Loading

மாதங்கள் சில கடந்து, இல்லை இல்லை உருண்டோடிவிட, வேலை முடித்து வீடு வந்தவள் கண்டது கோபமும் அழுகையுமாக தன் தம்பியை திட்டிக் கொண்டிருந்த தாயை தான். ஒன்றும் புரியாத நிலையில் உள்ளே வந்தவள் “என்னாச்சு ம்மா?” என்று தான் கேட்டாள். 

“இதோ வந்துட்டாங்க மேடம். உன் ஃபோன தூக்கி குப்பைல போடு. எதுக்கு வெட்டியா அதை வெச்சுகிட்டு” என்று காயு பொறிய, “என்னாச்சும்மா?” என்றாள். “எத்தனை தடவை கால் பண்ணேன். ஏன்டி எடுக்கலை?” என்று கேட்டவர் குரல் தற்போது வேதனையோடு ஒலிக்க, “ம்மா.. சார்ஜ் போய் டெட் ஆயிடுச்சு. காலைல சார்ஜ் போடவே மறந்துட்டேன். ஏன் என்னாச்சு?” என்று வினவினாள்.

“ரொம்ப முதுகுலாம் வலிக்குதுனு எதும் மாத்திரை மருந்து வாங்கிட்டு வரசொல்லுவோம்னு உனக்கு அத்தனைமுறை அடிச்சேன். நீ எடுக்கவே இல்லை. சரினு இவனுக்கு அடிச்சா இவனும் எடுக்கலை. கேட்டா சைலென்ட்ல இருந்ததுனு சொல்லிட்டான். அப்பாவுக்கு அடிச்சு முடியலப்பா மருந்து வேணும்னு கேட்டா அவரு வேலை நேரத்துல தான் ஃபோன் போடுவியானு கத்துறாரு. நான் போனால்தான் என் அருமை உங்களுக்குலாம் புரியும்” என்று கண்ணீரோடு கத்தியவர் தனதறைக்கு சென்றிட, பிள்ளைகளிருவரும் விதிர்விதிர்த்து போயினர்.

அஞ்சிலைக்கு தாயின் நிலைமை சற்றே புரிபடுவதுபோல் இருந்தது. இந்த நான்கு மாத காலமாக பெற்றவளுக்கு மாதவிடாய் இல்லை. ‘மெனோபாஸ்’ என்று கூறப்படும் மாதவிடாய் நின்று போதலுக்கான அறிகுறியாக மாதவிடாய் சுழற்சியே திடீரென்று தலைகீழாக மாறிப்போகும். அப்படியான காலங்களில் ‘ஈஸ்டிரோஜன்’ என்ற ஹார்மோன் சுரப்பது முற்றிலும் குறைந்து போகும். அதனால் உடல் எடை ஏறுதல், முதுகு வலி, உடல் சோர்வு, தூக்கமின்மை, குழப்பமான மனப்பான்மை, அதிக கோபம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். தற்போது தாயவளின் நிலையும் அதுவென்று புரிய, “அஜு வாடா போய் மருந்து வாங்கிட்டு வருவோம்” என்றாள்.

“ஏ.. என்னனு தெரியாம என்ன மருந்து வாங்க?” என்று அவன் வினவ, தம்பிக்கு புரியும்படி எடுத்துக் கூறியவள் “பாவம் உடம்பு முடியாததுக்கு ரொம்ப டென்ஷன் வருதுடா அவங்களுக்கு.. அதான்” என்று கூறினாள். இவர்கள் பேசும்போதே தந்தையும் வந்துவிட, “அப்பா.. அம்மா ஃபோன் போட்டப்போ ஏன் திட்டினீங்க?” என்று அஞ்சு கோபமாக கேட்டாள்.

