Loading

கீச் கீச் என்று கிளிகளின் இசைக்கச்சேரி நிகழும் அந்த காலைப்பொழுதில் தன்னவளை அணைத்துக் கொண்டு ஆழ்ந்த நித்திரையில் இருந்தவன், அவளது அசைவுகளில் முழிப்பு பெற்றவனாகக் கண் விழித்தான். கோழிக்குஞ்சைப் போல் அவனுள் அடங்கியிருந்தவள், மெல்ல அசைந்து கொடுக்க, கண்ணாடி ஜன்னலின் வழியே வந்த வெளிச்சம் அவள் நித்திரையை களைக்க முயல்வது தெரிந்தது.

 

அவளிடமிருந்து மெல்ல பிரிய முயற்சித்தவனின் சட்டையை பாவை இறுக பற்றியருக்க, அதையெடுத்துவிட வந்த அவன் கரங்கள் ஏனோ மனமின்றி அப்படியே நின்றது. தலையணை ஒன்றை எடுத்து அவளுக்கு பின்னே வைத்துவிட்டவன், அவள் தலையை மேலும் தன் மார்பினுள் புதைத்துக் கொண்டான்.

 

அந்த கவிதையான தருணம் சடுதியில் கடந்ததைப் போன்ற உணர்வை அவனுக்குக் கொடுத்திட்டு அவள் தூக்கத்தை களைத்திருந்தது. முழுதாக நித்திரை தீர்ந்து கண் விழித்தவள் கண்முன் கண்ணாலனின் கருணையான பார்வை இருக்க, அந்த கணம் அவள் மனதில் ஆழமாய் பதிந்தது. கதைகளில் காலை கணவனின் பார்வையோடும் முத்தத்துடனும் விழிப்பதன் சுகத்தினை வரிவரியாய் தீட்டியிருந்ததை வாசித்து ரசித்திருந்தது, இன்று நிகழ்வில் நடப்பதை உணர்ந்தவளது மனம் அவனின் முத்தம் ஒன்றை பெற்றிட ஆசை கொண்டது.

 

அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன், அவள் உச்சந்தலையில் அழுந்த இதழ் ஒற்றி, “இப்ப எப்படியிருக்குமா?” என்று வினவ, தனது எண்ணத்தை நினைவில் கொண்டவந்திருந்தவனது மாய செயலில் கண்களை மூடியிருந்தவள், அவன் வாக்கியத்தினை கேட்க அந்தவுலகில் இல்லை.

 

விழியோரம் மெல்ல எட்டிப்பார்த்த அவளது கண்ணீரையும், இதழ் பிரியாது மலர்ந்திருந்த அவளது இதழ்களையும் கண்டவன், அவள் கன்னம் பற்றி “என்னடா?” என்க, பட்டென அவனை அணைத்துக் கொண்டாள். திடீரென்ற அவளது அணைப்பில் நிலைதடுமாறி பின்னே சாய்ந்து, பின் சமனடைந்தவன், “ஏ பாப்பா” என்க, “இப்ப அவ்வளவா வலிக்கலை” என்று அவன் மார்பில் முகம் புதைத்த வண்ணமே கூறினாள்.

 

அவள் தலையை புன்னகையாக கோதியவன், “என்னாச்சுடா” என்க, “ஒன்னுமில்லை” என்றவள், எழுந்து அமர்ந்தாள். தன் உடையை திருத்திக் கொண்டவள், கணவனின் குறுகுறுப் பார்வையில் நாணம் பெற்று முகத்தினை திருப்பிக் கொள்ள, ஆடவன் தானும் முகத்தினை திருப்பிக் கொண்டு சிரித்தான்.

 

சிரிப்பவனை ரசனையாகப் பார்த்தவள், சட்டென எம்பி அவன் கன்னத்தில் பச்சென்று ஒரு முத்தத்தை கொடுத்துவிட்டு குளியலறைக்குள் விரைந்திட, அத்தனை நேரம் சிரித்துக் கொண்டிருந்தவன், அவளது திடீர் தாக்குதலில் திகைத்து நின்றான். குளியலறையிலிருந்து எட்டிப் பார்த்து சிரித்தவளது சத்தத்தில் “ஏ கேடிகுட்டி” என்று அவன் எழ, சட்டென கதவை பூட்டிக் கெண்டவளது செயலில் மூடிய கதவினை தட்டி சிரித்துக் கொண்டான்.

