Loading

ஓவியம்..01

அழகியதோர் காலைப்பொழுது… மார்கழி மாத காலைப் பொழுதை மெருகேற்றும் வகையில் தன் வெண்புகையை ஊரெங்கும் பரப்பிவிட்டு, தன் தோழியான மேகத்தின் துணை கொண்டு அந்த சூரியனையே மறைத்திருந்தது அக்குளிர்.

ஆனால் மெல்லியவள் தேகத்தை ஊடுறுவி வருவதற்கு அந்த தங்க கதிரோனுக்கு கடினமா என்ன? தன் பளபளத்த கதிரொளியால் மெல்ல மெல்ல வெண்புகையை தூசு போல் தட்டிவிட்டு பூமியின் ஜீவவுயிர்களுக்கு அந்த அழகிய தொடக்கத்தை எடுத்துக்காட்டியது சூரியன்! 

தன்னறை மெத்தையில் குளிருக்கு அணைவாக போர்வையை தலைவரை போர்த்திக் கொண்டு தலையணையை கட்டிக் கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில், தன் கல்லூரிப் பேராசிரியருடன் சண்டை பிடித்துக் கொண்டிருந்தாள் அவள். தூக்கத்தில் சண்டையா? ஆம் தூக்கத்தில் தான். ஆனால் தூக்கத்தில் பிறக்கும் புத்துலகமான கனவு லோகத்தில் பலத்த சண்டையில் ஈடுபட்டிருந்தாள். பின்னே! நேரில் சண்டையிட்டாள் இனி கல்லூரி என்பதே கனவாகிவிடுமல்லவா?!

(சரி சரி.. நல்ல உறக்கத்தில் எழுப்பினாள் அடித்துவிடுவாள். இவள் எழுவதற்குள் ஒரு ஹோம் டூர் சென்று வருவோம்)

சலசலத்துக் கொண்டிருந்த அந்த தென்காசி மாவட்டத்தின் குட்டித் தெருவில் பல்வரிசை போல் அனிவகுத்திருந்த அழகிய வீடுகளில் ஓர் வீடு ‘அமிர்தா இல்லம்’ என்ற பெயர்ப்பலகையை தாங்கி இருந்தது‌. அதற்கு பக்கத்து வீடு தான் நம் நாயகியுடைய வீடு. ஒரு சமையலறை, படுக்கையறை, கூடம், மாடியில் இரண்டு அறை, அதற்கு மேல் தளத்தில் வத்தல் மற்றும் வடகம் காய வைப்பதற்கு ஓர் மொட்டை மாடி கொண்ட அளவான வாடகை வீடு அது.

தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணி புரியும் காயத்ரி மற்றும் தனியார் வங்கி ஒன்றில் கிளார்காக பணி புரியும் குணசேகரனின் அழகிய கூடதில் அவர்களுக்கு அரும் பெரும் முத்தாய் ழுளைத்த செல்வங்களே அஞ்சிலை மற்றும் அர்ஜுன்.

அஞ்சிலை முதுகலை மருந்தகம் (pharmacy) இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவியாக தன் படிப்பை தொடர்ந்து கொண்டிருக்க, அர்ஜுன் இளநிலை பொறியியல் மூன்றாம் ஆண்டு மாணவனாக தனது பயணத்தை தொடர்ந்து கொண்டுள்ளான்.

இது தான் இவர்களது குடும்பம் என்று எளிதாக கூறிவிட இயலாது. அம்மா வழி பாட்டி, ஒரு மாமா, அவரது ஒரே மனைவி மற்றும் பதினொன்றாம் வகுப்பு பயிலும் ஒரே மகள் என்று சுருக்கமாக முடிந்த ஒரு சொந்தமும், அப்பா வழியில் இரண்டு அத்தைகள் ஒரு சிற்றப்பா என சிறு பெத்தை(பெரிய) குடும்பச் சொந்தமும் உள்ளனர்.

