Loading

அன்று வேலை முடித்த தோழிகள் இருவரும் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருக்க, மாலை மங்கும் அந்த வேளையில், பேருந்தில் ‘நிலாவே வா..’ என்று எஸ்.பி.பி. அவர்களின் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. மிதமான வேகம், மெல்லிய காற்று, இதமான பாடல்! இதைவிட ஒரு பேருந்து பயணத்தை ரம்மியமாக்க வேறென்ன தேவையாக இருந்திடும்?

 

அதை ரசித்தவண்ணம் வந்துகொண்டிருந்த அஞ்சுவின் அருகே சாய் அன்று மருத்துவமனை வந்திருந்த‌ ஓர் சுட்டிக்குழந்தையை பற்றி பேசிக் கொண்டிருக்க, அஞ்சுவிடம் அவளுக்கு எந்தவொரு பதிலுமில்லை. சில நிமிடங்களில் அதை உணர்ந்த சாய், “ஓய் அஞ்சல” என்று அவளை உலுக்க, திடுக்கிட்டு சுயம் பெற்றவளைப் போல் அவளைத் திரும்பிப் பார்த்தாள்.

 

“எந்த உலகத்துலடி இருக்க?” என்று சாய் வினவ, சிரித்தபடி “இன்னிக்கு வந்த பாப்பா செம்ம கியூட்ல?” என்றாள். “அதைபத்தி தான்டி நான் இவ்வளவு நேரம் பேசிட்டு இருந்தேன்” என்று சாய் கூற, “ஏ சாரி சாய். கவனிக்கவே இல்லை” என்றாள். “ம்ம்.. கவனத்தை களவாட காதலன் வந்துட்டா தோழியோட கவனம் இரண்டாம் பட்சம் தான்” என்று நமட்டு சிரிப்போடு சாய் கூற, பதிலின்றி ஒரு சிரிப்பை உதிர்த்துக் கொண்டு திரும்பிக் கொண்டாள்.

 

இருவரும் இறங்கும் இடம் வந்துவிட, “நாளைக்கு வண்டி ரெடியாகிடும்டா. வண்டிலயே போய்டலாம்” என்று சாய் கூறியதற்கு சரியென்று தலையசைத்தாள். வீடு வந்து சேர்ந்த அஞ்சு, வாசலில் கிடந்த புது செருப்புகளைக் கண்டு விருந்தினர் வந்திருப்பதை அறிந்தபடி உள்ளேவர, ஒரு முதிர்ந்த தம்பதியினர் அமர்ந்திருந்தனர்.

 

“இதோ வந்துட்டா” என்று அஞ்சுவைப் பார்த்த மகா கூற, அத்தம்பதியினர் அவளைத் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தனர். தானும் புன்னகைத்துக் கொண்டவள், சென்று புத்துணர்வு பெற்று வந்தாள். அறை வாசலிலேயே ரூபியை பிடித்துக் கொண்டவள் அவர்கள் யாரென்று விசாரிக்க, “எங்க அம்மாவோட சித்தி பையன் அன்ட் அவங்க லைஃப். எங்களுக்கு மாமா அத்தை முறை அண்ணி. கல்யாணத்துக்கு கூட வந்திருந்தாங்க” என்று ரூபி கூறினாள்.

 

“ஓ சரிடா. எதும் சாப்பிட்டாங்களா? காபி போடவா?” என்று அஞ்சு வினவ, “இப்ப தான் குடுத்தேன் அண்ணி” என்று ரூபி கூறினாள். சரியென்றவள் ரூபியையும் கூட்டிக் கொண்டு செல்ல, அத்தம்பதியினர் அஞ்சுவிடம் அவள் நலன்களை விசாரித்துவிட்டு, “சரிக்கா. நாங்க வரோம். குடும்பமா எல்லாரும் வந்து விழாவ நடத்தி கொடுத்துட்டு போகனும்” என்றுவிட்டுச் சென்றார்.

