Loading

காற்று வேகமாக வீசி, இருவர் தேகத்தையும் குளிரச் செய்ய, அந்த சுகந்தமான சூழலை ரசித்தபடி கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இருக்கும் பச்சை பசேலென்ற இடத்தை பண்பொழி திருமலைக் கோவிலின் மேலிருந்தபடியே பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர், ருத்ரன் மற்றும் அஞ்சிலை.

 

“ரிலாக்ஸா இருக்குல?” என்று ருத்ரன் நன்கு மூச்சிழுத்தபடி கூற, “பசிக்குதுல?” என்று வயிற்றை பரிதாபமாக பார்த்தபடி கூறினாள். அதில் அவளை திரும்பிப் பார்த்து முறைத்தவன், “எவ்ளோ ஃபீலிங்கா சொல்றேன்” என்று கூற, “நானும் ரொம்ப ஃபீலிங்கா தான் சொல்றேன். நைட்டு வெளிய டின்னர்னு சொன்னதுனாலயோ என்னவோ இப்போதிருந்தே பசிக்குது” என்றாள்.

 

அதில் அவளை முறைக்க முயன்றும் சிரித்துவிட்டவன், “என் மச்சானுக்கு சொல்லியாச்சா?” என்று வினவ, “உங்க மச்சானுக்கும் சொல்லியாச்சு மச்சிக்கும் சொல்லியாச்சு. மச்சியோட வைஃப் மனசு வச்சா வருவாங்க” என்று கூறி சிரித்தாள். “பாவம்மா அவ” என்று ருத்ரன் கூற, “யாரு அவளா? அதுசரி.. உண்மைலயே வருண் அண்ணா தான் பாவம். இவ சும்மா சளிபுடிச்சாலே ஆ ஊனு படுத்தி எடுத்துடுவா” என்று அஞ்சு கூறினாள்.

 

“சரிவா.. சாமி கும்பிட்டுட்டு கிளம்புவோம்” என்றவன் உள்ளே சென்று இருவரது பெயரையும் கூறி அர்ச்சனை செய்ய, “கல்யாண நாளா?” என்ற ஐயர் உள்ளே சென்று இருவருக்கும் மாலை எடுத்து வந்து கொடுத்தார். அதை மனம் நிறைந்த புன்னகையுடன் வாங்கி மாற்றிக் கொண்டு காணிக்கையை செழுத்திவிட்டு வெளியே வந்தனர், திருமணம் முடிந்து இனிதே ஒரு வருடத்தை கடந்திருந்த அத்தம்பதியினர்.

 

“அத்தையும் ரூபியும் வந்திருந்தா இன்னும் நல்லாயிருக்கும்” என்று கூறியபடி அஞ்சு படியிறங்க, “ஈவ்னிங் டயம். ஏற்கனவே சளி பிடிக்குறபோல இருக்காம். அன்ட் அம்மா வந்தா படியேறி வரனும்னு தான் நினைப்பாங்க. உடம்பு கன்டீஷன் ஒத்துழைக்காதுனு வரலை. ரூபிக்கு அல்ரடி எக்ஸாம் போகுது. நைட்டு வேற நம்ம ஹோட்டல் கூட்டிட்டு போறோம்ல” என்றான்.

 

“ம்ம்..” என்றபடி இறங்கியவள் வீடு திரும்ப, ரூபி தயாராக இருந்தாள். கோவில் பிரசாதங்களை பகிர்ந்து கொடுத்த தம்பதியர் அர்ஜுனுக்காக காத்திருக்க, அவனும் வந்து சேர்ந்தான். நால்வரும் பேசி சிரித்து அரட்டை அடித்த நேரத்தில் வருணின் கார் வந்திறங்க, உள்ளிருந்து வருண் சாய் மற்றும் திவா வந்தனர். “ஹேப்பி அனிவர்ஸரி அஞ்சல..” என்றபடி ஓடி வந்தவள் கரம் பற்றி நிறுத்திய வருண், “அடிவாங்க போற நீ. ஓடாம போனு சொல்றேன்ல” என்றான்.

