Loading

படபடப்போடு மருத்துவமனையில் அமர்ந்திருந்த அஞ்சிலையின் கைகள் லேசாக நடுங்கியது. அதை கவனித்தவன் சன்னமான புன்னகையுடன் அவள் கரம் மேல் தன் கரத்தை வைக்க, அவனை சட்டென்று திரும்பிப் பார்த்தாள். “எதுக்குமா இவ்வளவு பதட்டம்?” என்று அவன் வினவ, “இ..இல்ல” என்றவளுக்கு கண்கள் கலங்குவதுபோல் ஆனது.

 

அவள் தோளை சுற்றி கரம் போட்டவன், “ஒன்னுமில்லை” என்று ஆறுதல் கூற, “பயமா இருக்கு” என்றாள். “ஒன்னுமில்லைமா. நீ தேவையில்லாம டென்ஷன் எடுத்துக்காத” என்று அவன் கூற, “ம்ம்” என்றதோடு அவன் கைகளுள் பொருந்திக் கொண்டாள்.

 

செவிலி ஒருவர் வந்து, “அஞ்சு.. போடா” என்று கூற, சிறுதலையசைப்புடன் உள்ளே சென்றாள். உள்ளே அமர்ந்திருந்த கனிகா பயப்படபடப்புடன் வந்த அஞ்சுவைப் பார்த்து “ஏ அஞ்சு.. என்னமா?” என்றாள். 

 

கணவன் கைகளை இறுக பிடித்தப்படி வந்து அமர்ந்தவள், தடுமாற்றத்தோடு தன்னவனைப் பார்க்க, ‘பேசுமா’ என்பதுபோல் கண்ணசைத்தான். கனிகா புறம் திரும்பியவள், “டா.. டாக்டர். டேட் டூ வீக்ஸ் தள்ளிபோயிருக்கு..” என்று கூற, “ஹோ கமான் அஞ்சு. இதுக்கா இவ்வளவு பதட்டம். சீ பாஸ்ட் இஸ் பாஸ்ட். ஹாஸ்பிடல்ல பலதரப்பட்ட பேஷன்ஸ சந்திச்சவ நீ. அது முடிஞ்சு மாதங்கள் கடந்துடுச்சு. அன்ட் நீ இப்ப நல்ல ஹெல்தியாவும் இருக்க” என்று பேசியபடியே அவள் நாடிதுடிப்பை பரிசோதித்தாள்.

 

அவளை அழைத்துச் சென்று இதர பரிசோதனைகளை முடித்து கூட்டிவந்த கனிகா, “ம்ம்.. சரிமா. நல்லா சாப்பிடு. வெயிட்லாம் தூக்கிடாத. நல்லா ஹெல்தியா தான் இருக்க” என்று கூற, அவரை ஆர்வம் ததும்பும் விழிகளோடு பார்த்தனர். 

 

இருவரையும் பார்த்து சிரித்த கனிகா, “ரெண்டு மாதம் ஆகப்போகுது. மூனாவது மாதம் வரை ஜாக்கிரதையா இருந்துக்கோ. தர்ட் மந்த் ஸ்கேன் எடுப்போம்” என்று கூற, பெண்ணவளுக்கு கண்கள் கலங்கியே விட்டது. “டா.. டாக்டர்” என்று அவள் அழைக்க, “அட ஆமாடா. நீ கன்சீவா தான் இருக்க” என்றார்.

 

கண்கள் கலங்கி இதழ் சிரிக்க தன் கணவனை அவள் திரும்பிப் பார்க்க, தானும் புன்னகைத்தவன், “ஹெல்தெல்லாம் ஓகேதானே டாக்டர்?” என்றான். “எல்லாம் ஓகேயா இருக்கு சார். நல்லா சத்தானதா கொடுங்க. எந்த பிரச்சனையும் இல்லை” என்று நம்பிக்கை வார்த்தைகள் பேசி இருவரையும் அனுப்பி வைத்தார். வண்டியில் ஏறி அமர்ந்தவள் ஏதும் பேசவில்லை. அவன் தோளில் சாய்ந்தபடியே வந்தவள் கண்கள் மட்டும் கலங்கிய வண்ணம் இருந்தது.

 

“பாப்பா..” என்று கண்டிப்புடன் அவன் அழைக்க, கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டு “ம்ம்” என்றாள். “அழறத நிறுத்து” என்று அவன் கண்டிக்க, “நான் அழல” என்றாள். “அப்றம் என் சட்டைல கொட்டுறது என்ன மழைத்தண்ணியா?” என்று அவன் வினவ, “அப்ப உங்க சட்டை நனையுறது தான் இப்ப உங்களுக்கு பிரச்சினையா?” என்றாள்.

