
அத்தியாயம் – 24
சமையலறையில் நித்திலாவும் ஊர்மிளாவும் அணைத்துக் கொண்டு நின்றதைக் கண்ட சந்தானம், மேற்கொண்டு எதையும் பேசத் துணிவின்றி, உணவு கூட உண்ணாமல் அலுவலகம் கிளம்பிச் சென்றார். அடுத்து வந்த இனியா, நித்திலாவைக் கட்டிக்கொண்டு விம்மித் தீர்த்தாள். “நீங்க இந்த வீட்டை விட்டுப் போகக் கூடாது அண்ணி! எப்போதும் எங்க கூடவே இருக்கணும்,” என்று அவள் அழுது அடம்பிடிக்க, நித்திலா தான் அவளைத் தேற்றி கல்லூரிக்கு அனுப்பி வைத்தாள்.
வித்தார்த் நேரமே அலுவலகத்திற்கு சென்று விட்டான் என்று சுமித்ரா சொல்லி தெரிந்து கொண்டாள் நித்திலா,…
எப்போதும் அதிகாலையிலேயே உற்சாகமாக வலம் வரும் மரகதப் பாட்டி, இன்றும் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார். சுமித்ரா தான் அவர் அறைக்கே சென்று டீ கொடுத்து விட்டு வந்தாள், அன்னலட்சுமி மட்டும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் உணவை முடித்துக் கொண்டு அறைக்குள் சென்றுவிட்டார்.
அலுவலக உடையுடன் வெளியே வந்த லட்சுமணன், தயக்கத்துடன் நித்திலாவின் அருகில் வந்து நின்றவர்,.. “நான்… நான் உன்கிட்ட பேசலாமாம்மா?” எனக் கேட்ட,.. “என்னப்பா இது? அனுமதியெல்லாம் கேட்டுக்கிட்டு… சொல்லுங்கப்பா,” எனப் புன்னகையுடன் கூறினாள் நித்திலா.
அவளது அந்தப் புன்னகை லட்சுமணனின் இதயத்தை ஈட்டியாய்த் துளைத்தது.
“மன்னிச்சிடும்மா!” அவர் கரகரத்த குரலில் சொல்ல, நித்திலா பதறிப் போனாள். “என்னப்பா இது? நீங்க எதுக்கு என்கிட்ட மன்னிப்பு கேட்கணும்? இப்படியெல்லாம் பேசாதீங்கப்பா, கஷ்டமா இருக்கு,” என்றாள் கண்கள் குளமாக.
”இல்லமா,.. என் மேல தான் முதல் தப்பு, உன்னை இப்படியொரு நிலைமைக்கு கொண்டு வந்து நிறுத்தின எனக்கு மன்னிப்பு கேட்கவும் அருகதை இல்லைதான்மா. ஆனா என்ன பண்றதுன்னு தெரியல. உன்னைப் பார்க்கத் தைரியம் இல்லாமத்தான் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன். என்னால தானேம்மா நீ இப்படி ஒரு நிலைக்கு வந்து நிக்கிற?” என்றார் குற்றவுணர்வுடன்,..
“தயவு செய்து இப்படியெல்லாம் பேசாதீங்கப்பா, நீங்க எந்த தப்பும் பண்ணல, உண்மையை சொல்லனும்னா எனக்கு நீங்க ஒரு அழகான குடும்பத்தையே கொடுத்திருக்கீங்க, அப்பா இல்லாத குறையை போக்கிருக்கீங்க, அக்கா, அம்மான்னு எல்லா உறவும் எனக்குக் கிடைச்சிருக்கு, ஒரு உறவு போனா என்னப்பா, அதான் இத்தனை உறவு இருக்கே, இது எனக்கு போதும்பா” என்றாள் அவர் கரத்தினை பற்றி,….
லட்சுமணன் மனதே ஆறாமல்,..
“எனக்கு மனசு ஆற மாட்டேங்குதும்மா, நான் விக்ராந்த் கிட்ட பேசுறேன்” என்றார்,..
