Loading

அதிர்ந்து விழித்த இருவரையும் பார்த்து சிரித்த கனிகா, “கங்கிராஜுலேஷன்ஸ். இனிமே நீ ரெண்டு பேருக்கு இல்லை மூனு பேருக்கு சாப்பிடனும்” என்று கூற, இன்னமும் அவளுக்கு அந்த அதிர்ச்சி விலகவில்லை. ருத்ரன் முகம் ஆயிரம் கோடி சூரியனாகப் பிரகாசிக்க, அவள் குழந்தை கலைந்த அன்று வருணிடம் தான் புலம்பியபோது ‘கடவுள் ஒன்னு பறிச்சா மாறா அதைவிட அதிகமா கொடுப்பார்னு அர்த்தம்’ என்று கூறியது அவன் நினைவடுக்கில் வந்து போனது.

 

“பேபீஸ் அன்ட் மம்மி ரெண்டு.. சாரி சாரி.. மூனு பேருமே நல்ல ஹெல்தியா இருக்கீங்க. நீ கவனமா இருக்கனும்டா. நல்லா சாப்பிடு. ஹெல்தியா சாப்பிடு” என்று மேலும் சில அறிவுரைகளை அவர் கூற, அனைத்தையும் கேட்டுக் கொண்டாள். 

 

வெளியே வந்தவுடன் ருத்ரன் கண்கள் வருணைத் தேட, அங்கு சாயுடன் இவர்களுக்காக காத்திருந்தபடி மனையாள் வயிற்றை வருடியபடி கொஞ்சிக் கொண்டு அமர்ந்திருந்தான். ருத்ரன் சன்னமான புன்னகையுடன் நண்பனை நோக்கி வர, வருண் நண்பனைக் கண்டு புன்னகைத்தபடி எழுந்து நின்றான்.

 

சட்டென அவனை அணைத்துக் கொண்ட ருத்ரன் வார்த்தைகளற்ற உணர்வை அவனுக்குக் கொடுக்க, அவனை புரியாமல் அணைத்து பிடித்த வருண் கேள்வியாக அஞ்சுவைப் பார்த்தான். ஒன்றும் புரியாத நிலையில் சாய் அஞ்சுவின் கரங்களைப் பற்றி கேள்வியாக நோக்க, ஆள் காட்டி விரலில் தன் மணிவயிற்றை சுட்டிக் காட்டியவள் ஒன்று இரண்டு என்று விரல் அபிநயம் பிடித்து விடயத்தை தெரியப்படுத்தினாள்.

 

அதில் நண்பர்கள் இருவரும் இன்ப அதிர்ச்சியோடு விழி விரிக்க, “ஏ அஞ்சுமா.. டிவின்ஸா?” என்று சாய் குதூகலித்தாள். சிறு நாணப் புன்னகையுடன் ‘ஆம்’ என்பதுபோல் அவள் தலையசைக்க, “உன் வர்ட்ஸ் உண்மையாகிடுச்சுடா” என்று ருத்ரன் கூறினான். வருணுக்கு அவன் எதை குறிப்பிடுகிறான் என்று சுத்தமாக புரியாததால், “என்னடா?” என்று வினவ, “ஃபர்ஸ்ட் பேபி..” என மென்று விழுங்கியவன், “நம்ம முதல் சந்திப்புல நீ சொன்னியே.. கடவுள் ஒன்னு எடுக்குறார்னா வேறு ஒன்னு பெருசா கொடுப்பார்னு நம்புவோம்னு, அந்த நம்பிக்கை இன்னிக்கு உயிர் பெற்றிருக்குடா” என்று உணர்வு பூர்வமான குரலில் கூறினான்.

