Loading

பால்கனியில் கம்பிகளில் சாய்ந்து நின்றிருந்தவளைப் பின்னிருந்து அணைத்தபடி இருந்த ருத்ரன், “என்ன மேடம்.. இன்னிக்கு லேட்டா வந்தீங்க, சாப்பாடும் வேணாம்னு சொல்லிட்டீங்க?” என்று வினவ, “அம்மாவ பார்க்க போயிட்டு வந்தேன். நீங்க அம்மாகிட்டயே கொடுக்க சொல்லிட்டீங்கள்ல. அதான் அம்மா அகவுன்டுக்கு அனுப்பிட்டு பேச போயிருந்தேன். அம்மா செம்ம ஷாக் தெரியுமா?” என்றாள்.

 

மனைவியை பின்னிருந்து அணைத்தபடியே அவள் பேசுவதை ரசித்தவன், “நீ ஹேப்பியா?” என்று வினவ, வயல்வெளியை பார்த்தபடி நின்றிருந்தவள் திரும்பி நின்று அவன் கண்களைப் பார்த்தபடி “ரொம்ப” என்று கூறினாள்‌. அதில் அவளை அணைத்துக் கொண்டவன், “அதுபோதும்” என்க, தானும் அவனை அணைத்துக் கொண்டாள்.

 

“சரி தூங்கலாமா?” என்று அவன் கேட்க, “எனக்கு இந்த பால்கனி ரொம்ப புடிச்சிருக்குங்க. இங்கயே தூங்கலாம்.. ஆனா கொசு கடிக்கும்ல?” என்றாள். “உன்னை தூக்கிட்டே போயிடும்” என்று அவன் கூற, வாய்விட்டு சிரித்தவள் அவனுடன் உள்ளே சென்றாள். 

 

கட்டிலில் படுத்துக் கொண்டவளுக்கு அவனுடன் அவ்வளவு பேசவேண்டும் என ஆசையாக இருந்தது. ஆனால் அவன் கண்களில் தெரிந்த சோர்வை உணர்ந்து கொண்டவள், விளக்கை அணைத்துவிட்டு அவனுடன் படுத்துவிட, தானும் அவளை அணைத்துக் கொண்டு உறங்கினான்.

 

அழகும் அந்தரங்கமும் கலந்த காவியமாக சென்றவர்களது நாட்களில் ஒரு மாதம் பரிபூரணமாக முடிந்திருந்தது. இருவருமாக பரபரப்புடன் புறப்பட்டுக் கொண்டிருக்க, “பார்த்து போயிட்டுவாடா. வெளிய கண்டதையும் வாங்கி சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்காத. டேய் நல்ல ஹோட்டலா கூட்டிட்டு போ. நேரத்தோட வாங்க. அங்க அடிக்கடி மழை பெய்யும் குடை எடுத்துக்குட்டீங்கள்ல?” என்று மகா கேட்ட இத்தனை கேள்விகளுக்கும் காரணம் அவர்கள் குலதெய்வம் கோவிலுக்கு போக போவதே!

 

சரியாக திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் மாதா மாதம் அக்கோவிலுக்கு செல்பவன், தங்களது திருமண நாளிலேயே செல்லலாம் என்று முடிவு செய்திருந்தான். ரூபிக்கு தற்போது கொஞ்சம் நாட்களுக்கு முன்பு தான் பாட்டியை பார்க்க ஊருக்கு சென்று ஒருவாரம் விடுப்பு எடுத்திருந்ததாள் மீண்டும் விடுப்பு எடுக்க இயலாது போகிவிட, மகாவும் முட்டி வலியால் வரமறுத்து இருவரையும் அனுப்பி வைத்தார்.

