Loading

“அப்போ நான் உன் பக்கத்துலயே இல்லைடா. எனக்கு ஒரு ஃபோன் வந்ததுனு எழுந்து போனேன். பேசிட்டு இருக்கும்போதே மீனா சித்தி உன்கிட்ட வந்ததைப் பார்த்தேன். அவங்க கொஞ்சம் ஏடாகுடமான ஆள் வேற அதனாலயே ஃபோன கட் பண்ணிட்டு உன்கிட்ட வரலாம்னு தான் இருந்தேன். அவங்க ஏதோ பேசவும் உன் முகம் லேசா மாறிச்சு. அதுவச்சே அவங்க ஏதோ உன்ன கஷ்டபடுத்துற போல தான் பேசுறாங்கனு புரிஞ்சது. நான் பக்கத்துல வந்திருந்தா அவங்க பேச்சை நிறுத்திருப்பாங்க தான். ஆனா நான் அப்படி செஞ்சா நீ தனியா பிடிபடும் இன்னொரு நேரம் பேசுவாங்க”

 

” அதான் அவங்க என்ன பேசுறாங்கனு பாப்போமேனு பார்த்தேன். கூட்டத்துல அவங்க பேசின ஏதும் கேட்காததால என்கிட்ட இருந்த உன்னோட ஃபோனுக்கு என்னோடதுலருந்து கால் போட்டு அந்தவழியா போன குட்டிபையன் கிட்ட கொடுத்து உன் பக்கத்துல வைச்சுட்டு போக சொன்னேன். அப்போ தான் வித்யா அத்தை பேசினதை அவங்க சொன்னாங்க. மேலும் மேலும் அவங்க பேச பேச கோவமா வந்தது. இதுக்கு மேல முடியாதுனு ஃபோன ஆஃப் பண்ணிட்டு நான் வரவும் அவங்க உன்கிட்ட பேச்சை முடிச்சுட்டு போயிட்டாங்க”

 

“அப்பதான் நான் மறுபடி உன் பக்கத்துல வந்து உக்கார்ந்தேன். நிஜமாவே நான் எழுந்து போனதையும் திரும்ப வந்து உக்கார்ந்ததையும் நீ கவனிக்கலைனு எனக்கு தெரியாது. அம்மாவையும் ரூபியவும் கூப்பிட உள்ள போனப்போ அவங்க கிட்டப்போய் பேசினேன்” என்று அவன் நீலமாகப் பேச, அவள் விழிகள் மேலும் விரிந்தது.

 

அன்று அன்னையை அழைக்கச் சென்றவன், மீனாவைப் பார்த்து சற்றே கண்டிப்பான முகத்துடன் அவரிடம் வந்து, “சித்தி உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்” என்றான். ‘அட அவன் பொண்டாட்டி சொல்லிட்டா போலவே. ஆனா அவன் வந்து உக்காந்த பிறகும் அவ இவன் பக்கமே திரும்பலையே?’ என்று எண்ணியவர், “சொல்லு ருத்ரா” என்றார்.

 

சற்றே ஓரமாக அழைத்துச் சென்றவன், “நீங்க அஞ்சுகிட்ட பேசினதைக் கேட்டுட்டு தான் இருந்தேன்” என்றுவிட்டு அவரது அதிர்ந்த முகத்தைப் பார்த்துவிட்டு தொடர்ந்தான். “உலகத்துலயே நடக்காத ஒன்னும் என் பொண்டாட்டிக்கு நடக்கலை. ஏற்கனவே குழந்தைய இழந்து நொந்து இருந்தவள இப்பதான் தேத்தி கொண்டு வந்திருக்கேன். உங்களால ஆறுதல் சொல்ல முடியலைனாலும் பரவாயில்லை. அவமனச நோகடிக்காம இருங்க” என்று அவன் கூற, “இதென்னப்பா.. நான் ஒன்னும் உன் பொண்டாட்டிய குத்தம் சொல்லலையே. பார்த்து சூதானமா இருந்துக்கோனு தானே சொன்னேன். நீயே சொல்லு நாளை பின்ன ஏதாவதுனா அவளை தானே பேசுவாங்க?” என்றார்.

