Loading

தனதறை கட்டிலில் விட்டத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் அஞ்சிலை. வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டிருந்தது. இன்னும் தாய்வீடு விட்டுத் திரும்ப அவளுக்கு மனமில்லை. இந்த இரண்டு நாட்களாக உடல் நலத்தினைக் காரணம் காட்டி வேலைக்கும் செல்லவில்லை அவள்.

 

சாய் தான் ஒருநாளைக்கு மூன்று முறையும் அவளை வந்து பார்த்துவிட்டுப் போனாள். தோழி எதையோ மறைப்பது புரிந்து, பேச்சு கொடுத்தவளுக்கு ஏதும் பிடிபடவில்லை. ஏன் வருணைக் கூட ஒருமுறை கூட்டி வந்திருந்தாள். ஆனால் அப்போதும் அவளிடம் எந்தவொரு மாற்றமும் இல்லை. 

 

இந்த இரண்டு நாட்கள் ருத்ரன் அவளைப் பார்க்கவும் வரவில்லை அலைப்பேசி அழைப்பும் விடுக்கவில்லை. ஆக மொத்தம் சிறைவாசம் போன்ற கொடூரத்தின் உச்சத்தில் நின்றுக் கொண்டு இந்த இரண்டு நாட்களையும் ஊர்ந்து ஊர்ந்து கடந்திருந்தாள் பாவை.

 

மகளுக்காக பழச்சாறு எடுத்துக் கொண்டு உள்ளே வந்த காயு, “அஞ்சு” என்க, சட்டென நினைவு மீண்டவள் அன்னையை ஒரு வெற்றுப் பார்வைப் பார்த்தாள். அதில் தாயுள்ளம் படபடத்து துடிக்க, இரண்டு நாட்களாக கணவன் தன்னிடம் புலம்புவது தான் மகனிடம் புலம்புவதுமாக இருந்த பொழுதுகள் கண்முன் வந்து போனது.

 

“இந்தாடா” என்று அவர் கொடுத்த பழச்சாற்றைப் பார்த்து, “வேணாம்மா” என்று அவள் கூற, “மதியமும் ஒன்னும் சாப்பிடலை. இதையாவது குடி” என்ற அதட்டலோடு அதைக் கொடுத்து முழுதாக பருகச் செய்தார்.

 

மகளின் தலையை பரிவாகக் கோதியவர், “அஞ்சுமா.. அம்மாகிட்ட சொல்லமாட்டியாடா? என்னாச்சுடா? எதும் பிரச்சினையா?” என்று வினவ, பாவை கண்கள் கலங்கியது. அதைக் கண்டு மேலும் பதறியவர், “அஞ்சு..என்னாச்சுடா?” என்று பதற, அன்னை மடியில் முகம் புதைத்தவள் அழத்துவங்கி விட்டாள்.

 

எதற்காக அழுகின்றாள் என்று புரியாத போதும் மகளின் கண்ணீரில் தாயவள் கண்களும் கலங்கி விட்டது. அவள் முதுகை தடவியபடி, “ஏன்டா? என்னாச்சு?” என்று அவர் வினவ, “ம்மா.. ஏம்மா பாப்பா போச்சு? எ..எனக்கு ஏன் அம்மா இப்படி? எ.. என்னை வி..விட்டு..எ.. ஏம்மா?” என்று விக்கி விக்கி அழுதாள்.

 

அதில் முற்றுமாக உடைந்து போனவர், “டேய்.. முடிஞ்சதைப் பற்றி ஏன்டா இப்ப? எதுக்கு திடீர்னு இப்ப இதை பேசுற?” என்று வினவ, “மறக்க முடியலையே ம்மா..” என்றாள். அவரும் ஒரு தாய் தானே? ஒரு தாயாக மகவை இழந்த மகள் படும் பாடு கண்டு மேலும் கலக்கியவர், “டேய்.. அது முடிஞ்சு போச்சு. ஏதோ போதாத காலம் இப்படி ஆச்சு. இன்னும் ஏன் அதையே யோசிக்குற? இத்தனை மாசம் கடந்துடுச்சு. இன்னுமா அதுலயே உலண்டுகிட்டு இருப்ப?” என்று வினவ, ‘ஆரின காயத்தை நீவிவிட்டு வேடிக்கைப் பார்க்குறாங்களே அம்மா’ என்று மனதோடு நினைத்துக் கொண்டு அழுதாள்.

