அந்த மூன்று மாடி ஜவுளிக்கடையில் இருவீட்டாரும் திரண்டிருக்க, மணமக்கள் போக, வீட்டில் சில முக்கிய குடும்பத்தினருக்கும் உடை எடுக்கவேண்டிய கட்டாயம் இருப்பதால், இருவீட்டை சேர்ந்தோரும் வந்திருந்தனர். முகூர்த்தப்புடவை தங்கள் வீட்டு வலக்கப்படி தான் என்பதால் மணமக்கள் இருவரையும் அவரவர் விருப்பம் படி நிச்சயத்திற்கு உடை எடுத்துக்கொள்ளும் படி கூறி அவர்களுக்கு தனிமையளித்தனர்.
பெரிதாக உடை எடுக்கவென்று கடைகளுக்கு வந்திராதவள், அதிலும் புடவை பக்கம் கூட வந்திராதவளுக்கு என்ன எடுக்கவென்றே புரியாத நிலையில் விழிக்க, அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் “என்னாச்சு?” என்றான்.
திடீரென்று அருகில் கேட்ட அவனது குரலில் லேசாக திடுக்கிட்டவள், பின் அவனைக் கண்டு பெருமூச்சு விட ‘புடவைலாம் கட்ட தெரியாது கட்டினது அரிதுனு சொல்லி அங்க மானத்தை வாங்கிடாத’ என்று சொல்லியே கூட்டி வந்த தாயின் வரிகள் நினைவில் வந்துபோனது.
“இ..இல்ல” என்றவள் சட்டென “முதல்ல உங்களுக்கு எடுப்போமா?” என்று வினவ, “உனக்கு தான்மா கலெக்ஷன்ஸ் அன்ட் கலர்ஸ் நிறையா இருக்கும். உனக்கு எடுத்துட்டு அதுலயே எனக்கு பேர் அப் (pair up) பண்ணிக்கலாம்” என்றான்.
முதல் பந்திலேயே வீழ்ந்து போன தனது யோசனையை மனதிலேயே திட்டிக் கொண்டவள், சரியென்ற தலையசைப்போடு அவனுடன் நடக்க, ‘டிசைனர் சாரீஸ்’ என்று கூறப்படும் பளபளக்கும் அலங்காரம் கொண்ட புடவைகளின் பகுதிக்கு சென்றனர்.
அவற்றை கண்டவளது பார்வையிலேயே ஒரு அசௌகரியம் தென்பட, “என்னாச்சுமா? ஆர் யூ ஓகே?” என்றான். ‘இவரிடம் கூறலாமா வேண்டாமா?’ என்று தன் மனதோடு வாக்குவாதம் நடத்திக் கொண்டிருந்தவள் ‘ஒன்றுமில்லை’ என தலையசைத்துவிட்டு முன்னே செல்ல, அவள் கை பற்றி நிறுத்தியவன் “இல்லையே ஏதோ இருக்குதே” என்றான்.
ஆண் தோழர்களை கண்டிராதவள் இல்லை அவள். இருப்பினும் திடீரென உணர்ந்த அவனது சிறு ஸ்பரிசம், அதுவும் தன்னவன் என்ற வட்டத்தினுள் நுழைய முடிந்த ஒருவனே ஒருவனானவனின் ஸ்பரிசம் அவளுள் வித்தியாசமான உணர்வை கொடுத்தன. இதோ.. அவளது புதுமை பாடங்களின் முதல் படியில் காலூன்றி நின்று விட்டாள்!
