Loading

மந்திரித்துவிட்டதுபோல் அமர்ந்திருந்த தோழியைக் கண்ட சாய் “அடியே அஞ்சலை.. என்னடி பேயு கீயு எதும் அடிச்சுடுச்சா? இப்படி மந்திரிச்சு விட்டதுபோல இருக்க? நானும் வண்டில ஏறினதுல இருந்து பாக்குறேன் இப்படியே இருக்க” என்று வினவ அப்போதும் அவளிடம் பதிலில்லை.

“ஏ உன்னத்தான் அஞ்சு” என்று சளிப்புடன் சாய் அழைக்க, “நாளன்னைக்கு என்னை பொண்ணு பார்க்க வராங்களாம்” என்றாள். “அடப்பைத்தியமே!‌ இதுக்காடி இப்படி இருக்க? நான் என்னமோ ஏதோனு பயந்துட்டேன்” என்று சாய் கூற “காலைல சாப்பிட்டு முடிக்கவும் அப்பா வந்து பேசினாங்க சாய். யாரோ தரகர் வந்து பேசிருக்காங்க. நல்ல பையன் தான் தெரிஞ்சவங்க கிட்ட விசாரிச்சேன். சொந்த வீடு இருக்கு, நல்ல சம்பாத்தியம் தான். நாளன்னைக்கு பொண்ணு பார்க்க வர்றாங்க உனக்கு புடிச்சிருந்தா மேல பேசலாம்னு சொன்னாங்க” என்று அனைத்தையும் ஒப்பித்தாள்.

“சரிடா.. இப்ப இதுக்கு ஏன் இப்படி பதட்டமா இருக்க?” என்று அவள் வினவ “இ..இல்லை சாய்.. நா..நான் என்னனு பேச அவர்கிட்ட? என்னத்தை பேசி இது ஒத்துவருமானு நான் முடிவு பண்ணுவேன்? என்னால எனக்கான பார்ட்னர ஒழுங்கா சூஸ் பண்ண முடியுமா? அச்சோ எனக்கு நினைச்சாலே பதட்டமா இருக்கு” என தலையை தாங்கிக் கொண்டு அமர்ந்துவிட்டாள்.

“ஏ கேர்ள்.. ஜஸ்ட் ரிலாக்ஸ். எதுக்கு இவ்ளோ டென்ஷன்?” என்றபடி அவளருகே அமர்ந்தவள் “அஞ்சு.. நீ இவ்வளவு பதட்டம் படுற அளவு இது ஒன்னுமே இல்லை. நீ அப்படியே பிரம்மாண்டமா யோசிக்காத. என்னை பார்க்க வந்ததை பார்த்ததானே? மூனு நாலு பேர் வருவாங்க. அவங்க கூட தனியா பேசும்போது இது கேட்டு தெரிஞ்சுக்கனும் அது கேட்டு தெரிஞ்சுக்கனும்னுலாம் இல்லை. அவங்க பேசுற விதமே நமக்கு உணர்த்தும். நீ கண்டதையும் யோசிக்காம ரிலாக்ஸா இரு” என்று அறிவுரை கூற குழப்பமான மனநிலையுடன் தலையசைத்தாள்.

அவளை அதிகம் யோசிக்கவிடாது வேலையில் ஈடுபடுத்தியவள் மாலை வீட்டை அடையும் நேரம் “இங்கபாரு அஞ்சல.. எல்லாரும் ஒரே போல கிடையாது. நீ குழப்பமாவே இருந்தாலும் உன் உணர்வுகள் என்னிக்குமே உன்கிட்ட பொய் சொல்லாது. கண்டதையும் நினைச்சு பயப்படாம ரிலாக்ஸா இரு” என்றுவிட்டு சென்றாள்.

உள்ளே சென்றவள் குழப்பமான மனநிலையில் இருப்பதைப் போல் காட்டிக் கொண்டாலும், அவளுக்குள் இருப்பதன் பெயர் பயம் என்பதை தோழி ஒருத்தியே நன்கு அறிந்திருந்தாள். பயமா? ஆம் பயம் தான்.‌ தான் கண்டு வந்த கசப்பான திருமண வாழ்வுகளைப் போன்று தனக்கொரு வாழ்வு அமையப்போகிறது என்பதில் உறுதியுடன் இருந்தவளுக்கு, அதை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்ற பயமே அவளை சூழ்ந்திருந்தது.