 

“அட இவரு வேற ஓடாத குதிக்காத நடக்காதனு. இதுக்குமேல பொறுமையா போக நீங்க தான் என்னை தூக்கிட்டுப் போகனும்” என்று சாய் கூற, “நான் ரெடிதான்” என்று கூறி கண்ணடித்தான். அதில் யாவரும் சிரிக்கவே, அச்சிரிப்பு சத்தத்தில் லேசாக வெட்கம் கொண்டு தலைகோதியவன், “கேட்கவே மாட்றா மச்சி என் பேச்சை. மார்னிங் சிக்னெஸ்னு காலைல சுருண்டு கிடந்தா. இப்ப பாரு” என்றான்.

 

“அதெல்லாம் அப்படித்தான். அப்ப வாந்தி வந்து படுத்திச்சு படுத்துக்கிடந்தேன். இப்ப ஓகே ஆகிட்டேன் குதிக்குறேன்” என்ற சாயைப் பார்த்து சிரித்த ரூபி, “இப்ப எத்தனாவது மந்த் அக்கா?” என்று வினவ, “த்ரீ பாயின்ட் பைவ்டா” என்றபடி ‘ஈ’ என்று முப்பத்தியிரண்டு பல்லும் பளபளக்க கூறினாள்.

 

யாவரும் பேசி சிரித்துக் கொண்டிருக்க, “எப்பா.. பசிக்குதுயா.. ஹோட்டலுக்கு போற ஐடியா இருக்கா இல்லையா?” என்று அஞ்சு கேட்டாள். அவள் பேச்சில் யாவரும் சிரித்திட, பாவம்போல் முகத்தை வைத்துக் கொண்டு கணவனைப் பார்த்தாள். அதில் புன்னகைத்தவன், “கிளம்பலாம்டா” என்க, சாய், வருண், அர்ஜீன் மற்றும் ரூபி காரிலும் ருத்ரன் மற்றும் அஞ்சிலை இருசக்கர வண்டியிலும் சென்றனர்.

 

அவர்கள் எப்போதும் செல்லும் அந்த உணவகத்துக்குத்தான் சென்றனர். “சாய்.. கண்டது கழுதைய ஆர்டர் பண்ணி திங்க முடியலை வாந்தி வருதுனு சொன்னனு வை பிச்சுடுவேன். லெமன் ஜீஸ் வாங்கி வச்சுக்க. காரமில்லாத லைட் ஃபுட்டா சாப்பிடு” என்று வருண் எச்சரிக்க “அதுக்கு நான் இட்லி தான் சாப்பிடனும். அந்த இட்லிய அங்க என் மாமனாரே செஞ்சு தந்திருப்பாரே” என்றாள்.

 

“அண்ணி.. அண்ணா கிடக்கிறான். நீங்க பிடிச்சதை சாப்பிடுங்க. வாமிட் வந்தா லெமன் ஜீஸ் குடிச்சுட்டு நிறுத்திக்கலாம்” என்று திவா கூற, “சொல்லுவடா சொல்லுவ. ஏன் சொல்லமாட்ட. அடுத்து நெஞ்சு எரியுது தொண்டை வலிக்குதுனு என்னை படுத்தி எடுத்துடுவா” என்று வருண் கூறினான். “அண்ணி.. இந்த அண்ணா ரொம்பதான் அழுத்துக்குறான். நான் உங்கள பாத்துக்குறேன்” என்று கூறிய இளையவனைப் பார்த்து சிரித்தவள் “டபுள் டன்” என்று கூறினாள்.