அவனையும் அவன் பிடித்திருக்கும் தன் கரத்தினையும் மாறி மாறி பார்த்தவள், என்ன நினைத்தாளோ? “எ..எனக்கு இந்த மாதிரி ஜிகுஜிகுனு போட இஷ்டம் இல்லை” என்று அவன் கண்களை பார்த்தபடி அவள் கூற, “அப்ப போடாத” என்றான். அவனை புரியாமல் பார்த்தவள் “எ.. எனக்கு புடவை கட்டியே பெருசா பழக்கமில்லை. எப்போவாவது காலேஜ் பங்ஷன்ல கட்டினது தான். இதுபோல ஜிகுஜிகுனு போட புடிக்காது” என்று மேலும் விளக்கம் கொடுக்க, “ஜிகுஜிகுனு போட முடியலைனா நம்ம சாதாரணமான அழகுல எடுப்போம்மா. ஆனா புடவை கட்டி பழக்கமில்லைனு சொல்றியே அதுக்கு என்னால ஏதும் பண்ண முடியாது” என்று இருபொருள்பட குறும்பு சிரிப்புடன் கூறினான்.
அதில் பாவை விழிகள் விரிய அவனை நோக்க, “ஏ.. ஏ.. புடவை தான் எடுத்தாகனும். ரெண்டு வீட்டுலயும் அதை தான் ஃபாலோ பண்றோம். அதுக்காக சொன்னேன். நீ முழிக்குறத பார்த்தா வேற ஏதோ நினைச்சுகிட்ட போல இருக்குதே” என்று அடக்கப்பட்ட சிரிப்பினூடே கூறினான்.
தான் உணரும் புதுமையான உணர்வு என்னவென்று அறியாத போதும் அது தரும் இனிமை அவளுக்குப் பிடித்திருந்தது. தலையை குனிந்துக் கொண்டவள், தன் கையை அவனிடமிருந்து விடுவித்துக் கொண்டு செல்ல, மீண்டும் அவள் கையை பற்றிக் கொண்டு அதிகளவு பளபளப்பு அற்ற சேலைகள் கொண்ட பகுதிக்கு சென்றான்.
அங்கு வந்தவன் “ம்ம்.. பாரு” என்க ‘என்ன பாருனு சொல்லிட்டாரு. இவரு எடுத்து தரமாட்டாரா?’ என்று தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டவள் அவனை பார்ப்பதும் சுற்றி சுற்றி புடவையை பார்ப்பதுமாக இருந்தாள்.
கிட்டதட்ட பத்து நிமிடம் ஆகியும் அவள் எதையும் எடுத்துப்போடும்படி கேட்காமலிருக்க, “என்னமா இங்கயும் எதுவும் புடிக்கலையா?” என்று வினவினான். “இல்லை இல்லை.. இங்க நல்லா இருக்கு” என்று அவள் கூற “முன்ன பின்ன புடவை எடுக்க வந்திருக்கியா இல்லையா?” என்று கேட்டான்.
‘என்ன பொசுக்குனு கேட்டுட்டாரு’ என்று நினைத்தவள் தயக்கத்துடன் ‘இல்லை’ என்பதுபோல் தலையசைக்க, ‘சூப்பர்’ என்பதுபோல் கைகாட்டியவன், “அந்த ரெட் சாரி காட்டுங்க” என்று கடை ஊழியரிடம் கேட்க, அவர் அதை எடுத்து விரித்துக்காட்டினார். பின்பு இன்னும் இரண்டு மூன்று எடுத்துப்போட செய்தவன் “எதாவது புடிச்சிருந்தா எடுத்த உள்ளலாம் டிசைன் எப்படி இருக்குனு பாருமா” என்க ‘டிங்கு டிங்கு’ என தலையை ஆட்டியவள் அடுத்து ஆடினாளே ஒரு ஆட்டம்.
ஏனடா இவளுக்கு இதை சொன்னோம் என அவன் யோசிக்கும்படி அடுத்த அரைமணி நேரமாக பல புடவைகளை எடுத்து பார்த்துவிட்டாள், ஆனால் எதையுமே தேர்வு செய்யதானில்லை. திருதிருவென விழிப்பவனை பார்த்தவள் ‘அய்யோ.. ரொம்ப படுத்துறோமோ? எனக்கு எப்பவும் அப்பாவோ அம்மாவோ தான் செலெக்ட் பண்ணுவாங்க. திடீர்னு என்னை செலெக்ட் பண்ண சொன்னா என்ன செய்வேன்?’ என்று நினைத்துக் கொண்டே ஏதோ ஓர் புடவையை எடுத்து “இதுவே ஓகேதாங்க” என்றாள்.
