லாத்தையும் கார்ல ஏத்துங்க. புறப்படனும்” என்று காயு வந்து ஒரு அதட்டலை போட்டுவிட்டுச் சென்றார்.

 

தேவையான அனைத்தையும் தயார் செய்துகொண்டு யாவரும் பண்பொழி முருகன் கோவிலை நோக்கி பயணித்தனர். பயணத்தினை அமைதியாக கடக்கயிழாது தவித்தவளுக்கு மனமெங்கும் போராட்டம் தான். தனக்குள் எழுந்த அத்தனை கேள்விகளையும் பயம் என்னும் சாயம் மேலும் மெருகேற்ற, ‘உள்ளே நுழைந்து பார்த்தால் தானே அது பூக்காடா சாக்காடா என்பதை அறிய முடியும்’ என்று தனக்குத்தானே தைரியம் கொடுத்துக் கொண்டாள்.

 

அந்த அழகிய கோவிலை வந்தடைந்த நேரம் சூரியன் மெல்ல எழுந்து தன் தங்க நிற கதிரை அவள் அடர் சிகப்பு நிற புடவையில் பாய்ச்சி, ஜரிகைகளை பளபளக்கச் செய்ய, கண்கள் விரிய அந்த சூழலை ரசித்தாள். எப்போதோ சிறு பிராயத்தில் வந்தது என்பது மட்டுமே அவளுக்கு நினைவிருக்க, கோவிலின் சூழல் முற்றிலும் நினைவடுக்கில் இல்லாததால் புதுமையான உணர்வை கொடுத்தது.

 

அனைத்தையும் ரசித்து ரசித்துப் பார்த்தவளுக்கு அக்கோவில் மிகவும் பிடித்திருந்தது. “ஏ அஜு.. செம்மையா இருக்குல? இந்த லொகேஷன்ல ஒரே ஒரு ஃபோட்டோ எடுடா” என்று அஞ்சு அவன் காதை கடிக்க, “மேடம்.. நீங்க மூனாவது மனுஷன் கல்யாணத்துக்கு வரலை. நின்னு நிதானமா ஃபோட்டோ எடுக்க. நடக்கபோறது உன்னோட கல்யாணம்” என்று அவன் கேலி செய்தான். “ஏ ஏ பிளீஸ்டா அவங்க எல்லாத்தையும் எடுத்துட்டு வர்றதுக்குள்ள ஒன்னே ஒன்னு எடுத்துடுடா” என்று கெஞ்சியவள் தன் காரியத்தினையும் சாதித்துக் கொண்டு கோவிலின் உள் நுழைந்தாள்.

 

மாப்பிள்ளை வீட்டார் யாவரும் கூடியிருக்க, உள்ளே நுழைந்தது இடதுபுறம் இருக்கும் பிள்ளையார் சன்னதிக்கும் குளத்திற்கும் இடையேயான பகுதியில் ஓமகுண்டம் வைத்து திருமணம் நடைபெறுவதற்கான அனைத்தையும் சற்றி அடுக்கியிருந்தனர். புகைப்பட கலைஞர்கள் அனைத்தையும் காணொளியாகவும், புகைப்படங்களாகவும் எடுத்துக் கொண்டிருக்க, அவளுக்குள் இத்தனை நேரம் இல்லாத ஒரு உற்சாகம் குடிகொண்டது.

 

பட்டுவேட்டி சட்டையில் கட்டிளம் காளையவன் தனி அழகுடன் நின்றிருக்க, நல்ல நேரத்திற்குள் ஏற்பாடுகளை செய்திட வேண்டி, மணமக்கள் இருவரையும் முருகனை தரிசிக்க அழைத்து வந்தனர். எப்போதும் போல் இப்போதும் தன் முருகை கைகூப்பி வணங்கியவன் நெகிழ்வுற்று நிற்க, அதை புதிதாக பார்த்தவளுக்கு அவனது நெகிழ்ச்சியான பக்தி ஒரு தனி மதிப்பை கொடுத்தது.

