Loading

அவனுடன் பேசிப்பேசியே அந்த ஒருவாரப்பொழுதை அழகாகக் நடத்தியிருந்தாள், ருத்ரனின் அஞ்சிலை. காலை வேலையில் இருவரும் சமையலறையில் உணவு தயாரித்துக் கொண்டிருக்க, அவளுக்காக காய்கறிகளை வெட்டிக் கொடுத்தவன், குளம்பியை தயாரித்து வைத்தான்.

 

குழம்பு வைத்துக் கொண்டிருந்தவள் கையில் குளம்பியைக் கொடுத்து வெளியே அனுப்பியவன், அவள் குடித்துமுடித்து வந்ததும், தான் சென்று பருக, மீதி வேலைகளை முடித்துவிட்டு தனக்கு மட்டும் உணவை டப்பாவில் அடைத்துக் கொண்டாள்.

 

இருவரும் தயாராகி வந்த வேளை, மகாவும் ரூபியும் வந்து சேர, பைகளை வாங்கிக் கொண்டு வந்து வைத்தவள், அவர்கள் புத்துணர்வு பெற்று வந்ததும் தேநீர் போட்டு எடுத்து வந்தாள். ‘அய்யோ.. யாருக்கு உடம்பு சரியில்லைனு போனாங்களே.. அவங்க எனக்கு என்ன உறவு?’ என்று மனதோடு நினைத்தவள், “அவங்களுக்கு உடம்பு எப்படி இருக்கு அத்தை” என பொத்தாம் பொதுவாகக் கேட்டு வைக்க, “ஏதோ இருக்குமா. படுத்த படுக்கையாகிட்டாங்க. இனி நடமாட்டம் இருக்காதுனு டாக்டர் சொல்லிட்டாங்க” என்று வேதனையோடு கூறினார்.

 

“அச்சுச்சோ.. எத்தனை வயசு அத்தை” என்று அவள் வினவ, “ஒரு எம்பத்திரெண்டு இருக்கும்மா” என்றார். “ஏ அம்மா” என்று அதிர்ச்சியல் அவள் அங்கலாய்ந்ததில் யாவரும் சிரித்திட, வெட்கத்தோடு தலையை குனிந்து தானும் சிரித்துக் கொண்டவள், “நீங்க சாப்பிடுறீங்களா அத்தை?” என்று கேட்டாள். 

 

“இல்லமா. நான் போய் கொஞ்ச நேரம் படுக்குறேன்” என்று அவர் கூற, “ரூபி நீ எதாச்சும் சாப்பிடுறியா?” என்று கேட்டாள். “இல்லை அண்ணி. அம்மாவோடயே சாப்பிட்டுக்குறேன்” என்று அவள் கூறிட, சரியென்றவள் சாய் வந்ததும் புறப்பட்டு சென்றாள்.

 

“ஏ சாய்.. எனக்கு ஒரு ஐடியா வேணும்டி” என்று அஞ்சு துவங்க, “என்ன ஐடியா??” என்று சாய் வினவினாள். “இன்னிக்கு நமக்கு சாலரி கிரெடிட் ஆகுதுல்ல..” என்று அஞ்சு இழுக்க, “ஆமாஆ..” என்று அவளைப் போலவே சாயும் இழுத்தாள்.

 

அதில் சிரித்தபடி அவள் தோளில் தட்டியவள், அவருக்கு எதாவது வாங்கி கொடுக்கலாம்னு நினைக்குறேன். ஆனா என்ன வாங்கி கொடுக்கனு தெரியலைடா” எனக் கூற, “அதுசரி.. விட்டா நீ எல்லாத்துக்கும் என்கிட்ட உதவி கேப்ப போலயே” என்று சாய் அடக்கப்பட்ட புன்னகையுடன் கூறினாள்.

 

அவள் கூற்றில் “ச்சீ லூசு.. என்ன பேச்சு இது” என்றவள், “ஐடியா சொல்லுவியா மாட்டியா?” என்று வினவ, “ஏ அஞ்சுமா.. இதெல்லாம் நான் சொல்லி உனக்கு தோனக்கூடாது. உனக்கா ஃபீலாகனும்‌. அவருக்கு இது வாங்கி குடுக்கலாம், இங்க கூட்டிட்டு போகலாம் அப்படி உனக்கா என்ன தோனுதோ அதை செய். நாளைக்கு வீக்கென்ட் தானே? எங்கயாவது கூட்டிட்டுபோ” என்று கூறினாள்.