(சரி நம்ம குடும்ப வரைபடத்தை மூடிவச்சிட்டு அந்த ஸ்லீபிங் பியூட்டிய போய் பார்ப்போம்)

அங்கு குளிருக்கு அணைவாக உறங்கிக் கொண்டிருந்தவள் போர்வையை விருட்டென உருவி, “ஏ கும்பகர்னி (அதாவது பழைய காலத்து ஸ்லீபிங் பியூட்டி). மணிய பாத்தியாடி? காலேஜ் போகனும். இதுக்கு தான் நைட்டே சீக்கிரம் படு சீக்கிரம் படுனு தலைபாடா அடிச்சுக்கிட்டேன். உடனடுத்த பையன் காலைல எவ்வளவு சீக்கிரம் எழுந்து படிச்சு காலேஜுக்கு ரெடியாகுறான். இத்தனைக்கும் அவனுக்கு மதியம் தான் எக்ஸாம். நீயும் தான் இருக்கியே” என்று கத்தியபடியே போர்வையை அவர் மடித்து வைக்க, மெல்ல அசைந்து கொடுத்து திரும்பி படுத்தாள்.

இந்த தூங்கும் முகத்தினை(மூஞ்சியை) அவள் அன்னையிடமிருந்து காக்க ஆண்டவன் தான் வரவேண்டும் என்றாலும் அவர் அதற்கு தயாராகவில்லை. ஏனென்றால்…

“அந்த கடவுள் இருக்காரே.. போயும் போயும் உன்ன போல தூங்க மூஞ்சிய எனக்கு கொடுத்து தினமும் என் தொண்டைய வரண்டு போக வைக்குறார். அவருக்கு அச்சோ அம்மானு எவ்வளவு பூஜை பண்ணிருப்பேன். நல்லா குடுத்தார் புருஷனும் புள்ளகுட்டியும்” என்றவர் பேச்சில் மேல்லோகத்திலிருந்து உறங்குபவளை எட்டிப்பார்த்து ‘பாதகத்தி.. என்னால வீட்டுக்குள்ள மழையடிக்க முடியாதுனு தெனாவட்டுல எப்படி தூங்குறா பாரு. இதுல உங்கம்மா மூச்சுக்கு முன்னூறு தடவை என்னைய போட்டு உருட்டுறா’ என்று புலம்பிக் கொண்டார்.

மகள் முதுகிலியே இரண்டு போட்டவர் “இப்ப எழப் போறியா இல்லையா?” எனக் கத்த தட்டிகொடுத்தது போல் தடவிக் கொடுத்துக் கொண்டு எழுந்து எட்டூருக்கு கோட்டாவி விட்டபடி சோம்பல் முறித்தாள். அன்னையின் பாசமான முகம் கண்டு பிரகாசித்து சிரித்தவள் “எந்தா காயூ? காபி எவ்வட? நியான் கலைச்சு போயி. ஒரு காபி குடிச்சா தான் என்ட முழி தெளியும்” என்று அறியாத மலையாளத்தை கொலை செய்த திருப்தியுடன் கூற, காதலான பார்வையுடன் “எழுந்தது எட்டு மணிக்கு இதுல அது ஒன்னு தான் குறை. பரிட்சை இருக்குடி‌. போய் பல்ல கில்ல தேய்ச்சு குளிச்சிட்டு வா” என்றார்.

“அட.. சொல்ல மறந்துட்டேனா?” என்றவள் தன் கட்டில் அருகே இருந்த கப்போர்டை திறந்து ஒரு மாத்திரையை எடுத்து அன்னையிடம் நீட்ட, “என்னதிது?” என எரிச்சலுடன் வினவினார்‌. “பிரஷர் மாத்திரை ம்மா. இன்னிக்கு காலைல காலேஜ் இல்லை மதியம்தான்னு நா சொல்ல மறந்ததை சொல்லி அதை கேட்டு நேத்தே சொல்ல என்னனு நீ கடுப்பாகி அதுக்கு நாலு திட்டு திட்டி டென்ஷனாகி உன் பிபி ஏறிட்டா என்ன செய்ய? அதான் இந்த மாத்திரை” என நீலமாக பேசி அப்பாவியாய் கண் சிமிட்டிய மகளை முறைக்க முயன்று சிரித்து விட்டார் அந்த அப்பாவி/அடப்பாவி அன்னை.