 

இவர்கள் பேச்சு வார்த்தையை யாவரும் மகிழ்வோடு பார்த்திருக்க, அர்ஜுன் “மாம்ஸ்.. அக்காக்கு எதும் கிப்ட் இல்லையா?” என்றான். “நானே உங்க அக்காக்கு பெரிய கிப்ட் தான்” என்று ருத்ரன் கூறவும் யாவரும் சிரிக்க, “உண்மை தான்” என்று முனுமுனுப்பாக அஞ்சு கூறிக் கொண்டாள். 

 

பின் வருணிடம் ருத்ரன் கண்காட்டி வினவ, தலையசைத்தபடி ஒரு வண்ண காகிதம் மறைத்த பரிசைக் கொடுத்தான். அதில் ஓர் புகைப்பட மென்தகடு வண்ண காகிதம் கொண்டு அலங்கரிக்கப்பட்டு மூடியிருந்தது. அதை கண்கள் மின்ன ஆர்வத்தோடு பார்த்தவள், “என்னது?” என்று வினவ, “பிரிச்சு பாரு” என்றான். 

 

அதே ஆர்வத்தோடு அதை பிரித்துப் பார்த்தவள், அசந்தே விட்டாள்! இருவரும் எடுத்துக் கொண்டதிலேயே அவளுக்கு பிடித்த புகைப்படம் அது! வருண் சாய் திருமணத்தில் எடுத்த அழகிய புகைப்படம் ஆனால் அதைவிட அவளை அசரவைத்த ஒன்று அதில் இருந்தது.

 

அவள் நாட்குறிப்பில் அவள் ரசித்து ரசித்து எழுதிய காதல் கவிதைகள் குட்டி குட்டியாக மங்கிய நிறத்தில் எழுதப்பட்டு அதன் மேல் இவர்கள் புகைப்படம் தெரிவதுபோல் அமைக்கப் பட்டிருந்தது. “ஏ இந்த கவிதை!” என்று உற்சாகம் கொண்டவளைப் பார்த்து சிரித்தவன், “நீ எழுதினது தான். நீ இல்லாத நேரம் உன் டைரில இருந்து எடுத்து போன்ல டைப் பண்ணி வச்சுகிட்டு மெத்தமா அனுப்பி இன்ஸ்டால ஒரு போட்டோ மேக்கருக்கு அனுப்பி செய்ய சொன்னது. வருணுக்கு தான் பார்சல் பண்ண அட்ரஸ் அனுப்பிருந்தேன்” என்றான்.

 

“ரொம்ப அழகா இருக்கு” என்று உணர்ந்து கூறியவள், “நான் எந்த கிப்டும் வாங்கல” என்று பாவம் போல் கூற, சிரித்தபடி, “இது நம்ம டே.. நான் குடுத்தா என்ன நீ குடுத்தா என்ன” என்றான். அனைவரும் “ஓ..ஹோ..” என்று கத்தி சிரிக்க, பாவை வெட்கத்துடன் தலைகுனிந்துக் கொண்டாள்.

 

பின் யாவரும் உண்ணத் துவங்க, பேச்சும் சிரிப்புமாக நேரம் ஓடியது. அனைவரும் உண்டு முடித்த பின்பும் ஒரு தோசையை வரவைத்துக் கொண்டு உண்டுக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்து, “மதியம் சாப்பிடலையா கேடி?” என்று ருத்ரன் வினவினான்.

 

“கொஞ்சமா தான் சாப்பிட்டேன்” என்று கூறியவள் கடமையே கண்ணாக வேலையை முடித்துவிட்டு எழ, சென்று தொகையை செழுத்திவிட்டு வந்தான். அர்ஜுனை அவன் வீட்டில் விட்டுவிட்டு ருத்ரன் வீட்டுக்கு வந்தவர்கள் சிலநேரம் அங்கே கழித்துவிட்டு வருண் தன் குடும்பத்துடன் புறப்பட்டான்.

