அந்த அழகிய காலைப் பொழுததில் விஜியின் புகுந்த வீட்டில் யாவரும் கூடி இருந்தனர். ஆளாளுக்கு ஒரு வேலையை சுமந்துகொண்டு சென்றுவிட, பிள்ளை பெற்றவளிடம் அமர்ந்து தோள் தாங்க முடியாத வருத்தத்துடன் அவள் கணவனும் வந்தவர்களை உபசரித்துக் கொண்டிருந்தான். விஜியின் பிறந்து பத்தே நாட்கள் ஆன ஆண் குழந்தையை தயக்கத்தோடு தன் மடியில் வைத்திருந்த அஞ்சிலைக்கு குழந்தையை கொஞ்ச கைகள் பரபரத்தது.
ஆம் விஜிக்கு ஒன்பதாம் மாதத்தின் முடிவில் அழகியதோர் ஆண் குழந்தை பிறந்திருந்தது. இந்த மூன்று மாத காலம் அஞ்சிலை மற்றும் ருத்ரனின் வாழ்வு முற்றும் முழுதுமாக பழைய நிலைக்கு திரும்பியிருந்தது. இழந்த குழந்தையை பற்றிய நினைவு மறக்கமுடியாத ஒன்றாயினும் நினைக்க முடியாத ஒன்றே! அதை புரிந்துகொண்டு அதுபற்றி நினைவுகளை அஞ்சிலை முற்றுமாக தவிர்த்து தன்னை வருத்தமேற்றாது சுயபாதுகாப்பில் ஈடுபட்டாள்.
மனம் கோணும் நேரங்களில் கணவனின் அணைப்பில் தன்னை மீட்டுக் கொள்பவள் ‘விஜியின் குழந்தைக்கான பெயர் சூட்டு விழாவில் கலந்துகொள்ளலாமா? வேண்டாமா?’ என தனக்குள் பெரிய பட்டிமன்றத்தினையே நடத்திக் கொண்டிருந்தாள். பெயர் சூட்டு விழாவுக்கு அழைக்க வந்திருந்த வித்யா மற்றும் லக்ஷ்மணனில், அன்றைய சம்பவம் கொடுத்த குற்ற உணர்வில் வித்யா தான் வெகுவாக தவித்தார்.
இப்போதும் அவரது மனதில் அஞ்சிலை விஜிக்கு போட்டியாக வந்தவள் தான். ஆனால் அன்றய சம்பவம் அவர் மனதில் ஒருவித குற்ற உணர்வை விதைத்திருந்தது. அதற்காக அவளிடம் மன்னிப்பு கேட்கவெல்லாம் அவர் நினைக்கவில்லை என்பது வேறு கதை.
வந்தவர் எப்போதும் காட்டும் ஒதுக்கத்தை வெளிப்படையாக காட்டிக் கொள்ளாமல், அஞ்சிலையையும் பார்த்து தலையசைக்க, அவளும் புன்னகையுடன் தலையசைத்தாள். “எல்லாருமா வாங்க அண்ணி. ரூபி உன்னைதான் அவ கேட்டுட்டே இருந்தா. ஒரு நாள் தங்கி இருந்துட்டு போடா” என்ற வித்யா ருத்ரனைப் பார்த்து, “பொண்டாட்டியோட வந்து என் பேரன வாழ்த்திட்டுப்போபா” என்று கூற, முகம் நிறைந்த புன்னகையுடன் தலையசைத்தான்.
அவர் சென்றவுடன் அறைக்கு திரும்பியவன் மனைவியை நோக்க, அவள் முகம் பெரும் குழப்பத்தில் இருந்தது. அவள் முக்ததை கைகளில் ஏந்தியவன், ‘என்ன?’ என்பது போல் கண்ணசைக்க, அவனையே பார்த்திருந்தவள், அவன் மார்பில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.
சிலநிமிடம் அப்படியே தட்டிக் கொடுத்தவன் அவள் தலைநிமிர்த்த, “நான் வரேன்” என்றாள். அவளை புன்னகையுடன் பார்த்தவன், “ஷ்யோர்? நல்லா புரிஞ்சுக்கோ உனக்கு பிடிக்காத செயலை யாரோட வற்புறுத்தலின் பெயரிலும் நீ செய்ய வேண்டாம். வற்புறுத்தும் ஆள் நானாவே இருந்தாலும்” என்று கூற, “நீங்க என்னை வற்புறுத்த மாட்டீங்க. அன்ட் அவங்க நடந்த சம்பவத்துல வருத்தத்தோட இருக்காங்க. அதனால தான் எனக்கு உங்கமூலமா மறைமுக அழைப்பு விடுத்துருக்காங்க” என்று குறும்புடன் கூறினாள்.