“நீ இதுவரை கடைல வந்து டிரெஸ்ஸே எடுத்தது இல்லையா?” என்று அவன் கேட்க, “எடுத்திருக்கேனே” என்றாள். “நீயா வந்து உனக்குனு செலெக்ட் பண்ணி எடுத்தது இல்லையானு கேட்குறேன்” என்று அவன் வினவ, “இல்ல அப்படி எடுத்ததில்லை. அப்பாவோ அம்மாவோ தான் எனக்கு செலெக்ட் பண்ணி தருவாங்க. அதான் எனக்கு என்ன எடுக்கனே தெரியாம இவ்ளோ லேட் பண்ணிட்டேன். சாரி” என்றாள்.
அவளை பார்க்க பாவமாகவும் ‘தனக்கு எது பிடித்தம் என்று தெரியாத ஒரு பெண்ணா?’ என்று வியப்பாகவும் தோன்ற, தானே அவளுக்காக பார்த்தான். அடுத்த அரைமணிநேரத்தை செலவிட்டு, அவளுக்காக அழகிய கருநீலநிறத்தில் தங்க நிற பட்டைக்கரை வைத்து, புடவையில் ஆங்காங்கே தங்க நிறத்தில் யானைகள் நெய்யப்பட்டிந்த புடவையை பார்த்தவன் “இது..” என்க “நல்லா இருக்குங்க” என்றாள்.
அதில் சிரித்துக் கொண்டவன் “இதுவரை காட்டின பத்து புடவைக்கும் இதேதான் சொல்ற” என்று கூற “எல்லாமே நல்லா தான் இருக்கு. அதான் சொன்னேன்” என்றாள். “அதுசரி” என்றவன் “அப்ப இது ஓகேவா?” என்க “ஓகே தான்” என்றாள்.
“இதுவே ஓகே சார்” என்றவன் ஆண்கள் உடைகளுக்கான பகுதிக்கு செல்ல, பத்தே நிமிடத்தில் அடர் நீல நிற பட்டுச் சட்டையும், அதே நிற பட்டைக்கறை வைத்த பட்டு வேட்டியும் எடுத்திருந்தான்.
‘ச்ச! நான் தான் ரொம்ப நேரமாக்கிட்டேன் போல. இவருக்கு பத்தே நிமிஷத்துல எடுத்தாச்சு’ என்று யோசித்தபடி ஓரக்கண்ணால் பாங்கி அவனை பார்க்க, “பொண்ணுங்களுக்கு கலெக்ஷன் எக்கச்சக்கம். எனக்கு எப்படி பார்த்தாலும் ஒரு சட்டை ஒரு வேட்டிதான். அதனால மேடம் பெருசா ஏதும் யோசிக்க வேணாம்” என்றான்.
அவனை விழிகள் விரிய பார்த்தவள், “நா.. நான் எதுமே சொல்லவேயில்லையே” என்க, “நீ சொன்னனு நானும் சொல்லவே இல்லையே” என்றான். “அ.. அப்றம்” என்றவள் வாக்கியத்தை முழுதாக முடிக்காது திணற, “ஏ கேடி.. இதுதானே நினைச்ச?” என்றான்.
‘முதல் நாள் வாங்க போங்கனு சொன்னாரு.. இன்னிக்கு வா போ முடிஞ்சு கேடி வரை வந்துடுச்சா’ என்று அவள் மனதிற்குள் நினைக்க, ‘இது நல்லா தானே இருக்கு’ என்று அவள் மனம் குதூகலித்தது.