தலையணையை தூக்கி அவள் மீது வீசியவர் “போய் ரெடியாகிட்டு வா. சாப்பாடு எடுத்து வைக்கிறேன். சாப்பிட்டுட்டு ஒரு க்லான்ஸ் பார்த்துட்டு கிளம்பு” என்று கூறிவிட்டுப் போக ‘ஷப்பா’ என்ற பெருமூச்சுடன் சாய்ந்தாள். தன் அலைப்பேசியை எடுத்துப் பார்த்தவள் ‘மணி ஏழு நாப்பது தானா? எட்டுனு சொல்லி எழுப்பினாங்க. ம்ம்.. டாக்டிக்கல் மம்மி! சரி நமக்கு நல்லது தானே’ என மனதோடு பேசிக் கொண்டவள் சென்று காக்காய் குளியலை முடித்து தாயாராகி தனது பையை சரிபார்த்தபடி கீழே இறங்கினாள்.

மணி எட்டு பத்து என்பதை கண்டவள் சென்று ஒரு டப்பாவில் உணவை அடைக்க “ஏ என்ன அஞ்சு?” என காயத்ரி கேட்டார்‌. அமைதியாக உணவை அடைத்துத் தன் பையில் வைத்தவள் “காலைல உன்கிட்ட எக்ஸ்டிரா திட்டு வாங்க வேணாமேனு மதியம் காலேஜ்னு சும்மா சொன்னேன். காலைல தான் காலேஜ். நா வரேன்” என்றவள் அடுத்து அன்னையின் தீப்பார்வையை நோக்க அங்கில்லை. வெளியே பால்கனி செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த தம்பியின் தலையை கலைத்து “பைடா உடன் பிறப்பு” என்று அவள் கூற “ஆல் தி பெஸ்ட் அஞ்சு” என்றான்.

சிறு புன்னகையுடன் கிளம்பியவள் அடித்து பிடித்து பேருந்து நிறுத்தத்திற்கு வந்து சேர, அவளை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்த அவளது உற்ற தோழி சாய்ஸ்ரீ “அடி பலமோ?” என்றாள்.

அதில் ஒரு வெற்றிச் சிரிப்புடன் தன் இல்லாத காலரை தூக்கி விட்டுக்கொண்டு “பதில் பேச கூட கேப் கொடுக்காம பறந்து வந்துட்டோம்ல” என அஞ்சு கூற வாய்விட்டு சிரித்த சாய் “பஸ்ஸ விட்டுடுவியோனு நினைச்சேன்” என்றாள்.

“ஆத்தி.. உன் எண்ணம் போன போக்க பாரு. விளக்கெண்ணை” என அஞ்சு திட்டுகையில் பேருந்து வந்துவிட அடுத்த ஒரு மணி நேர பயணத்தில் உண்டு முடித்து படித்ததை ஒருமுறை வாசித்துப் பார்த்துக் கொண்டாள்.

அங்கு அந்த இயற்கை உரம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் கைகளில் கையுறை, முகத்தினில் மாஸ்க் மற்றும் தலைகவசம் அணிந்துகொண்டு உரம் தயாரிக்கும் பிரிவில் தனது பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தான் ருத்ரன். 

இருபத்தி எட்டு வயது இளைஞனவன் பார்ப்பதற்கு சிக்ஸ்பேக்ஸ் தேகம் கொண்ட ஜிம் பாடியெல்லாம் இல்லை என்றாலும் ஆறடிக்கு சற்று கூடுதலான உயரம், திராவிட நிறம், உயரத்திற்கு ஏற்ற உடல் வாகு என கச்சிதமாக தான் இருந்தான். பல பெண்களால் கவரப்பட்ட கமர்கட்டில்லை என்றாலும் நாலு பெண்களையாவது நொடி பொழுது திரும்பி பார்க்க வைக்கும் அழகில் இருப்பவனது தோற்றத்தை சுருக்கமாக சொல்லப்போனால் சாதாரணமான இயற்கையான அழகு கொண்ட ஆண்மகன்.