 

“ஏ செம்ம ஐடியா?” என்று கூறிய அஞ்சு அவள் கன்னங்களை கில்ல, “ஏ ஏ.. வண்டி ஓட்டுறேன்டி” என்றாள். “அய்யோ.. நல்லவேல.. என்ன நம்பி என்ற புருஷன் இருக்காரு. நான் இப்படி எங்கயாவது விழுந்துட்டு போய் நின்னா தாங்கமாட்டாறு” என்று அஞ்சு கூற, “பாவிமவளே, பின்னாடி உன்னைய ஒய்யாரமா உக்காரவச்சு கூட்டிட்டுப்போறேனே என்னைய பத்தி கவலை இருக்கா? இருடி இரு. நானும் சட்டுபுட்டுனு ஒரு கல்யாணத்தை பண்ணிட்டு வந்து பேசிக்குறேன்” என்று சாய் கூறினாள்.

 

கலகலப்பாக துவங்கிய அந்த நாள் அதே கலகலப்போடு முடிந்ததா என்றால், அதுதான் இல்லை. மூஞ்சியை எட்டு ஊருக்கு தூக்கி வைத்துக் கொண்டு வரும் தோழியை கண்ட சாய், “ஏன்டி.. எதுக்கு மூஞ்சிய இப்படி எதையோ திண்ண ஏதோ போல வச்சிருக்க? பீரியட்ஸ் தானே?” என்று வினவ, “வலிக்குதுடி. அங்க, ஆப்ரேஷன் முடிஞ்சு அந்த தாத்தாவை தூக்கி வார்ட் மாத்த வேற ஆளில்லைனு நானும் சுபா அக்காவும் மட்டும் தான் தூக்கினோம். அதுவேற முதுகு பிடிச்சுகுச்சு. வண்டிய குண்டும் குழியுமா இறக்காம பார்த்து போடி” என்று பல்லை கடித்தாள்.

 

அவளது வலி அவள் கலங்கிய முகம் பறைசாற்றினாலும், காமெடியான அவள் பேச்சு சிரிப்பை கிளப்ப, “சரிசரி பொறுமையா போறேன்” என்று சாய் கூறவும், “அய்யோ.. என்ற புருஷரோட நாளைக்கு வெளியலாம் போகலாம்னு கனா கண்டேனேடி. என் நேரத்துக்கு சம்பளத்துக்கு பதிலா முதுகு வலிதான் கிரெடிட் ஆகிருக்கு” என்றாள்.

 

கடினப்பட்டு சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு அவள் வீட்டை அடைந்த சாய் “பை” என்றுவிட்டு சென்றவளை நிறுத்தி, தேங்கியிருந்த கண்ணீரை துடைத்துவிட்டு, “போய் சாப்டு ரெஸ்ட் எடு” என்று கூறி சென்றாள்.

 

தானும் முகத்தை துடைத்துக் கொண்டு உள்ளே சென்றவள், மாமியார் வீட்டை துடைப்பதைக் கண்டு, “அத்தை.. எதுக்கு இந்த நேரத்துல வீட்டை துடைச்சுட்டு இருக்கீங்க?” என்று வினவ, “நாளைக்கு எங்கப்பா திவசம்டா. ஊர்ல அண்ணன் தான் திதி கொடுப்பான். இருந்தாலும் நான் வீட்டையெல்லாம் துடைச்சு சுத்தபத்தமா வச்சுப்பேன். அங்க திதி கொடுத்த பிறகுதான் சாப்பிடுவேன்” என்று கூறினார்.

 

வயதான காலத்தில் இதெல்லாம் இன்னும் அவர் கடைபிடிப்பதை வியப்புடன் பார்த்தவளிடம், “கொஞ்சம் இந்த ஹால மட்டும் துடைக்குறியாடா?” என்று அவர் கேட்க, முதுகுவலியோடு எப்படி செய்ய என்று கேட்ட மனதிற்கு ஒரு குட்டு வைத்தவள் “சரி அத்தை” என்றாள்.

