குதிரை வேகத்தில், அவளவனுடனான பத்து நாட்களை அழகாக கடந்தியிருந்தாள். அழகிய அந்த காலைப்பொழுதில் அவனை இறுக கட்டிக் கொண்டு ஒரே போர்வையை இருவருமாக போர்த்திக் கொண்டு அவள் படுத்திருந்த ரம்மியத்தினை ரசிக்க அவள் கண்களுக்கு கொடுத்தாவைக்காவிட்டாலும், அவனுக்கு கொடுத்து வைத்திருந்தது.
எப்பேர்ப்பட்ட முரடனும் தூங்கும்போது குழந்தையாகவே தெரிவான் என்றபோது, குழந்தை முகம் கொண்டாளுக்கு அது மாறுமா? அவளது தேன்வதனத்தினை இமைகொட்டாது ரசித்தவன் இதழ்களில் ஆடம்பரமாய் ஓர் புன்னகை வீற்றிருந்தது. இந்த பத்து நாட்களில் அவர்களுக்குள் ஏற்பட்ட மாற்றம், அவள் அவனுடன் கோர்வையாக பேச ஆரம்பித்திருப்பதும், தலையணையின் துணையை துறந்து, தலைவனவனை அணைத்திருப்பதும் மட்டுமே.
ஆனால் அதுவே அவனுக்கு அத்தனை தித்திப்பாக இருக்க, அந்த நொடி பொழுதுகளையும் தன் மனப்பெட்டகத்தில் சேமித்து மீண்டும் அவளற்ற தருணங்களில் அசைபோட்டு ரசித்தான். எழுப்புவதற்கு யாருமில்லாமல் அவள் எழமாட்டாள் என்பதால், மனமேயின்றி அவள் நெற்றியில் ஒரு முத்தம் பதித்து “ஓய் கேடி” என்று எழுப்ப, அவள் அசைந்து கொடுத்தாளா என்றால் அதுதான் இல்லை.
அதில் சிரித்துக் கொண்டவன், “ஏ கேடி. லேட்டாகுது. வேலைக்குப் போற எண்ணம் இல்லையா” என்றவன் அவள் கன்னம் பற்றி உலுக்க, மெல்ல அசைந்து கொடுத்தவள், “ஃபைவ் மினிட்ஸ் ம்மா” என்றாள். அதில் சிரித்துக் கொண்டவன், “ஏ கேடிகுட்டி, நான் உன் புருஷன்டி” என்றுவிட்டு அவள் மூக்கை கில்லி வைக்க, “ஆ..” என்றபடி கண்ணை திறந்து மூக்கை தேய்த்தவள், “ஏங்க” என்று சிணுங்களாக கத்தினாள்.
அதில் மேலும் வாய்விட்டு சிரித்தவன், “ஹேப்பி மார்னிங்” என்க, “நல்ல மார்னிங் போங்க” என்றாள். “ரொம்ப வலிக்குதா என்ன?” என்று அவன் வினவ, “லைட்டா” என்றாள். அவள் முகம் நோக்கி குனிந்தவன், “மருந்து போடவா” என்று கிசுகிப்பாக வினவ, திருதிருவென விழிகள் விரிய பார்த்தவள், அவன் மூச்சுக்காற்று தன் வதனத்தை மோதவும் கண்களை மூடிக்கொண்டாள்.
அவள் முகத்தை பார்வையாலேயே அளந்தவன், அவள் நாசியோடு தன் நாசியை உரசி, நெற்றி முட்டிவிட்டு நகர்ந்தான். அதில் பட்டென விழி திறந்தவள் மனம் ‘அவ்வளவு தானா?’ என்ற ஏக்கப்பெருமூச்சு விட, அதை நன்கு புரிந்துக்கொண்டவன் உள்ளுக்குள் சிரித்தபடி நகர்ந்து சென்றான்.