 

அவன் சந்தோஷத்தினை கண்களில் கண்ணீரும் இதழில் புன்னகையுமாக கண்ட அஞ்சு தன்னைப்போல் கைகளால் தன் வயிற்றை தாங்கி பிடித்துவருடிக் கொள்ள, சாய் அவள் தோளில் ஆதரவாய் கைபோட்டாள். இங்கு நண்பன் கூறியதைக் கேட்டு மனமார புன்னகைத்த வருண், “நல்லதே நடக்கும்டா” என்று அவனை அணைத்துக் கொள்ள, “அந்த நம்பிக்கை இப்ப எனக்கு நூறு சதவீதம் வந்துடுச்சுடா” என்றான்.

 

நண்பன் தோளை தட்டிக் கொடுத்தவன் அஞ்சு தலைவருடி, “நல்லா சாப்பிடுடா. நல்லா ரெஸ்ட் எடு” என்று கூற, சரியென்பது போல் தலையசைத்தாள். ருத்ரன் வயிற்றிலேயே குத்திய வருண், “டேய்.. டபுள் ப்ரமோஷனுக்கு ட்ரீட் எங்கடா?” என்று வினவ, சிரித்தபடி “கொடுத்துடுவோம்” என்றான்.

 

வீடு திரும்பிய தம்பதியர் இரு குடும்பத்திற்கும் இந்த நற்செய்தியை தெரிவிக்க, யாவருமே இறந்த குழந்தைக்கும் சேர்த்து கடவுள் இன்னுமொரு குழந்தையை கொடுத்ததாக பரிபூரணமாக நம்பினர். அனைத்தும் அழகாகவே சென்றது.. 

 

அன்று காலை கணவனிடம் திட்டுவாங்கியபடி முகத்தை உம்மென வைத்துக் கொண்டிருந்தவள் அவன் உதவியின்றி படுக்கையை விட்டு எழவும் இயலாத தன் நிலமையை எண்ணி நொந்துக் கொண்டாள். 

 

“அப்படி என்ன உனக்கு அவ்வளவு வீம்பு கேக்குறேன்” என்று கத்தியபடி இதமான சூட்டில் வெண்ணீர் கொண்டு வந்தவன் அதை மேஜையில் வைக்க, இரண்டு பக்கமும் கையை வைத்து அழுத்தியபடி எழ முயற்சி செய்துக் கொண்டிருந்தாள். அவளையே பார்த்தபடி நின்றிருந்தவனைக் கண்டு பாவமாக முகத்தை வைத்துக் கொண்டவள், “முடியலை” என்க, முறைத்தபடியே அவளை அணைவாக பிடித்து தூக்கி அமர உதவினான்.

 

நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றை போன்ற பெரிய வைற்றை வைத்துக் கொண்டு நடக்கவும் முடியாமல் படுக்கவும் முடியாமல் தவிக்கும் அஞ்சுவுக்கு இன்னும் மூன்று மாதம் முடிந்து எப்போதடா பிள்ளை பெற்றுக்கொள்வோம் என்று தான் இருந்தது. “நான் ஒன்னும் வேணும்னே மழைல நனையலை” என்று அவள் கூற, “எப்பவும் என்னை கூட்டிட்டு தானே போவ? அதென்ன தனியா வாகிங் போறது?” என்று கத்தினான்.

 

“நான் தனியா ஒன்னும் போகலை. சாய் கூடதான் போனேன்” என்று அவள் கூற, “ஆமா அவ பெரிய வீரி.. அந்தம்மாவுக்கு இவங்க துணை இவங்களுக்கு அவங்க துணையாம்” என்று திட்டினான்.

 

அங்கு சாயின் நிலையும் அதேதான். ஒன்பதாம் மாதம் வலைகாப்பு முடிந்து தாய்வீட்டில் இருப்பவளை வீட்டுக்கு வந்து கத்திக் கொண்டிருந்தான் வருண். “எதுக்கு அத்தை இவளை தனியா அனுப்புனீங்க?” என்று வருண் வினவ, “இல்லைப்பா.. நெறமாசக்காரி தனியா வேணாம் நானும் வரேன்னு தான் சொன்னேன். இவதான் அஞ்சுவும் ருத்ரன் தம்பியும் இருப்பாங்கனு சொன்னா” என்று மைதிலி கூறினார்.

