“ஏ கேர்ள் ஒழுங்கா உட்காரு.. விழுந்துடப் போற” என்று சாய் அதட்ட, “ஒழுங்காதான்டி உட்கார்ந்திருக்கேன்.. நீ உருட்டிகிட்டே போகமா அந்த ஆக்சிலரேடர கொஞ்சம் யூஸ் பண்ணிப்போ” என்று அஞ்சிலை கூறினாள். “நீ உட்கார்ந்திருக்குறதே நழுவி விழுந்துடப்போறபோல இருக்கு. இதுல நான் ஆக்சிலரேடர திருகிட்டு போகனுமாக்கும். பொறுமையாவே போறேன். உள்ள என் பேபிடால் இருக்கு” என்று சாய் கூற, சன்னமான சிரிப்போடு, “அம்மா ஏதோ வரன் வந்திருக்குறதா சொன்னாங்க. எப்போ பொண்ணு பார்க்க வராங்களாம்” என்று அஞ்சு வினவினாள்.
“முதல்ல மாப்பிள்ளைக்கு எக்ஸ், கரென்ட் லவ் எதாவது இருக்கானு விசாரிச்சு என் போட்டோவ காட்டி எல்லாம் ஓகே பண்ணிட்டு வரச்சொல்லுங்கனு சொல்லிட்டேன். சும்மா பொம்மை போல ரெடியாகிட்டு போய் நின்ன பிறகு இது சொட்ட அது நொட்டனு எதாவது சொன்னா கடுப்பாகிடுவேன்னு சொல்லிட்டேன்” என்று வந்துபோன இரண்டு வரன்களும் தட்டிக்கழிந்த கடுப்பில் சாய் கூற, அவள் தோளை ஆதூரமாய் பற்றியவள், “எல்லாம் நல்லதாவே நடக்கும் சாய்” என்றாள்.
“அஞ்சல.. எனக்கு கல்யாணம் நடக்கலைனு கவலையெல்லாம் இல்லை. எனக்கு இன்னும் வயசு இருக்கு. ஆனா ஒழுங்கா முடிவெடுக்காம வந்துட்டு பிறகு போட்டோல பாக்க புடிச்சுது நேர்ல புடிக்கல, எனக்கு ஆள் இருக்கு தேள் இருக்குனு அவங்கவங்க காரணத்துக்கு என்னை படுத்துறாங்க. நேத்து பக்கத்துவீட்டம்மா சும்மா இல்லாம ரெண்டு வரன் தட்டிப்போச்சே இது நல்லா விசாரிச்சுக்கோங்கனு அட்வைஸ் வேற. யார் யாரோ பேசுறதுலாம் தான் வெறுப்பா இருக்கு. எனக்குனு கடவுள் யாரை எழுதிவச்சிருக்காரோ அவரை கல்யாணம் பண்ணிக்க தான் போறேன். இதில் இப்படி குறுக்க வரும் சில பூமர்ஸை கண்டா வெறுப்பா இருக்கு” என்று சாய் நீலமாகப் பேச, “ம்ம் புரியுதுடி” என்று அஞ்சு கூறினாள்.
“இந்த மாப்பிள்ளை டாக்டராம். வீடும் பக்கம் தானாம். அம்மா கிடையாதாம். அப்பா அன்ட் காலேஜ் படிக்குற ஒரு தம்பி. பொறுப்பானவர், நல்லவர், வல்லவர் ப்ளா ப்ளா ப்ளா.. சொந்தமா வீடிருக்காம், ஒரு காரிருக்காம், நல்ல மனசிருக்கானு நான் தான் ஆராய்ஞ்சு முடிவெடுக்கனுமாம்” என்று சாய் கூற, அதில் சிரித்துக் கொண்ட அஞ்சு, “அதெப்படி ஆராய்வ?” என்றாள்.