“ஏ கேடி.. உனக்கு வாய் ஜாஸ்திதான்டி. இந்த வாயை அங்க காட்டாம அழுதுட்டே வந்து அம்மாகிட்ட சொல்லிடுவேன் ஆட்டுகுட்டிகிட்ட சொல்லிடுவேன்னு என்கிட்ட அழவேண்டியது” என்று அவள் வாயிலேயே ஆடவன் இரண்டு போட, “ஸ்..ஆ.. வலிக்குது” என்றவள் அவனுக்கு நறுக்கென்ற ஒரு கில்லலை பரிசாகக் கொடுத்து கத்தச் செய்திருந்தாள்.
விழாவிற்கு வந்தோர்களில் அஞ்சிலைக்கு மட்டும்தான் வேலையே இல்லை. அதனால் தனியாக அவதிப்படும் விஜியுடன் இருக்கவேண்டி ருத்ரன் கேட்க, அவளும் சரியென்று வந்துவிட்டாள். குழந்தையை அவள் கையில் கொடுத்துவிட்டு விஜி குளியலறை சென்றிருக்க, வெளியே வந்தவள், பயத்தோடு குழந்தையின் கைகளை வருடும் அஞ்சுவைக் கண்டு சற்றே மனம் வருந்தினாள்.
“உங்க கிட்ட சமத்தா இருக்கானே க்கா” என்று விஜி கூற, சட்டென கைகளை எடுத்துக் கொண்டு நிமிர்ந்தவள் படபடப்பை மறைக்கும் புன்னகையோடு, ‘ஆம்’ என்பதுபோல் தலையசைத்தாள். அவளருகே அமர்ந்த விஜியிடம் குழந்தையை பாவை தூக்கி கொடுக்க முற்பட, “உங்க கிட்டயே இருக்கட்டும் அக்கா” என்றாள்.
அதில் ஒருவித தயக்கத்தோடு அவள் தலையசைக்க, தாம்பூலப் பை எடுக்க உள்ளே வந்த வித்யா இருவரையும் சாதாரணமாக பார்த்துவிட்டுச் சென்றார். அதுவே அவளுள் படபடப்பை ஏற்ற, அவள் கைபற்றிய விஜி, “அக்கா..” என்றாள்.
அவளை நிமிர்ந்து பார்த்த அஞ்சு “என்னடா?” என்று வினவ, “சாரி அக்கா..” என்றாள். அவளை புரியாத பார்வை பார்த்த அஞ்சு, “எதுக்குமா?” என்று வினவ, “இல்லை க்கா.. ரொம்ப நாளாக நான் சொல்ல நினைச்சது. இப்பதான் நேரம் அமையுதுபோல. வளைகாப்பு அன்னிக்கு நடந்தது தெரிஞ்சு ரொம்பவே வருத்தம் பட்டேன் அக்கா. அம்மாகிட்ட சண்டைகூட போட்டேன். ரொம்ப வருத்தமா இருந்தது. இப்ப நீங்க தம்பிய வச்சுக்க தயங்குறதை பார்க்க ரொம்ப சங்கடமா இருக்கு க்கா. அக்கா நானுமே கல்யாணம் முடிஞ்சு இதோ ரெண்டு வருஷம் கழிச்சுதான் பிள்ளை பெத்துருக்கேன்”
“கல்யாணத்துக்கு பிறகும் மேல படிச்சேன். ஆனாலும் கல்யாண வாழ்க்கையும் வாழ ஆரம்பிச்சுட்டேன். இதோ கடைசி செம் மட்டும் பையனுக்காக எழுத முடியலை. ஆனா எனக்குமே ரெண்டு முற நாள் தள்ளி போய் போய் இல்லாம போயிருக்கு. புகுந்த வீட்ல சொந்தக்காரங்களே ஒன்னு ரெண்டு முறை பேசிருக்காங்க. அவ்வளவு வருத்தமா இருக்கும். ஆனா அவரு இது எதுலயும் என்னை மனவருத்தம் அடைய விடமாட்டாரு. படிப்ப பாரு பார்த்துக்கலாம்னு தான் சொல்லுவாரு. வளைகாப்பு அப்போ மீனா அத்தை பேசினது தெரிஞ்சு ரொம்ப கஷ்டமா போச்சுக்கா. என் விசேஷம்னு வந்த உங்களுக்கு இப்படி ஒரு கஷ்டத்தை கொடுத்துட்டேனேனு வருத்தமா போச்சு” என்றவள் குரல் கரகரத்து வந்தது.
