மாமியார் மதியம் கண்கள் கலங்க பேசியதில் பாவமாக உணர்ந்த அஞ்சிலை, ‘ச்ச எப்படி இவரால எல்லாத்தையும் இவ்வளவு ஈசியா கடந்து வர முடிஞ்சிது? என்னை போல புலம்ப இவருக்கு பிரண்ட்ஸ் கூட கிடையாது. பாவம் மனசுக்குள்ளயே எவ்வளவு வருத்தத்தை வச்சிருப்பாங்க?’ என்று கணவனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
அன்றைய இரவு எப்போதும் போல் உணவை முடித்துக் கொண்டு அறை திரும்பியவள் பால்கனியில் நின்றபடி வயல்வெளியை பார்த்துக் கொண்டிருக்க, மனம் கணவனின் அருகாமையை நாடியது. குளித்து முடித்து வந்தவன், எப்போதும் போல் மனைவியை பின்னிருந்து அணைத்தபடி “என்ன கேடி.. ஏதோ பலத்த யோசனை போல?” என்று கேட்டான்.
“எப்படி நீங்க எல்லாத்தையும் ரொம்ப ஈசியா கடந்து வரீங்க?” என்று நேரடியாக கேள்விக்கு வந்தவளைத் தன் புறம் திருப்பி, “என்னதுடா?” என்று அவன் வினவ, மதியம் அத்தையிடம் கேட்ட கதையை கூறி “உங்களுக்கு கொஞ்சம் கூட அப்போ வருத்தமாவே இல்லையா?” என்று வினவினாள்.
“அட இதுக்கா? நான் கூட நமக்குள்ள ஏதோ பர்ஸ்ட் ஃபைட் போலனு நினைச்சுட்டேன்” என சிரித்துக் கொண்டவன், “எனக்கு விஜிமேல எந்த அபிப்ராயமும் இல்லை, தங்கச்சி மாதிரி தான் பார்த்தேன்னுலாம் சொல்ல மாட்டேன். அத்தை பொண்ணுங்குற உறவு முறை அவகிட்ட இருந்தது. ஆனா அதைத் தாண்டிய திருமணம் அப்படிங்குற வட்டத்துக்குள்ள அவளை நான் யோசிச்சு பார்த்தது இல்லைடா. நான் விருப்பமே வைக்காத ஒன்னு எனக்கு கிடைக்காததில் எனக்கு என்ன வலி இருந்திடப் போகுது?” என்று கூற, “சரிங்க.. விருப்பம் இல்லை அதனால வலி இல்லை. ஆனா அவங்க காட்டிய காரணம் உங்களுக்கு வலிக்கலையா?” என்று கேட்டாள்.
அந்த கேள்வியில் ஒருநொடி தேங்கி நின்றவன், இதழ் குவித்து ஊதி ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டு, “வலிச்சது தான். அதை இல்லைனு உன்கிட்ட மறுக்க முடியலைமா. ஆனா என்கிட்ட காசு பணம் இல்லைனு வலிக்கலை. ரூபியோட மனசுல ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்த ஆளாகிட்டோமேனு வலிச்சுது. எனக்கும் அவளுக்கும் ஆறு வயசு வித்தியாசம். அவளை அப்பாக்கு அடுத்து நான் தான் பார்த்துக்கனும்னு அப்பா சின்ன வயசுல இருந்தே சொல்லுவாங்க. அப்பாக்கு அடுத்து இன்னொரு அப்பாவா அவளை பார்த்துக்கனும்னு அவளை ஒரு மகளா தான் வளர்த்தேன். அவளை காரணமா காட்டி மறுத்துட்டாங்களேனு வலிச்சது” என்க, அவனையே பாவமாக பார்த்து நின்றாள்.
“விஜி நிச்சயத்தப்போ எங்க சித்தி அவகிட்ட வந்து அதையும் இதையும் பேசி நோகடிச்சுட்டாங்க. என்கிட்ட வந்து அப்படியொரு அழுகை. படிப்பே வேணாம் அதுஇதுன்னு என்னென்னமோ பேசினா. அவளை சமாதானம் செஞ்சு அழுகைய நிறுத்த அவ்வளவு கஷ்டம் பட்டேன்” என்றவன் கண்கள் அன்றைய நினைவில் லேசாக கலங்கி போக, “அவ எப்போமே அப்பாவ மிஸ்பண்றியானு கேட்டா இல்லைனு தான் சொல்லுவா. என்னை அப்பாவா பாக்குறியாடானு நான் கேட்டதுக்கு என்ன சொன்னா தெரியுமா? நீ எனக்கு அப்பாவுக்கும் மேல அண்ணானு தான் சொல்லுவா” என்று கண்களில் கண்ணீரும் இதழில் புன்னகையுமாக கூறினான்.