 

காயு என்ன நினைத்தாரோ, “மாப்பிள்ளை கூட ஏதும் சண்டையாமா?” என்று வினவ, ஒரு நொடி ஸ்தம்பித்துப் போனவள் தன் அன்னையை நிமிர்ந்து பார்த்தாள். அவள் தலை தன்னை போல் ‘இல்லை’ என்று ஆடி, அவள் அன்னைக்கு மறைமுகமாக ‘ஆம்’ என்ற பதிலைக் கொடுத்திருந்தது.

ஆனால் மகள் அதை கூற விழையவில்லை என்பதையும் புரிந்துகொண்டவர், ‘உன் புருஷன பெத்த அம்மாகிட்டயே விட்டுக்கொடுக்க மனமில்லாத அளவு அன்பை வச்சுகிட்டு ஏதோ நீயா கற்பனை பண்ணிகிட்டு அவர் கூட பேசாம இருக்க. இதை நான் புரியவைச்சா நல்லா இருக்காது. நீயே புரிஞ்சுக்கோ’ என்று எண்ணினார்.

 

மகளின் தலைகோதி, “இங்க பேசினா தீராத பிரச்சினையே இல்லைடா. ஆனா யாரும் பேசதான் விரும்புறது இல்லை. புரியும்னு நினைக்குறேன்” என்றுவிட்டு அதிர்ந்து விழிக்கும் மகளின் கண்களைப் பார்த்தபடி கன்னம் தட்டிவிட்டுச் சென்றார். 

 

சில நிமிடங்கள் அப்படியே அதிர்ந்தபடி அமர்ந்திருந்தவள் அலைப்பேசி அதிர்ந்து தன் இருப்பைக் காட்ட, அழைப்பேசியை எடுக்க எத்தனித்தாள். ஆனால் அதற்குள் அழைப்பு முடிந்திருக்க, அலைப்பேசியை எடுக்க மனமின்றி கட்டிலில் விழுந்தவள், ‘நா..நான் அவர்கிட்ட பேசியிருக்கலாமோ?’ என்ற எண்ணத்தில் யோசிக்க மேலும் கண்ணீர் தான் வந்தது. 

 

அழுது அழுது சோர்ந்து போனவளை உறக்கம் வந்து கவ்விக் கொள்ள, அங்கு வருண் வீட்டு மொட்டை மாடியில் நின்றுகொண்டிருந்தான் ருத்ரன். நண்பனுக்கு தேநீரோடு வந்த வருண், “என்ன மச்சி.. உன் பொண்டாட்டிகிட்ட பேசினியா?” என்று வினவ, “எடுக்கலைடா” என்றான். “திரும்ப கூப்டியா?” என்று வருண் வினவ, “மூனு தடவை கூப்டுட்டேன்” என்று கூறினான்.

 

“ஹ்ம்.. ரெண்டு நாளா வேலைக்கு வரலைனு சாய் புலம்பிகிட்டே இருந்தா. சரி ஏதோ உடம்பு முடியலை போலனு பார்த்தா துறை வந்து சண்டைனு சொல்றீங்க” என்று வருண் கூற, “டேய் நீ வேற போடா.. சண்டைனு எனக்கே அவ அம்மா வீட்டுக்கு போன பிறகுதான் புரிஞ்சுது” என்றவன் அதோடு அமைதியாகி விட்டான்‌. “பொண்ணுங்க சைக்காலஜி கொஞ்சம் கஷ்டம் தான் போலயே” என்று வருண் கூற, புன்னகையுடன் அவன் தோளில் கை போட்ட ருத்ரன் “என்ன மச்சி கல்யாணம் பண்றதுக்கு முன்னயே இப்படி பயப்படுற” என்று கேலி செய்தான்.