 

அதில் சிரித்துக் கொண்டவன், “ம்ம்.. இப்படி கோவம்படு. உன்னை ஈசியா சரி பண்ணிடுவேன். அழுதா தான் எனக்கு போராட்டம்” என்று கூற, “அதென்ன? கோவம் பட்டா ஓகேவோ?” என்று வினவினாள். வீட்டிற்குள் வண்டியை நிறுத்தியவன் அவள் இறங்கியதும் அவளைத் திரும்பிப் பார்த்து “ஈசி தான்” என்று கூற முசுமுசுவென கோபம் கொண்டு நகர்ந்தாள்.

 

அவள் கரம் பற்றி நிறுத்தி தன் புறம் இழுத்தவன், பச்சென கன்னத்தில் ஒரு இச்சு வைத்திட, அதிர்ந்து விழித்தவள் சுற்றி முற்றி பார்த்தாள். “யாரும் இல்ல” என்று அவன் கூற வெட்கத்தோடு தலைகுனிந்தவள் முகம் மியாவென ஆனது. “எ..என்னங்க” என்று அவள் சிணுங்கலாக அழைக்க, “எப்படி உன்னை அடக்கினேன் பார்த்தியா?” என்றான். அதில் “ப்ச்.. போங்க” என்று நகரப்போனவள் இடைபற்றி நிறுத்தியவன், “ஒத்துக்கோ விடுறேன்” என்று கூற, “ம்ஹும்” என்றாள்.

 

“என்னங்கடா நடக்குது இங்க?” என்று பின்னே கோரசாக இரு குரல் கேட்க, சட்டென திரும்பியவள் வருண் மற்றும் சாய் நிற்பதைக் கண்டு மேலும் விழிகளை விரித்தாள். அஞ்சிலை சட்டென அவன் கை நகர்த்த முயற்சிக்க, அவனோ “என் பொண்டாட்டிய நான் புடிச்சிருக்கேன்.. உங்களுக்கு என்னடா? கரடீஸ்” என்று அவளை தன்னை நோக்கி மேலும் சேர்த்துக் கொண்டான்.

 

அதில் அவனை முறைத்தவள், “ப்ச்.. விடுங்க” என்க, “கரடியா? கொப்பமவனே.. என்னமோ ரூமுக்கு வந்து எட்டி பார்த்த மாதிரி தான்.. வீட்டு வாசல்ல வச்சு புடிச்சா கேக்க தான் செய்வோம்” என்று வருண் கூறினான். “காம்பவன்ட் சுவருக்கு வெளிய தான் ரோடு. இதுவும் வீட்டுக்குள் அடக்கம்டா” என்று ருத்ரன் மேலும் பேச்சு வளர்க்க, முகம் முழுதும் சிவந்திட கணவனை முறைத்தவள் “ப்ச்.. விடுங்கனு சொல்றேன்ல” என்றாள்.

 

“பரவாயில்லைமா தங்கச்சி. நாங்க ஒன்னும் நினைச்சுக்க மாட்டோம்” என்று சிரிப்போடு வருண் கூற, “வேணாம்.. வில்லங்கத்த விலை குடுத்து வாங்காதீங்க” என்று சாய் அவன் காதை கடித்தாள்‌. அவன் மனைவியை புரியாமல் பார்க்க, “மேடம் வெறும் பேச்சு வார்த்தைக்கே ஷை ஆகும் கேஸ். இதெல்லாம் பேசினாலே திட்டுவா என்னை. இப்ப லைவ் ஷோ. சாமியாடிடுவா. வாயகுடுத்து மாட்டாம கம்முனு இருங்க. உங்க பொண்டாட்டி சைலண்டா இருக்கும்போதே நீங்க புரிஞ்சுக்க வேணாம். சரியான மக்கு புருஷன்யா நீ” என்றாள்.

 

அங்கு ருத்ரனை முறைத்த அஞ்சு, “விடுங்க அவங்க பாக்குறாங்க. எனக்கு ஒருமாதிரி இருக்கு” என்று கூற, அவனுக்கு சிரிப்பாக வந்தது. “ப்ச்” என்று அவன் கையை எடுக்க போராடியவள், “விடுங்கனு சொல்றேன்ல” என்று கண்டிப்பாக கேட்க, சிரிப்போடு கையை எடுத்தவன், “பொழச்சுபோ” என்றான். அவள் கண்கள் சிவந்த கிட்டதட்ட கலங்கிவிட துடிக்கவே, விருட்டென்று உள்ளே சென்றாள்.

