கண்கள் இரண்டின் மீதும் பெரிய பாரைகளை வைத்தது போல் திறக்கமுடியாதளவு சோர்வாக உணர்ந்தாள் அஞ்சிலை. திருமணம் இனிதே நடந்து முடிந்து, அடுத்தடுத்த சம்பிரதாயப்பணிகள் முடிந்து வந்தவர்களுடன், தோழியுடன், கணவனுடன் என வகை தொகையாக புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு உண்டு முடித்து புறப்பட்டனர் யாவரும். முக்கிய சொந்தங்களோடு யாவரும் ருத்ரனின் வீட்டை அடைய, மேலும் பாலும் பழமும் கொடுத்து சில சம்பிரதாயங்களை முடித்துக்கொண்ட பின்பே அவளை ரூபிணியின் அறைக்கு ஓய்வெடுக்க அனுப்பி வைத்தனர்.
உள்ளே நுழைந்தவளுக்கு தனது அணிகலன்களை கழையக்கூட தெம்பற்றுப் போக, அப்படியே மெத்தையில் படுத்தவள் தான். முன்பே அலைப்பேசியில் செட் செய்த அலாரம் ஒலி எப்பவும் கண்களை திறக்கக்கூட முடியாது, கண்களை மூடியபடியே அதை அணைத்துவிட்டு ஒருக்களித்து படுத்தாள்.
முழித்துக் கொண்ட பின்பும், சோர்வாகவும் கண்கள் எரிச்சலாகவும் இருந்ததால் சற்று கண்களை மூடி மெல்ல உடலை நெழிந்து கொடுத்தவள் மெல்ல எழுந்து அமர்ந்தாள். கண்களை நன்கு கசக்கி, போட்ட மையை கண்ணைவிட்டு அரைகிளோ மீட்டர் கீழே வரை அப்பிக்கொண்டு திறக்க, அவளது அன்னை உள்ளே நுழைந்தார்.
மகளின் கோலம் கண்டு சிரிப்பு வந்தபோதும் “ஏ அஞ்சு.. என்னதிது இப்படி இருக்க? எதுவுமே கலட்டிவைக்காமவா படுப்ப?” என்று கடிந்துகொள்ள, “ரொம்ப டயர்டா இருந்ததுமா. இப்பகூட கண்ணெல்லாம் எரியுது” என்றாள். “சரி சீக்கிரம் ரெடியாகு. மாப்பிள்ளை வீட்டாளுங்க வந்து சாயிங்காலம் நலங்கு வச்சுட்டு போவாங்களாம். இதெல்லாம் கழட்டிட்டு போய் குளிச்சுட்டு வா. புடவை எடுத்து வைக்குறேன்” என அவர் கூற, “சரிம்மா” என்றவள் அவர் சொன்னபடி செய்து முடித்தாள்.
அழகிய இளநீலநிற சாட்டின் புடவையை அழகுபட உடுத்தி, மெல்லிய ஆபரணங்களும் ஒப்பனை ஏதுமின்றி செந்நிர கோபுரம் பொட்டும், நெற்றி வகுட்டில் குங்குமமும் என்று வந்தாள். அவளது ஆடம்பரமில்லாத அழகு, ஆயிரம் பேரையும் கவரும்படியான அழகில்லை தான். ஆனால் கொண்டவனை காலடியில் வீழ்த்தும் அழகு அது!
அவளை ரசனையுடன் பார்த்து புன்னகைத்துக் கொண்டவன் அருகில் வந்து அமர்ந்தவள், அவனை ஓரக்கண்ணால் பார்க்க, அவனும் யாரும் அறியா வண்ணம் ஒரு கண் சிமிட்டலை அவளுக்கு பரிசாகக் கொடுத்தான்.
அதில் கண்கள் விரிய அவனையே பாவை பார்க்க, “அண்ணி.. எங்க அண்ணாவை பார்த்தே முழுங்கிடுவீங்க போலயே” என்று ரூபி அவள் காதருகே கேலியாக கிசுகிசுத்தாள். அதில் ‘ஏது? நானா?’ என்று மேலும் அதிர்வுடன் அவள் ரூபியை பார்க்க ருத்ரன் சிரிப்பை சிரமப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டான்.
உற்றார் உறவினர்கள் வந்து நலங்கெல்லாம் வைத்து முடித்திட, யாவருக்கும் இரவுணவு வழங்கப்பட்டது. வந்தவர்கள் யாவரும் புறப்பட, குணா தன் மருமகனின் கைகளை படபடப்பாக பற்றிக் கொண்டு கலங்கிய விழிகளுடன், யாசகம் வேண்டுபவர் போல் நின்றிருந்தார். எப்பேர்ப்பட்ட உயர்த்தில் இருப்பவராகவே இருந்தாலும் அவரையும் யாசகம் வேண்ட வைப்பது மகளின் வாழ்வை புதிதாக துவக்க வந்திருக்கும் அந்த ஒருவன் தான்!