“வேறெப்படி? வாழ்ந்து பார்த்து தான் தெரிஞ்சுக்கனும். இதுக்குனு ஆராய்ச்சியாளர்களையா கூட்டிட்டு வரமுடியும்? நேர்ல பேசி புடிச்சா ஓகே பண்ணிட்டு அதிரடியா வாழ்ந்து அசத்தலா ரெண்டு பிள்ளைய பெத்து புரிஞ்சுகிட மாட்டேன்” என்று சாய் கூற, மேலும் சிரித்த அஞ்சு, “அடியே.. முடியலைடி உன்னோட” என்றாள்.
பெண்ணவள் வீடு வந்திட, “ம்ம்.. என்னிக்கு பொண்ணு பாக்குறாங்க என்னனு சொல்லு” என்று அஞ்சு கூறியதற்கு “கண்டிப்பா.. வாங்கி வைக்கும் ஸ்வீட்டு பாக்ஸை காலி பண்ண ஆள் வேணும்ல” என்று கேலி செய்துவிட்டு புறப்பட்டாள்.
உள்ளே வந்த அஞ்சு சென்று குளித்து உடைமாற்றி வர, “அஞ்சுமா.. எதாச்சும் ஆர்டர் கொடுத்திருந்தியா? யாரோ பெட்டி ஒன்னு கொண்டு வந்திருக்காங்க” என்று மகா அழைத்தார். “ஐ வந்துடுச்சா” என்றவள் சென்று தன் அலைப்பேசியை எடுத்து வந்து, பணத்தை செலுத்திவிட்டு “ஒன்னு இந்த ரூம்ல இன்னொன்னு இந்த ரூம்ல பிக்ஸ் பண்ணனும்” என்றாள். அதன்படி முதலில் அவள் அறையில் வேலைகள் முடிய, அடுத்து ரூபி அறைக்குச் சென்றனர்.
சமையலறையில் போட்டது போட்டபடி அடுப்பில் கொதிப்பதால் சென்று காணமுடியாத மகா தங்கிவிட, அந்த நபர் சென்றதும் “அத்தை வாங்க” என்று அஞ்சு அழைத்தாள்.
“என்னதுடா அது?” என்றபடியே அவளுடன் சென்றவர் ருத்ரன் அறை பால்கனியில் மாட்டியிருந்த ஒருவர் அமர்ந்து ஆடும்படியான மர ஊஞ்சல் ஒன்று தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டார்.
“அவர் சொல்லிருக்காரு அத்தை.. பால்கனில ஒரு ஊஞ்சல் போடனும்னு ஆசைனு.. அதான் அவருக்காக வாங்கினேன். ரூபிக்கு ஊஞ்சல்னா பிடிக்கும்ல அதான் அவரூம்லயும் மாட்டுறதுக்கு சேர்த்து வாங்கினேன்” என்றபடி ரூபி அறையையும் காட்டினாள்.
புன்னகையுடன் மருமகள் கன்னம் வருடியவர், “எதுக்குடா ரெண்டு? ஒன்னு வாங்கினா போதாதா?” என்று வினவ, “இல்லை அத்தை ஒன்னு வாங்கி ஹால்ல மாட்டலாம்னு தான் நினைச்சேன். ஆனா அவர் பால்கனில போடனும்னு தான் ஆசைப்பட்டார். அதான் ரெண்டா வாங்கிட்டேன்” என்று அஞ்சு கூறினாள்.
புன்னகையுடன் அவள் கன்னம் கில்லியவர், “அழகா இருக்குடா” என்க, சிரித்த முகமாக அவரை அணைத்துக் கொண்டாள். அப்போதே ரூபியும் வந்துவிட, “ஐ அண்ணி.. சூப்பரா இருக்கு” என்று குதூகலித்தாள். “அ.. அத்தை” என்று தயங்கியபடி அழைத்தவள், “அ.. அவர்கிட்ட சொல்லாதீங்க. ந.. நான் சர்பிரைஸா ரூம்ல காட்டிக்குறேன்” என்று கூற “ம்ம்.. ம்ம்” என்று ரூபி சிரித்தாள்.