“ப்ச்.. வேலை நேரம் ரொம்ப டென்ஷன்ல இருந்தேன். அதான் திட்டிட்டேன். இப்ப எங்க? உங்கள சத்தம் போட்டாளா?” என்று அவர் வினவ, பிள்ளைகள் இருவரும் “அதெல்லாம் இல்ல” என்றனர். சிறு மருந்து கவரை எடுத்துக் கொண்டு குணா தங்கள் அறைக்கு செல்ல, சிறு புன்னகையுடன் “அப்பாவே வாங்கிட்டாங்க போல அஞ்சு” என்று கூறிய அஜு தனதறைக்கு சென்றான்.

அங்கு தன் வீட்டிற்குள் நுழையும்போதே தாயும் தங்கையும் தரகருடன் பேசிக் கொண்டிருப்பதைக் கண்ட ருத்ரன், ‘அய்யோ பாவமிந்த மனுஷன்’ என்ற நினைப்போடு உள்ளே நுழைய, முகம் மலர மகனைக் கண்ட மகா, “நான் பையன்கூட பேசிட்டு சொல்லுறேன் அண்ணா” என்று தரகரை அனுப்பி வைத்தார்.

ரூபியோ வேகமாக அண்ணனிடம் ஓடி, “அண்ணா.. போய் பிரஷ்ஷாகிட்டு வா.. அண்ணிய பாக்கலாம்” என்று கூற “ஏ ரூபி.. சும்மா இரு” என்ற மகா “நீ போய் முகம் கைகால் கழுவிட்டு வாப்பா” என்றார். 

சிறு தலையசைப்புடன் சென்று குளித்து உடைமாற்றி வந்தவனுக்கு மகா பருக தேநீர் கொடுக்க, ரூபி ஆர்வத்துடன் வந்து அமர்ந்தாள். “நம்ம அண்ணா போன முறை நீ சொன்னதால என்கிட்ட ஜாதகம் மட்டும் வாங்கிட்டு போயிருந்தாருபா. ஒரு ஜாதகத்தோட நல்லா பொருந்தியிருந்ததாம். அந்த பொண்ணோட அப்பாகிட்ட பேசிருக்காரு. அவங்க பொண்ணு கிட்ட கேட்டுட்டு சொல்றதாகவும் உன்கிட்டயும் கேக்க சொன்னதாகவும் சொன்னாராம். பொண்ணு எம்.பார்ம் படிச்சு முடிச்சு ஆஸ்பத்திரியில வேலை பாக்குறாளாம். நல்ல பொண்ணு அமைதியான குணம்னு சொன்னாரு. பொண்ணு போட்டோவ பார்த்தோம் எங்களுக்கும் ரொம்ப புடிச்சிருந்தது. நீ என்னப்பா சொல்ற? ஒருமுறை நேர்ல போய் பார்த்து புடிச்சிருந்தா பூ வைச்சுட்டு வரலாம்” என்று மகா நீலமாக பேசி முடித்தார்.

சற்றே யோசித்தவனிடம் பெண்ணவளின் புகைப்படத்தினை மகா கொடுக்க, அதை வாங்கி பார்த்தான். அளவான உயரம், சற்றே பூசிய உடல்வாகு, மான் நிறம், குண்டு கண்கள், ஆப்பிள் கன்னங்கள் என அந்த சாதாரண பச்சை நிற புடவையில் சிக்கென்று தான் இருந்தாள். 

விஜி நல்ல நிறம், மெலிந்த தேகம், மீன் கண்கள் என்று கதாநாயகி போல் இருப்பவள். அவளுடன் ஒப்பிட்டால் இவள் அழகு குறைவு தான். ஆனால் இவளிடம் ஏதோவொன்று மகாவையும் ரூபியையும் ஈர்த்திருந்தது. அது கருணை பூசிக்கொண்ட கருவிழிகளா? புன்னகையை பூசிக்கொண்ட செவ்விதழ்களா? முக்குத்தி மிலிர்ந்த சப்பை மூக்கா? புன்னகை கொடுத்த பூரிப்பில் மிலிரும் கன்னங்களா என்று இருவரும் அறியவில்லை.