ருத்ரனின் கைகளை பற்றிக் கொண்டு “மாப்பிள்ளை.. நாங்க வரோம். பொ.. பொண்ண நல்லா பார்த்துக்கோங்க. அவ பொறுப்பான பொண்ணு. தேவையில்லாம எதுவும் கோவமெல்லாம் படமாட்டா. நல்லா பா… பார்த்துக்கோங்க” என்று கண்கள் கலங்க கூற, அவர் கையின் மேல் தனது மற்றைய கையை வைத்தவன், “கண்டிப்பா மாமா. அவ என்னுடையவ. அவளை பத்திரமாவும் சந்தோஷமாகவும் பாத்துப்பேன்” என்றவன் ‘உங்களைவிட’ என்ற வார்த்தையை மட்டும் மனதிற்குள் கூறிக்கொண்டான்.
அங்கு கண்கள் கலங்க நின்றிருந்த அஞ்சிலை தன் அன்னை அத்தையிடம் நெகிழ்வாக பேசுவதைக் கண்டு மேலும் கலங்கி போக, அவளை தோளோடு அணைத்திருந்த அர்ஜுன் கண்களும் கலங்கியிருந்தது.
“ஏ அஞ்சு.. ஃபீல் பண்ணாத. தினமும் அந்த வழியா தானே வருவ” என்று அவன் அவளுக்கு மட்டுமல்லாது தனக்கும் சேர்த்து ஆறுதலாக பேசிக் கொள்ள, அவனை அணைத்துக் கொண்டு “மிஸ் யூடா அஜு” என்றாள். அதற்குமேலும் தாங்கமுடியாது அவனும் அழுதுவிட, தன் கண்ணீரை துடைத்துக் கொண்டவள் அவன் கண்ணீரையும் துடைத்து, “நல்லா படிக்கனும். அப்பா அம்மாவை நீ தான் பார்த்துக்கணும். சண்டை போடாம பொறுப்பா இரு சரியா?” என்று கூற தன் முகத்தை துடைத்தபடி தலையசைத்தான்.
தந்தையிடமும் தம்பியிடமும் எளிமையாக பேசமுடிந்துவிட்டவளால் தாயிடம் ஏதும் பேச முடியவில்லை. இருவருக்கும் ஆறுதல் சொன்னவளுக்கு தாயிடமிருந்து ஆறுதல் தேவைபட்டதாகவே உணர்ந்தாள். பெற்ற வயிர் புரிந்துகொள்ள தவறுமா என்ன?
மகளின் கன்னம் வருடி, “சந்தோஷமா இருடாமா. தினம் அம்மா பேசுறேன். நல்லபடியா அத்தை பேச்சை கேட்டு இருக்கனும்” என்று கூறி அவளை அணைத்துக் கொண்டு “எதுனாலும் அம்மாகிட்ட பேசு” என்று அவள் காதுகளில் கிசுகிசுத்தார். ‘இதை தானே எதிர்ப்பார்த்தேன்’ என்னும்படி அவள் உள்ளத்தின் உவகையும் சேர்ந்து கண்ணீராய் பொழிய சிறு கேவலுடன் அன்னையை அணைத்துக் கொண்டாள்.
பின்பு அவளை விடுத்தவர் “வரேன்டா” என்க, மனைவியிடம் வந்து அவளை தோள் வலைவில் நிறுத்திக் கொண்டவன் “நாங்க பார்த்துக்குறோம் அத்தை” என்றான். மனநிறைவான புன்னகையுடன் யாவரும் சென்றிட, மருமகளின் கண்ணீர் முகம் கண்டு, “பக்கத்துல தானேடா இருக்கு வீடு. தினமும் பார்க்கலாம். அழாம கண்ணை துடைச்சுட்டு போய் முகம் கழுவிட்டு வா. சாப்பிடலாம்” என்றார்.
சரியென்ற தலையசைப்போடு பாவை முகம் கழுவ செல்லவே, “அம்மா.. அண்ணியும் அவங்க அம்மா அப்பாவும் அழுகுறத பார்க்கவே பாவமா இருக்குமா” என்று ரூபி கூற, “என்ன செய்யடா? பொண்ணா பிறந்தா அப்படிதான்” என்றார். “அய்யோ.. நாளைக்கு நானும் உங்களைலாம் விட்டுட்டு போகனுமா?” என்று அவள் திகிலாக வினவ, வாய்விட்டு சிரித்த ருத்ரன் “நாளைக்கே கல்யாணம் பண்ணும் அளவு இன்னும் எந்த ஏற்பாடும் பண்ணலை ரூபி” என்றான்.