“அப்பா… எனக்கு ஏதாச்சும் நல்லது பண்ணனும்னு நினைசீங்கன்னா தயவு செய்து என்னை பத்தி உங்க பையன் கிட்ட எதுவும் பேச கூடாது, இது மட்டும் பண்ணாலே போதும்பா, நான் நிம்மதியா சந்தோஷமா இருப்பேன், அதோட நான் இந்த வீட்டை விட்டு போற வரைக்கும், நடந்ததை பத்தி யாரும் எதுவும் என்கிட்ட பேச கூடாது” என்றாள் உறுதியான குரலில்…
மருமகளின் வைராக்கியமான முடிவிற்கு முன்னால் லட்சுமணன் மௌனமானார், அவருக்கு இப்போது நித்திலாவின் பேச்சை மீறவும் முடியவில்லை, அதனால்.. “சரிம்மா… நான் பேச மாட்டேன். ஆனா மறுபடியும் சொல்றேன்… நீ என்னோட பொண்ணு. உனக்கு எப்போதும் நான் துணையா இருப்பேன்,” எனக் கூறிவிட்டு பாரமான இதயத்துடன் அங்கிருந்து நகர்ந்தார்.
அலுவலக அறையில் நிசப்தம் நிலவியது. விக்ராந்தின் முகத்தையே வெறுப்போடு பார்த்தபடி, அவனுக்கு எதிரில் அமர்ந்திருந்தான் வித்தார்த். அண்ணனும் பேசவில்லை, தம்பியும் பேசவில்லை. நிமிடங்கள் பாரமாய் நகர்ந்தன.
சலித்துக் கொண்ட வித்தார்த், தன் உள்ளத்தில் இருந்த குமுறல்களைக் கொட்ட ஆரம்பித்தான். “என்னடா நடக்குது விக்கி? நீ தான் நிஜமாவே இப்படிலாம் பண்ணியா? உனக்கு நித்திலாவை பிடிக்கலைன்னா ஏன்டா அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட?”
விக்ராந்திடமிருந்து பதில் இல்லை.
”பிடிக்காமக் கட்டிக்கிட்டது ஒரு பக்கம் இருக்கட்டும்… அந்த நைட்டே அவகிட்ட டிவோர்ஸ் பேப்பர்ல சைன் வாங்கிருக்க! என் தம்பி இப்படி ஒரு காரியத்தைச் செய்வான்னு என்னால நம்பவே முடியலடா” அவன் ஆதங்கத்துடன் வினவ, விக்ராந்த் சிலையாக அமர்ந்திருந்தான்.
”இத்தனை நாளா நித்திலாகூட அவ்வளவு சந்தோஷமா இருந்தியே… அப்போ அதெல்லாம் வெறும் நடிப்பு தானா? வேற ஒரு பொண்ணை மனசுல வச்சுட்டு, அப்பாவுக்காக இன்னொரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு சொன்னா ஆச்சரியமா இருக்கு,
உண்மையா நேசிச்ச எந்த ஆம்பிளையும் இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க நினைக்க மாட்டான், அது மட்டும் இல்லாம அப்பா வார்த்தைக்கு கட்டுப்பட்டு நீ நித்திலாவை கல்யாணம் பண்ணிக்கிட்டேனு சத்தியமா என்னால நம்ப முடியல”
விக்ராந்தின் கண்களை ஊடுருவிப் பார்த்தவன்,.. “எனக்கு ரெண்டு விஷயம் தான் தோணுது,
ஒன்னு நீ லாவண்யாவை உண்மையா காதலிக்காம இருந்திருக்கனும், இல்லைனா நித்திலாவை நீ விரும்பிருக்கணும்”
நீ நித்திலாவை நேசிச்சிருந்தா எதுக்காக டிவோர்ஸ் கொடுக்க நினைக்கணும்? எனக்கு ஒன்னுமே புரியலடா!”
தன் மண்டையைப்போட்டு உருட்டியும் விக்ராந்த் பதில் சொல்லாமல் கல்லாய் அமர்ந்திருந்தது வித்தார்த்திற்கு ஆத்திரத்தை ஏற்றியது.
”இப்போ வாயைத் திறந்து பேசுவியா மாட்டியா? நீ இப்படி மௌனமா இருக்கிறது எனக்கு எரிச்சலைத் தருது விக்ராந்த், உன் மனசுல என்னதான் இருக்குன்னு சொல்லித் தொலைடா!” ஆவேசமாகக் கத்தினான் வித்தார்த்.
