Loading

தங்கள் அறை கட்டிலில் துயின்றுகொண்டிருந்த அஞ்சிலையின் அருகே ருத்ரன் கண்கள் கலங்கி சுவற்றில் தலைசாய்த்தபடி அமர்ந்திருந்தான்.

அழுது வீங்கி, சிவந்திருந்த மனையாட்டியின் முகம் காண சகிக்கவில்லை அவனுக்கு. அதில் மனதில் இன்னும் பாரம் ஏறிக் கொள்ளப்பெற்றவன், அழகிய மேடாக இருந்த அவளது வயிறு அமிங்கியிருப்பதைக் கண்டு மேலும் கலங்கி அன்றைய தினத்தை அசைபோட்டான்.

 

சிகிச்சையறை வாசலில் அமர்ந்திருந்தவன் மருத்துவர்கள் வெளிவரவும் நிமிர்ந்து நோக்க, கனிகாவின் முகமே பதில் கூறியது. தன் தொண்டையை கணைத்து சரிசெய்துக் கொண்டவன், “அ..அவளுக்கு ஒன்னுமில்லைல டாக்டர்?” என்று வினவ சக மருத்துவர் ஒருவர், “உங்க வைஃப்க்கு ஒன்னுமில்லை. ஆனா பேபி அபார்ட் ஆகிடுச்சு. அஞ்சு மாசம் ஆகாலை, பேபியும் ஆப்ரேட் பண்ணவேண்டிய அவசியமில்லாததால மெடிசன் மூலமாவே குழந்தைய ரிமூவ் பண்ணியாச்சு” என்று இதுபோல பலதை கடந்துவந்ததால் பிசிறின்றி கூறிவிட்டார்.

 

ஆனால் ‘தான் சந்திக்கும் முதல் இழப்பாயிற்றே இது!’ என்ற உணர்வில் ருத்ரன் தான் நிலைகுழைந்து போனான். அவன் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாக பெருகியோட, அவன் தோள் தட்டிய மருத்துவர், “ஃபீல் பண்ணாதீங்க மிஸ்டர். இப்ப உங்க வைஃப் உடல்நிலை தான் முக்கியம். உடலளவு மட்டுமில்லாம மனதளவும் அவங்க சோர்ந்து இருக்குற தருணம் இது” என்று ஆறுதல் கூறிச் சென்றார்.

 

அவனைப் பாவமாக ஒரு பார்வை பார்த்த கனிகா, “கவலைபடாதீங்கனு சொல்லமுடியாது தான். ஆனா தைரியமா இருங்க. நான் பார்த்த வரை அஞ்சு இஸ் அ இன்டிரோவெர்ட். இங்க அவ வேலை செய்த இத்தனை மாதத்தில் சாயை தவிர அவ சகஜமா பேசுறது என்கிட்ட தான். அவளுக்கு ஒருத்தங்கள பிடிச்சு போயிட்டா ரொம்ப அட்டாச் ஆகிடுவா. இந்த இழப்பை அவ தாங்க நீங்க தான் துணை நிற்கனும்” என்று கூறிச் செல்ல, மீண்டும் இடிவிழுந்து ஒடிந்த மரமாக அமர்ந்தான்.

 

சில நிமிடங்களில் விடாது ஒலித்த அழைப்பேசி அவனை நடப்பிற்கு கொண்டுவர, அழைப்பது தாயென்று அறிந்து அவரை எதிர்கொள்ள தன் முகத்தினை துடைத்துக் கொண்டு குரலை சரி செய்தான். அழைப்பு ஏற்கப்பட்டதும் “ருத்ரா.. அஞ்சுக்கு எப்படி இருக்குப்பா? கு..குழந்தைக்கு ஒன்னுமில்லையே” என்று வினவ, வழியும் கண்ணீரை துடைத்தபடி, “க்..குழந்தை அபார்ட் ஆகிடுச்சாம் ம்மா” என்றான்.

 

“அய்யயோ…” என்றவர் அழைப்பேசியை தவறவிட்டு தலையில் அடிக்காத குறையாக அழத்துவங்கிட, அழைப்பேசியை எடுத்த ரூபி அழுதபடி, “அண்ணா… என்னாச்சுண்ணா? பா..பாப்பா?” என்று தடுமாறி நிறுத்தினாள். “பா..பாப்பா இல்லைடா” என்றவன் கூற்றில் பொங்கி அழுதவள், “நாங்க வரவா அண்ணா?” என்று வினவ, “இல்லைடா. நாளைக்கு காலைல வாங்க. அ..அவ இன்னும் கண்ணு முழிக்கலை” என்றான்.

