Loading

சோகத்தின் சுவடோடு அந்த ஒருவாரம் கடந்திருக்க, ஞாயிறு பொழுததில் அவளைக் காண சாய் வந்திருந்தாள். விதியே என அமர்ந்திருந்த தோழியைப் பார்க்கவே மனம் தைத்தது அவளுக்கு. இருந்தும் முகத்தில் எந்தவிதமான அனுதாபத்தினையும் காட்டாமல், கலகலத்துப் பேசி அவளை பேச வைக்க சாய் எடுத்த முயற்சி யாவும் காற்றில் தான் கரைந்தது.

 

சாய்க்கு தேநீரோடு வந்த மகாவிடம், “ரூபி இல்லையாமா?” என்று சாய் வினவ, “பக்கத்துல பிரண்டு வீடுவரை போயிருக்காடா” என்றபடி தேநீரை கொடுத்தவர், மருமகளை வருத்தமாக பார்த்துவிட்டு அமர்ந்தார். பேச்சு இவர்கள் இருவருக்குமிடையே தொடர, அவ்வப்போது அவளை ஒரு பார்வை பார்த்துக் கொண்டனர்.

 

வருணுடன் அலைப்பேசியில் உரையாடிவிட்டு வந்த ருத்ரன், மனைவி அருகே அமர, கை எப்போதும் போல எழும்பி அவள் மணிவயிற்றை வருட செல்லவும் சட்டென சுதாரித்துக் கொண்டு கரத்தை இழுத்துக் கொண்டான். நல்லவேலை அதை கவனியும் நிலையில் அவள் இல்லை.

 

சில நிமிடங்களில் அவள் தலை தானாக அவன் தோள் சாய, விழித்திருந்த விழிகள் மட்டும் விழித்தபடியே இருந்தது. “சாய்.. உன்ன பொண்ணு பார்க்க வர்றதா அஞ்சு சொன்னாலே. எப்போடா?” என்று மகா அஞ்சுவையும் பேச்சிற்குள் இழுத்துக் கொண்டு பேச, அது வேலை செய்தார் போல் தலைநிமிர்ந்து தோழியைப் பார்த்தாள்.

 

ஒரு பெருமூச்சை விட்ட சாய், “ரெண்டு வாரம் கழிச்சு பார்க்க வர்றதா சொல்லிருக்காங்கமா” என்று கூற, “எல்லாம் நல்லபடியா நடக்கும்டா” என்று மகா கூறினார். சில நிமிடங்களில் சாய் புறப்பட்டுச் செல்ல, மீண்டும் தங்கள் அறைக்குள் சென்ற அஞ்சிலை அடங்கிக் கொண்டாள்.

 

தாயுடன் சில நிமிடங்கள் பேசிவிட்டு வந்த ருத்ரன் கட்டிலில் சாய்ந்து அமர்ந்துகொண்டு தன் வயிற்றை வருடியபடி எங்கோ வெறித்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தவளைக் கண்டு உள்ளுக்குள் நூறாக உடைந்து போனான். நீர்த்துளிகளை சொரியத் துடித்த விழிகளை கட்டுப்படுத்திக் கொண்டு மனைவியின் அருகே அமர்ந்தவன் அவளைத் தன்மேல் சாய்த்துக் கொள்ள, மெல்ல மெல்ல கண்ணீர் கேவல் ஒலிக்கு வித்திட்டது.

