Loading

“ச்சை பரிச்சைய முடிச்சுட்டு அக்கடானு இருக்க முடியுதா?” என்றபடி தலையை வாரிய அஞ்சிலை தனது கைப்பையை எடுத்துக் கொண்டு கீழே வந்தாள். அப்போதே அர்ஜுனும் கொட்டாவி விட்டுக் கொண்டு வர “யோககாரன்டா நீ. லீவு விட்டுட்டானுங்கனு நல்லா தூங்குற” என அஞ்சு கூற “நீயாதானே பார்ட்-டைமா ஹாஸ்பிடல்ல டியூட்டி போறேன்னு சொன்ன. இப்ப என்னை வந்து ஜாலியா இருக்கனு சொன்னா என்ன அர்த்தம்?” என்று பதில் கேள்வி கேட்டான்.

“ம்ம்.. நேரம்டா..நேரம்” என்றவள் உணவை கொறித்துவிட்டு தன் தோழி சாய்க்கு அழைத்தாள். அங்கே ‘அவ என்ன என்ன தேடிவந்த அஞ்சல’ என்று அலைப்பேசி ஒலிக்க, அதை எடுத்த சாய் “சொல்லு அஞ்சல.. கிளம்பிட்டேன்” என்றாள்.

“ம்ம் அதை கேட்கத்தான் கூப்டேன். வாவா” என்று அஞ்சு கூறி அழைப்பை வைத்த ஐந்தாவது நிமிடம் சாய் வந்திருந்தாள். “ம்மா பை, டேய் அஜு பாய்டா” என்றவள் புறப்படுகையில் குணசேகரன் வர “அப்பா.. என்னப்பா இப்ப தான் கிளம்பினீங்க?” என்று வினவினாள்.

“ஒரு ஃபயில் எடுக்க வந்தேன்டா” என்று அவர் கூறியதற்கு “அஜு கிட்ட சொன்னா அவன் கொண்டு வந்திருப்பான்ல?” என்று அவள் வினவ “பரவாயில்லைடா. நீ வேலைக்கு கிளம்பிட்டியா?” என்று வினவினார்.

“ம்ம் ப்பா. போய்ட்டு வரேன்” என்று அஞ்சு கூற “பார்த்து போயிட்டு வாடா” என்றார். “பாய் அப்பா” என அஞ்சு கூற “வரேன் அப்பா” என்று சாயும் விடை பெற்றுக் கொண்டாள்.

இருவரும் சாயின் இருசக்கர வாகனத்தில் அந்த மருத்துவமனையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்க, அவர்களுக்கு எதிர் திசையில் தூரத்தில் ஒரு காதல் ஜோடி உயர் ரக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். வண்டி ஓட்டிய இளைஞன் அதை வைத்து குறலி வித்தை காட்டியதை கண்ட தோழிகள் இருவருக்கும் திக்கென்று இருந்தது. 

“ஆத்தி.. டயரு பறக்குதுடி”  என சாய் கூற “பொறுப்பற்ற பிள்ளைகள்டி. எங்கேயாவது போய் விழுக தான் போகுதுங்க” என்று அஞ்சு கூறினாள். அவள் வாய் வைத்த நேரமோ என்னவோ, அவர்கள் வண்டியை கடந்து சென்றவர்கள் வண்டி தடுமாறி பெரும் சத்தத்துடன் விழுந்தனர்.

பின்னே கேட்ட சத்தத்தில் சடன் பிரேக் அடித்து நின்ற சாய் மற்றும் அஞ்சு திரும்பி பார்க்க, அந்த ஜோடி கீழே விழுந்திருந்தனர். “அடியே அஞ்சல..” என சாய் கூற “ஏ நானில்லைடி” என்றாள்.

இருவரும் இறங்கி சென்று அவர்கள் எழ உதவி செய்து சாலையோரம் அமர வைக்க, அந்த இளைஞன் முகம் அவமானத்தில் குன்றியும், அந்த பெண்ணின் முகம் வலியில் கசங்கியும் இருந்தது. எப்போதும் தன் கைபையில் வைத்திருக்கும் சிறிய டெட்டால் பாட்டிலை எடுத்த அஞ்சு, சாயிடம் தண்ணீர் மற்றும் கைக்குட்டை வாங்கி அவர்கள் காயத்தினை லேசாக துடைத்து விட, ‘அஸ்..உஸ்’ என்று கத்திக் கொண்டே அதை போட்டுக் கொண்டனர்.