அப்போதும் விக்ராந்த் வாய் திறக்கவில்லை. அவனது கண்கள் ஏதோ ஒரு வலியை மறைக்கப் போராடுவது போலத் தெரிந்தாலும், வார்த்தைகள் வரவில்லை.
வித்தார்த் ஆத்திரத்தோடு அவனைப் பார்த்தவன்… “ச்சே… நீயெல்லாம் மனுஷனே கிடையாது! ஒரு பொண்ணோட வாழ்க்கையைச் சிதைச்சுட்டு, இன்னொரு பொண்ணு கூட வாழணும்னு நினைச்சேன்னா, நிச்சயமா அந்த வாழ்க்கை நல்லாவே இருக்காது. உன்னை என் தம்பின்னு சொல்லிக்கவே நான் அசிங்கப்படுறேன்டா!”
வெறுப்புடன் கூறிய வித்தார்த் அறையை விட்டு வெளியேற, விக்ராந்த் தன் கண்களை இறுக மூடிக்கொண்டு இருக்கையில் சாய்ந்தான்.
அவனது மௌனத்திற்குப் பின்னால் இருக்கும் அந்த மர்மமான காரணம் என்ன? அவன் நிஜமாகவே நித்திலாவை நேசிக்கிறானா அல்லது லாவண்யாவின் வருகைக்காகக் காத்திருந்தானா?
******
மரகதப் பாட்டி தன் அறைக்குள்ளேயே சிறைப்பட்டுப் போயிருந்தார். சுமித்ரா உணவு கொண்டு செல்ல முயன்றபோது, நித்திலா அவளைத் தடுத்து “அக்கா… நான் கொண்டு போறேன்” என்று கூறி உணவோடு அவர் அறைக்குள் நுழைந்தாள்.
பாட்டியின் அருகே சென்று நின்ற நித்திலா, “பாட்டி… உங்களுக்காகச் சாப்பாடு கொண்டு வந்திருக்கேன்” என்றாள் மெல்லிய குரலில்.
பாட்டியின் முகம் வாடிப் போய், கண்கள் குழி விழுந்து கிடந்தன. தன் பேரன் செய்த துரோகம், அந்தப் பெரியவரின் கௌரவத்தையே சுக்குநூறாக உடைத்திருந்தது.
லட்சுமணனையும் ஊர்மிளாவையும் தேற்றியது போலவே, தன் வேதனையைச் சிறிதும் காட்டிக் கொள்ளாமல் பாட்டிக்கும் ஆறுதல் கூறினாள், அவரும் அவளது ஆறுதலான அன்பான வார்த்தையை கேட்டு சற்று வெளிவந்தார்,..
“பாட்டி… எது நடந்தாலும் அது நன்மைக்குதான்னு நினைச்சுக்கலாம். நீங்க சாப்பிடாம இருந்தா, எனக்குத்தான் இன்னும் வருத்தமா இருக்கும்” என்று கூறி, அவர் கைகளைப் பிடித்து வேண்டினாள்.
தனக்கு இவ்வளவு பெரிய அநீதி இழைக்கப்பட்ட பிறகும், ஒரு தேவதையைப் போலத் தனக்கு ஆறுதல் கூறும் நித்திலாவைக் கண்டு மரகதப் பாட்டி பிரமித்துப் போனார். அவளது கைகளைப் பற்றிக் கொண்டவர், “உன்னை மாதிரி ஒரு அன்பான பொண்ணுக்கு அந்த கடவுள் கெடுதல் நினைக்க மாட்டாருன்னு நம்புறேன்டா,” என உருகியபடி அவள் தலையைக் கோதிவிட்டார்.
அவளது பிடிவாதமான அன்பிற்கு இணங்கி, பாட்டி மெல்லச் சகஜமாகப் பேசத் தொடங்கினார். அப்போதுதான் நித்திலாவிற்கு மூச்சு சீராக வந்தது. விக்ராந்தின் அன்பு தனக்குக் கிடைக்காவிட்டால் என்ன? தன் மீது உயிரையே வைத்திருக்கும் இந்தப் பெரியவர்களின் அன்பு இருக்கிறதே, அதுவே தனக்குப் போதும் எனத் தன்னைத் தானே தேற்றிக் கொண்டாள்.
