‘கல்யாணத்தேதி வந்து கண்ணோடு ஒட்டிகிச்சு பெண் நெஞ்சில் ஆனந்த கூத்தாச்சு.. பாருங்கடி மணப்பெண்ண பாருங்கடி.. வெக்கத்துல அவ முகம் சிவந்துடுச்சு’ என்ற பாடல் அந்த கல்யாண அரங்கம் முழுதும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. மாடியில் இருந்த மணப்பெண் அறையில் தனது அழகிய ஆரஞ்சில் தங்க ஜரிகை வைத்து, முத்துமணிகள் தொங்கவிடப்பட்ட டிசைனர் ரவிக்கையுடன் ஜோடிபோட்டுக் கொண்டு பழபழத்த புடவையின் மடிப்பை சரிசெய்துக் கொண்டிருந்தாள்… மணப்பெண்ணின் தோழியான அஞ்சிலை.
இங்கே அவளை ஏகத்துக்கும் முறைத்துக் கொண்டிருந்த சாய், “மேடம்.. கல்யாணம் எனக்கு” என்று கூற, “அதான் இவங்கலாம் உன்னை ரெடி பண்றாங்கள்ல. நான் அழகா கல்யாணப்பொண்ணு பிரண்டா தயாரா இருக்க வேண்டாமா? பொண்ண வரச்சொல்லுங்கோனு ஐயர் சொன்னதும் பொன்னுபோல உன்னை பதம்மா கூட்டிட்டு போய் மேடையில சேக்குற தலையாய பணி எனக்கே எனக்குனு மைதி மம்மி கொடுத்துட்டு போயிருக்காங்க. அதுக்கு நான் பெர்பெக்டா ரெடியாக வேணாம்?” என்று நீலமாக பேசி முடித்தாள்.
அங்கு சாயை அலங்கரித்துக் கொண்டிருந்த அவளது உறவுக்கார பெண்கள் கலகலவென சிரிக்க, ‘அடியே..’ என்று மனதினுள் நினைத்துக் கொண்டாள். அங்குள்ளவர்கள் சிரிப்பொலியிலேயே முன்பின் அறியாதவர் முன் தன்னையும் மீறி தனது இயல்புபோல் தான் பேசியதை நினைத்து சங்கோஜப்பட்ட அஞ்சு, “இரு நான் அ..அவர பார்த்துட்டு வரேன்” என்றாள்.
“எதுக்கு? மடிப்பு வைக்கவா?” என்று கூச்சமே இன்றி கேட்டது சாயல்லாது வேறு யாராக இருக்க முடியும்? அதில் நாணச்சிகப்பேறிய பெண் தோழியை முறைத்துவிட்டு வெளியேறிட, அங்கு வருண் தந்தை ராமிடம் ஏதோ வேலையைக் கேட்டுக் கொண்டு செல்லுவதற்காக ருத்ரன் திரும்பினான்.
திரும்பியவன் பார்வை திருமதியவள் மேல் படிய, ஒருநொடி அசந்து தான் போனான். சிரித்தபடி மனைவியை நெருங்கியவன், “கல்யாணப்பொண்ணு தோழிதானே நீ?” என்று கேலியாக வினவ, முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு, “ஏன்? என்ன இப்ப? ஓவர் மேக்கப்பா?” என்றாள். உண்மையில் அரிதாரப்பூச்சுக்கள் ஏதுமில்லை தான். ஆனால் அவனது கேள்வியில் ரோசம் பெற்றவளாக கேட்டாள்.
அதில் சிரித்துக் கொண்டவன், “ஏ கேடி.. செம்மையா இருக்க” என்று கூற நாணச்சிரிப்போடு தலைகுனிந்தவள், “நி..நிஜமா?” என்றாள். அவன் வாய்மொழியாக மீண்டும் கேட்கும் ஒரு ஆசைதான் அவளை அவ்வாறு கேட்க வைத்தது. “ம்ம்.. ஆமா.. நம்பலைனா அப்படி தனியாவா. புரியும்படி சொல்றேன்” என்று அவன் அவள் காதை கடிக்க, அதில் அரண்டு விழித்தவள் குபீரென்று சிவந்த முகத்தோடு “ச்சீ.. என்னதிது.. போங்க” என்றுவிட்டு விறுவிறுவெனச் சென்றாள்.
