வண்டியில் சென்றுகொண்டிருந்த தோழிகளிடம் மௌனமே நிலவ, “என்ன இவ வழக்கத்துக்கு மாறா சந்தோஷமா அமைதியா இருக்கா? சந்தோஷமா இருந்தா இன்னேரம் தையா தக்கானு குதிச்சிருப்பாளே?” என்று எண்ணியபடி சாய் வண்டியை ஓட்டினாள்.
வண்டி ஓர் மேடு பள்ளத்தில் ஏறி இறங்கவும் பயத்தில் படபடத்து சாயின் தோளைப் பற்றிய அஞ்சு, “சாய் மெதுவா போ” என்க, அனிச்சை செயலாக அவள் மற்றய கரம் அவள் வயிற்றை சுற்றி அணைவாக பற்றிக் கொண்டது. “என்னாச்சுடி? வயிற்வலியா? அப்பறம் எதுக்கு பல்ல பல்ல காட்டிட்டு வர?” என்று சாய் வினவியதும் பக்கென்று சிரித்து வைத்தாள் பெண்.
“ஏ லூசு கீசு பிடிச்சிடுச்சா?” என்று சாய் பீதியுடன் வினவ, “ரோட்ட பார்த்து பொறுமையா ஓட்டு சாய். பாப்பாக்கு வலிக்கபோகுது” என்று பாவம்போல் அஞ்சு கூறினாள். “பாப்பாவா? ஏழு கழுதை வயசாகிடுச்சு. இன்னும் பாப்பாவாம் பாப்பா” என்று சளித்துக் கொண்ட சாயை கண்டு சிரித்துக் கொண்டவள், அதையடுத்து ஏதும் பேசவில்லை.
மருத்துவமனை வந்ததும், “நீ மேல போ. நான் டாக்டர் கனிகாவ பார்த்துட்டு வரேன்” என்று அஞ்சு கூற, “எதும் ஆபரேஷன் இருக்கா இன்னிக்கு?” என்று வினவினாள். “இல்லை நீ போ வரேன்” என்றவள் அவளை அனுப்பிவிட்டு மகப்பேறு மருத்துவரான டாக்டர் கனிகாவின் அறைக்குச் சென்றாள்.
உள்ளே நுழைந்தவளைப் பார்த்த கனிகா, “ஹாய் அஞ்சு. என்ன மார்னிங்கே இந்த பக்கம்? இப்ப சர்ஜரி எதும் இல்லையே எனக்கு” என்று கூற, “ப்ரொபஷனலா வரலை டாக்டர். பர்சனலா வந்திருக்கேன்” என்று சிறு வெட்கச் சிரிப்போடு கூறினாள்.
அதை வைத்தே புரிந்த கொண்ட கனி, “என்னடா எதும் நல்ல செய்தியா?” என்று வினவ, “அதை நீங்க தான் கன்பார்ம் பண்ணி சொல்லனும்” என்றபடி அமர்ந்தாள். அவள் நாடி பிடித்தபடி, “டெஸ்டர்ல பார்த்தியா?” என்று அவர் வினவ, “இல்லை டாக்டர். வயிறு கல்லு போல இருக்கு. எந்த வாசமும் பிடிக்கலை. சாப்பிட்டா உமட்டுது. டேட் 45 நாள் தள்ளி போயிருக்கு” என்று கூறினாள்.
அவளுக்கு இதர சிகிச்சைகளை முடித்த கனி, புன்னகையுடன் அவளைப் பார்க்க, அதுவே தனது மனம் சொன்ன செய்தி உண்மை என்று அவளுக்கு விளக்கியது. “காங்கிராஜுலேஷன்ஸ்” என்று அவர் கூற, முகம் கொள்ள புன்னகையுடன் “தேங்கியூ டாக்டர்” என்றாள். “பேபி இஸ் பைன். நீ தான் நல்லா சாப்பிடனும். உடம்ப நல்லா பார்த்துக்கோ” என்று கனிகா கூற, “ஓகே டாக்டர்” என்றுவிட்டு வெளியேறினாள்.