அதில் “அட போண்ணா” என்றவளுக்கும் சிரிப்பு வந்திட, மூவரும் சிரிக்கும் வேளை, பாவையும் வந்தாள். “வாடா” என்றவர் மூவரையும் அமர்த்தி உணவிட, உணவு வேளை அமைதியாகவே சென்றது. பின்பு முதலில் ருத்ரனை அனுப்பி வைத்து சம்பிரதாயம் படி அவளிடம் பால் செம்பை கொடுத்த மகா தன் மகளை பார்க்க, அவளும் எழுந்து தன் அறைக்கு சென்றாள்.
தன் மருமகளை பார்த்தவர், “ருத்ரன் ரொம்ப நல்லவன்டா. அவன் அப்பா இறந்ததுல இருந்தே எங்களுக்காக தான் அத்தனையும் செய்யுறான். அவனோட ஆசைகளைக் கூட இரண்டாம் பட்சமா பார்க்குறவன் அவன். அவனை சந்தோஷமா பார்த்துக்கோடா. இதைவிட நான் அவன் வாழ்க்கையில் எதிர்ப்பார்ப்பது ஏதுமில்லை. சீக்கிரமே எனக்கு ஒரு நல்ல பேரனோ பேத்தியோ கொடுத்துடு” என்க, அவரது பேச்சை ஆரம்பத்தில் சிரத்தையுடனும் கனிவுமாகவும் கேட்டவளுக்கு இறுதியில் கூறியது பகீரென்றிருந்தது.
‘அடுத்தது அதுதானே’ என்று அவள் மூளை எடுத்துக் கொடுத்ததில் மேலும் படபடப்பாக உணர்ந்தவள், தலையை மெல்ல தாழ்த்திக் கொள்ள, லேசான சிரிப்புடன் “வந்த நாளே இதெல்லாம் பேசுறாளேனு நினைக்காதமா. ஏதோ மனசுல பட்டது சொல்லிட்டேன்” என்றார். “ச..சரி அத்தை” என்று அவள் கூற, புன்னகையுடன் அவளை அனுப்பி வைத்தார்.
படபடப்புடன் அவன் அறைவாசல் வரை சென்றவள் ஒருமுறை திரும்பி தன் அத்தையை பார்க்க, சன்னமான புன்னகையுடன் ‘போடா’ என்று அவர் இதழசைக்கவும், வம்படியாக வரவழைத்த புன்னகையுடன் தலையசைத்தவள் உள்ளே சென்றாள்.
கதவை தாழிட்டுவிட்டு மூச்சை நன்கு இழுத்துவிட்டுக் கொண்டவள் திரும்ப, அவன் அறை வெறுமையாக இருந்தது. அளவான அறையதில் ஒரு கட்டில் ஒரு பெரிய பீரோ அதன் அருகே அவளது உடை அடங்கிய பெட்டிகள், கட்டிலின் ஒருபுறம் நிலை கண்ணாடி, புத்தகம் கொண்ட அலமாரி என்று சுத்தமாகவும் அழகாகவும் இருந்தது. அறையின் ஒரு மூலையில் இருந்த கதவு குளியலறைக் கதவு என்பதை கணித்தவள், அறையின் முடிவிலிருந்து சிறிய பால்கனி ஒன்று இருப்பதைக் கண்டால். பால் செம்பை மேஜையில் வைத்துவிட்டு அந்த பால்கனிக்கு சென்றவள் சுற்றிலுமிருந்த பூச்செடிகளைக் கண்டு வியந்துதான் போனால்.
பின்னே! ஓர் ஆடவனின் அறையில் இத்தனை பூச்செடிகளை கண்டால் எப்படி அதிராமல் இருப்பாள். இத்தனையையும் சிரத்தையுடன் பார்த்துக்கொள்ளும் அழகே அவனது பொறுமைமை பறைசாற்ற, இருளில் மிலிர்ந்த அந்த பவள நிலவின் ஒலியில், சுற்றிலும் இருந்த வயல்வெளிகள் பிரகாசித்தன. சில்லென்ற காற்று மண் வாசத்தினையும் அள்ளி வந்து அவள் முகத்தில் பொழிய, கண்களை மூடி அந்த இதத்தை ரசித்தாள்.