 

வருண் வாய்விட்டு சிரிக்க, சாய் அவ்வளவு நேரம் கடினப்பட்டு அடக்கிய சிரிப்பை திறந்துவிட்டாள். கண்டிப்பான முகத்துடன் வெளியே வந்த மகா, “டேய்.. என்னடா பண்ண? எதுக்கு அவ அழுதுட்டே போறா?” என்று வினவ மூவரும் திருதிருவென விழித்தனர். வருண் சட்டென ‘அழுறாளா?’ என்றபடி சாயைப் பார்க்க, “அவ அழலாம் மாட்டாளே? நான் அண்ணாக்கு ரெண்டு குடுப்பானு நினைச்சேன்” என்று கணவன் காதை கடித்தாள்.

 

இங்கு ருத்ரன் தாயிடம் நடந்த சில்மிஷங்களை எப்படி கூறவென புரியாது, “அ..அம்மா” என்க, “என்னடா பண்ண?” என்றார். “ஒன்னுமில்லமா..‌ இருங்க வரேன்” என்றபடி உள்ளே போனவன், “டேய் உள்ள வாங்க” என்று நண்பனிடம் கூறிவிட்டுச் சென்றான். “தனியா கூப்டு அடிப்பா போல..” என்று சாய் கூற, “ஹ்ம்.. அவன் குடுத்துவச்சவன்.. ரூமுக்கு கூட்டிட்டு போய் அடிக்குறா” என்று வருண் முடிப்பதற்குள் அவன் விலாவில் முழங்கையால் ஒரு குத்துவிட்டுச் சென்றாள்.

 

உள்ளே சென்ற‌ ருத்ரன், “ஏ பாப்பா” என்க, “போங்க.. பேசாதீங்க” என்றாள். சிரித்தபடி வந்தவன், “சும்மாமா” என்க, “எனக்கு அது ஒருமாதிரி இருக்குனு சொல்றேன்ல? நான் சாய் எதும் இப்டி பேசினாலே.. ரொம்ப.. ரொம்ப..” என்று தடுமாற, “அம்புட்டு வெக்கம்” என்று சிரித்தான். சுற்றி முற்றி எதாவது கிடைக்குமா என்று தேடியவள் தலையணையை தூக்கி அவன் மீது போட, மேலும் சிரிப்பு தான் வந்தது அவனுக்கு. 

 

“சரிசரி வா. பாவம் அவங்க வெளிய வெயிட் பண்றாங்க. குட் நியூஸ் சொல்லுவோம்” என்று அவளை ஒருவழியாக சமாதானம் செய்து கூட்டிச் சென்றான். “என்ன மச்சான்.. அடிபலமோ” என்று வருண் வினவ, “டேய்.. ஏன்டா நீவேற” என்றவன், “அவன் கிடக்குறான் நீவாடா தங்கம்” என மனைவியை அமர்த்தினான்.

 

“எனக்கு பசிக்குது” என்று அவள் முனுமுனுக்க, அவள் மாமியார் நால்வருக்கும் பழச்சாறுடன் வந்தார். “ரூபி காலேஜ் போயிருக்காளாம்மா?” என்று சாய் வினவ, “ஆமாடா” என்றார். பழச்சாறை குடிக்க சாய் பெரும்பாடு பட்டுக் கொண்டிருக்க, அஞ்சு சென்று இன்னொரு கோப்பை நிறைய சாறை எடுத்து வந்து இரண்டாம் ரவுண்டை முடித்தாள். 

 

“வேற எதாச்சும்?” என்று ருத்ரன் அவளைப் பார்த்து வினவ, “பசி அடங்கலை. ஆனா கொஞ்சம் நேரம் ஆகட்டும்” என்றாள். இவர்களை மூவரும் புரியாமல் பார்க்க, “அதுவொன்னுமில்லம்மா.. உள்ள ஜுனியர் வேற இருக்குறதால இப்பலாம் இவளுக்கு ரொம்ப பசிக்குது” என்று சர்வ சாதாரணமாக கூறுவதுப்போல் கூறினான்.