அஞ்சு அவளை ஆச்சரியமான பார்வையோடு பார்த்தது பார்த்தபடி இருக்க, “நீங்க எதையும் மனசுல வச்சுக்காதீங்க அக்கா. நான் எதுமே நினைக்கமாட்டேன். நீங்க தொட்டா என் பிள்ளைக்கு நல்லதில்லைனு நினைக்கனும்னா உங்களுக்கு என் கருப்பு வளைக்கு வந்ததால தானே பாப்பா இல்லைனு நான் நினைக்கனும்?” என்றாள். “டேய்.. அப்..அப்படிலாம் இல்லமா” என்று அஞ்சு கூற, “ம்ம் அதேதான் நானும் சொல்றேன். இவங்கலாம் பழைய ஆள் அக்கா. ஏதோ விவரம் புரியாம பேசிட்டாங்க. நீங்க ஏதும் நினைச்சுக்காம நார்மலா இருங்க அக்கா” என்றாள்.
தன்னைவிட சிறியப் பெண் இத்தனை பக்குவமும் பகுத்தறிவோடும் பேசுவதை வியப்போடு பார்த்த அஞ்சுவுக்கு மனம் குளிர்ந்தது உண்மையே! சன்னமான புன்னகையுடன் “நான் ஏதும் நினைச்சுக்கலைடா. அதெல்லாம் மறந்துட்டேன். அத்தை வந்து என்னையும் வரசொல்லி அழைச்சதே எனக்கு சந்தோஷம்” என்று அஞ்சு கூற, “அப்ப இனிமே தம்பிய தூக்க தயங்க மாட்டீங்க தானே?” என்று வெள்ளந்திப்போல் விஜி வினவினாள்.
சிரித்தபடி, “மாட்டேன்டா” என்ற அஞ்சு, குழ்நதையை தற்போது ஆசையோடு வருட, பல்லிலா வாய்திறந்த லேசாக குழந்தை புன்னகைத்தது. அதில் உடல் சிலிர்க்க விஜியைப் பார்த்தவள் புன்னகைக்க, அவளும் மனம் நிறைந்து புன்னகைத்தாள். விழா இனிதே முடிந்து யாவரும் வீடு திரும்ப, அழுப்பாக உணர்ந்த அஞ்சு உறங்கிவிட்டாள்.
மாலை எங்கோ மணியடிப்பதுபோன்ற உணர்வில் மெல்ல புரண்டு படுத்தவளுக்கு அதுதன் அழைப்பேசி ஒலி என்று புரியவும் தூக்கத்தோடு எடுத்து காதில் வைத்தாள். “பக்கி நாயே.. அறிவு கிறிவு இருக்கா பன்னி.. உன்னைய வச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது. தூங்க மூஞ்சி உன்ன வச்சு அண்ணா எப்படித்தான் குடும்பம் நடத்துராரோ” என்கையில் அங்கு அவள் வாயை கப்பென மூடியிருந்தான் வருண்.
“அடியே.. உன் பிரண்டு கூட நீ தனியா பேசும்போது பீப் போட்டுக்கூட பேசிக்கோ. நான் இருக்கும்போது தயவசெஞ்சு இந்த டபுல் மீனிங் பேச்சு வேணாம்டி” என்று வருண் கூற, “வெக்கப்பட வேண்டியவளே குப்புறடிச்சு தூங்கிட்டு இருக்கா உங்களுக்கு என்னத்துக்கு வெக்கம்? அய்யோ உங்க கூட பேசின இந்த கேப்ல அவ பேரலல் வேர்ள்டுக்கு போயிடுவா. அடியே” என்று சாய் கத்தினாள்.
எதிர்மூனையில் சுப்ரபாதம் கேட்பதுபோல் தோழியின் வசவுகளை கேட்ட அஞ்சு, “என்னடி?” என்று தூக்க கலக்கம் விலகாது வினவ, “மவளே… போய் ரெடியாகுடி” என்றுவிட்டு சாய் அழைப்பை துண்டிக்க முகத்தை தேய்த்தபடி எழுந்தவள் முன் அடக்கப்பட்ட சிரிப்போடு ருத்ரன் அமர்ந்திருந்தான்.