 

“பயம்னு இல்ல… ஆனா லைட்டா பயம் தான்” என்று வருண் கூறவும் வாய்விட்டு சிரித்தவன், “சீ(see) இது எங்களோட முதல் சண்டைடா. இன்னும் சொல்லப்போனா நாங்க உக்கார்ந்து பேசிருந்தா இதுவும் இருந்திருக்காது. வேலைய காரணம் காட்டி நானும் அவகிட்ட உக்கார்ந்து பேசலை, உடல் நலன்கள் செய்த சதியால அவளும் என்கூட உக்கார்ந்து பேசலை. பேசினா முடியாத பிரச்சினையே இல்லைடா மச்சி. என்ன இங்க யாரும் பேசதான் மாட்டேங்குறோம்” என்று தன் மீது தவறே இல்லாதபோதும் மனைவியை விட்டுக்கொடுக்காமல் இரண்டு பக்கமும் தப்புள்ளது போல பேசினான் ருத்ரன்.

 

“மனைவியா வரப்போறவ நம்மகிட்ட எதிர்ப்பார்க்குறது எந்த இடத்திலும் நாம அவங்களை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதுதான். அதை நாம செஞ்சாளே போதும்” என்று ருத்ரன் கூற, “இப்ப நீ விட்டுக்கொடுக்காம பேசின மாதிரி தானே?” என்று ‘உன்னை நான் கண்டுகொண்டேன்’ என்பதை வருண் சுட்டிக்காட்டினான்.

 

அதில் சிரித்துக் கொண்ட நண்பன் அவன் முதுகிலேயே ஒன்று போட, அங்கு வந்த வருணின் தம்பி திவாகர் கிருஷ்ணா, “அண்ணா அப்பா கூப்பிடுறாங்க” என்றான். “ஹாய் திவா ஸ்டடீஸ் எப்படி போகுது?” என்று ருத்ரன் கேட்க, “அய்யோ அண்ணா.. அதை பத்திலாம் கேக்காதீங்க” என்றான்.

 

அதில் வாய்விட்டு ருத்ரன் சிரிக்கவே, “நீ தானேடா இன்ஜினியரிங் தான் படிப்பேன்னு போன? இப்ப யார் கேட்டாலும் இதைதான் சொல்ற” என்று வருண் கூறவும், “நான் இன்ஜினியரிங் தான் போவேன்னு சொல்லலைனா நீ என்னை மெடிக்கல் பக்கம் இழுத்துருப்ப. ஆளவிடு சாமி” என்றுவிட்டு கீழே ஓடினான்.

 

அதில் மேலும் சிரித்த ருத்ரன், “சின்ன பையன மிரட்டி வச்சிருக்கடா” என்று கூற, “இல்லைனா என் மண்டைல மொளகா அரைச்சுடுவான்டா” என்றவன் ஒருபெருமூச்சைவிட்டு, “நான் டுவல்த் படிக்குறப்பவே அம்மா டெங்கு பீவர்ல இறந்துட்டாங்க. அப்போவே அப்பா ரொம்ப நொடிஞ்சு போயிட்டார்.‌ அந்த காலத்துலயே கட்டினா இவளைத்தான் கட்டுவேன்னு அம்மாவை கல்யாணம் பண்ணவர். அம்மா இல்லைனு ஏத்துக்க முடியலை. குடி சிகரெட் எதுவும் பழக்கம் இல்லாதவர் அன்ட் அம்மாக்கு புடிக்காது என்பதுக்காக நல்லவேலை அது எதையும் கையில் எடுக்கலை. ஆனா ரொம்ப நொந்து போயிட்டார். விதியேனு வேலைக்குப் போனவர் கொஞ்ச காலத்தில் எங்க இரண்டு பேருக்காகவாது வேலை செய்யனும்னு உணர்ந்து தேறி வந்தார். திவா அப்படியே அம்மா ஜாடை. அதனால அவனை பெருசா கண்டிக்கவே மாட்டார். அவன் தப்பா ஏதும் நடந்துக்க மாட்டான் என்றாலும் விளையாட்டுக் குணம் அதிகம். நான் டாக்டர் ஆனதுமே அப்பாவை வேலைய நிறுத்த வச்சுட்டேன். ரீசென்டா இரண்டு வருஷம் முன்ன மைனர் ஹார்ட் அட்டேக். ரொம்ப ஸ்டிரெஸ் அவர் எடுத்துக்க வேணாம்னு வீட்டு விஷயம் எதையும் அவர் கிட்ட கொண்டு போவதில்லை. தம்பி எதும் சேட்டை செஞ்சாலும் அவரை ஏதும் சொல்ல விடவும் மாட்டேன். அதே நேரம் கூட்டிட்டு வந்து நான் தனியா கண்டிப்பேன்” என்று கூறினான்.

