Loading

அந்த மண்டபமே கலைகட்டிக் கொண்டிருந்தது. அழகிய ஒன்பது மாத சூழ் தாங்கிய வயிற்றைப் பிடித்துக் கொண்டு தேர்போல நடந்து வந்துக் கொண்டிருந்தாள், யுகவர்ஷினி. அவளைத் தன் கண்களில் காதலோடு பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுனின் தோளில் கரம் போட்ட ருத்ரன், “என்ன மச்சான்.. ரெஸ்பான்ஸிபிலிடீஸ் அதிகமாகுதுபோல?” என்க, “ஆமா மாமா” என்று புன்னகையுடன் கூறினான். ஆம்! யுகவர்ஷினி அர்ஜுனின் மாமன் மகள், தற்போது மனைவி!

அங்கு தனது இரண்டு பிள்ளைகள் பின்னே ஓடி ஓடி களைத்துப் போன அஞ்சிலை கடுப்புடன் கணவனிடம் வந்து, “ஏங்க..” என்று கத்த, அவள் குரலில் இருந்த சூடு சுட்டதுபோல திரும்பியவன், “என்னபா?” என்றான். “என்ன என்னபா? உங்க மகள புடிச்சு சாப்பாடு ஊட்டுங்க. என்னால முடியலை. என் புள்ளை ஒருத்தனாவது என் பேச்சைக் கேட்டுட்டு இருந்தான். இவ அவனையும் சேர்த்து கெடுத்துடுவா போல.. சேட்ட சேட்ட” என்று கணவனிடம் காய்ந்தாள்.

அதில் இதழ் மடித்து சிரித்தவன், “உங்க அம்மாவும் இப்படித்தான உன்னை திட்டிருப்பாங்க?” என்க, வாய்விட்டு சிரித்த அர்ஜுன் “மாமா.. உண்மைய இப்படி பட்டுனு சொல்லக்கூடாது” என்றான். அதில் இருவரையும் பாவை முறைத்துக் கொண்டிருக்க, “அத்தை” என்றபடி அவளிடம் ஓடி வந்தது மூன்று வயது ரசகுல்லா போன்ற ஒரு குழந்தை. 

“அடியே ரசகுல்லா” என்றபடி மருமகளைத் தூக்கிக்கொண்டு குண்டு கன்னங்களில் முத்தமிட்ட அஞ்சிலை, “ராகவி குட்டி” என்று கொஞ்சும்போதே ரூபினி அவள் கணவன் ரகுவுடன் உள்ளே வந்தாள்.

“வண்டிய நிறுத்துறதுக்குள்ள அத்தை மாமானு ஓட்டம்” என்று ரூபி கூற, “வாடா ரூபி.. வாங்க மாப்பிள்ளை” என்று ருத்ரன் வரவேற்றான். அர்ஜுனும் “வாங்க அண்ணா.. வாங்க அண்ணி” என்று வரவேற்க, “ம்ம்.. வாழ்த்துக்கள் அர்ஜுன்.. இன்னும் ஒரு மாசம் தான்.. ட்ரீட்கு ரெடியா இரு” என்று ரகு கூறினான்.

“கண்டிப்பா அண்ணா” என்று அவன் கூறுகையிலேயே சாய் வருண் மற்றும் அவர்களது ஏழு வயது மகள் அதிதி வந்துவிட, “ருத்து மாமா.. இளங்கோவும் எழிலும் எங்க?” என்று ருத்ரனை கட்டிக் கொண்டு கேட்டாள் அதிதி.

அதில் மீண்டும் முசுமுசுவென கோபம் வரப்பெற்ற அஞ்சிலை, “எனக்கு எங்கனு தெரியலை.. அந்த வாண்டுகளைப் பிடிச்சு சாப்பாடு ஊட்டிட்டு நீங்களே கூட்டிட்டு வாங்க. நான் போய் என் ரசகுல்லாக்கு குலாப்ஜாமூன் ஊட்டிவிடப் போறேன்” என்றபடி ராகவியைக் கொஞ்சிக் கொண்டு சாய் மற்றும் ரூபியையும் கூட்டிக் கொண்டு சென்றாள்‌.

“பொம்பளப்பிள்ளைய சமாளிக்குறது கஷ்டம் போலயே” என்று அர்ஜுன் கூற, மற்ற மூன்று ஆடவர்களும் “பொம்பளப்பிள்ளைய பொண்டாட்டியோட சேர்த்து சமாளிக்குறது தான் கஷ்டம்” என்று கோரசாகக் கூறினர். அதில் வாய்விட்டு சிரித்த அர்ஜுன் “அனுபவம் பேசுதோ?” என்று மேலும் சிரிக்க, “மவனே ஒரு மாசம் தான்.. அடுத்து நீயும் அனுபவஸ்தனாகத்தான் போற” என்று வருண் அவனை வாரினான்.

