Loading

அழகாக மேடு தட்டிய மனைவியின் மணிவயிற்றை பின்னிருந்து அணைத்தப்படி வருடிய ருத்ரன், “சாப்பிடவாடி” என்று கெஞ்ச, “பசிக்கலை” என்று கோபத்தோடு வீம்பு பிடித்தாள். “பாப்பா.. அப்றம் நான் கோவப்பட்டுடுவேன். எவ்ளோ நேரமா கூப்பிடுறது? சாப்பிட வேணாமா?” என்று குரலுயர்த்தாமல் அவன் கூறியபோதும் அதில் கோபம் தேங்கியிருந்தது.

 

அதில் மேலும் சினம் கொண்டவள் பட்டென்று அவனிடமிருந்து விடுபட்டு, “நான் என்ன வேணும்னா சாப்பிட மாட்டேங்குறேன்? சாப்பிட பிடிக்கலை. வாமிட்டா இருக்கு. இதுக்கு நான் என்ன பண்ண? எம்மேல கோவம் படுறீங்க” என்று சிடுசிடுத்தவள் பேசி முடிக்கையில் கண்கள் கலங்கிவிட, அவனுக்கு சிரிப்பாக வந்தது.

 

சிரித்தபடி அவளை அணைத்து தன் மார்பில் அவள் முகத்தை புதைத்துக் கொண்டவன், “ஏ பாப்பா.. உள்ள நம்ம ஜுனியருக்கு பசிக்கும்டி” என்று கூற, “பசிச்சா சாப்பிடட்டுமே. எதுக்கு இப்படி எது சாப்பிட்டாலும் வெளிய தள்ளிவிடுறா” என்றாள்.

 

வெளியே மகாலட்சுமி அழைக்கும் சத்தம் கேட்டு, மனைவி கண்ணை துடைத்துவிட்டவன், அவளையும் கூட்டிக் கொண்டு வெளியே வர, “ஏன்டா கண்ணெல்லாம் கலங்கியிருக்கா? சத்தம் போட்டியா?” என்ற தாயின் கேள்வியில் விழி பிதுங்கி நின்றான். “ஆமா அத்தை. சாப்பிட முடியலைனு சொன்னதுக்கு போய் திட்டுறார்” என்று அஞ்சுவும் ஏத்திவிட, ‘ஏதே? அடியே கேடி’ என்று அவளைப் பார்த்தவன், அன்னையை நோக்கினான்.

 

அவனை முறைத்து விட்டு, “நீவாடா” என்றவர், அவளுக்கு புளியுப்புமாவை கொடுக்க, அந்த புளிப்பு சுவையில் ஈர்க்கப்பட்டவள், இருந்து பசிக்கு வேக வேகமாக உண்டாள். “ஏ மெதுவா சாப்பிடுமா” என்று ருத்ரன் தண்ணீரை கொடுக்க, “வேணாம் வேணாம்” என்று மறுத்தவள் உணவை உண்டாள்.

 

அதில் தாயும் மகனும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொள்ள, தயாராகி வந்து ரூபி, “என்ன ரெண்டுபேரும் ஏதோ ஏழாவது அதிசயத்தை பார்க்குறபோல அண்ணி சாப்பிடுறத பாக்குறீங்க?” என்று அண்ணியை மறைத்தபடி வந்து நின்றாள். “உங்க அண்ணி சாப்பிடுறதை ஒன்னும் கண்ணு போட்டுட மாட்டோம்” என்று ருத்ரன் சொல்ல, “போங்க போங்க. போய் எனக்கு சாப்பாடு எடுத்து வைங்க பிரதர்” என்றவள், அண்ணி புறம் திரும்ப, உணவை முடித்துவிட்டு பரிபூரண சிரிப்போடு நிமிர்ந்தாள்.

 

அண்ணியின் வயிற்றை ஆசையாக வருடிய ரூபி, “லிட்டில் சேம்ப். அத்தை இஸ் வெயிட்டிங் ஃபார் யூ” என்று கூற, அவள் தலைகோதிய அஞ்சு “உன் லிட்டில் சேம்ப ஒழுங்கா சாப்பிட சொல்லுடா” என்றாள்.

 

“சேம்ப்.. அம்மாவை ஏன் தொந்தரவு செய்றீங்க? ஒழுங்கா சாப்பிட்டா பாட்டி அன்ட் அத்தை கைவண்ணத்துல சூப்பர் சூப்பர் டிஷஸ் சாப்பிடலாம்” என்று செல்லமாக மிரட்டியவள், “நான் சொல்லிட்டேன் அண்ணி. இனி கரெக்டா இருப்பான்” என்று கூற சிரித்தபடி அவள் கன்னம் தட்டினாள்.