“ஏ ரூபி..” என்று மகளை கண்டித்தவருக்கும் சிரிப்பு வந்திட, “சரிடா..வா” என்று அவளை கூட்டிச் சென்று பழங்களை கொடுத்தார். இரவு நெருங்க நெருங்க அவளுக்குள் குதூகலம் கூடிப் போக, கணவன் வந்ததும் ஆயிரம் கோடி சூரியனாக அவள் கண்கள் மிலிர்த்தது. எப்போதும் போல் ஒரு புன்னகையுடன் உள்ளே சென்றவன் பின்னோடே சென்றவள் அவன் குளித்து வந்ததும், “லேட்டாச்சு சாப்பிட வாங்க” என்றாள்.
உணவுவேளை முடிந்து யாவரும் உறங்கச் சென்றிட, பால்கனி கதவைத் திறக்கச் சென்றவன் முன் சென்று நின்றவள், “நான் தான் திறப்பேன்” என்றாள். அவளை புரியாது பார்த்த ருத்ரன் “என்னடா?” என்க, “திரும்பி நில்லுங்க” என்றாள். சன்னமான சிரிப்புடன் அவன் திரும்பிக் கெள்ள, கதவை திறந்துவிட்டு, அவன் முன் வந்து “கண்ண மூடுங்க” என்றாள்.
அவள் உயரத்தை கண்களால் அளந்தவன் இதழ் மடித்த சிரிப்புடன் “ஏன் கண்ண நீயே மூடுறது” என்று கூற, “என்ன சார் கொழுப்பா? பாப்பா வைத்துல இல்லைனா எம்பிடுவேன். போனா போதுனு சர்பிரைஸ் கொடுக்கலாம்னு பார்த்தா என்னையே கலாய்க்குறீங்க” என்றாள். “அடியே கேடி.. வாய் வாய்.. என்ன பேச்சு” என்று அவள் வாயில் அடித்தவன், “பட் இதுவும் நல்லா இருக்கு.. உனக்குள்ள இப்படியொரு வாயாடியா” என்றபடி அவள் நெற்றியில் முட்டினான்.
அதில் சிரித்துக் கொண்டவள், அவனை கூட்டிக் கொண்டு பால்கனிக்கு வந்து காட்ட, இன்பமாக அதிர்ந்து நின்றான். “நம்ம கல்யாணம் ஆன அன்னிக்கு நான் இங்க வந்த முதல் நாள் நீங்க சொன்னீங்க இங்க ஒரு ஊஞ்சல் போடனும்னு. எப்படி உங்க ஆசைய நிறைவேத்திட்டேனா?” என்ற மனைவியை திரும்பிப் பார்த்தவன், சன்னமான சிரிப்போடு புன்னகைத்தான்.
அவனை கூட்டி வந்து அதில் அமர்த்தியவள், புருவங்களை ஏற்றி இறக்க, “நீ எங்க உக்காருவ?” என்று அடக்கப்பட்ட சிரிப்போடு கேட்டான். “ஏன் இடமில்லை?” என்று அவன் மடியில் அமர்ந்து அவன் கழுத்தை கட்டிக் கொண்டவள், “ஸ்டிராங்கா பார்த்து தான் வாங்கினேன்” என்று கிசுகிசுப்பாக சொல்லி தலைகுணிந்துக் கொண்டாள்.
அதில் சிரித்தபடி அவள் இடைசுற்றி பிடித்தவன், “ஏ கேடி.. என்ன இன்னிக்கு உன் ஆக்டிவிடீஸ்லாம் பயங்கரமா இருக்கு” என்க, ‘ம்ஹும்’ என்று மறுப்பாக தலையாட்டி அவன் மார்பில் சாய்ந்தாள். அவளை தட்டிக் கொடுத்தபடி, “எதிர்ப்பார்க்கவே இல்லைடா. ரொம்ப அழகான சர்பிரைஸ்” என்று அவன் கூற, என்ன நினைத்தாளோ, நிமிர்ந்து அவனிதழ்களை சிறையெடுத்தாள்.
