சாயின் வீட்டை அடைந்த தம்பதிகளில் அஞ்சு அங்கு இருந்த செருப்புக் குவியளைக் கண்டு “அய்யோ மாப்பிள்ளை வீட்டாளுங்க வந்துட்டாங்க போல. என்னை திட்டப்போறா” என்றபடி உள்ளே சென்றாள். உள்ளே பரபரப்பாக அங்கும் இங்கும் வேலை செய்துக் கொண்டிருந்த உறவுக்கார பெண்மணிகளைப் பாவை புரியாமல் பார்க்க, அவர்களைக் கண்ட மாறன் (சாய் தந்தை), “வாடாமா. வாங்க தம்பி” என்று வரவேற்றார்.
சிறு புன்னகையுடன் தலையசைத்த இருவரையும் அவர் அமரவைத்த கையோட வேலையாக சென்றுவிட, “பொண்ணு தானே பார்க்க போறதா சொன்னா? சொந்தகாரங்களாம் வந்திருக்காங்க? கையோட நிச்சயம் பண்ண போறாங்களா என்ன?” என்று அஞ்சு வினவினாள். தோழியை சென்று பார்க்க எண்ணியவள், அறியாத இடத்தில் கணவனை தனியே விட்டுச் செல்ல மனமின்றி அங்கேயே அமர்ந்திட்டாள்.
அங்கு உறவினர் குழந்தைகள் ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்க, அஞ்சுவின் மீது இடித்துக் கொண்ட குழந்தையை, “ஏ பாத்து” என்று அவள் பிடித்து நிறுத்தியதும், “சாரி க்கா” என்றுவிட்டு ஓடியது. அதை புன்னகையுடன் பார்த்தவள் முகம் சட்டென மாறிவிட, அவள் கை லேசாக நடுங்கியது.
இப்படியான தருணங்களில் அவள் கரம் அடுத்து மெல்ல அவள் மணிவயிற்றை வருடிப் பார்க்கும் என அறிந்த ருத்ரன், மேலே எழும்ப வந்த அவளது நடுங்கும் கரத்தினில் தனது கரத்தினைக் கோர்த்து இறுக பற்றி, அவளை வருத்தும் மாய வலையை அறுத்தெரிந்தான். மண்ணவன் ஸ்பரிசத்தில் சட்டென அவனைத் திரும்பிப் பார்த்தவள், கண்களை மூடித் திறந்து அவன் புன்னகைத்த புன்னகையில் தானும் மெல்ல மென்மையாக புன்னகைத்துக் கொண்டாள்.
சற்று அவளுக்கு ஆசுவாசம் அடைய இடைவெளி கொடுத்தவன், “டேய்.. உள்ள போய் சாய பாருடா. அவளை ரெடி பண்ண போறேன் அதுஇதுனு சொல்லிட்டு இங்க என்னை பிரிய மனசில்லாம இப்படி உக்காந்திருக்க?” என்று அவர்கள் தோள்கள் உரச அமர்ந்திருந்ததை சுட்டிக் காட்டி வினவ, அவனைத் திரும்பிப் பார்த்து முறைத்தவள், “பாவமே இங்க உங்களுக்கு யாரையும் தெரியாதேனு தான் உங்க கூட உட்கார்ந்தேன். மித்தபடி உங்க கூட இப்ப்படி உட்கார ஆசையெல்லாம் ஒன்னும் படலை” என்று முறுக்கிக் கொண்டு இதழ் சுழித்துவிட்டுச் சென்றாள்.
உள்ளே வந்த அஞ்சு, சாயை பார்த்து முடிந்தமட்டும் முகத்தை பாவம்போல வைத்துக் கொள்ள, தோழியைக் கண்டு முறைத்தவள், “கேவலமா நடிக்காத பார்க்க முடியலை” என்றாள். அதில் பக்கென சிரித்துக் கொண்டவள் அவளருகே வர, அவள் வயது உறவினர் சிலர் சுற்றியிருந்தனர். தோழியுடன் அமர்ந்தவள், “ஏ என்ன சாய்.. பொண்ணு தானே பார்க்க வர்றாங்க?” என்று வினவ, அவள் காதருகே வந்து, “அந்த கொடுமைய ஏன்டி கேக்குற? எங்க அம்மா சைடு உறவினர்கள் எல்லாம் இங்க கோவிலுக்கு வர்றதா சொன்னாங்க. அம்மா எனக்கு பொண்ணு பார்க்குற மேட்டர அப்ப தான் போட்டு விட்டிருக்காங்க. உடனே எல்லாம் இங்க” என்று கூறி பெருமூச்சு விட்டாள்.