 

மனைவி உண்டு முடித்ததை உறுதிசெய்துக் கொண்டு தானும் உண்டு முடித்த ருத்ரன், “போலாமாடா?” என்று வினவ, ‘ம்ம்’ என்ற தலையசைப்போடு ஆர்வமாக வந்தாள்.

 

மனைவியை கூட்டிக் கொண்டு நான்காம் மாத பரிசோதனைக்குச் சென்ற ருத்ரனும் ஊடுகதிர் மூலம் தன் குழந்தையை பார்க்கப்போவதில் சற்றே மேலிட்ட ஆர்வத்துடன் அவளை கவனமாக அழைத்துச் சென்றான்.

 

மருத்துவமனை அடைந்தவளைக் கண்ட சாய், “ஏ பேபிடால்” என்க, அவளைக் கண்டு கூடுதலாக ஒரு சென்டிமீட்டர் புன்னகைத்தவளைக் கண்டு “உன்னை இல்லை. உள்ள இருக்குற என் பேபிடால சொன்னேன்” என்று மூக்கொடை தந்தாள். அதில் முகம் சுருங்க “போடி” என்று அவள் கூற வாய்விட்டு சிரித்தபடி அவளை அணைத்துக் கொண்டு, “போய் என் பேபிடால் எப்படி இருக்குனு பார்த்துட்டுவா” என்று அனுப்பி வைத்தாள்.

 

ஆர்வம் பாதி படபடப்பு மீதியுமாக அமர்ந்திருந்த மனைவியின் கரத்தை தன் கரங்களுக்குள் பொத்திக் கொண்டு தட்டிக் கொடுத்தவன், “ரிலாக்ஸ்டா” என்று கூற, சிரித்தபடி “கொஞ்சம் படபடப்பா இருக்கு. ஆனா எக்ஸைட்டிங்கா இருக்கு” என்று கூறினாள்.

 

அதற்குள் அங்கு வந்த செவிலி இருவரையும் அழைத்துவிட, இருவரும் மருத்துவர் அறைக்குள் சென்றனர். அவளைப் படுக்கவைத்தவர் வயிற்றில் ஜெல் தேய்த்துவிட்டு ஸ்கேன் செய்ய, அங்குள்ள திரையில் கருப்பு வெள்ளை நிறத்தில் கலங்கலாக அவள் மணிவயிற்றிலிருந்த கரு தெரிந்தது.

 

அதைக் கண்ட ருத்ரனின் உடல் புல்லரிக்க, குழந்தையை பார்க்காது கணவனின் முக அபிநயங்களையே பார்த்துக் கொண்டிருந்தாள் அஞ்சிலை. கண்கள் ஆனந்தத்தில் கலங்க அந்த திரையை கண்ணிமைக்காமல் பார்த்தவன் கரம் மனைவியின் கரத்தை இறுக பற்றிக் கொள்ள, அதில் தானும் இன்பமாக கலங்கினாள்.

 

பின் அவளுக்கான பரிசோதனைகள் முடியவே பாவை கழிவறை சென்றிட, “அஞ்சு நல்லா சாப்பிடுறாளா?” என்று நாசூக்காக பேச்சை எடுத்தார் கனி. “சாப்பிடுறா டாக்டர். ஆனா மார்னிங் சிக்னெஸ் ரொம்ப படுத்துது. வாமிட் அதிகமா இருக்கு” என்று அவன் அவரது உடல்மொழியில் கண்ட வித்தியாசத்தில் யோசனையோடு கூறினான்.

 

“ம்ம்.. அவங்க ஹார்மோன்ஸ் இம்பேலன்ஸா இருக்கு..” என்று அவர் இழுவையாகக் கூற, சற்றே பதட்டமடைந்தவன், “எதும் பிரச்சினையா டாக்டர்?” என்று வினவினான். “பதட்டப்படாதீங்க. நான் மருந்துதரேன். நல்ல சத்தான உணவு கொடுங்க, ரொம்ப ஸ்டிரெயின் பண்ணிக்க வேணாம்” என்று கனி கூற, “அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லைல டாக்டர்?” என்றான்.