 

தாங்கள் இருவரும் தான் என்பதால் இருசக்கர வாகனத்திலேயே புறப்பட்டவர்கள் சில நிமிடங்களில் கோவிலை அடைய, திருமணம் அன்று ரசிக்க இயலாத அந்த சூழலை தற்போது ரசித்து அவனுடன் பேசியபடி ஏறினாள்‌. சென்று இறைவனை வணங்கிவிட்டு வந்தவர்கள் அங்கே குளத்தின் அருகே சென்று நின்று வேடிக்கை பார்க்க, “அவ்வளவு அழகா இருக்குங்க இந்த கோவில்” என்று கூறினாள்.

 

“ஆமாடா. மாதம் ஒருமுறை கண்டிப்பா வந்துடுவேன். எனக்கு இங்க வந்தா மனசுக்கு லேசா இருக்கும். என்னதான் இன்னும் கடவுள் இருக்காரு இல்லைனு ஆயிரம் விவாதமும், விடையறியா கேள்விகளும் இருந்தாலும், கோவிலுக்குனு வந்து நம்ம கவலைகளை கொட்டிட்டு நிமிரும்போது மனம் அடையும் நிம்மதி ஒரு தனி சுகம் தான். நான் அடையிற அந்த நிம்மதியில் என் இறைவன நான் பாக்குறேன்” என்று அவன் கூற, தன்னவனை ரசனையாகப் பார்த்தவள், ‘ஆம்’ என்பது போல் தலையை அசைத்து வைத்தாள்.

 

அவர்களை அங்கே கண்ட உறவுக்காரப் பெண்மணி ஒருவர், “ருத்ரா..” என்றபடி வர, அவர் குரல் கேட்டு திரும்பியவன், “பெரியம்மா” என்றான். தன் மனைவியிடம் திரும்பி, “சின்ன தாத்தா பொண்ணு. எனக்கு பெரியம்மா முறை” என்றவன், “எப்படி இருக்கீங்க ம்மா” என்று பரஸ்பரம் விசாரிக்க அவரும் பாசத்துடன் பேசினார்.

 

பின் அஞ்சுவைப் பார்த்து, “கல்யாணம் ஆகி மாசம் மேல ஆச்சு தானேமா? எதும் நல்ல செய்தி இருக்கா?” என்று வினவ, விழிகள் விரிய தன்னவனை திரும்பிப் பார்த்தாள். ‘அதுக்குள்ளையா?’ என்ற எண்ணம் வந்தாலும் உள்ளுக்குள் குளுகுளுவென தான் உணர்ந்தாள் பெண்.

 

ஆனால் இருவருக்குமே அவருக்கு எப்படி பதில் கூறவென்று தெரியாது இருக்க, தானே புரிந்து கொண்டவர், “சீக்கிரம் செய்தி சொல்லுமா. எங்க பையன நல்லா பார்த்துக்கோ” என்றுவிட்டு செல்ல, செல்லுபவரை சிரிப்போடு பார்த்து நின்றாள். “சாரிடா.. அவங்க கொஞ்சம் பழைய ஆள். அதான் இப்படி பட்டுனு கேட்டுட்டாங்க” என்று அவன் கூற, மேலும் சிரித்துக் கொண்டவள், “பரவாயில்லை” என்று ஒரு மார்க்கமாக கூறி வைத்தாள்.

 

அதில் தானும் புன்னகைத்தவன் சில நிமிடங்கள் அங்கே சுற்றி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு நேரத்தை அழகாக கடத்திவிட்டு இறங்கினான். மதிய உணவும் ஒரு கடையில் முடித்துக் கொண்டவர்களில் “எங்கேயாவது போகலாமாடா?” என்று அவன் வினவ, என்ன கூறுவது என்று தெரியாது விழித்தாள்.

 

எங்கேயாவது செல்ல அவளுக்கு ஆசைதான், ஆனால் அடுத்தே அவன் எங்கு செல்லலாம் என்று கேட்டாள் தன்னிடம் பதில் இருக்காதே என்பதால் அவள் முழிக்க, “சும்மா எங்காச்சும் போலாமா?” என்று கேட்டான். “உ..உங்களுக்கு ஓகேனா சரிதான்” என்று சிறு தயக்கத்துடன் அவள் கூற, இதழ் பிரியா புன்னகையுடன் “ம்ம்” என்றான்.