 

சிலநிமிடம் அண்ணனுக்கு தைரியம் கூறிய சின்னவள் அன்னையை கவனிக்கச் சென்றிட, தனது பாரத்தினை சொல்லி அழ சக தோழன் கூட இல்லாத நிலையை முற்றிலுமாக வெறுத்தான். அவனுக்கு மொத்தமாக சோகத்தை கொடுத்த கடவுள் அதை சொல்லி அழவும் ஆள் இல்லாமல் தவிப்பவனுக்கு துணையாகவே அனுப்பி வைத்தது போல் அங்கு வந்த மருத்துவர் வருண், “சார்” என்றான்.

 

அவனை கண்ணீருடன் நிமிர்ந்து பார்த்த ருத்ரன், அவன் மருத்துவன் என்று தெரிந்ததும் எழுந்து நின்று, “எதும் மெடிசன் வாங்கனுமா டாக்டர்?” என்றுவிட்டு, மீண்டும் “பி..பில்லா (bill) டாக்டர்?” என்று வினவினான். “இல்ல இல்ல சார்” என்று அவன் தோள் தொட்டு அமர்த்திய அந்த இளைஞன், “நான் டாக்டர் வருண். இங்க பக்கத்து ஹாஸ்பிடல்ல தான் வர்க் பண்றேன். ஒரு ஆப்ரேஷன்காக அனஸ்தீஷியா கொடுக்க வந்தப்போ தான் உங்க வைஃப் கேஸ் சொன்னாங்க. அதான் பார்க்க வந்தேன்” என்று கூற, “அவ ஓகேதானே டாக்டர்?” என்று தவிப்பாக வினவினான்.

 

“ஹார்மோனல் இம்பேலன்ஸ்னால சிலசிமயம் இப்படி ஆவதுண்டு சார். அவங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. வீக்கா இருக்காங்க. நல்லா பார்த்துக்கோங்க. உடல் சோர்வை விட மனச்சோர்வு தான் இப்ப அதிகமா இருக்கும்” என்றவன், “நீங்க ருத்ரன் தானே?” என்று வினவ, அவனை புரியாத பார்வை பார்த்த ருத்ரன் “ஆமா டாக்டர்” என்றான்.

 

“நான் வருண் கிருஷ்ணா. ஒருமுறை எங்கப்பா ரோட்டில் மயங்கி விழுந்துட்டார்னு வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விட்டிருந்தீங்க சார்” என்று வருண் கூற, சற்றே யோசித்து நினைவு கொண்டு வந்தவன் “ஆமா டாக்டர்.. நீங்களா?” என்று உற்சாகமற்ற வெற்று குரலில் கூறினான்.

 

“சாரி சார். இப்படியான ஒரு சூழலில் உங்களை மீட் பண்ணவேண்டியதா போயிடுச்சு. நீங்க வருத்தம் படாதீங்க. நான் இன்னும் ரெண்டு நாள் இங்க தான் வேலையா இருப்பேன். எந்த உதவினாலும் என்னை கேளுங்க” என்று வருண் கூற, கண்கள் பனிய, “என்னைவிட அவதான் ரொம்ப ஆர்வமா இருந்தா டாக்டர்” என்று குரல் கரகரக்க கூறி தலைகுனிந்தவன் கன்னம் தாண்டி கண்ணீர் வழிந்தது.

 

தோழர்கள், உறவினர்கள் என்று தனது சோகங்களை சொல்லி அழ யாருமற்ற ஒருவனிடம், யாராவது வந்து, ‘என்னாச்சு?’ ‘ஒன்னுமில்லை’ ‘எல்லாம் சரியாகிடும்’ ‘எதுனாலும் என்கிட்ட சொல்லு/கேளு’ என்று கூறிவிட மாட்டாரா என்ற ஏக்கம் விரவியிருக்கும். தனது அனைத்து சோகங்களும் மனைவியிடம் மட்டுமே என்றிருப்பவனுக்கு அவளிடம் தனது சோகத்தினை காட்டமுடியாது என்ற சூழலில் வருண் வந்து பேசவும் மடைதிறந்த வெள்ளமாக கண்ணீர் வடிக்கத் துவங்கிட்டான்.

