இதோடு இரண்டு நாட்கள் முடிந்துவிட்டது தாய் வீட்டிற்கு கணவனுடன் அவள் மறுவீடு வந்து. தாய் வீட்டில் முதல் நாள், தாய்மாமன் வீட்டில் இரண்டாம் நாள் என இருநாளும் மறுவீடு முடிந்திருந்தது. அவள் வீட்டிற்கு வந்த இந்த இரண்டு நாட்களில் தான் அவளுடைய பழக்க வழக்கங்கள் அவனுக்கு புரிபட்டது. அவள் தன் வீட்டில் ஐந்து மணிக்கே அலாரம் வைத்து எழுந்ததும் ‘நல்லா இருக்கு உன் வேலை. நைட்டு ஒன்னுமே நடக்கலைனு எங்க அம்மாக்கு இதைவிட ஈசியா தெரியப்படுத்தவே முடியாது. ஒழுங்கா படு. லேட்டா எழுந்துக்கலாம்’ என்று அதட்டி படுக்க வைத்தவனுக்கு இங்கு அலாரம் ஏதுமின்றி அவள் இஷ்டம் போல் எழுந்தது கண்டு சிரிப்பாக இருந்தது.
தூங்கும் நேரம் உடன் இரண்டு தலையணையை வைத்து கட்டிக் கொண்டு அவள் படுத்தது, உண்ணும்போது இனிமையாக இசை கேட்பது என்று அவளது சின்ன சின்ன அழகிய பழக்கங்கள் அவனுக்கு பிடித்தே இருந்தது. இதோ இன்று மீண்டும் புகுந்த வீடு புறப்பட இருப்பவளுக்கு அவள் அன்னை, வேண்டிய பொருட்கள் என பலவற்றை கட்டி வைத்திருக்க, தாயுடன் பேசிவிட்டு அவற்றை எடுத்துக் கொண்டு வந்தாள்.
அர்ஜுனும் ருத்ரனும் கலகலத்து பேசிக் கொண்டிருக்க, சன்னமான புன்னகையுடன் குணா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். “பார்த்து இருந்துக்கோடா. எதுனாலும் அம்மாக்கு பேசு” என்றவர் மகளை அணைத்து விடுவிக்க, புன்னகையுடன் புறப்பட்டாள்.
வண்டியில் அவன் பின்னே அமர்ந்து கொண்டு செல்லும் இந்த பயணம் இரண்டு நாட்களாக வாடிக்கையாகி இருந்தது. புடவையை கட்டிக் கொண்டு அந்த வண்டியில் உட்காரவே கஷ்டப்பட்டவள் தற்போது கையில் ஒரு பையை வேறு வைத்துக்கொள்ள சிரமப்பட, “கொடுமா. முன்னாடி வச்சுக்குறேன்” என்று வாங்கிக் கொண்டான்.
அமைதியான பயணத்தில் அளவான வேகத்தில் சென்றவர் இருவரும் அவன் வீட்டை அடைய, மகா “வாடா கண்ணா. வாமா.. மறுவீடெல்லாம் நல்லபடியா முடிஞ்சதா?” என்று வினவினார். “முடிஞ்சது அத்தை” என்றவள் கண் வீட்டை துழாவ, “ரூபியாடா? ரூம்ல இருக்கா” என்று கூறினார்.
“அம்மா ரூபிக்கு சிலது கொடுத்திருக்காங்க அத்தை. அதான்” என்று அவள் கூற “இருடா கூப்பிடுறேன்” என்றவர் ரூபியை அழைத்தார். வெளியே வந்தவள் “ஐ அண்ணி வந்துட்டீங்களா? எனக்கு ரெண்டு நாள் செம்ம போரிங்கா இருந்தது” என்க சிரித்தபடி அமர்ந்த அஞ்சு, “ரூபி.. நீ கல்யாணத்தப்போ அம்மா பண்ண லட்டு ரொம்ப புடிச்சிருக்கு சொன்னதால லட்டும் தட்டையும் உனக்கு கொடுத்திருக்காங்க” என்று அவற்றை எடுத்து வைத்தாள்.