இருவரும் தயாராகி வெளியே வர, சமையலறைக்குள் புகுந்த அஞ்சிலை மகாவுக்கு உதவிகளை செய்து சமையல் வேலையை விரைவாக முடிக்க வழிவகை செய்தாள். கணவன் மதியம் வந்து சாப்பிடுவான் என்பது அறிந்தவள் தனக்கும் ரூபிக்கும் மட்டும் உணவை கட்ட, “ரூபிக்கு கட்டவேணாம் அஞ்சு” என்று மகா கூறினார்.
“ஏன் அத்தை? காலேஜ் லீவா?” என்று அஞ்சு வினவ, “இல்லைமா. ஊர்ல இருந்து என் சித்தி பேரன் நேத்து கூப்பிட்டான்மா. சித்திக்கு உடம்பு சரியில்லையாம். அவங்களுக்கு ரூபினா தனி பிரியம். ரூபிய பார்க்கனும் சொல்றாங்கனு சொல்றான். ருத்ரனும் நீயும் இப்ப தான் வேலைக்கு கல்யாணம்னு நிறைய லீவ் போட்டீங்க. ரொம்ப முடியாம போச்சுனு சொன்னா நான் கூப்பிடுறேன்” என்றார்.
அவர் பேச்சிலேயே தங்கள் இருவரையும் தனியே விட்டுச் செல்ல எண்ணுகிறார் என்பது புரிய, அவளுள் மெல்லிய வெட்கம் பரவியது. “பார்த்து இருந்துக்கோடா. நான் அவனையும் வீட்டுக்கு சீக்கிரம் வந்துட சொல்லுறேன். பத்திரமா இருந்துக்கோங்க” என்று அவர் கூற, “சரி அத்தை” என்றாள்.
அனைத்தையும் தயார் செய்தவள், அறைக்கு சென்று துப்பட்டாவை அணிய, உள்ளே வந்தவன், “பாப்பா” என்றான். ‘தன்னை தான் அழைக்கின்றானா?’ என்ற குழப்பத்துடன் திரும்பியவளிடம் வந்தவன், “இன்னிக்கு மட்டும் நான் ஒரு பத்து மணிக்கு தான் வருவேன். அம்மாகிட்ட சொன்னா திட்டுவாங்க. ஒரு வேலை இருக்குடா. தனியா இருக்க பயமா இருக்கும்னா உங்கம்மா கூட இருந்துக்கோ. நான் வந்து கூட்டிட்டு போறேன்” என்று கூற அவள் முகத்தில் நொடி பொழுது ஓர் அதிருப்தி வந்து போனது.
அதை அவள் உணர்ந்தாளோ இல்லையோ? அவன் இனிக்க இனிக்க உணர்ந்தான். சிறு தலையசைப்பில் பதில் தந்தவள் வெளியேற, சாயும் சரியாக உள்ளே வந்தாள். எப்போதும் போல் அத்தையிடம் விடைபெற்றவள், ரூபியிடமும் பார்த்து போகும்படி அறிவுரை கூறிவிட்டு தன் கணவனை ஓர் பார்வை பார்த்துவிட்டுச் சென்றாள்.
வண்டியில் ஏறியவள் அதுபுறப்பட்ட வேகத்தில் நடந்தவற்றை தோழியிடம் ஒப்பிக்க, “அப்பறம் என்ன? ஒரே என்ஜாய்மென்ட் தான்” என்று சாய் கிண்டலாகக் கூறினாள். “அடபோ சாய். இன்னிக்கு அவருக்கு ஏதோ வேலையாம். நைட் லேட்டாதான் வருவார் போல. அம்மாவீட்ல இருந்துக்கோ சொல்லிட்டார். வேலை முடிச்சுட்டு வந்து கூட்டிட்டு போவாராம்” என்று தன்னையும் மீறி தன் அதிருப்தியை அவள் வெளிப்படுத்திட, வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த சாய் அதை ஓரம் கட்டிவிட்டு சிரிக்கத் துவங்கினாள்.