“எதுக்கு இந்த பக்கி திட்டுச்சுனே புரியலையே” என்று அஞ்சு கூற, “மேடம்.. நாம நாலு பேரும் வெளியப்போறதா இருந்தது. கிளம்புற உத்தேசம் இருக்கா இல்லையா?” என்று ருத்ரன் வினவினான். “அட ஆமா” என்றபடி எழுந்தவளைக் கண்டு சிரித்தவன், “எனக்கு வருண் ஃபோன் பண்ணான். நான் நீ இன்னும் தூங்குறனு சொல்லவும் அங்க சாய் சாமியாட ஆரம்பிச்சுட்டா. என்னை எழுப்ப சொன்னா ரொம்ப அசந்து துங்குறனு சொன்னேன். அவ்வளவே தான் உனக்கு கால் பண்ணிட்டா” என்று கூற, “அடப்பாவி மனுஷா.. வேணும்னே அந்த கிராதகி கிட்ட போட்டுவிட்டுருக்கீங்களே.. அய்யோ கடவுளே” என்ற புலம்பலோடு குளியலறைக்குள் ஓடினாள்.
பத்தே நிமிடத்தில் தயாராகி வந்த மனைவியை கூட்டிக் கொண்டு அந்த அழகிய உணவகத்திற்குச் சென்றான். தோட்டத்திற்கு நடுவே அமைக்கப் பெற்ற உணவகம் பார்ப்பதற்கே அவ்வளவு ரம்மியமாக இருந்தது. அங்கே பாவையை முறைத்துக் கொண்டு தனது கணவன் வருணின் அருகே அமர்ந்திருந்தாள் சாய்.
இதோ நால்வரும் அமர்ந்து பேசி சிரித்தவண்ணம் இருக்க, தோழியிடம் மட்டுமே வெளியாகும் அவளது முற்றும் முழுதான இயல்பு குணத்தை ஆடவன் அழகுபட ரசித்தான். இங்கு நம் வருண் வேறு புதிதாக கல்யாணம் ஆன சின்னஞ்சிறுசு அல்லவா? பகிரங்கமாக மனைவியை சைட் அடித்துக் கொண்டிருந்தவனைக் கண்டு, “ஏங்க.. வீட்டுல வச்சு சைட் அடிச்சுக்கோங்க. இது ஹோட்டல்” என ‘வெக்கமாவது மண்ணாவது.. ஜொல்லை துடைய்யா’ என்ற ரீதியில் கூறி அவனைத்தான் வெட்கப்படச் செய்தாள்.
அதில் வாய்விட்டு சிரித்த ருத்ரன், “மச்சி.. உன்பாடு திண்டாட்டம் தான்போ” என்று கூற, இது எதிலும் கவனமில்லாமல் உணவே முதல் குறியென அஞ்சு உண்டுகொண்டிருந்தாள். அவளையே பார்த்த ருத்ரன், ‘உன்னை இன்னமும் நான் புரிஞ்சுக்கவே முடியலைடி’ என்று கூறிக் கொண்டான்.
உண்டு முடித்த யாவரும் வீடு திரும்பிட, ரூபிக்காக வாங்கி வந்த உணவு பதார்த்தங்களை தானே பரிமாறி அவள் உண்டு முடித்ததும் அறைக்கு திரும்பினாள், அஞ்சிலை. கட்டிலில் கையில் புத்தகத்துடன் அமர்ந்திருந்தவனை சரியாக கவனியாமல் அவள் குளிக்கச் சென்றதும் அவனுக்கு வசதியாக போயிற்று. புத்தகத்தை அது இருந்த இடத்திலேயே வைத்தவன் சென்று பால்கனியில் நிற்க குளித்து முடித்து இரவு உடையுடன் வந்தவளும் பால்கனிக்கு வந்தாள்.
அவளை முன்னே இழுத்து நிறுத்தி பின்னிருந்தபடி அணைத்துக் கொண்டவன், “நிலா அழகா இருக்குல?” என்றான். கத்திபோன்ற கூர்மையான வளைவு கொண்ட பிறை நிலவின் அழகைப் பார்த்தவள், “ரொம்ப” என்க, “இதுக்கு ஒரு கவிதை சொல்லேன்” என்றான்.
சட்டென அவனைத் திரும்பிப் பார்த்தவளுக்கு அவன் வார்த்தைகள் அப்படி இனித்தது. இதுவரை யாருமே அவளிடம் ‘இதை பற்றி கவிதை எழுதேன், அதை பற்றி கவிதை எழுதேன்’ என்றெல்லாம் கேட்டதே கிடையாதே! ஆதலால் ஏற்பட்ட இன்ப அதிர்ச்சியோடு சிரித்தவள், அவன் மீது சாய்ந்தபடி அந்த நிலவைப் பார்த்தாள்.
“முடிவதேயில்லை!
கத்திபோன்ற கூர்மையான வளைவு கொண்ட பிறை நிலவே!
