அழகிய காலைப் பொழுது.. ஆனால் ஆடவனுக்கு அவ்வளவு உவப்பாக இல்லை. “ஆ….” என்று கத்தும் மனையாளின் கரங்களை இறுக பற்றிக் கொண்ட ருத்ரன் கண்களில் கண்ணீர் கரைபுரண்டு ஓட, “சாரிடா பாப்பா..சாரிடா.. அவ்வளவுதான்” என்றான். “ஆ..முடியலை..” என்று அழுத மனைவி அவன் கரங்களை மேலும் அழுந்த பிடிக்க, “டா.. டாக்டர்” என்றான். “குழந்தை தலை இன்னும் வரலை சார். கொஞ்சம் பொருத்து தான் ஆகனும்” என்று கூறிய கனிகா, “அஞ்சு.. டேக் அ டீப் ப்ரீத்” என்க, “ஆ..முடியலை டாக்டர்.. வ..வலிக்க்குதுஉ” என்று பல்லை கடித்த வண்ணம் கூறினாள்.
அவரும் ஏதும் செய்ய இயலாததால், பொறுத்திருக்க, அவன் கரத்தினை அழுந்த பற்றியவள் வலியில் துடிதுடித்து, தன்னவனையும் துடிக்க வைத்துக் கொண்டிருந்தாள். அவள் தலையைக் கோதியவன், “பாப்பா.. பாப்பா” என்பதைத் தவிர வேறு ஏதும் கூற இயலாமல் தவிக்க, “எ..என்னால முடியலை.. வலி..வலி..தாங்க முடியலை” என்றாள்.
சில நிமிடங்கள் வலியுடன் போராடியவளை சுற்றியிருந்த மருத்துவக் குழு பரபரப்பாக, “கமான் அஞ்சு.. புஷ் தி பேபி..” என்ற கனிகா அவளுக்கு பேச்சு கொடுத்த வண்ணம் குழந்தையை தள்ள கட்டளையிட்டாள். ‘குயின் ஆஃப் பெயின்’ என்று கூறப்படும் பிரசவ வலியை அணுஅணுவாய் அனுபவித்துத் தன் கணவனையும் அனுபவிக்கச் செய்தவள், பிடித்திருந்த அவன் கரத்தின் எலும்புகளை நொறுக்கிவிடுமளவு இறுக பற்றி, “ஆ…” என்ற கதறலுடன் தன் முதல் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.
கண்களில் கண்ணீருடன் அதைக் கண்டவன், “பாப்பா.. வன் மோர் பேபி” என்று அவளை சோர்வடையாதிருக்க ஊக்கப்படுத்த, “ஆ.. அது எனக்கு தெரியாதா.. வலி தாங்க முடியலை.. எதாவது பண்ணுங்க” என்றாள். “அவ்வளவு தான்டா.. இன்னும் ஒரே ஒரு பேபி தான்” என்று அவன் கூற, சில நிமிடங்களில் போராட்டங்களின் பரிசாய் தன் இரண்டாம் மகவையும் ஈன்றவள், பெரும் மூச்சுடன் பொத்தென தலைசாய்க்க, கரம் தன் கணவனின் கரத்திற்கு விடுதலைக் கொடுத்தது.
உடல் நடுங்க கண்ணீர் வடித்தவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு “தேங்ஸ்டி.. தேங்ஸ்டி பாப்பா..” என்று மந்திரம் போல் அதையே கூறினான். அவன் கண்ணீரோடு அவள் கண்ணீர் இனைந்து ஒன்று சேர, குழந்தைகளைக் கொண்டு வந்து அவள் மார்பில் போட்ட மருத்துவர், “வாழ்த்துக்கள் அஞ்சிலை” என்க, “சத்தியமா.. இவ்வளவு வலினு தெரிஞ்சிருந்தா கல்யாணமே பண்ணிருக்க மாட்டேன் டாக்டர்” என்று ஓய்ந்த குரலில் கூறினாள்.