 

தன் மனக்குறைகளை அந்த முருகனிடம் இறக்கி வைத்துவிட்டு மணம் குறைவின்றி நடக்க வேண்டிக் கொண்ட இருவரும் வெளியே வர, மணக்களை அமர்த்தி மந்திரங்களை கூறச்செய்தார் பிரோகிதர். சாயும் அப்போது வந்துவிட, தோழியை கண்டு முகம் கொள்ளா புன்னகையுடன் தன் வாழ்த்துக்களை தெரிவித்தபடி நின்றுக்கொண்டாள்.

 

சுற்றிலும் புதுமையான சூழல், புது மனிதர்கள் என்று அனைத்தையும் உணர்ந்து, ஒருவித படபடப்பும் பூரிப்பும் அவளை சூழ்ந்திருக்க, அவளது படபடப்பை புன்னகையுடன் கண்டவன் ‘ஏ கேடிகுட்டி.. இப்புடி எலியா பதுங்கி இருக்கும் உனக்குள்ள ஒரு புலிகுட்டியே இருக்குனு உன் தம்பி சொல்றான். என் காதலால உன் தயக்கங்களை களைத்து, நீ எதிர்ப்பார்க்காத ஒரு வாழ்வை உனக்கு கொடுத்துகாட்டுறேன். இதுக்கு நான் நேசிக்கும் என் தோழனான இந்த முருகன் தான் சாட்சி’ என்று மனதோடு கூறிக் கொண்டான்.

 

அவ்வப்போது ருத்ரனை நிமிர்ந்து பார்த்த அஞ்சிலை, அவனும் தன்னையே பார்த்திருப்பதை கண்டு பெயருக்கு ஒரு புன்முறுவலை பரிசாகக் கொடுக்க, தானும் புன்னகைத்தவன், மெல்ல அவள் புறம் சரிந்து “நெர்வஸா இருக்கியா?” என்றான். அதில் உள்ளுக்குள் திடுக்கிடலுடன் அவனை நிமிர்ந்து பார்த்தவள், “இ.இல்லங்க” என்க, இதழ் மடித்து சிரித்தவன் “லெட்ஸ் ஸ்டார் அவர் லவ் ஜெர்னி. ஆர் யூ ரெடி ஃபார் தட்?” என்று மெல்ல கிசுகிசுத்தான்.

 

அவனது வார்த்தைகளில் அந்த ‘லவ் ஜெர்னி’ என்ற வார்த்தை அவளுள் என்னவோ பாய்ச்ச, அவனையே சில வினாடிகள் மெய்மறந்து பார்த்தவள், அய்யர் அழைத்த அழைப்பில் தான் அதை உணர்ந்தாள். சுற்றிலும் யாவரும் சிரிக்கும் சத்தம் ‘தன் செயலை கண்டு சிரிக்கின்றனர்’ என்ற எண்ணத்தை தோற்றுவித்து அவள் கன்னங்களை மெருகேற்ற, தன் தலையை மேலும் தாழ்த்திக் கொண்டாள்.

 

அதில் சிரித்துக் கொண்டவனிடம் ஐயர் திருமாங்கள்யத்தினை கொடுக்க, அதை வாங்கிக் கொண்டு அவள்புறம் கொண்டு சென்றவன், “பயப்படாம வா. உனக்கு ஒரு நல்ல கணவனா இருக்க என்னால முடிஞ்ச முயற்சியை எடுத்து பாத்துக்குறேன்” என்று கூறியபடி அதை கட்டினான்.

 

அவன் வார்தைகள் அவள் சிந்தையை சுற்றி முடிச்சிட, அவன் கட்டிய தாலி அவள் கழுத்தை சுற்றி முடிச்சிடப்பட்டது. மூன்றாவது முடிச்சினை ரூபி வந்து போட்டுவிட, அவளை சுற்றி கரம் கொண்டு சென்று, செக்கச்சிவந்த சிந்தூரத்தினை அவள் நெற்றி வகுட்டில் இட்டு, அவளை தன்னுள் ஒருவளாக ஆக்கிக்கெண்டான்.

-வரைவோம் 💞

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
10
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்