மறைக்கமுடியாது அவள் சிந்திவிட்டுச் சென்ற வெட்கத் துகல்கள் காற்றோடு கரைந்தது போலும் மூச்சை நன்கு இழுத்து வாசம் பிடித்து அவற்றை தன் நுரையீரலில் சேமித்துக் கொண்டவன் வேலையைத் தொடரச் சென்றான்.
மீண்டும் உள்ளே புகுந்த தோழியின் முகம் கண்டு, “என்ன மேடம்? மடிப்பு வச்சாச்சா?” என்று நமட்டு சிரிப்போடு வினவ, சுற்றியிருந்த பெண்கள் சிரித்து அவளை மேலும் வெட்கமடையச் செய்தனர். அலங்காரம் யாவும் முடிய அந்த பெண்கள் சிலர் வெளியே வெவ்வேறு வேலைகளைப் பார்க்கச் சென்றனர்.
தோழியின் அருகே அமர்ந்த அஞ்சு இதோடு மூன்றாவது முறையாக, “உனக்கு பதட்டமா இல்ல?” என்று கேட்டுவிட, “அடியே.. நான் என்ன கொலையாடி பண்ண போறேன் பதட்டம்பட? கல்யாணம் தானே? போய் பொம்மை மாதிரி உக்காரப்போறேன் அவரு தாலிய கட்டப்போறாரு. காலைல சாப்பிடலைனா கூட கொஞ்சம் படபடனு வரும். அதுவும் திருட்டுத்தனமா நீ ஊட்டி விட்டுட்ட. பிறகு என்னத்துக்கு பதட்டம்?” என்று வினவினாள்.
“இல்ல.. பொறியாத. சும்மாதான் கேட்டேன்” என்று அஞ்சு அமைதியாக, “மேடம்.. உனக்கு பதட்டமா இருந்ததுனா நீ பயத்தோட உள்ள போனவ. நான் ஜாலியா தான் போறேன். மாமியார் கிடையாது, மாமனார் மட்டுமே. அவரும் என்னோட வைபுக்கு ஒத்துப்போறாரு. கொழுந்தன் பாவம் சின்னப்பிள்ளை. அதுமட்டுமில்ல பொண்ணு பார்த்து மூனு மாசம் கழிச்சு கல்யாணம். மூனு நாலு தடவ அவங்க வீட்டுக்கு போயிட்டு வந்து ஒரு நல்ல உறவை முன்னவே பில்ட் பண்ணின உணர்வு. அதனால எனக்கு எந்த பயமும் இல்லை” என்று சாய் நீலமாக பேசினாள்.
தோழியை வியப்போடு பார்த்த அஞ்சு, “உன்கூடவே இருந்தும் உன்னோட இந்த டேக் இட் ஈஸி பாலிசி மட்டும் எனக்கு ஒட்டவே இல்லைபாரு” என்று கூற, “எதுவுமே உடனே மாறாது அஞ்சு. நீ இருந்து வளர்ந்த சூழல் வேற, நான் வளர்ந்த சூழல் வேற. உன்னோட சிரிப்புக்கு கூட அணைபோட்ட கூட்டமும் என்னோட சென்டிமீட்டர் சிரிப்பு மில்லிமீட்டர் ஆனாலே நான் ஏதோ டிப்ரஸ்ட் ஆகிட்டேனோனு பதறும் கூட்டமும் ஒன்னு கிடையாது. போக போக நீயும் இந்த பாலிஸிக்கு மாறிடுவ. குடும்ப வாழ்வு உன்னை அப்படி மாத்திடும்” என்று கூறி சாய் சிரித்தாள்.
சில நிமிடங்களில் மணப்பெண்ணை அழைக்க அவளை கூட்டிச் சென்று மேடையில் வருண் அருகே அமர்த்தினாள். அவனவள் என்ற வட்டத்தில் நுழைந்து விட்டாளே அந்த பெண் அவனுக்கு பேரழகி தான். அதே எண்ணத்தோடு அவளை ரசனையாகப் பார்த்தவன் பக்கம் குனிந்தவள், “அழகா இருக்கீங்க” என்று கூற, “எனக்கு முன்னாடியே முந்திகிட்ட” என்றான்.