உடன் பணிபுரிபோர் அனைவருக்கும் தன் நல்ல பண்பாலும் கலகலப்பான குணத்தாலும் நெருக்கமானவனாகவே இருப்பவன், தப்பு என்று வந்துவிட்டால் அதை தட்டிக் கேட்கவும் தயங்க மாட்டான். நேரத்தின் ஓட்டத்தோடு தன் பணியை முடித்து வெளியே வந்தவன் “மூர்த்தி அண்ணா… இன்னும் கிளம்பலையா?” என்று உடன் பணி புரிபவரிடம் வினவ “இதோ கிளம்பிட்டேன் தம்பி” என்றார்.

சிறு தலையசைப்புடன் விடைபெற்று தனது வண்டியில் வீட்டை அடைந்தவன் வீட்டு வாசலில் கைகால்களை கழுவிவிட்டு உள்ளே வர, “ருத்ரா.. என்னப்பா இன்னிக்கு இவ்ளோ நேரமாச்சு? மதியம் சாப்பிட கூட வரலை?” என்று வாஞ்சையுடன் வினவினார், மகாலட்சுமி.

“கொஞ்சம் வேலை ம்மா.. முடிச்சுட்டு வரலாம்னு தான்” என்றவன் சென்று தட்டை எடுத்து வந்து அமர, மகனுக்கு உணவை பரிமாறினார்‌. “ரூபி வந்துட்டாளா ம்மா?” என்று ருத்ரன் வினவ “நானெல்லாம் சாப்டு முடிச்சு தூங்கி எழுந்தாச்சு” என்றபடி வந்தாள் அவனது செல்ல தங்கை ரூபினி.

பேசி சிரித்து ஒருவரை ஒருவர் வாரிக்கொண்டே அவனது உணவு வேளை செல்ல, மகன் மற்றும் மகளின் கலகலத்த பேச்சில் சிரித்துக் கொண்டே அவர்களை பாசத்துடன் பார்த்தார் மகாலட்சுமி.

மகாலட்சுமி-கதிர்வேலன் தம்பதியரின் அழகிய வாழ்வின் செல்வங்களே ருத்ரன் மற்றும் அவனைவிட ஆறு வயது இளையவள் ரூபினி. ருத்ரன் விவசாயம் மற்றும் உரம் தயாரிப்பில் தனது படிப்பை முடித்துவிட்டு ஓர் உரம் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிகின்றான். 

சொந்தமாக ஒரு இயற்கை உரக்கடை துவங்க வேண்டும் என்பது தான் அவனது ஆசை. ஆனால் கல்லூரி காலத்திலேயே தந்தையை இழந்தவனுக்கு குடும்பத்தின் பொறுப்பு மொத்தமும் தனதாகிட, சொந்த நிலம் வைத்து விவசாயம் செய்து கொண்டிருந்த தந்தையின் நிலத்தையே குத்தகைக்கு விட்டவன் கல்லூரி நேரம் போக பகுதி நேர வேலையும் செய்து குடும்பத்தை நடத்தி வந்தான். நான்கு வருடங்கள் முன்பு வேலை கிடைத்து அளவான சம்பாத்தியத்தில் அழகான குடும்பத்தை நடத்தி வருபவன் தன் தங்கையையும் அவள் ஆசைப்படி அகௌன்டன்சி படிக்க வைத்து பார்த்துக் கொள்கிறான்‌.

“ஏம்ப்பா‌‌.. நம்ம விஜி பாப்பாக்கு மாப்பிள்ளை பார்த்திருக்காங்க. பொண்ணு பார்த்துட்டு போயிருக்காங்களாம். நம்ம விஜிக்கும் புடிச்சிருக்காம். அவங்க வீட்லயும் சம்மதமாம். அடுத்த மாசம் நிச்சயம் வச்சுக்க போறதா சொல்லிருக்காங்க ப்பா. உங்கப்பா இருந்தா செய்யுறதை நம்ம செய்யனும்டா கண்ணா” என்று மகா கூற “ஆமா.. இப்ப அது ரொம்ப அவசியம் தான்” என உச்சகட்ட கோபத்துடன் கத்திவிட்டு விருட்டென ரூபிணி எழுந்து சென்றாள்.

தங்கையை புரியாமல் பார்த்தவன் அன்னையை பார்த்து ‘என்ன ம்மா’ என்க அவரும் மகனிடம் இதுபற்றி பேச விரும்பாததால் “அது அவகிடக்குறாபா. உங்க அத்தை வந்து காலைலயே எல்லாம் பேசிட்டு பத்திரிகை அடிச்சிட்டு முறையா கூப்பிடுறேன்னு சொல்லிட்டு போயிருக்காங்க” என்றார்.