ஆனால் அதுவும் அடுத்த ஒருநாளில் பழகி, புளித்து மறைந்து போனது என்று தான் கூறவேண்டும். எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு தயாராகிக் கொண்டிருந்தாள், அஞ்சிலை. (ஷப்பா.. கல்யாணத்துக்கு தயாராகிக்க சொன்னா இவ போருக்கு தயாராகுற போல வசனம் பேசுறா. இவளை வச்சுகிட்டு..)

இதோ அதோ என்று பெண் பார்க்கும் படலம் வந்திட, புன்னகையுடன் தயாராகி தோழியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட அஞ்சு “நல்லா இருக்கேன்ல” என்று ஆசையுடன் வினவ, “அழகா இருக்க. இனிமேல் இப்படி கேட்டு வெட்கப்பட உனக்கு ஒரு புது ஆள் வந்தாச்சு” என்றாள்.

அதற்கு சிறு புன்னகையை பரிசாகக் கொடுத்தவள் வரப்போகும் மாப்பிள்ளை வீட்டாருக்காக காத்திருந்தாள். சில நிமிடங்களில் மாப்பிள்ளை வீட்டார் வந்துவிட, வெளியே கேட்ட சலசலப்பே உள்ளே இருக்கும் தோழிகளுக்கு அதை உணர்த்தியது. மெல்ல வெளியே எட்டிப்பார்த்த சாய், “ஏ அஞ்சல.. முந்தாநாள் என்னைய சொன்னியே. உன் ஹைட்டுக்கு இவர் பக்கத்துல ஷோல்டர் அளவு தான் இருப்ப. எப்படி கொட்டிவைக்க போற?” என்று கேட்டு கேலி செய்தாள்.

அதில் சிரித்துக் கொண்ட அஞ்சிலையை அழைக்க வந்த அர்ஜுன் மற்றும் காயு அவள் கையில் தேநீர் கோப்பைகள் அடங்கிய தட்டினை கொடுத்தனுப்ப, சிறு பதட்டமும், அதை வெளிகாட்டிக்கொள்ளாத புன்னகையுமாக வந்தாள். 

அழகிய அறக்கு வர்ண புடவையில் அளவான ஒப்பனை மற்றும் நகைகளில் அழகாக இருந்த அஞ்சிலையை புன்னகையுடன் கண்ட மகாவும் ரூபியும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டு ருத்ரனை பார்க்க, அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் முகத்தினில் ஒட்டியிருக்கும் புன்னகை அவன் இதழ்களையும் முறுவலிக்கச் செய்ய, அனைவருக்கும் தேநீர் கொடுத்த அஞ்சிலை தந்தையின் புறம் வந்து நின்றாள்.

“என் பொண்ணு அஞ்சிலை. எம்.ஃபார்ம் முடிச்சிட்டு ஹாஸ்பிடல்ல வர்க் பண்றா” என்று குணா அவளைப்பற்றிக் கூற “தரகர் அண்ணா எல்லாம் சொன்னாருங்க. எங்களுக்கு பொண்ணை ரொம்ப புடிச்சிருக்கு. வாழப்போறவங்க நாலு வார்த்தை பேசிக்கட்டும்” என்று மகா கூறினார்.

“அட்ரா சக்க! ஆன்டி நேரா பாயிண்டுக்கு வந்துட்டாங்க. இப்படிதான் இருக்கனும்” என்று சாய் அஜுவிடம் முனுமுனுக்க அவனும் ஆமென்று தலையாட்டி சிரித்தான். இருவரும் மாடிக்கு அனுப்பப்பட, தன் புடவை தலைப்பை சுற்றியபடியே அவன் முன் நின்றாள். அமைதியாக கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்த ருதர்ன் அவளையே பார்த்தபடி இருக்க, அவன் ஏதும் பேசுவான் என்று எதிர்ப்பார்த்தவள் அவனது அபார மௌனத்தில் நிமிர்ந்தாள்.

அதற்காகவே காத்திருந்தது போல் மெல்ல புன்னகைத்தவன், “ஹாய்” என்க அவளும் மெல்லிய சிரிப்புடன் “ஹாய்” என்றாள். “இந்த கல்யாண விஷயம் உங்களோட சம்மதத்தோட தான் நடக்குதா? இப்ப உங்களுக்கு கல்யாணம் செஞ்சிக்க ஓகேவா?” என்று கேட்டவனது முதல் கேள்வியே ‘என்னை பிடித்திருக்கிறதா?’ என்றல்லாது ‘உனது விருப்பமுடன் நடக்கின்றதா?’ என்பதே முதலாவதாக உள்ளதை உணர்ந்தாள்.