“எல்லாரும் தங்கச்சி மேல இவ்வளவு பாசம் வைக்காத நாளைக்கு வரப்போறவ இதுக்காகவே சண்டை போடுவானு சொல்லுவாங்க. நானே ரூபிகிட்ட கேட்டிருக்கேன். ஆனா அவ நான் உன்ன நம்புறேன் அண்ணானு தான் சொன்னா. எனக்கு புரியவே இல்லை. தங்கை அப்படிங்குற உறவு வேற மனைவிங்குற உறவு வேற. இதில் காட்டப்பாடும் பாசமுமே வெவ்வேறு தான். அப்பறம் அதனால எதுக்கு சண்டை வரப்போகுதுனு தோனும்” என்றவன் அவள் முகம் பார்த்து, “நான் ரூபி மேல வச்சிருக்கும் பாசம் உன்னை பா..பாதிச்சிருக்கா?” என்று வினவ, அவனை கண்கலங்க பார்த்தவள் ‘ஆம்’ என்பது போல் தலையசைத்தாள்.
அதில் சற்றே திடுக்கிட்டவன் விழிகள் விரிய, எம்பி நின்று அவன் நெற்றியில் முத்தமிட்டு, “ரொம்ப பாதிச்சிடுச்சு. அதனால தான் மனசு உங்கள ரொம்ப தேடுது” என்றாள். அதில் உடல் சிலிர்க்க அவளை கண்டவன், கண்கள் பொழிய அவளை அணைத்துக் கொள்ள, “இளாமானு கூப்பிடுங்களேன்” என்று கொஞ்சலாக கேட்டாள். அந்தரங்கத் தருணங்களில் மட்டுமே அவன் அழைக்கும் அழைப்பு அந்த ‘இளாமா’. மனைவி தன்னை நாடும் நேரங்களில் இப்படி தான் சுற்றி வளைத்து தன் ஆசையைக் கூறுவாள். அதை புரிந்து கொண்டவனாக, தங்கள் இருவரின் மோகப்பசிக்கான தீனியின் தேடலைத் துவங்கிட, தேடலின் முடிவு அழகிய உருவாய் பெறுவதற்கான உயிர்ப்பும் துளிர்க்கத் துவங்கியது!
அந்த காலைவேளை அவ்வீட்டார் யாவருக்கும் பரபரப்பாகத்தான் இருந்தது. அன்று கதிர்வேலனின் நினைவுநாள். அவருக்கு திதி கொடுக்க வேண்டி யாவரும் செல்ல இருந்ததால், ரூபி தன் கல்லூரிக்கும் அஞ்சு மற்றும் ருத்ரன் தங்கள் வேலைக்கும் விடுப்பு எடுத்திருந்தனர்.
சென்று நல்லபடியாக திதி கொடுத்த யாவரும், அந்த குளத்தங்கரையில் அமர்ந்திருக்க, ரூபி கண்கள் லேசாக கலங்க தன் அண்ணியின் தோள் சாய்ந்திருந்தாள். மகா வெளிப்படையாகவே கலங்கி இருக்க, ருத்ரன் வருத்தம் தேங்கிய முகத்துடன் அன்னையின் தோள்தட்டி ஆறுதல் படுத்தினான்.
மெல்ல வானம் கருக்கத் துவங்கவே, மண் வாசம் வீச, ஏதோ அசௌகரியமாக இருந்தது அஞ்சிலைக்கு. ஆனாலும் அமைதியாகவே அமர்ந்திருந்தவள், லேசாக தூரல் போடவும் கணவன் புறம் திரும்ப, “ஆட்டோ சொல்லிட்டேன்டா. அஞ்சு நிமிஷம் வந்துடுவாங்க” என்றான்.
அதில் சிறுதலையசைப்புடன் அவள் திரும்பிக் கொள்ள, ஆட்டோவும் வந்து விட்டிருந்தது. அன்னையை ஏற்றிவிட்டு ஆடவன் திரும்பி பார்க்க அங்கு தூரத்தில் ரூபி அஞ்சிலையை அணைத்துக் கொண்டு அழுதுகொண்டிருந்தாள். அவள் முதுகை வருடி சிறுபிள்ளைக்கு சொல்வதுபோல் அஞ்சு ஆறுதல் கூற, அவர்களிடம் வந்தவன், “ரூபி” என்றான்.