“சரிசரி விடு” என்று கூறிய அஞ்சு, “மேக்கப் பலமா இருக்கு” என்று வெறும் பௌடர் மற்றும் மை கொண்டு அவள் ஒப்பனை செய்திருந்ததை சுட்டிக் காட்டி கேலி செய்ய, “அய்யோ அஞ்சல.. இவங்களாம் எனக்கு வெள்ளையடிக்க பிளான் போட்டாயிங்க. வுடுவேனா நானு? எதையாவது தூக்கிட்டு வந்து தேச்சீங்கனா மூஞ்சிய மொத்தமா கழுவிட்ட ஈரமுகத்தோட வந்து நிப்பேன்னு மிரட்டிவிட்டுட்டேன்” என்றதும் பாவை வாய்விட்டு சிரித்தாள்.
சில நிமிடங்களில் வெளியே கேட்ட சலசலப்பு மாப்பிள்ளை வீட்டார் வந்ததை உணர்த்த சாயை சுற்றியிருந்த பெண்கள் யாவரும் வெளியே மாப்பிள்ளையை பார்க்கச் சென்றனர். தானும் செல்ல எழுந்த அஞ்சுவின் கரம் பற்றி நிறுத்திய சாய், “என்ன எல்லாம் மாப்பிள்ளை வந்துட்டாரு மாப்பிள்ளை வந்துட்டாருனு குடுகுடுனு எந்திச்சு ஓடுறீங்க. பார்க்க வேண்டியது நான்தானே. கம்முனு உட்காரு” என்று கூற, “உனக்கு ஓகேவா எப்படி இருக்காருனு நான் பார்க்க வேணாமாடி?” என்று என்றாள்.
“அந்த வெட் ஆனியன் எல்லாம் நாங்களே பார்த்துப்போம். நீ உட்காரு. ஆமா சாப்பிட்டியா நீ?” என்று சாய் வினவ, “சாப்பிடாம தான் கிளம்பனேன். அவர் புடிச்சு உட்காரவச்சு..” என்றவள் ஏதோ கூற வந்து, “சாப்பிடவச்சுட்டார்” என்றாள். “ஊட்டிவிட்டார்னு சொன்னா நான் என்ன கடிச்சா வைக்கப்போறேன். இனிமே எனக்கும் ஊட்டிவிட ஒரு ஆள் வந்துடும்டி” என்று சாய் வம்பிலுக்க, “பேசுடி பேசு.. இனி நானும் உன்னை கலாய்ப்பேன்” என்று அஞ்சு கூறினாள்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்க, சில உறவினரும், மைதிலியும் (சாய் அம்மா) வந்து அவள் கையில் குளம்பிக் கோப்பைகள் அடங்கிய தட்டை கொடுத்த அழைத்துச் சென்றனர். இனி தானும் சாயுடனே நிற்பது உறவினர்கள் மத்தியில் அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்றுணர்ந்த அஞ்சு, கணவனிடம் செல்லப்போக, அவன் முன்பே அமர்ந்திருந்த இடத்தில் அவனைக் காணவில்லை.
“எங்க இவர?” என்று கூட்டத்தில் கண்களை சுற்றியவள், மாப்பிள்ளையைப் பார்த்து அதிர்ந்து விழிக்க, அவன் அருகே புன்னகையோட பேசிக் கொண்டிருந்த கணவனைக் கண்டு மேலும் அவள் கண்கள் விரிந்தது.
காரணம் அங்கே மாப்பிள்ளைக் கோலத்தில் இருந்தது, அவளைப் பார்த்துக் கொண்ட மருத்துவனும், ருத்ரனின் புதிய மற்றும் உற்ற நண்பனுமான வருண் கிருஷ்ணா. பாவை சட்டென சாயைத் திரும்பிப் பார்க்க, புருவம் ஏற்றி இறக்கி, லேசாக கண்ணடித்துவிட்டு சாய் குனிந்துக் கொள்ள, ‘அதான் என்னை எழுந்து போகவிடல்லையா?’ என்று எண்ணிக் கொண்டாள்.