“ஐ.. சோ சுவீட் அத்தை” என்று அவள் கூற, “உனக்கு, அத்தை உங்களுக்கும் புடவை கொடுத்துவிட்டாங்க” என்று அவற்றையும் எடுத்து வைத்தாள். அனைத்தையும் கண்டு எப்போதும் போல் சிரிப்புடன் கடந்தவன் சென்று குளித்துவர, ரூபி வாயலந்து கொண்டிருக்க, அவ்வப்போது பதில் பேசியபடி அஞ்சு அமர்ந்திருந்தாள்.
என்னதான் அவள் மற்றவரிடம் பழகுவது போல் எளிமையாக தங்களிடம் இல்லை என்றாலும், ஓரளவு தன் தாய் மற்றும் தங்கையுடன் அவள் பேசுகின்றாள் என்பதே அவனுக்கு சந்தோஷமாக பட்டது. இரவு வேளை அமைதியாகவே கழிந்திட, தங்கள் அறைக்குள் தண்ணீர் போத்தலுடன் வந்தவள் கட்டிலில் சாய்ந்து அமர்ந்து அலைப்பேசியை பார்த்தவன் முன் சென்று தயங்கியபடி நின்றாள்.
சில நிமிடங்கள் அவளாகவே வாய் திறக்க காத்திருந்தவன் அவள் பேசாததால், “உன் புருஷன் அவ்வளவு அழகாவா இருக்கேன்” என்று அலைப்பேசியை பார்த்தபடி கேட்க, “இல்.. அது.. வந்து ஒன்னு கேக்கனும்” என்றாள். அவள் கைபற்றி அமர்த்தியவன், “என்னடா?” என்க, “நா.. நான் புடவைய மாத்திக்கலாமா?” என்றாள்.
கேட்கவே தயக்கமாகத்தான் இருந்தது அவளுக்கு. இதையெல்லாம் கேட்டு செய்ய வேண்டுமா என்று தோன்றினாலும், தனது அசௌகரியத்தினை அவனுக்கு வெளிப்படுத்திட நினைத்தே கேட்டாள். “இதை எதுக்கு என்கிட்ட கேட்குற? நான் உன்கிட்ட கேட்டுட்டா டிரஸ் மாத்தினேன்?” என்று அவன் வினவ, தற்போது என்ன பதில் கூறவென்று அவளுக்கு தெரியவில்லை.
தனக்கு அசௌகரியமாக இருப்பதால் மாற்ற நினைத்தவள், ‘ஒரு ஒரு வாரம் புடவையே கட்டிக்க அஞ்சு. உங்க அத்தைக்கு சரினு பட்டா சுடி போட்டுக்க’ என்று அன்னை கூறியதற்காக தான் புடவை உடுத்துகிறேன் என்று அவனிடம் கூற இயலவில்லை. அவள் நிலையை புரிந்துக் கொண்டவன், “இங்க பாரு. இது உன் வீடு. அம்மா உன்னை புடவை தான் கட்டனும்னு எதிர்ப்பார்க்க மாட்டாங்க. அதே போல நம்ம ரூமில் உனக்கு இஷ்டம் போல நீ இருக்கலாம். நான் ஒன்னும் டெட்டி பட ஆரியா இல்லை. எதையாவது மாத்தி வச்சா ஏன் வைச்சனு கேட்குறதுக்கு. உனக்கு அசௌகரியமா இருந்தா மாத்திக்கோ. உனக்கு பிடிக்காததை நீ யாரோட வற்புறுத்தளின் பெயரிலும் செய்ய வேண்டியது இல்லைடா” என்று கூற, சிறு புன்னகையுடன் “தேங்ஸ்ங்க” என்றாள்.
அவளை சட்டென இடையோடு அணைத்தபடி இழுத்தவன் “இப்படி தான் தேங்ஸ் சொல்வாங்களா ஹஸ்பென்டுக்கு?” என்று வினவ, அவன் கூற வருவது நன்கு புரிந்தது அவளுக்கு. அதில் அச்சம், மடம், நாணம் என்று மூவகை உணர்வுகளும் அவளது உள்ளத்தையும் உடலையும் கவ்விக் கொள்ள, அதன் பிரதிபலிப்பாய், கன்னம் சிவந்து இதழ் புன்னகைக்க துடித்தது.
அவளது எழில் கொஞ்சும் வதனத்தைக் கண்டு ரசித்தவன், அவளுக்கு தன் கைச்சிறையிலிருந்து விடுதலை கொடுத்து “போ” என்க, வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாய் குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.