 

அவளுடன் சென்று படம் பார்த்துவிட்டு வீடு திரும்புகையில் அந்த நாள் கொடுத்த திருப்தி இருவர் உள்ளத்திலும் நிறைந்து இருந்தது. தற்போதைய இரவுகளில் வாடிக்கையாகிப் போன அவர்களது பால்கனி நேரத்தினை நிலவை பார்த்தவண்ணம் இருவரும் இருக்க, அவள் கைகளோடு தன் கைகளை கோர்த்தபடி அமர்ந்திருந்தான்.

 

நிலவினைப் பார்த்தபடியே, “ஓய் கேடி.. உனக்கு பேபீஸ்னா பிடிக்குமா?” என்று அவன் வினவ, புன்னகையுடன் “யாருக்கு தாங்க குழந்தைனா புடிக்காது? ஹாஸ்பிடல்ல டெலிவரி கேஸஸ் அன்ட் குழந்தைங்களாம் வரும்போது செம்மையா இருக்கும். நான் வேலைக்கு சேர்ந்த புதுசு ஒரு அஞ்சு வயசு பெண் குழந்தைக்கு உடம்பு முடியாம அட்மிட் ஆயிருந்தா. அவ்ளோ கியூட் அந்த பாப்பா. என்கிட்ட தான் ஊசி போட்டுப்பா. சாய் ஒருமுறை போட போயிருந்தப்போ போட்டுக்கவே மாட்டேன்னு அவ்வளவு அழுகை. நான் போய் போட்டப்போ தான் அடங்கினா. சாய் அந்த பாப்பா கிட்ட சண்டை போடுவா ஏன் என்கிட்ட போட்டுக்க மாட்டியானு. அந்த பாப்பா மாட்டேனு சொல்லி பல்ப் கொடுத்துடுவா” என்று கூறி சிரித்துக் கொண்டாள்.

 

“ஹப்பா.. நமக்கு கல்யாணம் ஆன இந்த ஒரு மாசத்தில் நீ இப்ப தான் என்கிட்ட இவ்வளவு நீலமா பேசிருக்க” என்று அவன் கூற, அதில் கலுக்கிச் சிரித்தவள், “அது.. புடிச்ச டாபிக்ஸ் பத்தி பேசினா என்னையும் மறந்த நிலைல தான் பேசுவேன்” என்றாள்.

 

“ம்ம்.. தெரியுது” என்றவன் “நீ பி.எச்.டி பண்ணனும்னுலாம் யோசிச்சிருக்கியாடா?” என்று வினவ, “முதல்ல பண்ணனும்னு தான் இருந்தேன். ஆனா ரொம்ப வருஷம் ஆகும்‌. அதுக்குள்ள கல்யாணம் பண்ணி வச்சுடுவாங்க. நம்ம சம்பாத்தியம்னு ஒன்னு வீட்டுக்கு கொடுக்கனும்னு விட்டுட்டேன். அத்தையும் அடிக்கடி சொல்லுவாங்க. எம்.எஸ்.சி படிச்சதுக்கே இன்னும் எத்தனை வருஷம் தான் படிப்பியோனு கேட்டுட்டே இருப்பாங்களா, அதுல இருந்த கொஞ்ச நஞ்ச ஆர்வமும் போச்சு” என்றாள்.

 

“இப்ப படிக்குறியாடா?” என்று அவன் கேட்க அவனை அதிர்ந்து பார்த்தவள், “இ..இல்லைங்க. அந்த ஆர்வம் போச்சு” என்றாள். “சரிடா. உனக்கு அப்படி எதும் ஆசை இருந்தா படிக்க வைக்கலாமேனு கேட்டேன்” என்று அவன் கூற அவள் உடல் ஒருநொடி சிலிர்த்து அடங்கியது.