“நம்ம கீழ போய் ஒரு ஜுஸ் குடிச்சுட்டு வருவோமா?” என்று அவன் வினவ, “இ.. இல்லை வேணாம்ங்க. லேட்டாச்சு நம்ம மேலயே போவோம்” என்றாள். பின்னே அவள் அன்னை தான் ‘புடவை எடுத்ததும் மேலே வந்துவிட வேண்டும். தனியே எங்கும் செல்லக்கூடாது’ என்று கூறி அனுப்பியுள்ளாரே. “அவங்க இன்னும் முடிச்சிருக்க மாட்டாங்கமா” என்று அவன் கூற “இ..இல்ல இவ்ளோ நேரம் ஆச்சே” என்று தயங்கினாள்.
“உன் ஒருத்திக்கே, அதுவும் புடவை பத்தி ஒன்னும் தெரியாத உனக்கு எடுக்கவே இவ்ளோ நேரமாச்சு. அவங்க எல்லாம் ப்ரொபஷ்னல்ஸ். எடுக்க லேட்டாகும்” என்று அவன் கூற, அவன் கூறிய தோரணையில் பக்கென சிரித்திட்டாள்.
“சரிசரி வா” என்றவன் அவள் கையை பற்றிக் கொண்டு கீழே கூட்டிச் செல்ல, பாவம் இவள் தான் தயக்கத்துடனே சென்றாள். அவ்வளவு பழக்கமற்றோருடன் இத்தனை தூரம் வந்து அவள் பேசுவதே அரிது. திருமணம் செய்துக்கொள்ள போகிறவர் என்பதற்காக உடனே பற்றுதல் எப்படி வரும் என தினமும் தனக்குள்ளேயே வாதிட்டு வாதிட்டு சோர்ந்து தான் போகிறாள்.
“உனக்கு என்ன வேணும்?” என்று அவன் கேட்க, ‘வாடர்மெலான் ஜுஸ்’ என சொல்ல துடித்த நாவை கட்டுப்படுத்திக் கொண்டு “எதுனாலும் ஓகே” என்று அவள் கூற, ‘இதுலயும் நோ செலெக்ஷனா?!’ என்ற எண்ணத்துடன் சென்று இருவருக்கும் எதேச்சையாக தர்பூசணி பழச்சாறு வாங்கினான்.
அவள் மனதை படித்தெல்லாம் அவன் அதை வாங்கவில்லை. குளிர்ச்சியாக பருக எண்ணியே அவன் அதை வாங்கியிருக்க, பெண்ணவளது விழிகளில் தான் கோடி சூரியனின் பிரகாசம். அதுவே அவனுக்கு அவள் இதை வாங்க விரும்பியிருக்கின்றால் போல என்பதை எடுத்துக் காட்ட, அவளிடம் ஏதும் கேட்காது பழச்சாற்றை கொடுத்தான்.
அவனுக்கும் அவள் தயக்கம் புரிந்தேயிருக்க, உடனேயே ஒட்டுதலை எதிர்ப்பார்க்க கூடாது என்பதற்காக ஏதும் கேட்காது விட்டுவிட்டான். பின் இருவரும் சேர்ந்து மேலே செல்ல, அங்கு இன்னும் சம்பந்திகள் இருவரும் புடவைகளை புரட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு ருத்ரனை விழிகள் விரிய திரும்பிப் பார்த்தாள்.
சிரித்தபடி தலையசைத்தவன், “வா” என்க இருவரும் அவரவர் அன்னையிடம் சென்று நின்றனர். “டிரெஸ்ஸெல்லாம் எடுத்தாச்சாமா?” என்று மகா வினவ, “எடுத்தாச்சு..” என்றவள் அவரை எப்படி அழைக்க என்று குழப்பத்தோடு தன் அன்னையை பார்த்தாள். அதில் சிரித்துக் கொண்ட மகா, “அத்தைனே கூப்பிடுடா” என்க, புன்னகையுடன் தலையசைத்தபடி “எடுத்தாச்சு அத்தை” என்றாள்.