அந்த சாலையே வெறிச்சோடி இருந்ததால் வேறு யாரும் இவர்களுக்கு உதவ அங்கில்லை. அவர்கள் காயத்தினை துடைத்து முடித்த தோழிகளில் அஞ்சு “சின்ன சின்ன காயத்துக்கு டெட்டால் போட்டிருக்கோம்‌. ஹாஸ்பிடல் போய் செக் பண்ணிட்டு போங்க” என்க அந்த ஜோடி அமைதியாக தலையசைத்தது.

“பார்த்துப் போங்க” என்றவள் தோழியுடன் கிளம்பிட “ஏன்டி என்கிட்ட பொறுப்பற்ற பிள்ளைகள்னு திட்டின‌. அங்க மருந்து போட்டுட்டு பார்த்து போங்கனு சொல்லிட்டு வந்துட்ட. ஒரு வார்த்தை அட்வைஸ் பண்ணிருக்கலாமே?” என்று சாய் வினவினாள்.

“இப்ப கிடைச்ச அடிதான் பெரிய அட்வைஸ் சாய். அந்த பையன் முகத்தை பார்த்தயில்ல? நம்ம முன்ன விழுந்துட்டோமேனு அவனுக்கு அவ்வளவு வெட்கமா போச்சு. அதுல நான் வேற எதையாவது சொன்னா யாரோ ஒருத்தி என்ன என்னை பேசுறதுனு கோபம் தான் வரும். இப்ப கிடைச்ச பாடம் மறந்துடும்” என்று அஞ்சு கூற “ம்ம் சரிதான் அஞ்சு” என்றாள்.

“ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் சாய்.. இந்த காதலெல்லாம் இப்ப ஜாலியா தான் இருக்கும். பொறுப்பில்லாம இருந்தா சுதந்திரமா ஃபீல் ஆகும். ஆனா இதோட விளைவுகள் எல்லாம் போக போக புரியும்போது கசந்து போகிடும். லவ் மேரேஜோ அரேன்ஜ் மேரேஜோ.. எதுவா இருந்தாலும் ஒரு வருஷம் தான்..” என்று அஞ்சு தன் போக்கில் கூற “ஆமா அஞ்சு.. அதென்னவோ உண்மை தான். இந்த காதல் கல்யாணம் எல்லாம் படத்துலயும் கதைகள்லயும் தான் அழகா ரசிக்கக் கூடியதா இருக்கும் ரியல் லைஃப்ல அப்படி ஒன்னும் இருக்காது போல” என சாய் கூறினாள்.

இருவருக்கும் காதலில் அவ்வளவாக நம்பிக்கையோ ஈடுபாடோ கிடையாது என்று தான் கூறவேண்டும்‌. அதிலும் அஞ்சிலை கல்யாண வாழ்விலேயே அத்தனை நம்பிக்கை இல்லாதவள்.

குடும்பத்தினிலே பல காதல் திருமணம் புரிந்தோரை பார்த்திருக்கின்றாள். கதைகளிலும் படங்களிலும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர் ஒருவரை ஒருவர் தாங்குவதையும், அவர்களின் புரிதலையும் ரசித்தவள், குடும்பத்தில் இருக்கும் காதல் தம்பதியரிடம் அதைத் தேடி தோற்றுப் போனாள். 

‘காதல் திருமணம் தான் இப்படி. வீட்டில் பார்த்து செய்து வைக்கும் திருமண வாழ்வு ரசனையாக இருக்கும்’ என்று நினைத்தவளுக்கு அதுவும் இல்லை என்பதை சிலமுறை தன் பெற்றோரிடமே கண்டு சளித்துப் போனாள். ‘இவ்வளவு தானா திருமணம்?’ என்று எண்ணம் வரப்பெற்றவளுக்கு திருமணமே செய்துக் கொள்ள கூடாது என்றெல்லாம் எண்ணமில்லை. ஆனால் அதுபற்றிய தன் எதிர்ப்பார்ப்புகளை மொத்தமாக துறந்துவிட்டு வருவதை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மைக்கு வந்துவிட்டாள்‌.

தங்கள் பேச்சின் போக்கில் மருத்துவமனையை அடைந்தவர்கள் தங்கள் முதல் நாள் டியூட்டியை ஆர்வத்துடன் துவங்கிட, அங்கு தங்கள் வீட்டு பெண்ணிற்கு ஓர் விசேஷம் என்ற சந்தோஷத்தில் மொத்த குடும்பமும் வித்யா மற்றும் லக்ஷ்மணன் தம்பதியரின் வீட்டில் கூடி இருந்தனர். தங்கள் ஒற்றை மகள் விஜயலட்சுமியின் நிச்சயதார்த்தத்தை ஜாம் ஜாம் என நடத்தும் ஆர்வத்தில் அத்தம்பதியினர் ஈடுபட்டிருக்க, தன் வீட்டு கல்யாணம் என்ற எண்ணத்துடன் ருத்ரனும் தானாக அத்தனை வேலையையும் எடுத்துப்போட்டு பார்த்துக் கொண்டிருந்தான்.