அண்ணனை நிமிர்ந்து பார்த்தவள் அண்ணியிடமிருந்து அண்ணனிடம் அடைக்கலம் புக, “அப்பாவ மிஸ் பண்றியா?” என்று கேட்டான். ‘ஆமாம்தான்!’ ஆனால் அவளோ ‘இல்லை’ என்பது போல் தலையாட்டி “அதான் நீ இருக்கியே அண்ணா” என்க, ஆடவன் கண்களும் வலமைப்போல் கலங்கி போனது.
தங்கை தலையை வருடிக் கொடுத்தவன், “வாடா போலாம்” என்று அவளை தோள்வலைவில் நிறுத்திக் கொண்டு மற்றோர் கையை பின்னே நீட்டி மனைவி கரம் பற்றினான். அதில் சன்னமாக புன்னகைத்தவள், அவனுடன் நடக்க, ஆட்டோவில் ஏறிய சில நிமிடங்களில் வீட்டை அடைந்தனர்.
வீட்டை அடைந்ததும் யாவரும் சென்று குளித்துவர, அஞ்சிலை மதிய உணவை சமைக்கச் சென்றாள். ஏதோ அசௌகரியமாகவே உணர்ந்தவள், கடினப்பட்டு உணவை சமைத்து முடித்தாள். அத்தையை கொஞ்சி கெஞ்சி உண்ண வைத்தவளுக்கு ரூபியை சமாளிக்க கணவன் இருந்ததால் அதில் சிரமமில்லை.
அப்படியே அன்றைய நாள் கழிய, இரவு உணவை செய்து முடித்தவள் குமட்டலாக உணர்ந்ததால் உணவை தவிர்த்துவிட்டு வந்துவிட்டாள். பால்கனியில் நின்றிருந்தவளைப் பின்னிருந்து அணைத்தவன், “ஏன் சாப்பிடலை?” என்று சற்று கடினமாக வினவ, “இல்லை வேணாம். ஒருமாதிரி உமட்டலா வருது” என்றாள்.
“ஏன்டா?” என்றவன் குரலில் தற்போது அக்கறை விரவி வழியே, “அங்க குளத்துகிட்ட உக்காந்திருந்தோம்ல? அப்போயிருந்தே ஒருமாதிரி தான் இருக்கு” என்றாள். “ம்ம்..” என்றதோடு அவன் அமைதியாகிவிட, “சோகமா இருக்கீங்களா?” என்று வினவினாள்.
சன்னமான புன்னகையுடன் “இல்லை வருத்தமா இருக்கு. அப்பா இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டுட்டு போயிருக்க வேணாம்னு வருத்தம்” என்று ருத்ரன் கூற, “ம்ம்..” என்று அமைதியாவது அவள் முறையானது.
சில நிமிடம் மௌனம் நிலவவே, “ரூபி உங்களுக்கு இன்னும் குழந்தை தான் இல்ல?” என்று அஞ்சு வினவ, இதழ் வரிய, “எப்ப்பவுமே” என்றான். “அப்பாக்களுக்கு அவங்க பொண்ணு எப்போமே குழந்தை தான்” என்று அஞ்சு கூற, உடல் புல்லரிக்க ‘அதான் நீ இருக்கியே’ என்று ரூபி கூறியதை அசைபோட்டான்.
அவளை மேலும் அவன் அணைத்துக் கொள்ள, தன் வெற்றிடையில் ஊர்ந்த அவளவன் கரம் கொடுத்த ஸ்பரிசத்தில் ஏதோ உணர்ந்தாள். மெல்ல தன் வயிற்றை தொட்டும் பார்த்தவள், மனதினுள் ஏதோ கணக்கிட, கண்கள் பளீரிட்டது.
ஆடவன் ஸ்பரிசத்தை உணர்ந்தவளுக்கு வித்தியாசமாக இருக்க, தன் வயிற்றை தொட்டுப் பார்த்தவள் அது கல் போல் இருப்பதை உணர்ந்தாள். கர்பகாலத்தின் துவக்கித்தில் உள்ளே இருக்கும் சிசுவின் பாதுகாப்பிற்காக கர்பப்பை வழுப்பெரும். அப்போது வயிறு சற்று கல்போல் இருக்கும். அதை உணர்ந்தவள், காலையிலிருந்து எந்த வாசமும் பிடிக்காமல் தான் உணர்ந்த உமட்டலையும் எண்ணிக் கொண்டு தனது மாதாந்திர சுழற்சியை கணக்கிட்டுப் பார்த்தாள். நாற்பத்தைந்து நாட்கள் கடந்திருப்பதை கண்டுகொண்ட நொடி, அவள் விழிகள் பளீரிட, காதோரம் அவளவன் இதமான மூச்சுக்காற்றை உணர்ந்தாள்.