 

“என்னது?” என்று சாய் இன்ப அதிர்ச்சியில் வினவ, அஞ்சு புன்னகையுடன் தலையசைத்தாள். “ஏ கேர்ள்.. அதான் வீச்சு வீச்சுனு அழுதுட்டு போனியா? எத்தனை மாசம்?” என்று சாய் வினவ, “ரெண்டாகப்போகுது” என்றாள். “எப்படா பார்த்த?” என்று மகா வினவ, “காலைல கோவில் போயிட்டு ஹாஸ்பிடல் போயிட்டுதான் வரோம் அத்தை” என்றாள்.

 

ருத்ரனை அவர் பார்க்க, கண்களை மூடித் திறந்தவன், “ஹெல்தியா இருக்காம்மா. ஒன்னும் பிரச்சினை இல்லை” என்று கூறினான். “நல்லா சாப்பிடு அஞ்சு. நிறையா ஹெல்தி புட்ஸ் எடுத்துக்கோ” என்று வருண் ஒரு மருத்துவனாகவும் அண்ணனாகவும் கூற, புன்னகையுடன் சரியென்று தலையசைத்தாள்.

 

முதல்முறை கர்ப்பம் தரித்த சமயம் அவளுக்கு சாப்பிடவே முடியாதபடி வாந்தி படுத்தியது. ஆனால் இம்முறையில் வாந்தி இன்றி அவள் நன்கு பசியெடுத்து உண்ண, அவள் மாமியாரும் வாய்க்கு ருசியாக பலவும் சமைத்துக் கொடுத்தார். அவள் அம்மா அப்பாவிடம் மட்டும் கூறிக்கொள்ளும்படி கூறிய மகா மற்றவர்களிடம் மூன்றாம் மாதம் மேல் கூறிக் கொள்ளலாம் என்று கூற, ருத்ரன் மறுத்துப்பேசியும் அவர் கேட்கவில்லை. சரி அவர் நம்பிக்கையை கெடுப்பானேன் என்று அவனும் விட்டுவிட, வார இறுதி அஞ்சு வீட்டுக்குச் சென்றனர்.

 

முன்னமே அவர்கள் வருகை தெரிந்த காயு வகை வகையாக பலதும் சமைத்து வைத்திருக்க, வந்தது மறந்த நிலையில் அஞ்சு ஒரு வெளு வெளுத்துக் கொண்டிருந்தாள். “பொருமையா சாப்பிடேன் அஞ்சு” என்றபடி அவளுக்கு நீர் கொடுத்த அர்ஜுன் “அப்றம் மாமா.. நம்ம ஹோட்டலுக்கு தான் போகனும் போல?” என்று வினவ, சிரித்தபடி “ஷ்ஷ்.. கண்ணு வைக்காதடா” என்று வாயில் விரல் வைத்தான்.

 

“என்ன மாமா.. எங்க அக்கா கிட்ட எதும் வாங்கி கட்டிகிட்டீங்களா? சப்போர்ட் பலம்மா இருக்கு” என்று வினவ, “பாவம்டா.. பசிக்கும்ல” என்றான். “தோ பாருடா.. அப்படி என்ன வேலை செஞ்சு அழுத்துட்டாங்க உங்க லவ்வபில் வைஃப்” என்று அர்ஜுன் வினவ, “என் பேபிய சுமக்குறதே அவளுக்கு பெரிய வேலைதான்” என்று இன்ப அதிர்ச்சியை இங்கேயும் அசால்டாக இறக்கினான்.

 

“ஹே மாம்ஸ்.. நிஜமாவா?” என்று துள்ளிய தம்பியை திரும்பிப் பார்த்த அஞ்சு, “சொல்லிட்டீங்களா? நான் தான சொல்லுவேன்னு சொன்னேன்?” என்க,”என்னத்த சொல்லனும் உனக்கு?” என்று காயு கேட்டார். அப்போதே குணாவும் வந்திட, “அம்மா.. உன் பொண்ணு அம்மாவாக போறேன். வாய்க்கு ருசியா சமைச்சு குடு. இப்ப அந்த பொறியலை கொஞ்சம் குடு” என்று அஞ்சு கூறினாள்.

 

அதில் அவளை விழிகள் விரிய பார்த்த காயு “ஏ அஞ்சுமா.. நிஜமாவா” என்க, அத்தனை நேரம் இருந்த கலகலப்பு நீங்கி சிறு நாணத்துடன் தலையசைத்தாள். மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு குணா தன் மகள் தலை வருடி, “ஹாஸ்பிடல் போனீங்களாடா? டாக்டர் என்ன சொன்னாங்க?” என்று வினவ, “எல்லாம் ஆல்ரைட்டாம் ப்பா. நல்லா சாப்பிட மட்டும் தான் சொன்னாங்க” என்றாள்.