அதில் அவர் சிரித்துக் கொள்ள, கூறியவள் மார்பில் முட்டி, எத்தி, தன் வருகையை பறைசாற்றிய குழந்தையைக் கண்டவள் கைகள் நடுங்க மெல்ல வருட, அவள் உடலில் வலிகளைத் தாண்டிய ஒரு சிலிர்ப்பு! அவள் எதிர்ப்பார்த்த வரவின் மகிமை அப்போது உணர, கண்கள் கலங்க, “அனுபவச்ச வலிக்கு மேல பலனா இரண்டு உயிர பாக்கும்போது நி..நிம்மதியா இருக்கு டாக்டர்” என்றாள்.
அதுவே தாய்மை! அதை உணர்ந்து அனுபவித்திருந்த கனிகா ஒரு புன்னகையுடன் செவிலியிடம் மேற்கொண்டு செய்யவிருக்கும் சிகிச்சைப் பற்றி பேச சென்றிட, அவளையே ஆச்சரியமாக பார்த்த ருத்ரன் உடல் விரைத்துப் போனது.
காணாததை, ஏங்கி தவித்த ஒரு பொருளை தயங்கித் தயங்கித் தொட்டுப் பார்ப்பதுப் போல் குழந்தைகளை வருடிப் பார்த்த அஞ்சிலை கணவனை கண்களில் கண்ணீரும் இதழில் புன்னகையுமாக நிமிர்ந்து பார்க்க, “பாப்பா.. சத்தியமா சொல்றேன்.. உன் இடத்துல நான் இருந்திருந்தா செத்துருப்பேன்டி.. எனக்கு ஒன்னுமே வேணாம்னு போயிருப்பேன். மரணவலினு தெரிஞ்சும் அதுக்குள்ள போற பயம் எனக்கு துளியும் இல்லமா.. அ..ஆனா நீ” என்று பேசமுடியாது தவித்தான்.
“நம்ம பாப்பா..” என்று அவள் கூறிய நொடி சிலிர்த்துப் போனவன் அப்போதே குழந்தைகள் புறம் தன் கவனத்தைக் கொண்டு சென்றான். செவிலி ஒருவர் வந்து குழந்தைகளைத் தூக்கிச் செல்ல, அவள் கரம் பற்றியபடியே நின்றவன், “தேங்ஸ்மா..” என்றான்.
சிலநேரங்களில் “சார்” என்றபடி இருகுழந்தைகளைத் தூக்கிவந்த செவிலிகள், “ஒரு பாய் பேபி ஒரு கேர்ள் பேபி. மூத்தது பாய், இளையது கேர்ள்” என்று கூறினார். ஆசையோடு கைகள் நடுங்க தன் பெண் குழந்தையை வாங்கியவன் அதை பாந்தமாக பிடித்துக் கொள்ள, கட்டிலில் ஓய்ந்து கிடந்தவள் அதைப் புன்னகையுடன் பார்த்தாள்.
வெளியே உயிரைக் கையில் பிடித்தபடி நின்றிருந்த யாவருக்கும் தன் செல்வங்களைக் கொண்டு வந்து காட்டியவர் “மூத்தது பையன் ரெண்டாவது பொண்ணும்மா” என்று கூற, “ஏ..” என்று உற்சாகத்துடன் ரூபியும் அர்ஜுனும் கத்தினர். “அஞ்சு எப்படி இருக்கா மாப்பிள்ளை?” என்ற காயுவின் பரிதவிப்பான குரலில் வெளிவந்த கேள்வியில் கண்கள் மீண்டும் கலங்கத் துடிக்க, இமைசிமிட்டி அதை அடக்கியவன், “நல்லா இருக்கா அத்தை” என்றான்.