 

அவன் தோள் தொட்ட வருண், “சார்..” என்க, “பாவம் டாக்டர் அவ. ரொம்ப இன்டிரோவெர்ட். கல்யாணம் பண்ணின என்கிட்டயே அவ்வளவு தயக்கத்தோட இருந்தவ. பழகாத யார்கிட்டயும் பேசமாட்டா. ஆனா பழகிட்டா உயிரையே விடுவா. ஒவ்வொரு நாளும் குழந்தை பற்றிய பேச்சோடதான் அவள் நாள் துவங்கவும் செய்யும் முடியவும் செய்யும். கண்ணு முழிச்சு அவ கேட்கப்போற கேள்விக்கு எப்படி பதில் சொல்லப்போறேனோ தெரியலை” என்றவன் பேச்சு மொத்தமும் மனைவியின் கவலைகளைப் பற்றியே இருந்தது.

 

தனது சோகங்களை சொல்லி அழ யாருமற்று விம்மும் குழந்தையை போன்று தன் கண் முன் இருப்பவனைப் பார்த்த அந்த மருத்துவனுக்கு, தற்போது ருத்ரனுக்கு தேவை மனம் விட்டுப் பேச ஒருநபர் மட்டுமே என்பதைப் புரிந்துக் கொள்ள, “ருத்ரன்” என்று அவன் தோளில் கை போட்டான்.

 

அவனிடம் அழுகை மட்டுமே மிஞ்ச, “அவங்க வருத்தப்படுவாங்கனு மட்டுமே சொல்றியே. உனக்கு வருத்தமா இல்லையா?” என்று ஒருமையில் உரிமையை வளர்க்கத்துவங்கியவனை இருந்த சோகத்திற்கு அணைத்துக் கொண்ட ருத்ரன், “மனசு வலிக்குது.. அ..அவளை எப்படி எதிர்கொள்ளப்போறேனோனு பயமா இருக்கு. ரொ..ரொம்ப ஆசையா எங்களுக்குனு உயிர் வரப்போறதா இருந்தேன். இ..இப்படியாகும்னு நினைச்சுப் பாக்கலை” என்று அழத்துவங்கினான்.

 

அவன் தோள் தட்டி ஆறுதல் படுத்திய வருண் ஏதும் பேசவில்லை. ஆனால் அவனை தன் ஆறுதலின் மூலம் பேச வைத்துக் கொண்டிருந்தான். ‘ஹியூமன் சைகாலஜி’ என்று காகிதங்கள் தாங்கிய எழுத்துக்களை மட்டுமே கண்டிருந்தவனுக்கு மருத்துவனான நொடிமுதல் எழுத்துக்களின் உருவங்களை ஒவ்வொருவரிடமும் காணும் உணர்வு. 

 

அதில் தனது புதுப்பாட வடிவாய் இருந்த ருத்ரனை தட்டிக் கொடுத்தவன், “ம்ம்..” என்று பேச ஊக்கப்படுத்த, “நே..நேத்துதான் எனக்கு ஆசையா கிப்டெல்லாம் கொடுத்தா. ஒருநொடி நான் அவ எங்களோட குழந்தைனு கற்பனை பண்ணி பார்த்து உடல் புல்லரிச்சுப்போனேன். அ..ஆனா” என்று கண்ணீரில் கரைந்தான். ‘ஆண்கள் அழமாட்டர்’ என்று தான் கேட்ட ஒரு கூற்றை இதோடு நூறாவது முறையாக பொய்யாக்கிய இந்த ஆண்மகன் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்க, அந்த கண்ணீர் துளிகளில் தன் சட்டையை ஈரம் செய்துக் கொண்டு அந்த உடையை தனது பாடங்களின் ஆதாரமாய் கொண்டான்.

 

“தந்தையின் துணை இருக்க வேண்டிய நேரத்தில் தந்தைய இழந்தேன். தோழர்களோட நட்பை வளர்க்க வேண்டிய நேரத்தில் குடும்பத்தை தாங்கவேண்டி நட்பை இழந்தேன். அப்ப அது எனக்கு ஒரு பொருட்டா தெரியலை. இ..இன்னிக்கு என் கஷ்டத்தை சொல்லி அழக்கூட யாரும் என்கூட இல்லைனு நினைக்க நினைக்க வெறுமையா இருக்கு” என்று ருத்ரன் கூற, அவன் தோள் தட்டி, “அழாத மச்சி. நான் இருக்கேன். தங்கச்சிக்கு ஒன்னும் இல்லை. ஒன்றை கடவுள் பறிச்சா அதைவிட பெரிதா ஏதோ உனக்கு கொடுக்கப்போறார்னு இருக்கும். ஒன்னுக்கு ரெண்டா திருப்பிக் கொடுப்பார்னு நம்பு” என்று உறவுமுறை சொல்லி அழைத்து ஒரு அழகிய பந்தத்திற்கு வித்திட்டான்.