அத்தனையையும் வேண்டா வெறுப்பான மனநிலையுடன் பார்த்த ரூபினிக்கு என்ன தான் அண்ணன் நல்லது கெட்டதை எடுத்து கூறியிருந்து ஏற்றுக்கொள்ள கடினமாக இருந்தது. இதில் யாரையும் குத்தம் சொல்வதற்கில்லை என்ற நிதர்சனம் புரிந்தாலும் தான் ஒன்று நினைக்க, அதற்கு மாறாக நடக்கும்போது எந்த மனிதன் தான் உடனேயே ஏற்றுக் கொள்வான்?

அதற்கு ரூபினியும் விதிவிலக்கல்லவே! தன் அதிருப்தியை மனதோடு வைத்துக் கொண்டு தானும் சில வேலைகளை பார்த்துவிட்டு விஜியுடன் சென்று அமர்ந்து கொள்ள, தோழியவள் ஆர்வமும் பூரிப்புமாக பேசவும், பாசம் கொண்டவளும் அவளது பேச்சினுள் மூழ்கி போகினாள். இருவருமே இளநிலை மூன்றாம் ஆண்டு மாணவிகளாக இருக்க, ஒரே வயது பிள்ளைகள் என்பதை விட வேறு என்ன காரணம் வேண்டும் நெருக்கமாக பழகுவதற்கு? 

“ஏ விஜி.. கல்யாணம் எப்போ? படிச்சு முடிச்ச பிறகா?” என்று ரூபி கேட்க “ஆமா ரூபி.. இப்ப நிச்சயம் மட்டும் பண்ணிட்டு டிகிரி முடிச்ச பிறகு கல்யாணம் வச்சுக்கலாம்னு சொல்லிட்டாங்க. மேல படிக்குறதுனாலும் அவங்களே படிக்க வைக்குறாங்களாம்” என்று விஜி கூறினாள்.

“ஓ.. சரிடி” என்ற ரூபி மீண்டும் தோழியின் பேச்சுக்களை கேட்டுக் கொண்டே அமர்ந்திருக்க மாப்பிள்ளை வீட்டாரும் வந்து சேர்ந்தனர். மூன்று அத்தை இரண்டு சிற்றப்பா என ருத்ரனுக்கு தந்தை வழி சொந்தம் பெரியது. ‘யாரென்ன சொன்னாலும் யாரென்ன செஞ்சாலும் சொந்தமும் பந்தமும் கூட வரும்’ என்பது போலெல்லாம் இல்லாமல் சராசரி குடும்பங்களைப் போல் சண்டையென்றால் அடித்துக் கொண்டும் சண்டை தீர்ந்தால் கூடிக் கொள்ளும் குடும்பம் தான் இவர்களுடையதும்.

மாப்பிள்ளை வீட்டார் ஒரு பக்கமும், பெண் வீட்டார் எதிர்ப்பக்கமும் அமர்ந்து கொள்ள, தாம்பூலம் மாற்றப்பட்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அனைத்து வேலைகளையும் இருந்து முடித்துக் கொடுத்த பின்பே ருத்ரன் தன் அன்னை மற்றும் தங்கையுடன் புறப்பட்டான்.

வீட்டிற்குள் நுழைந்த பெண்கள் இருவர் முகமும் வாடியிருக்கவே, “ஏம்மா ஒரு மாதிரி இருக்கீங்க?” என அன்னையை பார்த்துக் கேட்க, “ஒன்னுமில்ல ப்பா” என விட்டேற்றியாக அவர் கூறும்போதே ஏதோ உள்ளது என்று புரிந்து கொண்டவன் “யாரும் எதும் சொன்னாங்களா அம்மா?” என்று வினவினான்.

ஒரு பெருமூச்சுடன் தலைகுனிந்தவர் “யாரு என்ன சொல்லி என்னப்பா ஆக போகுது. வா.. நீ தான் ரொம்ப கலைச்சு போயிருப்ப. போய் படுப்போம்” என்க தங்கையை பார்த்தான். அவள் குனிந்த தலை நிமிருவேனா என்றபடி இருக்க “என்னாச்சு ரூபி? அம்மா ஏன் ஒருமாதிரி பேசுறாங்க” என்று வினவினான்.