சாய் கூறிய ‘அவங்க பேசுறதுலயே புரியும்’ என்ற வார்த்தை மனப்பெட்டகத்தில் வந்துபோக, அவளது புது அனுபவப் பாடத்தின் முதல் படியை மெல்லவே உணர்ந்தவள் ஒரு சென்டிமீட்டர் அளவு தன் குண்டு கண்களை விரித்து அவனை ஏறிட, ‘என்ன?’ என்பது போல் புருவம் ஏற்றி இறக்கினான்.

“அ.. அதெல்லாம் இல்லை. என்னோட சம்மதத்தோட தான் எல்லாம் நடக்குது” என்று அவள் கூற “குட்” என்றவன் “என்கிட்ட எதும் கேட்கனும் அல்லது பேசுனுமா?” என்று கேட்டான்.

அவனை ஒரு நொடி ஆழ்ந்து பார்த்தவள் “உங்களுக்கு எதாவது பேசனுமா?” என்று கேட்க அவளது புரிதலின் முதல் பிடியை பற்றிக் கொண்டு சிறு புன்னகையுடன் ‘ஆம்’ என்று தலையசைத்தான்.

‘கேட்பதற்கு நான் தயார்’ என்பதை சொல்லாமல் சொன்ன அவளது விழிமொழிகளை புரிந்துக் கொண்டவன் “நான் ருத்ரன். இது உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். நான் ஒரு தனியார் உரம் தயாரிக்கும் நிறுவனத்துல வேலை பார்க்குறேன். என்கூட அம்மா அன்ட் தங்கை இருக்காங்க. தங்கை முதல் வருஷம் எம்.ஏ படிக்குறா. அப்பா கிடையாது. சொந்த வீடு ஒன்னு இருக்கு ஆனா கார்லாம் கிடையாது. என் சம்பாத்தியம் மட்டும் தான் குடும்பத்தை பார்த்துக்க தங்கச்சியை படிக்க வைக்கனு எல்லாத்துக்கும்” என்றவன் தன் வாழ்க்கையை பற்றி சுருக்கமாக கூறியிருந்தான்.

அவளிடம் மௌனம் மட்டுமே நிலைத்திருக்க “எனக்கு சொல்றதுக்கு வேற எதுவும் இல்லை. என்னுடைய ஸ்டேடஸ் இதுதான். நீங்க நிறையா படிச்சு ஆஸ்பிடல்லலாம் வர்க் பண்றீங்க. உங்களுக்கு நானும் என் குடும்பமும் பொருத்தம்னு பட்டா கல்யாணம் செய்துக்கலாம்” என்றான்.

‘தனது குடும்பத்தை அவன் எத்தனை நேசிக்கின்றான் என்றும், தங்கையை அவன் மகள் போல பார்த்துக் கொள்கிறான் என்றும் அவனது பேச்சின் மூலம் உணர்ந்தவள் “நான் ஒன்னும் பெரிய படிப்புலாம் படிக்கலை. அன்ட் ஆஸ்பிடல்ல டாக்டர்லாம் இல்லை. ஓ.டில மெடிசன்ஸ் சப்லை.. ம்ம் ஒரு நர்ஸ் மாதிரினு வச்சுக்கோங்க” என்றாள்.

“ம்ம்.. இருந்தாலும் உங்க லெவல் ஆஃப் நாலேஜ் எனக்கு அதிகம் தான். உங்கள பத்தி சொல்லுங்க பேசலாம்னுலாம் நான் கேட்க மாட்டேன். வாழ்க்கைய வாழுவது மூலமா புரிஞ்சுக்க விரும்புபவன் நான். அதனால இந்த பெண் பார்க்கும் படலம் கூட உங்களுக்கு இந்த கல்யாணம், என் உடனான கல்யாணம் ஓகேவானு கேட்க தான். எதுவும் ஸ்டிரெஸ் பண்ணிக்காம உங்களுக்கு என்ன படுதோ அந்த முடிவை எடுங்க” என்று அவன் கூற இவளுக்கு தலையும் புரியவில்லை காலும் விளங்கவில்லை.