அவளது திடீர் இதழணைப்பில் அதிர்ந்தவன், மனைவியின் இதழ்களுக்கு தன் இதழ்களை ஒப்புக் கொடுத்து, பின் அவளிதழை தனதாக்கிக் கொண்டான். சில நிமிடங்களில் அவளை விடுவித்தவன், தன் மார்பில் வெட்கம் மேலிட தலைசாய்த்து இருந்தவள் கன்னம் வருடி, “அஞ்சுமா..” என்றான். அவனை பாவமாக நிமிர்ந்தா பார்த்தவள், “இள..” என்று கூறுவர, “ஷ்ஷ்” என்று அவள் வாயில் இதழ்வைத்தவன், “அஞ்சுமா” என்றான்.
முகம் சுருங்க குனிந்தவள் கண்டு புன்னகைத்தவன் “டேய்.. பாப்பாடா” என்று அவன் கூற, அவனை அணைத்துக் கொண்டு “ம்ம்” என்று முனகலாக ஒலித்தது அவள் குரல். அவளை அணைத்துக் கொண்டு தட்டிக் கொடுத்தவன், “வாமா போய் படுப்போம்” என்க, “தூக்கம் வரலை” என வீம்புப்பிடித்தாள், கண்கள் நிறம்ப தூக்கத்தை வைத்துக் கொண்டே.
அப்படியே தட்டிக் கொடுத்து மனைவி தூங்கவும் அவளை கட்டிலில் கிடத்தியவன், கதவுகளை பூட்டிக் கொண்டு வந்து படுக்க, அவனை அணைத்துக் கொண்டு நித்திரையை பாவை தொடர்ந்தாள். ஏனோ அவள் முகம் கண்டவனுக்கு மனம் நெருடலாக இருந்தது. அவள் கேட்டதை கொடுத்திருக்க வேண்டுமோ? இனி அதற்கு உனக்கு சந்தர்ப்பத்தை சில காலம் நான் கொடுக்க மாட்டேன் என்று மேலிருந்து கொண்டு யாரோ கூறிய உணர்வு!
ஒருநொடி தன் உணர்வுகள் கொடுத்த உந்துதலில் உடல் பதறிப்போனவன் மனைவி தலையை வருடி அவள் நெற்றியில் முத்தமிட்டுப் படுத்தான்.
மறுநாள் காலை அழகிய எழில் கொஞ்சும் கிளிகளின் கீச் கீச் ஒலிகளால் எழுப்பப் பெற்றவன், மனைவி கன்னம் வருடிவிட்டு எழுந்து சென்று தனது காலைப் பணிகளை முடித்து தயாராகினான்.
ஆடவன் குளித்து முடித்து உடைமாற்றிவிட்டும் அவள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டவன், மெல்ல அவளிடம் நெருங்கி அமர்ந்து, “டேய் பாப்பா..” என்றான். அவளோ ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, “பாப்பா.. டேய்மா” என்று அவன் தொடர்ந்து ஐந்து நிமிடங்களாக எழுப்பியதன் பலனாக மெல்ல அசைந்து கொடுத்து எழுந்தவள், கண்களை கசக்கியபடி, சாய்ந்து அமர, “என்னாச்சுமா? உடம்பு முடியலையா?” என்று வினவினான்.
“இல்லங்க.. ஒருமாதிரி டயர்டா இருக்கு” என்றவள் அவன் தோள் சாய, “லீவ் வேணும்னா எடுத்துக்குறியாமா?” என்றான். “இல்லைங்க.. இப்ப தானே செக்கப்கு எடுத்தேன். அடிக்கடி எடுக்குறபோல இருக்கும்” என்று அவள் கூற, “அதுக்கென்னடா பண்ண? உடம்பு முடியாம வறுத்திக்காத” என்றான்.