சில நிமிடங்களில், சுடிதாரணிந்தபடி வந்து அமர்ந்தவளைக் கண்டவன், “ஏ.. என்னமா சுடிதார் போட்டிருக்க? புடவையே அசௌகரியமா இருக்குனு சொல்ற, இதை போட்டுட்டு தூங்க ரொம்ப கம்ஃபோர்டா இருக்கோ?” என்று வினவ, “எ..ஏன்? இது நல்லா தானே இருக்கு?” என்றாள்.
“நல்லா இல்லைனு நான் சொல்லவே இல்லை. இதை நைட்டு போட்டுக்க உனக்கு கசகசனு இருக்காது?” என்று அவன் வினவ, “இல்லை இது ஓகேதான்” என்றாள். அப்போதே அவள் அசௌகரியம் என்று குறிப்பிடுவது புடவை விலகுவது என்பது புரிய, “இப்ப தான்டி புரியுது. இது தெரிஞ்சிருந்தா புடவையோடவே படுனு சொல்லிருப்பேனே” என்று நமட்டு சிரிப்புடன் கூறினான்.
அதில் விழிகள் விரிய அவனை பார்த்தவள், “எது?” என்க சிரித்தபடி அவளை தன்புறம் இழுத்தவன், “ஏ கேடி.. இன்னிக்கு நோ ரெஸ்டிரிக்ஷன்ஸ்” என்று கூறி நிறுத்த, திருதிருவென விழித்தவள் “எ..என்ன? புரியல?” என்றாள். வாய்விட்டு சிரித்தவன், “தலையணைக்கு பதில என்னை கட்டிகிட்டு தூங்குனு தான் சொல்ல வந்தேன். நீ நினைக்குற போலலாம் ஏதுமில்லை” என்று கூற “நா.. நான் ஒன்னும் நினைக்கலையே” என்றாள்.
“நம்புறாங்க நம்புறாங்க” என்றவன் படுக்க, தானும் படுத்துக் கொண்டவள், சற்று இடைவெளியுடனே படுத்திருந்தாள். அவனும் ஏதும் கூறாது அமைதியாக கண்மூடி இருக்க, என்ன நினைத்தாளோ, சற்றே அவனை நெருங்கி வந்து அவன் மீது கையை போட்டுக் கொண்டாள். கண்களை மூடியபடியே அவன் இதழ் பிரித்து சிரிப்பது தெரிய, வெட்கத்துடன் முறுவலித்தவள் தன் தலையை அவன் மார்பில் முட்டி புதைத்துக் கொண்டு படுத்தாள்.
அழகிய தருணமதில் தன் வாழ்வின் புதிய அத்தியாயத்தின் இரண்டாம் படியில் ஏறிவிட்டவள், தன் உலகத்தை அவனுடன் செதுக்குவதற்கு தன்னை தயார் செய்துக் கொள்ளத் துவங்க, அதன் போக்கில் இரு நாட்கள் கடந்து இதோ இருவரும் அவரவர் பணிக்கு செல்லத் துவங்கும் நாள் வந்தது.
அன்று வெள்ளிக்கிழமை என்பதால் காலை விரைவாகவே எழுந்த தலைக்கு குளித்துத் தயாராகியவள் தன்னை கண்ணாடியில் பார்த்தாள். அன்று தானாகவே எழுந்தவள் ஆசையுடன் புடவையை வெகுநேரம் போராடி ஓரளவு திருத்தமாகக் கட்டியிருக்க, தலையை கட்டிய துண்டிலிருந்து தப்பி வந்து அவள் முன்நெற்றியில் குதித்த கூந்தலிலிருத்தும், காதுமடல்களில் ஆடிய சிகையிலிருந்தும் நீர் மணிகள் சொட்டியது. விழிகளுக்கு மைதீட்டி மெருகேற்றியவள், நெற்றி வகுட்டில் செக்கச்சிவந்த குங்குமத்தை வைத்து மீண்டும் தன்னை ஆவலுடன் நோக்கினாள்.
தன்னை என்றுமில்லாது இன்று அழகாக உணர்ந்தவள் அவளவனின் சிந்தனையில் வசப்பட்டுப்போக, தன் உணர்வுகளினை உருவாக்கிய மாய வித்தகன் தன்னை பின்னிலிருந்து அணைத்தபோது தான் திடுக்கிட்டு நிகழ்வுக்கு வந்தாள். “என்ன கேடி.. புடவை கட்டிருக்க?” என்று ‘புடவை’ என்ற வார்த்தையில் ஒரு அழுத்தத்துடன் ருத்ரன் வினவ, “அ..அது சும்மாதான்” என்று தடுமாறினாள்.