உன்னை ரசிக்கும் நேரத்தினை குறைத்துக் கொள்ள,
என்னால் முடிவதேயில்லை!” என்று அவள் கூற, அவள் காதோரம் தன் உஷ்ன உதடு உரசி, முத்தமிட்டவன், “நிஜம் தான். ரசிக்காம இருக்கவே முடியலை” என்றான்.
அதில் மேனி சிலிர்த்து, புல்லரிக்க நின்றவள் இடையை வளைத்துப் பிடித்தவன், “இளாமா..” என்க, கண்களை மெல்ல மூடியபடி மேலும் அவன்மீது சாய்ந்தவள் இதழ்கள் புன்னகைக்க துடித்தன!
“இளாமா..” என்று மீண்டும் மோகம் ததும்ப ஒலித்தவன் குரலின் கூர்மை தாங்காது திரும்பி நின்ற பாவை அவனை இறுக அணைத்துக் கொள்ள, இதுபோதுமடி சகியே என்றார் போல் அவளை தூக்கிக் கொண்டு உள்ளே சென்றான்.
கட்டிலில் இட்ட தன் நிலவோடு முகிலாக உறவாடி கழித்து களைந்தவன், வெகுநாட்களுக்கு பிறகான சுகந்தத்தில் சிவந்திருக்கும் மனையாளின் முகம் கண்டு கள்ளுண்ட வண்டாகிப் போனான்.
அவள் கூந்தலை கோதியவண்ணம் “இளாமா..” என்று அவன் கூற, கூச்சத்துடன் கண்களை மூடியபடியே அவன் மார்பில் முகம் புதைத்து “ம்ம்” என்றாள். “என்னை பாரேன்.. கொஞ்சம் பேசணும்” என்று அவன் கூற, தயங்கி தயங்கி நிமிர்ந்து பார்த்தாள்.
லேசான புன்னகையுடன் “இது எப்பவோ நான் பேச நினைச்ச விஷயம். ஆனா இன்னிக்கு தான் சந்தர்ப்பம் அமைஞ்சிருக்கு” என்றவன் குரலில் இருந்த தீவிரம் அவளை யோசனைக்குள் ஆழ்த்தியது. “கல்யாணம் பற்றிய உன் கருத்தென்ன?” என்று அவன் கேட்ட நொடி அவள் உடலில் லேசான நடுக்கம் ஒரு நொடி வந்துபோக, “எ..எதுக்குங்க?” என்று வார்த்தைகள் தடுமாறியது.
அவளது எண்ணம் ‘ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்’ என்பது தான். ஆனால் ஏனோ கணவனிடம் அதை கூற அவள் நா எழவில்லை! அவன் அன்பு செய்த மாயமோ, மோகம் ததும்பிய தருணமோ? அது அவளே அறியாள்!
அவள் சொல்லப்போவதில்லை என்று புரிந்தவன் அவளுக்கு அந்த சிரமத்தை கொடுக்காது தானே முன்வந்தான். “எல்லா சுகமும் ஒரு காலம் வரைதான். அடுத்து அந்த உறவு புளிச்சுடும். அதுதானே?” என்று அவன் வினவ, ஏனோ அந்த வாக்கியம் அவன் வாய்வழி கேட்க அத்தனை வலித்தது அவளுக்கு.
அவனையே பார்த்தபடி அவள் விழிக்க, அவள் விழிகளில் மெல்லிய நீர்த்திரை பிறந்தது. “நீ சொன்ன நினைவிருக்கா. உங்கப்பா ஒருமுறை அம்மா வேலை நேரத்துல போன் பண்ணி உடம்பு முடியலைனு மருந்து கேட்டதுக்கு திட்டினார்னு. அவர் திட்டனதை மட்டுமே கணக்கெடுத்த நீ அவர் வரும்போதே மருந்தோட வந்தார்னு சொன்னதை உணரவே இல்லை யோசிச்சியா? ஆத்திரம் தான்! வேலைநேர கோபம் தான்! அதுக்காக அதை சரினு நான் சொல்ல மாட்டேன். ஆனா தான் செஞ்சது தப்புனு உணர்ந்து மனைவிக்கு என்னவோனு நினைச்சு தானே மருந்தை கையோட வாங்கிட்டு வந்திருப்பார்?” என்றவன் கேள்வியின் உண்மை அவள் தளிர்மேனியை தீயாய் சுட்டது!
