Loading

கண்களில் கரைபுரண்டு ஓடும் கண்ணீரைத் துடைக்க மனமின்றி குளியலறையில் நின்றிருந்த அஞ்சிலையின் மனம் கனன்று கொண்டிருந்தது. வெறுப்பின் உச்சத்தில் நின்றிருந்தவள் கண்களில் கோபம், ரௌத்திரம், வலி, வேதனை போன்ற கலவையான உணர்வுகள். ஆனால் யார்மீது கோபம்? என்ற கேள்விக்கு மட்டும் அவளிடம் பதில் இல்லை. உச்சகட்ட கோபத்தின் கோர திரை கண்களை மட்டுமல்லாது கருத்தையும் மறைத்துவிடும் அல்லவா?

 

கண்ணீருடன் புணர்ந்து தரையில் பட்டுத் தெரித்த ஷவரிலிருந்து சிதறிய நீர்த்துளிகள் கூட, அவளது நிலைகண்டு அஞ்சி ஓடியது. எத்தனை நேரம் அப்படியே நின்றாலோ? ஒருகட்டம் மேல் உடல் ஒத்துழைப்பின்றி வலுவிழந்தவள், தனது உடையை மாற்றிக் கொண்டு வெளியே வர, உணவுடன் உள்ளே வந்த ருத்ரன், “டேய்… சாப்பிடவாடா” என்றான்.

 

அவனது இயல்பான பேச்சு அவளது கோபத்திற்கு தூபம் போட, “பசிக்கலை” என்று வார்த்தையை கடித்து துப்பியவள் தலையை துவட்டியபடி பால்கனி சென்றாள். “இப்ப எதுக்குமா தலைக்கு குளிச்சிருக்க? நைட்டு நேரம் சளிபிடிச்சா என்ன பண்ண?” என்று வினவியபடி வந்தவன் அவளிடமிருந்து துவாளையை வாங்க முற்பட, “நானே துவட்டிக்குறேன்” என்று அவன் முகம் பார்க்காது சொல்லியவள், தன்னையே பார்த்தபடி நிற்பவன் பார்வை வீச்சை தாங்க முடியாது உள்ளே சென்று கட்டிலில் படுத்து விட்டாள்.

 

“டேய்.. கொஞ்சமா சாப்பிடுமா. இந்த பாலையாவது குடியேன்” என்று அவன் கூற, “எனக்கு வேணாம்” என்று திரும்பிப் படுத்துக் கொண்டாள். அவளது இந்த கோபத்தினைக் கண்டு முற்றிலும் குழம்பிப் போனவன், அவளையே பார்த்தபடி நின்று யோசிக்கலானான். நடந்த சம்பவம் அவனுமே அறிந்தது தான். ஆனால் அவன் எதிர்நோக்கி வந்தது வருத்தம் தோய கண்ணீர் வடிக்கும் அஞ்சிலையை தான். ஆனால் இவளோ கோபமுகம் காட்டியல்லவா விலகுகிறாள்?

 

‘இவள் அழுவதை கண்டு சமாதானம் செய்வதற்கு இந்த கோபமே மேல். சீக்கிரம் தனிந்துவிடும்’ என்று எண்ணியவன் அறியவில்லை கோபத்தின் அகோர ரூபத்தை. அது அவனுக்கும் அவளுக்கு வலிக்க வலிக்க அதன் பாடங்களைக் கற்பிக்கப் போவதையும், ஆட்டிவைக்கப் போவதையும் அறியாது போயினர் அந்த பேதை தம்பதியர்.

 

ரூபியும் மகாவும் உறவினர் ஒருவர் வீட்டில் தங்க சென்றிருக்க, ஆடவன் தான் சென்று உணவு உண்டு கதவுகளை அடைத்துவரச் சென்றான். அவன் சென்றதை உறுதி செய்துக் கொண்டவள், தலையணையை இறுக கட்டிக் கொண்டு உடல் மெல்ல குலுங்க அழத் துவங்கினாள். சில நிமிடங்கள் முன்பு நடந்த சம்பவம் அவள் கண்முன் படம்போல ஓடியது!