சில நிமிடம் மௌனம் காத்தவள், மெல்ல எழுந்து “ஓகேதான் நான் போறேங்க. கொஞ்சம் டயர்டா இருக்கு அவ்வளவு தான்” என்று கூறியதும், சரியென்று ஒருமனதாக தலையசைத்தான்.
பின் தானும் அவசர அவசரமாக தயாராகி வந்தவள் மாமியார் கொடுத்த உணவை ஏனோ தானோவென கொறித்து முடிக்க, சாய் வந்து சேர்ந்தாள். மனையாள் உள்ளே கைப்பையை எடுக்க சென்ற இடைவெளியில் சாயிடம் வந்தவன், “அவ சரியில்லைடா. ஒருமாதிரி சோர்வா இருக்கா. கொஞ்சம் என்னனு பார்த்துக்கோ. ரொம்ப முடியலைனா எனக்கு சொல்லு நான் வந்து கூட்டிட்டு போறேன்” என்று கூற “அதான் முகமே சோர்வா இருக்கா அண்ணா?” என்று கேட்டவள், “சரிண்ணா. நான் பார்த்துக்குறேன்” என்று கூறினாள்.
பின் பாவைகள் இருவரும் புறப்பட்டிட, பிசைந்த மனதை நீவிக்கொண்டு தானும் புறப்பட்டான்.
சோர்வாக காணப்பட்ட தோழியைப் பார்த்த சாய், “அஞ்சு ஆர் யூ ஓகே?” என்று வினவ, “நல்லாதான் இருக்கேன் சாய். கொஞ்சம் டயர்டா இருக்கு” என்றாள். “லீவ் எடுக்கலாம்ல?” என்று தோழி கேட்க, “இல்ல நான் ஓகேதான் சாய்” என்றாள்.
அன்றைய நாள் முழுதும் ஒருவித சோர்வுடனே நகர்ந்திட, வீடு வந்ததிலிருந்து படுத்தே கிடந்த மருமகளிடம் வந்த மகா, “என்னாச்சுடா? உடம்பு எதும் பண்ணுதா?” என்று வினவியது, “என்ன பண்ணுதுனு சொல்ல தெரியலை அத்தை. ஒருமாதிரி டயர்டா இருக்கு. அவர் வந்துட்டாரா? ஹாஸ்பிடல் வேணா போயிட்டு வரவா?” என்றவள் குரலில் பயப்படபடப்பு நிரம்ப இருந்தது.
அதை உணர்ந்த மகா, அவள் தலைவருடி, “ஒன்னுமில்லைடா. நீ பதட்டம் படாத. நான் அவன வரசொல்றேன். நீ படு” என்றவர், அவளிடம் தன் பதட்டத்தை காட்டாவிடினும் தன் மகனுக்கு அழைத்து பதட்டத்தோடு பேசினார்.
“முகமே சரியில்லைடா. என்னமோ பண்ணுதுனு சொல்றா. ரொம்ப பயந்து இருக்கா. வந்து ஒருஎட்டு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போ கண்ணா” என்று மகா கூற, “நான் வரேன்மா” என்றான். அண்ணிக்கு பழச்சாறு போட்டுவந்த ரூபி, அவளை மெல்ல எழுப்பி, “இதை குடிங்க அண்ணி. ரிலாக்ஸா இருக்கும்” என்க, “வச்சுட்டு போடா. பிரஷ்ஷாகிட்டு சாப்பிடுறேன்” என்றாள்.
சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்திருந்தவள், அடிமுதுகு சுருக்கென்று வலியெடுப்பதைப்போல் உணர்ந்தாள். மெல்லவே எழுந்தவள் தள்ளாடியபடி குளியலறைக்குள் செல்ல, வீட்டிற்கு உள்ளே நுழைந்த ருத்ரனின் செவிப்பறைகளை தன்னவளின் கதறல் சத்தமே தீண்டியது.