“உன் சித்தியை சித்தப்பா அடிச்சது சண்டை போட்டதுனு சொன்னதுக்கு நான் வரவே இல்லைடா. அது நியாயம்னு நான் சத்தியமா சொல்லவும் மாட்டேன். பேசவும் விரும்பலை. ஆனா உன் மனதை மொத்தமா ஆக்கிரமித்தது இந்த சம்பவங்கள் தான்! நீ பார்த்து வளர்ந்த திருமண வாழ்வு கோடியில் அறை புள்ளி. கடல்நீரில் கலந்த மழைத்துளி போன்றது. அதை மட்டுமே பார்த்து வளர்ந்ததால எல்லார் வாழ்க்கையுமே இப்படித்தான்னு ஒரு முடிவுக்கு வந்துட்டடா” என்று ஒரு இடைவெளி விட்டவன் அவள் தலையை மென்மையாக கோதினான்.
“கடைசி காலத்தில் தள்ளாடும்போது தோள் கொடுத்து நிற்கும் தம்பதிகளும் இருக்காங்களே! அங்க ஆசைக்கும் மோகத்துக்கும் வேலையே இல்லைடா. அங்க இருப்பது முழுசும் அன்பு மட்டும்தான். அன்பால தான் எல்லா உறவும் கட்டமைக்கப்படுது. ஆனா அன்பை மட்டுமே வைத்து வாழ்ந்திட முடியுமா? வாழ்வாதாரத்துக்குனு நாம தேடும் தேடல் நம்ம வாழ்க்கைய பரபரப்பா மாற்றுது. அந்த பரபரப்பில் சண்டைகள் சாதாரணமாக ஆகிடுச்சு. ஆசை, அன்பு, மோகம் போல கோபமும் ஒரு உணர்வு தானேடா? மனிதனா பிறந்தவனுக்கு கோபங்கள் வரதான் செய்யும். கோபத்தில் வாயை கட்டுப்படுத்தும் மனிதர்கள் வெகு சொற்பம்”
“கணநேர கோபத்தில் வார்த்தைய விட்டுட்டாலும் அதுக்கு பிறகு அதையேவா பிடிச்சு தொங்குறோம்? ஒத்துக்குறேன்.. வார்த்தைகளின் வலி கொடியது! ஆனா கணநேரம் சுயமற்று வெளிவந்த வார்த்தை கொடுத்த வலிக்காக சுயத்தோட வாழ்ந்து கழித்து வாழ்வை வெறுப்பது எப்படியான புத்திசாலித்தனம்? என்னை பொருத்தவரை சண்டை புரிதலுக்கான அடித்தளம். சண்டைகள் தான் ஒருத்தரை பற்றி மற்றவருக்கு உணர்த்தும். அது கொடுக்கும் வலிதான் நம்ம மத்தவங்கள எவ்வளவு நேசிச்சிருந்தா அவங்க வார்த்தை நம்மை காயப்படுத்தும்னு புரியவைக்கும். வலிகளற்ற உறவு ஏதுமே இல்லைடா. வலிக்குமேனு தவிர்த்தா இங்க எந்த பெண்ணும் தாயாகவே முடியாதே?” என்று கேட்டு நிறுத்தியவனை விழிகள் கலங்கி விரிய பார்த்தாள்.
“இப்பவும் எனக்கு உன்னை பற்றி முழுசா தெரியாது. ஒருத்தரை பற்றி முழுதாக புரிஞ்சுக்க யாராலும் முடியாது என்பது தான் உண்மை. ஏன்னா நமக்கே நம்மை பற்றிய புரிதல் இல்லை. எப்ப நம்ம எதை செய்வோம் என்ற பகுத்தறிவு நம்மகிட்டயே இல்லை. அப்படியிருக்க நம்மை அடுத்தவர் புரிஞ்சுக்கனும்னு எப்படி நினைக்க? ஆனா நம்மை உணர்த்த முடியும்! நான் இப்படி, எனக்கு இது பிடிக்கும், இது தெரியும்னு நம்மை உணர்த்தலாம். அதுதான் அன்போட வெளிப்பாடு!”