சும்மாவே அவனிடம் பேசுவதில் இன்னும் அந்த தடுமாற்றம் அவளுக்கு விலகவில்லை என்ற பட்சத்தில், அவன் அணைத்து பிடித்திருப்பது அவளுக்கு மேலும் தடுமாற்றத்தினை கொடுத்திருந்தது. அவளை முன்னே திருப்பியவன், “இல்லையே.. குளிச்சு முடிச்சு இவ்வளவு நேரமாச்சு. தலைல உள்ள துண்ட கூட கழட்டாமல் ஏதோ கனவுல இருந்தத பார்த்தா எனக்காக கட்டினப்போல தான் இருக்கு” என்று கூறி அவளை மேலும் தன்னோட நெறுக்கிக் கொள்ள, விழிகள் விரிய அவனை பார்த்தவள், “அ.. அத்தைக்கு ஹெல்ப் பண்ண போகனும். ஒத்தையே வே.. வேலைப் பார்த்துட்டு இருப்பாங்க. விடுங்க” என்றாள்.
“அதுக்காகத்தான் விட சொல்றியா?” என்று அவன் குரல் குழைய வினவ, அவள் விழிகளை மட்டுமே தாழ்த்திக் கொண்டு “அ..ஆமா” என்றாள். அவளது படபடக்கும் விழிகளும், துடிதுடிக்கும் கன்னங்களும் அவனை அவள் பால் ஈர்க்க, மெல்ல அவளை நோக்கி குனிந்தவன், அவள் நெற்றியில் அழுந்த தன் முதல் ஸ்பரிசத்தை பதித்தான்.
அவனது முதல் ஸ்பரிசம்! உச்சந்தலையில் பதிந்த அவன் இதழ்கள் அவள் உள்ளங்காலை சில்லிடச்செய்ய, ஆடவனது வலிய புஜங்களை அழுந்த பற்றிக் கொண்டாள். அந்த பற்றுதல் அவளுக்கு சொல்லாமல் சொல்லியது, இனி உன் பிடிமானம் இவன் தான் என்பதை, அதை அவள் தெளிவுர உணர்ந்திருக்க வேண்டுமோ!?
சில நிமிடங்களில் தன்நிலை அடைந்த இருவரும் மனமின்றி விலக, அவளது நாணச்சிகப்பேரிய கன்னங்களை வருடிவிட்டுச் சென்றவனை தொடர்ந்து தானும் சிரித்துக் கொண்டு வெளியேறியவள் மாமியாருக்கு உதவிவிட்டு வேலைக்கு தயாராகினாள். ருத்ரன் மற்றும் அஞ்சிலையின் வேலையிடம் எதிரெதிர் திசைகளில் உள்ளதால், அஞ்சிலை வழக்கம் போல் சாயுடன் தான் வேலைக்கு சென்றாள்.
அவளது புகுந்த வீட்டிற்கு வந்த சாய், அவள் மாமியாரிடம் சகஜமாக சிரித்துப்பேச, ரூபியுடன் இணக்கமாக பழகினாள். தனது பையினை எடுத்துக் கொண்ட அஞ்சு ருத்ரனுடன் வர, தோழியை கண்ட சாய்க்கு அத்தனை ஆச்சரியமாக இருந்தது. கணவனுக்கு ஒரு கண்ணசைவை கொடுத்தவள் மாமியார் மற்றும் நாத்தனாரிடம் கூறிக்கொண்டு புறப்பட, வண்டியை ஓட்டிய சாய் “அடியே குட்ட.. புடவை, சிரிப்பு, பார்வை பரிமாற்றம் எல்லாம் அள்ளுது” என்றாள்.