கைகளைக் கட்டிக் கொண்டு கணவன் புன்னகை முகத்ததையும் சிரித்துப் பேசுவதையும் ரசித்த மணையாளுக்கு இடையூராக அங்கு வந்த மைதிலி, ஏதோ வேலையைக் கொடுத்து உள்ளே அனுப்பியதைப் பார்த்த ருத்ரன் சிரித்துக் கொள்ள, குளம்பிகளை கொடுத்துவிட்டு சாய் மீண்டும் சென்று நின்றுகொண்டாள்.
முன்பே மாப்பிள்ளை புகைப்படத்தை அன்னை காட்டியதும், ‘இவர் அஞ்சுவ பார்த்துகிட்ட டாக்டராச்சே? ருத்ரன் அண்ணாகூட நல்லா பேசினாங்க?’ என்றபடி குதூகலம் ஆகியிருந்தாள். தனியே பேச அனுப்பப்பட்ட இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துவிட, பூவைத்து மூன்று மாதம் கழித்து வரும் நல்ல நாட்களில் நிச்சயம் மற்றும் திருமண தேதிகளைக் குறித்துக் கொண்டு புறப்பட்டனர்.
“ஏ சாய்…” என்று வந்த தோழியை கட்டிக் கொண்டு, “நான் செம்ம ஹேப்பி” என்று சாய் கூற, “நான் ரொம்ப” என்றாள். நண்பர்களும் நண்பர்களும் திருமணம் செய்துகொண்டால் பெருகும் அவர்களது நட்பு வட்டமும், கேலி கிண்டல்களும் என தற்போதே ரசித்துப் பார்த்த தோழிகளுக்கு அது அத்தனை ஆனந்தத்தை கொடுத்திருந்தது.
தோழியின் திருமணம், தங்களைப் போல் தங்கள் கணவன்மார்களும் நண்பர்கள் என்ற எண்ணங்கள் ஓரளவு அஞ்சிலையை பழைய நிலைக்கு திரும்ப வைத்திருந்தது. அவ்வப்போது வரும் உடல் உபாதைகள் அவளை சோர்வுறச் செய்தாலும் கணவனின் அரவணைப்பு அவளை மற்றது மறந்து தேறி வரவே வைத்தது.
துணிக்கடைக்கு செல்லும்போது சாய் உடன் அழைத்தப்போது உடல் நலன்களை கூறி அஞ்சு வரமறுத்த போதும் அவளுக்கும் ருத்ரனுக்கும் தாங்களே உடை எடுத்து வந்தனர். சாயை தற்செயலாகத்தான் பெண் பார்த்தார் வருணின் தந்தை நந்தன். ருத்ரனுடன் அன்றைய இரவு அழகியதோர் நட்புப் பயிர் வளர்த்திருந்த மறுநாள் அவளை மருத்துவமனையில் கண்டவுடன் அன்று தந்தை காட்டிய புகைப்படத்தில் அதிரடியான புன்னகையில் அசட்டலாய் நின்றவளின் பிம்பம் மனதில் வந்து போனது.
சாயும் வருண் தான் தனக்கு பார்த்திருக்கும் மணாளன் என்று அறியும் முன்பே ருத்ரனின் தோழனாக அறிந்திருக்க, அன்னை காட்டிய புகைப்படத்தில் அவனைக் கண்டவுடன் கண்களில் ஒருவித ஆர்வம் படர்ந்தது. அதுவே இந்த சம்மந்தம் கைகூடிவிடும் என்ற நம்பிக்கையையும் அவளுக்கு கொடுத்திருக்க, அவளது எண்ணம் படி அனைத்தும் நல்லபடியே நடந்தது.
அஞ்சுவைப் போல் திருமணத்தில் அத்தனை காதலான வாழ்வை எதிர்ப்பார்க்காதவள் தான் சாய். ஆனால் முற்றும் முழுதும் அவளைப் போன்ற எதிர்மறை எண்ணங்கள் கொண்டவள் இல்லை. மேலும் நல்ல கலகலப்பான குணமுடையாள் வெகுவாக வருணுடன் ஒன்றிவிட, அவளைப் போன்ற கலகலப்பாக பேசிப் பழகியிறாதவனாயினும் அவளது அந்த குணத்தை நேசித்தான் வருண்.