 

சில நிமிடங்களில் பாவை குளித்து முடித்து வந்திட, ஆடவனும் குளித்து உடை மாற்றி விட்டு அறையைவிட்டு வெளியே வந்தான். மருமகளின் கையில் பழச்சாற்றை கொடுத்து, “முழுசும் குடிச்சுமுடி” என்று மகா அதட்டலைப் போட, அவளும் கடினப்பட்ட அந்த வடிக்கப்படாத மாதுளைப் பழச்சாற்றை குடித்து முடித்தாள்.

 

அதில் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன், அவளுக்கு எதிர்புறம் வந்து அமர, “இப்ப வலி பரவாயில்லையாடா?” என்று அவள் தலைவருடியபடி மகா கேட்டார். “ம்ம் இப்ப பரவாயில்லை அத்தை” என்று அவள் கூற, “சரிடா” என்றார்.

 

சமையல் அறையில் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்க, எட்டிப் பார்த்தவளைக் கண்டு, ‘ஈ’ என இளித்து வைத்த ரூபி, குக்கரை மூட போராடிக் கொண்டிருந்தாள். அதில் தானும் திரும்பிப் பார்த்த மகா, “இன்னிக்கு அவ சமைக்குறாளாம்டா. எங்க அப்பா திவசம், நான் அசைவம்லாம் சாப்பிடமாட்டேன்னு சொல்றேன், உங்களுக்கு தனியா செஞ்சு தரேன்னு சொல்லிட்டு அசைவம் சமைச்சுட்டு இருக்கா. கேட்டா அடுத்த வர்ற ஞாயிறுலாம், அவளுக்கு படிக்க, பிரண்ட் கல்யாணம் போகனு இருக்காம். அண்ணா அண்ணிக்கு சமைக்க முடியாதுனு சண்டை” என்று கூற, ரூபியை எட்டிப் பார்த்த அஞ்சு, “எதுக்கு ரூபி?” என்றாள்.

 

“அண்ணி நீங்களும் அம்மாக்கு சப்போர்ட் பண்ணாதீங்க. சண்டே ஒரே ஒரு நாள் தான் நான்வெஜ் செய்யுறோம். அன்னிக்கும் இப்படி முட்டுகட்டை போட்டா எப்படி சொல்லுங்க” என்று பாவம் போல கேட்டதில் கணவன் மனைவி இருவரும் பலமாக சிரித்து வைத்தனர்.

 

பின் அவளுக்கு குக்கரை மூடுவதற்கு ருத்ரன் உதவ எழுந்து செல்ல, “பார்த்தியா.. நான் தொட மாட்டேன்னு சொன்னதும் அண்ணங்காரன உதவிக்கு இழுக்குறா” என்று மருமகளிடம் மகளை பற்றி குற்றப் பத்திரிகை வாசித்தார். பழச்சாற்றை குடித்து முடித்தவளை ஓய்வெடுக்க வேண்டி அறைக்கு மகா அனுப்பி வைத்திட, தானும் சற்றுநேரம் இளைப்பாற வேண்டி சென்றாள். சில பொழுதுகள் சடுதியில் கழிந்திட, காலை உணவின்றி நேரே பதினொரு மணியளவில் சாப்பாடு சாப்பிட்டுக்கொள்ளலாம் என்ற எண்ணத்தின்படி உண்ண அமர்ந்தனர். 

 

முதலில் அண்ணா அண்ணியை அமர்த்தி ரூபி உணவிட, தட்டில் இட்ட உணவை விழிகள் விரிய கண்ட அஞ்சுவிற்கு வயிற்றிற்குள் அபாயமணி அடித்த உணர்வு. ரூபி வைத்ததோ, பிரியாணியும் சிக்கன் கிரேவியும். ஆனால் அஞ்சிலைக்கு சிக்கன் சாப்பிடுவது பிடிக்கவும் பிடிக்காது, உடலுக்கு ஒத்துக்கொள்ளவும் செய்யாது.