 

யாரேனும் ஏதும் கூறிவிடுவரோ என்ற பயத்தோடு கணவன் கரங்களை இறுக பற்றிக் கொண்டு சென்றவளை அவள் நினைத்ததைப் போல் யாரும் ஏதும் பேசவில்லை. ஆனால் பாவமான சில பார்வைகள் மட்டும் அவளைத் தொடர்ந்தது. அந்த பார்வையில் விஜியின் பார்வையும் அடக்கம். தன்னைவிட வெறும் இரண்டே மாதம் பின்தங்கிய கரு தாங்கியிருந்தவள், மேலும் கருசுமந்து இழப்பதன் வலி அதை சுமப்பவளுக்கும் புரியுமல்லவா!?

 

அங்கு சடங்குகளில் கலந்துகொள்ள விருப்பமில்லாமல் தனது வருகையை பதிவு செய்தவள் கணவன் அருகேயே அமர்ந்திட்டாள். சுற்றி சுற்றி பார்வையை சுழல விடுவது போல் காட்டிக் கெண்டவளது உடல்மொழியே ஆடவனுக்கு அவளது பதட்டத்தைக் கூறியது‌.

 

அங்கு இவளைப் பார்த்த உறவினர் ஒருவர் தன்னருகே இருந்த பெண்மணியிடம், “எம்மா.. அந்த பொண்ணு நம்ம ருத்ரன் வீட்டுக்காரி தானே? முழுகாமல இல்ல இருந்தா? இப்ப வைத்த (வயிறு) காணும்?” என்று கிசுகிசுப்பாக வினவ, “உனக்கு தெரியாதா க்கா? அந்த பொண்ணுக்கு பாவம் புள்ளை தங்கலை. நாலாவது மாசமே கலைஞ்சுடுச்சாம்” என்று மற்றவர் வருத்தத்தோடு கூறினார்.

 

“யாத்தே.. அப்பவே நினைச்சேன். இந்த விஜி பொண்ணு கருப்பு வளைக்கு அத்தனை பேரும் மூனு மாசத்துக்கே வயிறா வயிறானு வாயபிளந்தாங்க. இப்ப பாரு.. கண்ணுபட்ட போல ஆகிடுச்சு. இந்த விஜி எத்தனாவது மாசம்னு கூட்டத்துல வச்சா கேட்கனும்?” என்று அந்த பெண்மணி கேட்க, “அதான க்கா.. பாவம் இப்ப சடங்குக்கு வந்து முழிக்குது. யாரும் வார்த்தைய விட்டு நோகடிக்காம இருக்கனும்” என்றார்.

 

இவற்றை தவறாமல் இவர்களுக்கு பின்னே இருந்த விஜியின் தாய் வித்யா கேட்டுவிட, கண்களை முட்டிக் கொண்டு வந்த கண்ணீரோடு உள்ளே சென்றார். அங்கே நின்றிருந்த மீனா (ருத்ரன் சித்தி) “அண்ணி.. என்னதிது கண்ணு கலங்கியிருக்கு?” என்று வினவினார்.

 

அவரை அங்கு சற்றும் எதிர்பாராத வித்யா, பொய் உரைக்க மனமின்றி நடந்த பேச்சு வார்த்தையைக் கூறி, “இப்ப பாரு மீனா.. பழியெல்லாம் என் பொண்ணு பேருல விழுவுது. இந்த பொண்ண வானு நான் கூப்பிட்டேனா? அவன் மாமன் முறைக்கு வாரான். இப்பத்தானே கரு கலைஞ்சது. இங்க வந்து இப்படி வார்த்தைய எம்பொண்ணு பேருல போடனுமா சொல்லு? நெசந்தேன் மீனா.. எனக்கு ஏனோ அந்த பொண்ணு மேல அப்படி அபிப்ராயம் இல்லைதான். ஆனா சாமி சத்தியமா நானோ எம்பொண்ணோ அந்த உசுரு போகனும்னுலாம் நினைக்கலையே” என்று கண்ணீர் வடித்தார்.