வீட்டில் உள்ள மற்றவர்களின் காயங்களை ஆற்றும் மருந்தாக நித்திலா மாறினாலும், அவளது சொந்தக் காயம் இன்னும் ஆறாமல் கனன்று கொண்டுதான் இருந்தது.
காலை பதினொரு மணி இருக்கும், சமையலறையில் பெண்களின் வேலை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. முற்றத்தில் அமர்ந்து ராமாயணம் படித்துக் கொண்டிருந்த பாட்டியின் அமைதியைக் குலைக்கும் விதமாக, அன்னமும் லாவண்யாவும் உள்ளே நுழைந்தனர்.
“ஆண்ட்டி… இந்த வீட்டைச் சுத்திப் பார்க்கவே ரெண்டு நாள் ஆகும் போலயே!” என லாவண்யா வியக்க,
“ஆமா ஆமா,… இந்த ஊரிலேயே நம்ம வீடு தான் அரண்மனை மாதிரி பெருசா இருக்கும்” என்று அன்னம் தன் பெருமையைப் பறைசாற்றிக் கொண்டிருந்தார்.
”ஆண்ட்டி…. மார்னிங் எழுந்ததுமே எனக்கு காஃபி குடிக்கும் பழக்கம் இருக்கு சோ” என அவள் இழுக்க,… “அதுக்கென்ன, அஞ்சு நிமிடம் பொறுத்துக்கோ, நீ இருக்க இடத்துக்கே காபி வரும்” என்ற அன்னம்… “ஏய் நித்திலா! இங்க வா” என சமையலறை நோக்கி குரல் கொடுத்து விட்டு, சோபாவில் அமர்ந்தார், லாவண்யாவும் பாட்டிக்கு நேரே இருந்த ஒற்றை சோபாவில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்த விதம் அங்கிருந்தவர்களின் கண்ணை உறுத்தியது.
அன்னத்தின் அழைப்பிற்க்கு அங்கு வந்த நித்திலாவை குறுகுறுவென்று பார்த்தாள் லாவண்யா,…
நித்திலாவோ அவளை ஏறெடுத்து பார்க்காமல்,.. “சொல்லுங்க அத்தை” என்று அவரிடம் பணிவுடன் கேட்க,…. அவரோ… “என் மருமகளுக்கு நல்லா ஸ்ட்ராங்கா காபி போட்டு எடுத்துட்டு வா” என ஆணையிட, அந்த ‘மருமகள்’ என்ற வார்த்தை அவளை மிகவும் சுட்டது. இருப்பினும் தன்னை சமன்செய்து கொண்டு சரி என்ற தலையடைப்புடன் நகர முயன்றபோது, பாட்டியின் குரல் இடியென முழங்கியது.
”நித்திலா நில்லுமா!” பாட்டியின் குரலில் திரும்பியவ?,.. “நீ இந்த வீட்டு மருமக… வீட்டுல இருக்கிறவங்களுக்கு வேண்டியதைச் செய்யறது உன் கடமை. ஆனா, மினிக்கிக்கிட்டுத் திரியிற ஆட்டக்காரிங்களுக்கு எல்லாம் நீ பணிவிடை செய்யணும்னு அவசியம் இல்லை. நீ போடா!” என்று சொல்ல, அவளும் அதற்கு மேலும் அங்கு நிற்காமல் சென்றுவிட்டாள்,….
பாட்டியின் இந்தப் பேச்சு லாவண்யாவின் முகத்தில் கரியைப் பூசியது போலிருந்தது.