 

‘தங்களுக்காக என்று ரூபி ஆசையாக செய்திருக்கின்றாளே, எப்படி தவிர்ப்பது’ என்று விழித்தவளை பார்த்த ரூபி, “தைரியமா சாப்பிடுங்க அண்ணி. நல்லா தான் செய்வேன்” என்க, “ஏ அப்படிலாம் இல்லைடா” என்றவள், உணவை அள்ளி வாயில் வைத்தாள். பிரியாணியும் சுவையாக இருக்கவே, “நல்லா இருக்கு ரூபி” என்று பாராட்டியவளிடம், “கிரேவி அண்ணி?” என்றாள்.

 

‘வேறு வழியே இல்லை’ என்ற ரீதியில் அதை கடினப்பட்டு வாயில் போட்டவள், “நல்லா இருக்குடா” என்றுவிட்டு உணவை தொடர்ந்தாள். தட்டில் போட்டதை மட்டும் உண்டு முடித்தவள், போதுமென எழுந்திட, அடுத்தடுத்து யாவரும் உண்டு முடித்தனர். மதிய வேளையதில் அணைவரும் அவரவர் அறை சென்று படுத்திட, தானும் படுத்திருந்தவளுக்கு வயிற்றை பிசைவது போல் இருந்தது. 

 

“அய்யோ.. என்னடா இது எனக்கு வந்த சோதனை. இன்னிக்கு ஒரு சம்பவம் உறுதி” என்று மனதோடு முனுமுனுத்துக் கொண்டவள் திரும்பிப் பார்க்க, அவளவனுமே அசந்து உறங்கியிருந்தான். சில நிமிடங்களில் சாப்பிட்ட உணவு காட்டிய வேலையில் குளியலறை சென்றவள் உண்டது அனைத்தையும் வாந்தியாக எடுத்திருந்தாள்.

 

தனது சத்தத்தில் யாரேனும் எழுந்து வந்து கேட்டாள் என்னவென்று கூறுவது என்றுவேற அவளுக்கு பயமாக இருக்க, கண்கள் கலங்கி பொழிந்தது. உணவை மறுக்கவும் முடியாமல், ஏற்கவும் முடியாமல் இரண்டையும் வெளியே சொல்லவும் முடியாமல் தயக்கம் என்ற அரக்கனால் சிறுக சிறுக உயிர் உறியப்பட்டாள்.

 

நான்கு முறை சென்று எடுத்துவந்தவள், ஓய்ந்து அமர்த்திட, அடுத்து ஐந்தாவது முறை வயிற்றை பிரட்டிக் கொண்டு வந்தது. வாயை பொத்திக் கொண்டு உள்ளே சென்றவளது சத்தத்தில் இம்முறை உறக்கம் கலைந்தவன், சுற்றிலும் அவளைத்தேட, குளியலறையிலிருந்து நழிந்த நாராக வந்தாள்.

 

பதறியபடி அவளிடம் வந்தவன், “ஏ.. என்னாச்சுமா?” என்க, அவளுக்கு சோர்வில் தலைசுற்றிக்கொண்டு வந்தது. வந்து பொத்தென அமர்ந்தவளை தன் தோளோடு அணைத்துப் பிடித்தவன், “என்னாச்சுடா?” என்று மீண்டும் பதட்டமாக வினவ, கண்களில் கண்ணீரோடு அவன் கழுத்தை கட்டிக் கொண்டு, கழுத்தடியில் முகம் புதைத்தாள்.

 

அவளது உஷ்மான முகமும் மூச்சும் அவன் கழுத்தடியை உஷ்ணமேற்ற, அவள் நெற்றியை தொட்டுப் பார்த்து, “ஏ பாப்பா என்னாச்சுனு சொல்லுமா” என்று அதட்டலாக வினவினான். அவனை கண்ணீரோடு ஏறிட்டவள், “வாமிட்” என்று கூற, “ஏன்டா? சாப்பிட்டது ஒத்துக்கலையா? இந்த டைம்ல ஹெவி ஃபுட் சாப்பிட மாட்டியா?” என்று வினவினான்.