 

“அட என்ன அண்ணி நீங்க? எனக்கு தெரியாதா உங்களைப் பத்தி? நீங்க அப்படி நினைக்கும் ஆளா? யாரோ ஏதோ சொன்னாங்கனு நீங்க எதுக்கு இப்ப கண்ண கசக்குறீங்க?” என்று மீனா வினவ, “இப்ப யாராச்சு அந்த புள்ள சங்கடப்படுறபோல பேசி எதும் பிரச்சினை வந்தா அதுவும் என் பொண்ணு தலைல தானே விடியும்” என்றார். “அதெல்லாம் ஒன்னும் ஆகாது அண்ணி. நீங்க கண்ணை துடைச்சுட்டு போங்க. நல்ல விஷேஷம் அதுவுமா இப்படி கண்ணை கசக்கிக்கிட்டு” என்று அவருக்கு ஆறுதல் கூறிய மீனா அடுத்த சில நிமிடங்களில் அஞ்சிலையின் அருகே வந்து அமர்ந்தார்.

 

அவரைப் பார்த்து லேசாக சிரித்தவள் கரம் பற்றி, “எப்படிமா இருக்க?” என்று அவர் வினவ, “ந..நல்லா இருக்கேன் அத்தை” என்றாள். “ஹ்ம்.. சொல்றேன்னு தப்பா எடுத்துகிடாத பொண்ணு. என் காதுக்கு வந்த சேதிய (செய்தி) தான் சொல்லுறேன்” என்று பீடிகை போட, ‘இதோ’ என்று காத்திருந்த இதயம் தாளம் தப்பித் துடிக்கத் துவங்கியது.

 

“யாரோ என்னவோ பேசிருக்காங்கனு அங்க வித்யா அண்ணி கெடந்து அழுவுறாங்க” என்று நடந்ததை மேலோட்டமாக கூறியவர், “யாராச்சு வந்து ஏதும் பேசினா நீ தாங்குவியாக்கும்? இல்ல நீயே யோசி.. புள்ளைய இழந்திருக்க.. இப்ப போய் நீ அவ விசேஷத்துக்கு வந்து உன் ஏக்கப்பார்வை பட்டு எதாச்சும் ஆச்சுனா வம்பா போவாதா? நீ கண்ணு வைப்பனு சொல்லலை.. நாளை பின்ன ஏதாவதுனா உன்னைத்தான் எல்லாரும் குறை சொல்லுவாங்க. இது தேவையா உனக்கு? ருத்ரன் மாமன் முறைக்கு வேணும். மகா அண்ணி பெரியவங்க முறைக்கு வரனும். நீ வீட்லயே இருக்கலாம்ல?”

 

“உன்னைய கஷ்டபடுத்தனும்னு சொல்லலைடா. எங்க உன் ஏக்கம் அவளை பாதிச்சுடுமோனு ஒரு சின்ன பயம் என்னதான் இருந்தாலும் பெத்தவளுக்கு இருக்கும்னு சொல்றேன்” என்று ஏதோ அவளுக்காகவே பேசியதுபோல் பார்த்து பார்த்து தீட்டிய வார்த்தையை அவர் அவளிடம் இறக்கிவிட்டு நாசூக்காய் நகர்த்திட, உலகமே ஸ்தம்பித்த நிலையில் இருந்தவள் அருகே கணவன் கால் தன் துடையோடு இடிபடவும் சுயம் வந்து திரும்பிப் பார்த்தாள்.

 

அலைப்பேசியை பார்த்திருந்தவன் இத்தனை பேச்சுக்குப் பிறகும் எந்தவித உணர்வுகளுமற்றே இருப்பதைக் கண்டவள், கோபமும் கண்ணீரும் சரிவகிக்கப் பெற, அது அறியாத ஆடவனும் அழைப்பு வந்தது என எழுந்து சென்றான்.

