
அத்தியாயம் – 36
”நித்திலா!” என்ற விக்ராந்தின் குரலில் அவள் சட்டெனத் திரும்பினாள். மாடியிலிருந்து ஒவ்வொரு படியாக இறங்கி வந்த விக்ராந்தின் முகத்தில் இப்போது கெஞ்சல் இல்லை, மாறாக ஒருவித எகத்தாளமும், இறுக்கமும் கலந்திருந்தது.
அவளுக்கு நேர் எதிரே வந்து நின்றவன், “டிவோர்ஸ் ஒப்பந்தப்படி உன்னோட நாட்கள் முடிஞ்சு போச்சு, அதை நான் ஒத்துக்கிறேன். ஆனா, அந்த ரூல்ஸை நீ மறந்துட்டன்னு நினைக்கிறேன்,” என்றான் கூர்மையான பார்வையுடன்.
”என்ன… என்ன ரூல்ஸ்?” என நித்திலா புரியாமல் கேட்க, “டிவோர்ஸ் பேப்பரை படிச்சுட்டுத்தானே அன்னைக்கு நீ கையெழுத்துப் போட்ட?” எனத் திரும்பக் கேட்டான் விக்ராந்த்.
இவன் எதை பற்றி சொல்கிறான் என புரியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்….
”நீ ஆறு மாசம் முடிஞ்சு இந்த வீட்டை விட்டுப் போகும்போது, எனக்குச் சொந்தமான ஒரு குண்டூசியைக் கூட எடுத்துட்டுப் போகக் கூடாதுன்னு அந்தப் பேப்பர்ல தெளிவா எழுதி இருந்தது. அதை மறந்துட்டியா?” என அவன் கேட்க, நித்திலா அவனை ஏளனமாகப் பார்த்தாள்.
”நான் உங்ககிட்ட இருந்து எதையும் எடுத்துட்டுப் போகல. இந்தப் பையில இருக்கிறது நான் என் வீட்ல இருந்து கொண்டு வந்த துணிகள் மட்டும்தான். வேணும்னா செக் பண்ணிக்கோங்க,” என்றாள் அசால்ட்டாக.
”எனக்குச் சொந்தமானது இந்தப் பைக்குள்ள இல்லை நித்திலா… உன்கிட்டதான் இருக்கு!” என்று அவன் பொறுமையாகச் சொல்ல, நித்திலா குழப்பத்துடன் தன்னை ஒருமுறை பார்த்துக் கொண்டாள். அவளுக்குத் தாலிதான் நினைவுக்கு வந்தது.
“இந்தத் தாலியைச் சொல்றீங்களா?” எனக் கேட்டாள். ”இல்லை… அந்தத் தாலியைக் கட்டுனது நானா இருக்கலாம், ஆனா அது உன் பாட்டி கொடுத்தது, உன் அம்மாவோட தாலி. அது எனக்குச் சொந்தமில்லை,” என்றான் விக்ராந்த்.
“பின்ன வேற என்ன என்கிட்ட உங்களுக்குச் சொந்தமானது இருக்கு?” என அவள் ஆவேசமாகக் கேட்க, ”என்னோட குழந்தை!” நிதானமாகச் சொன்னான் அந்த ஒரு வார்த்தையை…
அவன் சொன்னதைக் கேட்டதும் நித்திலாவிற்குத் தூக்கி வாரிப்போட்டது. ‘இவனுக்கு எப்படித் தெரிந்தது?’ என்ற அதிர்ச்சியில் அவள் அப்படியே கல்லாகச் சமைந்து நின்றாள். சுற்றியிருந்த குடும்பத்தினர் ஒருவருக்கு ஒருவர் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டனர்.
”என்ன… என்ன உளறுறீங்க?” என நித்திலா தடுமாற்றத்துடன் கேட்க, விக்ராந்த் அவள் கண்களை நேருக்கு நேர் பார்த்து, “என்னோட குழந்தை உனக்குள்ள வளர்ந்துட்டு இருக்கு. எனக்குச் சொந்தமான குழந்தையை என்கிட்ட இருந்து எப்படி நீ பிரிச்சு எடுத்துட்டுப் போகலாம்?” எனத் தன் கணீர் குரலில் கேட்டான்.
”நீங்க சொல்ற மாதிரிலாம் எதுவும் இல்லை, நான் போறேன்,” என அவள் நகர முயல, அவளது கரம் பற்றித் தடுத்த விக்ராந்த். “என் குழந்தையை என்னிடமிருந்து பிரிக்க உனக்கு உரிமை இல்லை!” என அழுத்தமாகச் சொன்னான்.