“எ..ஏ அஞ்சல.. சிரிப்பை தாங்கமுடியலைடி. ரொம்ப ஆதங்கமா பேசுறியே. நீ எதையும் எதிர்ப்பார்த்தியோ” என்று சிரிப்படி கேட்க, அதன் பின்பே தான் அவசரப்பட்டு பேசியதை உணர்ந்தவள் முகம் நாணத்தில் குபீரென்று சிவந்து போனது. “ஏ நா.. நான் ஒன்னும் அப்படிலாம் சொல்லலை” என்று அஞ்சு சமாளிக்க முயற்சித்தும் சாயின் சிரிப்பு அடங்காமல் போக, “இது ஒன்னும் அவ்வளவு பெரிய காமெடியில்லை. வண்டிய எடு” என்றாள்.
சிரிப்பை சற்றே கட்டுப்படுத்திய சாய் வண்டியை இயக்க, “அஞ்சு.. உங்க அத்தை வரதான் ஒருவாரம் ஆகுமே. அப்பறம் என்ன ஒரே ஒருநாள் தானே அவர் லேட்டா வருவார்” என்று வினவ, அந்த பேச்சே அவளுக்கு அசௌகரியமாக இருக்க, மேலும் பேச்சை வளர்க்க விரும்பாது அமைதியாகி விட்டாள்.
அவளது அமைதியிலேயே அதை உணர்ந்துகொண்ட சாய், “ஜஸ்ட் சில் கேர்ள். விளையாட்டுக்கு தான் கேலி பண்ணேன்” என்று கூற ஒரு பெருமூச்சுடன், “புரிஞ்சது. ஆனாலும் எனக்கு ஏனோ இந்த பேச்சு..” என்று தயங்கினாள். “ஓகே ஓகே.. விடு. இந்த வன் வீக் உனக்கு அவர்கூட ஒரு நல்ல உறவை பில்ட் பண்ண உதவும் அஞ்சு. நல்லா பேசு, மனசுவிட்டு உன் மனசை பேசு” என்று சாய் கூற, இந்த பேச்சு அவளை வெகுவாக ஈர்த்தது.
“நான் என்ன என்ன பேசட்டும்? எனக்கு அவர்கூட பேச ஆர்வமா இருக்கு. ஆனா என்னமோபோ உன்கிட்ட எட்டு ஊருக்கு வாயடிக்குற எனக்கு அந்த மனுஷன் முன்ன எட்டு வார்த்தை கோர்வையா வருதா” என்று அஞ்சு புலம்ப, அதில் சிரித்துக் கொண்ட சாய், “அவரை கண்ணால பார்க்குறத விட்டுட்டு, பிரஸன்ஸ ஃபீல் பண்ணி பேசு. உனக்கு பேச்சு தானா வரும்” என்று கூறினாள்.
அவள் கூறிய வார்த்தைகளில் ஊரிய அர்த்தத்தினை சுவைத்தவளது சித்தம் அவனோட பேசப்போகும் தருணங்களுக்காக ஆவலாக இருந்தது. மாலை நேரம் வேலை முடித்து திரும்பிக் கொண்டிருந்தவளுக்கு கணவன் தாமதமாக வருவேன் என்று கூறியதன் ஏமாற்றம் சற்று சுருக்கத்தினையே கொடுத்தது. ‘பாவம் அவருக்கும் வேலை இருக்கும்ல’ என்று தன்னைத்தானே சமன் செய்து கொண்டவள் அன்னையின் வீட்டை அடைய, உள்ளே கலகலவென்ற சிரிப்பு சத்தம் கேட்டது.
அந்த சத்தம் அவளுள் ஓர் குதூகலத்தினை கிளப்ப, “அம்மா” என்றபடி உள்ளே வந்தவள் கூடத்தில் அமர்ந்திருந்தவனைக் கண்டு அதிர்ந்து நின்றாள். அதிர்ச்சி தான்.. ஆனால் இன்பமான அதிர்ச்சி!