 

சில நிமிடங்கள் கழித்து வந்தவன், “அம்மா, ரூபி நாளைக்கு வருவார்களாம்டா. நீ வா நம்ம போவோம்” என்க, ஏதும் பேசாது எழுந்து வந்துவிட்டாள். குளியலறைக்குள் புகுந்து கரைந்தவளுக்கு மனம் கொடுத்த வேதனையும், எரிச்சலும் சேர்ந்து யார் மீது தனது ஆதங்கத்தை கொட்ட என்று புரியாத நிலை. கணவன் அனைத்தையும் கேட்டும் தனக்காக ஒரு வார்த்தையும் பேசவில்லையே என்று தோன்ற மொத்த கோபமும் அவன் மீதே திரும்பியது.

 

‘எ..எனக்காக ஒரு வார்த்தைக் கூட அவங்க கிட்ட பேசவே இல்லையே அவரு. அவ..அவங்க என்ன பேச்சு பேசினாங்க. நா.. நான் வந்து அ..அந்த பொண்ணுக்கு எதாவது ஆகிடுமா? நான் என்ன சாபமா விடப்போறேன்? அ.. அவ்வளவு மோசமானவளா நான்? ச்ச! என்ன பேச்சு இதெல்லாம்? அ..அவரும் அவங்க பேசனது சரினு சொல்ற போல வாய மூடிகிட்டு இல்ல இருந்தாரு? ஏ..ஏன்? நா.. நான் தான் சொன்னேனே ஏன்டி வந்தனு நினைச்சுட்டாரு போல?’ என்று எண்ணி மருகியவள் கண்களில் கண்ணீருக்கு மட்டும் பஞ்சமே இல்லை.

 

‘நி..நிஜம் தான். இதுதானே கல்யாண வாழ்க்கை! தெ..தெரிஞ்சு தானே இதுக்குள்ள வந்தேன்? அப்படியிருந்து வருத்தம் படுற நான் தான் மடச்சி. எத்தனை பார்த்துட்டோம். சித்தி மொத்த குடும்பம் முன்ன ஒருமுறை திட்டு வாங்கும்போது சித்தப்பா ஏதுமே பேசாம வாயமூடிகிட்டு இல்ல இருந்தாரு? அ..ஆனா அதுக்குள்ள புளிச்சு போச்சா? எ..எனக்கு அவ்வளவு தான் மதிப்பா என்ன?’ என்று இருந்த மனநிலைக்கு என்னென்னவோ யோசித்து மருகினாள்.

 

அடிவயிற்றில் அப்படியொரு வலி வெட்டியிழுக்க, உடல் உபாதைகளைப் புரிந்துக் கொண்டு குளியலறை சென்றவளுக்கு, மனச்சோர்வும் உடல் சோர்வும் சேர்ந்து பத்து நாட்களுக்கு முன்பாகவே மாதவிடாயை வரச் செய்திருந்தது. அவ்வளவே! உடலும் மனமும் சேர்ந்து செய்த சதியில் புத்தி மந்தித்துப் போனவள், இல்லாத பொல்லாத காரணங்களை கூறிக் கொண்டு தன்னைத் தானே நோகடித்த வண்ணம் உறங்கிப் போனாள்.

 

மீண்டும் படுக்க வந்தவன், முகம் வீங்கி, கண்கள் தடித்து கண்ணீர் தடம் மறையாது கிடப்பவள் தோற்றம் சற்று அதிர்ச்சியையே தந்தது. ‘இவ்வளவு நேரம் அழுதுட்டா இருந்தா? சத்தம் கூட வரலையே? என்னையும் கூப்பிடலை? என்னாச்சு இவளுக்கு?’ என்று எண்ணியவன், அங்கு மேஜையில் புதிதாக அவள் பிரித்து வைத்திருந்த சுகாதார நாப்கின்கள் அடங்கிய கவரைக் கண்டவுடன் சற்றே குழம்பியபடி அவள் நாட்களைக் கணக்கிட்டான். 

