Loading

அருகருகே இருந்த அந்த இரு பெரும் திருமண மண்டபங்களும் அன்று பதிவாகி, பலவர்ண அலங்காரங்களில் ஜொலித்துக் கொண்டிருந்தது. ஒரு மண்டபத்தின் முன் ‘விஜயலட்சுமி வெட்ஸ் வீரபுத்திரன்’ என்றும் மற்றொரு மண்டபத்தில் ‘தீக்ஷிதா வெட்ஸ் சதீஷ்’ என்றும் மலர் பலகையால் எழுதப்பட்டிருந்தது.

விஜயலட்சுமி மற்றும் வீரபுத்திரனின் திருமண மண்டபத்தில், சீர் வரிசைகளுடன் வந்திறங்கிய ருத்ரன், ரூபிணி மற்றும் மகாலட்சுமியை பொறாமையும், சந்தோஷமும், சளிப்புமாக பல விழிகள் நோக்கினர்.

அத்தனை விழிகளுக்கும் கண்களில் பொங்கும் சந்தோஷத்துடன் பதில் பார்வை பார்த்து வைத்தவன், தன் தாய் மற்றும் தங்கையை கூட்டிக் கொண்டு உள்ளே நுழைய, “நம்ம வேலன் புள்ள கெட்டிக்காரனா இருக்கான் க்கா. அப்பா அடமானம் வச்ச வீட்டையும் மீட்டு, அத்தை பொண்ணுக்கு தாய்மாமன் சீரும் அப்பா இருந்து செய்ய வேண்டியதை மரியாதையோட செஞ்சிட்டான் பாருங்க” என்று உறவுக்கார பெண்மணிகள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். அதில் மகனை எண்ணி அகமும் புறமும் பூரித்த தாய் அன்று நடந்தவற்றை எண்ணி, மனப்பெட்டகத்தை அசைபோட்டார்.

முகம் கொள்ளா புன்னகையுடன் வீடு வந்து சேர்ந்த ருத்ரன் “ம்மா.. நாளைக்கு நம்ம குலதெய்வம் கோவிலுக்கு போறோம் ம்மா. வேண்டியதைலாம் தயார் பண்ணிடுங்க. காலைல சீக்கிரமே கிளம்பிடலாம். கோவில்ல பிரசாதம் செய்ய ஏற்பாடு பண்ணிட்டேன். சாமி கும்பிட்டுட்டு அன்னதானம் கொடுத்துட்டு மதியம் மேல கிளம்பிடலாம்” என்று கூறிக் கொண்டே போக “அண்ணா அண்ணா.. கொஞ்சம் மூச்சுவிட்டு பேசு. என்ன திடீர்னு? எதும் விசேஷமா?” என்று ரூபி வினவினாள்.

“ம்ம் விசேஷம் தான். ஆனா நாளைக்கு தான் சொல்லுவேன்” என்று அவன் கூறிட “என்னப்பா புதிர் போடுற?” என்று மகா வினவினார். “எல்லாம் நல்ல விஷயம் தாம்மா” என்று அவன் கூறியதை கேட்டு பொங்கி வந்த சிரிப்பை கட்டுப்படுத்தியபடி “உனக்கு பொண்ணு எதும் பார்த்துட்டியா?” என்று ரூபி கலாய்க்க, “இல்ல உனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டேன். நாளைக்கு கல்யாணம்” என்று உடனேயே பதிலடி கொடுத்திருந்தான்.

“ஏதே.. அண்ணா..” என்று அவள் சிணுங்களாக கத்த, தாயுடன் சேர்ந்து சிரித்தவன் “ஆசைய பாரு.. உனக்கு இப்போதிக்கு கல்யாணம்லாம் இல்லை. ஒழுங்கா படி” என்றான். “நானும் இப்ப கல்யாணம் பண்ணிக்குறதா சொல்லவே இல்லை” என்றவள் முகத்தை திருப்பிக்கொண்டு செல்ல, அதில் மேலும் சிரித்துக் கொண்டவனிடம் “வேலை இல்லையாபா நாளைக்கு?” என்று கேட்டார்.

தற்போதெல்லாம் மகன் ஞாயிறு கூட வேலைக்கு செல்வது அவருக்கு வருத்தத்தை கொடுத்திருப்பதை அவர் குரலே காட்டி கொடுக்க, “வேலை எல்லாம் மிந்தாநேத்தே முடிஞ்சிடுச்சு ம்மா” என்றான். “ஓ.. ரொம்ப நல்லதுப்பா” என்றவர் “நான் கோவிலுக்கு வேண்டியதெல்லாம் எடுத்து வைக்குறேன்” என்க “சரிம்மா” என்றான்.