 

“ரொம்ப சந்தோஷம்டா குட்டி” என்ற கணவரைத் தொடர்ந்து “உடம்ப ஜாக்கிரதையா பார்த்துக்கோ அஞ்சுமா” என்று காயு பதைபதைப்போடு கூற, அந்த குரல் அவளுள் ஒருவித பயத்தை ஒருநொடி உரசிச் சென்றது. “ம்..ம்ம் ம்மா” என்றவள் கணவனை நோக்க, சன்னமான புன்னகையுடன் கண்கள் மூடி திறந்தான்.

 

அதற்கு பிறகான தருணங்கள் யாவும் கலகலப்போடே செல்ல, மிகுந்த சந்தோஷத்தோடு வீடு திரும்பினர். காயுவும் மகாவும் ஒருவித பயமும் அக்கறையும் கலந்த நிலையில் அஞ்சுவுக்கு வேண்டியதை பார்த்து பார்த்து செய்ய, அவ்வப்போது பயந்த நேரங்களில் கணவனிடம் ஆறுதலையும் மகிழ்ந்த நேரங்களில் உறுதுணையையும் தவறாமல் பெற்று வாங்கிக் கொண்டாள்.

 

அப்படியே ஒருமாதம் இனிதே கடந்திட, அழகான மெல்லிய மேடோடு காணப்பட்ட வயிற்றை வருடியபடி, வயிறு தெரியாத வண்ணம் புடவையை கட்டி தயாராகினாள் அஞ்சிலை. அவளைக் கண்டு சிரித்த ருத்ரன், “பாப்பா.. நீ சாதாரணமாவே புடவை கட்டுடா” என்று கூற, “அத்தை தான் இப்படி கட்டிக்க சொன்னாங்க. யாரும் வயிறு பெருசா இ..இருக்குனு கேட்டுடாம இருக்கனும்னு” என்றாள்.

 

“ம்ம் புரியுதுடா.. ஆனா இப்படி கட்டிருக்குறது தான் இன்னும் பெருசா தெரியுது. நீ சாதாரணமாவே கட்டுமா” என்று ருத்ரன் கூற, மறுபேச்சு இன்றி திருத்திக் கொண்டு வந்தாள். வெளியே வந்த மருமகளைப் பார்த்த மகா, “நான் உன்ன எப்படி கட்ட சொன்னேன்” என்க, “ம்மா.. நான் தான் இப்படி கட்ட சொன்னேன். அது இன்னும் பெருசா தான் காட்டிக் கொடுக்குதும்மா” என்றான்.

 

ரூபி ஒரு கொத்து வேப்பிலையைக் கொண்டு வந்து அவள் தலையில் குத்திவிட்டதும் மகா ஒரு இரும்புச்சாவியை கொடுத்து, “சரி இதை கையில அல்லது இடுப்புல சொறுகி வச்சுக்கடா” என்க, “சரி அத்தை” என்று வாங்கிக் கொண்டாள். இதோ மூன்றாம் மாத பரிசோதனைக்கு அவள் செல்லவிருப்பதால் மொத்த குடும்பமுமே சற்று படபடப்போடு தான் இருந்தனர். 

 

சாயும் அவளது ஐந்தாம் மாத பரிசோதனைக்கு வந்திருக்க, இருவருமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். சாய்க்கு அப்படியே அஞ்சுவிற்கு இருப்பதற்கு எதிர்மறையாகத்தான் அனைத்தும் இருந்தது. அஞ்சுவுக்கு மசக்கை தொல்லையே இல்லை. ஆனால் சாய்க்கு இன்னும் மசக்கையின் பாடு ஓயாது இருந்தது. அஞ்சுவுக்கு வயிறு நன்கு எழும்பி இருக்க, சாய்க்கு பெரிதாக வயிறே இல்லை. ஆனால் இருவருக்குமே இருந்த ஒரே பிரச்சினை ‘மூட் ஸ்விங்’ என்று சொல்லப்படும் மனநிலை மாற்றம் தான். 

 

முதலில் செவிலி வந்து சாயை அழைத்துச் செல்ல, ருத்ரன் கைகளைப் பற்றிக் கொண்டு அமர்ந்திருந்தாள். சில நிமிடங்களில் அஞ்சுவையும் அழைத்திட உள்ளே சென்றவளை கனி பரிசோதித்துப் பார்த்து கூறியதில் கணவன் மனைவி இருவரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிப் போயினர்!

-வரைவோம் 💞

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்