கண்கள் கலங்கி முகம் சிவக்க நின்றிருந்த குணாவைப் பார்த்தவன், மகளின் கதறல் ஒலி அந்த முதிர்ந்த மனிதனையும் எத்தனை எத்தனை பயத்திற்கு உள்ளாகியது என்பதை உணரச் செய்தது. பேரப்பிள்ளைகளைக் கண்டு பூரித்துப் போன மகா, “அஞ்சு நல்லா இருக்காள்லப்பா?” என்று வினவ, “நல்லா இருக்கா அம்மா” என்றான்.
“பைனலி.. நான் அத்தை ஆகிட்டேன்” என்று ரூபி குதூகலிக்க, ரூபியிடம் ஒரு குழந்தையையும் அர்ஜுனிடம் ஒரு குழந்தையையும் கொடுத்தனர். “அகைன் ஒரு அண்ணா தங்கை..” என்று இமை பனிந்தவள், “உன் பேபிடால் சிஸ்டர நீ பத்திரமா பாத்துக்கணும்” என்று கூறி, “எங்க அண்ணன மாதிரி” என்று அண்ணனைப் பார்த்தாள். அதில் அவள் தலை கோதியவன் அர்ஜுனை நோக்க, அந்த பிஞ்சுக் குழந்தையில் கையில் தன் விரலைக் கொடுத்து சிலிர்த்து நின்றவன், “பிடிச்சுகிட்டாம்மா” என்று உற்சாகத்தோடு கூறினான்.
வெளியே வந்த கனிகா, “அஞ்சு ரொம்ப நல்லா இருக்கா. உள்ள போய் பாத்துட்டு வாங்க” என்று கூற யாவரும் உள்ளே நுழைந்தனர். கட்டிலில் படுத்திருந்த மகளிடம் வந்த பெற்றோர் இருவரும் புன்னகையுடன் நலம் விசாரிக்க, மகா மறுபக்கம் வந்து நின்று தலைகோதினார். அனைத்தையும் கைகளைக் கட்டிய வண்ணம் வேடிக்கைப் பார்த்த ருத்ரன், சட்டென ஏதோ நினைவு பெற்றவனாக வெளியே சென்றிட, உள்ளே வந்த செவிலி “குழந்தைக்கு ஃபீட் பண்ணனும் எல்லாரும் வெளிய இருங்க” என்றார்.
ஒரு நேரத்தில் ஒரு குழந்தையை சமாளிப்பதே பெரும்பாடு.. இதில் ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகளை எப்படி சமாளிக்கப் போகின்றோம் என்ற பயம் அஞ்சுவுக்குத் தோன்ற, அவள் பயம் புரிந்து அவளுக்கு சிலபல விளக்கங்களைக் கொடுத்து கற்பித்துவிட்ட செவிலி குழந்தைகளுக்கு அமுதூட்டியப்பின் தொட்டிலில் இட்டுச் சென்றார்.
இரண்டு நாட்கள் மருத்துவமனையில் வாசம் செய்திருந்தவள் புறப்பட தயாராக இருக்க, அவளையும் குழந்தையையும் வந்து பரிசோதித்த கனிகா, “மூனு பேரும் நல்ல ஹெல்தியா இருக்கீங்க. கொடுத்த மெடிசென்ஸ் ஒழுங்கா எடுத்துக்கோ. கொஞ்ச நாள் தை மஸில்ஸ் வலி இருக்கும். மருந்து கொடுத்திருக்கேன். எதும் எமர்ஜென்ஸினா எனக்கு கால் பண்ணு” என்று கூறினாள்.
“தாங்கியூ டாக்டர்” என்று அஞ்சு கூற, “ரியலி.. நான் எத்தனையோ பிரெக்னென்ஸி கேஸஸ் அடென்ட் பண்ணிருக்கேன். ஆனா நீங்க எனக்கு ரொம்ப புதுமையான ஜோடி. அவரபோல கணவன் கிடைக்க நீயும் உன்னைப்போல மனைவி கிடைக்க அவரும் குடுத்து வச்சுருக்கனும்” என்று கனிகா கூறினார். அவர் எதற்கு இப்படி புகழுகிறார் என்று புரியாதபோதும், அவர் புகழுரையில் புன்னகைத்தவள், “ஏன் டாக்டர்?” என்று வினவ, “உனக்கு பேபி பிறக்கும்போது அவர் அழுத அழுகை இருக்கே.. எல்லாரும் உள்ள வந்து உன்னை பார்த்தப்போ அவர் என்கிட்ட பேச வந்தாரு” என்று அன்று நடந்ததைக் கூறினார்.