 

“ரெண்டும் அமுக்குனிங்க அத்தை. ருத்ரன் என்கூட தான் இருந்தான். யாருக்கும் தெரியாம சோலா பூரி சாப்பிட வாக்கிங்னு பெயர்ல போயிருக்காங்க. வரும்போது மழை பெய்யவும் பாதி நனைஞ்சு ஒரு கடைபக்கம் ஒதுங்கிருக்காங்க. நானும் அவனும் அந்த வழியா கார்ல போகும்போது பார்த்தோம்” என்று கூறி “நாங்க வராம இருந்திருந்தா இன்னும் அங்க தான் நின்னுட்டு இருந்திருப்பாங்க” என்று திட்ட, “இல்லை கைல காசு இருந்தது. ஆட்டோ புடிச்சு வந்துருப்போம்” என்று சாய் கூறினாள்.

 

“வாய்லயே போட போறேன் உனக்கு. உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்டனு கதையா ரெண்டு பேரும் சேர்ந்து பண்ற அட்டூழியம் தாங்க முடியலை” என்று வருண் கூற, சாயைப் பார்க்கவென வந்திருந்த திவா உருண்டு உருண்டு சிரித்துக் கொண்டிருந்தான். ‘அடேய் உன்ன.. சிரிக்கவா செய்ற’ என்று நினைத்தபடி திவாவை முறைத்தவள் வருணை பாவமாக பார்த்து அதிகம் கோவம் கொண்டு பழக்கமற்ற அவனே இவ்வளவு கோபம் கொள்ளும்படி செய்துவிட்டோமே என்று வருந்தினாள்.

 

முகத்தை அப்பாவி போல் வைத்துக் கொண்டு “சாரிங்க..” என்று அவள் கூற, “என்ன சாரி” என்றவன் அவளது கலங்கிய விழிகளைக் கண்டபின்பே நிலை பெற்றான். இடையில் கைவைத்தபடி இதழ் குவித்து ஊதியவன் மண்டியிட்டு அமர, ‘சமுகம் சைலன்டாகிடுச்சு.. இனி சிறுத்தையோட வைலன்ட் மொமென்ட்’ என்று எண்ணி திவா சிரித்துக் கொண்டு மைதிலியை கூட்டிக் கொண்டு அவர் கையால் மணக்க மணக்க உருவான குழிப்பனியாரத்தினை சுவக்கச் சென்றான்.

 

“சாய்..” என்றபடி வருண் அவள் கன்னம் பற்ற, “சாரி சொல்றேன்ல அப்போலருந்து.. அவ்ளோ திட்டுறீங்க” என்று கத்தினாள். “சரி சரி சாரி..” என்றபடி அவள் கண்ணீர் துடைத்தவன், “இந்த நேரத்துல தனியா போனதே பாதுகாப்பு இல்லை. நிறைமாசம் வேற. அதுவும் போய் காரமா வேற சாப்பிட்டிருக்க. மழை வேற, சளிபுடிச்சா என்ன செய்ய சொல்லு. டெலிவரி டைம் ஜாக்கிரதையா இருக்க வேண்டாமா?” என்று சாதுவாக வினவ, “பா.. பாவம் அஞ்சுவும் ரொம்ப கிரேவிங்கா இருக்கு போலாம்னு சொன்னா. எனக்கு சாப்பிடனும் போல இருந்தது.. கேட்டா யாரும் விட மாட்டீங்கனு த..தனியா போனோம்” என்று தலைகுனிந்தபடி சாய் கூறினாள்.