“இளாமா..” என்ற அவனின் மோகம் கலந்த குரலைக் கேட்டு உறுகி நின்றவளின் கழுத்தடியில் முகம் புதைத்தவன், அவளை இறுக அணைத்துக் கொள்ள, நடுநடுங்கும் கரத்தினை அவன் கைமேல் வைத்துப் பிடித்துக் கொண்டாள்.
“இளாமா…” என்று மீண்டும் அவன் அழைக்க, திரும்பி நின்று அவனை அணைத்துக் கொண்டவள் “ம்ஹும்.. அஞ்சுமா” என்றாள். மென்மையான புன்னகையுடன் தன் இதழ் கொண்டு அவள் கன்னம் உரசியவன், “இளாமா” என்க, “நோ.. அஞ்சுமா” என்றாள்.
அவளை ஆடவன் புரியாது நிமிர்ந்து பார்க்க, சிறுவெட்கச் சிரிப்புடன் அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டு “வேணாமே..” என்று கெஞ்சலாக கூற, அவள் நெற்றியில் முத்தமிட்டு “படுக்கலாமா” என்றான்.
“ம்ம்..” என்றவள் உள்ளே சென்று படுத்துக் கொள்ள, சன்னமான புன்னகையுடன் கதவுகளை அடைத்துக் கொண்டு வந்து படுத்தான். அவனை அணைத்துக் கொண்டவள், “சாரி..” என்க, “ஏ லூசு. என்னடி?” என்றான்.
அரிதான அவனது ‘டி’ அழைப்பில் சிரித்துக் கொண்டவள், அவனை அணைத்துக் கொண்டு “சந்தோஷமா இருக்கேன்” என்றாள். அவளை புரியாத புன்னகையுடன் பார்த்தவன், “ஏன்?” என்று வினவ, “உங்களால தான்” என்றாள். “நான் என்ன பண்ணேன்?” என்று உண்மையிலேயே புரியாமல் அவன் கேட்க, சொல்ல துடித்த நாவை அடக்கிக் கொண்டவள் ‘டெஸ்ட் பண்ணிட்டு சொல்லிப்போம்’ என்று நினைத்துக் கொண்டாள்.
“ஏ சொல்லுமா” என்று அவன் வினவ, “மாட்டேன்” என்று தலைகுனிந்துக் கொண்டாள். “அடிப்பாவி.. இதுக்கு எதுவும் சொல்லாமலே இருந்திருக்கலாம்ல?” என்று அப்பாவியாய் கேட்டவனைப் பார்த்து சிரித்தவள், “நாளைக்கு சொல்றேன்” என்றாள்.
“ஹ்ம்.. சரி தூங்கு” என்றவனும் சில நிமிடங்களில் தூங்கிவிட, தூங்கும் கணவனை ரசனையாக பார்த்தவள், “சூப்பர் குட் நியூஸ் இருக்கு. அதை நான் உறுதிபடுத்திட்டு உங்களுக்கு சொல்றேன்” என்று கூறிக் கொண்டாள். அந்த இரவு அழகாய் கழிந்து பொழுது விடிந்து அனைத்து உயிர்களுக்கும் புத்துணர்ச்சி கொடுக்க, அழகுபட தன்னவனுக்கு பிடித்த இளநீலநிறத்தில் கருநீலநிற பூக்களைக் கொண்ட காட்டன் புடவையை உடுத்தி தயாராகி தன்னை கண்ணாடியில் பாவை அழகுபார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்ன மேடம் ரொம்ப ஹாப்பியா இருக்கீங்க என்னனு கேட்டாலும் சொல்ல மாட்டேங்குறீங்க” என்று ருத்ரன் வினவ, அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்துக் கொண்டவள் “அதெல்லாம் சொல்லமுடியாது” என்று கூறி சிரித்துக் கொண்டாள்.