“பார்த்ததும் சொல்லிடனும். உங்கள மாதிரி பேனு சைட் அடிக்கும் பழக்கம் எனக்கில்லை. நாங்களாம் நாசூக்கா சைட் அடிக்கும் ஆட்கள்” என்று சாய் கூற, ‘அடிப்பாவி’ என்றபடி அவளைப் பார்த்தான். “மச்சான்.. கொஞ்சம் அந்த ஐயருக்கு மரியாதை கொடுத்து மந்திரத்த சொல்லுடா. அவ எங்கயும் போயிடமாட்டா” என்று ருத்ரன் வருணை கேலி செய்ய, ‘டேய் ஏன்டா?’ என்றபடி அவனைப் பார்த்தவன் தன் மாலையை சரிசெய்து தன் சங்கோஜத்தை சமாளித்துக் கொண்டான்.
மந்திரங்கள் ஓதப்பட்டு மஞ்சள் கயிறு வருணிடம் நீட்டப்பட, அதை வாங்கியவன், அவள் கண்களைப் பார்த்தபடி, “ரெடி டூ ஷேர் யுவர் லைஃப் வித் மீ?” என்று ஆசையோடு வினவ, “இல்லைனு சொன்னா விடவா போறீங்க. கட்டுங்க” என்று நமட்டு சிரிப்போடு கூறினாள். “அடிபோடி” என்றவன் அவள் கழுத்தில் திருமாங்கல்யத்தினைக் கட்ட, “சம்மதம் சம்மதம்” என்று அவனை குளிரவைத்தாள்.
அந்த அழகியத் தருணம் புகைப்பட கருவிகளில் அழகாக பதிவாக, மேலும் சடங்குகள் முடிய புகைப்படம் எடுத்துக் கொள்ளத் துவங்கினர். வருணும் சாயும் எடுத்துக்கொண்டதைவிட சாயும் அஞ்சுவும் எடுத்துக் கொண்டதே ஏராளம் எனுமளவு புகைப்படங்கள் எடுத்துத் தள்ளினர். இவர்களை பேவென வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த நண்பனைக் கண்டு சிரித்த ருத்ரன், “மச்சி..” என்க, “நல்லவேலை என் பொண்டாட்டி பொண்ணா பிறந்துட்டா மச்சி. பையனா மட்டும் பிறந்திருந்தா உன் பொண்டாட்டிய தூக்கிட்டு போயிருப்பா” என்றான்.
அதில் வாய்விட்டு சிரித்த ருத்ரன் தோளில் கைபோட்டவன், “என் தலையெழுத்து உன்கூட தான் எடுக்கனும்னு இருக்கு. வா நம்ம போட்டோ எடுத்துப்போம்” என்க, “ரொம்ப தான்டா அழுத்துக்குற” என்ற ருத்ரனும் சிரித்தபடி அவனுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டான். போனால் போகிறது என்ற பாணியில் தோழியைவிட்டு வந்த சாய் ருத்ரனுடன் எடுத்துக் கொள்ள, மனைவியின் கரம் பற்றி இழுத்தவன், “மேடம்.. புருஷன்கூட ஒன்னு எடுக்குறது” என்கவும் சிரித்தபடி, “முடியாது முடியாது” என்றாள்.
அவளை நக்கல் புன்னகையுடன் பார்த்தவன், கைவலைவில் இழுத்துக் கொண்டு வந்து நின்று புகைப்பட கலைஞரை எடுக்கும்படி கூற, நாணச்சிரிப்போடு எடுத்துக் கொண்டாள். அனைத்து சடங்குகளும் முடிந்து யாவரும் வருண் வீட்டிற்கு வர, மணமக்களை அமர்த்தி பாலும் பழமும் கொடுத்தனர்.
ருத்ரனும் அஞ்சிலையும் மணமக்களை வாழ்த்திவிட்டு தங்கள் வீடு புறப்பட, மாலை நேரம் நலங்கு வைத்துமுடிய சாயின் பெற்றோரும் புறப்பட இருந்தனர். ஒற்றை மகளாக பாராட்டி சீராட்டி வளர்க்கப்பட்ட பெண், இன்று வேறோர் குடும்பத்தின் அங்கமாக நிற்பதைக் கண்டு ஆனந்த கண்ணீர் வந்தபோதும் மகளைப் பிரியும் வலியில் வேதனைக் கண்ணீரும் வடிந்தது.