“நீ இன்டிரோவெர்ட். இதுல நான் குறை சொல்ல மாட்டேன். நீ வளர்ந்த சூழல் அப்படி. உற்றார் உறவினர்னு ஒரு கெடுபிடியான சூழலில் எதை செய்தா என்ன சொல்வாங்களோ அப்படிங்குற பயத்துல வாழ்ந்ததால உன்னை உன் சுயத்தோட ஏற்றுக்குறவங்க கிட்ட மட்டும் அது வெளிப்படுது. ஆனா இது நல்லதானு கேட்டா இல்லைனு தான் சொல்லுவேன். உதாரணம் நீயே நிறையா பட்டிருக்க. புடிச்சதையும் புடிக்காததையும் வாய்விட்டு சொல்லாம நீ இருந்து அனுபவிச்சது ஏராளம்”
“இதுவே தொடரக்கூடாதுனு என்னால முடிஞ்சளவு உன்னை சௌகரியமான சூழலில் பார்த்துக்கிட்டேன். அதுமட்டுமே நீ மாற போதாது. உன் மாற்றம் உன்னில் தான் துவங்கனும். உனக்கு புடிச்சது அடுத்தவங்களைப் பாதிக்காத வரை அதை செய்வதுல தப்பே இல்லை. அப்படியிருக்க ஆசைய ஆசையா மட்டுமே வைக்காம அதை செயலில் கொண்டு வந்தா அடுத்தவங்க வாய்க்கு அவலாவோமோ என்ற பயமில்லாம அதை ஏற்று கடந்துவரும் பக்குவத்தை வளர்த்துக்கனும்”
“அது உன்கிட்ட தான் இருக்கு. நமக்கு கல்யாணம் ஆகி ஏழு மாதங்கள் கடந்து இரண்டற வாழ்ந்து கழித்த பின்புதான் எனக்கு உன் மனசுல கல்யாணத்தை பற்றிய இப்படியொரு கசப்பான எண்ணம் இருப்பதே தெரியும். அதை பற்றி எடுத்துப் பேசவே எனக்கு இந்த மூன்று மாதங்கள் தேவையா இருந்திருக்கு. எதுவுமே நாம பாக்குற கண்ணோட்டத்துல தான் இருக்குடா. ஒரு சண்டை போட்டாலும் அதுக்கு அடுத்து ஒருவருக்கு ஒருவர்னு துணையா தானே அவங்க வாழுறாங்க”
“பிள்ளைகளுக்காக மட்டுமே தான் சேர்ந்து இருக்காங்கனு நீ சொல்றனா பிள்ளைகளை கரைசேர்த்த பின்பு கூட பிரிஞ்சிருக்கலாமே? பிரியனும் பிடிக்கலைனு நினைப்பவர்களுக்கு வயதெல்லாம் ஒரு பொருட்டா சொல்லு? அதையும் தாண்டி அவங்களை பிணைத்து வைத்திருக்கு அந்த மாய உணர்வு தான் கணவன் மனைவி பந்தம்! அதுக்கு நீ தீட்டியிருக்கும் எண்ணம் முற்றும் முழுதும் மோசமானதுடா. இதே எண்ணத்தோடயே தான் நாம வாழுறோம்னா அந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் இருக்கும் சொல்லு” என்றவனது அந்த கடைசி வரியில் அவளிடம் லேசான விசும்பல் ஒலி பிறந்தது.
“இந்த கசடு இனியும் உன் மனதில் இருப்பதும் அதை எடுப்பதும் உன் கையில் தான் இருக்கு. என்னை நம்பி என்னுடனான வாழ்க்கைய துவங்கிட்ட. உன்னை அப்படி விரக்திக்கு தள்ளுமளவு விட்டுட மாட்டேன். கொஞ்சம் யோசிச்சுபாரு. நமக்குள்ளயும் ஒரு சண்டை வந்தது. அதுவும் உன் அம்மாவீட்டுக்கு நீ போகுமளவு. ஆனா இன்னிக்கு நம்ம எப்படி வாழுறோம்? அது பற்றிய நினைவு இந்த மூன்று மாதத்துல உனக்கு தோன்றியிருக்கா? அதுதான் தான் நம்ம பந்தத்து மேல நம்ம கொண்ட நம்பிக்கை”
“உனக்கு திருமண வாழ்வில் நம்பிக்கை இல்லாம இல்லை. எங்க நம்பிக்கை வச்சு ஏமாந்துடுவோமோனு பயம்! என் கைகோர்த்து என் அன்போட பயணி, உன் பயத்தை முற்றும் முழுதா கழைச்சு உனக்கு நல்ல வாழ்க்கைய நான் தருவேன்” என்று நீலமாக பேசி முடித்தான்.
அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தவள், அவனை அணைத்துக் கொண்டு அழத்துவங்கிட, அவள் தலையை கோதியபடி அமைதி காத்தான். சில நிமிடங்கள் அழுது கரைந்தவள், அவனை நிமிர்ந்து பார்த்து, “உண்மை தான்.. ஆனா.. நான் கடந்துவந்த சூழல்.. சத்தமா சிரித்தா கூட குத்தம்.. அதுவும் பேச்சு உடனே அம்மா வளர்ப்பில் வந்து நிற்கும். என்னுடைய இயல்பு இதுனு கத்தி சொல்லனும்னு ஆத்திரம் வந்த நாட்கள் நிறைய”
“அதைவிட என் சொந்த வீடே என் சொந்தங்கள் வந்தா எனக்கு அந்நியமாகிப்போன நாட்கள் ஏராளம். என்னை நானா இருக்க விடுங்களேன்னு கதறனும்போல இருந்திருக்கு. உ..உங்களுக்கு ஒன்னு சொல்லவா.. எ..எங்க வீட்டு பங்ஷன் ஒன்னுல எல்லாரும் வந்திருந்தாங்க. நான் ஆசையா வாங்கின செயின் ஒன்னு தங்சிச்சு முறை பொண்ணு பிச்சுட்டா. அவ கேட்டதை கொடுக்க மாட்டேன்னு சொன்ன கோபம், அப்படி பண்ணிட்டா. அதங்கத்தில் ஏன் இப்படி பண்ணனு தான் கேட்டேன். அவங்க அம்மா கிட்ட என்ன சொன்னாளோ.. இதுக்கெல்லாமா சண்டை போடுவ என்ன வளர்த்திருக்காங்க உன்னைனு கேட்டுட்டாங்க. அம்மா ஆத்திரம் பொறுக்காம என்னை இன்னும் நாலு வார்த்தை பேசிடுவாங்களோனு பயத்தில் அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அன்னிக்கு நைட் என் ரூம்ல தன் அவளும் தூங்குறதா இருந்தது.. பா..பாத்ரூம்ல உக்கார்ந்து ஒருமணி நேரம் அழுதேன்.. என் வீட்டில் அழக்கூட எனக்கு உரிமை இல்லாம போச்சேனு.. எங்கையாவது ஓடிட்டா என்னனு தோனுச்சு..” என்கையில் அவள் முகம் காட்டிய சொல்லொண்ணா வேதனை அவள் பட்ட கஷ்டங்களை அவனுக்கு படம் போட்டு காட்டியது. “நான் யாரையும் குத்தம் சொல்லலை. இப்பவுமே எனக்கு ஒன்றுனா அவங்க எல்லாரும் பதறுவாங்க தான். பாசம் இருக்கு தான். ஆனா அவங்க ஆதிக்கத்தை எங்க கிட்ட நிலைநாட்டிட வேண்டும் என்ற எண்ணம். நான் கண்டு வந்த வாழ்வு வேற, ஆனா நான் உங்ககிட்ட அனுபவிச்சது முற்றிலும் வேற. ஆனா இது நிலையானதா நிலையற்றதா என்ற பயமே என்னை ஒருநிலையா யோசிக்கவிடலை. இப்ப நீங்க சொல்லும்போது அவ்வளவு வலிச்சுது. நான் நினைச்சத உங்க வாயால கேக்க கொஞ்சமும் சகிக்கலை. எ..என்னால ஆனா உடனடியா அதுலருந்து வெ..வெளிய” என்று முடிப்பதற்குள், “வேண்டாம்டா. தயக்கமெதுக்கு? எதுலருந்தும் உடனே வெளிவர முடியாது. இப்ப பேசினது உன் தப்பை உனக்கு சுட்டிக்காட்ட. இனி அதிலிருந்து நீ திருந்த நான் உதவியா இருப்பேன். அதை நீ உணர்ந்தா போதும்” என்றான்.
மௌனமாக அவன் மார்பில் கண்ணீரோடு முகம் புதைத்தவள் மனம் பலதும் யோசித்தது. உள்ளம் ரணமாய் தைத்தது. தனது கருத்துக்கள் எத்தனை தவறானது என்பது புரிந்த நொடி, தன்னவன் வாயாக கேட்ட சொற்கள் அன்று தான் கூறிய போதும் அவனை இப்படித்தானே பதம் பார்த்திருக்கும் என்று வலித்தது. ஆனால் இதில் அவளை குற்றம் என்று அவள் ஏற்றுக்கொள்ளவில்லை. இது தனது தவறில்லை.. தான் வந்தவழியே தனது எண்ணங்களும் ஆனால் இனி திருத்திக் கொள்ளலாம் என்று நினைத்தாள்.
மௌனமாக கரைந்த நொடியில் மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தவள், “என்மேல வருத்தமே இல்லையா?” என்று கேட்க, “நிறையா வருத்தம் இருந்தது” என்று அந்த இருந்ததில் ஒரு அழுத்தத்தோடு கூறியவன், “ஆனா இனியும் அந்த வருத்தம் இருக்காது” என்று கூறினான். அவனை கண்களில் மகிழ்ச்சியோடு பார்த்தவள் அதிரடியான முத்தத்தை வழங்க, அவளது அதிரடியில் அசந்தவனாக தன்னை ஒப்புக் கொடுத்து மீண்டும் ஒரு பல்லவி இசைத்துவிட்டு இனிதே உறங்கினர்!
-வரைவோம் 💞