 

“நீ அவளுக்கு அட்வைஸ் பண்ணிருக்கனும்.. சாய் ஷீ இஸ் கேரிங் டூ பேபி. எதாவதுனா என்ன செய்வ?” என்று சற்றே கண்டிப்புடன் அவன் கேட்க, “ஆங்.. தெரியாம போயிட்டோம். மறுபடியும் திட்டாதீங்க” என்றபடி அழுதாள். ‘படபடனு பட்டாசா பொறியிற என் பொண்டாட்டிய இப்படி பொல பொலனு அழுக வச்சுட்டியே ஜுனியர்’ என்று எண்ணி சிரித்துக் கொண்ட வருண், “சரிசரி.. திட்டலை” என்றபடி அவள் முக்ததை தன் மார்பில் புதைத்துக் கொண்டான்.

 

அங்கு கணவன் கொடுத்த வெண்ணீரை குடித்த அஞ்சு, அவனையே பாவமாக பார்க்க, முறைத்தபடியே எழுந்து சென்றான். ‘அய்யோ.. அப்பவே அத்தை ஒரு டோஸ் திட்டி முடிச்சாங்க. இப்ப இவர் வேற முறைச்சுகிட்டே இருக்காரே. திட்டினா கூட சமாளிக்கலாம். இப்படி முறைச்சா ஏதோ பெருசா செய்யப்போறாரு’ என்று எண்ணிய அஞ்சு, “ஏங்க..” என்க அவளைத் திரும்பிப் பார்த்தான்.

 

“சாரி..” என்று அஞ்சு பாவம் போல கூற, “நல்லா போடபோறேன்” என்று கை ஓங்கி காட்டியவன், “அவளோ நெறமாசக்காரி, நீயும் ரெட்டை புள்ளைய வச்சுகிட்டு எந்த தைரியத்துல போனீங்க? திடீர்னு அவளுக்கு பெயின் வந்திருந்தா என்ன பண்ணிருப்ப அஞ்சிலை?” என்றான். அவனது ‘அஞ்சிலை’ என்ற அழைப்பே அவன் கோபத்தை எடுத்துக் கூற, அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.

 

அவனும் மூச்சுபிடிக்க ஐந்து நிமிடம் விடாமல் திட்ட, மெல்ல நிமிர்ந்து பார்த்தவள், கட்டிலிலிருந்து இறங்க வேண்டி சற்று நகரந்து அமர முயற்சித்தாள். வசவுகளை நிறுத்தி அவள் செயலை வேடிக்கைப் பார்த்தவன், எழ முயற்சி செய்பவளைக் கண்டு “என்ன வேணும்?” என்க, “ஒன்னும் வேணாம். திட்டுறீங்கள்ல.. எனக்கு ஒன்னும் நீங்க செய்ய வேணாம். நானே போய்ப்பேன்” என்று ரோஷமாகக் கூறினாள்.

 

“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” என்றவன் அவளையே பார்க்க, ஐந்து நிமிடம் மேல் முடியாதவள், “வந்து தூக்கி விடுங்களேன்” என்றாள். “கேடி.. அதானே கேட்டேன்..” என்று அவன் கூற, “ஆமா நான் கோவமா இருந்தேன்.. அப்படி தான் சொல்லுவேன்” என்றாள். “அதுசரி.. கோவம் நான் படனும்” என்று ருத்ரன் கூற, “அய்யோ.. சுச்சு போகனும்.. தண்ணிய வேற கொடுத்துட்டீங்க.. இனி பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவை பாத்ரூமுக்கும் பெட்டுக்கும் நான் நடையா நடக்கனும்” என்று பாவம் போல் கூறினாள்.

 

அதில் பக்கென சிரித்துவிட்டவன் அவளைத் தூக்கிவிட்டு அழைத்துச் செல்ல, வேலையை முடித்து வந்தவள் கட்டிலில் அமர்ந்து, “மறுபடியும் திட்டப்போறீங்களா?” என்றாள். அதில் சிரித்தவன், “உன் நல்லதுக்கு தானேடா சொல்றேன்” என்க, தன் முன் நிற்பவனை அணைத்துக் கொண்டாள். 