மறுநாள் காலை பேருந்தில் பயணிக்கும்போதும் கேள்விகளை தொடுத்த மகளிடம் “அதான் அவன் சொல்றான்ல. இன்னும் என்ன விடாம கேள்வி கேட்குற. எதுக்கு போனா என்ன? சாமி கும்பிட்டுட்டு வந்தா நிம்மதியா இருக்கும் தானே?” என்று கூறி அடக்கியிருந்தார் மகா.

அவளும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமைதியாகிவிட, சில நிமிடங்களில் பேருந்திலிருந்து இறங்கினர். அது பண்பொழி முருகன் கோவில்! படிகளில் ஏறி சென்று கோவிலை அடைந்தவர்கள் காதுகளை காற்றின் ஓசை மட்டுமே நிறைத்த வண்ணம் இருந்தது. அத்தனை வேகமாக காற்று அடிக்க, சுற்றி மேகக் குவியல் மட்டுமே வானை மறைத்திருந்த காட்சி கண்களை நிறைத்தது.

கீழே சுற்றிலும் பச்சை பசேலென்று கண்களுக்கு குளிர்வாக தெரிய, சென்று முருகனை மனமுருக தரிசித்து நின்றனர். அப்போது பூசாரி வந்து ஆரத்தி தட்டினை நீட்ட, ஒரு காகிதத்தை கொடுத்த ருத்ரன் “இதை அர்ச்சனை பண்ணி கொடுங்க சாமி” என்றான்.

தாயும் மகளும் அவனை புரியாது பார்க்க, அவனோ விழிகளில் ஆனந்த நீரும், இதழில் புன்னகை அரும்புமாக இறைவனை நோக்கி கைகூப்பி வேண்டி நின்றான். இறை நம்பிக்கை கொண்டவன் தான் எனினும் தினமும் கோவில் செல்பவனில்லையவன். ஆனால் அவர்களது குலதெய்வக் கோவிலான பண்பொழி திருமுருகன் கோவிலுக்கு மாதம் ஒருமுறையேனும் சென்றுவிடுவான். 

அந்த இடமும், சூழலும், புன்னகையுடன் வள்ளி தெய்வானைக்கு இடையே காட்சியளிக்கும் அந்த முருகரும், அவனது கவலைகள் அனைத்தையும் சுருட்டிக் கொண்டு நிர்மலமான நிலையில் அவனை திருப்பி அனுப்பி வைக்க உதவும்.

அவனது மனமுருகலில் காதலாக கசிந்த பக்தி கண்ணீராய் வெளிவருவதை கண்ட பெண்கள் இருவருக்கும் ஏனோ கண்கள் தாமாக கலங்கி இதழை வருடி முருவலிக்கச் செய்து தரையில் பட்டுத் தெரித்தன. பூசாரி அர்ச்சனை செய்த தாளை கொடுக்கவும் எப்போதும் போல் தங்கள் மூவர் பேரிலும் அர்ச்சனையை முடித்து தட்டில் காணிக்கையை செலுத்தி, வெளியே வந்தனர்.

அவனாக கூறட்டும் என்று இருவரும் அமைதி காக்க, அன்னதானம் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை துவக்கிவைத்திட்டு வந்தான். தன்னையே ஆர்வத்துடன் பார்த்திருந்த இருவரிடமும் வந்தவன், அர்ச்சனை செய்த தாள்களை அன்னையிடம் கொடுக்க, அதை வாங்கி பார்த்தவர் இன்பமாக அதிர்ந்து போனார். தானும் எட்டிப்பார்த்த ரூபினி “அண்ணா வீட்ட மீட்டுட்டியா?” என்று வினவ புன்னகையுடன் ‘ஆம்’ என்று தலையசைத்தான்.

அந்த இன்பமான அதிர்வில் மகனின் தலையை பரிவுடன் கோதிய தாய் “உங்கப்பா இல்லைங்குற குறைய நீ என்னைக்குமே எங்களுக்கு கொடுக்காதபடி பார்த்துகிட்ட. உன் கடமைய கடமையா செய்யாம கருத்தோட செய்யும் இந்த குணத்துக்கே நீ நல்லா வருவப்பா” என்று கூற “அண்ணா.. எனக்கு செம்ம ஹாப்பியா இருக்கு அண்ணா” என்று ரூபியும் குதூகலித்தாள். பின்பு வந்த நாட்களிலும் விரும்பியே சற்று நேரம் கூடுதலாக வேலைகளை செய்து கொடுத்து, விஜியின் திருமண சீருக்கும் தொகையை சேர்த்திருந்தான்.