கூடத்தில் அமர்ந்திருந்த ரூபி மற்றும் மகாவும் பதறிப்போக, தன் பை மற்றும் தலைக்கவசத்தை திசைக்கு ஒன்றாக சிதறவிட்டவன் பதட்டத்துடன் உள்ளே சென்று “டேய்..” என்றான். குளியலறையில் சத்தம் கேட்கவும் பதறிக்கொண்டு சென்றவன், கதவின் மீது கைவைக்க, அது திறந்து கொண்டது.
சுவற்றில் சாய்ந்து குழாயை ஒரு கையாலும் தன் மணிவயிற்றை மறுகையாலும் பிடித்திருந்த அஞ்சிலை, “ஆ…” என்று வலியோடு கதற, அவள் காலடியில் குறுதிக் குளம்கட்டி இருந்தது. அதைக் கண்ட நொடி ஆடவன் “டேய்.. மா..” என்று அவளைத் தாங்க, அவன் தோளில் சரிந்தவள் “பா..பாப்பா” என்றபடி மயங்கினாள்.
அவளை பதட்டத்துடன் வெளியே கூட்டி வந்தவன், “ம்மா.. ஆட்டோ அண்ணாவ சீக்கிரம் வரச்சொல்லுங்க” என்று ஏற்கனவே தான் வரும்படி கூறியிருந்த தெரிந்த ஆட்டோ ஓட்டுனரை விரைவாக வரும்படி கூறப் பணித்தான்.
பதட்டமும் கண்ணீருமாக ரூபி அழைப்பேசி எடுக்கும்போதே வண்டி வந்துவிட, தன் மணையாளை தூக்கிக் கொண்டவன், “ம்மா.. ரூபி தனியா இருப்பா. நீங்க இருங்க. நான் மட்டும் கூட்டிட்டு போறேன். பாத்து” என்ற கரகரத்த குரலில் கூறிவிட்டு ஆட்டோவை கிளப்பும்படி கூற, கண்ணீருடன் செல்பவர்களையே பார்த்திருந்தார் மகா.
“அம்மா.. என்னச்சுமா அண்ணிக்கு?” என்று ரூபி அழுதபடி கேட்க, “தெரியலையேடா” என்றவருக்கு அவளது குருதிக்கரையே பதட்டத்தை கொடுத்திருந்தது.
விரைவே மருத்துவமனையை அடைந்தவன், அவளை மருத்துவரிடம் ஒப்படைத்துவிட்டு வெளியே அமர, கண்களில் கண்ணீர் நில்லாமல் பொழிந்தது. ‘முருகா.. ஏன் இப்படி’ என்று மனதோடு புலம்பியவன் அப்படியே சிலைபோல் அமர்ந்திட, அங்கு வந்த செவிலி ஒருவர் அவனுக்கு குளியலறையை வழிகாட்டி அவனை சுத்தம் செய்துக்கொள்ள பணித்தார்.
கணத்த கால்களை அடியெடுத்து வைத்து சென்று வந்தவன்முன், அப்போதே ஒரு சிகிச்சை முடிந்து வந்த கனிகாபட, அவரிடம் சென்று நடந்தவற்றை விளக்கினான். அவரிடம் அவன் எதிர்ப்பார்த்தது போல் ஆச்சரியம் இல்லை. ஆனால் வருத்தம் இருந்தது.
“நான் போய் பாக்குறேன்” என்றதோடு அவர் சென்றிட, உயிர்ப்பற்ற உடலாய் மீண்டும் வந்து அமர்ந்தான். உள்ளே போராடிக் கொண்டிருந்தோர் போராட்டங்கள் அடங்க, துளிர்க்க இருந்த உயிரின் மூச்சும் அடங்கிப்போனது… அவள் கருவறையில்!
-வரைவோம் 💞