“என்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லுவ?” என்று சன்னமான சிரிப்புடன் தலைதுவட்டியபடி அவன் வினவ, தன் வயிற்றை அவனறியாது வருடிக் கொண்டவள், “சொல்லுவேன். கேக்க வேண்டியவங்களுக்கு கேட்கும்” என்று கூறி கலுக்கிச் சிரித்தாள்.
“என்னடி நேத்துலருந்து ஒரு மார்க்கமா இருக்க?” என்றவனுக்கு அவளது இந்த நக்கலும் நையாண்டியும் கலந்த அஞ்சுவின் பரிணாமம் பிடித்திருந்தது. சிரித்தபடி சென்றவள் தனக்கு உலர் திராட்சை, பேரிச்சம் பழம், பாதம் மற்றும் முந்திரி போட்டு பாலூற்றி சாறு தயார் செய்துக் கொண்டு ஆசையாய் பாருக, குமட்டிக் கொண்டு வந்தது.
‘குடிச்சா வெளிய வருது. குடிக்கலைனா பாப்பா பாவம்’ என்று தன்னோடு நினைத்தவள், கடினப்பட்டு அதை மிடறு மிடறாக பருக, “ஏன்டி.. சாப்பிடுற நேரம் இதை வச்சு குடிச்சுட்டு இருக்க? அதுவும் சட்டுபுட்டுனு குடிச்சுட்டு சாப்பிட உக்காராம இதென்ன மிடறு மிடறா குடிக்குற?” என்று மகா வினவினார்.
“இல்லை அத்தை. எனக்கு எதும் வேணாம். இதுவே போதும்” என்று அவள் கூற, “நேத்து நைட்டும் நீ சாப்பிடலைதானே?” என்றபடி ருத்ரன் வந்தான். ‘அய்யோ.. இவர் வேற நிலமை புரியாம’ என்று மனதோடு சிரித்துக் கொண்டவள், அத்தை முறைப்பதைக் கண்டு, “அ..அது இல்லை ஒரு.. ஒருமாதிரி” என்று தடுமாறினாள்.
“என்னாச்சு அஞ்சு? உடம்புக்கு எதும் முடியலையா?” என்று மகா வினவ, “அ..இல்லை அத்தை. நான் நான் ஹாஸ்பிடல் போய் சாப்பிட்டுக்குறேன். எனக்கு கட்டிகொடுத்துடுங்க” என்றாள். அவளை நம்பாத பார்வை பார்த்தவர், ருத்ரனை ஒரு பார்வை பார்த்து எழுந்து செல்ல, மனைவியை முறைத்தவன், “என்னாச்சு உனக்கு? நைட்டும் சாப்பிடலை. இப்பவும் வேணாம்னு சொல்ற?” என்று வினவினான்.
“நான் அங்க போய் சாப்பிட்டுக்குறேன்” என்று அவள் கூறுகையில் சாய் வந்துவிட, மகா அவளிடம் குற்றப்பத்திரிகை வாசிக்கத் துவங்கியிருந்தார். அதில் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவள் சாயை அப்பாவியாய் பார்க்க, “நான் சாப்பிட வச்சுட்டு சாப்பிட்டு முடிச்சதும் உங்களுக்கு சொல்றேன் ம்மா” என்று சாய் கூறினாள்.
பின் இருவரும் புறப்பட, வலமைபோல் கணவனிடம் கண்களால் விடைபெறாமல் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றாள். ‘இவ முழியும் சரியில்லை செயலும் சரியில்லை. என்னாச்சு? ஆனா ஏதோ சந்தோஷமான விஷயம் தான்’ என்று எண்ணியவனுக்கு ‘சந்தோஷமான விஷயம்னா…’ என்று தோன்ற ‘ஒருவேலை இருக்குமோ’ என்று கண்கள் பளீரிட வாசலுக்குச் சென்றான்.
அவள் தெருவை கடந்துவிட்டதை கண்டு சிரித்துக் கொண்டவன் உள்ளே வர, “என்னடா உனக்கும் அவளுக்கும் சண்டையா?” என்று மகா பதட்டமாக வினவினார். “யாரு அவ என்கூட சண்டை போடுறாளா? போங்கம்மா.. அதெல்லாம் உலக அதிசயத்துல தான் நடக்கனும்” என்று கூறிக் கொண்டவன் அறியவில்லை அந்த உலக அதிசயம் இன்னும் சில மாதங்கள் தொலைவில் நின்றுகொண்டு அவனைப் பார்த்து உக்கிரமாக சிரிப்பதை.
-வரைவோம் 💞