 

“ஒருவழியா கல்யாணம் முடிவாகிடுச்சு. இந்த வாழ்க்கையாவது அவளுக்கு நிலைக்கனும்” என்று ஒரு வேண்டுதலை வைத்துக் கொண்டு மகா செல்ல, அடுத்து அண்ணி விளக்கம் கேட்பார் என்று அறிந்தவளாக, “ரெண்டு வருஷம் முன்ன‌ அவங்க பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. அந்த பையனே தான் பிடிச்சு வந்து பேசி பண்ணிக்கிட்டாங்க. என்ன பிரச்சினைனே தெரியலை அவங்க கிட்ட டைவர்ஸ் வாங்கிட்டு வேற மேரேஜ் பண்ணிகிட்டாங்க. அந்த அக்கா கல்யாணமே வேணாம்னு தான் சொல்லிட்டு இருந்தாங்க. ஆனா ஒரு வருஷமா அந்த அக்காவோட மாமா முறைல இருக்குற அண்ணா கல்யாணம் பண்ணிவைக்க கேட்டுட்டே இருந்தாங்க அண்ணி. சின்ன வயசுல இருந்தே விரும்பினேன்னு கேட்டுட்டே இருந்தாங்க‌. இப்ப தான் அக்கா சம்மதிச்சிருக்காங்க” என்று கூறினாள்.

 

“முதல்லயே அந்த அண்ணாவை கல்யாணம் பண்ணிருந்தா நல்லாயிருந்திருக்கும்ல” என்று அஞ்சு கூற, “நானும் நினைப்பேன் அண்ணி. இப்படி தான் அமையனும்னு இருந்திருக்கு. இனியாவது அவங்க ஹேப்பியா இருக்கனும்” என்றுவிட்டு சென்றாள்.

 

சில நிமிடங்கள் அவள் சிந்தையை அச்செய்தியே சூழ்ந்துவிட, தன்னை திசைதிருப்ப விரும்பி சென்று வேலைகளை செய்யத் துவங்கினாள். இரவு உணவும் தயாரித்து அனைத்து வேலைகளும் முடிந்துவிட, மகா பக்கத்து வீட்டாருடன் பேசுவதற்கும் ரூபி படிப்பதற்கும் சென்றுவிட்டனர்.

 

தனிமையில் கண்டதையும் யோசித்து தன்னை இம்சிக்கு மனதைப் பற்றி அறிந்தவள் இனிமையான பாடல்களை கேட்க, மனம் மீண்டும் அந்த குழந்தையின் நினைவை எடுத்துக் காட்டியது. சென்று தன் நாட்குறிப்பை எடுத்து வந்தவள், 

‘சத்தமின்றி மலரும் பூவின் பொழிவை கண்டேன்,

கர்பவதி அவள் கரங்களில் குலுங்கும் வளையோசையை உணர்ந்தேன்!

பாண்டியனின் முத்துப் பறல்களின் பொழிவைக் கண்டேன்,

கிங்கினி நாதமாய் சிரித்த அந்த பச்சிளம் குழந்தையின் புன்னகையில் இவையாவும் கண்டேன்!’

-என்ற கவிதையை இயற்றினாள்.

 

வெகுநாட்களுக்கு பிறகான அவளுக்கும் அவளது நாட்குறிப்பிற்குமான நேரமதை ரசித்தவளுக்கு கவிதை வரிகள் அழகாய் ஆழமாய் தோன்றின.

 

‘வேண்டப்படாதவை என வெட்டி வீசிட,

குடும்பம் களைச்செடியுமில்லை;

உறவுகள் காகிதப் பூக்களுமில்லை’

-அன்று ‘தொட்டதற்கெல்லாம் சண்டைபிடித்தால் ஒட்டும் வேணாம் உறவும் வேணாம்னு தள்ளி தான் இருக்கனும்’ என்று மகா கூறிய ஆழமான வரிகளின் வெளிப்பாடாய் அக்கவிதை வரிகள் உயிர்ப்பெற,

 

‘காதலைப் பூசிக்கொண்ட உன் விழிகளுடன் போட்டியிட்டு,

என் மைவிழிகள் தோற்றுப்போனது!

உன் நுனிவிரல் கொடுத்த ஸ்பரிசத்திற்கு முன்,

நான் பூசிக்கொண்ட அரிதாரம் யாவும் மடிந்துபோனது!