 

சென்று பையை வைத்துவிட்டு வந்தவள், தன் மாமியாருக்காக செய்வதில் பிறந்த வீட்டை நினைத்த ஏக்கம் துளியுமில்லை. அங்கு இதேபோல் உடல் முடியாமல் வரும் நேரம் காயத்ரிக்கு உடல் நலம் சரியில்லை என்றால், அமைதியாக தானே செய்து பழகியவளுக்கு மாமியாருக்கு செய்வதில் எந்த வேறுபாடும் தெரியவில்லை. 

 

முதுகில் சுரீர் சுரீர் என்று வலியெடுத்து முகம் சுருங்கியவள், கடினப்பட்டு துடைத்துக் கொண்டிருக்க, மாடியிலிருந்து படித்து முடித்து புத்தகங்களுடன் வந்த ரூபி, அண்ணியைக் கண்டு திடுக்கிட்டு அவளிடம் விரைந்து, “அண்ணி பீரியட்ஸா?” என்று கேட்டாள்.

 

சுருங்கிய முகத்தோடு சுடிதாரின் கைப்பகுதியில் தன் வியர்வையை துடைத்தவள், “அ..ஆமா ரூபி” என்க, “அண்ணி டிரெஸ்ஸெல்லாம் ஸ்ரெயின் ஆகிருக்கு” என்றாள். ‘வலியின் மிகுதியில் இதை மறந்தே விட்டோமே’ என்று எண்ணியவள் தன் ஆடையை கவனிக்க, ஏனோ அந்த அசௌகரியமான சூழல் அவள் கண்களை கலங்கச் செய்திருந்தது.

 

“அண்ணி.. நீங்க முதல்ல போய் டிரஸ்ஸ மாத்திட்டு எதும் ஃப்ரீயா வியர் பண்ணிட்டு வாங்க” என்று அவளை அனுப்பிய ரூபி மீதி வேலையை தான் முடித்துவிட்டு தாயிடம் நடந்தவற்றை கூறிக் கொண்டிருக்க, தனது இரவு சட்டை மற்றும் பைஜாமா பேன்டுடன் வந்தாள்.

 

அவளை கண்டு சற்றே கோபத்தோடு “ஏம்மா என்ன பொண்ணு நீ? முடியலைனு சொன்னா நானோ இல்லை ரூபிய கூப்பிட்டு செஞ்சிருக்க மாட்டேனா? இத்தனை நாள்ல உனக்கு இதை சொல்ல கூட உரிமை உணர்வு வரலையா?” என்று வினவ, கண்ணீரோடு தலையை குனிந்துக் கொண்டவள், “சாரி அத்தை” என்றாள்.

 

“என்னமா சாரி. உனக்கு முடியலைனு தானே சொல்றேன்” என்றவர் கையை பற்றிய ரூபி, “ம்மா..பாவம் அண்ணியே முடியாம இருக்காங்க. சும்மா இருங்கம்மா” என்றாள். “நான் இப்ப என்னடி திட்டிட்டேன்? என்கிட்ட ஒருவார்த்தை சொல்ல கூடாதானு தானே கேட்டேன்” என்றவர், சென்று அவளுக்கு பழச்சாறு ‌கொண்டு வந்து கொடுக்க, வாங்கி அதை பருகினாள்.

 

“எதாவது சாப்பிடுறியா அஞ்சு?” என்று அவர் கேட்க, “இல்லை அத்தை வேணாம்” என்றாள். “சரி போய் படு” என்று அவர் கூறவே, சிறு தலையசைப்போடு சென்று கட்டிலில் விழுந்தாள். கட்டிலில் படுத்துக் கொண்டு வலியில் முகம் சுறுங்கி கண்கள் கலங்க, பிரண்டு கொண்டிருந்த அஞ்சிலையின் அலைப்பேசி ஒளியெழுப்ப, அதை எடுத்துப் பார்த்தவள் தன் கண்களை அழுந்தத் துடைத்து, குரலை செறுமிக் கொண்டு அழைப்பை ஏற்றாள்.