 

அவள் உயரத்திற்கு மண்டியிட்டு அமர்ந்தவன் அவள் வயிற்றை வருட, குழந்தை அவள் வயிற்றை எட்டி உதைப்பது கைகளின் வழியே உணர்வாகவும் கண்களின் வழியே காட்சியாகவும் தெரிந்தது. அதில் எப்போதும் போல் சிலிர்த்துப் போனவன், “ஏ ஜுனியர்.. என்ன என் பொண்டாட்டிய உதைக்குறீங்க?” என்க, மற்றைய புறம் இன்னொரு குழந்தை உதைத்தது. 

 

“அட..” என்று அவன் கூறுகையில் இரண்டு குழந்தைகளும் அசைந்து கொடுக்க, அதில் சிரித்துக் கொண்டவன் மனைவி முகம் காண, அவள் அவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள். “என்னமா?” என்று அவன் கூற, அவன் சட்டையை பிடித்து இழுத்தவள் அவன் நெற்றியில் அழுந்த முத்தம் பதித்தாள்.

 

அவள் கைகளோடு தன் கைகளை இறுக கோர்த்துக் கொண்டவன், “என்னமானு கேட்டா கிஸ் நெத்திலி குடுப்பியா?” என்று வினவ, “ம்ம்.. என்னடானு கேட்டா கன்னத்துல தருவேன்” என்றாள். “அப்போ என்னடினு கேட்டா?” என்று அவன் குறும்பாக வினவ, நாணத்துடன் சிரித்தவள் அவன் கன்னத்தில் தட்டி, “பேட் பாய்” என்றாள். அதில் வாய்விட்டு சிரித்தவன், அவள் நெற்றியில் பதில் முத்தம் பதிக்க, அவன் அலைப்பேசி ஒலி எழுப்பியது.

 

“வருண் தான்” என்றபடி பால்கனி சென்று அழைப்பை ஏற்றவன் “சொல்லுடா” என்க, “மச்சி.. நான் அப்பாவாகிட்டேன்” என்று உற்சாகமாகக் கூறினான். “டேய்.. என்னடா சொல்ற? இன்னும் டேஸ் இருக்கே” என்று ருத்ரன் வினவ, “ஆமாடா.. ஆனா அவளுக்கு பெயின் வந்துடுச்சு.. கொஞ்சம் பயத்துட்டா.. பட் ரொம்ப படுத்தாம வெளிய வந்துட்டா பேபி. நார்மல் டெலிவரி தான். பாப்பா சாய் ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க” என்றான்.

 

“மருமகளாடா?” என்று ருத்ரன் உற்சாகமாக கேட்க, “ஆமாடா.. நாளைக்கு மார்னிங் வாங்க. இப்ப அஞ்சுவை கூட்டிகிட்டு அலையாத” என்று கூறினான். “ஓகே மச்சி.. வாழ்த்துக்கள்.. பார்த்துக்கோ ரெண்டு பேரையும்” என்று அழைப்பை துண்டித்துவிட்டு வந்தவன், “ஏ பாப்பா.. மருமக பிறந்துட்டா” என்று கூற, “அதுக்குள்ளயா? டேட் இருக்குல?” என்றாள். 

 

வருண் கூறியதையே ஆடவன் கூறிமுடிக்க, ஒரு நொடி ‘தாங்கள் வெளியே சென்ற நேரம் வலி வந்திருந்தால்?’ என்று எண்ணிப் பார்த்து உடல் நடுங்கிப் போனாள். “ம்ம்.. இப்பதான் பயம் வருதோ?” என்று அவளை சரியாக புரிந்துக் கொண்டவன், “விடுமா.. இப்ப ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க. காலைல போவோம்” என்று கூற, சரியென்ற தலையசைப்போடு மீண்டும் உற்சாக நிலைக்குத் திரும்பினாள். 