 

“நீங்க நிஜமாவே ஒரு யுனிக் பீஸ்” என்று கூறியவள் ஆசையுடன் அவன் மீசையை முறுக்கிவிட, அதில் சிரித்துக் கொண்டவன் அவள் நெற்றி முட்டி, பிறைநுதலில் இதழ் பதித்தான். அதில் மீண்டும் உடல் சிலிர்க்கப் பெற்றவள் அவன் மார்பில் சாய்ந்துக் கொண்டு, சற்றே தயக்கத்துடன் “உங்.. உங்களுக்கு குழந்தைனா பிடிக்குமா?” என்று வினவ, “பரவாயில்லையே.. பாயின்டுக்கு வந்திட்டியே” என்றான். 

 

அதில் நாணத்துடன் தலைகுனிந்தவள் சிரித்துக் கொள்ள, அவளை இடையோடு அணைத்துக் கொண்டவன், “ரொம்ப பிடிக்கும்.. கேர்ள் பாய்னுலாம் இல்லை. எந்த பேபினாலும் பிடிக்கும். ஆனா மூவீஸ் அன்ட் ஸ்டோரீஸ்ல அப்பா பொண்ணு பான்ட் பார்த்து படித்ததில் ஒரு ஆர்வம். நமக்கு ஒரு பொண்ணு பிறந்தா எப்படி பார்த்துப்போம்னு” என்றான்.

 

பாவை பதில் கூற அறியாது அப்படியே அவன் பேச்சை ரசித்து அமர்ந்திருக்க, காதருகே தன் மூச்சுக்காற்று மோத, “ஒரு பாய் பேபி ஒரு கேர்ள் பேபி போதும். உனக்கு ஓகேவா?” என்று கிசுகிசுத்தான். அதில் மீண்டும் உடல் சிலிர்த்தவள், அவனை அணைத்துக் கொள்ள, சிரித்தபடி அவள் முதுகை வருடிக் கொடுத்தவன், அவள் உச்சந்தலையில் முத்தம் பதித்தான்.

 

“படுக்க போலாமா?” என்று அவன் வினவ, தானும் தலையசைத்து உள்ளே சென்றவள், அவனை அணைத்துக் கொண்டு ஏதோ கூற வேண்டி வார்த்தைகளை மென்று விழுங்கினாள். அவனைப் பார்ப்பதும் வார்த்தைகளை கோர்ப்பதுமான அவளது இன்ப தவிப்பை பார்த்து “என்னடா” என்று அவன் வினவ, “அ..அது” என்று தயங்கியவள், “எனக்கும் எந்த பேபினாலும் பிடிக்கும்” என்றுவிட்டு அவன் மார்பில் முகம் புதைத்தாள். அவள் ஆசை புரிந்த மணவாளனாக, அவளை அள்ளி அணைத்துக் கொண்டவன் தன் தேடலைத் துவங்கிட, தன்னவன் ஸ்பரிசத்தில் இன்பமாய் தன்னை தொலைத்தாள்.

 

தங்கள் வாழ்வில் பரிபூரண படிகளை அடைந்துவிட்டதாக எண்ணியவள் அறியவில்லை இன்னும் வாழ்க்கை பாடத்தில் அவள் கத்துக்குட்டி தான் என்பதை. அதை உணர்த்த விதி வைத்திருக்கும் பல விபரீத சம்பவங்கள் அவள் வாழ்வை மலர வைக்குமோ? கசக்கி வீசுமோ?

 

கால சக்கரத்தின் உதவியோட நாட்கள் சில கடந்திருக்க, அன்று வித்தியா (ருத்ரன் அத்தை/விஜி அம்மா) வந்திருந்தார். “வாங்க அண்ணி” என்று மகா வரவேற்க, சமையலறையிலிருந்து ரூபியும் அஞ்சுவும் வந்தனர். 