மகன் கேட்டால் மகள் அனைத்தையும் ஒப்பித்துவிடுவாள் என்று தெரிந்த அன்னை “ருத்ரா.. எனக்கு காலெல்லாம் வலிக்குதுபா. வா போய் படுப்போம்” என்க, சரியென சென்று புத்துணர்வு பெற்று வந்தவன் பாயை கொண்டு வந்து கூடத்தில் விரிக்கவும், மகாவும் ரூபியும் உடை மாற்றிவிட்டு வந்தனர்.

எப்போதும் போல் தாய் நடுவே படுக்க, பிள்ளைகள் இருவரும் இருபக்கமும் படுத்துக் கொண்டனர். சிறிது நேரத்தில் அன்னை உறங்கிவிட்டதை அவரது சீரான மூச்சுக் காற்றின் ஓசை வழி உணர்ந்தவன் எழுந்து அமர்ந்து பார்க்க, இருட்டில் ரூபியின் கண்கள் பளபளத்துத் தெரிந்தது.

விட்டத்தை வெறித்தபடி படுத்திருந்தவளை கண்டவன் “ரூபி..” என்று கிசுகிசுப்பாக அழைக்க சட்டென திரும்பிப் பார்த்தவளை ‘வா’ என்பது போல் சைகை செய்தவன் சில நிமிடங்களில் அவளுடன் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தான்.

“என்னாச்சு ரூபி. ஏன் ரெண்டு பேரும் ஒருமாதிரி இருக்கீங்க” என்று ருத்ரன் வினவ “சி..சித்தி ரொம்ப பேசிட்டாங்க அண்ணா” என்றாள். “எந்த சித்தி? என்ன பேசினாங்க?” என்று ருத்ரன் புரியாமல் வினவ நடந்தவற்றை கூறினாள்.

அங்கு நிச்சயம் முடிந்து உணவு உண்ண சென்று கொண்டிருந்த மகா மற்றும் ரூபியிடம் வந்த மீனா “என்ன அக்கா ருத்ரன காணும்?” என்று வினவ, “அவன் அங்க தான் பந்தில வேலையா இருக்கான் மீனா” என்று மகா கூறினார். “ஹும்..” என ஒரு பெருமூச்சு விட்டவர் “நம்ம ருத்ரனுக்கு வரவேண்டிய வாழ்வு. இன்னிக்கு எடுபிடி வேலைய பார்த்துகிட்டு இருக்கான்” எனக் கூற ரூபினிக்கு சுருக்கென்று வலித்த உணர்வு எழுந்தது.

“ரூபிமா.. சித்தி சொல்றேன்னு நினைச்சுக்காத. இந்த வருஷத்தோட படிப்பு முடியுது தானே. வேலை எதையும் தேடுற வழிய பாரு. மேல படிக்கனும் அது இதுனு சொல்லாத. உங்கண்ணன் சொன்னாலும் வேணாம்னு சொல்லிட்டு எதும் வேலை தேடி போ. அவன் ஆம்பலப்பய, தன் கௌரவம் போயிட கூடாதுனு உன்னை படிக்க வைக்குறேன்னு தான் சொல்லுவான். நீயும் தலைய தலைய ஆட்டாத. ஒரு வேலைய பார்த்துட்டு காலா காலத்துல கல்யாணம் பண்ணிகிட்டு போக பாரு. அதுதான் உனக்கும் நல்லது உங்கண்ணனுக்கும் நல்லது” என்று அறிவுரை கூறுகிறேன் என்ற பெயரில் இருவர் மனதிலும் ஊசி ஏற்றிவிட்டு சென்றார்.

கலங்கி நின்ற மகளை பாவமாக பார்த்தவர் “ரூபிமா. பிரச்சினை வேணாம். கண்ண தொடச்சுகிட்டு வா” என்று கூற “எனக்கு பசிக்கலை. நீங்க போய் சாப்பிடுங்கமா” என்றவள் அங்குள்ள கழிவறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

சொல்லி முடித்த ரூபி “போதுமண்ணா.. நா இதோட என் படிப்ப முடிச்சிக்குறேன்.. எனக்கு ஏதோ கொலை குத்தம் செஞ்சது போல குற்ற உணர்வா இருக்கு” என்று அவன் தோள் சாய்ந்து கதற, கண்ணீர் கண்களில் மின்ன தங்கையை அரவணைத்துக் கொண்டான்.