 

‘வீட்டுக்கு வீடு வாசப்படி’ என்பது எத்தனை பொறுத்தமாக உள்ளது என்று எண்ணிய ருத்ரன் நண்பன் தோளில் கரம் போட்டு ஓர் அழுத்தத்தை கொடுக்க, நண்பன் முகம் பார்த்து புன்னகைத்தவன், “அப்பா கூப்பிட்டாங்கடா வா போவோம்” என்றான்.

 

கீழே வந்த மகனை முறைத்த ராமகிருஷ்ணன் “போடா டேய்.. நீயெல்லாம் கல்யாணம் பண்ண லாய்க்கே இல்லாதவன்” என்று கூற, “அதேதான் ப்பா” என்ற ருத்ரன் வாய்விட்டு சிரித்தான். தந்தையை புரியாமல் பார்த்த வருண், “என்னாச்சு ப்பா?” என்று வினவ, “சாய் வந்திருந்தா. குலாப் ஜாமுன் செஞ்சாளாம். எனக்கு ரொம்ப பிடிக்கும்னு கொண்டு வந்திருக்கா. நான் தனியாவாமா வந்த இரு வருண விட சொல்றேன்னு கூப்பிட்டு விட்டேன். கண்ணால உன்னை தேடினவ சரினு வெயிட் பண்ணா. பிறகு ஃபோன் வரவும் கோவில் போகனும்னு கிளம்பிட்டா. போடா” என்றார்.

 

அதில் ‘பே’ என விழித்தான், “டேய் நீ இன்னும் கிளம்பல?” என்று ருத்ரனைப் பார்த்து வினவ, “அடப்பாவி.. போடா போடா.. நானும் என் பொண்டாட்டிய பார்க்கத்தான் போறேன். உன்கூட வீனா டயம் வேஸ்ட் பண்ண மாட்டேன்” என்று ருத்ரன் கூறினான். “ஆல் தி பெஸ்ட் மச்சி.. நாளைக்கு எமர்ஜென்ஸினா சொல்லு.. ஆஸ்பிடல்ல தான் இருப்பேன்” என்று கத்தியவண்ணம் வண்டி சாவியை எடுத்துக் கொண்டு அவன் பறந்திட, அதில் சிரித்துக் கொண்ட ருத்ரன் ராமகிருஷ்ணனிடம் சொல்லிக் கொண்டு நேரே மனைவியைக் காணச் சென்றான்.

 

வீட்டை அடைந்த ருத்ரன் ஏதோ நேற்று காதல் செய்யத் துவங்கிய விடலைப் பையன் போல கண்டாடியில் தலை கோதிக் கொண்டு, உள்ளே செல்ல, அவனைக் கண்ட அர்ஜுன் “மாமா.. வாங்க” என்றான். அவன் தோள் தட்டிய ருத்ரன், “எப்படி இருக்கடா?” என்று வினவ, “நான் நல்லா தான் இருக்கேன். அக்கா தான் சரியில்லை. ரொம்ப டல்லாவே இருக்கா. அம்மாகிட்ட கேட்டப்போ உடம்பு முடியலைனு சொன்னாங்க. எதுவும் பிரச்சினை இல்லையே?” என்று பரிதவிப்போடு கேட்டான்.

 

“ஒன்னும் பிராப்ளம் இல்லைடா. உடம்பு முடியலை அவளுக்கு. நானும் ரெண்டு நாள் டைட் ஷெடியூல். அதான் இங்க வந்திருக்கா” என்ற ருத்ரன் “அத்தை மாமா இல்லையா?” என்று வினவ, சமையலறையிலிருந்து வந்த காயு, “வாங்க மாப்பிள்ளை” என்றார்.