“யாரு அத்தை ஆட்டக்காரி, லாவண்யா எவ்வளவு பெரிய கோடீஸ்வரரோட மகள்னு தெரியுமா, அவளுக்கு இருக்க சொத்து பத்தி தெரியுமா உங்களுக்கு, தெரிஞ்சிருந்தா இப்படிலாம் பேச மாட்டீங்க” என்றார் அன்னம்
“ஆண்ட்டி கூல்,… எதுக்காக பாட்டிகிட்ட கோபப்படுறீங்க, அவங்களுக்கு என்னை பத்தி தெரியாது, போக போக தெரிஞ்சிப்பாங்க, பாட்டி டோன்ட்வொரி நான் சீக்கிரமே நம்ம குடும்பத்துக்கு ஏத்த மாதிரி மாறிடுவேன், என்னை நீங்க நம்பலாம்” லாவண்யா சிரித்த முகம் மாறாமல் பேச, பாட்டிக்கு தான் அவளை கொஞ்சமும் பிடிக்கவில்லை, அவள் புன்னகை வேறு உள்ளுக்குள் எரிய வைத்தது, அதற்க்கு மேலும் அங்கு இருக்க விரும்பாமல் எழுந்து சென்றுவிட்டார்,…
“நீ எதுக்கும் கவலை படாத லாவண்யா, போக போக சரியாயிடும்” அன்னம் சொல்ல,… “தெரியும் ஆண்ட்டி, நான் ஃபீல் பண்ணல, பட் காஃபி” என அவள் பாவமான முகத்துடன் கேட்க,… “இரு நானே எடுத்துட்டு வரேன்” என்று எழுந்தார் அன்னம்,…
“என்ன ஆண்ட்டி… நீங்க எனக்காக காஃபி எடுத்துட்டு வர போறீங்களா, வேணாம் ஆண்ட்டி” என்றாள்…
“இதுல என்னம்மா இருக்கு, பரவால்ல” என்று எழுந்து சென்றவர், சமையலறையில் நின்று கொண்டிருந்த பெண்களை முறைத்துக் கொண்டே, காபி கலந்து லாவண்யாவிடம் வந்து கொடுத்தார்….
“அத்தை,… அந்த பொண்ண இங்கிருக்க எப்படி எல்லாரும் ஒத்துகிட்டாங்க” சுமித்ரா ஊர்மிளாவிடம் கேட்க,… “மாமா அவ இங்கிருக்க கூடாதுனு கட்டன்ரைட்டா தான் சொன்னாரு, ஆனா அக்கா கேட்கல, ஏதேதோ சொல்லி பிளாக் மெயில் பண்ண ஆரம்பிச்சுடாங்க, ஒரு வாரம் டைம் கொடுத்திருக்காங்க, அதுக்குள்ள அவ இங்கிருந்து போகலன்னா, நீயும் இந்த வீட்ல இருக்க தேவை இல்லனு சொல்லிட்டாங்க, இதெல்லாம் நீ நித்திலா கூட மாடியில இருந்த போது நடந்தது,” என்றார் ஊர்மிளா, நித்திலாவும் அமைதியாக அவர்கள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்தாள்…..
“காபி எப்படி இருக்கு லாவண்யா” அன்னம் கேட்க,.. “நாட் பேட்” என்று சொன்னவள்,.. “அண்ட் ஆண்ட்டி,… வீட்ல எல்லாரும் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா,” என்று கேட்க,…”ரொம்ப ஸ்ட்ரிக்ட் தான் மா, அதுக்காக நீ ஒன்னும் கவலை படாத, நீ அவங்க கிட்ட நெருங்கி பேசி பழகு, அவங்களும் உன்னை முழு மனசோடு ஏத்துப்பாங்க” என்றார் அன்னம்…
“ம்ம்… அதை நான் பார்த்துகிறேன் ஆண்ட்டி” என்றவள்,..”விக்கு எப்போ ஆண்ட்டி வருவான், அவன் கிட்ட வந்ததுலருந்து சரியாவே பேச முடியல, நைட் அவன் ஃபீல் பண்ணிட்டு இருப்பான்னு சொன்னீங்க, அதான் நானும் டிஸ்டர்ப் பண்ணல” என்றாள்…
“அவன் ஒரு நேரத்துக்கு, சீக்கிரம் வருவான், லேட்டாவும் வருவான், அதையெல்லாம் கணிச்சு சொல்ல முடியாது” என்றார்…
“ஓகே ஆண்ட்டி, நான் விக்குகிட்ட கால் பண்ணி வர சொல்றேன், நான் என்ன சொன்னாலும் தட்டாம கேட்டுப்பான்” லாவண்யா சொல்லிக்கொண்டிருந்த நேரத்தில், சரியாக அந்த பக்கமாக வந்தாள் நித்திலா, அவளது காதிற்கு அது கேட்டிருந்தாலும், கேட்காதது போல், மாடிப்படி ஏறி தன் அறை நோக்கி விரைந்தாள்…
“இப்போ நாம வீட்டை சுத்தி பார்க்கலாமா ஆண்ட்டி” லாவண்யா கேட்க, சம்மதமாக தலையசைத்தவர், அவளுக்கு வீட்டை சுற்றி காட்டினார்….