“ஏ ரொம்ப ஓட்டாத” என்று அஞ்சு கடினப்பட்டு கோபமாக பேச முயற்சிக்க, “நடிக்காத கேர்ள்.. கல்யாணம் ஆன ரெண்டாவது நாள் புடவை கட்ட கடுப்பா இருக்குனு என்கிட்ட மூக்கை உறிஞ்சுட்டு, இப்ப தழைய தழைய கட்டிட்டு நல்லா ஹீரோயின் போல வர்ற. அதுவும் மல்லிப்பூ உன் முடியோட குவான்டிட்டிய விட அதிகமா இருக்கும் போலயே? எப்படியும் அங்க போன இதை கலைட்டிதானே ஆகனும்?” என்று வினவினாள்.
“ஆமாதான். ஆனா அத்தை தான் வெள்ளிக்கிழமை வேணாம்னு சொல்லக்கூடாதுன்னு வச்சுவிட்டாங்க. அவங்ககிட்ட மறுத்து சங்கடப்படுத்த வேண்டாமேனு வச்சுகிட்டேன். அங்க போய் கழட்டி வச்சுட்டு கிளம்பும்போது மறுபடியும் வச்சுக்குறேன்” என்று அஞ்சு கூற “பார்டா.. பொறுப்பான குடும்ப இஸ்திரியாக மாறும் என் தோழி அஞ்சுவைப் பார்” என்று கேலி செய்தாள்.
சிலநிமிட மௌனத்திற்கு பின், “சாய்.. இ..இது.. நான் அவர்கூட பேச இன்னுமே ரொம்ப தயக்கமா இருக்கு சாய். எனக்கு அவர்கிட்ட பேச என்ன இருக்குனே தெரியலை” என்று அஞ்சு கூற, “கரெக்டு தான். முன்ன பின்ன கல்யாணம் பண்ணிருந்தா தெரியும்” என்று அடக்கப்பட்ட புன்னகையுடன் சாய் கூறினாள்.
“அட நாயே” என்றவளுக்கும் சிரிப்பு வந்திட, கண்ணில் நீர் வர சிரித்தவள், “விளையாடத சாய். நான் சீரியஸா கேட்குறேன்” என்று சிரித்தபடி கூற, “பார்த்தா சீரியஸா தெரியல” என்றவள், “சரிசரி சொல்லு. என்ன பிரச்சினை?” என்று கேட்டாள்.
“பிரச்சினைலாம் இல்லைடா. என்னமோ அவர் கூட பேச தயக்கமா இருக்கு. அ.. ஆனா அ அவர்கூட பேசினா நல்லா இருக்கு” என்று அஞ்சு கூற சிறு புன்னகையுடன் “ம்ம்.. நீ இன்டிரோவெர்டா இருந்து பழகிட்ட அஞ்சல. என்கிட்ட வாயடிக்குறனா நானும் நீயும் பிரண்ட்ஸ் நல்லா பழகின ஆட்கள். உங்க அம்மா அப்பா தம்பிலாம் உன்கூடவே இருந்தவங்க. காலேஜ்லயே புதுசா யார்கிட்டயும் அவ்வளவா நீ பேசினது இல்லை. இப்போ வேலையிடத்திலும் அவங்களா பேசினா நல்லா சிரிச்ச முகமா தான் பேசுற, ஆனா நீயா பேச யோசிச்சதில்லை. இது உன் நேச்சர். இதை குறை சொல்ல முடியாதுனாலும் இதை குறைச்சுக்குறது உனக்கு ரொம்பவே நல்லது. நம்ம லைஃப்ல பலதரப்பட்ட மக்கள சந்திப்போம். அப்படியிருக்க, எனக்கு பழக்கமானவங்க கூடதான் பேசுவேன்னு இருந்தா எப்படி? பழகினா தானே பழக்கமானவங்களா மாறுவாங்கனு யோசி. உடனேயே எதுவும் வராது. கொஞ்ச கொஞ்சமா மாத்திக்கோ. இது ஒன்னும் அவ்வளவு பெரிய மேட்டரில்லை சரியா? ஜஸ்ட் பீ சில்” என்றாள்.
தோழியின் நீண்ட அறிவுரையில் மனம் தெளிந்த நீரோடையானதை உணர்ந்தவள் எண்ணம், ‘பழகினா தானே பழக்கமானவங்களா மறுவாங்க’ என்ற வரியை அசைபோட்டது. தன் எண்ணத்தினூடே அவளவனின் நெற்றி முத்தமும் நினைவில் வந்து சில்லிடச் செய்ய, ‘பழகிதான் பார்ப்போமே’ என்று நினைத்துக்கொண்டாள்.
-வரைவோம் 💞