 

“வணக்கம் அத்தை. நல்லா இருக்கீங்களா?” என்று பரஸ்பரம் நலம் விசாரித்தவன் வேலை முடித்து வந்த குணாவிடவும் பேசினான். அவனது சகஜமான பேச்சும், ‘தனக்கு வேலை இருப்பதால் தான் அவள் இங்கு வந்திருக்கின்றாள்’ என்று பதிவு செய்த செய்தியும் காயத்திரிக்கு இருவருக்கும் இடையே பூசல் ஏதும் இல்லை என்பதைப் போலவே உணர்த்தியது.

 

‘ஏதோ எல்லாம் சரியாகினால் நலமே’ என்று அவர் எண்ணிக் கொள்ள, “மேல ரூம்ல இருக்காளா அத்தை?” என்று ருத்ரன் வினவினான். “ஆமா மாப்பிள்ளை. ரூம்ல தான் இருக்கா” என்று அவர் கூறவும், “பார்த்துட்டு வரேன்” என்றவன் மேலே சென்றான். உள்ளே பூட்டப்படாத அவள் அறையை திறந்தவனுக்கு மின்விளக்கு இல்லாமல் இருட்டி இருந்த அறை மெத்தையில் அவள் படுத்திருப்பது தெரிந்தது.

 

மணி மாலை ஆறுக்கும் மேலே ஆனதை கண்டவன், அவள் உண்டாலோ இல்லையோ தெரியவில்லையே என்ற எண்ணத்தோடு அறை விளக்கினை இயக்க, அவள் படுத்திருந்த கட்டிலின் விரிப்பு லேசாக உதிர்த்தில் குளிக்கத் துவங்கி இருந்தது.

 

அதை கண்டவனுக்கு ‘அய்யோ பாவமே’ என்றாகிவிட, அவளை நெருங்கி அமர்ந்தவன், அவள் கன்னம் தட்டி “டேய்..ம்மா” என்று எழுப்பினான். அவளது அழுது வீங்கிய முகம் அவனுக்கு ஒருபுறம் ‘வீணாக தன் உடலை கெடுத்துக் கொள்கிறாளே’ என்ற கோபத்தை கொடுக்க, கண்களை அழுந்த மூடித் திறந்தவன், “டேய்.. ம்மா.. எழுந்திரிடா. பெட்டெல்லாம் ஸ்டிரெய்ன் ஆகுது” என்றான்.

 

ஏதோ கிணற்றுக்கு அடியிலிருந்து கேட்பதுபோல் கேட்ட கணவன் குரலில், மெல்ல மெல்ல உறக்கம் கலைந்தவள் எழ, முழுதாக தூக்கம் கலைய சில நிமிடங்கள் பிடித்தது. தூக்கம் விலகி தன் அருகே இருப்பவனைக் கண்டு திடுக்கிட்டவள் கண்கள் படபடக்க, அவள் பேச வாயெடுக்கும் முன், “ம்மா.. போய் பேட் சேஞ்ச் பண்ணிட்டு வா. பெட்ல ஸ்டிரெய்ன் ஆகுது” என்றான்.

 

அதில் சட்டென படுக்கையை பார்த்தவள், எப்போதும் மாதவிடாய் காலங்களில் படுக்கையில் அவள் விரித்துக் கொண்டு படுக்கும் துண்டை விரிக்காத தன் மடத்தனம் புரிய, அவசரமாக எழுந்தாள். தூக்கத்தில் உடல் அமுங்க படுத்ததும், மதியம் உண்ணாததும் சேர்த்து எழ முடியாது அவளைத் தடுமாறச் செய்ய, மற்றது மறந்து அவளை தன் கரங்களில் ஏந்திக் கொண்டவன், குளியலறைக்குள் கூட்டிச் சென்று அவள் முகம் கழுவி ஆசுவாசம் அடையும் வரை பிடித்துக் கொண்டு நின்றான்.