 

மறுநாள் காலை சொல்லியதைப் போல் மனைவியையும் ரூபியையும் மருத்துவமனை கூட்டிச் சென்றவன் குழந்தையை காட்ட, “அவ்வ்.. பாப்பா செம்ம கியூட்.. அண்ணா போல” என்று அஞ்சு கூறினாள். “அடிங்கு.. முக்கி முக்கி பிள்ள பெத்தவ நானு.. இவ வந்து அசால்டா அண்ணா போலனு சொல்லுவாலாம்” என்று சாய் பொறிய, யாவரும் வாய்விட்டு சிரித்தனர். 

 

“அக்கா.. பாப்பா கியூட்.. பெயர்லாம் யோசிச்சுட்டீங்களா?” என்று ரூபி வினவ, “இல்லைடா.. இனிதான் யோசிக்கனும்” என்று சாய் கூறினாள். “மச்சி.. ரெஸ்பான்ஸிபிலிடீஸ் கூடிடுச்சு போல” என்று ருத்ரன் கேட்க, “இல்லையா பின்ன? ஏற்கனவே மூத்ததா திவானு ஒரு வளர்ந்த குழந்தைய வளர்க்குறோம். இப்ப இந்த குட்டியும்” என்று சாய் கூறிய நேரம் திவா உள்ளே வந்தான்.

 

அண்ணியின் பேச்சில் சற்றே நெகிழ்ந்தவன் அதை தன் புன்னகையில் வெளிப்படுத்தி, “பாப்பு குட்டிமா.. சித்தா வந்திருக்கேன் பாருங்க” என்று தூக்கினான். சந்தோஷமாக சென்ற தருணத்தை ரசித்துவிட்டு மூவரும் வீடு திரும்ப, கணவன் ஊட்டிய உணவை உண்டு முடித்தவள் பலத்த யோசனைக்கு ஆளானாள்.

 

“என்ன மேடம் யோசனை பலமா இருக்கு?” என்று ருத்ரன் வினவ, “இல்ல நம்ம பேபீஸ் உங்கள போல இருப்பாங்களா என்னபோல இருப்பாங்களா யோசிக்குறேன்” என்றாள். “சந்தேகமே வேணாம்.. ஒன்னு உன்னைபோல சேட்டையா தான் இருக்கும். ஒன்னு என்னைபோல சைலன்டா இருக்கும்” என்று அவன் கூற, “உங்கள போல சைலன்ட்.. கொஞ்சம் ஓகேதான்.. ஆனா என்ன என்னைபோல சேட்டை?” என்று வினவினாள்.

 

“ஆமா வாயாடி.. நீ சேட்டை தான். குழந்தையா இருந்தவரை நீ செய்த சேட்டைலாம் எவ்ளோ சொல்லிருக்க. வளர வளர சொந்த பந்தங்களோட நெரிசல்.. அம்மா அப்பாவை அவங்க குறை சொல்ல நீ காரணமாகிடக்கூடாது என்ற கட்டுப்பாடு தான் உன்னை மற்றவங்க முன்னிலையில அமைதியா காட்டுதே தவிற, நீ படு சுட்டிடி. எனக்கு இப்படி தான் வேணும் பாப்பா..” என்று அவன் கூற, “அந்த பாப்பா என்னைபோல காலப்போக்கில் அமைதியாகிட்டா?” என்றாள்‌.

 

மறுப்பாக தலையசைத்தவன் “என்ன ஆனாலும் உன் சிரிப்பை விட்டுடாதனு சொல்லி கொடுத்து தான் வளர்ப்பேன்” என்று அவன் கூற கண்கள் கலங்கி விட்டது அவளுக்கு. அவன் தோளில் சாய்ந்தவள், “குட்டீஸ் ரெண்டு பேரும் ரொம்ப லக்கி” என்க, “ஏன்?” என்றான். அவனை நிமிர்ந்து பார்த்து “என்னை போல ஒரு அழகான மம்மி கிடைக்க” என்று கூறி களுக்கிச் சிரிக்கா, ஆடவனும் வாய்விட்டு சிரித்தான்.

-வரைவோம் 💞

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்