பேச்சும் சிரிப்பும் கலகலப்பும் கூடவே உறவுகளிடையே சில சின்ன சின்ன வாக்குவாதங்களும் என்று அந்த நிகழ்வு இனிதே முடிந்துவிட, கிளம்பும் தருவாயில் சாய், “அஞ்சு.. நாளைக்கு மார்னிங் கிளம்புறோம் மறந்துடாத..” என்று கூறிவிட்டுச் சென்றாள்.

பொழுது கடந்து மாலை வேளையை அடைந்து அழகிய சூழலைப் பரப்பியிருந்தது. ஆனால் அந்த வீட்டில் இரண்டு.. இல்லை இல்லை.. மூன்று பிள்ளைகளின் வாக்குவாதத்தின் சத்தம் தான் எதிரொலித்துக் கொண்டிருந்தது. “நான் தான் முதல்லயே சொன்னேன்ல.. இப்ப வந்து ரெண்டுபேரும் வந்தே ஆகனும்னு சொன்னா எப்படி?” என்று சிறுபிள்ளைகளுக்கு சரியாக சண்டையிடும் தன் முதல் குழந்தையான மனைவியைப் பார்த்தவன் சுவாரசியத்துடன் தன் ஏழு வயது இரட்டைப் பிள்ளைகளான இளங்கோவன் மற்றும் இளவெழிலி ஆகிய

இருவரையும் பார்த்தான்.

“அம்மா..” என்று இரண்டு பிள்ளைகளும் கோரசாக கத்த, “என்ன பிள்ளைகளா நீங்க? நான் தான் முதல்லயே சொன்னேன்ல? சாய் அத்தை டிக்கேட் கூட எடுத்துட்டா. இப்ப வந்து சொல்றீங்களே” என்று ஆற்றாமையான குரலில் கூறினாள்.

“நாங்க எங்க பிரண்ட் கிட்ட உங்களைக் கூட்டிட்டு வரேன்னு சொல்லிட்டோம் ம்மா.. அடுத்த முறை போகலாம் அங்க.. எங்க கூட ஸ்கூலுக்கு வாங்க” என்று இருவரும் அடம் பிடிக்க, ‘ச்சை.. ஒன்னு தான் என்னைப்போல இருக்கும்னு பார்த்தா ரெண்டும் என்னைப்போலத் தான் இருக்குதுங்க’ என்று சளித்துக் கொண்டாள்.

“பாப்பா.. ப்ளீஸ்டா.. தம்பி நீ அம்மா செல்லம்னு தானே சொல்லுவ.. அம்மா பாவம்லடா?” என்று அஞ்சு கெஞ்சலாக வினவியபோதும் இரு பிள்ளைகள் இலகாது இருக்க, “ஏன்டா.. உங்கம்மா தான் டிக்கேட்லாம் எடுத்துட்டால.. விடுங்களேன்டா” என்று மகா மருமகளுக்காக பேரப்பிள்ளைகளிடம் பேசினார். ஆனால் எதற்கும் மசியாத அந்த பிள்ளைகளைப் பார்த்து கோபமும் ஆற்றாமையும் கொண்டவள், “வரேன்.‌. போதுமா?” என்க, “ஏ..” என்று குதித்த பிள்ளைகள் ஐபை அடித்துக் கொண்டனர்.

சோக முகத்துடன் அஞ்சு அறைக்குள் சென்றுவிட, மகா சிரித்தபடி எழுந்து சென்றுவிட்டார். தங்களையே பார்த்தபடி இருந்த தந்தையைப் பார்த்த பிள்ளைகள், “டேடி.. மம்மியும் வரேன்னு சொல்லிட்டாங்க” என்று குதிக்க, அவனிடம் அதே பார்வை மட்டுமே. இரட்டையர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு தந்தையின் அமைதியைப் புரியாமல் பார்க்க, சன்னமான புன்னகையுடன் இருபக்கமும் இருவரையும் அமர்த்திக் கொண்டான்.

“என்னாச்சு ப்பா?” என்று எழிலி வினவ, “ரெண்டு பேரும் ஏன் அம்மா வரவிரும்பலைனு சொல்ல சொல்ல கூப்பிடுறீங்க?” என்று வினவினான். “அப்ப தானே ப்பா அம்மா வருவாங்க” என்று இளங்கோ கூற, மகனைத் திரும்பிப் பார்த்தவன், “மம்மி உங்க ரெண்டு பேரையும் டான்ஸ் கிளாஸ் சேர்த்து விடுறதுக்கு ரொம்ப கேட்டாங்கள்ல? ஆனா ஏன் ரெண்டு பேரும் வேணாம்னு சொன்னீங்க?” என்று என்றோ நடந்த விடயத்தைப் பற்றி இன்று வினவினான்.