 

அவள் நிலையாக நிற்பதை உறுதி செய்துக் கொண்டவன், அவளுக்கு வேண்டியவற்றை எடுத்துக் கொடுத்துவிட்டு வெளியேற, தன்னை சுத்தம் செய்துக் கொண்ட பாவை சில நிமிடங்களில் வெளி வந்தாள்.

 

அதற்குள் படுக்கையின் விரிப்பை மாற்றி அமைத்திருந்தவன், அங்கு மேஜையிலிருந்த தண்ணீர் கோப்பையை திறந்து தண்ணீரை அவளுக்கு ஊற்றிக் கொடுக்க, மறுக்காது வாங்கி பருகிக் கொண்டாள். சில நிமிடங்கள் அங்கு மௌனமே ஆட்சி செய்தது. அவள் ஏதும் பேசுவாளா சண்டையிடுவாளா என்று எதிர்ப்பார்த்த ருத்ரனுக்கு அவள் மௌனம் மட்டுமே பரிசாகக் கிடைக்க, “அஞ்சிலை” என்றான். 

 

மற்றவரிடம் அறிமுகம் செய்யும்போது மட்டுமே தன் பெயரை முழுதாக கூறுபவன் இன்று தன்னை முழுப் பெயரில் அழைப்பது சற்றே அந்நியமாக உணர்ந்தவளுக்கு கண்கள் லேசாக கலங்கியது. “உன்னைதானே கூப்பிட்டேன்” என்றவனது அழுத்தமான வார்த்தைகள் சொன்ன அவன் கோபத்தை வலிக்க வலிக்க உணர்ந்தபடி அவள் நிமிர, “எதுக்காக இப்ப கோபம்?” என்றான்.

 

அவ்வளவே! கண்கள் கலங்கி மழை போல பொழிய லேசாக விசும்பியவளைக் கண்டு “இப்ப எதுக்கு அழற?” என்றவன், “இங்க பாரு.. என்மேல கோவம் படவோ சண்டை போடவோ எல்லா உரிமைகளும் உனக்கு இருக்கு. ஆனா என்கிட்ட பதில் வார்த்தைகள் எதிர்ப்பார்க்க வாயை திறந்து பேசனும். நான் என்பக்க விளக்கங்களை கொடுக்க நூறு சதவீதம் தயாரா தான் இருந்தேன், இருக்கேன். ஆனா அதை நீயா கேட்கும்வரை தான். கேட்டா கொடுக்க தயாரா இருக்கேன். வாயை திறந்து பேசு” என்றான்.

 

படீர் படீர் என்று வந்திறங்கிய அவன் வார்த்தைகளில் அழுதபடியே அவனை அணைத்துக் கொண்டவள் மேலும் அழ, தன்னைப்போல அவன் கரம் அவள் பின்னந்தலையில் பிடித்து அவள் முக்ததை தன் மார்போடு ஒன்றச் செய்தது.

 

“நா.. நான் ரொம்ப மோசமானவளா?” என்றவள் மேலும் கலங்கி அழ, அவள் எதை குறிப்பிட்டு கேட்கின்றாள் என்பது புரிந்தவன், “யார் யாரோ ஏதோ பேசினாங்கனு நீ ஏம்மா இப்படி உன்னை விருத்திக்குற?” என்றான். 

 

“நி.. நீங்க.. நீங்க என் பக்கத்துலயே தான உட்கார்ந்துட்டு இருந்தீங்க? எ..எனக்காக ஒரு வார்த்தை கூட பேசலையே? நான் என்ன அவ்வளவு மோசமானவளா? நான் வந்ததால அ..அந்த பொண்ணுக்கு ஏதாவது ஆகிடப்போகுதுனு சொல்றாங்க. நீங்களும் அமைதியாவே இருந்திருக்கீங்க. எனக்கு எவ்வளவு வருத்தமா இருந்தது தெரியுமா? எ..எனக்கு கல்யாணம் காதல் இதுமேலலாம் பெருசா அபிப்ராயமே கிடையாது. நான் பார்த்து வந்த கல்யாண வாழ்க்கை எல்லாமே ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்னு சொல்றதுக்கு ஏற்ப தான் இருந்தது. ஓடி ஓடி காதலிச்ச தம்பதியரும் சந்தோஷமா இருந்ததைப் போல நான் பார்க்கலை அரேஞ் மேரேஜ் செஞ்சுகிட்டவங்களும் காதலோட மட்டுமே வாழ்ந்ததா தெரியலை”