மீண்டும் தன் புடவை தலைப்பை திருகத்துவங்கியவள் சில நிமிட மௌனத்திற்கு பின் “எனக்கு கல்யாணத்துலயோ உங்கள கல்யாணம் செய்துக்குறதுலயோ எந்த ஆட்சேபனையுமில்லை” என்று அதற்கு மேல் என்ன கூறவென்று ஏதும் புரியாது அமைதியாகிட, “என் சைட்ல இருந்து நான் என்னோட ஸ்டேடஸ் உங்களை பாதிக்காதானு கேட்டுகிட்டேன். உங்க சைட்ல இருந்து என்கிட்ட எந்த டிமேண்டும் இல்லையா உங்களுக்கு?” என்று வினவினான்.

“இ.. இல்லை எனக்கு அந்த மாதிரி எந்தவொரு டிமேண்டும் கிடையாது” என்று கூறியவள் “ஆங்.. நீங்க என்னை வா போனே கூப்பிடலாம்” என்க, “வா போனு கூப்பிடமாட்டேன்னு இல்லை. உங்க முடிவு எதுவும் தெரியாம அப்படி உரிமை எடுத்துக்க கூடாதுனு தான்” என்றான்.

இதுவரை தான் பார்த்திடாத, தனது ‘கணவன்’ என்ற வரையறைக்குள் இருக்கும் அடையாளங்களுக்கு மாறுபட்டவனாக அவன் தென்பட, அவளுக்கு அந்த உணர்வே வித்தியாசமாக இருந்தது. அச்சமும் இன்பமும் சரிவிகித்து கிடைக்கும் தருணத்தை எப்படி உணருவது என்று அறியாது படபடப்பை உள்ளேயே மறைத்துக் கொண்டு அவள் நிற்க “அப்ப ஓகே தானே?” என்று கேட்டான்.

அவனை பார்த்து மெல்ல புன்னகைத்தவள் தலையசைக்க, தானும் புன்னகைத்தவன் சிறு தலையசைப்பை பதிலாகக் கொடுத்து கீழே வந்தான்.

கீழே வந்த இருவரையும் கண்ட பெற்றோர் அவர்களது முடிவை எதிர்நோக்கியிருக்க, இருவரும் சம்மதம் தெரிவித்திருந்தனர். முகம் கொள்ளா புன்னகையுடன் எழுந்த மகா தான் கொண்டு வந்த பூவை அஞ்சுவிற்கு வைத்துவிட, அத்தனை ஆனந்தத்துடன் நிச்சயத்திற்கு நல்ல நாள் குறித்துவிட்டு விடைபெற்றனர்.

“ஏ… ஒருவழியா என் நண்பி என்கேஜ்ட் பீஸ் ஆகப்போறா” என்று அவளை அணைத்துக் கொண்ட சாய் கத்த, சிறு நாணச்சிரிப்புடன் அவளை அணைத்துக் கொண்டாள்.

அங்கும் அதே குதூகலம் தான்… “ஏ அண்ணா.. அண்ணி என்ன பேசினாங்க. அவங்களுக்கு ஓகே தானே? எனக்கு செம்ம ஹாப்பியா இருக்கு. இன்னும் ஒருதடவ சொல்லேன்” என்று ரூபி கேட்க சிரித்தபடி “ஓகேதானாம் டா” என்றான்.

“அவங்க பார்க்கவே சாஃப்டா இருக்காங்க அண்ணா. உனக்கு புடிச்சிருக்கு தானே? நல்லா பேசினாங்களா?” என்று ரூபி வினவ, என்ன பேசவென்றே தெரியாது அவள் திருதிருத்தது நினைவு வந்து அவனுக்கு சிரிப்பாகத் தான் வந்தது.

சிறு சிரிப்புடன் “புடிச்சிருக்குடா” என்று அவன் கூற “ஹப்பா.. சூப்பர் அண்ணா.. நான் செம்ம ஹாப்பி” என்றாள். சிரித்தபடி வந்து அவள் தலையை கோதிய மகா, “உனக்கு சம்மதம் தானேடா கண்ணா?” என்று தன் சார்பாக ஒருமுறை வினவ, “புடிச்சிருக்குமா” என்றான்.

“சரிப்பா. ஒரு நல்ல நாள் பார்த்து போய் புடவைலாம் எடுத்திடலாம்” என்று அவர் கூற “அண்ணா அண்ணா.. எனக்கு நிச்சயத்துக்கு ஒன்னு கல்யாணத்துக்கு ஒன்னு ரிசப்ஷனுக்கு ஒன்னுனு மொத்தம் மூனு டிரஸ் வேணும்” என்று ரூபி கூச்சலிட்டாள்.