அவள் புகைப்படத்தினை பார்த்தவுடன் அவனுக்கு ஸ்பார்க்கெல்லாக் அடிக்கவில்லை, ஆனால் சிறு புன்னகை மட்டும் அரும்பியது. தாயை நிமிர்ந்து பார்த்தவன், “அவங்களுக்கு ஓகேனா பொண்ணு பார்க்க போலாம் ம்மா” என்று கூற “ஏ.. ஜாலி” என்று ரூபி கத்தினாள். 

அதில் சிரித்துக் கொண்ட மகா “நான் பேசியிருக்கேன்பா. ஒருநல்ல நாள் பார்த்து போகலாம்” என்று கூற “சரிம்மா” என்றான். “ஏ.. ஜாலி.. ஒருவழியா எங்க அண்ணாக்கு கல்யாணம் ஆகப்போகுது” என்று ரூபி அண்ணனை அணைத்துக் கொள்ள, சிரித்தபடி அவள் தலைகோதிவிட்டு எழுந்துச் சென்றான்.

                           ****

“ஏ என்ன சாய் சொல்ற? அலைன்ஸ் பிக்ஸ் ஆகிருக்கா? சூப்பர்டி” என்று அஞ்சு கூற “ஆமா அஞ்சல.. எனக்கே ஷாக்தான். அவங்களுக்கு ஒரு தங்கை அப்றம் அம்மா. அப்பாகிடையாதாம். நல்ல பொறுப்பான பையன்னு யாரோ அப்பாகிட்ட பேசிருக்காங்க. அப்பா என்கிட்ட கேட்டுட்டு சொல்லுறதா சொல்லிருக்காங்க” என்று சாய் கூறினாள்.

“ஓ.. சூப்பர்டி. பொண்ணு எதும் பார்க்க வராங்களா?” என்று அஞ்சு கேட்க “ம்ம்.. நாளைக்கு தான் வராங்க அஞ்சு. அதான் உன்கிட்ட சொல்லலாம்னு கூப்பிட்டேன். நீ வாடி” என்று சாய் கூறினாள். “ஏ.. கண்டிப்பா வருவேன் சாய்” என்ற அஞ்சு அவளுடன் சிலநிமிடங்கள் பேசிவிட்டு அழைப்பை வைத்தாள்.

மறுநாள் காலை வெகு பரபரப்பாக தயாராகியவள் தோழியின் பெண்பார்க்கும் படலத்திற்கு தன் தம்பியின் உதவியோடு செல்ல, அங்கு பாதி அலங்காரத்தில் இருந்த தோழி இவளை கண்டு முறைத்தபடி “என்னை தானே பொண்ணு பார்க்க போறாங்க. உன்னையா பார்க்க போறாங்க? காலைலயே வர சொன்னா அம்மணி மேக்கப்ப முடிச்சுட்டு இப்ப வரீங்க” என்றாள்.

“சரி சரி கத்தாத பிம்பில் வந்துட போகுது” என்று நக்கலடித்தபடி அவளுக்கு மீதி அலங்காரத்தினை செய்து முடித்தாள் அஞ்சிலை. “மாப்பிள்ளை ஃபோட்டோ எதுவும் பார்த்தியாடி?” என்று அஞ்சு வினவ “இல்ல அஞ்சல.. நேர்லயே பார்த்துப்போம்னு விட்டுட்டேன்” என்றாள்.

சிலநிமிடங்களில் மாப்பிள்ளை தனது தாய் மற்றும் தங்கையுடன் வந்து சேர, கதவோரத்திலிருந்து எட்டி எட்டி பார்த்த அஞ்சு, “ஏ சாய்.. மாப்பிள்ளை பயங்கற ஹைட்டா இருக்காரு. நீ ஏனி வச்சு ஏறிதான் கொட்டனும் போலயே” என்று கேட்டாள். அதில் சிரித்துக் கொண்ட சாய், தன்னை அழைத்ததும் சென்று குளம்பிகளை கொடுத்து, சபையை வணங்கிவிட்டு வர, மாப்பிள்ளை மற்றும் பெண்ணை தனியே பேச அனுப்பினர்.