 

திருமணத்தின் போது அவரைக் கண்டது என்பதால் அடையாளம் தெரியாத அஞ்சு ரூபியை பார்க்க, “எங்க அத்தை” என்று வேண்டா வெறுப்பாக அவள் காதருகே கூறினாள். ‘ஓ’ என்பது போல் சைகை செய்தவள் வீட்டு மருமகள் என்ற பெயரில் தானும் வரவேற்க, அவளை ஒரு பார்வை பார்த்துக் கொண்டவர் ‘ம்ம்’ என்ற தலையசைப்போடு நிறுத்திக் கொண்டார்.

 

தன் மகளை ருத்ரனுக்கு திருமணம் செய்துவைக்க ஆசைப்பட்டவர் தான், கணவன் ருத்ரனின் வருமான படியை அளந்து காட்டி மறுத்தபோது மகளின் வாழ்வுக்காக அதை ஏற்றுக் கொண்டார் தான். ஆனால் அரசல் புரசலாக தன் மகளை விட ஒரு நல்ல பெண்ணை ருத்ரனுக்கு கட்டி வைக்க ரூபி மற்றும் மகா எடுத்துக் கொண்ட முடிவு, பலர் வாய்களில் கடிபட்ட மிச்சமாய் அவர் காதை அடைந்திருந்தது.

 

‘காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது போல் தன் மகளைவிட நல்ல பெண்ணா என்ற ஒரு மிதப்பு இருந்தது அவருக்கு. அதனால் இயல்பாகவே அஞ்சிலையின் மீது ஒரு ஒட்டாத தன்மை உண்டாகிட, அதுவும் நிச்சயத்தின் போது அஞ்சுவைக் கண்டவர், தன் மகளைவிட சற்று அழகில் குறைந்தவளே என்ற எண்ணத்தில் மேலும் விலகிக் கொண்டார்.

 

அவரது ஒட்டாத தன்மையின் காரணம் தெரியாத போதும், ஏனோ அவளுக்கு அது முகத்தில் அறைந்த உணர்வைக் கொடுத்தது. அதில் அவளைவிட ரூபிக்கு தான் அதிகம் கோவம் வந்தது. 

 

“சொல்லுங்க அண்ணி என்ன விஷயம்?” என்று மகா வினவ, அஞ்சுவை ஒரு பார்வை பார்த்துக் கொண்டு “என்ன அண்ணி எதும் நல்ல செய்தி உண்டா?” என்று கேட்டார். அது அங்குள்ள யாவருக்குமே சற்று சங்கடமான சூழலை கொடுக்க, “இப்ப தானே அண்ணி ரெண்டு மாசம் ஆயிருக்கு” என்று மகா வினவினார்.

 

“ம்ம்.. சரிதான்” என்றவர், “எம்பொண்ணு முழுகாம இருக்கா அண்ணி. அத சொல்ல தான் வந்தேன்” என்று கூற, விஜியோடு அஞ்சுவை ஒப்பிட்டுக் காட்டவே முதலில் அஞ்சுவிடம் செய்தி உண்டா என அவர் விசாரித்தது அங்குள்ளோருக்கு புரிந்தது.

 

“அப்படியா அண்ணி.. ரொம்ப சந்தோஷம். எத்தனை மாசம் ஆகுது” என்று அவர் வினவ, “ரெண்டரை மாசம் தான் அண்ணி. அவரு இப்பவே சொல்ல வேணாம்னு தான் சொன்னாரு. நான் தான் நம்ம சொந்தம்தானேனு ஒரு எட்டு சொல்லலாம்னு வந்தேன். எங்களுக்கோ ஒரே பொண்ணு. நல்லா சீரெல்லாம் அனுப்பனும்ல? அதான் அவங்க அப்பா பழம், விஜிக்கு நகைநட்டு வளையல்னு எடுத்து வச்சிருக்காரு. நான் தான் அஞ்சாவது மாசம் போடுவோம் ஒரு மாசம் போகட்டும்னு சொல்லி வச்சிருக்கேன். அப்பறம் கண்ணு பட்டுடும்ல?” என்று கூறினார்.