அன்று ஏதோ நினைவு பெற்றவனாக வெளியே வந்தவன் கனிகாவின் அறைக்குள் அனுமதியுடன் நுழைய, “சொல்லுங்க சார்.. ” என்று கனிகா வினவினாள். “அஞ்சு பாப்பா தம்பி எல்லாரும் ஓகே தானே டாக்டர்” என்று ருத்ரன் வினவ, “மூனு பேரும் நல்லா இருக்காங்க. எந்த பிரச்சனையும் இல்லை சார்” என்றாள்.
அதில் புன்னகைத்துக் கொண்டவனிடம் மேலும் மற்ற விவரங்கள் பற்றி பேசிக் கொண்ட கனிகா, “ஃபேமிலி பிலேனிங் பண்ணிடலாமா சார்?” என்று வினவ, “அதுபத்தி தான் பேச வந்தேன்” என்றவன், “ஃபேமிலி பிலேனிங் ஆப்ரேஷன் அஞ்சுக்கு பண்ண வேண்டாம். நான் பண்ணிக்குறேன் டாக்டர்” என்று கூறினான்.
அவனை சற்றே அதிர்ந்து பார்த்தவள், “நீங்களா?” என்று வினவ, “ஆமா டாக்டர். ஜென்ஸும் பண்ணிக்கலாம் தானே” என்றான். “ம்ம்..ம்ம்.. பண்ணிக்கலாம் சார்” என்றவருக்கு அத்தனை ஆச்சரியம். இதுவரை அவள் எந்த ஆணும் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்ய முன்வந்து பார்த்ததே இல்லை. அந்த ஆச்சரியம் விலகாதவள் அதை அவனிடம் கூறியும் இருந்தாள்.
சன்னமான புன்னகை ஒன்றை உதிர்த்தவன் கண்கள் லேசாக ஈரமடைய, “அஞ்சு ரொம்ப சாப்ட் நேச்சர்.. சின்ன வலிகூட அவ அவ்வளவு சுலபமா தாங்கி நான் பார்த்தது இல்லை. தலைவலிக்கு வீட்டை ரெண்டாக்கின நாட்கள் ஏராளம். அ..ஆனா இன்னிக்கு.. அவளோட வேதனைய பார்க்க மட்டுமே தான் முடிஞ்சது என்னால. அந்த வேதனையை பங்கிடும் வாய்ப்பு கிடைச்சிருந்தா கூட நான் அதை செஞ்சிருப்பேனானு தெரியலை டாக்டர். அந்த தைரியம் எனக்கு நிச்சயம் இல்லை” என்றுவிட்டு தன் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டான்.
“அந்த வேதனையை தான் என்னால் ஒன்னும் செய்து தடுக்க முடியலை, ஆனா இந்த வலியை தடுக்கலாமே. நானே பண்ணிக்குறேன் டாக்டர். நான் டேட் மட்டும் என் ஷெடியூல் பார்த்துட்டு சொல்றேன்” என்று ருத்ரன் கூற, “நிஜமாவே உங்களபோல கணவர் கிடைக்க அஞ்சு குடுத்துவச்சுருக்கனும்” என்று கனிகா மனமார வாழ்த்தினாள்.
