அந்த மாலை வேளை, ருத்ரன், அஞ்சிலை, சாய், அர்ஜுன், குணா மற்றும் காயு பாவையவள் வீட்டில் கூடியிருக்க, மருமகனும் மகளும் சேர்ந்து வந்திருப்பதில் ஏதோ செய்தியுள்ளது என்று புரிந்தவராக காயு தேநீர் எடுத்து வந்து தந்தார்.
தேநீரை யாவரும் ஒரு மிடறு அருந்த, குணா “சொல்லுங்க மாப்பிள்ளை என்ன விஷயம். எல்லாரையும் வர சொல்லிருக்கீங்க போலயே” என்று வினவிய நொடி, வாயை பொத்திக் கொண்டு கிடுகிடுவென, கீழே விருந்தினர் பயன்படுத்தும் குளியலறைக்குள் புகுந்த அஞ்சு வாந்தி எடுக்கத் துவங்கியிருந்தாள். தேநீர் விரும்பி அருந்துபவளுக்கு தாய்மை கொடுத்த முதல் பரிசு, தேநீரை வெறுப்பதே!
அவளது செயலில் யாவரும் பதறிப்போக, முதலில் சுயம் பெற்ற ருத்ரன் எழுந்து மனைவி சென்ற வழியே சென்றான். காயு சென்று மகளுக்கு இளஞ்சூட்டில் வெண்ணீர் கொண்டு வரவும், குடல் முழுதையும் குத்தகைக்கு கொடுத்துவிட்டு ஓய்ந்தபடி பாவை கணவன் தோள் சாய்ந்து வரவும் சரியாக இருந்தது.
பதட்டமான குரலில் “என்னாச்சுடா பாப்பா” என்று குணா வினவ, அந்த நொடி அவர் காட்டிய அந்த பரிவில் தையலவள் உறுகினாளோ இல்லையோ, மறவோன் நாளை தானும் இப்படி கொஞ்சிப் பேச ஒரு குழந்தை வரப்போவதை எண்ணி குதூகலித்தான். “பி..பிடிக்கலை” என்று அவள் சோர்வாகக் கூற, “உனக்கு டீ தான் புடிக்குமே அஞ்சு” என்று அர்ஜுன் வினவினான்.
“இனிமே அப்படிதான்டா அஜு. புடிச்சது புடிக்காம போகும். புடிக்காம போனது புடிச்சு போகும்” என்று சாய் கூற, யாவரும் புரியாது விழித்தனர். காயுவிற்கு அவள் கூறும் அர்த்தம் புரிபடவே மகளை ஆர்வம் ததும்ப பார்க்க, மனைவியை தன் தோளோடு அணைத்துக் கொண்டு, “பிரெக்னென்டா இருக்கா மாமா” என்று ருத்ரன் கூறினான்.
அடுத்த நொடி குணாவின் கால்கள் தரையில் இல்லை என்று தான் கூறவேண்டும். காயு ஆனந்தத்தில் கண்கள் கலங்கி மகளைப் பார்க்க, குணா பரிபூரண புன்னகையுடன் பேச்சற்றுப் போனார். “ஏ அஞ்சு.. குட்டி மாம். காங்கிராட்ஸ் மாமா” என்று துள்ளிய அஜு, “நான் மாமாவாகப் போறேன்” என்று கூச்சலிட, “அப்பறமென்ன அஞ்சு பொண்ணுக்கே உன்னை கட்டிவச்சிடுவோம்” என்று சாய் கூறி சிரித்தாள்.
அதில் யாவரும் சிரிக்க, மகளின் அருகே வந்தமர்ந்த காயுவிடம் மனைவியை ஒப்படைத்த ருத்ரன் சற்று விலகி அமர்ந்தான். மகள் முகத்தை பரிவுடன் வருடியவர், “எத்தனை மாசம்டா ஆகுது?” என்று வினவ, “நாப்பத்தஞ்சு நாள் மேல ஆச்சுமா” என்றாள். “செக்கப் பண்ணியாச்சா? நீ ஹெல்தியா இருக்கியா? குழந்தை எப்படி இருக்கு?” என்று குணா வினவ, “ம்ம் பாப்பாவும் ஹெல்தி நானும் ஹெல்தி ப்பா” என்றாள்.