 

“எ..எனக்கு சிக்கன் ஒத்துக்காது” என்றுவிட்டு மௌனமாக அவள் தலை குனிந்திட, “அப்ப ஏன்டா சாப்பிட்ட?” என்றான். மேலும் குறுகியவள், “ரு..ரூபி..” என்று கூற தன் தங்கைக்காக அவள் உண்டதை புரிந்துக் கொண்டான்.

 

புரிந்த செயல் கொடுத்த கோபத்தில் அவளை ஏறிட்டவன், “என்ன அஞ்சிலை இது? உனக்கு ஒத்துக்காததை எதுக்கு நீ சாப்பிடுற? ஒத்துக்காதுனு சொன்னா அவ வற்புறுத்தவா போறா? உண்மைய சொல்லனும்னா உன்னோட இந்த நிலைய பார்த்த இப்ப தான் வருந்துவா. என்னதுக்கு இப்படி தயங்கி தயங்கி உன்னை விருத்திக்குற?” என்று காட்டமாக வினவ, மீண்டும் வயிற்றை பிரட்டிக்கொண்டு வந்துவிட்டது. 

 

அவனை அணைத்தவன்னமிருந்தவள், விருட்டென்று எழுந்து சென்றிட, தானும் பின்னே சென்றவன், அவள் காதுகளை அணைவாக பிடித்துக் கொண்டு, தண்ணீரை கொடுத்து துடைத்தும் விட்டான். நகர திராணியற்று சரிந்தவளை தாங்கிக் கொண்டு வந்து கட்டிலில் போட்டவன், “எதும் மருந்து வாங்கிட்டு வரவாடா?” என்று வினவ, மறுப்பாக தலையசைத்து அவன் கையை பற்றிக் கொண்டாள்.

 

தானும் அவள் அருகே ஒருக்களித்து படுத்தவன், “என்னடா?” என்க, “ரு..ரூபி அத்தைகூட சண்டை போட்டு நமக்காகனு பண்ணினா. எனக்கு எ..எப்படி சொல்லனு தெரியலை. உ..உண்மை தான் பழாய் போன தயக்கம் தந்த வினை. அ..ஆனா இப்ப இது தெரிஞ்சா ரொம்ப ஃபீல் பண்ணுவா. ப்ளீஸ் சொல்லாதிங்க. உடம்பு முடியலைனு மட்டும் நைட் சொல்லிக்களாம்” என்று தத்தி பித்தி கூறினாள்.

 

அவளது இந்த குணத்தை எண்ணி மகிழ்வதா வருந்துவதா என்றே அவனுக்கு புரியாத நிலையில், அவள் தலையை வருடிக் கொடுத்து, “மருந்து வாங்கிட்டு வரவா?” என்க, “வேணாங்க. ஒத்துக்காத உணவை சாப்பிட்டா உடம்பு அதை வெளியே தள்ளதான் முயற்சிக்கும். நைட் வரை பார்ப்போம்” என்றுவிட்டு கண்களை மூடிக் கொண்டாள்.

 

கொஞ்சம் தெம்பாவது வேண்டுமே என வெளியே சென்றவன், குளிர்பெட்டியிலிருந்து குலுகோஸ் பொடியை எடுத்து நீரில் கலந்து எடுத்துவர, அடுத்த முறையை முடித்துக் கொண்டு குளியலறையிலிருந்து வந்து கட்டிலருகே பொத்தென விழுந்தாள்.

 

“ஏ..” என்றபடி வந்து அவளை தூக்கிக் கொண்டவன், ஒரு கையால் அவளை பிடித்துக் கொண்டு மறுகையால் அந்த நீரை புகட்ட, ஓய்ந்த உடலுக்கும் தொண்டைக்கும் அது கொடுத்த தெம்பு தேவையாக இருந்தது.

 

அருந்தியவள் கண்கள் உறக்கத்திற்கு கெஞ்ச, அவன் மீதே சாய்ந்து கொண்டவள் அப்படியே உறங்கியும் போனாள். அவளை மெல்ல கட்டிலில் படுக்க வைத்தவன், ‘என்ன பொண்ணுமா நீ? இவ்வளவு அவஸ்தை தேவையா? முடியாதுனு ஒரு வார்த்தை சொல்லி நிம்மதியா இருப்பதை விட்டுட்டு’ என்று பெருமூச்சு விட்டான்.