கனிகா கூறியதைக் கேட்ட அஞ்சு கற்சிலையாக இறுகிவிட, நயணங்கள் தழும்பி நின்று விழிநீர் வழிபாதைத் தேடி நின்றது! “நிஜமாவே நீங்க ரெண்டு பேருமே கொடுத்து வச்சவங்க அஞ்சு. எல்லா பொண்ணுங்களுக்கும் இப்படியொரு லைப் அமையாது. உனக்கு அமைஞ்சிருக்கு. அதை சந்தோஷமா வாழுடா” என்று கனிகா மனமார கூற, “தே.. தேங்ஸ் டாக்டர்” என்றாள்.
கட்டண மகிழுந்து வரவைத்த ருத்ரன் தன் பிள்ளைகள் மற்றும் மனைவியோடு மாமியார் வீட்டிற்கு திரும்ப, ஆரத்தி எடுத்து நால்வர் கொண்ட குடும்பமாக அவர்களை வரவேற்றனர். வருண் சாய் மற்றும் அவர்களது மூன்று மாத பெண் குழந்தை அதிதி கிருஷ்ணா ஆகியோர் குழந்தையைக் காண வந்திருக்க, அஞ்சுவின் நலம் விசாரித்து குழந்தைக்காக தாங்கள் வாங்கியவற்றை கொடுத்துவிட்டுப் புறப்பட்டனர். இரவு உணவை முடித்துக் கொண்டு செல்ல உறவினர்கள் சிலர் கூடியிருப்பதை சற்றே அதிருப்தியுடன் பார்த்த ருத்ரன், “அத்தை அஞ்சு ரூம் ரெடியா?” என்று கேட்டான்.
“நீங்க கொடுத்த கொசுவலை அடிச்சு குழந்தைகளுக்கான மெத்தையெல்லாம் விரிச்சு ரூம் தயாரா இருக்கு மாப்பிள்ளை” என்று அவர் கூற, சிறு புன்னகையுடன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் அவள் அறை சென்றான். இருபிள்ளைகளுக்கும் அமுதூட்டி உறங்க வைத்தவள் கணவனை ஏறிட, உறங்கும் பிள்ளைகளை ஆசையோடு வருடி, உடற்சிகை சிலிர்க்கப் புன்னகைத்தான்.
“ஏன் என்கிட்ட சொல்லலை?” என்று அஞ்சு வினவ, அவளை நிமிர்ந்து பார்த்தவன், “என்னமா?” என்றான். “நடிக்காதீங்க.. டாக்டர் எல்லாம் சொல்லிட்டாங்க” என்று அவள் கூறவும், அவள் எதைக் கூறுகிறாள் என்று புரிந்து கொண்டவன், “வீட்டுக்கு வந்து சொல்லிக்கலாம்னு இருந்தேன்மா” என்றான்.
“எ..எப்படி..நீங்க..” என்று வார்த்தைகளைக் கோர்க்க முடியாத அவள் பரிதவிப்பை சன்னமான புன்னகையுடன் பார்த்தவன், “இது ஒரு காமன் ஆபரேஷன். இதை ஆண்கள் பெண்கள்னு இரு பாலினரும் செய்துக்கலாம்னு உனக்கு தெரியும் தானே?” என்றான். “தெரியும்.. ஆனா கேள்விபட்டதில்லை” என்று கூறினாள். அவளைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டவன், “பாப்பா..” என்று வலி நிறைந்த குரலில் அழைத்தான்.