அந்த இன்பமான தருணத்தை அசைபோட்ட மகா நடப்பிற்கு வர, மூவரிடமும் வந்து கைகூப்பி வணங்கிய லக்ஷ்மணன் (விஜியின் தந்தை) “வா மாப்பிள்ளை. வாமா தங்கச்சி. வாடா ரூபி” என்று வரவேற்றார். அவரது வரவேற்பில் நிச்சயத்தின் போது கண்டிடாத ஒரு மரியாதையை உணர்ந்த ருத்ரனுக்கு தன்னை நினைத்தும் தனது உழைப்பை நினைத்தும் பெருமையாக இருந்தது.

அதே நேரம்.. அங்கு அந்த பக்கத்து மண்டபத்தில் பட்டுப்புடவை சரசரக்க, தன் அத்தை மற்றும் சிற்றப்பா மகள்களுடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுப்பதும் வந்தோரை வரவேற்பதும் என இருந்தாள், அஞ்சிலை.

அஞ்சிலையின் மூத்த அத்தையின் இரண்டாவது மகனின் திருமணத்தில் மொத்த குடும்பமும் கூடி இருந்தது. இந்த திருமணத்தில் கலந்துக்கொள்ள அவளுக்கு அத்தனை விருப்பம் இல்லை என்றாலும் ஒரே மகிழ்ச்சி ‘தனது மூத்த அத்தையின் இரண்டு மகன்களுக்கும் திருமணம் முடிந்தது, இனி தன்னை பெண் கேட்க மாட்டர்’ என்பது தான்.

‘இன்னும் மீதமிருக்கும் இரண்டாம் அத்தையின் மகனுக்கும் திருமணம் முடிந்துவிட்டாள் தனக்கு நிம்மதி’ என்ற எண்ணத்துடன் அத்தை மகள்கள் மற்றும் சிற்றப்பாவின் மகளுடன் ஒட்டவைத்த புன்னகையும் ஒட்டாத தன்மையுமாக நடமாடிக் கொண்டிருந்தாள்.

இவர்களுடன் சுற்றிக் கொண்டிருந்தவள் அன்னையின் அழைப்பில் ‘நல்லதா போச்சு’ என்றபடி அன்னையிடம் வர, “போய் மாடில புடவை தட்டு இருக்கு எடுத்துட்டு வா” என்று அனுப்பி வைத்தார். சரியென்று மேலே சென்ற பின்பு தான் ‘எந்த அறை?’ என்று கேட்காத தன் மடத்தனத்தினை நொந்துக் கொண்டு தங்களுக்கென கொடுத்த அறையாகத் தான் இருக்கும் என அங்கு சென்றாள்.

உள்ளே செல்லும் முன்பே தன் சிற்றப்பாவின் காரசாரமான குரலைக் கேட்டு திடுக்கிட்டு நின்றாள். சித்தியை ஏதோ அவர் திட்டுவது புரியவும் ‘இவங்களுக்குலாம் நல்ல விசேஷ நாட்கள்ல தான் சண்டை வரும்’ என்று அவள் நினைக்கையிலேயே‌ ‘பலார்’ என்று அறையும் சத்தமும், சித்தி அழும் சத்தமும், சின்ன அத்தை சிற்றப்பாவை கடிந்து கொள்ளும் சத்தமும் கேட்டு உடல் தூக்கி வாரி போட திடுக்கிட்டாள்.

‘ச்ச! இவங்க என்னத்த நாலு வருஷம் லவ் பண்ணி கல்யாணம் பண்ணாங்க? காதலிச்சு தன்ன நம்பி வந்த பொண்ணுகூட அடுத்தவங்க முன்ன சண்டை போடுறதே அசிங்கம். இதுல கைநீட்டி அடிக்குறாரு’ என மனதோடு சிற்றப்பாவை திட்டிக்கொண்டே கீழே வந்தவள், அன்னையிடம் வந்து, “அம்மா.. மேல சித்தப்பாக்கும் சித்திக்கும் சண்டை நடக்குது போல. நான் உள்ள போனா நல்லா இருக்காது. நீங்களே போய் எடுத்துக்கோங்க” என்றாள்.

“என்னடி சொல்ற? என்ன சண்டை?” என்று அவர் பதற “யாருக்கு தெரியும். இவங்களுக்குலாம் விசேஷ நாட்கள்ல தான் சண்டை வரும்” என்று சளித்துக் கொண்டாள். “அதசொல்லு… மத்தளத்துக்கு ரெண்டு பக்கம் இடிங்குற மாதிரி இந்த பக்க ஆளுகளும் என்னை படுத்துறாங்க, என் வீட்டு ஆளுகளும் படுத்துறாங்க. எங்க அண்ணன்.. அதான் உன் மாமன்காரன் உங்க அத்தை வந்து பத்திரிகை வைக்காம உங்க அப்பாகிட்ட கொடுத்து கொடுக்க வச்சது மரியாதை குறைவா போச்சுன்னு சொல்லிகிட்டு வரமாட்டேங்குறான். எல்லாம் என் நேரம்” என நொந்துக் கொண்டவர் மேலே சென்றார்.

