Loading

ஓவியம்-03

‘ரப்பப்பா ரப்பப்பரே.. ஆ ரப்பப்பா ரப்பப்பரே’ என்று முனுமுனுத்துக் கொண்டே தயாராகிய அஞ்சு கீழே வர, தாய்க்கும் தந்தைக்கும் பெரும் விவாதம் ஓடிக் கொண்டிருந்தது. புரியாது விழித்துக் கொண்டிருந்த தன் தம்பியை பார்த்து ‘என்னடா?’ என அவள் சைகையில் கேட்க, அவன் ‘தெரியவில்லை’ என்பது போல் இதழ் பிதுக்கினான்.

“ஏங்க.. என்ன பேசுறீங்க நீங்க? கோவில் பூஜைக்காக வாராங்க. அதுவும் அத்தனை பேரு. நானோ வீட்டுக்கு தூரம். நான் எப்படி சமைக்க முடியும்?” என்று காயத்ரி வினவ “ஆமா.. உனக்கு எங்க வீட்டு ஆளுங்க வர்ற நேரம் தான் இதெல்லாம் வரும்” என்று குணசேகரன் கடிந்தார்.

“ஆமா ஆமா.. நான் வான்னு சொன்னதும் வர்றதுக்கு இதென்ன பூனை குட்டியா? ஏங்க இப்படிலாம் பேசுறீங்க?” என்று காயத்ரி ஆதங்கப்பட “எதையாவது ஒரு சாக்கு வச்சுகிடு” என்று திட்டிவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.

செல்லும் கணவரின் புரிந்துகொள்ளாத தன்மையில் நொந்துக் கொண்டவர் தலையை தாங்கிக் கொண்டு சோபாவில் அமர்ந்திட பிள்ளைகள் இருவரும் வந்து இருபுறமும் அமர்ந்தனர்.

“என்னம்மா?” என அஞ்சு வினவ “உங்க அத்தை குடும்பமா கோவிலுக்கு வராங்களாம். ரெண்டு நாள் இங்க தான் தங்கி சாப்பிடுவாங்கனு சொல்றார். நான் வீட்டுக்கு தூரம். கோவில் பரிகாரம்னு வர்றவங்களுக்கு எப்படி சமைச்சுபோட முடியும்” என்று அழுகையுடன் கூறினார்.

‘ஆகா.. நமக்குமில்ல வந்துடுச்சு’ என்று நினைத்துக் கொண்டவள் “அழாதமா” என்க “நீ பண்ண முடியுமாடி” என்று கேட்டார்‌. அன்னையை பாவமாக பார்த்தவள் “இன்னிக்கி காலைல தான் ம்மா” என்க “ப்ச” என்று மீண்டும் தலையை தொங்கப்போட்டுக் கொண்டார்‌.

அத்தனை நேரம் அமைதியாக இருந்த அர்ஜுனிற்கு அப்போதே விடையம் புரிய “நா வேணும்னா பண்ணட்டுமா ம்மா?” என்றான். சட்டென அவனை நிமிர்ந்து பார்த்த இருவருக்கும் அவனது புரிதலும் கரிசனமும் உருக்கும்படி இருக்க, கண்ணீருடன் மகனை அணைத்துக் கொண்டார், காயத்ரி.

“ம்மா.. அழாதீங்க ம்மா. அப்பா ஏதோ கோபத்துல பேசிட்டு போயிட்டாங்க. நா பண்ணவானு சொல்லுங்க. இல்லைனா வெளிய பார்த்துக்க சொல்லுங்க” என்று அர்ஜுன் கூற மகன் முகத்தை வருடி, “பாப்போம்டா” என்றார்.

அப்போது சாயும் வந்துவிட, தன் முகத்தை துடைத்துக் கொண்டு எழுந்தவள் “வேலைக்கு போய்ட்டு வரேன் ம்மா” என்றுவிட்டு புறப்பட்டாள். வண்டியில் எப்போதும் வலவலவென பேசிக் கொண்டே வரும் தோழி இன்று அமைதியாக வரவும், “ஏ அஞ்சல.. என்னாச்சு?” என்று சாய் வினவினாள்.