 

அவள் தோளை ஆடவன் ஆதுரமாய் தடவிக் கொடுக்க, “பா..பாப்பா..” என்றபடி அவள் உடல் குலுங்க அழத்துவங்கினாள். அன்று மருத்துவமனையில் அழுதவள் அடுத்து அழவேயில்லை, ஆனால் பிரம்மை பிடித்தார் போல் பேச்சற்ற மடந்தையாகிப் போனாள். தற்போது வாய்விட்டு அழுதுவிட்டாவது நிம்மதியடையட்டும் என்று எண்ணிய ருத்ரன் ஏதும் பேசாது தட்டிக் கொடுக்க, “எ..ஏன் இப்படி?” என்றபடி அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

 

“ரொ‌…ரொம்ப ஆசையா இருந்தேன். பாப்பாக்கு அது செ..செய்யனும் இது செய்யனும், அப்படி வளர்க்கனும் இப்படி வளர்க்கனும்னு அவ்வளவு கனவு கண்டேன். அ..ஆனா” என்றவள் மேலும் அழ, கண்ணீர் வழியும் விழிகளுக்கு அணைபோட்டு இமைபூட்டியவன் தன் பிடியை இறுக்கிக் கொண்டான்.

 

“தி..தினம் நீ கேர்ள் பேபியா பாய் பேபியா? என்னை போல இருப்பியா? அப்பா போல இருப்பியா? அம்மா செல்லமா இருப்பியா அப்பா செல்லமானு ஆயிரம் கேள்வி கேட்பேன். மூனு மாசம் இருந்தே குழந்தைகளுக்கு வெளியே பேசுரவங்க குரல் கேட்க ஆரம்பிச்சுடும். நான் பேசினதையெல்லாம் கேட்டுட்டு இருப்பானு அவ்வளவு அவ்வளவு பேசினேன். அ..ஆனா இன்னிக்கு அந்த உயிர் இல்லாமலே போயிடுச்சு. கண்ணாடி வளையல் போட்டுட்டு வைத்துகிட்ட வச்சு ஆட்டி சத்தம் பிடிச்சுருக்கானு கேட்டு சிரிப்பேன். அஞ்சாவது மாசம் எப்போ வரும் எப்போ அசைவு தெரியும்னு காத்துட்டு இருந்தேன்” என்று அழுதபடி பேசியவள் சட்டென நிமிர, விழி மலர்ந்து அவளைப் பார்த்தான்.

 

“நி..நீங்களும் அதுக்கு ஆசையா இருந்தீங்கள்ல?” என்று அவள் வினவ, பதிலிருந்தும் அதை சொல்லத் தெரியாது குழந்தையாக விழித்தவன் கண்கள் கலங்கிப் போனது. அவன் மார்பில் தலைமுட்டி அழுதவள், “நா.. நான் பாப்பாவை தாங்க..தாங்க முடியாம போயிட்டேன். வை..வைத்துக்குள்ளயே அவளுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியலையே என்னால” என்று அழுதாள்.

 

“அப்படிலாம் இல்லடாமா” என்று அவன் கூற, மறுப்பாக தலையசைத்து “பாப்பாக்கே என்கிட்ட இருக்க பிடிக்கலை” என்று அழுதாள். சில நிமிடம் அவளது அழுகை சத்தம் மட்டுமே அறையை நிரைக்க, அழுது ஓய்ந்து விசும்பியபடி அவள் அவன்மேல சாய்ந்து கிடந்தாள்.

 

அவள் தலையை மெல்ல கோதியவன், “டேய்..ம்மா” என்க அவனைப் பாவம்போல் நிமிர்ந்து பார்த்தாள். “வேணாம்டா போதும். நிரைய அழுதுட்ட” என்று அவன் கூற, ஏதோ கூற வந்தவள் இதழ் பிரியாது விரல் வைத்து, ‘ஷ்ஷ்’ என்றவன், “நீ நிறையா பேசிட்ட. இப்ப நான் பேசுறதை கேளு” என்றுவிட்டு தன் பேச்சை தொடர்ந்தான்.

 

“பாப்பாவை உன்னால பாதுகாக்க முடியலை என்பதுதான் காரணம்னு நீ சொல்ற போல உன்னை ஒழுங்கா பார்த்துக்கலைனு நான் சொன்னா நீ ஏத்துப்பியாமா?” என்று அவன் கேட்க சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தவள் பார்வையில் அத்தனை பதட்டம் இருந்தது.