 

தங்கள் அறையில் அந்த புகைப்படத்தினை மாட்டிவைத்து நுனிவிரல்களில் வருடி புன்னகைத்தவளைப் பின்னிருந்து அணைத்தவன், “ஹேப்பி?” என்றான். அவன் கைகள் மேல் தன் கைவத்து, “ரொம்ப” என்றவள் திரும்பி அவனை அணைத்துக் கொண்டாள். 

 

“பால்கனி போவோமா?” என்று அவள் வினவ, அவளோடு சென்று ஊஞ்சலில் அமர்ந்து அவளை மடியில் வைத்துக் கொண்டான். மௌனமாகத்தான்‌ சென்றது, ஆனால் மனைவியின் முகத்தையே பார்த்திருந்தவன், “என்னடா? எதாவது சொல்லனுமா? ஒருமாதிரி இருக்க?” என்று வினவ, ஒருவித படபடப்பு முகத்தில் இருந்த போதும் தனக்கே தெளிவில்லாத விடயத்தை என்னவென்று கூறவென புரியாது விழித்தாள்.

 

“என்னமா?” என்று அவன் வினவ, “ஒருமாதிரி பதட்டமா இருக்கு. என்னனு சொல்ல தெரியலை” என்று அவள் கூற, அவளையே சிலவினாடி பார்த்தவன், “நிறையா சாப்பிட்டது எதும் படபடனு இருக்கும்போலடா. வெண்ணீர் குடிக்குறியா?” என்றான்.

 

“ம்ம்” என்று மறுப்பின்றி அவள் தலையசைக்க, சென்று வெண்ணீர் வைத்துக் கொடுத்தவன், “இன்னும் பச்ச பிள்ளையா இருக்கடி கேடி” என்று கூற, அதில் அவனை செல்லமாக முறைத்துவிட்டு அதை குடித்துமுடித்து சென்று படுத்து விட்டாள். ‌அவளை தட்டிக் கொடுத்தபடியே படுத்தவனுக்கு அவளது படபடப்பு ஏனோ வித்யாசமாக பட்டது. பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு படுத்துக் கொண்டவன் மெல்ல உறக்கத்தின் பிடிக்கு சென்றான்.

 

அடுத்த ஒருவாரம் அஞ்சுவை வெகுவாக சோதிக்கும் படி இருந்தது என்று தான் கூறவேண்டும். சாய் மசக்கையால் வெகுவாக அவதிப்படவே, அஞ்சு வேலைக்கு தனியே பஸ்ஸில் சென்று வரும்படி ஆனது. எப்போதும் திரும்பி வந்து வருண் வீட்டிற்கு சென்று தோழி நலன்களை விசாரித்து விட்டே வீடு வருபவள், அன்று வேலைப்பழு கொடுத்த சோர்வில் நேரே வீட்டிற்கு வந்துவிட்டாள்.

 

வேலைகளை முடித்துவிட்டு ருத்ரன் வர தாமதமாகும் என்பதால் மாமியார் மற்றும் நாத்தனாருக்கு உணவிட்டுவிட்டு தானும் உண்டவள் சென்று ஊஞ்சலில் அமர்ந்து தோழிக்கு அழைத்து பேசினாள். படுக்கை வாவா என அழைத்தபோது கணவன் வராமல் தூங்க எண்ணம் இல்லை. அவன் வந்தால் தான் தானும் உறங்குவேன் என்ற ரகம் இல்லைதான் அவள். ஏனோ இன்று தோன்றியதால் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

 

‘ஒரு வாரம் தள்ளிபோயிருக்கே. படபடப்பா வேற இருக்கு. நிறையா பசிக்குது. ஒருவேளை.. பாப்பாவா?’ என்ற எண்ணம் அவளுள் ஓடிக்கொண்டே இருக்க, மகிழ்ச்சிக்கு மாறாக பயமாகத்தான் இருந்தது அவளுக்கு. ‘வெறும் ஒருவாரம் வச்சு எப்படி சொல்ல முடியும்? முன்ன பின்ன வரலாம் தானே?’ என்று கூறிக் கொண்ட போதும் ஆசை இருக்கத்தான்‌ செய்தது.