”அது உங்களுக்கு மட்டும் குழந்தை இல்லை, என் குழந்தையும் கூட! அந்தக் குழந்தைக்கு நீங்க உரிமை கொண்டாட முடியாது. அது எனக்கு மட்டுமே சொந்தம்!” என நித்திலா சீறினாள்.
“என் குழந்தை மேல நான் உரிமை கொண்டாட கூடாதா?” என்றான் நக்கலுடன்..
”ஆரம்பத்துல குழந்தை வேணாம்னு சொன்னவர் நீங்க. ஆனா நான் தான் குழந்தையோட மகத்துவத்தைச் சொல்லி, எனக்கு ஒரு குழந்தை வேணும்னு நினைச்சேன். எனக்காகக் கடவுள் கொடுத்த வரம் இது!” என்றாள் நித்திலா. ஆனால் விக்ராந்த் விடுவதாக இல்லை. “நீ என்ன சொன்னாலும் இந்தக் குழந்தை என்னோடது. என் குழந்தையை யாருக்காகவும் நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்!” என்றான் பிடிவாதமாக.
”குழந்தையை ஒரு காரணமா காட்டி என்னை உங்க கூடவே வைச்சுக்கலாம்னு தப்புக் கணக்கு போடாதீங்க விக்ராந்த்! என்னால உங்க கூட இருக்கவே முடியாது!” என அவள் உச்சக்கட்டக் கோபத்தில் கத்தினாள்.
“சரி… தாராளமா நீ போ. ஆனா என் குழந்தையை என்கிட்டக் கொடுத்துட்டுப் போ!” என்றான்
”ஃபைன்… குழந்தை பிறக்க இன்னும் எட்டு மாசம் இருக்கு. பிறந்ததும் சொல்லி அனுப்புறேன், வந்து வாங்கிட்டுப் போங்க,” என அங்கிருந்து தப்பித்தால் போதும் என்ற வேகத்தில் சொன்னாள் நித்திலா. ஆனால் விக்ராந்த் அடுத்த அடியை வைத்தான். “எட்டு மாசம் என்னால என் குழந்தையைப் பிரிஞ்சு இருக்க முடியாது. வேணும்னா குழந்தையைப் பெத்து கொடுத்துட்டு நீ போ!” என்றான் அவளை இந்த வீட்டை விட்டு போகவே விட கூடாது என்ற ஒரே எண்ணத்தில்…
”என்னால உங்க கூட இருக்க முடியாது. நான் என் முடிவுல உறுதியா இருக்கேன்,” என அவள் மீண்டும் வெளியேற முயல, “அப்போ நானும் என் குழந்தையைப் பிரியக்கூடாதுங்கிற முடிவுல உறுதியா இருக்கேன்!” என்றான் விக்ராந்த்.
”உங்ககிட்ட நின்னு ஆர்கியூ பண்ண விரும்பல, நான் போறேன்!” என அவள் வாசலை நோக்கி விறுவிறுவென நடக்க,
“கோபால் அண்ணா… கதவைச் சாத்துங்க!” விக்ராந்தின் அதிகாரக் குரல் ஒலிக்க, வீட்டின் வெளிக்கதவு படாரென மூடப்பட்டது.
”நீங்க செய்யறது எதுவும் சரியில்லை, என்னை முதல்ல போக விடுங்க!” என நித்திலா கத்த, “முடியாது… நீ இங்கதான் இருந்தாகணும்!” என விக்ராந்த் உறுதியாகச் சொன்னான்.
”நான் போலீஸ் கிட்ட போவேன், தேவைப்பட்டா கோர்ட்டுக்கும் போவேன்! டிவோர்ஸ் ஆன பிறகும் ஒரு பெண்ணை இப்படித் தடுத்து வைச்சிருக்கீங்களேன்னு எல்லார் கிட்டயும் நியாயம் கேட்பேன்,” என நித்திலா எச்சரித்தாள்.