உன்னுள் மன்மதன் தீட்டிய ஆசைகளுக்கு முன்,

என் உடுப்புகள் யாவும் உடைந்துபோனது!

காதலாய் துவங்கிய கூடல் பொழுதில்,

கட்டுக்கள் யாவும் கடந்து போனது!’ என்ற கவிதையை இயற்றிப் பார்த்து சிரித்துக் கொண்டாள்.

 

அவர்களுக்கே அவர்களுக்கான அந்தரங்கத் தருணத்தின் அழகிய ரகசியங்களை கவிதையாய் தீட்டி வெட்கப்பட்டுச் சிரித்துக் கொண்டவள், மண் வாசம் கிளர்ந்து வந்து நாசி தீண்டியதில் ஜன்னலை ஏறிட்டாள். பின்பே மாடியில் உளர்த்திய துணிகளை இன்னும் எடுத்துவராதது நினைவவர, புத்தகத்தை அப்படியே வைத்துவிட்டு மாடிக்கு விரைந்தாள்.

 

அவள் எடுக்கையிலேயே மழை பிடித்திட, விறுவிறுவென துணிகளை எடுத்துக் கொண்டு கீழே விர, தன் அறையிலிருந்து வந்த ரூபி, “அண்ணி எடுத்துட்டீங்களா? இப்ப தான் ஞாபகம் வந்துது” என்று கூறியபடி துணிகளை வாங்கினாள். மெல்ல மூச்சுவிட்டு தன்னை நிலைநிறுத்தியவள், “உன்னேட டிரஸ் சிலது நனஞ்சிருச்சுடா. ரூம்ல காயப்போட்டு வச்சுக்கோ” என்றபடி துணிகளை எடுத்துக் கொண்டு தன் அறைக்குள் நுழைந்தாள். 

 

அங்கு தொப்பலாக நனைந்தபடி பீரோவை திறக்கும் ருத்ரனைக் கண்டு திடுக்கிட்டு, “எப்ப வந்தீங்கங்க? அய்யோ என்ன இப்படி நனைஞ்சிருக்கீங்க?” என்றபடி வந்து அவனுக்கு துணி எடுத்துக் கொடுத்தவள் சென்று உடைமாற்றி வந்தவனுக்கு, “தலைய நல்லா துவட்டினீங்களா?” என்று கேட்டபடியே வந்து தொட்டுப் பார்த்து துவட்டி விட்டாள்‌.

 

துவட்டி விடுபவளை நிமிர்ந்து பார்த்தவன், அப்படியே அவளை தன் கைச்சிறைக்குள் கொண்டு வர, அதில் திடுக்கிட்டுப் போனவள் அவனைப் பார்த்து, “எ..என்னங்க இது? வி..விடுங்க” என்று தடுமாறினாள். அவளை மேலும் இறுக்கிப் பிடித்தவன் பிடியில் நெளிந்தவள் “அ..அத்தை வந்துடுவாங்க. ச..சாப்பிட கூப்பிடுவாங்க. விடுங்க” என்று தத்தி பித்தி கூற, “நான் என்ன பண்ண? நீ தான் கவிதையால என்னை டெம்ட் பண்ணிட்ட” என்றான்.

 

அவன் தீண்டலில் கட்டுண்டு நின்றிருந்தவள், அவன் கூறிய சொற்களில் திடுக்கிட்டு அவனை நோக்க, மேஜையில் இருந்த புத்தகத்தைக் காட்டினான். “நீ ஹால்ல இருந்து எழுந்து போகும்போதே உள்ள வந்துட்டேன். என்ன புக்னு சும்மா எடுத்துப் பார்க்க உன் ஹேன்ட் ரைடிங்க இருந்தது. சரின்னு உள்ள கொண்டு வந்து பார்த்தா மேடம் ரொமேன்டிக்கா கவிதை எழுதி வச்சு என் மூட ஏத்திட்டீங்க” என்று கூறினான்.

 

‘அது ஒன்று மட்டும் தான் படித்தாயா?’ என்ற கேள்வி அவள் அகண்ட விழிகளில் தொக்கி நிற்க, அவளைப் பிடித்தபடியே எழுந்து நின்றவன், “அது ஒன்னு தான் படிச்சேன். அதுக்குள்ள நீ வந்துட்ட” என்று அவள் கன்னத்தில் முத்தமிட, விழிகள் தாமாக மூடிக்கொள்ள, கையிலிருந்த துண்டை தவறவிட்டாள்.