“ஏ அஞ்சு.. வாவா” என்றபடி அர்ஜுன் அழைக்க, நினைவு மீண்டவள் உள்ளே வந்தாள். உள்ளிருந்து குளம்பியுடன் வந்த காயு “வந்துட்டியாடா. இப்பதான் மாப்பிள்ளை சொன்னார்” என்றபடி ருத்ரனிடம் அந்த கோப்பையை கொடுத்தார்.
“நா..நான் ஃப்ரஷாகிட்டு வரேன்” என்றவள் விறுவிறுவென தன்னறைக்கு சென்றிட, கதவை சாற்றிவிட்டு அதனில் சாய்ந்து நின்றுக் கொண்டு வேக மூச்சுக்களை இழுத்து விட்டாள். ‘வரமாட்டேன்னு சொன்னார். எனக்காக தான் வந்தாரா?’ என்ற நினைப்பே அவளுக்கு அத்தனை இனிக்க, சிறு புன்னகையில் இதழ் மலர்ந்தது.
அதே குதூகலத்துடன் தன்னை சுத்தம் செய்துக்கொண்டு கீழே வந்தவளிடம் அவள் அன்னை பால் கோப்பையை கொடுக்க, அதை வாங்கி பருகியவள் அர்ஜுனுடன் வம்பளக்கத் துவங்கினாள். அதை உள்ளுக்குள் சிரிப்போடு பார்த்துக்கொண்டவன் நேரமானதும் புறப்பட எண்ண, அவளது அன்னை யாவரையும் உணவு உண்ண அழைத்தார்.
உணவையும் அங்கேயே முடித்துக் கொண்டு இருவரும் வீடுவர, உள்ளே நுழைந்ததும் ஆர்வம் பொறுக்காது தன் கேள்வியை கேட்டுவிட்டாள். “வேலை சீக்கிரம் முடிஞ்சுடுச்சா?” என்று அவள் கேட்க, சன்னமான சிரிப்புடன் இல்லை என தலையசைத்தான். அவளுக்கு பனிச்சாரலின் குளுமை பரவி படபடக்கச் செய்ய “அ.. அப்புறம்?” என்றாள்.
அவளை நக்கல் சிரிப்புடன் பார்த்தவன் “ஏன்னு உனக்கு தெரியலை?” என்று வினவ, நாணச்சிரிப்புடன் தலை குனிந்தவள், “தெரியலைனு தான் கேட்குறேன்” என்று தத்தி பித்தி கூறினாள். சட்டென அவளை தன்னோடு இழுத்துக் கொண்டவன், “தெரியாம கேக்குற மாதிரி இல்லை. என் வாயால தெரிஞ்சுக்க கேட்குற போல இருக்கு” என்று கூற, அவன் மார்பில் தன் உச்சந்தலையையும் தரையில் தன் பாத விரல்களையும் அழுத்திக் கொண்டு “எதுவா இருந்தா என்ன? சொல்லுங்களேன்” என்றாள்.
அதில் வாய்விட்டு சிரித்துக் கொண்டவன், “உனக்காக தான் வந்தேன். காலைல சொன்னதும் முகம் மியாவ்னு சுருங்கிடுச்சு. அய்யோ பாவமே நமக்காக நம்ம பொண்டாட்டி ரொம்ப ஏங்குறா போலயேனு வேலைய மாத்தி விட்டுட்டு வந்துட்டேன்” என்று கூற, அவள் கைகள் தாமாக அவனை வலைத்து அணைத்துக் கொண்டது.
அதில் இன்பமாக அதிர்ந்தவன் தானும் அவளை அணைத்துக் கொண்டு சிலவினாடிகளை ரசிக்க, தானே விலகியவள், “குளிச்சுட்டு வரேன்” என்றுவிட்டு சென்றாள். சென்று குளித்து முடித்து இரவு சட்டையும் தொளதொளப்பான பைஜாமா கால்சராயும் அணிந்துக்கொண்டு அவள் வர, ஒரு பாத்திரம் நிறைய பாப்கார்னை மேஜையில் வைத்துவிட்டு நிமிர்ந்தான்.