ஆனால் விக்ராந்த் மிகவும் தெளிவாக இருந்தான். “தாராளமா போய் நியாயம் கேளு… ஆனா நீ எங்கே போனாலும் இங்கதான் திரும்பி வரணும். ஏன்னா என் குழந்தை உனக்குள்ள இருக்கு! சட்டப்படி எனக்கு சொந்தமான எதையும் என் அனுமதி இல்லாம உன்னால எடுத்துட்டுப் போக முடியாது. இதே நீ நான் சொல்றதைக் கேட்டு நடந்தா, இன்னும் எட்டு மாசத்துல நீ உன் விருப்பப்படி இங்கிருந்து போகலாம். அப்போவும் உனக்கு என் கூட வாழ விருப்பம் இல்லைன்னா நான் தடுக்க மாட்டேன். ஆனா இப்போ நீ எவ்வளவு தான் பிடிவாதம் பண்ணுனாலும் உன்னை நான் போக விட மாட்டேன்!” என்றான்.
கோபத்தின் உச்சிக்கே சென்ற நித்திலா, “ச்சே… ஏன் தான் உங்ககிட்ட குழந்தையைக் கேட்டேனோன்னு இப்போ வருத்தமா இருக்கு! நான் மட்டும் குழந்தை உண்டாகாம இருந்திருந்தா நிம்மதியா வெளியேறியிருப்பேன். நீங்க கொடுத்த குழந்தை கூட இப்போ எனக்குச் சுமையாத் தெரியுது!” என சீறினாள்..
நித்திலாவா இப்படிப் பேசுகிறாள்? என அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். விக்ராந்தின் கண்கள் வலியால் சுருங்கின.
பேசிய பின்புதான் நித்திலாவிற்கு அந்த வார்த்தையின் வீரியம் புரிந்தது. தன் உயிரைப் பற்றிக் கூடக் கவலைப்படாமல், தன் விலா எலும்பு உடைந்தாலும் பரவாயில்லை என்று சுமக்கத் துணிந்த குழந்தையை, கோபத்தில் ‘சுமை’ என்று சொல்லிவிட்டோமே என அவளது கண்கள் கலங்கின.
விக்ராந்திற்கு அவள் தன் மீதான கோபத்தில்தான் இப்படிப் பேசுகிறாள் என்று புரிந்தாலும், அந்த வார்த்தைகள் அவன் மனதை ஆழமாகக் காயப்படுத்தின. அவள் வார்த்தைகள் அவளையும் காயபடுத்திருக்கு என்பதை உணர்ந்தவனுக்கு வலியோடு கூடிய பெருமூச்சு ஒன்று வெளிவந்தது…
அவளை தன் வாழ்விலிருந்து அனுப்பவும் அவன் தயாராக இல்லை, எனவே,.. “நீ என்ன சொன்னாலும் உன்னை நான் போக விடமாட்டேன்,” என மீண்டும் அழுத்தமாகக் கூறினான்.
விழிகளை துடைத்துக் கொண்டவள், மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு… “என்னை நீங்க போக விடலன்னா, நான் ஒரு சொட்டுத் தண்ணி கூட குடிக்க மாட்டேன்! பார்க்கலாம்… இன்னைக்கு நீங்களா நானான்னு!” எனச் சவால் விட்டுவிட்டு சோபாவில் அமர்ந்து கொண்டாள்.
’பார்க்கலாம்… நீ எவ்வளவு நேரம்தான் இப்படி இருக்கப்போறன்னு’ என நினைத்த விக்ராந்த், தன் அறைக்குச் சென்றுவிட்டான். மற்ற குடும்ப உறுப்பினர்களும் இந்தச் சிக்கலில் என்ன சொல்வதென்று தெரியாமல் மௌனமாக மெல்ல அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர்.
நேரம் நகர நகர, நித்திலா தான் சொன்னது போலவே ஒரு சொட்டுத் தண்ணீர் கூடக் குடிக்காமல் பிடிவாதமாக அமர்ந்திருந்தாள். சுமித்ரா மனது தாளாமல் ஜூஸ் எடுத்து வந்து, “பிடிவாதம் பண்ணாம இதைக் குடி நித்தி,” எனக் கெஞ்சினாள்.
“முடியாது அக்கா… எனக்கு ஹெல்ப் பண்றதா இருந்தா, என்னை இங்கிருந்து போக விடுங்க,” என நித்திலா உறுதியாகச் சொன்னாள்.
அப்போது அங்கு வந்த விக்ராந்த்..