பின் மேலே சென்று சாயுடன் ஐக்கியமானவள் முகம் பௌர்ணமி நிலவாய் பிரகாசிக்க, தோழியாக சொல்லட்டும் என்று சாயும் அமைதி காத்தாள். மாலை வீடு திரும்புகையில், “ஸ்ஸ்.. மறந்தே போயிட்டேன். சாய் மெடிகல் ஷாப் போடி” என்று அஞ்சு கூற, “என்னாச்சு அஞ்சு? உடம்பு எதும் முடியலையா?” என்று அக்கறையாக வினவினாள்.
“வா சொல்றேன்” என்ற அஞ்சு மருந்தகம் வந்ததும் உள்ளே செல்ல, சாயும் புரியாத பார்வையோடு அவளைத் தொடர்ந்தாள். அங்கு சென்றவள், கனிகா எழுதி தந்த சில மாத்திரைகளை வாங்கிக் கொண்டு, “பேபி கிட் இருக்கா?” என்று வினவ, அத்தனை நேரம் மேடையில் தாளம் போட்டுக்கொண்டிருந்த சாய் அவளை விழிகள் விரிய திரும்பிப் பார்த்தாள்.
தோழி பார்வை உணர்ந்து புன்னகைத்துக் கொண்ட அஞ்சு அதையும் வாங்கி பைக்குள் வைத்துக் கொண்டு வெளியே வர, “ஏ.. அந்த பாப்பா இந்த பாப்பா தானா?” என்று காலையில் அவள் மறைமுகமாக கூறியதை தான் புரிந்துகொள்ளாததை உணர்ந்து கேட்டாள். சிரித்தபடி அஞ்சு தலையசைக்க, அவள் தாடையில் கைவைத்து முகம் நிமிர்த்திய சாய் உற்சாகமான குரலில், “ஹே அஞ்சு.. நிஜமாவா?? செம்ம ஹேப்பியா இருக்குடி. அதான் கனிகா டாக்டர் கிட்ட போனியா? நான் ஒரு மாங்கா.. இதை யோசிக்கவேயில்லை பாரு. செம்ம அஞ்சு. அண்ணாக்கு சொல்லிட்டியா?” என்று வினவினாள்.
“இல்ல.. இதை காட்டி தான் சொல்லனும்” என்று அவள் ஆவலுடன் கூற, “ஓகேடா. ஜாக்கிரதையா இருந்துக்கோ. நல்லா சாப்பிடு சரியா?” என்று சாய் கூறினாள். தோழியின் அக்கறைக்கு தலையசைத்தவளை தற்போது பார்த்து பார்த்து வண்டியை ஓட்டி கூட்டிச் சென்றாள்.
வீட்டை அடைந்த அஞ்சு, சென்று மிதமான வெண்ணீரில் குளித்து, தனது இரவு சட்டை மற்றும் பைஜாமா பேண்டை மாற்றிக் கொண்டு, அந்த பெட்டியில் வண்ண தாள் சுற்றி அலங்கரித்துவிட்டு வந்து, ஆர்வத்துடன் இரவு உணவுக்காக சமையலறையை தயார் செய்தாள். உற்சாகத்துடன் வேலை பார்த்தவளுக்கு அந்த உமட்டலான உணர்வு ஒரு தொல்லையாகத்தான் இருந்தது.
அங்கு வந்த மகா, “என்னடா அதுக்குள்ள வேலைய ஆரம்பிச்சுட்ட? காபி டீ எதும் சாப்பிடலையா?” என்று வினவ, “இல்லத்தை. வேணாம்” என்றபடி தோசைக்கு சாம்பாரை தயார் செய்துகொண்டிருந்தாள். அவள் வெளியே சொல்லிக்கொள்ளவில்லை என்றாலும் அவள் கண்களில் அத்தனை ஆர்வம் மின்னியது மகாவின் கண்களுக்கு தப்பவில்லை. ஏதோ அவள் சந்தோஷமாக இருக்கின்றாள் என்பது வரை புரிய, சன்னமான சிரிப்புடன் தானும் அவளுக்கு உதவினார். சில நிமிடங்களில் படித்து முடித்து வந்த ரூபியும் அவர்களுடன் ஐக்கியமாக, பேச்சும் கலகலப்புமாக பொழுது சென்றது.