 

தனது நுனிவிரல் ஸ்பரிசத்திற்கும் உருகுழையும் தன் மணையாட்டியின் செயலில், கணவனாக கர்வம் கொண்டவன், மேலும் தன் செயல்களில் முன்னேற, வெளியே “அஞ்சுமா” என்று மகாவின் குரல் கேட்டது. அதில் அவனிடமிருந்து திடுக்கிட்டு விலகியவள், வெட்கத்துடன் திரும்பிக் கொண்டு தன் புடவையை சரிசெய்துக் கொண்டு அவனைத் திரும்பியும் பார்க்காமல் சென்றுவிட்டாள்.

 

“மாடில துணியிருந்ததேடா” என்று அவர் கூற, ‘அய்யோ இதுக்குதானா’ என்ற ஏக்கப்பெருமூச்சுடன், “எடுத்துட்டேன் அத்தை” என்றுக் கூறினாள். “சரிடா. ருத்ரன் வந்துட்டான்ல? சாப்பாடு எடுத்துவைடா. நான் வரேன்” என்றுவிட்டு அவர் செல்ல, சென்று உணவு பதார்த்தங்களை எடுத்துவந்து வைத்தாள். ருத்ரனும் தலையை துவட்டியபடி வந்து, “தலை துவட்டிவிடாம பாதிலயே வந்துட்ட” என்று அவள் காதருகே கிசுகிசுக்க, இதழ் மடித்து சிரிப்பை அடக்கியபடி அவனை நோக்காது, “அத்தை” என்றபடி சென்றாள்.

 

அதில் சிரித்துக் கொண்டவன், தாயும் தமக்கையும் வந்தவுடன் அமர்ந்து உண்ணத் துவங்கினான். மனைவியின் பாராமுகம் சிரிப்பை கிளப்ப, அமைதியாக உண்டு முடிக்க, யாவரும் உண்டதும் சமையலறைக்குள் சென்றுவிட்டாள். எப்போதும்போல் ரூபி வந்து அன்றைய நாளின் சுவாரசியங்களை அண்ணனுடன் பகிர, தானும் தங்கையுடன் பேசி சிரித்து பொழுதை ஓட்டினான்.

 

பின் யாவரும் உறங்கச் சென்றிட, அறைக்குள் வந்தவுடன் பாவை குடுகுடவென பால்கனிக்கு சென்று நின்றுக்கொண்டாள். அதில் வாய்விட்டு சிரித்தபடி தானும் சென்று அவளைப் பின்னிருந்து அணைத்தபடி நின்றுக் கொண்டவன், “ஓய் கேடி.. என்ன ரொம்ப கண்ணாமூச்சி காட்டுற” என்று அவள் காதருகே மீசைரோமம் உரச, கூறினான்.

 

“நான் என்ன கண்ணாமூச்சி காட்டினேன்” என்று நமட்டு சிரிப்போடு அவள் கூற, “ஓ.. அப்ப நீங்க காட்டலை.. சரி நான் காட்டுறேன் வா” என்றவன் அவளை தூக்கிக் கொண்டு உள்ளே சென்றிட, சிரிப்பும் நாணமுமாக தன்னவனுக்கு இசைந்து போனாள்.

 

அந்த வாரம் அழகாக கடந்திட, மதியவேளையதில் தங்களது கல்யாணம் ஆல்பத்தை வைத்துக் கொண்டு மாமியாருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள் அஞ்சிலை. ரூபி அவளது தோழிவீட்டு விசேஷத்திற்கு சென்றிருக்க, ருத்ரனும் வேலையாக சென்றிருந்தான். 