 

“ஹலோமா” என்று ருத்ரன் அழைக்க, “ம்..ம்ம் சொல்லுங்க” என்றாள். அவளது ஒருமாதிரியான குரலே அவனுக்கு வித்தியாசமாகப்பட, “நைட்டு கொஞ்சம் லேட்டா வருவேன். நீங்க சாப்டுட்டு படுத்துக்கோங்க” என்று அவன் கூறியதும் “சரிங்க” என்றாள்.

 

மிகவும் கடினப்பட்டு இயல்பாக பேச அவளெடுத்த முயற்சியே அவள் பல்லை கடித்துக் கொண்டு பேசுவதை அவனுக்கு உணர்த்தியிருந்தது.

 

ஏதும் கூறாது அவள் அழைப்பை துண்டித்துவிட்டு சென்று முகம் கழுவி வந்து உணவு மேஜையில் இரவுணவை எடுத்து வைக்க, “என்னடா படுக்கலையா? ருத்ரன் வந்துட்டானா?” என மகா வினவினார். 

 

“அவர் வர லேட்டாகுமாம் அத்தை. நம்ம சாப்பிட்டுட்டு படுக்கச் சொன்னார்” என்று அவள் கூற “சரிடா” என்றவர் அவள் முகம் கண்டு “இன்னும் வலிக்குதாடா??” என்றார்.

 

“கொ.. கொஞ்சம் வலிக்குது அத்தை. வேற ஒன்னுமில்லை” என்று அவள் தடுமாற, ரூபியும் வந்து சேர்ந்தாள்.

 

“அண்ணி நீங்க முதல்ல வந்து சாப்பிடுங்க” என்று அவள் கூற “இல்ல ரூபி. நீ வா. நீயும் அத்தையும் சாப்பிடுங்க. எனக்கு பசியில்லை” என்றாள்.

 

“ஏற்கனவே முடியலை.‌ இதுல வயித்த வேற ஏன் காயப்போடுற” என்று மகா சற்று கண்டிப்பாக வினவ, “இல்லை அத்தை.. பசிக்கலை. நான் படுத்துக்குறேன். அவங்க வந்த பிறகு சாப்பிட்டுக்குறேன்” என்றாள்.

 

“சரி நீ போய் படு” என்று மகா கூற, “ஆமா அண்ணி. நீங்க போய் ரெஸ்ட் எடுங்க” என்று ரூபியும் கூறினாள். கண்ணீரோடு சிறு புன்னகையை கொடுத்தவள் தங்கள் அறைக்கு சென்று கட்டிலில் படுக்க, முதுகு வலி அவளை பாடாய் படுத்தியது. 

 

உண்டு முடித்து அனைத்தையும் எடுத்து வைத்த மகா மற்றும் ரூபி உறங்கச் செல்லும் நேரம் ருத்ரன் வந்துவிட, “ருத்ரா.. நீ வர லேட்டாகும்னு அஞ்சு சொன்னா?” என்று மகா கேட்டார். 

 

“ஆமாம் ம்மா. ஆனா வேலை முடிஞ்சது” என்றவன் “நீங்க படுக்க போங்கம்மா” என்க “சாப்பிட வாப்பா” என்றார். “இல்லம்மா.. எனக்கு வேணாம். நீங்க போய் படுங்க. தாத்தா திதிக்கு வேலை பாத்திருப்பீங்க. டயர்டா இருக்கும்” என்றவன் ரூபியையும் உறங்கச் சொல்லிவிட்டு தனதறைக்கு செல்ல, “அம்மா.. அண்ணா அண்ணிய பார்க்க தான் சீக்கிரம் வந்திருக்கான். அண்ணிக்கு முடியலைனு தெரிஞ்சுருக்கு போல” என்றதில் அவரும் சிரித்துக் கொண்டார்.

 

உள்ளே கட்டிலில் கண்ணீருடன் கிடந்தவள் ஆடவன் உள்ளே நுழைந்து விளக்கை ஏறியவிடவும், திடுக்கிட்டு திரும்பினாள். 