“நல்லா சாப்பிடு அஞ்சுமா. ஜாக்கிரதையா இருந்துக்கோ” என்று காயு அறிவுரைகள் கூற, “ம்மா.. அவளுக்கே தெரியும்மா. பாவம் வாந்தி எடுத்துட்டு வந்திருக்கா. ஜுஸ் எதாச்சும் கொண்டு வாங்க” என்று அர்ஜுன் கூற, “அட அதை மறந்துட்டேன் பாரு” என்று சென்றார்.
சற்று நேரம் அவர்களுடன் கலகலத்து உரையாடயவர்கள் அங்கேயே உணவை முடித்துக் கொண்டு வீடுவர, அவள் முகமே அவளது சோர்வை பிரதிபலித்தது. அவன் தோளில் சாய்ந்து அவனை கட்டிக் கொண்ட வண்ணம் அவள் கண்ணயர, “டேய் தூங்காதடா. விழுந்துட போற” என்று அவளை எழுப்பினான்.
அதில் திடுக்கிட்டு தலைநிமிர்ந்தவள், “அச்சோ சாரிங்க. தூக்கம் வந்துடுச்சு” என்று கூற, “விழுந்துட போறமா. கொஞ்சம் பொறுத்துக்கோ வீட்டுக்கு போயிடலாம்” என்றான். கட்டுப்படுத்த முடியாமல் தூங்கி தூங்கி விழும் மனைவியை பாவமாக பார்த்தவன், பாதுகாப்பாகவும் சற்று வேகமாகவும் வண்டியை ஓட்டி வீட்டை அடைந்தான்.
முதலில் இறங்கிய பெண்ணவள், தூக்கத்தில் தள்ளாட, “குடிகாரி குடிகாரி..” என்று அவளை தாங்கி பிடிக்க, “ப்ச்.. விடுங்க நான் தூங்க போறேன்” என்றாள். “நானும் உன்னை அதுக்கு தான் கூட்டிட்டு போறேன். நீயா போய் விழுந்துடாத” என்று அவளை உள்ளே அழைத்து வந்தான்.
“அண்ணி வாங்க வாங்க” என்று வந்த ரூபியைப் பார்த்து அவள் வழுக்கட்டாயமாக புன்னகைக்க, “என்னடா ரொம்ப சோர்ந்து கிடக்கா?” என்று மகா வினவினார். “வாமிட் ம்மா. அங்க அத்தை டீ கொடுத்தாங்க குடிச்சதும் ஒரே வாந்தி” என்று ருத்ரன் கூறவே, அவள் கண்கள் சொருகியது. தான் உணருவது தூக்கமா மயக்கமா என்றே குழம்பிய நிலையில் தள்ளாடியவளை பாந்தமாக ஆடவன் பிடிக்க, “டேய் முடியலை அவளால. போய் படுக்க வை” என்று மகா கூறினார்.
உள்ளே கூட்டிச் சென்று படுக்க வைத்தவன், அவள் தலையில் குத்தியிருந்த கிளிப்புகளை எடுத்துவிட்டு போர்த்தி விட, அவனை பிடித்துக் கொண்டு “நீங்க?” என்றாள். “படுடா. அம்மா சாப்பிட்டாங்களா கேட்டுட்டு கதவெல்லாம் பூட்டிட்டு வரேன்” என்று அவன் கூற, சரியென்று கண்களை மூடிக் கொண்டாள். சென்று தாய் மற்றும் தங்கையுடன் பேசிவிட்டு கதவெல்லாம் பூட்டிவிட்டு அவன் வரும்போது அவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிட, அவளை அணைத்துக் கொண்டவன், அவள் மணிவயிற்றை மெல்ல வருடியபடி, “ஏ லிட்டில் பேபி.. உங்க மம்மி பாவமில்லையா? பாரு ஒரு வாமிட்கே எவ்வளவு டயர்டாகிட்டா. கொஞ்சம் கருணை காட்டு பேபி சேம்” என்றான்.