 

‘அவர்கிட்ட சொல்லலாமா? வேணாம்.. அப்பறம் இல்லைனா ஆசை காட்டின போல ஆயிடும்’ என பழைய அஞ்சுவாக யோசித்தாள். சில நிமிடங்களில் கணவன் வந்துவிடவும், அவனுக்கான உணவை அவள் எடுத்து வைக்க, “இன்னும் தூங்கலையா நீ?” என்றான். ‘இல்லை’ என்ற தலையசைப்போடு உணவை பறிமாறியவளிடம், “என்னாச்சுமா? ஒருமாதிரி இருக்க?” என்று வினவ, அதற்கும் ஒரு தலையசைப்பயே பதிலாகக் கொடுத்தாள்.

 

ஏதும் பேசாது உண்டு முடித்தவன் அறைக்குள் நுழைய, அவன் கரம் பற்றி பால்கனிக்கு இழுத்துச் சென்றாள். அவள் ஏதோ சொல்லத் தவிப்பது புரிந்தவனும் அமைதியாக சென்றிட, ஊஞ்சலில் அமர்த்தி தானும் அமர்ந்தவள், “படபடப்பா இருக்கு” என்றாள்.

 

“இன்னுமா? ஏன்டா? உடம்பு எதும் பண்ணுதா?” என்று அவன் வினவ, “இ..இல்ல.. அது..” என்று தயங்கினாள். தவிக்கும் அவள் கரங்களின் மேல் தன் கரம் வைத்தவன், “என்னடா?” என்று வினவ, “ஒ..ஒரு வாரம் நாள் தள்ளி போயிருக்கு. இ..இப்பலாம் கொஞ்சம் நிறைய சாப்பிடுறபோல இருக்கு. வயிறு லேசா கல்லுபோல தான் இருக்கு” என்றாள்.

 

அவனது பிரகாசமான முகம் அவனது எதிர்ப்பார்ப்பை காட்ட துடிக்க, நாளை ஒன்றுமில்லை என்ற பட்சத்தில் அவளை வருத்தி விடுமோ என்று எண்ணியவன், முகத்தை சாதாரணமாக வைத்தபடி, “பார்ப்போம்டா. ஒருவாரம் தானே தள்ளி போயிருக்கு” என்றான். “ஒருமாதிரி படபடனே இருக்குங்க எனக்கு” என்று அவள் கூற, அவள் தலைகோதியவன் அவளையே சில வினாடிகள் பார்த்தான். 

 

“பரவாயில்லையே.. என் கேடி தேரிட்டா. கண்டதையும் யோசிச்சு என்கிட்ட எதுவும் சொல்லாம மறைச்சு தனக்குள்ளயே படபடக்கும் அஞ்சுவா இல்லாம, என்கிட்ட சொல்லி படபடப்பை குறைக்க முயற்சி பண்ணும் அஞ்சுவா இருக்காளே” என்று ருத்ரன் கூறிய பிறகு தான் அவனிடம் கூறவேண்டாம் என்று தானெடுத்த முடிவை மீறி எப்படி கூறினோம் என்று ஆச்சரியப்பட்டாள்.

 

அவளது அதிர்ந்த முகம் கண்டு குழம்பியவன், “என்னமா?” என்க, “இல்ல.. உங்ககிட்ட சொல்ல வேண்டாம்னு தான் இருந்தேன். அ..ஆனா எப்படி சொன்னேன்?” என்று குழம்பினாள். சன்னமான சிரிப்போடு, “டிரஸ்ட்.. இவர்கிட்ட ஷேர் பண்ணினா மனசு லேசாகும்னு உன் மனதின் ஏதோ ஒரு மூலையில் ஏற்பட்ட உந்துதல் தான் சொல்ல வச்சிருக்கு” என்று ருத்ரன் கூற, அவனை ஆச்சரியமாக பார்த்த அஞ்சிலைக்கு இந்த சின்ன விஷயம் தன்னிடம் அவள் காணும் பெரிய மாற்றமாக பட்டது.