 

‘பத்து நாள் முன்னையே வந்துடுச்சு போலவே? சொன்னா கேக்குறாளா இவ? இப்படி தேவையில்லாம உடம்ப கெடுத்துக்கனுமா?’ என்று மனதோடு கண்டித்தபடி அவளுக்கு அரும் மருந்தாய் ஒரு நெற்றி முத்தத்தைக் கொடுத்துவிட்டு அருகே படுத்துக் கொண்டான். 

 

மறுநாள் காலை வெகு தாமதமாகவே கண் திறந்தவளுக்கு தலையில் கல்லை வைத்தது போல் அவ்வளவு பாரமாக இருந்தது. அடிவயிறு வேறு வலி கொடுத்து தொந்தரவு செய்ய, அத்தனை வலியும் மனதின் வலியை நினைவூட்டியதைப் போன்று உணர்ந்தாள். குளித்து முடித்து தலைதுவட்டியபடி வந்தவன், அவளைப் பார்த்து “டேய்..ம்மா.. உடம்பு முடியலையா? ரொம்ப டயர்டா இருக்கியேடா. ரெஸ்ட் வேணும்னா எடுத்துக்கோ. அம்மா பத்து மணிபோல வந்துடுவாங்க. நான் டிஃபன் செஞ்சுட்டேன்” என்று கூற, அவனிடம் ஏதும் பேசாது எழுந்து குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

 

அவளது உதாசீனம் கொடுத்த எரிச்சலில் இதழ் குவித்து ஊதியவன், சென்று அவள் எப்படியும் காலை உணவு உண்ணப் போவதில்லை என்று அறிந்தவனாக காலைக்கும் சேர்த்தே உணவை கட்டி வைத்தான். குளித்து முடித்து வந்தவள் எவ்வளவு முயன்றும் முகத்தில் தெளிவும் பொழிவும் கடுகளவும் இல்லை.

 

அதில் சற்றே சளிப்பு மேலிட, தனது கைப்பையை எடுத்து வந்து வைத்தவள், சென்று தண்ணீரை பருகினாள். அந்த இடைவெளியில் அவளது பையில் உணவை வைத்தவன், அவள் கரம் பற்றி, “நான் கிளம்புறேன்டா. இன்னிக்கு கொஞ்சம் வேலை இருக்கு. சீக்கிரம் போகனும். பார்த்துபோ” என்று கூற, பதிலேதும் இல்லை அப்போதும்.

 

காலையே சண்டை போட்டு இருவர் மனநிலையையும் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று எண்ணியவன், முடிந்தும் மறைக்க முடியாத தனது எரிச்சலை கண்களில் காட்டியவண்ணம் சென்றுவிட, அதைக் கண்டவளுக்கு மேலும் கோபமும் ஆத்திரமும் பொங்கியது‌.

 

சாய் வண்டியில் ஏறி அமர்ந்தவளைக் கண்டு, “ஏன்டி முகம் இப்படி இருக்கு? அழுதியா? உடம்பு முடியலையா?” என்று வினவ, “கொ.. கொஞ்சம் முடியலை சாய். பீரியட்ஸ்” என்றாள். ஏனோ இந்த விடயத்தை யாரிடமும் கூறி அழகூட அவள் மனம் உந்தவில்லை. ஒருவிதமான விரக்தியும் வெறுப்பும் அப்பிய நிலையிலேயே இருந்தாள் பாவை.

 

“முடியலைனா வீட்ல இருக்கலாம்ல?” என்று சாய் கேட்க, “ப்ச்.. இப்ப என்ன உனக்கு?” என்று சளிப்போடு கேட்டாள். அதிலேயே தோழி ஏதோ மன உளைச்சலில் இருப்பதைப் புரிந்துகொண்ட சாய், இப்போது மேலும் அதை கிளர வேண்டாம் என அமைதி காத்தாள். சாயாவது அதை கேட்டு அப்போதே தெளிவு படுத்தியிருக்க வேண்டுமோ?