 

அவனை சற்றே ஆச்சரியமாக தான் பார்த்தாள் கனி. இப்படியான தகவல்களில் அவள் கடந்து வந்த கேள்வி, ‘குழந்தைக்கு ஒன்னுமில்லையே?’ என்பதுதான். ஆனால் இவன் முதலில் அவள் நலத்தை பற்றி விசாரிக்கவே, “நல்லா இருக்கா. எதுவும் பயப்படாதீங்க. மருந்து தரேன் எல்லாம் ஓகேயாகிடும். அன்ட் அவ மருந்த அவளே எக்ஸாமின் பண்ண வேணாம். என்ன மாத்திரை என்ன ஏதுனா ஆராஞ்சு பானிக் (பதட்டம்) ஆகிட்டா ஹெல்துக்கு நல்லதில்லை” என்று கூறினாள்.

 

அதற்குள் உள்ளே வந்த அஞ்சு, முகம்கொள்ளா புன்னகையுடன் “பேபி எப்படி இருக்கு டாக்டர்?” என்று வினவ, உள்ளுக்குள் தன் தடுமாற்றத்தை மறைத்துக் கொண்ட கனி, “எல்லாம் ஆல்ரைட் தான்டா. நல்லா சாப்பிடு. மார்னிங் சிக்னெஸ்கும் மருந்து தரேன்” என்றாள்.

 

ருத்ரனுக்கு ஏனோ மனம் படபடவெனதான் அடித்துக் கொண்டது. வண்டியில் அமர்ந்ததும், “பாப்பா.. பண்பொழி போவோமா?” என்று அவன் வினவ, “ஓ போலாமே” என்று உற்சாகமாக கூறினாள். வண்டியை பார்த்து பார்த்து ஓட்டியவன் சில நிமிடங்களில் கோயிலை அடைந்தான். அவள் படியேற வேண்டாம் என்பதற்காக மலைபாதையில் வண்டியேலேயே கூட்டிச் சென்றவன் கோவிலினுள் கூட்டிவர, இறைவன் சன்னிதானத்தில் கைகூப்பி முகம் புன்னகைக்க கண்கள் மூடி நின்றாள்.

 

மனம் படபடக்க முருகப்பெருமானை ஏறிட்டவன், ‘ஏதோ அவங்க பேச்சில் சரியில்லைனு தெரியிது. ரெண்டு உயிருக்கும் எந்த ஆபத்தும் வராம பார்த்துக்கோ முருகா’ என்று வேண்ட, எப்போதும் பக்தியில் கசியும் கண்கள் இன்று உயிர்ப்பற்று அந்த முருகனை பார்த்தது பார்த்த வண்ணம் இருந்தது. கணவனைக் கண்டு, “ஏங்க” என்றவள் அழைக்க, மனைவியை திரும்பிப் பார்த்தவன் புன்னகை ஒன்றை கொடுத்து “போலாம்டா” என்றான்.

 

பின் பழச்சாற்று கடைக்கு அழைத்துச் சென்று பருகச் செய்தவன் அவளை வீட்டில் கொண்டு விட்டுவிட்டு வேலைக்குச் செல்ல, பாவை உறக்கத்தைத் தழுவினாள்.

 

மாலை நேரம் கண்விழித்த பாவைக்கு மகா உண்ணுவதற்கு பழங்களை வெட்டிக் கொடுக்க, மறுக்காது வாங்கி உமட்டல் வரும்வரை உண்டுவிட்டு வைத்தாள். தனது நாட்குறிப்பேட்டை எடுத்தவள் தனது பொழுதை ஓட்ட வரிகளை வடிக்கத் துவங்கினாள்.

 

‘சொல்லிக் கொடுக்க வேண்டும்,

தேவைப்படாத உணவை,

பிடிக்காத செயலை,

விரும்பத்தகாத பேச்சினை,

ஆர்வமற்ற செயலினை,

விருப்பமற்ற கரிசனத்தைத்

திணிப்பவரிடம் மறுத்துப் பேச சொல்லித்தர வேண்டும்!’

 

என்ற வரிகளை உணர்ந்து எழுதியவளுக்கு ‘உனக்கு புடிக்காததை யாரோட வற்புறுத்தலுக்காகவும் செய்யாதடா’ என்று கணவன் அடிக்கடி கூறுவது நினைவு வந்தது.

 

தன் மணிவயிற்றை வருடி, “நீ ரொம்ப லக்கி தெரியுமா? உங்க அப்பாவோ நானோ நீ பிடிக்கலைனு சொல்ற விஷயத்துக்கு நோ (முடியாது) சொல்ல சொல்லிக் கொடுத்து வளர்ப்போம். என்னை எங்க அம்மா அப்படி வளர்க்கலை. ஏன்னா பாவம் அவங்க அப்படி வளர்க்கப்படலை, அவங்க சூழல் என்னையும் அப்படி வளர்க்க விடலை. ஆனா நான் உனக்கு இதுனால நான் பட்ட கஷ்டத்தை படவிடவே மாட்டேன்” என்று கூறினாள்.