 

தங்களது பணபலத்தை வெளிப்படையாக காட்டி அவர் இருபொருள்பட பேசவும் அஞ்சுவின் முகம் லேசாக வாடிவிட, “ஓ.. சரி அண்ணி” என்றதோடு மகா முடித்துக் கொண்டார். ரூபியின் புரம் திரும்பியவர் “என்ன ரூபிமா எப்படி இருக்க? படிப்பு எப்படி போகுது?” என்று வினவ, “ரொம்ப நல்லா இருக்கேன் அத்தை. என் அண்ணி சூப்பரா பாத்துக்குறாங்க, எங்கண்ணா படிக்க வைக்குறான். நல்லா படிக்குறேன்” என்று பதிலுக்கு தனது தரத்தை உயர்த்தி காட்ட எண்ணி ரூபி பேசினாள்.

 

அதில் உள்ளுக்குள் சுள்ளென்று உணர்ந்தவர், பேச்சை அப்படியே கத்தரித்துக் கொண்டு “சரி வரேன் அண்ணி” என்று புறப்பட, வாசல் வரை சென்ற மகா வழியனுப்பி வைத்து வந்தார். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க நின்ற ரூபி, “என்னவாம் ம்மா அவங்களுக்கு? நம்மலா விஜிய கட்டிதர வேணாம்னு சொன்னோம். வசதி இல்லைனு அவங்களா தானே வேற இடம் பார்த்து கொடுத்தாங்க? இப்ப வந்து அண்ணிய ஏற இறங்க பாக்குறதும், குதர்க்கமா பேசுவதும் என்னம்மா இதெல்லாம்?” என்று பொறிய, அஞ்சுவுக்கு ஓரளவு அவரது ஒதுக்கத்தின் காரணம் புரிந்து போனது.

 

“ரூபி சும்மா இரு. வெளிப்படையா பேசினா நம்ம எதிர்த்து பேசலாம். பூடகமா பேசுறவங்க கிட்ட நம்ம என்னனு சண்டைக்கு போக?” என்று மகா கூற, “அம்மா என்னம்மா நீங்க? படக்குனு நாலு வார்த்தை பேசனும் போல வந்தது எனக்கு” என்று ரூபி கத்தினாள். “ரூபி சும்மா கத்தாத. எல்லாத்துக்கு எடுத்தோம் கவிழ்த்தோம்னு சண்டை போட்டா ஒட்டும் வேணாம் உறவும் வேணாம்னு தான் தள்ளி இருக்கனும்” என்று மகா கத்த, கோபத்துடன் ரூபி உள்ளே சென்றுவிட்டாள்.

 

இருவரையும் கண்டு கலக்கத்துடன் நின்றிருந்த அஞ்சுவைப் பதட்டத்துடன் பார்த்த மகா, “அவங்க பேசுனதை எதும் மனசுல எடுத்துக்காத அஞ்சு. அவங்க கொஞ்சம் குதர்க்கமான குணம்டா” என்று கூற, “அய்யோ அத்தை நீங்க ஏன் பதறுறீங்க. நான் எதும் நினைக்கலை விடுங்க” என்றாள்.

 

அவளது பேச்சில் சற்றே நிம்மதியடைந்த மகா மகளை சமன் செய்ய சென்றிட, பாவை ஒரு பெருமூச்சுடன் நகர்ந்தாள். திருமண வாழ்வில் இப்படியான தருணங்களையும் கடந்து தான் வரவேண்டும் என்ற மனப்பான்மையுடன் உள்ளே வந்தவள் என்பதால் அவளை அத்தனை தூரம் இது பாதிக்கவில்லை. ஆனால் இப்படியான சின்ன விடயம் கொண்டு பின்வரும் காலத்தில் தானே பெரிய பிரளயத்தை உருவாக்கப் போகின்றோம் என்று அவள் அறிந்திருக்கவில்லை.

-வரைவோம் 💞

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்