“நான் குடிக்க சொல்றேன் அண்ணி, நீங்க போங்க” என்று சொல்ல, அவளும் சிறு தலையசைப்புடன் ஒரு பெருமூச்சுடன் அங்கிருந்து நகன்றாள்…
“நான் எதையும் குடிக்க மாட்டேன், என் மேல நீங்க ஒன்னும் கருணை காட்ட வேணாம்” அவள் கோபத்தில் கத்த,…. “நான் உன் மேல கருணை காட்டல நிலா… உன் வயித்துல இருக்கிற குழந்தைக்காகச் சொல்றேன். நமக்குள்ள இருக்குற பிரச்சனைக்காக அந்தப் பிஞ்சு உயிர் ஏன் கஷ்டப்படணும்? ப்ளீஸ் குடி,” என்றான் கெஞ்சலாக. அந்தத் தார்மீகக் கோரிக்கையை அவளால் மறுக்க முடியவில்லை, தன் குழந்தைக்காக ஜூஸை வாங்கிக் குடித்தாள்.
”குடிச்சுட்டேன்… இப்போ என்னை போக விடுறீங்களா?” எனக் கேட்க, “குழந்தையைப் பெத்து கொடுத்துட்டுப் போ,” என்றான் விக்ராந்த்.
”அப்போ… குழந்தைக்காக மட்டும்தான் என்னை இங்க இருக்கச் சொல்றீங்க, அப்படித்தானே?” என நித்திலா கேட்க, ‘சத்தியமாக இல்ல நிலா… எனக்கு உன்னை விட வேற எதுவும் முக்கியமில்லை. உன்னோடு ஒப்பிடும்போது மத்தவங்க எல்லாம் எனக்கு அப்புறம்தான், அது நம்ம குழந்தையாகவே இருந்தாலும் கூட! ஆனா, இப்போ என் மேல உனக்கு இருக்கும் கோபத்துக்கு, நான் உன் மேல அன்பு வைச்சிருக்கேன்னு சொன்னாலும் நீ அதை நம்ப மாட்ட. அதுமட்டும் இல்லாம, என் அன்பையே ஒரு வாய்ப்பா பயன்படுத்தி என்னை விட்டுப் போக பிடிவாதம் பண்ணுவ.
உன்னை என்னை விட்டுப் போக நான் விட மாட்டேன், அதனால உனக்கு வருத்தத்தை தரும்னு தெரிஞ்சும் ‘ஆமாம், குழந்தைக்காகத்தான்’னு பொய் சொல்லப் போறேன். இந்த எட்டு மாசத்துல என் அன்பை உனக்கு புரிய வைப்பேன் நிலா, அதுக்கப்புறம் நீ என்னை விட்டுப் போக நினைக்க மாட்டேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு’
அவன் மௌனமாக யோசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த நித்திலா, “என்ன பதிலை காணோம்?” என்று கேட்டாள்.
அவன் யோசனையிலிருந்து மீண்டு, “என்ன?” என்று கேட்க, நித்திலா மீண்டும் “உங்க குழந்தைக்காக மட்டும்தானே என்னை இங்க இருக்கச் சொல்றீங்க…?” அழுத்தமாக கேட்டாள்..
விக்ராந்த் அவளது கண்களைப் பார்த்து, “ஆமா…” என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்தான்.
அவன் எதிர்பார்த்தது போலவே, அந்தப் பதிலைக் கேட்டதும் நித்திலாவின் முகம் சட்டென வாடியது. விக்ராந்த் தன் மீது அன்பு காட்டவில்லை, வெறும் குழந்தைக்காக மட்டுமே தன்னைத் தடுத்து நிறுத்துகிறான் என்ற எண்ணம் அவளது மனதை ஆழமாகக் காயப்படுத்தியதை அவளது முகம் அப்படியே காட்டிக் கொடுத்தது…
அவனுக்கோ என்னவோ போல் இருக்க,.. “ஸாரி நிலா” என்று அவள் கரம் பற்றிட, அவளோ வெடுக்கென்று தள்ளினாள்,..
மேலும் இதற்கு மேல் தன்னால் அங்கிருந்து போக முடியாது என்பதையும் தெளிவாக புரிந்து கொண்டவள், அங்கு இருக்கவும் முடிவு செய்து விட்டாள், அதற்கு காரணம் மருத்துவர் அவளது கர்ப்பத்தில் பிரட்சனை இருக்கு என கூறியது தான்.
நித்திலாவின் மனதுக்குள் என்ன மாதிரியான எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தது என்பது எவருக்கும் புரியாத புதிராகவே இருந்தது. மருத்துவர் அவளது உயிருக்கே ஆபத்து என்று எச்சரித்த பின்னரும், அவள் தன் உயிரைத் துச்சமாக நினைத்து முடிவெடுத்திருந்தாள்.