 

தங்கள் கல்யாண ஆல்பத்தை தூக்கிவந்த மருமகளை கண்டு புரியாது விழித்த மகாவிடம் வந்தவள், “அத்தை.. எனக்கு இதுல நம்ம சொந்தக்காரங்களை இண்டர்டியூஸ் பண்ணி வைங்க. யார் வீட்டுக்கு வந்தாலும் யாருனே தெரியமாட்டேங்குது. ரூபி இருந்தா அவளைக் கேட்டுப்பேன். அவளும் இல்லாம நீங்களும் அவங்க கூட பேசுரப்போ எனக்கு என்ன பேசனே புரியலை” என்றாள்.

 

அதில் வாய்விட்டு சிரித்துக் கொண்டவர் “வாடா” என்க, ஆல்பத்துடன் அவரருகே அமர்ந்தாள். முதல் பக்கத்தில் அவளும் அவனும் மட்டுமே இருக்க, “இவங்க ரெண்டுபேரும் எனக்கு தெரியும் அத்தை” என்றாள்‌. அவளது குறும்பில் சிரித்துக் கொண்டவர், அடுத்த பக்கத்தை திருப்பி ஒவ்வொரு பக்கத்துக்கும் இருக்கும் ஒவ்வொரு உறவினருக்கும் ஒரு கதையை கூறிக் கொண்டிருந்தார்.

 

அவற்றை சளிப்பின்றி ஆர்வத்துடன் கேட்பவளது செயல் அவருக்கும் பிடித்துப்போக, தன் குடும்ப உறுப்பினர்கள் பற்றியும் அவர் குணங்கள் பற்றியும் கூறினார். பொதுவாகவே பெரியோருக்கு கதை பேச ஆள் கிடைத்துவிட்டாலே பரம சந்தோஷம் தான். அந்த நிலையில் மகாவும் கூற, அஞ்சுவும் கேட்டுக்கொண்டாள்.

 

அதில் விஜி மற்றும் அவளது கணவன் புகைப்படம் வந்ததும் ஒரு நொடி தன் பேச்சை நிறுத்தி பெருமூச்சு விட்டவர், “இது விஜியும் அவ வீட்டுக்காரரும்” என்று கூற, “யாரு அத்தை?” என்றாள். அன்று பேச்சு வாக்கில் ‘விஜி’ என்று மட்டுமே ரூபி குறிப்பிட்டதைக் கேட்டதோடு சரி. அவள் பற்றிய நினைப்போ ஆர்வமோ இல்லாதவளுக்கு விஜி என்ற கதாபாத்திரத்தைப் பற்றிய எண்ணமே இல்லை.

 

“அன்னிக்கு ஒருநாள் ருத்ரன் ரூபி அத்தை வந்திருந்தாங்க நினைவிருக்காடா? இப்ப இவதான் மாசமா இருக்கா” என்று மகா நினைவு படுத்தவே, “ஓ அவங்களா?” என்று பார்த்தவள், ‘நம்மல விட அழகாதான் இருக்காங்க’ என்று மனதோடு எண்ணிக் கொண்டாள்.

 

அந்த நொடி தோன்றிய உணர்வு ‘இவங்கூட ஏன் அவருக்கு கல்யாணம் ஆகலை?’ என்ற கேள்வியை தோற்றுவித்த உந்துதலில், “அ..அவருக்கு பார்த்தவங்க தானே அத்தை?” என்று வினவ, “ச்ச! பொண்ணெல்லாம் பார்க்கலைமா. இவ அம்மாக்கு ருத்ரனுக்கு விஜிய கட்டிகொடுக்க எண்ணம் முதல்ல இருந்தது. என் வீட்டுக்காரர் கிட்ட அடிக்கடி சொல்லுவாங்க. நம்ம ரூபிக்கு விஜினா ரொம்ப இஷ்டம். ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ் பிரண்ட்ஸ். அதனால ருத்ரன் கூட வச்சு பேசவும் அவளுக்கு அவ்ளோ சந்தோஷம். ஆனா விஜிக்கோ ருத்ரனுக்கோ இதுபத்தின எந்த எண்ணமும் கிடையாது”

 

“அ..அவரு உடம்பு முடியாம இறந்துபோன பிறகே அந்த பேச்சுவார்த்தை வெளிப்படையா பேசப்படவே இல்லை. இருந்தாலும் உள்ளுக்குள்ள இன்னும் ருத்ரனுக்கு விஜிய கொடுக்கத்தான் அவங்க நினைக்கிறதா நாங்க நினைச்சோம்” என்றவர் கண்கள் கலங்கி போனது.