சில நிமிடங்களில் இருவரும் வர, அறைக்குள் வந்த சாயை பார்த்த அஞ்சு “ஏ என்ன? மாப்பிள்ளை ஓகேவா?” என்று கேட்டாள். “முக்கும்” என அவள் சளித்துக்கொள்ள, அவளது அன்னை மைதிலி உள்ளே வந்து “என்னடி ஓகேவா?” என்று கேட்டார்.

“யம்மா.. நல்லா கூட்டிவந்தீங்க. அவர் புக்குடு மாப்பிள்ளைமா.. கமிட்டடாம். வீட்ல சொல்ல பயமா இருக்காம். எப்படியாவது கல்யாணம் வேணாம்னு சொல்லிடுங்கனு கேக்குறார்” என்று மகள் கூற “என்னது?” என்று கொதித்து விட்டார்.

“ம்மா.. பிரச்சினை வேணாம். வேணாம்னு சொல்லிடுங்க, இல்லை யோசிச்சு சொல்லுறோம்னு சொல்லிட்டு ரெண்டு நாள் கழிச்சு வேண்டாம்னு சொல்லுங்க” என்று அவள் கூற “உங்கப்பா சபைல வச்சு காரணம் கேட்டா நான் என்னடி சொல்ல?” என்றார்.

“அம்மா.. நீங்க இருங்க. நான் போய் நைஸா அப்பா காதுல சொல்லிட்டு வரேன்” என்று அஞ்சு கூற “அடியே.. எங்கப்பா சண்டைக்கு போயிடுவாரு” என்று சாய் கூறினாள். “ஏன்டி.. இப்ப போய் யோசிச்சு சொல்றாளாம்னு சொன்னா உன்னை தப்பா நினைக்க மாட்டாங்களா?” என்று மைதிலி கேட்க, “ம்மா.. ரெண்டு பக்க சொந்தமும் இல்லை. அவங்க மட்டும் தானே இருக்காங்க. அவங்க தப்பா நினைச்சா என்ன? எப்படியும் கல்யாணம் தான் நடக்காதுல” என்றாள்.

அஞ்சுவும் அதையே கூறி அவரை அனுப்ப, கைகளை பிசைந்தபடியே சென்றவர் ‘பொண்ணு யோசிச்சு சொல்றாளாம்’ என்று கூறி கணவரின் முறைப்பையும் வாங்கிக் கொண்டார். பின்பு அவர்கள் சென்றுவிட, “எதுக்கு யோசிக்குறாங்களாம் மேடம்?” என்று அவள் தந்தை மாறன் வினவ, “ஏங்க.. இவளுக்கு ஒன்னுமில்லை. அந்த பையன் தான் யாரையோ விரும்புறாராம். கல்யாணம் வேண்டாமாம்” என்று மைதிலி கூறினார்.

“இதை நீ அப்பவே சொல்லிருக்கலாம்ல? இப்ப நம்ம பிள்ளைய தானே அவங்க தப்பா நினைப்பாங்க” என்று அவர் கொதித்தெழ, “ப்பா.. அவங்க தப்பா நினைச்சா என்ன நினைக்கலைனா என்ன? அவங்களுக்கும் நமக்கும் எந்த சொந்தமும் இல்லைனு தானே ஆயிடுச்சு. அப்பறம் என்னப்பா? பிரச்சினை வேண்டாம்பா. ரெண்டு நாள் கழிச்சு ஒத்துவரலை, வேணாம்னு எதையாவது சொல்லிடுங்க” என்று சாய் கூறிவிட்டு தனதறைக்கு வந்தாள்.