அத்தனை நேரம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவளது கலங்கி சிவந்த முகம் காண வருணுக்கு பாவமாகிப் போனது. மகளிடம் வந்த மைதிலி, “அம்மா வரேன்டா” என்க, அத்தனை நேர கட்டுப்பாட்டை உடைத்து அன்னையை கட்டிப் பிடித்து அழுதுவிட்டாள்.
சாயின் தந்தை மாறன் கண்ணீரோடு மகளைப் பார்த்தபடி நிற்க, அவரிடம் வந்த வருண், “மாமா.. நான் பார்த்துக்குறேன்” என்றான். கண்ணீரோடு அவன் கைகளை பற்றிக் கொண்டு அழுதே விட்டார் அந்த பெரியவர். “விளையாட்டு பிள்ளை மாப்பிள்ளை. பா..பார்த்துக்கோங்க” என்று கூற, “நான் இருக்கேன் மாமா அவளுக்கு” என்றான்.
பெற்றோர் இருவரையும் வழியனுப்பியவள் கண்களை துடைத்தபடியே நிற்க, அவள் முன் வந்த திவா, “அண்ணி.. உங்க கொழுந்தன் இளகிய மனசு கொண்டவன், அழாதீங்க” என்று சிரிப்போடு கூறினான். அதில் ராம் மற்றும் வருண் முகத்தில் புன்னகை படர, கண்ணீரை கட்டுப்படுத்தி புன்னகைக்க முயன்றாள். அவள் கண்ணீரை துடைத்தவன், “வாங்க அண்ணி” என்க, அவன் தலையை கோதியவள் உள்ளே வந்தாள்.
இரவு உணவுவேலை அமைதியாக முடிந்திட, யாவரும் உறங்கச் சென்றனர். இதே வருணுக்கு தாயென்று ஒருவர் இருந்திருந்தால் மருமகளுக்கு நாலு அறிவுரைக் கூறி பால் செம்பை கொடுத்து அனுப்பி வைத்திருப்பார். ஆனால் அப்படியொரு ஜீவன் இல்லாது போனதால் மனைவி அப்படியான எந்த ஏற்பாடுகளோடும் வர இயலாது என்றே ஆடவன் எண்ணினான்.
ஆனால் அவனது எண்ணங்களைப் பொய்யாக்கும் வண்ணம் கையில் பால் செம்புடன் உள்ளே வந்தவள் அவனைப் புன்னகையுடன் பார்த்துவிட்டு கதவை தாளிட, அவளை ஒருவித அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் கலந்து பார்த்தான். அவனை புரியாமல் பார்த்தவள், “எனக்கு நைட் பால் குடிக்கும் பழக்கம் இல்லை. ஆனா படத்துலலாம் ஃபர்ஸ்ட் நைட் ரூமுக்குள்ள பால் செம்போட போவாங்கள்ல.. அதான்” என்றாள்.
அதில் சிரித்துக் கொண்டவன், அதை வாங்கி அருந்திவிட்டு, “ம்ம்.. பாதாம் பருப்பு போட்டு கொண்டுவந்திருக்கலாம்” என்று கூற, “ஏன் பாயாசமே வச்சு கொண்டு வரேனே” என்றாள். “ம்ம்.. இன்னும் நல்லா இருந்திருக்கும். ஸ்வீட் எடு கொண்டாடு போல இருந்திருக்கும்” என்று நமட்டு சிரிப்போடு கூறினான். “பாருடா.. நாலு செவுத்துக்குள்ளனு வந்ததும் குசும்பு ஜாஸ்தியா தான் தெரியுது” என்று அவள் கூற, அதில் அழகாய் வெட்கம் கொண்டவன், “வாயாடி” என்றான்.
“என்ன செய்ய என் புருஷன் கம்மியா பேசுறாரு. அதான் அவருக்கும் சேர்த்து நான் பேசுறேன்” என்று அவள் கூற, “உன் புருஷனுக்கு பேச்சு கம்மி. செயல் தான் அதிகம்” என்றபடி அவளை தன் கைச்சிறையில் எடுத்தான். அவள் வாயாடி தான்.. ஆனால் அவளும் பெண்ணல்லவே! லேசான படபடப்பும் தயக்கமும் அவளிடமுமே இருக்கத்தானே செய்யும். அது அவள் கண்களில் எட்டிப்பார்த்தப் போதும் இதழில் புன்னகைக்கு பஞ்சமில்லை.