 

“அவரும் இல்லாம, படிக்குற பையனா ருத்ரன் தான் குடும்பத்தை பார்த்துகிட்டான். படிச்சுகிட்டே வேலைக்கு போனான். நான் நாலு வீட்டுக்கு போய் பத்து பாத்திரம் தேச்சாவது உங்களை வளர்க்குறேன்டானு சொன்னேன். அந்த நிலைமைய உங்களுக்கு கொடுக்க நானும் இல்லாம இல்லைனு சொன்னான். அந்த வார்த்தை தான் என்னை கட்டிபோட்டுச்சு. மேல நிறைய படிக்கலாம்னு நினைச்சவன் தான். ஒரே படிப்போட நிறுத்திக்கிட்டான். சொந்தமா உரக்கடை வைக்கனும்னு அவனுக்கு ஆசை. ஆனா வீடும் கடன்ல இருந்தது அப்போ. தங்கச்சி படிப்பு வேற, தனக்கான எல்லா ஆசையும் மூட்டகட்டி வச்சிட்டு எங்களுக்காக வாழ ஆரம்பிச்சான். இப்ப வரை அதைபத்தி ஒரு வார்த்தை கூட அவன் சொல்லி காட்டினதே இல்லை. அவங்கப்பா இல்லாத குறையை ஒருநாள் கூட எங்களுக்கு கொடுத்ததே இல்லை அவன்”

 

“அப்படி பட்டவன வசதி இல்லைனும் ரூபி செலவு எல்லாம் அவன் பொறுப்பும்னு சொல்லி வேணாம்னு வேற இடம் பார்த்துட்டாங்க. அதுல ரூபிக்கு அவ்வளவு கோபம். ஆனா அப்போ கூட அவன் அதை பெருசாவே எடுத்துக்கலை. அதுக்கு பிறகு தான் ரூபி அவனுக்கு பொண்ணு தேட என்னை ரொம்ப தொல்லை பண்ணினா. விஜியவிட நல்ல பொண்ணா நான் பார்த்து தருவேன்னு சொல்லிட்டே இருப்பா” என்றவர் முந்தியில் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டார்.

 

மருமகளின் முகம் வருடி, “என்னமோ அவளுக்கு உன் ஃபோட்டோவ பார்த்ததுமே புடிச்சு போச்சு. பொண்ணு பார்க்க வரும் முன்னயே கல்யாணமே நடந்து முடிஞ்ச போல தான் உறுதியா இருந்தா” என்க, அவரது கண்ணீர் முகத்தில் தானும் கண்கலங்கி அவரை நோக்கினாள்.

 

“வேற எதும் காரணமா இருந்தாலும் ஏத்துகிட்டு நகர்ந்திருப்போமோ என்னமோ. அவன் எங்களுக்காக வாழுறத ஒரு குறையா அவங்க பார்க்கவும் ரூபி தான் பாவம் ரொம்ப குற்ற உணர்வா உணர ஆரம்பிச்சுட்டா. எங்க நான் வருத்தப்படுவேனோனு தங்கச்சிய தனியா கூட்டிட்டு போய் பேசி சமாதானம் செஞ்சு கூட்டிட்டு வந்தான். பெத்தவ எனக்கு தெரியாமலா போகும்” என்று மீண்டும் கண்ணை அவர் துடைத்துக் கொள்ள, “நீங்க அழாதீங்க அத்தை. அவர் நல்ல மனசு அவங்களுக்கு தெரியலை. அவரை புருஷனா பெற அவங்களுக்கு தான் கொடுப்பனை இல்ல” என்று கூறினாள்.

 

மருமகளின் வார்த்தைகளில் மகனை பெற்ற தாயவள் கர்வத்துடன் புன்னகைக்க, அவர் கண்ணீர் துடைத்தவள், “இருங்க நான் உங்களுக்கு காபி போட்டுட்டு வரேன். நம்ம மீதிய அடுத்த சண்டே கண்டினியு பண்ணலாம்” என்றுவிட்டு சென்றாள்.

-வரைவோம் 💞

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
6
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்