 

அவரை கோபத்தோடு அவன் பார்த்த அந்தப் பார்வையே இதுவரை அவர் கண்டிடாத ஒரு ருத்ரனை அறிமுகம் செய்தது. “உங்க அறிவுரை ஏதுமே வேணாம் சித்தி. முன்ன இருந்த ருத்ரன் ஒன்னுமே இல்லாத ருத்ரன். அவனுக்கு பேச அப்போ தைரியமும்  இல்லை தகுதியும் இல்லை. ஆனா இப்ப உள்ள ருத்ரன் அப்படி இல்லை. இன்னும் ஒருமுறை இப்படி ஏதாவது அவகிட்ட பேசிட்டு இருக்காதீங்க. அப்பயே வந்து பேசிருப்பேன். தேவையில்லாம பிரச்சினை வேணாம்னு தான் தனியா வந்து சொல்றேன்” என்றுவிட்டு சென்றான்.

 

அடுத்து ஆடவன் நேரே சென்றது வித்யாவிடம் தான். “ருத்ரா.. வாப்பா.. சாப்பிட்டியா?” என்றவரிடம் வந்தவன் “என் பொண்டாட்டி வந்தது உங்களுக்கு விருப்பம் இல்லைனா நேரா என்கிட்டயே சொல்லியிருக்கலாமே அத்தை. நானே அவளை மரியாதையா கூட்டிட்டு போயிருப்பேன். வேறு ஆள்கிட்ட பேசி அவங்க அவளை வந்து நோகடிச்சு. ஏன் அத்தை?” என்று ஆதங்கமாகக் கேட்டான்.

 

மீனாவிடம் கோபமாக பேசமுடிந்தவனுக்கு வித்யாவிடம் அப்படி பேச முடியவில்லை. காரணம் அவரது ஆதங்கம் ஒரு தாய்க்கே உரியதான ஆதங்கம். “நான் உங்களை குத்தம் சொல்ல மாட்டேன் அத்தை. ஒரு பொண்ணோட அம்மாவா விஜிய யாரும் ஏதும் சொல்லிடுவாங்களோனு நீங்க பயந்தது நான் ஏதும் தப்பா நினைக்கலை. ஆனா உங்க ஆதங்கத்தை வெளியே வேற யார்கிட்டயும் சொல்லி என் மனைவியோட மனசை ஏன் நோகடிக்கனும்? இதுக்கு நீங்க என்கிட்டயே வராதனு சொல்லிருக்கலாம் அத்தை” என்று அவன் கூறவும், “ஏன் ப்பா இப்படி சொல்ற?” என்றார்.

 

மீனா வந்து பேசியது பற்றி கூறியவன், “நடந்ததை நீங்க என்கிட்ட சொல்லிருந்தா நானே அவளை கூட்டிட்டு போயிருப்பேன். அவ என்னை நம்பி வந்தவ அத்தை. நாலு பேர் பேசவிட்டு நான் வேடிக்கை பார்த்தா இருக்குற வேதனைக்கு நொந்துடுவா” என்று வேதனையோடு கூற, “ப்பா ருத்ரா.. நா.. நான் மீனா அண்ணிகிட்ட பேசினது உண்மை தான். அ..ஆனா அவ சொன்னதுபோல அந்த பொண்ணு வந்ததுக்கு என் பொண்ணுக்கு ஏதாவது ஆகிடும்னுலாம் நான் நினைக்கலை. அப்படி நினைக்கவும் மாட்டேன் ப்பா. நானும் இருந்து இருந்து கொத்தமல்லி கொழுந்தா ஒத்த புள்ளைய பெத்தவ. பிள்ளைய இழக்குற வேதனை எனக்கும் தெரியும். அதனால அந்தமாதிரி நான் நினைக்கலை. ஏதோ ஒரு ஆதங்கத்துல அவங்க என்னாச்சுனு கேட்கவும் சொல்லிட்டேன். இப்படி பேசுவாங்கனு நான் நினைக்கவே இல்லைப்பா” என்றார்.