 

கசங்கிய உடையும், கலைந்த தலைமுடியும், கலங்கிய விழிகளும் என படுத்திருந்த மனைவியை பார்த்து உள்ளுக்குள் தவிப்பும் பதட்டமும் எழ, தன்னை ஆச்சரியமாய் பார்ப்பவளை நெருங்கி வந்தவன் “என்னாச்சுமா?” என்றான். 

 

அப்போதே நடப்புக்கு வந்தவள், மெல்ல எழ முயற்சிக்க, வலியில் சுருங்கும் அவள் முகம் கண்டு “ஏ பார்த்து..” என்றபடி அவளை மெல்ல பிடித்து அமர்த்தினான்.

 

“என்னாச்சுடா” என்று கேட்ட கணவனைப் பார்த்து பாவம்போல் “வர லேட்டாகும்னு சொன்னீங்க?” என்று அவள் வினவ, “உன் குரலே சரியில்லை. அதான் எதும் முடியலையோனு வந்துட்டேன்” என்றான்.

 

அவனை ஆச்சரியமாய் பார்த்தவளுக்கு உடல் நலம் சரியில்லாமல் மருந்து கேட்டு தந்தைக்கு அழைத்து திட்டுவாங்கிக் கொண்ட அன்னையின் அழுத முகம் தான் நினைவில் வந்து போனது.

 

“என்கிட்ட சொல்லலாம்ல. முடியலை சீக்கிரம் வாங்கனு சொன்னா வரமாட்டேனா?” என்று அவன் வினவ, “இல்லை.. வேலை நேரத்துல ஃபோன் போட்டு எதும் சொன்னா டெ.. டென்ஷன் ஆகிடுவீங்களோனு..” என்று இழுத்தாள்.

 

“இதென்னடா.. சம்பாதிக்குறதே நம்ம கூட இருக்குறவங்கள பார்த்துக்கத்தான். அவங்களுக்கே முடியலைங்கும்போது பார்க்க போகாம இருந்து சம்பாதிச்சு என்ன பயன்?” என்று வினவியவனை மேலும் ஆச்சர்யத்துடன் பார்த்தது பார்த்தபடி விழித்தாள்.

 

அவள் ஈரமான கன்னங்களை துடைத்தவன், “என்னாச்சுடா?” என்று வினவ, மெல்ல தலையை தாழ்த்திக் கொண்டு, “ப்..பீரியட்ஸ்.. ப்ளஸ் இன்னிக்கு பேஷன்ட் வார்ட் மாத்த தூக்கும்போது முதுகு புடிச்சுகிச்சு. அ..அது ரொம்ப வலிக்குது” என்று கூறியவள் குரல் முற்றிலும் உடைந்து ஒலித்தது.

 

“மருந்து எதாவது போட்டியா?” என்று அவன் வினவ, மறுப்பாக தலையசைத்தாள். “இரு வரேன்” என்றவன், முதலில் சென்று உணவை எடுத்துவர, “நீங்க சாப்பிட்டீங்களா?” என்று வினவினாள். “இல்லைடா” என்றவன் அவளுக்கு ஊட்ட, “நீங்க?” என்றாள்.

 

“முதல்ல நீ சாப்பிடு” என்றவன், அவளுக்கு ஊட்ட, நான்கு கவளங்களுக்கு மேல் உண்ண முடியாமல், “ஏங்க ப்ளீஸ் வேணாம்‌. எனக்கு பொதுவாவே இந்த டயம்ல நைட் சாப்பிட பிடிக்காது. பழம் தான் சாப்பிடுவேன். அத்தை ஜுஸ் கொடுத்துட்டாங்க” என்று தயங்கியபடி கூறினாள்.

 

“சரிடா. உடனே படுக்காத. நான் சாப்பிட்டுட்டு வந்து மருந்து போட்டு விடுறேன்” என்றுவிட்டு அவன் செல்ல, மெல்ல சாய்ந்து அமர்ந்தாள். சில நிமிடங்களில் உணவை கொறித்துவிட்டு வந்தவன், ஒரு களிம்பை தேடி எடுத்து வர, அவனை விழிகள் விரிய பார்த்தவள், “எ..என்னதது?” என்றாள்.