“பா..பாருடா.. குசும்பு மட்டும்னு நினைச்சேன். தைரியம் கூட அதிகம் தான் போல?” என்று அவள் தடுமாற்றத்தை மறைத்தபடி அவனை வம்பிழுக்க, “என் பொண்டாட்டிய கட்டிபிடிக்க எனக்கு எதுக்கு தைரியம் தேவை?” என்றான். “எதுக்கா? இருக்கனும்.. இந்த சாய் மேல விரல் படவும் தைரியம் இருக்கனும்” என்று அவள் கூற, “அது ஆசைக்கு தொடுறவங்களுக்கு தான் வேணும். ஆளவும் வாழவும் தொடுபவனுக்கு இல்லை” என்றான்.
அதில் சிரித்துக் கொண்டவள், “பரவாயில்லை நாலு வார்த்தை பேசினாலும் நச்சுனு தான் பேசுறீங்க” என்று கூற, அதில் சிரித்தபடி அவள் நெற்றி முட்டியவன் “வா” என்றான். விளக்குகளை அணைத்தவன் கட்டிலில் அமர, லேசான படபடப்பு தற்போது அதிகமான உணர்வு.
தானும் அருகில் அமர்ந்தவள் கரத்தினை பிடித்துக் கொண்டவன் “தேங்ஸ்” என்க, அவனைப் புரியாமல் பார்த்தாள். “இல்ல.. அம்மா இருந்திருந்தா உனக்கு இந்த வீட்ல இன்னும் ஒரு நல்ல கம்போர்ட் இருந்திருக்கும்ல?” என்று அவன் கூற, “ஏன் அப்படி சொல்றீங்க?” என்று வினவினாள்.
“ஒரு பொண்ணுக்கு அப்பா எவ்வளவு பாசமா இருந்தாலும் சிலதை அம்மாகிட்ட தானே பேசமுடியும்? அதுபோல தானே இதுவும்? பல வருடமா பெண் வாசமே காணாத வீடு இது. இங்க உனக்கு மாமியார்னு ஒருத்தங்க இருந்திருந்தா இன்னும் சௌகரியமா இருந்திருக்கும்ல?” என்று அவன் வினவ,
“இதை ஒரு டாக்டரா நீங்க கேட்பது ஆச்சரியமா இருக்குங்க எனக்கு. எல்லா பெண்ணுக்குள்ளயும் ஆண்மை குணங்கள் சிலவை இருக்கும், எல்லா ஆண்களுக்குள்ளயும் பெண்மை குணங்கள் சில இருக்கும். அதுல ஒன்னு தான் தாய்மை. தாய்மை பெண்ணுக்கு மட்டுமே இருப்பதில்லை. பெத்த மக அழும்போது அள்ளியணைக்கும் அப்பாவின் கண்ணுல வர்ற அந்த ஒரு சொட்டு கண்ணீர்ல இருக்குறது தான் அந்த தாய்மை”
“இதோ இப்ப கொஞ்ச நேரம் முன்ன நான் அழுதப்போ தம்பி வந்து என் கண்ணீரை துடைச்சுவிட்டானே? அதுல இருப்பதும் தாய்மை தான். அந்த உணர்வை வந்த இந்த முதல் நாளே எனக்கு அவன் கொடுத்துட்டான். பெண் வாசம் காணாத வீடுதான். ஆனா தாய்மையுணர்வு இல்லாத வீடில்லை இது. உங்க அப்பாவை என் அப்பாவா பார்ப்பேனானு தெரியலை. ஏன்னா ஆயிரம் பேர் என் அப்பா ஸ்தானத்தில் நின்றாலும் எனக்கு என் அப்பா தான் உசத்தி. ஆனா என் மாமனாரை அவர் மருமகளா நல்லாவே பார்த்துப்பேன். அதேபோல மருமகளா ஒரு மாமனாரிடம் உள்ள உரிமையும் அன்பும் போதும் அவர்கிட்ட எனக்கான சௌகரியத்தை நான் உணர. இது மாமியார்னு ஒருத்தங்க இருந்து தான் எனக்கு கிடைக்கனும்னு இல்லை” என்று நீளமாக பேசினாள்.