 

வேலையில் சிரத்தையே இல்லாமல் இருந்த அஞ்சிலைக்கு உடல் உபாதைகள் வேறு படுத்தி எடுக்க, அவ்வப்போது அவளையும் மீறி இரண்டு கண்ணீர் மணிகள் உருண்டு ஓடியது‌. அதை துடைத்துக் கொண்டு தன் பணியை தொடர்ந்தவள், மாலை வீடு வந்ததும் ஒரு முடிவாக மாமியாரிடம் சென்றாள்.

 

“என்னாச்சுடா? முகமே வீக்கமா இருக்கு? உடம்பு எதும் முடியலையா?” என்று அவர் கருணையோடு வினவ, “என்னாச்சு அண்ணி? ஏன் ஒருமாதிரியா இருக்கீங்க? அழுதீங்களா?” என்றாள். ‘அழுதீங்களா?’ என்றவள் வார்த்தையே அவளுக்கு கண்ணீரை கொடுக்க, பல்லைக் கடித்து தன்னை சமன் செய்தவள், “பத்து நாள் முன்னவே தலைக்கு ஊத்திட்டேன் அத்தை. அது ரொம்ப படுத்துது” என்று கூற, “அச்சோ.. டாக்டர் கிட்ட ஏதும் கேட்டுட்டு வந்தியாடா?” என்றார்.

 

“இல்ல அத்தை. வலிதான் படுத்துது” என்றவள் சற்றே தயக்கத்தோடு விழி தாழ்த்தி, “அ..அத்தை.. நா.. நான் ஒரு ரெண்டு மூனு நாள் அ..அம்மா வீட்டுல இருந்துட்டு வரவா?” என்று வினவ, இருவரும் அவளைப் புரியாத பார்வை பார்த்தனர்.

 

“ஏன்டா? என்னாச்சு?” என்று மகா வினவ, “இல்லை அத்தை. ஏனோ அம்மாகூட இ..இருக்கனும் போல இருக்கு. ஒ..ஒரு ரெண்டு மூனு நாள் மட்டும் போயிட்டு வரவா?” என்று கெஞ்சலாக கேட்டாள். “அட என்னடா நீ? தாராளமா போயிட்டுவா. ஆனா இப்பவே போகனுமா? ருத்ரன் வந்துடட்டுமே” என்று அவர் கூற, “இல்ல காலைலயே வேலை இருக்குனு சொல்லிட்டுதான் போனார் அத்தை” என்றாள்.

 

அவளது நிலைமை ஒரு பெண்ணாக மகாவுக்கு புரிந்தது தான். ஒரு மாமியாராக மகனிடம் அவள் கூறாமல் செல்வது சற்று மனசுனக்கத்தையே கொடுத்தது. ஆனால் அவளிடம் முடியாது என்றும் கூறமுடியாதவர் “சரி எப்படிடா போற? தம்பி வரானா?” என்று வினவ, “இல்லை அத்தை. சாய் வருவா. லைப்ரேரி போகப்போறதா சொல்லிட்டு இருந்தா(ள்). அதான் அப்படியே உங்ககிட்ட கேட்டுட்டு கூட்டிட்டு போக சொல்லலாம்னு இருந்தேன்” என்று கூறினாள்.

 

“சரிமா வரசொல்லு. பார்த்துபோங்க. போயிட்டு எனக்கு தகவல் சொல்லு”  என்று அவர் கூற, சரியென்ற தலையசைப்போடு சென்றாள். சில நிமிடங்களில் சாய் வந்திட, மாமியார் மற்றும் ரூபியிடம் கூறிக் கொண்டவள், சாயுடன் புறப்பட்டாள்.

 

செல்லும் அஞ்சுவைப் பார்த்த ரூபிக்கு மட்டும் அவள் நடவடிக்கைகள் வித்தியாசமாக தோன்ற அன்னையிடம் ஏதும் கேட்காது அமைதியாக உள்ளே சென்றாள்.

-வரைவோம் 💞

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
13
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்