 

“சொல்லு” என்று அவன் கூற ‘இல்லை’ என்பதுபோல் தலையசைத்தாள். “ம்ம்.. அப்ப நீ மட்டும் இப்படி பேசுறது நியாயமா?” என்று கேட்டு சற்றே இடைவெளி விட்டவன், “எனக்கு புரியுதுடா. இது நமக்கு சாதாரண இழப்பு இல்லை. ரொம்ப எதிர்நோக்கிய ஒரு உயிரோட இழப்பு. இது எவ்வளவு வலியை உன் மனசுல உண்டாக்கும்னு எனக்கு புரியுது. ஆனா அதையே நினைச்சுட்டு எத்தனை நாள் இப்படியே முடங்கி இருப்ப? வெளியவாடா. இதோடவே நம்ம வாழ்க்கை நிற்கலை. ஏதோ ஒரு காரணத்தோடத்தான்‌ அந்த கடவுள் நம்மகிட்டருந்து இந்த உயிரை பறிச்சுக்கிட்டார். அதுக்காக நம்மை அப்படியே விட்டுடவா போறார்? இதை நீ தாங்கி வெளிய வரனும்மா. வேலைய விட்டுடுவேனோனு பயமா இருக்குனு அன்னிக்கு சொன்னியே, இப்போ சிக் லீவ்னு இப்படி எத்தனை நாள் இருப்ப? போதும்டா. இதுலருந்து வெளிய வா. நமக்கு இன்னும் வாழ கடலளவு காலம் இருக்கு” என்று நீலமாக பேசினான்.

 

சில நிமிடங்களின் மௌனத்திற்கு பிறகு அவள் முகத்தில் ஒரு தெளிவைக் கண்டவன், “டேய்..ம்மா” என்க அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டவள் “சாரி..” என்று காற்றாகிப் போன குரலில் கூறினாள். ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டவன், அவள் முகத்தினை தன் கைகளில் தாங்கி, “பாஸ்ட் இஸ் பாஸ்ட். இனி இதுபத்தின பேச்சு வேண்டாம்” என்று கூற, ‘ம்ம்’ என்ற தலையசைப்போடு அவனை அணைத்துக் கொண்டாள்.

 

“டேய்.. சாப்பிட வரியா?” என்று அவன் கேட்க, ‘பசிக்கலை’ என்று கூற வந்தவள் என்ன நினைத்தாளோ நிமிர்ந்து கணவன் முகம் பார்த்து அவன் நெற்றியில் மெல்ல முத்தமிட்டாள். “உங்களுக்கு சொல்லி அழகூட ஆள் இருந்திருக்காதுள்ள? என்கிட்டயும் சொல்லமுடியாம..” என்று தவிப்பாக கூறினாள்.

 

“யாரு சொன்னா அப்படி? கெட்டதுலயும் ஒரு நல்லதுபோல எனக்கு ஒரு நல்ல நட்பு கிடைச்சிருக்குடா. ஆனா அதை கவனிக்கும் நிலையில் அப்போ நீ இல்லை. உன்னை பார்த்துக்க வந்தானே டாக்டர் வருண், அவன் தான்” என்றபடி அன்று நடந்தவற்றைக் கூறினான். அதில் மெல்ல புன்னகைத்தவள், “அவருக்கு நான் ரொம்ப தேங்ஸ் சொல்லனும்” என்க,

 

“ம்ம்.. அதெல்லாம் அப்புறம் சொல்லு. இப்ப சாப்பிடவா. எதுவும் யோசிக்காத ஒரு ஒருவருஷம் போகட்டும் அப்பறம் நீ போதும் போதும்னு சொல்லுமளவு பிள்ளை பெத்துக்கலம்” என்று இதழ் மடித்த சிரிப்போடு ஆடவன் கூறியதில் “ப்ச்..போங்க” என்றபடி அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள். 