குளியலறையிலிருந்து அரவமின்றி வந்தவன், தலையை துவட்டியபடி திரும்பிப் பார்க்க, தன்னவள் தன்னறை பால்கனியில் நின்றிருந்தைக் கண்டான். சிறு புன்னகையுடன் அவள் பின்னே சென்றவன் “வியூ நல்லா இருக்குல?” என்க, திடுக்கிட்டு திரும்பியவள் அவன் மீதே மோதி நின்றாள்.
தன் நெஞ்சில் மோதி நின்ற தன்னவளைக் கண்டு சிரித்துக் கொண்டவன் “சில்(chill).. நான்தான்” என்று அவன் கூற “ம்..ம்ம்” என்றாள். அவள் தோளில் கைபோட்டு திரும்பியவன், “எனக்கு என் ரூமில் ரொம்ப புடிச்ச ஏரியா இந்த பால்கனிதான். நிலா வெளிச்சத்துல இந்த வயல் பார்க்க அவ்வளவு அழகா இருக்கும். மண் வாசனை அப்படி வரும். இங்க ஒரு ஊஞ்சல் போடனும்னு ரொம்ப நாளா யோசிச்சுட்டு இருக்கேன்” என்று கூற, அவனது தோள் வலைவில் நாணப்படபடப்புடன் நின்றவள் அவன் பேச்சில் கலந்த ரசனையில் லயித்துப் போனாள்.
சில நிமிடம் அந்த சூழலில் அமைதியாக இருந்தவன் “உள்ள போகலாமா?” என்று வினவ, மீண்டும் அந்த படபடப்பு ஒட்டிக் கொண்டது. சிறு தலையசைப்புடன் அவள் முன்னே செல்ல, பால்கனி கதவினை பூட்டிக்கொண்டு தானும் உள்ளே வந்தான். ‘அய்யோ.. என்ன பண்ணனும்? பால குடுக்கனுமா? அத்தை எதையுமே சொல்லாம அனுப்பிட்டாங்க. அட மக்கு! இதெயெல்லாமா சொல்லி அனுப்புவாங்க? கால்ல விழுகனுமோ? அதெல்லாம் பழைய காலத்து படத்துல தானே வரும்?’ என்று அவள் எண்ணம் ஓடிக்கொண்டே இருக்க, அவன் விளக்கினை அணைக்கும் சத்தம் கேட்டு தான் நிகழ்வுக்கு வந்தாள்.
அதில் ஒன்றும் புரியாது விளித்தவள் கட்டிலில் அமர, அவனோ நமட்டு சிரிப்போடு வந்து படுத்துக் கொண்டான். ‘பே’ என்று விழி பிதுங்க அவனை பார்த்தவளுக்கு நிம்மதியாகத்தான் இருந்தது. இருந்தும் தயக்கத்துடன் படுத்துக் கொண்டவள், அவனையே திரும்பி திரும்பி பார்க்க, அவனிடம் அசைவே இல்லை.
‘ஹப்பா..’ என்று பெருமூச்சுடன் அவள் திரும்ப எத்தனிக்க, அவள் கரம் பற்றி சரேலென்று இழுத்தான். அதில் விழிகள் தெரிக்க அவனைப் பார்த்தவள் மூச்சே நின்றுவிட, “ரொம்ப யோசிக்காதீங்க மேடம். ரொம்ப டயர்டா இருக்கீங்க. அன்ட் அழுதுவேற இருக்கீங்க பப்பி கேர்ள். அதான் படுக்கட்டுமேனு விட்டேன்” என்றான்.
என்ன கூறவென்றே புரியாது அவள் விழிக்க, “என்னமா?” என்றான். “ஒ..ஒன்னுமில்லை” என்று அவள் திணற, சிரித்தபடி “படு” என்றான். அவன் விட்டதும் ‘அய்யோ சாமி ஆளை விடு’ என்ற ரீதியில் அவள் திரும்பி படுத்திட தானும் அவளை தொந்தரவு செய்யாது படுத்துக் கொண்டான்.
புதுயிடம், மதியம் உறங்கிவிட்டது, புடவையை கட்டிக் கொண்டு படுத்திருப்பது என்று அவளுக்கு அத்தனை அசௌகரியமாக இருந்தது. சுத்தமாக தூக்கமே வரப்பெறாது தவிப்பாக உணர்ந்தவள் ‘முதல் நாளே எனக்கு இப்படியா இருக்கனும்? தூக்கமே வரமாட்டேங்குதே. எவ்வளவு டயர்டா இருந்துச்சு. இப்ப தூக்கம் எங்க தான் போச்சோ’ என்றபடி புரண்டு படுக்க, நழுவி விலகும் தன் புடவையை சட்டென இழுத்து சரிசெய்துக் கொண்டு ‘அய்யோ ராமா. இதுவேற’ என்று நொந்துக் கொண்டாள்.