தன் அன்னைக்கு அடுத்து அவள் அனைத்தையும் மனம் விட்டு பேசுவது தோழியிடம் தான் என்பதால் நடந்த அனைத்தையும் கூறியவள் “இதெல்லாம் நம்ம சொல்லிவச்சா வருது சாய். நல்லா படிச்சு பேங்குல வேலை பாக்குற மரியாதைக்குறிய மனுஷன் அப்பா. அவரே இப்படி சில்லியா பேசும்போது கடுப்பா இருக்கு” என்றாள்.

சிறு புன்னகையுடன் “எப்பேர்ப்பட்ட மனுஷனா இருந்தாலும் அவரும் சராசரி கணவன் தானே அஞ்சு. இப்ப சண்டை போட்டுகிட்டா அடுத்து கொஞ்சம் நேரத்துல மறந்துடுவாங்க அஞ்சு. பொண்ணுங்க நம்ம தான் எதையும் மறக்காம உழன்றுகிட்டே இருப்போம். அவங்க இப்ப சண்டை போட்டா அடுத்து மறந்துட்டு கடந்துடுவாங்க‌. அப்படி இருக்குறதும் நல்லது தானே. நீ இதெல்லாம் யோசிக்காத அஞ்சு” என சாய் கூற “சரிடி‌. ஆனா அஜு நான் பண்ணட்டுமானு கேட்டதும் ஒருமாதிரி ஃபீலிங்கா இருந்தது. ச்ச இவன் கூட புரிஞ்சுக்குறானேனு” என்றாள்.

“இப்ப உள்ள பசங்கல்லாம் புரிஞ்சுக்குறாங்க அஞ்சு. அப்பாஸ் கொஞ்சம் ஓல்ட் ஜெனரேஷன். அவங்க வாழ்ந்த காலத்துல குடும்ப சூழலுக்கு பையன் சம்பாதிச்சா போதும்னு அவங்களுக்கான வேலைகளை வீட்டு பொண்ணுங்களே பார்த்துகிட்டாங்க. அப்படியான சூழல்ல வளர்ந்தவங்க திடீர்னு எப்படி நம்ம வேலைய நம்ம தான் செய்யனும், இதெல்லாம் புரிஞ்சுக்கனும்னு மாறுவாங்க? இங்க யாரையும் குத்தம் சொல்ல முடியாது அஞ்சு. நீ எதையும் போட்டு யோசிக்காம ஃப்ரீயா விடு” என்று சாய் கூறினாள்.

இருவரது பேச்சும் மருத்துவமனை வாயிலில் முடிய, சென்று தங்கள் வேலையை தொடங்கினர். 

அங்கு தனது வேலையில் ஈடுபட்டிருந்த ருத்ரனை மேனேஜர் அழைப்பதாக ஊழியர் ஒருவர் கூறிச் செல்ல, தனது கையுறையை கலட்டியபடி மேனேஜர் அறைக்கு வந்து சேர்ந்தான்.

அவனை பார்த்து புன்னகையுடன் அமர சொன்னவர் “மார்னிங் மிஸ்டர் ருத்ரன்” என்க “குட் மார்னிங் சார்” என்றான். “ஒரு புது டீலிங் வந்திருக்கு எக்ஸ்போர்ட் பண்றதுக்கு. எழுபது கீலோ என்.பீ.கே உரம் அனுப்ப சொல்லி கேட்டிருக்காங்க. கூடுதல் நேர வேலை இருக்கும். நீ தான் ஹெட்டா இருந்து இதை நடத்தனும்னு நான் விரும்புறேன். சில சமயம் லேட் நைட் போற மாதிரியும் இருக்கும். பட் இதுக்கு தனியா சம்பளம் போக அமௌன்ட் கொடுப்போம்” என்று அவர் கூற சற்றும் யோசிக்காது “ஓகே சார்” என்றிருந்தான்‌‌.

“வீட்ல யோசிச்சுட்டு நாளைக்கு கூட சொல்லுப்பா. அம்மா தங்கை தனியா இருந்துப்பாங்களா?” என்று இத்தனை நேரம் மேலாளராக பேசியவர் தற்போது அவனுக்கு உற்ற அண்ணன் ஸ்தானத்தில் கேட்க “பிரச்சினை இல்லை சார். நான் வரேன்” என்றான். “அப்ப சரி ருத்ரா‌. அடுத்த வாரம் இருந்து வேலைய துவங்கிடலாம்” என்று அவர் கூற “ஓகே சார்” என்றுவிட்டு விடைபெற்றான்.