 

‘பன்னீர்ப்பூக்களையும்,

பூம்பருத்தியையும் கொண்டு செய்த பொம்மை ஒன்று என்னறையில் அழகாய் உறங்கியது!

அடடே! அதன் அழுகுரல் அல்லவா உணர்த்தியது அது என் குழந்தை என்று!’

 

என்ற கவிதையை எழுதி சிரித்துக் கொண்டவள், “பாப்பா நீ உள்ளயே என்னை இவ்வளவு படுத்துற. வெளிய வந்து அழுது அழுதே தூங்கவிடாம பண்ணுவியோ?” என்று கேட்டுக் கொண்டாள்.

 

அடுத்த நொடியே கணவன் தன்னை அந்த தருணங்களில் எப்படி பார்த்துக் கொள்வான் என்ற எதிர்ப்பார்ப்பு மேலிட,

 

‘என் தோள்களில் துஞ்ச மறுத்து

அவன் தோளினில் சரணடைந்த பூப்பந்து,

என்னவனுக்கு நடைபயில கற்றுத்தர,

என் விழிகளை நித்திரை சுறுட்டிய நொடி,

அவனிதழில் உதயமான கரிசனப்புன்னகை

என்னிதழில் காதலை மலரச் செய்தது!’ 

என்ற வரிகளை எழுதி, உறங்க மறுக்கும் குழந்தையை அவளிடமிருந்து வாங்கிக் கொண்டு தட்டிக்கொடுத்தபடி கணவன் நடக்கும் காட்சி கண்முன் வந்து போனது.

 

எண்ணங்களின் வண்ணங்களால் வடிந்தோடிய கவிதைகளை ரசித்துவிட்டு எடுத்து வைத்தவள் அவனுக்காக காத்திருக்க, சில நிமிடங்களில் மனைவியை ஏமாற்றாது வந்து சேர்ந்தான்.

 

தோழியின் வீடுவரை சென்று படித்துவந்த ரூபியும் வந்துவிட, அந்த இடமே கலகலவென மாறியது. “ரூபி இருந்தா தான் வீடே கலகலனு இருக்கு” என்று அஞ்சிலை கூற, “அடடா.. அண்ணியின் பாராட்டு மழை பலமாக உள்ளதே.. இந்த ரூபிக்கு வெட்கம் வந்துவிடுமே” என்று அவள் நாடக பாணியில் கூற, யாவரும் மேலும் வாய்விட்டு சிரித்தனர்.

 

“அண்ணி நாளைக்கு வேலை இருக்கா?” என்று ரூபி வினவ, “ஆமாடா போகனும்” என்றாள். “அங்க உங்களுக்கு ஓகேவா இருக்குமா அண்ணி? வாமிட் வந்துட்டே இருக்கே. ஹாஸ்பிடல் ஸ்மெல் ஒத்துவருதா?” என்று ரூபி கேள்விகளை அடுக்க, “ஆமாடா உனக்கு அந்த வாடைலாம் உமட்டலையா? ரொம்ப சிரமப்பட்டு போகவேண்டாம். வேலைய நிறுத்துரதுனா நிறுத்திட்டு குழந்தை பிறந்து கொஞ்சம் காலம் போனபிறகு போயிக்கலாம்” என்று மகா கூறினார்.

 

ஏனோ அவள் முகத்தில் சட்டென ஒரு கலவரம் வந்து போனது. நொடிப் பொழுதே என்றாலும் கொண்டவன் கண்டுகொண்டதில் அதிசயமில்லையே! தடுமாற்றத்துடன் “இ..இல்ல அத்தை. சாப்பிடுறப்போதான் உமட்டல் வாந்தியெல்லாம். மித்தபடி ஹாஸ்பிடல் ஸ்மெல்லாம் ஒன்னுமில்லை. நான் ஏழு மாசம் வரை போறேன். அங்க சாய் இருக்காளே பெருசா எனக்கு வேலை வைக்காம அவளே பார்த்துப்பா. ஏழாவது மாசம் அவங்களே மெடர்னிடி லீவ் கொடுத்துடுவாங்க” என்று கூற, ஒருமனதாக “சரி பார்த்துக்கோடா.. முடியலைனா வருத்திகிட்டு போகவேணாம்” என்று மகா கூறினார்.