“சரி அம்மா. பண்ணிடலாம்” என்றவன் சென்று கை கழுவி விட்டு தங்கையின் அறைக்கதவை தட்ட “வாவா” என உள்ளிருந்தபடி கூறினாள். உள்ளே வந்தவன் “ஏ என்ன ரூபி? உனக்கும் விஜிக்கும் எதும் சண்டையா?” என்று வினவ “பச்.. ஏண்ணா உனக்கு விஜிய கட்டிவைக்குறதா அத்தை முன்ன பேசினதுலாம் தெரியாதா? எதுக்கு தெரியாத மாதிரியே எக்ஸ்பிரஷன் கொடுக்குற?” என்று வினவினாள்.

“ஏ லூசு.. அதுக்கா இவ்வளவு கோபம்? அம்மா முகத்த பார்த்தயில்ல? இப்படியா முகத்துல அடிச்ச மாதிரி பேசிட்டு எழுந்து வருவ?” என பொருப்பான அண்ணனாக தங்கையை கடிந்து கொள்ள, முகத்தை தொங்க போட்டுக் கொண்டு “சாரி” என்றாள்.

சிரித்தபடி அவளருகே அமர்ந்தவன் “ஏ ரூபி.. அத்தை தான் பேசினாங்க. நான் விஜிய அப்படி பாக்கவே இல்லை” எனக் கூற “அட போ அண்ணா இதுலாம் பழைய டயலாக். கிராதகி அத்தான் அத்தான்னு வந்து உருகிட்டு அப்டியே டேக்கா கொடுத்துட்டா” என்றாள்.

“ரூபி.. இப்படிலாம் யாரோட கேரக்டரையும் தப்பா பேசக்கூடாது” என மீண்டும் சற்று காட்டமாக ருத்ரன் கூற “அண்ணா.. உனக்கே தெரியும் நான் விஜியோட எவ்வளவு கிளோஸ்னு. அத்தை பொண்ணுங்குற ஒட்டுதலைவிட அவ எனக்கு ஒரு நல்ல பிரண்டு போல அண்ணா. அத்தை விஜிய உனக்கு கட்டித்தர ஆசை இருக்குனு சொல்லவும் எனக்கு ரொம்ப ஹாப்பியா இருந்தது. ஆனா காலைல அத்தை வந்து பேசினதா அம்மா சொல்லவும் ரொம்ப கடுப்பாகிடுச்சு. அதான் விஜிக்கு ஃபோனடிச்சேன்” என்றாள்.

“ஏதே! ஃபோனடிச்சியா? ஏ என்ன சொன்ன ரூபி?” என்று ருத்து வினவ “என்ன விஜி அத்தை இப்டி சொல்றாங்கனு கேட்டா ஆமாடினு ரொம்ப ஹாப்பியா சொல்றா. அவங்க வீட்டுக்கு ஒரே பையனாம் நல்ல சம்பாத்தியமாம்” என்று அவள் கூறுகையிலேயே அவனுக்கு தன்னை ஏன் தவிர்த்தனர் என்ற காரணம் புரிந்துபோனது.

“அவ சந்தோஷமா பேசவும் எனக்கு சண்டை போட தோனலை. சரினு வச்சுட்டேன்” என்று அவள் அண்ணன் தோள் சாய, தங்கை தோளில் கை போட்டு “விடு ரூபி. நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பி ஒன்னும் இப்படி நடக்கலை. அப்பறம் என்ன பிரச்சினை?” என்றான்‌.