தன் தந்தை இருந்த நேரத்தில் விவசாயத்தில் ஓர் பெரும் நஷ்டம் ஏற்பட்டிருக்க, அதற்காக தனது வீட்டை அடமானம் வைத்திருந்தார். ஆனால் உடல்நலம் குன்றி அடுத்த இரு வருடத்திலேயே அவர் இறந்திருக்க, மாதாமாதம் சிறுசிறுக அவர் கட்டிவந்த பணம் நின்றுபோனது. வீடுவரை வந்து உரியவர்கள் கேட்டுச் சென்ற பின்பே அந்த விவரம் தெரியப் பெற்ற ருத்ரன், இனி தான் சரியாக கட்டிவிடுவதாக கூறியிருந்தான்.

தங்கள் வீட்டை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும், அத்தை மகளின் திருமணத்திற்கு தாய்மாமன் வீட்டு சீராக செய்ய வேண்டியவை வேறு ஏராளம் இருப்பதாலும் இதை உடனேயே ஏற்றுக் கொண்டான்.

அனைத்து நினைவுகளிலிருந்தும் வெளி வந்தவன் தனது வேலைகளை முடித்துக் கொண்டு வீடுவர, புன்னகையுடன் வந்த தங்கை “அண்ணா.. இன்னிக்கு நானே சமைச்சிருக்கேன். நைட்டு என் கைவண்ணம் தான்” என்றாள்.

“அய்யயோ.. முதல்லயே சொல்லிருந்தா வெளிய சாப்டுட்டு வந்திருப்பேனே. அம்மா ஏம்மா இப்படி பண்றீங்க? நான் நல்லா இருக்குறது உங்களுக்கு பிடிக்கலையா?” என்று தங்கையை அவன் கேலி செய்ய கலகலத்து சிரிக்கும் தாயை முறைத்துவிட்டு அண்ணன் தோளிலேயே ரெண்டு பலமாக போட்டாள்.

“ஆ.. ராட்சசி.. வலிக்குது” என்று ருத்து கூற “அதுக்குத்தான் அடிக்குறது” என்றுவிட்டு சென்றாள். செல்லும் மகளை கண்டு மேலும் சிரித்தவர் “ஏன்டா?” என்க “சும்மா ம்மா” என்றான்.

இரவுணவு பொழுதை தங்கையின் கைப்பக்குவத்தில் தயாராகிய உணவினை ருசித்து அவளுடன் கேலி பேசியே கழித்தவன் உண்டு முடிந்து படுக்கும் முன் “அம்மா.. அடுத்த வாரமிருந்து நைட்டு லேட்டா தான் வருவேன் ம்மா. பெரிய ஆர்டர் ஒன்னு வந்திருக்கு. வேலை நேரம் அதிகமா இருக்கும்” என்று விடயத்தை கூறினான்.

“எதுக்குபா கூட நேரமெல்லாம் பாக்குற?” என்று மகனின் நலன் கருதி அவர் கேட்க “இல்ல அம்மா. ரொம்பலாம் நேரமாகாது. என்னை தான் இந்த வேலைக்கு தலைமையா போடனும்னு மேனேஜர் விரும்புறாரு. கொஞ்ச நாள் தான் ம்மா” என்றான்.

இருந்தும் மனம் கேளாது அவர் மறுக்கவும் தங்கையை கண்களால் உதவிக்கு அழைத்தான். நமட்டு சிரிப்புடன் “அம்மா.. அண்ணா தான் சொல்றான்ல. கொஞ்ச நாள் தானே. நாள பின்ன கல்யாணம் ஆகிட்டா எட்டு மணிக்கு டான்னு வந்துட மாட்டான்? அதுவரை என்ஜாய் பண்ணட்டும்” என்று ரூபி கூற “ஏ குட்டி கழுதை.. உன்னை” என்று அடிக்க அவன் பொருள் தேடுவதற்குள் “அய்யோ எஸ்கேப்” என்று ஓடிவிட்டாள்.