 

உண்மையிலேயே அவளை பிடிக்காது தான் அவருக்கு. அதற்காக அவள் நன்றாக வாழக்கூடாது என்றெல்லாம் அவர் நினைத்ததே கிடையாது. அதையே அவரும் கூற, “புரியுது அத்தை. இனிமே எதுனாலும் என்கிட்டயே சொல்லிடுங்க. அவகிட்ட கூட சொல்ல வேணாம். என்கிட்ட சொல்லுங்க” என்றவன், “நாங்க கிளம்புறோம் அத்தை. அம்மாவும் ரூபியும் இருப்பாங்க” என்றான்.

 

வேதனையோடு அவனைப் பார்த்தவர், “சாப்பிட்டியா ப்பா?” என்று வினவ, தனது இடது மார்பில் கைவைத்தவன் “நிறைஞ்சுடுச்சு அத்தை” என்று வேதனையான புன்னகையுடன் கூறிவிட்டுச் சென்றான். அத்தனையையும் ருத்ரன் கூறி முடிக்க, அஞ்சிலை அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றிருந்தாள்.

 

‘சொந்த குடும்பத்திலேயே தனக்காக அவன் சென்று பேசியிருக்கிறான். இதனால் உறவுகளுக்குள் மனஸ்தாபம் வந்துவிட்டால் என்று கூட யோசிக்கவில்லையே அவன்? ஆனால் தான்? இதுயாவும் தெரியாமல் மேலும் அவனை வருத்தி, மௌனப்போர் நடத்தி, பிறந்தவீடு வந்து என அவனை இப்படி பாடாய் படுத்திவிட்டோமே? ஒரு வார்த்தை பேசியிருந்தால் கூட இவ்வளவு தூரம் இது வந்திருக்காதே?’ என்ற எண்ணத்தில் அவள் கண்கள் மீண்டும் உயிர்பெற்று கண்ணீரைப் பொழிய, அவளை நெருங்கி வந்து அமர்ந்து “அழாதமா” என்றான்.

 

அதில் தன் கரங்களில் முகத்தை புதைத்துக் கொண்டவள், “நா..நான்..” என்று தடுமாற, “நான் உன்னை நல்லா பார்த்துக்கும் கணவன் என்பதைத் தாண்டி கோப தாபங்கள் அடங்கிய ஒரு சாதாரண மனுஷன்டா. காரணமே இல்லாம என்மேல கோபமா இருக்கியேனு எனக்குள் ஒரு எரிச்சல். அந்த எரிச்சலில் தலைதூக்கிய கோபம் இந்த ரெண்டு நாளா என்னை உன்கிட்ட பேசவைக்கலை. நான் இன்னிக்கு ஃபோன் போட்டு நீ எடுக்கலை. இது மேலும் தொடர வேணாம்னு தான் வந்துட்டேன். நானும் பேசியிருக்கலாம். நான் உன்பக்கத்துலயே உக்கார்ந்து அமைதியா இருந்ததா நினைச்சதால தானே உனக்கு கோபமும் வருத்தமும்” என்றான். அவன் கூறியதும் அவள் அலைப்பேசியைப் பார்க்க அது அவன் இரண்டாவது அலைப்பு விடும் முன்பே தன் உயிர்ப்பை விட்டிருந்தது.

 

குற்ற உணர்வில் கூனிக் குறுகியவள், “ஆ.. நான் ரொம்ப மோசம்.. உ..உங்களை உங்களை புரிஞ்சுக்கவே இல்லை. நானா ஏதேதோ நினைச்சுகிட்டு உங்களை போட்டு வருத்தி எடுத்துட்டேன். ஆனா நீங்க..? சா..சாரிங்க. நா..நான்” என்று திக்கி திக்கி பேசியபடி விக்கி விக்கி அழ, அவளை அணைத்துக் கொண்டவன், “டேய்..ம்மா.. அழாதடா” என்றான்.

 

ஏங்கி ஏங்கி அழுவதில் வயிறு வெட்டி வெட்டி இழுத்தபோதும் அவள் அழுகை நின்ற பாடில்லை. ஒருகட்டம் மேல் பொறுக்க முடியாதவன், “அஞ்சிலை..” என்று அழுத்தமும் கண்டிப்புமாக அழைக்க, அதிர்வோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள். கண்டிப்பும் கருணையும் ஒருசேர உணர இயலுமா? அவன் பார்வையில் அவள் உணர்ந்தாள்!