 

மனைவியின் மாறுதலைக் கண்ட நிறைவோடு சிலநிமிடம் அவளை அணைத்துப் பிடித்திருந்தவன், அவளுடன் எழுந்து உண்ணச் சென்றான். அவளிடம் உடனேயே மாற்றத்தை எதிர்ப்பார்க்காதபோதும் சின்ன சின்ன மாற்றங்களை உருவாக்கிக் கொண்டிருந்தான், ருத்ரன்.

 

அடுத்து வந்த நாட்களில் அவளை வேலைக்கு அனுப்பி அவள் மனதை திசை திருப்ப ருத்ரன் எடுத்த முயற்சிகள் ஓரளவு வேலை செய்ய, வேலைக்கு செல்பவள் தினமும் தாய்வீடு சென்று தம்பியுடன் சில நிமிடங்களை செலவழித்து விட்டு வீடு திரும்பினாள்.

 

அர்ஜுனும் எவ்வளவு வேலை இருந்தாலும் தமக்கை வந்துவிட்டாள் அவளுடன் கலகலத்துப் பேசி அவளது புன்னகையை ஒருவித திருப்தியுடன் பார்த்துவிட்டே அனுப்பி வைப்பான்.

 

இப்படியே இரண்டு வாரம் ஓடியிருக்க, சாயின் பெண் பார்க்கும் படலமும் வந்திருந்தது. காலையே சென்று அவளுக்கு ஒப்பனைகள் செய்வதாக கூறிய அஞ்சிலை நல்ல உறக்கத்தில் இருக்கவும் அதை ஒரு சிரிப்புடன் பார்த்தபடி தயாராகிய ருத்ரன், “டேய்.. ம்மா” என்று குரல் கொடுத்தான்.

 

அவனது ஒற்றை குரலுக்கே விழித்துவிட்டாள் அவள் அஞ்சிலையாகிவிட முடியுமா என்ன? அதில் சிரித்துக் கொண்டவன், “டேய்.. சாய் இப்ப ரெடியாகி உனக்காக வெயிட் பண்ணிட்டு இப்பாடா. நீ இன்னும் தூங்கிகிட்டு இருக்க” என்றபடி உலுக்கி எழுப்பினான். அடித்து பிடித்து எழுந்தவள், “என்னை ஏங்க எழுப்பலை? எவ்வளவு லேட்டாச்சு பாருங்க? நான் அவளுக்கு மேக்கப்லாம் பண்ணிவிடுறேன்னு பந்தாவா சொன்னேன். இப்ப போனா முறைச்சுகிட்டு நிப்பா” என்று புலம்பியபடி குளியலறைக்குள் புகுந்தாள்.

 

சில நிமிடங்களில் குளித்து அழகிய ஆரஞ்சு நிற நீலமான சுடிதார் அணிந்து தயாராகிய அஞ்சிலை, “போலாமா?” என்று வினவ, “போலாமாவா? நான் எதுக்கு? நீயே போ. எனக்கு வேலை இருக்கு” என்றான். “சண்டே என்ன உங்களுக்கு வேலை?” என்று அவள் வினவ, “எனக்கு ஆயிரம் வேலை இருக்கும். என் லவ்வர் எனக்காக வெயிட்டிங். உன்னை விட்டுட்டு அவளை பிக்கப் பண்ண போகனும்” என்று அடக்கப்பட்ட சிரிப்போடு கூறினான்.

 

“ம்ம்.. ஆமா ஆமா.. பத்து பேரு லைன்ல நிக்குறாங்க. லவ்வர் மட்டும் தான் வெயிட் பண்றாங்களா இல்லை பொண்டாட்டி வேற யாரும் வெயிட் பண்றாங்களா? சீக்கிரம் சொல்லுங்க. எனக்கும் ஆயிரம் வேலை இருக்கு. பொண்ணு பாக்க வர்ற எடுத்துல மாப்பிள்ளைக்கு அண்ணன் தம்பி இருந்தா கரெக்ட் பண்ணனும்” என்று அவனுக்கு சளைக்காது பேசினாள்.