 

அவனை இறுக கட்டிக் கொண்டவள் ஏதும் பேசவில்லை, அவளை தட்டிக் கொடுத்தவனும் எதுவும் பேச விளையவில்லை. அவனை நிமிர்ந்து பார்த்து, “கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆச்சு. இப்பத்தான் இவளுக்கு நம்மமேல நம்பிக்கையே வந்துருக்குனு உங்களுக்கு தோனவேயில்லையா?” என்று வினவ, ‘இல்லை’ என்பதுபோல் தலையசைத்தான்.

 

“ஏன்?” என்று கேட்டவள் கன்னம் தட்டி, “நம்பிக்கை.. ஒருத்தர் மேல நம்ம வைக்கும் நம்பிக்கைக்கு அவர் உரியவரா இருப்பாரானு மனம் ரொம்ப யோசிக்கும்டா. சிலரிடம் அந்த நம்பிக்கை சீக்கிரம் வரும் சிலரிடம் அதிக நேரம் எடுத்துக்கும். அந்த நேர அளவ வச்சு அவங்க பந்தத்தை எடை போட முடியாது. நம்ம கஷ்டங்களை பகிர வைக்கும் நம்பிக்கைக்கும் நம்ம வாழ்க்கைய பகிர வைக்கும் நம்பிக்கைக்கும் அதிக வித்தியாசம் இருக்கு. ஒரு நண்பர் மேல ரொம்ப சுலபமாக அந்த நம்பிக்கை வரும். ஏன்னா அவங்ககிட்ட நம்ம அன்பையும் சோகத்தையும் மட்டுமே பகிருவோம். ஆனா நம்ம பார்ட்னர் அப்படி இல்ல. மொத்தமா நீ வாழ்ந்த ஒரு சூழலையே விட்டுட்டு புது சூழலுக்கு வர. அப்படி இருக்க இருபத்தி அஞ்சு வருஷ பழக்கம் எப்படி ஒரே நாளில் மாறும்னு நான் எதிர்ப்பார்ப்பேன்?” என்றான்.

 

அவனை கண்கள் பனிய பார்த்தவள், “எப்படி இப்படி இருக்கீங்க?” என்று வினவ, “ரொம்ப நல்லவன் எல்லாம் இல்லை. பட் என்னை வருத்தும்னு நான் அனுபவிச்சு புரிஞ்சுகிட்டதை அடுத்தவர்களுக்கு கொடுக்கக் கூடாதுனு நினைப்பேன்” என்றான். அவனையே பார்த்திருந்தவள் சட்டென எம்பி அவன் இதழோடு தன் இதழைப் பொருத்திக் கொண்டாள். 

முத்தம் தேரேரி அவன் முகமெங்கும் ஊர்வலம் நடத்த, சன்னமான புன்னகையுடன் “இப்படிலாம் பேசினா என் பொண்டாட்டி ரொம்ப குஷி ஆகிடுவா போலயே” என்றான்.

 

அதில் முகம் சிவந்தவள் அவன் மார்பில் தன் முகத்தை புதைக்க, அவள் தலையை வருடியபடி, “ஒரு வாரம் பார்ப்போம்டா. பீரியட்ஸ் வரலைனா ஹாஸ்பிடல் போகலாம்” என்றான். வெட்கத்தோடு தலைகுனிந்திருந்தவள் பேசும் நிலையில் இல்லாததால், தலையை மட்டும் அசைக்க, “என் இளாமா எனக்கு கொடுத்ததை நான் திரும்ப குடுக்கனுமே” என்றவன் சொன்னபடி அவள் இதழ்களில் தன் கணக்கைத் தீர்த்துக் கொண்டு உறங்கவைத்தான்.

-வரைவோம் 💞

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்