இப்படியே நாட்கள் கடந்து மாதங்களுக்கு வழிவகுக்க, விஜி ஏழுமாத கருதாங்கி வளைகாப்பிற்கு தயாராகினாள். ஒன்பதாம் மாதமே வளைகாப்பு வைத்துக்கொள்ள கேட்டவளை கணவன் செல்லமாக கண்டித்து, ஒன்பதாம் மாதம் விழாவில் அவளால் இயல்பாக இருக்க இயலாது என்பதற்காகவும் மாதம் தப்பி வளைகாப்பின் சோர்வில் குழந்தை சீக்கிரம் பிறந்துவிடுமோ என்ற பயத்தாலும் ஏழாம் மாதமே நடத்தக் கேட்டிருந்தான்.
அதன்படி இதோ வளைகாப்புக்கு மனமே இன்றி வித்யா வேண்டா வெறுப்பாக அழைத்ததன் பொருட்டு கிளம்ப இருந்தனர். அஞ்சிலைக்கு வர விருப்பம் இல்லாமல் இல்லை இருப்பினும் செல்வதற்கு அத்தனை பயமாக இருந்தது. ‘யாரேனும் ஏதும் சொல்லிவிடுவரோ?’ ‘தனது ஏக்கம் உண்மையில் விஜியை பாதித்துவிடுமோ?’ என்ற எண்ணங்கள் அழையா விருந்தாளியாக வந்து அவளை இம்சித்தது.
காலை தயாராகியவள் முகம் அவள் எவ்வளவு முயன்றும் பொழிவை துறந்து தான் இருந்தது. கண்ணாடியில் தன்னை சரிபார்த்துக் கொண்டிருந்த மனைவிக்கு பூ வைத்துவிட்ட ருத்ரன், “டேய்..ம்மா” என்று அழைக்க அவனை ‘என்ன’ என்பதுபோல் பார்த்தாள்.
அவளை கட்டிலில் அமர்த்தி “உனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லையாடா? அங்கவர கஷ்டமா இருக்கும்னா நம்ம போக வேணாம்டாமா. யாரும் எதும் சொல்லுவாங்களானு நினைக்காத. அம்மாவே உன்னை கேட்டுக்கத்தான் சொன்னாங்க. உனக்கு விருப்பமில்லைனா உன்னை அம்மாவீட்ல விட்டுட்டு போவேன்” என்று ருத்ரன் வினவ, அவளுக்கு என்ன பதில் கூறுவது என்றே புரியாத நிலை.
உண்மையில் போக பயந்துகொண்டு இருந்தவள், கணவன் இப்படி கேட்கவும் ‘சரி நான் அம்மா வீட்டுக்கு போறேன்’ என்று கூற சங்கோஜப் பட்டுக்கொண்டு ‘எங்கே வரவில்லை என்றால் தன்மீது நம்பிக்கை இல்லையா’ என்று நினைத்து விடுவானோ என்று எண்ணிக் கொண்டாள். குழம்பிய மனம் தானே! எப்படி சரியாக சிந்திக்கும்?
அவளது குழம்பிய முகம் கண்டவன், அவளை கூட்டிச் செல்வது நல்லதன்று என்று முடிவாகி விட, “இல்லங்க நான் வரேன்” என்று கூறினாள். “இல்லமா வேணாம். உன்னை அம்மாவீட்ல வேணும்னா விட்டுட்டு போறேன்” என்று அவன் கூற, அவள் மனம் முரண்டு, பிடிவாதத்திற்கு வித்திட்டது.
“இல்லைங்க. நான் வரேன். பரவாயில்லை” என்றவளைப் பார்த்து “டேய்.. எனக்காக சொல்லாத” என்று அவன் கூற, “இல்லைங்க. எ..எனக்கு ஒன்னுமில்லை. நான் வரேன்” என்றாள். தனது மனதின் பேச்சைக் கேட்காது அவளது கூற்றுக்கு செவி சாய்ப்பது தவறு என்பதை ஆடவன் உணர்ந்திருக்க வேண்டுமோ? கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதில் பயனில்லை என்பதை இருவருமே வேதனையோடு தான் உணர்ந்து புரிந்துக் கொள்ள வேண்டும் என்பது தான் விதியாக இருக்கும்போது அதை யாரால் மாற்ற முடியும்?
-வரைவோம் 💞