அவளிடம் வந்த ரூபி, “அண்ணி.. நீங்க வாங்க எனக்கு போய் சுடிதார் எடுக்கலாம்” என்று அழைக்க, ‘சுத்தம்’ என்று எண்ணிக் கொண்ட ருத்ரனுக்கு சிரிப்பாக வந்தது. அவளது லட்சனம் அறியாமல் அழைக்கின்றாளே, என்று எண்ணிக் கொண்டவன், ஏதும் பேசவில்லை. தன் தந்தையை ஒரு பார்வை பார்த்துக் கொண்டவள், அவரது கண்ணசைவை புரிந்துகொண்டு ரூபியுடன் சென்றாள்.
சில நிமிடங்களில் இருவரும் வந்திட, தங்கையின் முகத்தை வைத்தே அவளுக்கும் தன் நிலை தான் என்று உணர்ந்தவனுக்கு சிரிப்பதா வருந்துவதா என்ற நிலை!
நேரம் கடந்து யாவரும் தத்தமது சொந்தங்களுக்கும் சேர்த்து புடவை எடுத்து முடிய, இரவு உணவையும் முடித்துக் கொண்டு அவரவர் வீடு திரும்பினர்.
வீட்டை அடைந்ததும் தனது அதிருப்தியை கூறத்துவங்கிய ரூபி, “அவங்களுக்கு செலெக்ட் பண்ணவே தெரியலை அண்ணா. நான் எதுகாட்டினாலும் ஒரு சிரிப்பு ஒரு தலையாட்டல்” என்று கூற, “உன்கூட நாலு அஞ்சு வருஷம் பழகுனவளாடி அவ? புதுசா ஒருத்தி கூட்டிட்டு போய் உட்கார வச்சு கேட்டா அப்படிதான் சொல்லுவா” என்றபடி மகா உள்ளே சென்றார்.
அண்ணனை பார்த்தவள் “இல்லை அண்ணா.. அந்த தயக்கம் இல்லை. அவங்களுக்கு.. எனக்கு சொல்ல தெரியலை. ஆனா பாவமா இருந்துச்சு” என்று ரூபி கூற “விடு ரூபி.. அவ அப்படி பழக்கப்பட்டிருக்கா. நம்ம அதை மாத்த முடியாது” என்றான்.
அவ்வளவு பெரிய விடயம் இல்லை என்று ரூபி தவிர்த்தபோதும் ‘அய்யோ பாவம்’ என்று தோன்றாமலில்லை அவளுக்கு. அங்கு கட்டிலில் படுத்திருந்த அஞ்சுவிற்கு, ‘வித்யாசமா இருக்கு. இவரோட பழக்கம், குணம், எல்லாமே.. எல்லாமே வித்யாசமா இருக்கு. புதுசா ஒருத்தங்ககூட ஒட்டாமலே நம்ம இருந்தது தப்போ? இப்ப இவர்கூட ஒரு ஒட்டுதலே இல்லாம நான் எப்படி வாழ்க்கைய துவங்குவேன்? கல்யாணம் ஆனா ஒரு வருஷம் தான் என்டெர்டெயின்மென்ட் இருக்கும். அப்பறம் எல்லாம் வழக்கம் போலனு ஆகிடும். நம்ம இப்படி இருந்தா?’ என்ற எண்ணமே அவளை சுழன்றது.
அர்ஜுனும் ருத்ரனும் கிளம்பும் தருவாயில் நன்றாக சிரித்துப் பேசியது அவளுக்கு நினைவடுக்கில் வந்து போக, ‘ச்ச! என்னை வச்சுத்தானே அஜுக்கு இவர் உறவு? அவனே நல்லா ஜோவலா பேசுறான். எனக்கு ஏன் வரவேமாட்டேங்குது. தெரிஞ்சவங்களா இருந்தா மட்டும் எட்டு ஊருக்கு வாயடிக்குறேன். இவர்கிட்ட நாலு வார்த்தை கோர்வையா பேச வரலையே’ என்று வருந்தியவள் ருத்ரனுக்கும் அர்ஜுனுக்கும் இருக்கும் உறவு முறையும் தனக்கும் அவனுக்கு இருக்கும் உறவும் வெவ்வேறு என்பதை யோசிக்காது போனாள்.
-வரைவோம்💞