பாவை அவனை நிமிர்ந்து பார்க்க, “நமக்கு மட்டும் டிவின் பேபீஸா இல்லாம இருந்திருந்தா நிஜமாவே இன்னொரு குழந்தையை நினைச்சுக்கூட பார்த்திருக்க மாட்டேன்டி. பெண்ணை ஒரு பலவீனமான பாலினமா எப்படி இந்த சமுதாயம் ப்ரொஜெக்ட் பண்ணுதுனு நான் ரொம்ப ஆச்சரியமா உணர்ந்த தருணம் அது. நானெல்லாம் என்னமா ஆம்பளை? உன் இடத்தில் இருந்திருந்தா… சத்தியமா யோசிக்கக் கூட முடியாது என்னால. எப்படி பெண்கள் மரண வலினு தெரிஞ்சும் விரும்பியே அதுவும் அடுத்த முறை பிள்ளை பெற்றெடுப்பவர்கள் ஒருமுறை அனுபவித்த வலியின் சுவடு மனதில் ஆராதபோதும் துணிஞ்சு வராங்கனு ஆச்சரியமா இருந்துச்சு”
“என்னால அந்த வலியை பங்கிட்டுக்கவும் முடியாது, தடுக்கவும் முடியாது. ஆனா இந்த வலியை கொடுக்காம இருக்கலாம். பூப்பெய்தி மாதா மாதம் அனுபவிக்கும் வலியிலிருந்து, காதலாக நம்ம கூடிக் கழித்த தருணங்களில் நீ அடைந்த வலி, கர்பகாலத்துல நீ அனுபவிச்ச அந்த முதுகு வலி, பேருகாலத்துல நீ அனுபவிச்ச நரகவலினு அது அத்தனையும் என்னால தடுக்க முடியாதது. ஆனா இந்த ஆபரேஷன் ஏற்படுத்தும் வலியை மட்டும் தடுக்கலாம். ஆபரேஷன் செய்துக்கும் அளவு எனக்கு தைரியம் இருக்கானு தெரியலை. நான் இதுவரை எந்த அறுவைச் சிகிச்சையும் செய்துகிட்டதில்லை. ஆனா என்னை அப்பானு கூப்பிட ரெண்டு உயிரை வலிக்க வலிக்க கொடுத்த உன் வேதனைய பார்த்தபிறகும் உன்னை ஆபரேஷன் பண்ணிக்க சொல்லுமளவு எனக்கு மனசு வரலைடா” என்று நீளமாக பேசி முடித்தான்.
அவன் பேச்சில் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தியவள் லேசான விசும்பல் ஒலியோடு அவனை அணைத்துக் கொள்ள, திருமணம் முடிந்த இந்த ஒன்றே முக்கால் வருடத்தில் இருவரும் சொல்லிக் கொள்ளாத அந்த வார்த்தைகளை தற்போது சொல்லிக் கொண்டனர். இருவரும் ஒன்றுபோல “ஐ லவ் யூ டா” “ஐ லவ் யூங்க” என்று கூற, அது இருவர் இதழில் அழகிய புன்னகையை மலரச் செய்தது.
“காதல்னா என்னனு கண்டறியாத ஜீவன் தான் நம்ம ரெண்டு பேரும். நான் உன்மேல காட்டும் அக்கறையும் நீ என் மேல காட்டும் அக்கறையும் நம்ம ரெண்டு பேருக்கும் இடையே இருக்கும் இந்த புரிதலும் தான் காதல்னா.. இந்த அழகான வாழ்க்கையில் உன்னை நான் அடிக்கடி இந்த காதலோட பார்த்துப்பேன்டா” என்று ருத்ரன் கூற, “நான் வேணும்னா உங்களுக்கு காதலா இருக்கலாம். ஆனா காதலே மாயைனு சுற்றிய எனக்கு, மாயையில் மறைந்த என்னையே வெளிச்சம் போட்டுக் காட்டிய நீங்க காதல் பெயின்கில்லர். என் வாழ்க்கை என்கிற ஓவித்தை சீர்திருத்த வந்த தூரிகை நீங்க.. யூ ஆர் மை லவ் பெயின்கில்லர்” என்று கூறி அவன் நெற்றியில் அழுந்த இதழ் பதித்தாள்.
கல்யாணத்தில் துவங்கிய ருத்ரன் அஞ்சிலையின் உறவு காதலோடு தொடருவதற்கான அடித்தளத்தை காதலே அமைத்திட, அக்காதலின் மகிமையோடு இருவரும் நலம்பெற வாழ்த்தி விடைபெருவோம்…
-வரைவோம் 💞
எபிலாக்👇❣️