“எங்க ரெண்டு பேருக்கும் டிராயிங் கிளாஸ் போகத்தான் புடிச்சிருக்கு. டான்ஸ் போக விருப்பமில்லை ப்பா. அதான் வேணாம் சொன்னோம்” என்று எழிலி கூறவும், அதே புன்னகையுடன் “அம்மாக்கும் இப்ப நம்ம கூடவர விருப்பமில்லை. ரெண்டு பேருக்குமே தெரியும் அம்மாக்கு புக் எக்ஸிபிஷன் போக ரொம்ப பிடிக்கும்னு. இந்த எக்ஸிபிஷன் ரொம்ப நல்லா இருக்கும் ஆனா ரொம்ப தூரம்னு போகாம தான் இருந்தா. சாய் அத்தைக்கு எப்படியோ ட்ரை பண்ணி அங்க என்டிரி டிக்கெட் கிடைச்சதும் அம்மா எவ்வளவு ஹேப்பி ஆனாங்க? இப்போ போக வேணாம்னு சொன்னா சாய் அத்தையாலயும் போக முடியாமா போயிடும்” என்றான்.

பிள்ளைகள் இருவருக்கும் தங்களது செயலின் விளைவால் தாயின் மனம் அடையும் வருத்தம் தெளிவுர புரியவில்லை என்றாலும் தந்தை கூறுவதன் மூலம் தாங்கள் செய்தது தவறு என்று மட்டும் புரிந்தது. “நாங்க கூப்பிட்டது தப்பா ப்பா?” என்று இளங்கோ வினவ, மகன் கன்னம் தட்டி, “அம்மாவை வற்புறுத்தினது தான் தப்பு. நாளைக்கு உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயம், பிறருக்கு பாதிப்பு கொடுக்காது என்ற பட்சத்தில் அதை செய்யவேண்டிய அவசியமே இல்லை. உனக்கு பிடிக்காத விஷயத்தை யாரோட வற்புறுத்தலின் பெயரிலும் செய்ய வேண்டியது இல்லை” என்றான்.

தந்தையையே பார்த்துக் கொண்டிருந்த பிள்ளைகள் விறுவிறுவென எழுந்து அவர்கள் அறைக்குள் செல்ல, சாய்க்கு அழைத்துக் கொண்டிருந்தாள் அஞ்சிலை.

கட்டிலில் ஏறி நின்று அன்னையை இரு பிள்ளைகளும் பின்னிருந்தபடி கட்டிக் கொள்ள, சன்னமான சிரிப்போடு அவர்கள் கரத்தினைத் தொட்டவள், “உங்க அத்தைக்கு தான் கூப்பிடுறேன்.. எடுக்க மாட்டேங்குறா” என்றாள்.

“இல்லம்மா.. வேணாம். நீங்க புக் எக்ஸிபிஷன் போங்க. நாங்க அப்பாவ கூட்டிட்டு போயிக்கிறோம்” என்று பிள்ளைகள் கூற, கேள்வியான முகபாவத்துடன் திரும்பியவள், “ஏன்டா கண்ணா?” என்றாள். பிள்ளைகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, “உங்களுக்கு பிடிக்காத விஷயத்தை யாருடைய வற்புறுத்தலின் பெயரிலும் நீங்க செய்ய வேண்டாம் ம்மா” என்று கூற, அதில் விழிகள் அகல விரிய ஆச்சரியித்து நின்றாள்.

இருவரும் அவளை அணைத்துக் கொண்டு “நீங்க புக் எக்ஸிபிஷனே போங்க ம்மா. இன்னொரு நாள் உங்கள எங்க பிரண்டுக்கு கூட்டிட்டு போய் காட்டிக்குறோம்” என்று கூற, அறை வாசலில் மூவரையும் அழகிய புன்னகையோடு கதவில் சாய்ந்தபடி நின்று பார்த்திருந்த கணவனை ஏறிட்டாள்.

அதே புன்னகையுடன் அவன் விழி மூடி திறக்க, கண்கள் மெல்ல பனிய பிள்ளைகளுக்கு முத்தம் இட்டவள், “தேங்க்யூ பசங்களா” என்க, தாங்களும் முத்தமிட்ட பிள்ளைகள் வெளியே ஓடினர்.

அதற்காகவே காத்திருந்ததைப் போல் கதவை சாற்றிவிட்டு அவளிடம் வந்தவன், “ஹேப்பி?” என்க, அவனை இறுக அணைத்துக் கொண்டவள், “அ..அது உங்க வாக்கியம்” என்றாள். அவள் எதை குறிப்பிடுகின்றாள் என்பதைப் புரிந்து கொண்டவன், அவள் நெற்றியில் துள்ளி விளையாடும் கற்றை முடிகளை ஒதுக்கியபடி, “உனக்கு பிடிக்காததை யாருடைய வற்புறுத்தலின் பெயரிலும் நீ செய்ய வேண்டாம்மா” என்க, எம்பி நின்று அவன் நெற்றியில் அழுந்த இதழ் ஒற்றினாள்.

காணலாக மாறிய அவள் எண்ணங்களின் பக்கங்களில்,

காதலாகத் தீட்டிய

அவள் வாழ்வோவியத் தூரிகையவன்!

ருத்ரன், அஞ்சிலை அவர்கள் செல்வங்கள் மற்றும் குடும்பத்துடன் இனிதே வாழ வாழ்த்தி விடைபெருவோம்…💞

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
12
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்