அதில் அவளை ஆச்சரியமாக பார்த்தவன், “நிஜமாவே நீ புதிரான பெண்தான்மா. இவ்வளவு சீரியஸா கூட உனக்கு பேசத் தெரியுமா?” என்று வினவ, வாய்விட்டு சிரித்தாள், “வெளியிடத்துல வெட்கபட்டு பேசாத நீங்க இதோ இந்த நாலு சுவத்துக்குள்ள என்கிட்ட வம்பிழுக்குறீங்களே.. அதுபோல தான் இதுவும்” என்றாள்.
சிரித்தபடி அவள் மடியில் சாய்ந்தவன், “நான் பொறுமையானவன் தான். ஆனா சண்டை போடவே மாட்டேனானு தெரியலை” என்று கூற, “நான் கண்டிப்பா போட வைப்பேன். சேர்ந்து சரி செய்துக்கலாம்” என்றாள்.
“எனக்கு லவ் பண்ணியெல்லாம் பழக்கமில்லை. அதனால கொஞ்சம் இந்த சப்ஜெக்ட்ல வீக் தான்” என்று அவன் கூற, “பரவாயில்லை நானுமே அதுல மக்கு தான் சேர்ந்தே கத்துக்கலாம்” என்றாள்.
சிலநிமிடம் மௌனம் நிலவ, “எனக்கு சமையல் கொஞ்சம் ஏனோ தானோனு தான் வரும்” என்று அவள் கூறியதும், ஆடவன் “பரவாயில்லை எனக்கு தெரியும். சேர்ந்தே சமைச்சுக்லாம்” என்றான்.
“வாய் ஜாஸ்தி. கொஞ்சம் ஏட்டிக்கு போட்டி பேசுவேன்” என்று அவள் கூறவே, “பரவாயில்லை சேர்ந்தே சமாளிச்சுக்கலாம்” என்றான்.
‘சேர்ந்து செய்யலாம்’ என்று இருவரும் தங்களுக்குள் காதல் ஒப்பந்தங்களைப் பகிர்ந்துக் கொள்ள, அவள் மடியிலிருந்து நகர்ந்து தலையணையில் சிரம் சாய்த்தவன், “குட் நைட்” என்றான்.
“அட.. ஏதோ செயல் புயல்னு சொல்லிட்டு இப்ப குட் நைட் சொல்லிட்டீங்க?” என்று அவள் வம்பிழுத்தாலும் மனதளவு இன்னும் அவள் தயாராகாதது தான் உண்மையே! “அப்ப உனக்கு ஓகேவா?” என்று கிசுகிசுப்பாக ஆடவன் வினவ, “ம்ம்.. கதைல பூ மழை தேன்னு இனிக்க இனிக்க வர்ணிச்சிருப்பாங்க.. நீங்க என்னடானா குட் நைட் சொல்றீங்க.. வரலாறு உங்களை தப்பா பேசப்போகுது மிஸ்டர் வருண் கிருஷ்ணா” என்றாள்.
அதில் சிரித்துக் கொண்டவன், “எப்படி வேணா பேசட்டுமே. எனக்கு இப்போ வேணாம்” என்று கூற, சற்றே வியப்பாகத்தான் அவனைப் பார்த்தாள். பெண்கள் தயங்கி நாட்களைத் தள்ளிப்போடுவது அவள் கேள்விபட்டதுண்டு. இங்கு ஓர் ஆடவன் வேண்டாம் என்பது சற்றே வியப்பாகத்தான் இருந்தது அவளுக்கு.
“என்ன முழிக்குற? கல்யாணம் அன்னிக்கே உறவு துவங்கிடனும் என்பது பிசிகல் ரிலேஷன்ஷிப் வச்சு மட்டுமே இல்லை. அதைவிட முக்கியமா மென்டலி கனெக்ட் ஆகனும். முதலில் அதுக்கு நம்ம தயாராகுவோம். பிறகு இதுக்கு தயாராகலாம். சேர்ந்தே!” என்று அவன் கூறவும் உடல் சிலிர்த்து தான் போனாள். சிரித்தபடி அவள் தலைகோதியவன், “குட் நைட்” என்று கூற, “பிளஸன்ட் நைட்” என்றபடி அவன் மார்பில் தலைசாய்த்து உறங்கினாள்.
-வரைவோம் 💞