 

சில நிமிடங்கள் ருத்ரனை பேசவைத்து ஆறுதல் செய்தவன், தனது அலைப்பேசி இலக்கங்களை அவனிடம் கொடுத்து, “எதுனாலும் சொல்லு மச்சி. நான் இருக்கேன். ரெண்டு நாள் எனக்கு இங்க தான் டியூட்டி. எந்த உதவினாலும் கேளு. தங்கச்சிய பார்த்துக்கோ” என்று கூற, தன் கண்ணீரை அழுந்த துடைத்துவிட்டு நிமிர்ந்தவன், வலியும் பரிபூரன நிறைவும் கலந்து புன்னகை ஒன்றை உதிர்த்து, “கடவுளா பார்த்து அனுப்புன போல வந்தீங்க. இருந்த சோகத்தை உங்கிட்ட சொல்லி அழுதுட்டேன். உங்க நேரத்தை விரயம் செஞ்சதுக்கு சாரி டாக்டர்” என்று கூறினான்.

 

“எனக்கும் உன் ஏஜ் தான் இருக்கும் மச்சி. ‘நீ’ ‘வாடா’ ‘போடா’ ‘மச்சி’ இப்படி சொல்லியே கூப்பிடு. சொல்லி அழ ஒரு தோழனா இருக்கேன்” என்று வருண் நட்புக்கரம் நீட்ட, முழு மனதுடன் கைபற்றி உலுக்கி, அணைத்தவன், “தேங்ஸ்டா. மனசுக்கு நிம்மதியா இருக்கு” என்று கூறினான்.

 

‘மனசுக்கு நிம்மதியா இருக்கு..’ இந்த ஒரு வரிக்காகத் தானே இத்தனை நேரம் அவன் சோகங்களை வருண் கேட்டது! அந்த வரிகொடுத்த திருப்தியுடன் புன்னகைத்த வருண், “டேக் கேர்டா. நாளைக்கு மார்னிங் மீட் பண்ணுவோம்” என்றுவிட்டுச் சென்றான்.

 

மறுநாள் காலை எழுந்தவளது அழுகை மட்டுமே அங்கு மருத்துவமனையில் எதிரொலித்திருக்கும். “எ..எங்க நம்ம பாப்பா? எ..என்ன ஆச்சு” என்று கட்டிலில் அமர்ந்த நிலையில் அவள் கத்திக் கதற, கையில் போடப்பட்டிருந்த ஊசிகளின் நகர்வு கொடுத்த வலி கூட அவள் மூளையை சென்றடையவில்லை. 

 

மெல்ல அவளை நெருங்கி அமர்ந்த ருத்ரன் சட்டையை பற்றியவள் பித்து பிடித்த நிலையில், “ந..நம்ம பாப்பா.. இ..இல்லையா?” என்று கண்களில் கண்ணீரோடு ‘இல்லையென்று சொல்லிவிடாதே’ என்ற எச்சரிக்கையையும் அவள் தேக்கி வினவ, கண்களிலிருந்த கண்ணீரை, அழுந்த கண்மூடி வெளியே தள்ளியவன், ‘ஆம்’ என்பதுபோல் தலையசைக்க, “இல்ல..” என்று அழுதபடி அவனை அணைத்துக் கதறினாள்.

 

தானும் அழுகையோடு அவளை இறுக அணைத்தவன் தன் மார்பில் அவள் முகம் புதைத்த, “டேய்மா.. வேணாம்டா. அழாதடா” என்க, “அப்போ நிஜமாவே நம்மல விட்டுட்டு போயிட்டாளா?” என்று கதறியபடி அவன் தோள் சாய்ந்து விம்மினாள். அவ்வளவு எளிதில் அவள் கண்ட கனவுகளிலிருந்தும், ஆசைகளிலிருந்தும் அவளால் வெளியே வரவே முடியவில்லை. ஆசைபட்டு இழந்துவிட்டால் அதன் வலியை தன்னால் தாங்க முடியாது என்று அறிந்து தானே திருமணம் கூட கசப்பு தான், ஆசையை வளர்க்காதே, என்று தனக்குள் விதைத்திருந்தாள்!

 

அழுது அழுது ஓய்ந்தவள் மயங்கி சரிய, அவளை அப்படியே அணைவாகப் பிடித்திருந்தவன் மெல்ல படுக்க வைத்தான். அப்போதே உள்ளே வந்த வருண், “ருத்ரா” என்க, அவனை திரும்பிப் பார்த்த ருத்ரன், “மயங்கிட்டாடா” என்றான். “ம்ம்” என்ற தலையசைப்போடு சென்று அவள் நாடிதுடிப்பை பரிசோதித்துவிட்டு செவிலியரிடம் சில ஊசிகளைப் போட பரிந்துரைத்துவிட்டு ருத்ரனோடு வெளியேறினான்.