ஓடிய மகளை கண்டு சிரித்துக் கொண்டவர் “வீட்டு கடன் இன்னும் எவ்வளவு பாக்கி இருக்கு ப்பா?” என்று வினவ “இன்னும் அம்பதாயிரம் தான் ம்மா. கைல இருக்குறது பூரம் பொறட்டினா கொடுத்துடலாம். ஆனா ரூபிக்கு அடுத்து செம் பீஸ் கட்டனும். இந்த வேலை ஒன்னு கடவுளா பார்த்து அமைச்சிருக்கார். இதை பார்த்தா கொஞ்சம் கூட பணம் வரும். ரெண்டு மாசத்துல எல்லாத்தையும் முடிச்சு வீட்ட மீட்டுடலாம் ம்மா” என்றான்.

ஒரு பெருமூச்சுடன் தன் கணவர் புகைப்படத்தினை பார்த்துக் கொண்டவர் மகனை காண, முகம் கொள்ளா புன்னகையுடன் ‘ஒன்னுமில்லை’ என்பது போல் தலையசைத்தான். அவரிடமும் அந்த புன்னகை தாவிக் கொள்ள, தன்னறையிலிருந்து இருவரையும் எட்டிப் பார்த்த ரூபி “ஆக்ஷன் சீன் இல்லையா? அன்பு ஆறா வழியுது?” என்று வினவினாள். “ஏ.. நீ இன்னும் போகலையா?” என்றபடி ருத்ரன் எழுந்துக் கொள்ள “நானில்லை” என்று கதவை பூட்டிக் கொண்டாள்.

அங்கு தனதறையில் மட்ட மல்லாக்க படுத்துக் கொண்டு அலைப்பேசியை நோன்டிக் கொண்டிருந்த அஞ்சிலைக்கு அவள் உடன் படிக்கும் மாணவி சுசித்ரா குறுஞ்செய்தி அனுப்ப, அதன் அறிவிப்பைக் கண்டு “பார்டா.. காலேஜ் கூட இல்லையே. நமக்கு எதுக்கு மெசேஜ் பண்றா?” என யோசித்தபடி உள்ளே சென்று பார்த்தாள்.

மாலை மருந்தகர் உடையில் தோழியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தினை ஸ்டேடஸ்ஸில் வைத்ததற்கு அவள் ஏதோ தட்டச்சு செய்து அனுப்பியிருப்பதைக் கண்டவள் அது என்னவென்று முனுமுனுப்பாக வாசிக்க, “என்னையும் கூப்பிட்டுருக்கலாமே” என்று மீண்டும் குறுஞ்செய்தி வந்தது.

‘இன்டென்ஷிப்பா போற? என்கிட்டயும் சொல்லிருக்கலாம்ல? நானும் வந்திருப்பேன். எல்லாருமே என்னை மட்டும் ஒதுக்கிடுங்க. இருக்கட்டும்பா. என்ஜாய்’ என்று அவள் அனுப்பிய குறுஞ்செய்தியைக் கண்டு “யாருடா இவ? நான் இவகூட நாலு வார்த்தை நின்னு பேசினது கூட கிடையாது. என்ன இப்படி கேக்குறா?” என்று கூறிக் கொண்டாள்.

ஆனால் அதை அவளிடம் கேட்டு அவள் சங்கடப்பட நேரிடுமோ என்று எண்ணியவள் “சாரிடா. நீயும் போற ஐடியால இருந்தனு எனக்கு தெரியாது. இப்ப என்னடா? நீயும் வரியா?” என்று பதிலனுப்ப “ஏ சாரிலாம் எதுக்கு? இட்ஸ் ஓகேடா” என்று அனுப்பியிருந்தாள்.

அதை புகைப்படமெடுத்து சாய்க்கு அனுப்பிவிட்டு பதிலுக்காக அஞ்சு காத்திருக்க சாயிடமிருந்து அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்றவள் ‘ஹலோ’ என்பதற்கு கூட இடமளிக்காமல் “உனக்கென்ன லூசா? தேவையில்லாம என்னத்துக்கு சாரி கேட்குற? அவ வேணும்னே வம்பு பண்ண தான் பேசிருக்கா” என்று சாய் ஹை டெசிபலில் கத்தினாள்.