 

“கல்யாணம்னாலே இவ்வளவு தான் போலனு ஒரு எண்ணத்தோட தான் நான் இருந்தேன். கல்யாணமே வேணாம்னு யோசிக்கலைதான். ஆனா கல்யாணம் பண்ணினா இப்படிதான் இருக்கும், ஒரு வருஷம் தான் எல்லா சந்தோஷமும்னு இருந்தேன். அ..ஆனா என் வாழ்க்கைல முழுசா ஒருவருஷம் கூட அது நிலைக்கலையேனு அத்தனை கோபமா வந்தது.. அதுவும் உங்க கிட்ட நான் உணர்ந்த அந்த பாசம்.. அந்த வித்தியாசமான உணர்வு.. என்னை மேலும் நோகடிச்சுடுச்சு”

 

“உடம்பு சரியில்லைனா வேலை நேரத்துல ஏன் ஃபோன் போட மாட்டேங்குறனு கேப்பீங்க. ஆனா வேலை நேரத்துல ஃபோன் பண்ணி டிஸ்டர்ப் பண்ணாதனு அம்மாவை அப்பா திட்டியிருக்காங்க தெரியுமா?” என்றபடி ஒருமுறை தந்தைக்கு அழைத்து தாய் திட்டு வாங்கிய அந்த சம்பவத்தைக் கூறினாள்.

 

மேலும் “நாலு வருஷம் காதலிச்சு கல்யாணம் செஞ்சவங்க எங்க சித்தி சித்தப்பா. குடும்பத்தில் அத்தனை பேர் முன்ன சண்டை போடுறது அடிச்சுக்குறதுலாம் பார்க்க அவ்வளவு வெறுப்பா இருக்கும். இவங்களாம் என்னடா காதலிச்சாங்கனு தோணும். வீட்டுல நிச்சயம் பண்ண கல்யாணமாவது அழகா இருக்கும்னு பார்த்தா அதுவும் இல்லைனு நிறையா இடத்துல பார்த்துருக்கேன்”

 

“அதேதான் எனக்கும்னு என் மனசுல ஆழமா பதிஞ்சுடுச்சு. அ..ஆனா இவ்வளவு சீக்கிரம் நமக்குள்ளயும் அது நடக்கும்னு நான் எதிர்ப்பார்க்கலை. ஏன் எனக்காக நீங்க பேசலை? நீங்களும் அப்படிதான் நி..நினைச்சீங்களா? எனக்கு பாப்பா இல்லைனு அவங்க பாப்பா நல்லா இருக்கக் கூடாதுனு நான் நினைப்பேனா? அவ்வளவு மோசமானவா என்னை நினைச்சுட்டீங்களா?” என்று கேட்டு மேலும் கதறி அழுதாள்.

 

மனைவியின் மனதில் திருமணத்திற்கு இப்படியொரு விளக்கம் இருப்பதை இத்தனை நாட்கள் அறியாதிருந்தவன் சற்றே திணறிதான் போனான். “எனக்காக அவங்க கிட்ட நீங்க பேசிருந்தா கூட நான் எதுவுமே கருத்தில் எடுத்திருக்கவே மாட்டேன். நீங்க பேசினதே போதும்னு இருந்திருப்பேன்.. ஆனா..இது எனக்கு எப்படியான ஏமாற்றத்தைக் கொடுத்தது தெரியுமா? உங்களுக்கு நான் அவ்வளவு தான் முக்கியமா போயிட்டானா சொல்லுங்க?” என்று மீண்டும் கேட்டு அழுதவளை நிமிர்த்தியவன் அடுத்து தான் கூறிய தகவல்களில் அவளை அதிர்ச்சியின் உச்சத்திற்கே அழைத்துச் சென்றிருந்தான்.

-வரைவோம் 💞

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்