 

“போதும்.. நிறுத்து அழுகைய. ஏற்கனவே உடம்ப அழுது அழுது கெடுத்து வச்சுருக்க” என்று அதட்ட, “சத்தியமா நீங்க எழுந்து போனது எனக்கு தெரியவே தெரியாது. கொஞ்சம் நேரம் முன்ன அம்மா வந்து ஏ..ஏன் இப்படி இருக்கனு கேட்டாங்க.. எ.. எதுவும் சொல்ல தோனலை. பேசி முடியாத பிரச்சினை இல்லைனு அவங்க சொன்ன பிறகு தான் எனக்குமே தோனுச்சு.. அ..அழுகையா வந்துடுச்சு.. உ..உங்க போன் கூட கவனிக்கலை.. அ..அப்படியே தூங்கிட்டேன்.. நான் நிஜமாவே எதையுமே யோசிக்கவே இல்லைங்க. நீங்க வரமுடியாதுனா விடுனு தான் சொன்னீங்க. நான் தான் வரேன்னு சொன்னது. அப்ப யார் என்ன சொன்னாலும் கடந்து போற பக்குவத்தோடதான் நான் வந்திருக்கனும். ஆ..ஆனா நீங்க முடியலைனா விடுனு சொல்லவும் எனக்கு வரலைனு சொல்ல.. த.. தயக்கமா இருந்தது. த..தப்பெல்லாம் என்மேல வச்சுகிட்டு அவங்க பேச்சுல எழுந்த கோபத்துலயும் வருத்தத்துலயும் கொஞ்சம் கூட சிந்திக்காம விட்டுட்டேன்” என்றாள்.

 

“ம்ம்.. நிஜம் தான். கோபமும் வருத்தமும் உன்னை செயலிழக்க வச்சுடுச்சு. தப்பு செய்வதுகூட நாம அதை திருத்திக்க தான்டா. இப்ப நமக்குள்ள நடந்த இந்த ஊடல் நம்மலை பற்றிய புதிய புரிதல்களையும் தவறுகளையும் நமக்கு காட்டிக்கொடுத்ததா நினைச்சுப்போம். தப்பு பண்றது மனித இயல்புடா. சத்தியமா சொல்றேன் இப்ப இப்படி பேசுற நான் நேத்து உன்மேல கோவத்துல தான் இருந்தேன். கொஞ்சம் அதைவிட்டு வெளிய வந்து சிந்திச்சப்போ சரி நீயும் ஏதோ கஷ்டத்துல இப்படி நடந்துகிட்டனு விட்டுட்டேன். ஒருத்தர் கோபமா இருந்தா இன்னொருத்தர் விட்டுத்தரது தான்டா வாழ்க்கை. ரெண்டுபேரும் கோபத்தை இழுத்து பிடிச்சா சின்ன சின்ன விஷயம் கூட பூதாகரமா தான் தெரியும்” என்றபடி அவள் ஈர கன்னங்களை துடைத்து விட்டான்.

 

அவன் கரத்தை தடுத்து பிடித்தவள் அவன் சட்டையில் தன் முகத்தை முட்டி அழுந்த துடைத்துக் கொள்ள, லேசான சிரிப்போடு அவள் முகம் நிமிர்த்தினான்‌. அவன் கண்களை ஆழ்ந்து பார்த்தவள், “சாரி” என்க, “ப்ச்” என்று கோபம் கொள்ள வந்தவன் இதழை வன்மையோடு கலந்த மென்மையாக பூட்டினாள்.

 

நான்கு நாள் ஊடலுக்கு பிறகான அந்த இதழணைப்பு இருவருக்குமே தேவையானதாகவே இருந்தது. அமைதியான சூழலில் மனையாளின் முத்தம் தாங்கிய ஆடவன், அவளை ஆரத்தழுவிய கரங்களோடு அணைத்துக் கொண்டான். அவளது தொடக்கத்தை தான் முடித்து வைத்தவன், “போய் முகம் கழுவிட்டு வாடா. நம்ம வீட்டுக்கு போகலாம்” என்றான்.