 

கண்கள் கலங்க நின்றவனைக் கண்டு, “எல்லாம் சரியாகிடும்டா” என்று வருண் கூற, ருத்ரன் மற்றும் அஞ்சிலை வீட்டார் அங்கு வந்து சேர்ந்தனர். மகாலட்சுமி மூலம் விடயம் அறிந்த யாவரும் கண்ணீருடன் அவ்விடம் வந்திருக்க, அவர்களை ஒருப் பார்வை பார்த்த வருண், ருத்ரன் தோள் தட்டி, ‘ஒன்னுமில்லை போ’ என்பது போல் சைகை செய்துவிட்டுச் சென்றான்.

 

“மா.. மாப்பிள்ளை” என்று கண்ணீருடன் அழைத்த குணா ருத்ரன் கரங்களைப் பற்றிக் கொண்டு கண்ணீர் வடிக்க, அனைவரையும் ஓர் பார்வைப் பார்த்து, “ஹார்மோனல் இம்பேலனஸ்னால குழந்தை அபார்ட் ஆகிடுச்சாம். அ..அஞ்சுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. கா..காலைல முழிச்சு விஷயம் தெரிஞ்சு ரொ..ரொம்ப நொந்து போயிட்டா. இப்ப தான் தூங்க வச்சிருக்கு. ப்ளீஸ் யாரும் அவமுன்ன அழுதுட வேணாம். ஏ.. ஏற்கனவே நொந்துபோயிருக்கா” என்று பொதுவாகக் கூறினான்.

 

கண்ணீரோடு யாவரும் ஒரு இருக்கையில் அமர்ந்திட, அவன் அருகே வந்தமர்ந்த அர்ஜுன் “அஞ்சுக்கு ஒன்னுமில்லை தானே மாமா?” என்றான். அவன் தோள் தட்டி சமன் செய்தவன், “ஒன்னுமில்லை அர்ஜுன்” என்றான். “பாவம் மாமா அவ” என்றவன் மாமன் தோள் சாய்ந்து அழுதிட, அவன் முதுகை வருடி சமாதானம் செய்தவன் மனதில் வருணுக்கு நன்றி சொல்லிக் கொண்டான்.

 

விடயம் தெரிந்து வந்த சாயும் கண்ணீரோட வந்து தோழி உறங்கும் நேரம் பார்த்துவிட்டு துக்கம் தாளாமல் சென்றிட, அன்றைய நாள் கடந்து அடுத்த நாள் நடைபிணமாக வீடு வந்தாள் அஞ்சிலை. வந்தவளை ஏதும் யோசிக்க விடாது ஆடவன் உண்ண வைத்து உறங்க வைத்திட ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றவள் அருகில் ஆழி பேரலயாய் வாட்டிய சோகத்தோடு அமர்ந்திட்டான்.

 

அப்போது சைலன்டில் வைக்கப்பட்டிருந்த அலைப்பேசி, அதிர்ந்து கொடுக்கவே, அதன் புறம் பார்வையை திரும்பியவன், அழைப்பது வருண் எனத் தெரிந்துகொண்டு, பேசியுடன் பால்கனி வந்தான்.

 

அழைப்பை ஏற்றவன், “சொல்லுடா” என்க, “அஞ்சு தூங்கியாச்சா?” என்று வருண் வினவினான். “ம்ம்.. தூங்கிட்டா” என்றபடி ருத்ரன் பெருமூச்சுவிட, “விடு மச்சி. அவ வயசுக்கும் மெசூரிட்டிக்கும் இது பெரிய இழப்பு. தாங்கி தாண்டி வர டயம் எடுக்கும். நீ எதுவும் யோசிக்காத. எல்லாம் ஓகே ஆகிடுவா. எதுனாலும் எனக்கு பேசு. அன்ட் எதாவது எமெர்ஜென்ஸினா கால் பண்ணு” என்றான்.

 

சன்னமான புன்னகையுடன் “கண்டிப்பாடா” என்று ருத்ரன் கூற, “ம்ம்டா. நீ சாப்பிட்டியா?” என்று வருண் வினவினான். சிலநிமட உரையாடல் முடிவடைய, தெளிந்த வானை பார்த்தபடி நின்றவன் நீண்ட பெருமூச்சை வெளியிட்டுவிட்டு உள்ளே சென்றான்.

-வரைவோம் 💞

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்