தந்தை இல்லாத வீட்டின் கொடுமை எத்தகையது! தாய் இல்லாதது அவ்வீட்டாரை தனித்தனியே பாசத்திற்கு ஏங்க வைத்து நரகமாக்கும் என்றால், தந்தை இல்லாதது மொத்த குடும்பத்தையே உற்றார் முன்பு குறுகச் செய்துவிடுகிறது. துக்கத்தை தொண்டையோடு விழுங்கிவிட்டு வாழுவதன் கொடுமையை அனுபவித்து, வெறுத்துவிட்ட நிலையில் தங்கை பேசுவதை கேட்டு அண்ணனானவன் உருகி தான் போனான்.

தந்தை இல்லாமல் ஒற்றை பெண்ணாக இந்த சமுதாயத்தில் இரு குழந்தைகளை வளர்ப்பது எத்தனை கடினமாகி போனது! ‘ஒற்றையாக தாய் வளர்ப்பில் வளர்ந்த பிள்ளை தானே?’ என்று பிள்ளைகள் பெயர் வாங்கிவிட கூடாது என்று அந்த தாய் துடிப்பதும், ‘அப்படியான பெயரை அன்னைக்கு வாங்கிக் கொடுத்திட கூடாதே’ என்று பிள்ளைகள் துடிப்பதுமாக சுற்றார் முன்னிலையில் தானாகவே விலகி தான் போகின்றனர்.

தன் கண்ணீரை அழுந்தத் துடைத்தவன், “குட்டி” என்று எப்போதாவது அரிதாக உணர்வுகளின் மிகுதியில் அழைக்கும்படி தங்கையை அழைக்க, கண்ணீருடன் அண்ணனை நிமிர்ந்து பார்த்தாள். “அப்பாவ மிஸ் பண்றியா?” என்று அவன் கரகரத்த குரலில் வினவ மறுப்பாக தலையசைத்தவள் “அதான் நீ இருக்கியே” என்று எப்போதும் கூறுவதையே கூறி அவனை அணைத்துக் கொண்டாள்.

கண்களை அழுந்த மூடி கண்ணீரை உள்ளேயே சேமித்துக் கொண்டவன் “என்னை அப்பா இடத்துல பாக்குறியாடா?” என்று வினவ “அப்பாக்கும் மேல அண்ணா நீ” என்றாள். “அப்பா இருந்து உன்னை படிக்க வச்சுருந்தா இப்படிலாம் யோசிச்சிருப்பியா?” என்று அவன் வினவ ‘இல்லை’ என்று தலையசைத்தாள்.

“என்னை அப்பாவைவிட மேலனு சொல்ற. ஆனா அப்பாகிட்ட இருக்கும் உரிமை என்கிட்ட இல்லையே” என்று அவன் வினவவும் திடுக்கிட்டு அவனை பார்த்தவள் இத்தனை நேரம் இந்த கண்ணோட்டத்தில் தான் யோசிக்காமல் போனதை எண்ணி நொந்தாள்.

“குட்டி.. நம்ம நினைக்குறது தான்டா. என்னைவிட நெருக்கமானவங்களா இல்லாத ஒருத்தங்க சொன்ன வார்த்தைய புடிச்சுக்கிட்டு கூட இருக்குறவங்களுக்கு உன் வருத்தத்தால மனசங்கடத்தை கொடுக்குறது நியாயமா சொல்லு” என்று அவன் வினவ “அ..அண்ணா.. இல்ல.. நா..” என்றவளுக்கு வார்த்தைகள் வரமறுத்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே!

“விடுடா. எதையும் யோசிக்காத. போய் தூங்கு. செம் லீவை நல்லா என்ஜாய் பண்ணு. அடுத்த செம்மோட பி.ஏ முடிச்சு டிகிரி வாங்க போற. அடுத்த எம்.ஏ எங்க போடலாம் என்ன பண்ணலாம்னு விசாரி‌. அதை விட்டுட்டு தேவை இல்லாத அணியை பத்திலாம் யோசிச்சு நேரத்தையும் உடம்பையும் மனசையும் கெடுத்துக்காத” என்று ருத்து கூற மௌனமாக தலையசைத்தாள்.

“இது என் ரூபி இல்லை” என்று அவன் கூற சிறு புன்னகையுடன் அண்ணனை அணைத்துக் கொண்டு “அண்ணானா அண்ணா தான்” என்றாள். சிரித்தபடி அவள் தலை கோதியவன் சிறிது நேரம் கலகலப்பாக பேசிவிட்டு தங்கையுடன் கீழே வந்து உறங்கிட, உறங்கிய பிள்ளைகளை கண்களில் ஆனந்த கண்ணீருடன் பார்த்துவிட்டு படுத்தார், மகா.

-வரைவான்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்