பாவை அவனை புரியாமல் பார்க்க, மறவோன் அவளை ரசனையாகப் பார்க்க, இருவரிடமும் வார்த்தைகள் இல்லை. “எதுக்குங்க இது?” என்று அவள் கேட்க, நமட்டு சிரிப்புடன், “நரி ஊலையிட்டா தூக்கி போடலாம்னு வச்சுருக்கேன்” என்றான். அதில் அவனை முறைத்தவள், “பெரிய காமெடி தான்” என்று நொடித்துக் கொள்ள, சிரித்தபடி “படம் பார்க்க போறோம்” என்றான்.
பெண்ணவள் விழிகள் சாசர் போல் விரிந்துக்கொள்ள, “ஐ.. நெஜமாவா? என்ன படம்?” என்று துள்ளலோடு கேட்டாள். “குஷி” என்று அவன் கூற, “ஐ.. ஏங்க.. எனக்கு ரொம்ப புடிச்ச படம்” என்று துள்ளலோடு கூறினாள். “ம்ம்.. உன் ரூம்ல குஷி மூவி ஸ்டிக்கர்ஸ் நிறையா ஒட்டி வச்சிருந்தத பார்த்தப்பவே தெரிஞ்சுது” என்று அவன் கூற, தன் பிடித்தங்களை அவன் கவனிப்பது உணர்ந்து மகிழ்ந்து போனாள்.
கதவுகளை பூட்டிவிட்டு விளக்குகளை அணைத்துவிட்டு படத்தை இயக்கியவன் சோஃபாவில் மனைவியுடன் அமர்ந்துகொள்ள, அவன் தோள் வலைவில் பாந்தமாக பொறுந்தியவள், படத்தை ஆர்வத்துடன் பார்க்கலானாள். அதில் வரும் பாடல்களை தன்னையும் மீறிய ஆர்வத்தில் அவள் முனுமுனுப்பதை கேட்டு ரசித்தவன், நடுநடுவே அப்படத்தினை அவள் முதன்முறை கண்டபோது உணர்ந்தவற்றை பகிர்ந்துகொள்வதையும் கேட்டுக்கொண்டான்.
படத்தை ரசித்தானோ இல்லையோ, அவளை பேச வைக்கும் யுக்தி ஒன்று கிடைத்திட்ட திருப்தியுடன் அவளை ரசித்தான். சில நிமிடங்களில் தூக்கம் வந்து கண்ணை கசக்கி கசக்கி படத்தைப் பார்த்தவள், ஒரு கட்டம் மேல கட்டுப்படுத்த முடியாது அவன் தோள் சாய்ந்து தூங்கிவிட, அவளை திரும்பிப் பார்த்தவன் மெல்ல கையினை நீட்டி, ரிமோர்டை எடுத்து தொலைக்காட்சியை அணைத்தான்.
சில நிமிடங்களில் அவளது மூச்சுக்காற்று அவன் காதுமடல்களை உரச, அதில் உடல் சிலிர்க்க அவளை திரும்பிப் பார்த்தவன், இருளில் மங்கிய மஞ்சள் நிற இரவு வெளிச்சத்தில் அவளது குழந்தை முகத்தினை விழியெடுக்காது ரசித்தான். அவள் தூக்கம் கலையாது தன் கைகளில் ஏந்தியவன் தங்கள் அறைக்கு தூக்கிச் சென்று படுக்க வைத்து நிமிர, அவள் கரம் அவனது சட்டைக் காலரை இறுக பற்றியிருந்தது.
அதில் சிரித்துக் கொண்டவன் தானும் படுத்துக்கொள்ள, அவனை நெருங்கி கட்டியணைத்துக் கொண்டு உறங்கத்தினை தொடர்ந்தாள். அந்த அழகியதொரு ரம்மியமானப் பொழுதும் பிற்காலத்தில் நினைத்து ரசித்துப் பார்த்துக்கொள்ள அழகிய நினைவாக அவர்களுக்கு மாறியது!
-வரைவோம் 💞