மனைவியின் சோர்ந்த முகம் அவனுக்குள்ளும் ஏதோ சோர்வான உணர்வினை விதைத்ததை போல் உணர்ந்தவன், அவள் நெற்றியில் மெல்லிய முத்தம் பதித்தான். இதற்கே இவ்வளவு சோர்ந்து போபவன் அறியவில்லை, அவள் வயிற்றில் உதித்த சிசு அவர்கள் வாழ்வில் ஆடப்போகும் ஆட்டங்களை.
அந்த அழகிய காலை வேளையில் அழகுபட தயாராகிக் கொண்டிருந்த அஞ்சிலையின் அலங்காரத்தை கலைக்கவென்று மூன்று முறை வாந்தி வந்து படுத்திவிட்டது. புடவையை உடுத்திக் கொண்டிருந்தவள் அதற்குமேல் பொருக்கமுடியாமல் அதை மார்போடு பிடித்தபடி கட்டிலில் பொத்தென அமர்ந்துவிட்டாள். “நான் எங்கயும் வரலை. நீங்களே போங்க” என்று கடுப்புடன் அவள் சொற்கள் உதிர்க்க, குளியலறையை சுத்தம்செய்துவிட்டு வந்தவன் கலங்கிய அவள் கண்களை வேதனையுடன் பார்த்தான்.
“ஒன்னுமே சாப்பிட முடியலை. எனக்கு பசிக்குது” என்று அவள் அடுத்த காரணத்தைப் பிடித்து கத்த, சென்று பழச்சாறு எடுத்து வந்தவன், அவளை தன் தோள் வலைவில் அமர்த்திக் கொண்டு அதை பருகச் செய்தான். “வேணாங்க. வாந்திவரும். என்னால முடியலை. நான் வரலை நீங்க மட்டும் போயிட்டு வாங்க” என்று அவள் கூற, “ஒன்னுமில்லடா. இதை முதல்ல குடி” என்றவன், மெல்ல அதை பெருகச் செய்தான்.
குடித்து முடித்து சற்றே ஆசுவாசம் அடைந்தவள், அவன் தோள் சாய, “ரொம்ப முடியலையா?” என்றான். அவனை பாவமாக நிமிர்ந்து பார்த்தவள், “நான் வரேன்” என்க, சிரித்தபடி “முடியலைனா விடுடா. நானும் அம்மாவும் மட்டும் போயிட்டு வரோம். நீ ரூபியோட இரு” என்றான்.
“ச்ச! என்னங்க நீங்க? ரூபி தான் அங்க போக ரொம்ப ஆசைபடுறா. வேணாம் நானும் வரேன். கொஞ்ச நேரம் தானே பரவாயில்லை” என்று அவள் கூற, “ஷ்யோர்?” என்று வினவியனிடம் தலையசைத்து பதில் தந்தாள்.
“சரி புடவைய கட்டு” என்று அவன் நமட்டு சிரிப்போடு கூறிய பின்பே தன்னை உணர்ந்தவள், நாணத்துடன் “ப்ச்..போங்க” என்று அவன் சட்டைகாலரை இறுக்கியபடி மார்பில் முகம் புதைக்க, “போங்கனு சொல்லிட்டு புடிச்சுக்குற?” என்றான். அவன் உதவியோடு எழுந்து நின்று புடவையை கட்டிமுடித்தவள், தயாராகி வெளியே வர, “டேய் ரொம்ப முடியலையாடா? வேணும்னா ரெஸ்ட் எடுக்குறியா? ருத்ரனும் ரூபியும் மட்டும் போயிட்டு வரட்டும்” என்று மகா வினவினார்.
“இல்ல அத்தை. நான் வரேன். கொஞ்ச நேரம் தானே? எனக்காக நீங்க யாராச்சும் போகாம இருந்தா நல்லா இருக்காது. வீடுவந்து கூப்பிட்டு போயிருக்காங்க” என்று அஞ்சு கூற, “இது வெறும் கருப்பு வளையல் சடங்குதான்டா. வளைகாப்புக்கு போயிக்கலாம்” என்று மகா கூறினார்.