“புரியாத போல பேசாத அண்ணா. உனக்கு ஏன் கல்யாணம் பண்ணி வைக்கலை? காரணம் நான் தான்” என்று ரூபி கூற “ஏ என்ன லூசு போல பேசுற?” என்றான். அவள் கண்களில் மெல்லிய நீர்ப்படலம் உருவாக, “இல்லை அண்ணா. நான் தான். அ..அப்பா இருந்திருந்தா இப்படிலாம் ஆகிருக்குமா அண்ணா? அப்பா இல்லை, ஒரே பையனோட சம்பாத்தியம், அதுல முக்கிய காரணம் என் படிப்பு செலவு. எனக்கு நாளை பின்ன செய்ய வேண்டிய அத்தனை செலவும் மொத்தம் நீ தான் செய்யனும். அதான் பிரச்சினை அண்ணா. என் படிப்பு செலவு இருக்குறதால தான நீ கூட இன்னும் உரக்கடை தொடங்காம இருக்க?” என்றவளுக்கு கண்ணீர் கன்னம் தாண்டி வழிந்தது.

“ஏ ரூபிமா.. எதுக்கு இப்படிலாம் சொல்ற?” என்று அவன் வினவ “இல்ல அண்ணா.. உன் சம்பாத்தியம் நம்ம குடும்பத்துக்கு போதுமானதா தான் இருக்கு. ஆனா நாளைக்கு உனக்கு ஒரு கல்யாணம்னு வரும்போது கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணவேண்டி வரும். அதான் அவங்க உனக்கு விஜிய கட்டி வைக்கலை. எனக்கு ரொம்ப கில்டியா இருக்கு அண்ணா” என்று அழுதாள்.

தங்கையை மென்மையான புன்னகையுடன் பார்த்தவன் “ரூபி.. அவங்க யோசிச்சதுல என்ன தப்பு இருக்கு? யோசிக்காம கல்யாணம் பண்ணி கொடுத்துட்டு நாளைக்கு எதுவும் பிரச்சினை வர்றதுக்கு இது எவ்வளவு நல்ல முடிவு? நாளைக்கு எல்லார் நிம்மதியும் கெடாம இருக்கனும் தானே? நீயே யோசி ரூபி.. நாளைக்கு உன்னை கட்டிக்கொடுக்கும் இடம் உன்னை வைத்து பார்த்துக்குற அளவு வசதிலாம் இருக்கனும்னு எதிர்ப்பார்ப்போம் தானே?” என்க,

அவனை நிமிர்ந்து பார்த்தவள் “ப்ளீஸ் அண்ணா. அப்படி வசதிய பார்த்து ஒருத்தரோட மனசை காயம் படுத்திடாத. உன்னை போல நல்ல குணம் இருந்தா போதும் அண்ணா. என்னை கஷ்டபட்டு படிக்க வைச்ச உனக்கு என்னோட சம்பாத்தியத்தை கொடுக்க அவங்க சம்மதிக்கனும் அண்ணா” என்றாள்.

தங்கையின் கண்ணீரும் பேச்சும் அவன் கண்களையும் கலங்கவே செய்தது.. இருந்தும் கண்ணீரை கண்ணோடு வைத்துக் கொண்டு “ரூபி.. நீ ஏதேதோ யோசிக்குற. எனக்கென்னமோ இந்த டாடீஸ் லில் அப்பா நியாபகம் வந்து அழுகுறானு தோன்றுது” என பேச்சை மாற்ற, அவனை அணைத்துக் கொண்டு “நோ.. அதான் நீ இருக்கியே” என்றாள்.

அத்தனை நேரம் கண்ணோடு இருந்த கண்ணீர் அவன் கன்னத்தை இன்பமாய் தீண்ட, தங்கையின் தோள் தட்டி “ஏ ரூபி.. இது நம்ம விஜி கல்யாணம். இப்படிலாம் எதாவது யோசிச்சா உன்னோட பெஸ்ட் பிரண்டு மேரேஜ எப்படி என்ஜாய் பண்ணுவ?” என்க, அண்ணனை நிமிர்ந்து பார்த்து கண்ணீரை துடைத்தவள் “உனக்கு நான் பார்க்குறேன் அண்ணா. விஜிய விட ரொம்ப நல்ல பொண்ணா பார்க்குறேன்” என்றாள்.

சிரித்தபடி முகத்தை துடைப்பது போல் தன் கண்ணீரையும் துடைத்தவன் ‘சரி’ என்பது போல் தலையை ஆட்ட “லவ் யூ அண்ணா” என்று அவனை கட்டிக் கொண்டாள்.

-வரைவோம்…💕

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
8
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்