 

அவனுக்கு எங்கனம் விளக்குவது இவள் வளர்ந்த வளர்ப்பை? ‘முடியாது’ என்ற வார்த்தை அவளது அகராதியில் மறுக்கப்பட்ட ஒன்றாகி போன ஒன்று. சொந்தங்களுக்காக, தெரிந்தவர்களுக்காக, தாய் தந்தையருக்காக என தன் சொந்த ஆசைகளை துறந்துவிட்டு தனது தோழியிடம் மட்டுமே மனதை திறந்திருந்த கூண்டுப் பறவை அவள்.

 

வெளியே கலகலப்பாக சுற்றி திரிபவர்கள் எல்லாம் வாழ்க்கையில் சந்தோஷத்தை மட்டுமே கண்டவர் என்று கூற இயலுமா என்ன? தாங்கள் மட்டும் என்று இருக்கும் வேலையில் கலகலப்பாக இருப்பவள், வேற்று மனிதர் உள்ளே வருகையில் அவருக்காக இவருக்காக என தனது சுயத்தை தொலைத்து தான் வலைய வருவாள். அப்படியே பழகிப்போனதால் தான் தனக்கு எது பிடிக்கும் என்பதைக் கூட அறிந்திறாது இருந்துவிட்டாள்.

 

இவற்றை அவன் முழுதாக புரிந்துக்கெள்ளாவிடினும், ஓரளவு புரிந்திருந்தது. ‘தன்னால், தனது அன்பால் அவளது சுயம் வெளிப்படும் நாளை கொண்டு வந்தாக வேண்டும்’ என்று தனக்குத்தானே கூறிக் கொண்டவன், அவள் நெற்றியில் அழுந்த இதழ் பதித்தான்.

 

சில நிமிடங்களில் வெளியே வந்தவன், அவளைப் போல எதையும் மூடி மறைக்காமல் தன் தாயிடமும் ரூபியிடமும் நடந்தவற்றை கூறியிருந்தான். முதலில் ‘தங்களிடம் சொன்னால் என்ன?’ என்ற கோபமும், பின் அவளது நல்லெண்ணத்தின் மீதான கரிசனமும், அவள் நிலையை எண்ணி பரிதாபமும் வந்திட, ஆடவன் அவர்களுக்கு புரியவைத்ததில் தாங்களும் அவளது குணம் இதுவே என்று புரிந்து கொண்டனர்.

 

தங்களது அளப்பரியா அன்பு நாட்கள் செல்ல செல்ல தங்களுடன் அவளை ஒன்ற வைத்திடும் என்பதை புரிந்து கொண்டவர்கள், அவளது உடல் நலத்தை பற்றி விசாரிக்க, “தூங்குறாமா. ஏழு எட்டு தடவை எடுத்துட்டா. குலுகோஸ் கொடுத்தேன். குடிச்சுட்டு தூங்கிட்டா” என்றான்.

 

“சரிடா. நான் நைட்டுக்கு இட்லி பண்றேன். எழுப்பி கொடுத்துட்டு படுக்கவை. நாளைக்கு வேலைக்கு லீவ் போட சொல்லு” என்று மகா கூற, “சரிமா” என்றான். சில நிமிடங்களில் தாய் கொடுத்த இட்லியை அவளுக்கு தானே ஊட்டிவிட்டவன், “காய்ச்சல் மாத்திரை மட்டும் போட்டுக்கோமா. ஃபீவர் அடிக்குது” என்க, மறுப்பின்றி வாங்கி போட்டுக்கொண்டாள்.

 

மறுநாள் காலை, இருந்த சோர்வுக்கும் மாத்திரையின் வீரியத்திற்கும் அவள் அடித்து போட்டதை போல் தூங்க, சாய்க்கு அழைத்து கூறிவிடலாம் என்று அழைப்பெடுத்தான். அழைப்பை ஏற்றவள், “சொல்லு அஞ்சல கிளம்பிட்டேன்” என்க, “நான் ருத்ரன் பேசுறேன்மா” என்றான்.