“ஆண்ட்டி,… வந்ததும் என்னை கெஸ்ட் ரூம்ல தங்க சொல்லிட்டீங்க, நான் விக்கு ரூம்ல ஸ்டே பண்ண கூடாதா ஆண்ட்டி”
அவள் கேட்டது, அந்த பக்கமாக வந்த சுமித்ராவின் காதில் விழுந்தது…. எதற்கும் யார் மீதும் கோவம் வராத சுமித்ராவிற்கு, லாவண்யாவின் மீது கோபமும் அருவெறுப்பும் அளவில்லாமல் எழுந்தது, ரத்தம் கொதித்தது,..
‘ச்சே.. இவள்லாம் பொண்ணு தானா, இன்னொருத்தியோட புருஷன் கூட, ரூம்ல ஒன்னா இருக்க கூடாதான்னு கேட்கிறா, கருமம், எல்லாம் அந்த விக்ராந்த் பண்ணுற வேலை, என் தங்கச்சிகாகவாச்சும் நான் அவர் கிட்ட பேசி தான் ஆகணும்’ என விக்ராந்தை எதிர்பார்த்து காத்திருந்தாள் சுமித்ரா,…
“என்ன ஆண்ட்டி, நான் ஏதாச்சும் தப்பா கேட்டுட்டனா” தான் கேட்டதில் அன்னத்திடமிருந்து பதில் வராமல் போனதில், யோசனையுடன் கேட்டாள் லாவண்யா,….
“இல்ல அது,… கல்யாணத்துக்கு முன்னாடியே நீங்க ரெண்டு பேரும் ஒன்னா ஒரே ரூம்ல இருக்க கூடாதும்மா, பார்க்கிறவங்க தப்பா நினைப்பாங்க” அவர் சொல்ல,… “ஓகே ஆண்ட்டி, இப்போ நான் விக்கு ரூமை பார்க்கலாமா?” என்றாள் கண்களில் ஆர்வம் மின்ன…
“ம்ம்ம்… கண்டிப்பாமா” என்றவர் அவளை விக்ராந்தின் அறைக்கு அழைத்துச் சென்றார்,…
“அக்கா…. வெந்நீர் கேட்டீங்க,” சற்று தொலைவில் இருந்து, ஊர்மிளா குரல் கொடுக்க,… “ஆன்… இதோ வரேன்” என்றவர்,…”மாடில இடது பக்கம் இருக்க ரூம் தான் விக்ராந்தோடது, நீ போயிடுவியா லாவண்யா” அன்னம் கேட்க,…”ஓகே ஆண்ட்டி, நான் பார்த்துகிறேன்” என மாடிபடியேறினாள் லாவண்யா….
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
17
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


விக்ராந்த் மனசுல வேற என்னமோ இருக்கு
தன் மனதில் சோகம் இருந்தாலும் இருக்க போகும் சிறிது நாட்கள் சந்தோஷமாக கழியட்டும் என எண்ணி வீட்டினரின் வருத்தம் போக்குகிறாள் நித்திலா.
பாட்டியிடம் கனிவாக பேசியது மிக அருமை. எதார்த்தமான உரையாடல்.
கணவன் என்ற ஒரு உறவு நிலைக்காமல் போனாலும் அது மூலமாக கிடைத்த பல உறவுகளை எண்ணி மனதை தேற்ற முயல்கிறாள்.
விக்ராந்த் மனதில் என்ன தான் ரகசியம் உள்ளது?
லாவண்யாவிடம் ஏதோ ஒரு வகையினில் சிக்கி கொண்டுள்ளான்.
நித்திலாவிடம் நடந்து கொண்ட முறையின் பின்னால் அவளை பாதுகாப்பாக இந்த திருமண உறவில் இருந்து விடுபடவைக்கும் எண்ணம் இருந்தது போல் தான் உள்ளது.
என்ன அழைப்புடா இது! விக்கு விக்கு 🙆🏼♀️
விக்குவிற்கு உடல் நலம் சார்ந்த பிரச்சனை எதுவும் இருக்குமோ? 🤔