அஞ்சிலை முதல் ஐந்து மதிப்பெண்களில் எப்போதும் வந்துவிடுவாள். ஆனால் ஒருசில டாப்பர்களைப் போல் உள்ளே ஒன்று வெளியே ஒன்று என பொய் பூசலில்லாம் தன்னால் முடிந்ததை மற்றவர்களுக்கும் கொடுத்து படிக்க உதவும் குணமுடையவள். அதனாலேயே அனைத்து மாணவ மாணவிகளுக்கும் அவள் மீது ஒரு தனி மரியாதை என்றாலும் அவள் நெருங்கி பழகுபவர்களை தவிர யாரிடமும் அவ்வளவாக பேசியது கிடையாது. 

கடந்து செல்லும்போது ஓர் புன்னகையும் பேசினால் மதித்து பதில் பேசிவிட்டு செல்வது என்பதோடு இருப்பவளுக்கு சாய் மட்டுமே அனைத்துமானவள். சாயிடம் அவள் வாயடிப்பதை பிற மாணவர்கள் கவனித்தால், ‘நீ இப்படிலாம் பேசுவியா?’ என்றே கேட்பர்.‌ 

சுசித்ரா சற்றே குதர்க்கமான பேச்சு கொண்டவள் என்பதால் இயல்பிலேயே அவளிடம் மற்றவர் ஒருவித ஒதுக்கத்தை காட்டுவர். ஆனால் அப்படி வெளிப்படையாக ஒதுங்கி ஒருவரை மனம் கோண செய்துவிடுவது நல்லதன்று என்ற எண்ணத்துடன் அவள் பேசினாள் மற்றவர்களை போல் பட்டும் படாமல் பேசாது பொருப்போடு பதில் கூறிவிட்டு உடனே நகர்ந்திடுவாள்.

இது சாய்க்கு சுத்தமாக பிடிக்காது என்ற போதும் தனது இயல்பை மாற்றிக் கொள்ள விரும்பாதவள் அதை சாயிடமும் வெளிப்படுத்தியிருந்தாள். ‘சரிபோ’ என விடுபவளுக்கு சிலநேரம் சுசி வேண்டுமென்றே வம்பிழுக்கும்போது கொஞ்சி கெஞ்சி பேசிவிட்டு தப்பித்துவரும் தோழியை கன்னம் கன்னமாக அறைந்தால் தான் என்னவென்று தோன்றும்.

“என்ன அஞ்சு நீ? அவ என்னமோ உன்மேல தான் தப்புங்குற போல பேசுறா. இதுல என்ன இருக்கு எங்க வீட்ல கேட்டேன் போக சொல்லிட்டாங்கனு சொல்ல வேண்டியது தானே?” என்று சாய் பொறிய “சாய்.. கத்தாத. அடுத்து அவ உனக்கு தான் மெசேஜ் பண்ணுவா. கத்தாம பொலைட்டா பேசி முடிச்சுக்கோனு சொல்ல தான் ஸ்கீன் ஷாட் அனுப்பினேன். அமைதியா போறதால நம்ம ஒன்னும் ஒரு இன்ச் குறைஞ்சு போகலை. இவகூட வாக்குவாதம் பண்ணி நம்ம நேரத்தை செலவழிக்கும் அளவு இது வர்த்தான மேட்டர் இல்லை. சோ அவ்வளவு தான் டாட்” என்று அஞ்சு கூறினாள்.

“உ… நீதான் கோபப்பட மாட்டேங்குறனா என்னையும் கோபப்படாத சொல்றியே. உன் இயல்பு இதுதான்னு சொல்றல? அதுபோல இதுதான் என்னோட இயல்பு” என்று சாய் கூற “என் இயல்பு பிரச்சினைய முடிக்குது. உன் இயல்பு அதுக்கு வழிவகை செய்யுது. அதனால தான் சொல்றேன். இதை ஒரு மேட்டர் ஆக்கிட வேண்டாம்” என்றாள்.

“செஞ்சு தொலையுறேன். இவள ஸ்டேட்டஸ்ல ஹைட் பண்ணுனாலும் கேட்டு தொலைய மாட்டேங்குற” என்று முனுமுனத்துவிட்டு சாய் அழைப்பை துண்டிக்க, அலைப்பேசியை கண்டு இவள் சிரித்துக் கொண்டாள்.

-வரைவோம்…💕

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்