 

அவளை புருவங்கள் இடுங்க பார்த்தவன், “ஆயின்மென்ட்” என்று கூற, “ஓ..” என்றபடி எழ முயற்சித்தாள். “எதுக்குமா எழுந்திருக்குற?” என்று அவன் வினவ, “மருந்து போட” என்றாள். “நீ படு. நான் போட்டுவிடுறேன்” என்று அவன் கூற, ‘ஏதே’ என்று விழிபிதுங்கியவள், “இல்ல இருக்கட்டும்” என தலைகுனிந்தாள்.

 

“என்ன இருக்குட்டும்?” என்று ஒற்றை புருவம் உயர்த்தி அவன் வினவிய தோரணையில் அவளுக்கு வாயிலிருந்து பதிலுக்கு மாறாக காற்று தான் வந்தது. கட்டிலருகே வந்து மண்டியிட்டவன், “ஷையா (வெட்கமாக) இருக்குமா?” என்று நக்கலாக வினவ, தலையை எல்லா பக்கமும் உருட்டி வைத்தாள்.

 

அதில் வாய்விட்டு சிரித்தவன், “மெல்லமா தேச்சுவிடுறேன். அட்ஜஸ்ட் பண்ணிக்கோ” என்க, “ச்ச.. ச்ச.. நான் அப்படிலாம் எடுத்துக்குல” என்றவள் கட்டிலில் படுத்துக் கொண்டாள். அந்த களிம்பை எடுத்து அவள் இடையில் அவன் தேய்த்து விட, ஒருநொடி அவள் தேகம் சிலிர்த்து அடங்கியது.

 

தலையணையை கசக்கிப் பிடித்தவள், “ஸ்ஸ்.. வலிக்குது” என்று இரைஞ்சலான குரலில் கூற, “சாரி சாரிடா” என்றவன் சற்றே மென்மையாக தேய்க்க,’ ம்ஹும் இது நேராது’ என்ற ரீதியில் அவள் கண்கள் பொழியத் துவங்கியது. சிறு விசும்பல் அவளிடம் எழவே, “ம்ஹீம்.. வலிக்குது” என்று கெஞ்சலாக கூறியவள் உடையை சரிசெய்தவன், “அவ்வளவு தான்மா” என்றான்.

 

முகத்தை தலையணையில் புதைத்துக் கொண்டவள் அழத்துவங்கிட, அதில் ஒருநொடி ருத்ரன் பதறித்தான் போனான். சென்று கையை கழுவிவிட்டு வந்து அவளருகே படுத்தவன், அவளை திருப்பி தன் நெஞ்சில் போட்டுக்கொள்ள, “முடியலை.. வலிக்குது” என்று அவன் மார்பில் முகம் புதைத்தாள்.

 

“ஒன்னுமில்லமா. மருந்து போட்டிருக்கேன். சரியாகிடும்” என்று அவன் கூற, “ம்ம்” என்றபடி அவனை இறுக அணைத்துக் கொண்டாள். அவளை தன் தோள் வலைவில் பாதுகாப்பாக பிடித்துக் கொண்டவன், அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட, அந்த உஷ்ண இதழின் ஸ்பரிசத்தில் மீண்டும் அவள் உடல் சிலிர்த்து அடங்கியது.

 

அவனை மெல்ல நிமிர்ந்து பார்த்தவள், பார்த்தது பார்த்தபடி இருக்க, “என்னடா?” என்றான். அவன் குரலில் இருந்த கனிவு அவளுள் என்னவோ செய்ய, ‘ஒன்றுமில்லை’ என்பது போல் தலையசைத்தவள், மீண்டும் அவனை அணைத்துக் கொண்டு படுத்திட்டாள். சிறுபிள்ளையை போல் அவளை தட்டிக் கொடுத்து தூங்க வைத்தவன், அவள் தூங்கியதை பறைசாற்றும் விதம் தன் மார்பில் அவள் சீரான மூச்சுக்காற்றை உணர்ந்த பின்பே தானும் உறங்கினான்.

-வரைவோம் 💞

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
6
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்