புரண்டு புரண்டு படுத்தாள் அவன் தூக்கம் கலைந்துவிடுமோ என்று வேற பயமாக இருக்க, கண்களை விரித்து விட்டத்தை பார்த்தபடியே படுத்திருந்தாள். முதுகலை படிக்கும் வரை அம்மாவை கட்டிக் கொண்டு படுத்தவள் தனியறையில் படுக்க துவங்கியிருந்ததும் சுற்றி தலையணையை போட்டுக் கொண்டு அவற்றை கட்டிக் கொண்டு உறங்கியே பழகியிருந்தாள். தற்போது இப்படி படுப்பது அவளுக்கு இன்னும் அசௌகரியமாக இருக்க, கண்கள் கலங்கியே விட்டது.
தலைக்கு வைத்திருந்த தலையணையை எடுத்து கட்டிக்கொண்டவள் கையை தலைக்கு வைத்துக் கொண்டு படுத்திட, சில நிமிடங்களில் தூங்கியும் போனாள். நடுஇரவில் தண்ணீர் குடிக்கவேண்டி கண்விழித்த ருத்ரன் தன்னவளை திருப்பிப் பார்க்க, அவளோ கையினை தலைக்கு வைத்துக் கொண்டு, தலையணையை கட்டிப்பிடித்தபடி உறங்கிக் கொண்டிருந்தாள்.
‘அடகேடி.. என்னை கட்டிபுடிச்சுட்டு படுக்க வேண்டியவ இதை கட்டிபுடிச்சுட்டு தூங்குறியே. அட்லீஸ்ட் ஒரு தலையணை கேட்டிருந்தா எடுத்து கொடுத்திருக்கப் போறேன்’ என்று நினைத்துக் கொண்டபடி எழுந்து சென்று அலமாரியிலிருந்து ஒரு தலையணையை எடுத்து வந்து மெல்ல அவள் தலையை தூக்கி தலையணையை வைத்தான்.
தூங்கும்போது தட்டினாலும் அசைந்து கொடுக்காதவள் தான் எனினும், அத்தனை நேரம் கையை தலைக்கு வைத்துத் தூங்கியதால், எடுத்துவிட்டதும் கையில் சுரீரென்று வலியை உணர்ந்து விழித்துக் கெட்டாள். அதில் “ஸ்ஸ்.. ஓகே ஓகே” என்றவன் மெல்ல அவளை படுக்க சொல்ல, சட்டென விழித்துக் கொண்டவள் திருதிருவென விழித்தாள்.
“ஏம்மா! ஒரு தலைகாணி கேட்டா தரமாட்டேனா? இப்படி கையை வச்சுட்டு படுத்திருக்க. இப்ப பாரு கை வலிக்குது” என்று அவன் சாதாரணமாக கேட்டதே இவளுக்கு அதட்டுவது போல் இருக்க, அமைதியாக தலைகுனிந்தாள். அந்த இரவு வெளிச்சத்தில் அப்போதே அவளை ஆராய்ந்தவன், புடவை நெகிழ்ந்து தலைமுடி கலைந்து, சோகத்தில் மியாவென சுருங்கிய முகம் என அவளை பார்க்க பாவமாகவும், சிரிப்பாகவும் இரசனையாகவும் இருந்தது.
அத்தனை நேரம் திட்டிக்கொண்டிருந்தவன் அமைதியாகவும் நிமிர்ந்தவள் அவன் பார்வையை உணர்ந்து தன்னை பார்க்க, திடுக்கிட்டுப் போனாள். சட்டென நாணம் கொண்ட பெண் தன் உடையை சரிசெய்ய, சிரித்தபடி படுத்தவன் “ஏ கேடி.. அமைதியா படுத்துடு. கன்னத்தை கடிச்சிடுவேன்” என்றான்.
மீண்டும் மலங்க மலங்க விழித்தவள் படுத்துக் கொள்ள, அவள் கையினை இழுத்து தன் நெஞ்சில் வைத்துக் கொண்டவன் ‘ஸ்ஸ்’ என அவள் சினுங்கியதில் “தேவையா இது?” என்றுவிட்டு திரும்பிப் படுத்தான்.
அவனையே விழி அகற்றாது பார்த்தவள், இந்த ஒற்றை நாளில் அவன் தன்னுள் ஏதோ மாற்றம் நிகழ்த்தியதை உணர, அவள் இதழ்களில் மெல்லிய புன்னகை உதயமானது.
-வரைவோம் 💞