இருந்தும் பரவாயில்லை என்று ஏற்றுக் கொண்ட அஞ்சு யாவருடனும் புறப்பட்டு லஷ்மணன் வித்தியா வீட்டிற்கு சென்றனர். அங்கு ஐந்தாவது மாதம் கரு சுமந்தவளுக்கு ‘கருப்பு வளையல்’ என்று கூறப்படும் கருப்பு வளைபூட்டும் விழாவுக்கு உறவினரை மட்டும் கூட்டி நடத்தினர். அதற்குத்தான் தற்போது யாவரும் செல்கின்றனர்.
விஜி இரண்டரை மாதம் கருதாங்கியபோதே வித்யா வந்து கூறியிருந்தமையாலும் செய்தியை தள்ளிபோடாமல், மகாவும் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் கூறியிருந்தார். நாள்வரும்.. சாரி சாரி வயிற்றில் இருக்கும் குழந்தையையும் சேர்த்து ஐவரும் உள்ளே நுழையவுமே உறவினர் அஞ்சுவை சூழ்ந்துக்கொண்டனர்.
அதில் சற்றே முகம் சுனங்கிய வித்யாவும் அவர்களை வரவேற்கும் விதம் அங்கு வர, யாவரும்
“அஞ்சு கண்ணு.. முழுகாம இருக்கியாமே?”
“ரொம்ப சந்தோஷம்டா. எத்தனாவது மாசம்?”
“புள்ள நல்லா இருக்கா?”
“நல்லா சாப்பிடுடா” என்று பலரின் கேள்விகளும் அக்கறைகளும் அஞ்சுவை நோக்கி பாய்ந்தது.
அதில் லேசாக சிவந்த கன்னங்களை மறைக்க வழியின்றி தலைதாழ்த்தி சிரித்தபடி பதில் கூறிய அஞ்சுவைப் பார்த்த வித்யாவுக்கு ஏனோ உவப்பாக இல்லை. இருந்தும் அவள் கற்பம் தரித்ததில் உள்ளம் காயுமளவு மோசமானவரும் இல்லையவர். ஆதலால் தானும் வந்து, “வாங்க அண்ணி. வாபா ருத்ரா, வாடா ரூபி, வாமா. உடம்பெல்லாம் சுகமா?” என்று பட்டும் படாமல் கேட்டு வைக்க, “நல்லாயிருக்கேன் சித்தி” என்றாள்.
அதோடு சரியென்று அவர் உள்ளே சென்றுவிட, வளைபூட்டுக்காக விஜியை தோழிகள் அழைத்து வந்தனர். முன்பே நல்ல நிறமும் வடிவும் கொண்டு அழகாக இருக்கும் விஜி தற்போது தாய்மையின் பூரிப்பில் மேலும் அழகாக தெரிய, மகளை கண்ணார கண்ட வித்யா அஞ்சுவைப் ‘என் மகளுக்கு நீ ஈடில்லை’ என்பதைப் போல் பார்த்துக் கொண்டார்.
வளைபூட்டும் நிகழ்வு துவங்கவே யாவரும் வந்து சந்தனம் பூசி கருப்பு வளைபூட்ட, அஞ்சுவும் அனுப்பி வைக்கப்பட்டாள். அஞ்சுவைப் பார்த்து முகம்கொள்ளா புன்னகை சிந்திய விஜி, “அக்கா நல்லாருக்கீங்களா? கேள்விபட்டேன் அக்கா. இப்ப எத்தனாவது மாசம்?” என்று விசாரிக்க, தானும் நாணப் புன்னகையோடு “மூனாகப்போகுதுடா” என்றாள்.
அவளது லேசாக மேடுதட்டிய வயிறைப் பார்த்த உறவுக்காற பெண்மணிகள், “மூனுக்கே வயிறு எழும்பிடுச்சே” என்று பேசிக்கொள்ள, விஜிக்கு சந்தனம் வைத்தபடி, “எங்க அம்மாவழி ஜீன் அப்படி. அஞ்சாவது மாசத்துலயே நெறமாசம் போல வயிறு எழும்பும்” என்று கூறினாள்.