 

சரியென்று தலையசைத்த பாவை சில நிமிடங்களில் உள்ளே சென்றிட, அவளுக்கான பாலுடன் வந்தவன் பால்கனியில் நின்றிருந்தவளை அழைத்து அங்கேயே அமரவைத்தான். பாலை அவளிடம் நீட்டி பருக வைத்தவன், “ஏன்டா ஒருமாதிரி இருக்க?” என்று வினவ, “ஒன்னுமில்லங்க” என்று நிலவைப் பார்த்தபடி கூறினாள்.

 

“அம்மா வேலை விஷயமா பேசும்போதே உன் முகம் மாறிச்சு. அதான் பிரச்சினையா?” என்று அவன் வினவ, கணவன் கண்டுகொண்டதில் சற்றே அதிர்ந்தாலும் ‘இவர் என்னை புரிஞ்சுக்கலைனாதான் அதிசயம்’ என்று எண்ணியபடி ‘ஆம்’ என்ற தலையசைப்போடு அவன் தோள் சாய்ந்தாள்.

 

“என்னமா?” பரிவாக அவன் குரல் ஒலிக்க, “இல்ல வேலைய விட எனக்கு விருப்பமில்ல. நான் ரொம்ப ஆசைபட்டு சேர்ந்தது.. அதுக்காக வேலைய விடவே முடியாதுனு நான் சொல்ல வரலை. நான் அட்ஜெஸ்ட் பண்ணிப்பேன். ஏழு மாசமானா அவங்களே லீவ் தந்திடுவாங்க. பிறகு பாப்பா பார்த்துக்க வேண்டி வரும். அந்த டயமும் முடிய ரீ ஜாயின் பண்ணிப்பேன்” என்றவள் ஏதோ சொல்ல வந்து வாயை மூடிக் கொண்டது தெரிந்தது.

 

“பேபி பிறந்த பிறகு வேலை பார்க்க முடியாம போயிடுமோனு பயப்படுறியா?” என்று சரியாக யூகித்து கேட்ட கணவனை இறுக அணைத்தபடி மார்பில் சரிந்தவள், ஆமென்று தலையசைக்க, அவள் முக்ததை நிமிர்த்தி தன்னை நோக்கச் செய்தான்.

 

“அப்படியெல்லாம் உன்னை வற்புறுத்துவாங்கனு எனக்கு தோனலைடா. ஆனா இந்தநேரத்தில் நீ சிரமப்பட்டு வேலைக்கு போயே ஆகனும்னு அவசியம் இல்லை. எதுவா இருந்தாலும் உன்னோட கம்ஃபோர்ட பொறுத்து நீ தான் முடிவு எடுத்துக்கனும். நான் எப்போதும் சொல்றதுதான்டா எந்த விஷயத்தையும் உனக்கு இஷ்டமில்லாம யாரோட வற்புறுத்தலின் பெயரிலும் செய்யாத. அது யாரையும் காயம்படுத்துறதா இல்லாதவரை” என்று ருத்ரன் கூற மனநிறைவான புன்னகை ஒன்றை கொடுத்து அவன் நெற்றியில் இதழ் பதித்தாள்.

 

அவளை புன்னகையுடன் அணைத்துக் கொண்டவன் “படுப்போமா?” என்று வினவ, சிறு தலையாட்டலுடன் மெல்ல எழுந்தவள் கட்டிலில் படுத்துக் கொண்டாள்‌. கதவுகளை பூட்டிவிட்டு வந்தவனை அணைத்துக் கொண்டவள், “நம்ம பாப்பா ரொமப் லக்கி” என்று கூற அவளை பார்த்து “ஏன்” என்றான்.

 

“அவளுக்கு நோ சொல்ல கத்து கொடுப்பீங்கள்ல” என்று அவள் கூற, அவள் குரலில் இருந்த பரிதவிப்பு அவளது நிலையை உணர்த்தியது. முளையிலேயே இல்லாத ஒரு பழக்கத்தினை பிழையினால் அவளிடம் மாற்ற அவனும் ‘மறுத்து பேச பழகு’ என்று தான் கற்பிக்கிறான். மாற்றத்தை கொண்டுவர முயற்சித்து அவள் தோற்றுபோவது தான் ஏராளம். இருந்தும் அவள் முயற்சிக்கின்றாள்.. அவனுக்காக! 

அதை உணர்ந்த சிரிப்போடு “படுடா” என்று அவன் கூற அவனை அணைத்தபடி கண்மூடி உறங்கினாள்.

-வரைவோம் 💞

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
6
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்