அத்தனை நேரம் மாமியாருடனும் ரூபியுடனும் பேசியபடி வேலை செய்து கொண்டிருந்தவள், கணவன் உள்ளே வந்ததும், அத்தனை ஆர்வத்துடன் அவனை ஏறிட்டாள். அமைதியான சிரிப்புடன் அவன் தங்களறைக்கு சென்றிட, நைசாக இருவரிடமிருந்தும் கலண்டுக்கொண்டு உள்ளே சென்றாள்.
அவள் தன்னை பார்த்த பார்வையும் தற்போது உள்ளே வந்த விதமும் கொடுத்த வெட்கத்துடன் சிரித்துக் கொண்டவன், திரும்பி ‘என்ன?’ என்பதுபோல் புருவம் ஏற்றி இறக்க, “உங்களுக்கு ஒரு சர்பிரைஸ் வச்சுருக்கேன்” என்று கூறினாள். “நானும் உங்களுக்கு ஒரு சர்பிரைஸ் வச்சுருக்கேன்” என்று அவளைப் போலவே அவன் கூற, களுக்கிச் சிரித்தவள், அந்த பெட்டியை எடுத்து நீட்ட, “உங்க சர்பிரைஸ் விட என்னோடது தான் பெருசா இருக்கும்” என்றாள்.
சிரித்தபடி அதை வாங்கி பிரித்தவன், இதழ் மடித்து சிரிப்பை கட்டுப்படுத்தியபடி, “விஜி பேபிக்காடா? வலைகாப்புக்கு இன்னும் நாலு மாசம் மேல இருக்கே” என்று கூற, அவள் முறைத்தாளே ஒரு முறைப்பு! அதை கண்டு பக்கென்று சிரித்தவன், தனது பையிலிருந்து இரண்டு மாங்காயை எடுத்து அவளிடம் நீட்ட, அவனை அதிரவைக்க வந்தவள் தான் அதிர்ந்து நின்றாள்.
அவளை மென்புன்னகையுடன் பார்த்தவன், “வெல்கம் நியூ மம்மி அன்ட் பேபி” என்று கூற, கண்கள் மெலிதாய் கலங்க அவனை நிமிர்ந்து பார்த்தாள். அதில் நொடிக்கு நொடிதான் எத்தனை மாறுதல்கள்!
அவனை சட்டென கட்டியணைத்தவள், “எ..எப்படி தெரியும்” என்று வினவ, “மார்னிங் தான் யோசிச்சேன். நீ ரொம்ப ஹாப்பியா இருந்தது, நேத்துலருந்து உமட்டலா இருக்குனு சொன்னது. நேத்து இளாமானு கூப்பிட வேணாம்னு சொன்னது, அன்ட் இப்பதிக்கு உனக்கு பீரியட்ஸ் வந்தபோலவும் இல்லைனு நோட்டிஸ் பண்ணேன். ஒரு கெஸ் இருந்தது. இன்னிக்கு சொல்றேன்னு நீ சொன்னதால நானும் சரி வாங்கிட்டு போவோம்னு மாங்கா வாங்கிட்டு வந்தேன்” என்றான்.
அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிய, “நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்” என்று கூறினாள். அவளை தன்னிலிருந்து பிரித்து அவள் முகம் தாங்கியவன், கண்ணீரை துடைத்துவிட்டு, அவள் நெற்றியில் இதழ் பதிக்க, அவன் சட்டைகாலரைப் பற்றிக் கொண்டு அவன் இதழில் தன் இதழ் பதித்தாள்.