மரணம் என்பது எவ்வளவு பயங்கரமானது, அது ஒரு மனிதனின் வாழ்வை எப்படி முடிவுக்குக் கொண்டு வரும் என்பது அவளுக்குத் தெரியுமா அல்லது தெரிந்தே அஞ்சாமல் இருக்கிறாளா? தன் உடலும் உயிரும் சிதைந்து போகும் என்று தெரிந்தும், அந்த வலியைத் தாங்கிக்கொண்டு இந்த வாரிசை உலகிற்குத் தர வேண்டும் என்று அவள் ஏன் துணிந்தாள்?
விக்ராந்த் மீதான கோபமா? அல்லது பிறக்கப்போகும் குழந்தையின் மீதான அளவற்ற தாய்மையா? எது அவளை இத்தகைய கடினமான முடிவை எடுக்கத் தூண்டியது என்பது, அந்த இறைவனுக்கும் அவளுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்.
”ஓகே… நான் இங்கே இருக்கேன். ஆனா எட்டு மாசத்துக்கு அப்புறம் நீங்க என்னை பார்க்கவே முடியாத ஒரு இடத்துக்குப் போயிடுவேன்,” என்றாள் டாக்டர் சொன்ன மரண எச்சரிக்கையை மனதில் வைத்து.
‘நீ எவ்வளவு தூரம் போனாலும், உன்னை எப்படி மறுபடியும் என்கிட்ட கொண்டு வந்து சேர்க்கணும்னு எனக்கு தெரியும் பேபி’ என விக்ராந்த் மனதிற்குள் சிரித்துக்கொண்டான்.
”நான் கன்சீவா இருக்கிறதை எப்படிக் கண்டுபிடிச்சீங்க?” என நித்திலா கேட்க, “நீ புத்திசாலித்தனமா ஒளிச்சு வைச்சிருந்த அந்த ஹாஸ்பிட்டல் ஃபைல் என் கண்ணுல பட்டுடுச்சு,” என்றான் விக்ராந்த்.
”அப்போ இத்தனை நாள் தெரிஞ்சும் தெரியாத மாதிரி இருந்தீங்களா? நான் உங்ககிட்டச் சொல்லாம மறைச்சதுக்கு உங்களுக்கோ கோபம் வரலையா?” என அவள் மீண்டும் வினவ,
“வந்துச்சுதான்… ஆனா நான் செய்த தப்புக்கு இதுவும் ஒரு தண்டனைதான்னு மனசைத் தேத்திக்கிட்டேன்,” என்றான் அவன்.
”அப்போ என்னை அனுப்பி வைக்கிறதையும் ஒரு தண்டனையா நினைச்சு ஏத்துக்க வேண்டியதுதானே?” என அவள் எரிச்சலாகக் கேட்க, “அது எப்படி முடியும்? என்ன தண்டனை கொடுக்கிறதா இருந்தாலும் என் பக்கத்துல இருந்தே கொடு. அதோட நீ இங்கிருந்து உன் வீட்டுக்குப் போகப் பிளான் பண்ணலையே… மும்பைக்குப் போகத்தானே டிக்கெட் புக் பண்ணியிருக்க?” என விக்ராந்த் கேட்க, நித்திலா திகைத்துப் போனாள். ‘இவனுக்கு இது எப்படித் தெரிந்தது?’ என அவள் யோசிப்பதைக் கண்டவன், “உன்னோட டிக்கெட்டைப் பார்த்துட்டேன்,” எனப் பதிலளித்தான். அதற்கு மேல் பேச ஏதுமின்றி அவள் அறை நோக்கி நடந்தாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
19
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

அன்பால் அவளை கட்டிப்போட இயலாததால் மீண்டும் அதிகாரத்தை கைகளில் எடுத்துக்கொண்டான் விக்ராந்த்.
தனக்கு சொந்தமான குழந்தையை கொடுக்க சொல்லி நிர்பந்திக்கின்றான்.
நினைத்ததை போல் வீட்டை விட்டு வெளியேற முடியாத கோபத்தினில் நித்திலா குழந்தையை சுமை என்று கூறி விட்டாலே.
குழந்தையை காரணம் காட்டி இங்கேயே இருக்க சொல்லி கட்டாயப்படுத்தும் அவன் மேல் கோபம் கொள்கின்றாள்.
குழந்தைக்காக மட்டுமே தன்னை இருக்க சொல்கின்றான் என்ற சுய கழிவிரக்கமும் கொள்கின்றாள்.