 

“அய்யோ அண்ணா.. நீங்களா? நான் அஞ்சலனு நினைச்சேன்” என்று அவள் கூற “இருக்கட்டும்மா. அவ இன்னிக்கு வேலைக்கு வரமுடியாது. உடம்பு முடியலை” என்று கூறினான். “உடம்பு முடியலையா? என்னாச்சு அண்ணா? இன்னும் முதுகு வலி விடலையா?” என்று அவள் வினவ, “அது மறுநாளே சரியாகிடுச்சு. நேற்று ஃபுல் வாமிட்” என்றவன் முடிப்பதற்குள் “சிக்கன் சாப்பிட்டாளா?” என்று தோழி வினவினாள்.

 

அதில் சற்றே திடுக்கிட்டவன், “அ..ஆமாமா” என்க, “அவளுக்கு சிக்கன் ஒத்துக்காது அண்ணா. வாய திறந்து சொல்லியும் தொலைச்சிருக்க மாட்டா. சரி அண்ணா. நான் சாயிங்காலம் வந்து பார்த்துட்டு போறேன். உடம்ப பார்த்துக்க சொல்லுங்க” என்று சாய் கூறினாள்.

 

“சரிடா” என்றவன் அழைப்பை துண்டிக்க, மனமெங்கும் அவளுக்கும் அவள் தோழிக்குமான பந்தத்தை எண்ணியது. உவகை, வியப்பு, ஏக்கம் என பல உணர்வுகள்! ‘எத்தனை தூரம் தன் மனைவியை புரிந்துகொண்டுள்ள பெண் இவள்’ என்ற உவகையும் வியப்பும் எழ, தனக்கு இப்படி நண்பர்கள் இல்லையே என்ற சிறு ஏக்கமும் எழுந்தது.

 

சென்று தனது வேலைக்கு செல்ல தயாராகி வந்தவன், அப்போதே கண்விழித்து எழுந்து அமர்ந்தவளிடம் வந்து, “எப்படி இருக்குமா? ஹாஸ்பிடல் போய்டு வேணும்னா வருவோமா?” என்று வினவ, “இல்லங்க. வேணாம். இப்ப கொஞ்சம் ஓகேதான். கொஞ்சம் டயர்டா தான் இருக்கு. மித்தபடி பிரச்சினை இல்லை” என்றாள்.

 

“சரிடா. நான் சாய்க்கு சொல்லிட்டேன். நீ நல்லா ரெஸ்ட் எடு. எது வேணும்னாலும் தயங்காம அம்மாகிட்ட கேளு. சரியா?” என்று அவன் வினவ, பூம்பூம் மாடுபோல் தலையாட்டி வைத்தாள். அவள் அருகே அமர்ந்த கலைந்தாடும் கேசத்தை அவள் காதுமடல்களுக்கு பின்னே சொருகியவன், “ஒருவிஷயம் நமக்கு ஆகாது, சேராது பிடிக்காதுனா, அதை நம்ம சொன்னாதான் அடுத்தவர்களுக்கு தெரியும். இங்க யாரும் மனதை படிக்க தெரிந்த மாயவர்கள் கிடையாது. ஒன்னு நல்லா புரிஞ்சுக்கோ உனக்கு பிடிக்காததை நீ யாரோட வற்புறுத்தளின் பெயரிலும் செய்ய வேண்டியது இல்லை. சரியா?” என்று வினவ, அவனை சன்னமான புன்னகையுடன் பார்த்தவள், “ம்ம்” என்றபடி தலையசைத்தாள்.

 

அதில் சிரித்துக் கொண்டவன், அவள் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு நகர, அவன் கையை பற்றிக் கொண்டு, “தேங்க்ஸ்ங்க” என்றுவிட்டு அவன் கன்னத்தில் இதழ் பதித்துச் சென்றாள். மனைவியின் சின்ன சின்ன மாற்றங்களையும், நெருக்கங்களையும் அணு அணுவாய் ரசித்தவன், புன்னகையுடன் புறப்பட்டான்.

-வரைவோம் 💞

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
7
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்