 

அவள் தன்னிடம் இப்படி வாய்க்கு வாய் பேசுவதெல்லாம் அவன் விரல் விட்டு எண்ணிவிடும் அரிதான தருணங்களே. அதுவும் தன் துயர் துறந்து அவள் வெளிவருவதை அவனுக்கு படம்போட்டு காட்டும் இந்த பேச்சு அவனுக்கு நிரம்ப பிடித்திட, அவளை தன் கைகளினுள் சிறையெடுத்தவன், “ஓ.. கரெக்டெல்லாம் பண்ண வருமா உனக்கு?” என்றான்.

 

அவன் கைச்சிறையில் லேசான இன்பப் படபடப்பு எட்டிப் பார்க்க, “ஏன் ஏன்? என்னால முடியாதாக்கும்” என்று எகுறிய மனையாளை மேலும் இறுக பற்றியவன், “எங்க ஒரு ட்ரெயல் பாப்போம். என்னை கரெக்ட் பண்ணி காட்டு” என்றான். அதில் லேசான சிரிப்போடு தலைதாழ்த்தியவள், “புதுசா வேற பண்ணனுமா?” என்று முனுமுனுக்க, “ஆமா” என்றான்.

 

அதில் நாணம் கலந்த ஆர்வத்தோடு அவனை நிமிர்ந்து பார்த்தவள், “என்ன பண்ண?” என்று வினவ, “நீதான் பெரிய வித்தகாரிபோல கரெக்ட் பண்ணிடுவேன்னு சொன்ன. எங்க ஒரு வித்தைய இறக்கிவிட நானும் பாக்குறேன்” என்று ஏற இறங்க பேசியவன் வார்த்தைகளுக்கு தானாக ஒரு பொருள் திரித்துக் கொண்டவள், “ப்ச்.. எ..என்ன பேச்சிது? விடுங்க நான் போகனும்” என்றாள்.

 

“ஹலோ மேடம்.. நான் நீங்க என்ன பண்ண போறீங்கனு தான் கேட்டேன். நீங்க நினைக்குறபோலலாம் எதும் கேட்கலை” என்று கூறி வாய்விட்டு சிரிக்கும் கணவனைக் கண்டு ‘ஐயோ.. நானா தான் மாட்டிக்குறேன்போல’ என்று நாக்கை கடித்துக் கொண்டாள். அவன் நுனிவிரல்களில் எம்பி நின்றவள் அவன் காதோரம் ஒரு சின்ன எச்சில் முத்தம் வைத்து, “உங்களை மட்டும் தான் எனக்கு கரெக்ட் பண்ண தெரியும். உங்கள போல நான் ஒன்னும் யாரையும் லவ்வெல்லாம் பண்ணலை” என்று கூற, அவள் காதில் பதில் முத்தம் வைத்து, “எனக்கும் என் பொண்டாட்டிய தவிர போக்கிடம் இல்லை. சீண்டி பார்த்ததுக்கே சரசரனு சிவக்குதே..” என்றுவிட்டு நிறுத்தியவன், “கோபத்தைச் சொன்னேன்” என்றான்.

 

அதில் சிரிப்போடு அவனை அணைத்து நின்றவள் சில நிமிடங்களில் சுயம் பெற்று விலகி, “ஏற்கனவே லேட்டு” என்க, “நீ தானே லேட் பண்ண” என்று கூறியபடி காதை துடைத்துக் காட்டினான். “ப்ச்” என்று சிவந்தவளைக் கண்டு புன்னகைத்தவன் மேலும் சோதிக்காது அவளை கூட்டிக் கொண்டு சாய் வீட்டிற்கு சென்றான். ரூபி மற்றும் மகாவிடம் கூறிக் கொண்டு சென்றவளை ஒருவித நிம்மதியுடன் பார்த்த மகா பெருமூச்சுவிட, கணவன் மனைவி இருவரும் அங்கு தங்களுக்காக காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி அறியாது சென்றனர்.

-வரைவோம் 💞

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்