கடுப்போடு தன் அலங்காரத்தினை கலைந்த சாய் “இந்த கூத்துக்கு இத்தனை ஆர்பாட்டம்” என்க தோழியை பாவமாக பார்த்த அஞ்சு “நீ எதும் ஃபீல் பண்ணாத சாய். அந்த லேம்போஸ்ட விட ஒசரமா உனக்கு நான் தேடுறேன்” என்றாள்.

அவளை திரும்பிப் பார்த்து முறைத்த சாய் “அடியே.. என்னமோ நான் லவ் பண்ணவன் என்னைய வேணாம்னு சொன்னபோல ஃபீலு கீலுனு பேசுற” என்க “இல்லை.. கடுப்பா பேசினியா அதான் ஃபீலாகிட்டியோனு..” என்றாள். “இந்த கண்டதும் காதல் காணாமல் காதலெல்லாம் நமக்கு வராதுடி. பார்த்ததும் வந்தா அது ஜஸ்ட்.. அட்ராக்ஷன்” என்று சாய் கூற “சரிதான்டி” என்றாள்.

பின் சில நிமிடங்கள் அவளுடன் பேசியவள் முந்தைய நாள் மாலை தான் வந்ததும் தாய் திட்டியதையும் தாயை தந்தை ஏசியதையும் கூறி, “ஏன் சாய்.. நமக்கும் நாளைக்கு வாழ்க்கை இப்படி தான் இருக்கும்ல?” என்க “ம்ம்.. என்னத்தடி சொல்ல? கல்யாணம்னு வந்துட்டா இதுவும் இருக்கத்தான் செய்யும் போல” என்றாள். 

“என்னதான் நம்பிக்கையே இல்லைனாலும் நிறைவேறாத ஆசைகளா நமக்கு வரப்போறவன் இப்படி இருந்தா நல்லா இருக்கும்னு லைட்டா ஒரு ஆசை இருக்குது சாய்” என்று கூறி கண்சிமிட்டி சிரித்தவளைக் கண்ட சாய் “அது எல்லாருக்கும் இருக்குறது தானே அஞ்சு. என்ன உனக்கு அது நடக்காதுனு புரிஞ்சுடுச்சு. அதனால நிறைவேறாத ஆசை அப்படிங்குற வரையறைக்குள்ள வச்சிருக்க. கல்யாணம் பத்தி பல கனவுகள் கண்டுட்டு அதுக்குள்ள வரும்போது அவங்களுக்கு அந்த புது வாழ்வு கொடுக்கும் கசப்பான அனுபவங்களை ஏத்துக்க முடியுறது இல்லை. அவ்வளவு தான்” என்றாள்.

“ம்ம் ஆமாடி” என்றதோடு முடிந்த அவர்களது பேச்சை அந்த இரவு நேரம் அசைபோட்டபடி பேனாவை தட்டிக் கொண்டிருந்தவளுக்கு கற்பனை வரிகள் கவிதைகளாய் உருவெடுத்தது.

‘எழுதாத பேனாவாய்;

ஓடாத கடிகாரமாய்;

துளிரற்ற மரமாய்;

வேண்டாத பொருளாய்;

நிறைவேறாத ஆசைகள்,

என் அகத்தினுள்

உயிர்ப்புடனே வாழ்கின்றன!’ 

என்ற கவிதையை இயற்றி அதை வாசித்துப் பார்த்தவள் இதழ்களில் அழகிய புன்னகை ஒன்று உதயமானது. மறுநாள் காலை அவளுக்கு வைத்திருக்கும் அதிர்ச்சிகளையும் அவளது வாழ்வின் புத்தம்புதிய பாதைகள் கொடுக்கப்போகும் முற்றிலும் மாறுபட்ட அனுபவங்களையும் அறியாது ஒரு ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றாள்.

-வரைவோம்💞

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்