அவளது அதிரடி தாக்குதளில் இன்பமாக அதிர்ந்த போதும் மனைவியின் நலன் கருதி, அவளது முத்த யுத்தத்தின் துவக்கத்தை தான் முடித்து வைத்தான், “இப்படிலாம் லிப்லாக் அடிக்கக் கூடாது. பாப்பாக்கு மூச்சுமுட்டப் போகுது” என்றான். அதில் நாணம் கொண்டு தலைகுனிந்தவள், “நான் உங்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க வந்தேன். ஆனா நீங்க எனக்கு பெரிய சர்பிரைஸா கொடுத்துட்டீங்க” என்று கூற, அவளை அணைத்துப் பிடித்தவன், “செக் பண்ணிருப்பல? பேபி எப்படி இருக்கு?” என்று கேட்டான்.
“பேபி நல்லா இருக்கு” என்று அவள் அழுத்தமாக கூற, “பேபியோட மம்மி?” என்றான். “மம்மியும் நல்லா இருக்காங்க. நல்லா சாப்பிடனும்னு சொன்னாங்க” என்று அவள் கூற, சன்னமான சிரிப்புடன், “வெளிய போலாமா?” என்றான். “நீங்க பிரஷ்ஷாகிட்டு வாங்க” என்று அவள் கூற, தானும் சென்று குளித்து வந்தவன், அவளுடன் வெளியே வந்தான்.
அதற்குள் உணவு பதார்த்தங்களை கொண்டு வைத்திட்ட மகா மற்றும் ரூபி இருவருக்காகவும் காத்திருக்க, வெட்கத்துடன் பூமியைப்பார்த்து வந்தவள், கணவனை ஓரைக்காண்ணால் பார்த்து ஜாடை காட்டினாள். அவனோ ‘நீயே சொல்லு’ என்பதுபோல் ஜாடை காட்ட, மறுப்பாக தலையசைத்து அவனையே கூறும்படி ஜாடை காட்டினாள்.
அவளது வெட்கம் புரிந்து சிரித்துக் கொண்டவன், “அம்மா.. அஞ்சு இன்னிக்கு ஆஸ்பிடல் போயிருக்கா” என்று கூற, “அண்ணி தினமும் தானே போறாங்க” என்று ரூபி கூறினாள். அதில் “முழுசா கேளு ரூபி” என்று அஞ்சு கூற, “அவளுக்கு செக் பண்ண போனாமா” என்று ருத்ரன் கூறினான்.
“என்னாச்சு? உடம்பு எதும் சரியில்லையா அண்ணி? அதான் நேத்தும் சாப்பிடலையா?” என்று ரூபி வினவ, மகாவிற்கு ஏதோ புரிவதுபோல் இருந்தது. “நம்ம வீட்டுக்கு குட்டிபாப்பா வரப்போகுது” என்று ருத்ரன் கூற, மகாவும் ரூபியும் இன்பமாக அதிர்ந்தனர். இருவரும் அஞ்சுவைப் பார்க்க, நாணத்துடன் இதழ்கடித்து நின்றவள் மெல்ல அவர்களை நிமிர்ந்து பார்த்தாள்.
“என் ராசாத்தி.. நினைச்சேன்டா. நீ சாயிங்காலம் வந்ததுல இருந்து முகம் பூரா சிரிப்பா இருக்கவுமே யோசிச்சேன். என் கண்ணு” என்று அவள் கன்னம் நெட்டி முறித்தவர், பூஜையறை சென்று திருநீறு எடுத்துவந்து அவள் நெற்றியிலும் ருத்ரன் நெற்றியிலும் பூசிவிட்டார். “அண்ணி நிஜமாவா? நான் அத்தையாகப் போறேனா?” என்று குதூகலித்த ரூபி அஞ்சுவை அணைத்துக் கொள்ள, தானும் அவளை அணைத்து ‘ஆம்’ என்ற பதிலை உணர்த்தினாள்.
“ரொம்ப சந்தோஷமா இருக்குடாமா” என்றவருக்கு நேற்று பார்த்ததைப் போல், அவர்களது முதலிரவு அறைக்கு செல்லும்முன் அவள் பார்த்த பரிதவிப்பான பார்வை கண்கள் முன் வந்துபோனது. அவளது தற்போதையா முகம் கொள்ளா புன்னகையும் நாணமும் சொல்லியது, தன் மகனுடன் அவள் பரிபூரண சந்தோஷத்தோட வாழ்ந்துவரும் வாழ்க்கையை.