அன்னையை பரிதாபமாக ஒரு பார்வை பார்த்தபடி நின்றவளிடம் வந்த அர்ஜுன்  “என்ன அஞ்சு?” என்று வினவ, நடந்தவற்றை கூறியவள் “கல்யாணமே பண்ணிக்க கூடாதுபோலடா..” என்றாள். அதில் சிரித்துக் கொண்டவன் “இன்னும் ஒரு அத்தை பையன் பாக்கி இருக்காங்க. நீ வேற படிச்சு முடிச்சிட்ட” என்று கூற “டேய்.. கொன்னுடுவேன் உன்னை..” என்று பத்திரம் காட்டி மிரட்டியவள் “டேய் அஜு.. நீயும் இவங்கள மாதிரிலாம் இருந்திடாதடா. என் தம்பி பொண்டாட்டிய இப்படிலாம் டார்ச்சர் பண்ணிடாத” என்றாள்.

அதில் வாய்விட்டு சிரித்தவன் “லூசு மாதிரி பேசாம வா” என்க “அடபோடா” என்றவள் அவனுடன் சேர்ந்து விழாவில் ஐக்கியமாகினாள். 

              *****

தனது நாத்தனார் மகளின் திருமணம் இனிதே நடந்திட, அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்தவுடன் மூவரும் புறப்பட்டனர்.

வீடுவந்த மூவரும் சென்று உடை மாற்றி, கையில் பாலுடன் கூடி அமர, ரூபிணி வாய் ஓயாது அன்று தான் அடித்த லூட்டிகளைப் பற்றி பேசி கலகலத்துக் கொண்டிருந்தாள்.

அன்னை பாதி தூக்கமும் மீதி புன்னகையுமாக கேட்டுக் கொண்டிருப்பதை கண்ட ருத்ரன் சென்று பாயை விரித்து தலையணை மற்றும் போர்வையை கொண்டு வந்து போட்டான். “அம்மா.. ரொம்ப சோர்வா இருக்கீங்க ம்மா. வந்து படுங்க” என்று அவன் கூற சிறு தலையசைப்புடன் மகள் தலையை கோதிவிட்டு சென்று படுத்தார்.

தங்கையுடன் வந்து அமர்ந்தவன் “ரூபி.. மாஸ்டர்ஸ் இங்கயே படிக்குறியா இல்ல வெளிய எங்கயும் படிக்க விரும்புறியா?” என்று வினவ “அண்ணா.. நான் வெளியலாம் எங்கேயும் போகலை. நான் இங்கயே படிக்குறேன்‌. இந்த காலேஜே ஓகேதான்” என்று கூறினாள்.

சிலநிமிட மௌனத்திற்கு பின், “அண்ணா.. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு அண்ணா.. எப்பவும் எந்த பங்ஷனுமே போக விருப்பமே இருக்காது. ஆனா இன்னிக்கு மாமா வந்து மரியாதையோட உன்னை நடத்தும்போது அவ்வளவு பெருமையா இருந்துச்சு. பேசுற வாயெல்லாம் இன்னிக்கும் பேசிச்சு தான்.. ஆனா அது எதுவும் இன்னிக்கு பெருசா தெரியலை. எல்லாரும் உன்னை புகழ்ந்து பேசும்போது என் அண்ணன்னு ரொம்ப கர்வமா இருந்துச்சு. மீனா சித்தி வந்து மேல படிக்க போறியானு கேக்கும்போது ஆமானு சொன்னேன். அப்ப சரியா செல்லம்மா பாட்டி வந்து அண்ணன் வீட்ட மீட்டுட்டானாமே.. கெட்டிக்கார புள்ளைனு உன்னை பாராட்டிட்டு போனதும் சித்தியும் அமைதியா போயிட்டாங்க” என்றாள்.

அதில் பெருமையுடன் புன்னகைத்தவன் “எனக்கும் செம்ம ஹாப்பி ரூபி” என்று கூற “சீக்கிரமே நம்ம உரக்கடையும் துவங்குறோம் அண்ணா” என்றாள். “கண்டிப்பா ரூபி” என்றவன் மேலும் சில நிமிடங்கள் அவளுடன் பேசிவிட்டு உறங்க, பலநாட்களுக்கு பிறகு ஒரு நிறைவான உறக்கத்தை அடைந்தான்.

-வரைவோம்💞

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
15
+1
34
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்