“ப்ச்.. ரூபி” என்று அவள் அன்னை ஒரு கண்டனப் பார்வை பார்க்க, “அம்மா.. என்கிட்ட தானே கேட்குறா? விடுங்கமா” என்றவன் “மூனு என்னடா அஞ்சு டிரெஸ் வாங்கிடலாம் உனக்கு மட்டும்” என்றான். அதில் சிரித்தபடி அண்ணனை அவள் கட்டிக் கொள்ள, அங்கு அஞ்சுவை அமர்த்தி, “ஏ அஞ்சு உனக்கு ஓகேதானே?” என்று காயு கேட்டார்.

“ஓகேதான் ம்மா” என்று அவள் கூற “வெளிநாட்டு சம்மந்தத்துக்கு அழுததால தான் அப்பா பக்கத்துலயே பார்த்துட்டார் போல” என்று அர்ஜுன் கூறினான். ஆம்! இவர்கள் வீட்டிலிருந்து அவர்களது வீட்டிற்கு முக்கால்மணிநேர தூரம் தான். அதிலும் தினமும் அவள் மருத்துவமனைக்கு தன் புகுந்த வீட்டிலிருந்து புறப்பட்டால் தனது பிறந்தவீட்டைத் தாண்டித்தான் போகவேண்டும். ஆதலால் தான் அர்ஜுன் அவ்வாறு குறிப்பிட, தன் தந்தையை கட்டிக் கொண்டு “அப்பானா அப்பா தான்” என்றாள்.

பின் சிறார்கள் இருவரும் எழுந்து சென்றிட “ஏங்க.. எல்லாம் நல்ல இடம் தானே? நல்லா விசாரிச்சுட்டீங்கள்ல? ரொம்ப வேகமா நடக்குறாப்ல இருக்கு. அதான் கேக்குறேன்” என்று வினவினார். “நல்ல இடம்தான் காயு. நல்லா விசாரிச்சுட்டு தான் பொண்ணு பார்க்க வரசொன்னேன்” என்றவர் பேச்சில் அமைதியடைந்தவர் “பார்க்க நல்ல மனுஷங்களா தான் படுறாங்க. அவங்க அம்மாவும் நல்லாதான் பேசுறாங்க. எல்லாம் நல்லபடியா முடிஞ்சா நம்ம குளதெய்வக் கோவிலுக்கு போய் ஒரு படையல் போட்டுட்டு வருவோம்” என்றார்.

“சரிமா” என்றவர் “இன்னும் ஒரு மாசம் இருக்கு. அதுக்குள்ள வேண்டியதையெல்லாம் வாங்கிடனும். நல்ல நாள் பார்த்து புடவை எடுக்க போகலாம்னு சொல்லிருக்காங்க. நிச்சயத்தை நம்ம இஷ்டபடினு சொல்றாங்க. எங்க வழிப்படி நிச்சயம் வீட்ல தான் பண்ணுவோம்” என்று கூற “ஆமாங்க. நம்ம வீட்லயே பண்ணலாம். உங்க வீட்டு ஆளுங்க வந்தா தங்க ஏற்பாடு மட்டும் பண்ணுங்க” என்று கூறினார்.

“சரிமா.. கல்யாணம் அவங்க குலதெய்வம் கோவில்ல தான் பண்ணுவாங்களாம். வர்ற எல்லாருக்கும் வீட்டுல இடம் இருக்காது. முக்கியமான சொந்தங்களுக்கு மட்டும் ரூம் புக் பண்ணனும்” என்று குணா கூற “மண்டபம் செலவு இல்லை தானே. அதுக்கு பதிலா இதை செய்துட வேண்டியது தான்” என்று கூறினார்.

இருவீட்டிலும் திருமணம் பற்றி மும்முரமான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்க, தனக்கும் திருமணம் நடக்கப்போகிறது என்ற பூரிப்பு, சிறு வெட்கம், அதிர்ச்சி என்ற பல உணர்வுகள் கலந்த நிலையில் இருந்தாள், அஞ்சிலை.

‘காரிகை யான்,

காளையவன் கைகளினுள்

சிறைபடப்போகும் நாள்

விரைவில் என்னை நோக்கி

மஞ்சள் கயிற்றுடன் வருவது

நிஜம்தானோ!?’ 

என்ற கவிதை வரியில் தன்னால் இன்னமும் நம்ப முடியாத உணர்வினை கொட்டிவிட்டு புன்னகையுடன் தன் வேலையை தொடர்ந்தாள்.

-வரைவோம்💞

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
8
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்