அவளை அமர்த்தி இரவு உணவை உருட்டி மிரட்டி உண்ண வைத்தவர், பால் கலந்து கொடுத்து பருகவைத்து அனுப்ப, மனம் எங்கும் நிறைவை உணர்ந்தாள். எப்போதும் போல் பால்கனியில் அவளை அணைத்தபடி அமர்ந்திருந்தவளிடம், “அத்தை மாமாக்கு சொல்லிட்டியாடா?” என்று வினவ, “நாளைக்கு தான் சொல்லனும். அதுக்குள்ள உங்க மச்சானுக்கு மெசேஜ் பண்ணிடாதீங்க” என்று அஞ்சு கூறினாள். அவளது வார்த்தைகளில் இலையோடிய சிறு உடைமையில் சிரித்துக் கொண்டவன், “ம்ம்.. அப்படியே ஆகட்டும் மகாராணி” என்று கூற, “எப்பவும் நம்ம இந்த பால்கனி ஸ்பெஷல். ஆனா இன்னிக்கு இரண்டா இல்லாம மூன்றா இங்க இருக்கோம்.. டபுல் ஸ்பெஷல் ஃபீல்” என்று உணர்வுபூர்வமான குரலில் கூறினாள்.
அதில் தலையாட்டியவன், மிக மிக மென்மையாக அவள் மணிவயிற்றை தொட்டுப் பார்க்க, இருவரது பிடறிமுடியும் சிலிர்த்தது. “எப்ப பாப்பா மூமென்ட்லாம் தெரியும்?” என்று அவன் ஆர்வமாக வினவ, “அஞ்சாவது மாசத்துல தான் தெரியுங்க” என்றாள்.
“ஈகரா இருக்கு. பேபியோட மூவ்மென்ட் ஃபீல் பண்ண நல்லா இருக்கும்ல?” என்று அவன் ஆசையாக வினவ, “நானும்.. ரொம்ப ஆசையா இருக்கேன்” என்றவள் அவனை ஏறிட்டாள். “உங்களுக்கு கேர்ள் பேபி வேணுமா பாய் பேபி வேணுமா?” என்று அவள் வினவ, “பேபிடால்.. இந்த கேள்விய கேக்ககூடிய அதிகாரம் உனக்கு இல்லை. பேபி என்ன பேபினு முடிவாகுறது உன்கிட்ட இல்லை” என்று அறிவியல் பேசினான்.
“உங்க கைல மட்டும் இருக்காக்கும்? சும்மா கேட்டா எதாச்சும் சொல்லுங்களேன்” என்று அவள் கூற, வாய்விட்டு சிரித்தவன், “நா ஏற்கனவே சொல்லிருக்கேன் கேடி.. எனக்கு இந்த பேபி அந்த பேபினுலாம் இல்லை. என்னை அப்பானும் உன்னை அம்மானும் கூப்பிட்டு சிரிக்க ஒரு குழந்தை இருந்தா போதும்” என்று உணர்வுபூர்வமாகக் கூறினான்.
அவனை அணைத்துக் கொண்டவள் அப்படியே சில நிமிடங்களில் அவன் மார்பில் தூங்கிவிட, மென்மையான புன்னகையுடன் அவள் நெற்றியில் முத்தமிட்டவன், அவளை பதமாக கைகளில் தூக்கிக் கொண்டு கட்டிலில் கிடத்திவிட்டு தானும் படுத்தான். உறங்குபவளது குழந்தை முகம் கண்டவன், அவள் ஜாடையில் ஒரு குழந்தையை உருவகித்துப் பார்க்க உடல் சிலிர்த்தது. “எந்த பாப்பாவோ.. ஆனா உன்ன போல இருக்கனும்” என்றவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு படுத்துக் கொண்டான்.
-வரைவோம் 💞