சந்தனம் பூசி விழாவில் பங்குகொண்ட யாவரும் வீடு திரும்பிட, அன்று இரவு மருமகளை அமர்த்திய மகா படபடப்புடன் அவளுக்கு உப்பும் மிளகாயும் கொண்டு திருஷ்டி சுற்றினார். “டேய் ருத்ரா.. இவளை அங்க கூட்டிட்டே போயிருக்கக்கூடாது. எல்லாரும் மூனுக்கே வயிறு எழும்பிடுச்சே எழுப்பிடுச்சேனு கேட்டுட்டே இருந்தாங்க. கண்ணுபட்ட போல ஆகிடுமோனு படபடப்பா போச்சு எனக்கு” என மகா கூற, மற்ற மூவரும் அவரை சிரிப்போட பார்த்தனர்.
“அம்மா அப்படிலாம் எதுவும் இல்லைமா” என்று ருத்ரன் கூற, “அத்தை ஒன்னும் பதட்டப்படாதீங்க. எங்க வீட்டுவழில சீக்கிரமே வயிறு தெரிய ஆரம்பிச்சுடும். மித்தபடி ஒன்னும் பிரச்சினை இல்லை. புடவையும் நான் ஸ்டிஃப்பா கட்டிட்டேன். அதனால வயிறு தெரிஞ்சிடுச்சு. தளர்வா கட்டிருந்தா தெரியாது” என்று கூறினாள். ஏனோ அவர் மனம் ஆறவில்லை திருஷ்டி எடுத்து மருமகளுக்கு உணவு கொடுத்தவர் வீபூதியெல்லாம் பூசிவிட்டு தூங்க அனுப்பினார்.
இரவு உடை மாற்றிக் கொண்டு படுக்கையில் விழுந்தவள், “வரவர ரொம்ப தூங்கமூஞ்சி ஆகிட்டேன். மதியம் வந்ததும் தூங்கினேன். எப்போவும் மதியம் தூங்கினா நைட்டு தூக்கமே வராது. ஆனா இப்ப அப்படி தூக்கம் வருது” என்று சளிப்பாக கூற, சிரித்தபடி வந்தவன், “முன்ன உன் ஒருத்திக்காக தூங்கின. இப்ப நம்ம ஜுனியருக்கும் சேர்த்து தூங்கனும்ல?” என்றான்.
“ஆமா ஆமா.. உங்க ஜுனியர் படுத்துற பாடு” என்றபடி வயிற்றை வருடியவள் அவன் புறம் திரும்பி அவன் கையை தன்மீது போட்டுக் கொண்டு, “ஏங்க வயிறு எழும்பிடுச்சுனு கேட்டா எதுமாகுமா?” என்று பயம் கலந்த குரலில் கேட்டாள். “அட என்னமா நீ? அவங்க பழைய ஆள். அவங்களுக்கு தான் தெரியலை. நீ படிச்சபொண்ணு. உனக்குமா தெரியலை?” என்று ருத்ரன் வினவ, “என்னமோ மனசு படபடனு இருக்குங்க. ஒருமாதிரி..” என்றவள் குனிந்து தன் வயிற்றைப் பார்த்தபடி “பயமா இருக்கு” என்றாள்.
“ஒன்னுமில்லைடா. நீ கண்டதையும் யோசிக்காத. நல்லா சாப்பிட்டு நல்லா ரெஸ்ட் எடு. எல்லாம் நல்லதே நடக்கும்” என்று அவன் கூற, “நம்ம திருமலை கோவிலுக்கு இந்த வாரம் போயிட்டு வருவோமா?” என்று கேட்டாள். “போலாம்டா” என்றவன் அவளை அணைத்துக் கொண்டு தட்டிக் கொடுக்க, சில நிமிடங்களில் தூங்கிப் போனாள். மனைவியையே பார்த்தபடி படுத்திருந்தவன், அவளது பயத்தை போக்கி விட்டிருக்க, தற்போது அவன் மனதில் லேசான படபடப்பு உருவெடுத்திருந்தது.
-வரைவோம் 💞