 

அவன் பேச்சுக்கு மறுபேச்சின்று சென்று முகம் கழுவி வந்தவள், முகத்தை அழுந்த துடைத்துக் கொள்ள, “பாரு முகம் எப்படி வீங்கி இருக்குனு. கீழ போன உங்கப்பா என்னமோ நான் உன்னை அடிச்சு கொடுமைபடுத்தினதா நினைக்கப்போறாங்க” என்றான். சன்னமான சிரிப்புடன், ” நான் சண்டை போட்டுதான் வந்தேன்னு யாருக்கும் தெரியாது. உடம்பு முடியலைனு வந்ததா தான் சொன்னேன். அம்மா டவுட் பட்டு வந்து கேட்டாங்க. நான் ஏதும் பிரச்சனை இல்லைனு தான் சொன்னேன். ஆனா கண்டுபுடிச்சுட்டாங்க போல. அதுவும் தப்பு என்மேல தான் இருக்குனு சரியா புரிஞ்சு வச்சிருந்து ஒரே வார்த்தையில் அட்வைஸ் பண்ணிட்டு போயிட்டாங்க” என்று நடந்தவற்றை கூறினாள்.

 

அதில் சிரித்துக் கொண்டவன், “பாவம் என் மச்சான்.. அவன் அக்காவுக்கு என்னவோனு பயந்துட்டான்” என்று கூற, தானும் சிரித்துக் கொண்டவள் அவனுடன் கீழே வந்தாள். புன்னகையுடன் வந்த மகள் முகமே காயத்திரிக்கு ஆத்ம திருப்தியை கொடுக்க, மகள் புன்னகையின் பிடிமானம் மருமகன் ஒருவனே என்று எண்ணிக் கொண்டு புன்னகைத்தார்.

 

“ப்பா‌! மாமா.. இந்த மூனு நாள்ல எங்கக்கா மூஞ்சில இன்னிக்கு தான் சிரிப்பையே பாக்குறேன்” என்று அர்ஜுன் கூற, “நான் வந்துட்டேன்ல அதான்” என்று காலரை தூக்கிவிட்டபடி ருத்ரன் கூறினான். அதில் நாணம் கொண்டு அவன் தோளிடித்தவள், ‘சும்மா இருங்க’ என்று இதழசைக்க, “இருக்கட்டும் இருக்கட்டும்” என்று அர்ஜுன் கேலி செய்தான்.

 

சில நிமிடங்களில் இரவு உணவை முடித்துக் கொண்ட இருவரும் புறப்பட, அவளிடம் பேசி தீர்க்க அவனுக்கு ஏகத்துக்கும் செய்திகள் இருந்தபோதும் தற்போதைய அவளது உடல் நலன் கருதி அமைதியாகினான். புன்னகையுடன் உள்ளே வந்த மருமகளைப் பார்த்த மகா, “அஞ்சுமா‌.. இப்ப எப்படிடா இருக்க? நேத்தே வருவனு நினைச்சேன்” என்று கூற, “நல்லா இருக்கேன் அத்தை. இப்ப பரவாயில்லை” என்று உடல் நலம் முன்பை விட மோசமாகத் தான் போன போதும் பெயருக்குக் கூறிக் கொண்டாள்.

 

விஜியின் மூலம் விடயம் அறிந்துகொண்ட ரூபி, அன்னை உள்ளே சென்றதும் அன்னியின் கரங்களைப் பற்றிக் கொண்டு, “இப்ப ஓகேவா அண்ணி?” என்று வருத்தமாக வினவினாள். அவளை குழப்பம் கலந்த பார்வையேடு பார்த்த அஞ்சு அவள் கண்களில் கெஞ்சல் கலந்த சோகம் இருப்பதை உணர, சன்னமான சிரிப்போடு, “ஓகேடா” என்றாள்.

 

அண்ணியை அணைத்துக் கொண்டவள், “நாங்க இருக்கோம் அண்ணி.. டோன்ட் வரி” என முனுமுனக்க, ஏனோ அஞ்சுவுக்கு அது அத்தனை ஆறுதலாக இருந்தது. புன்னகையுடன் தட்டிக் கொடுத்தவள், “ஓகேடா” என்க இவர்களை மென்மையான புன்னகையுடன் பார்த்தான் ருத்ரன்.

-வரைவோம் 💞

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்