
அத்தியாயம் – 18
“என்னால முடியல நித்தி, நீ தான் ஸ்கூல்ல காலேஜ்லன்னு எல்லாத்திலேயும் ஃபர்ஸ்ட் வந்திருக்கியாமே, நான் உன் அளவுக்கு லாம் இல்ல, ஏதோ படிப்பேன் அவ்வளவு தான், அதனால நீ தான் இவளுக்கு சொல்லி, இவளை எப்படியாவது நல்ல படியா எக்ஸாம் எழுத வைக்கணும்” என்றாள் சுமித்ரா….
நித்திலாவின் பார்வை இப்போது இனியாவிடம் திரும்பியது. இனியாவோ உடனே சோகமான முகத்தை வைத்துக்கொண்டு, “அண்ணி வேணாம் அண்ணி! நீங்க எனக்குச் சப்போர்ட் பண்ணுறதா எனக்கு வாக்கு குடுத்துருக்கீங்க, அதை மறந்துடாதீங்க,” எனத் தப்பிக்க முயன்றாள்.
”இப்படி ஒரு விஷயம் இருக்குன்னு தெரியாம நான் அப்படிச் சொல்லிட்டேன் இனியா. ஆனா இப்போ நான் மத்தவங்க பக்கம் தான்!” என்று அதிரடியாக அறிவித்த நித்திலா, சுமித்ராவுடன் சேர்ந்து இனியாவிற்குப் பாடம் எடுக்கத் தொடங்கினாள். எது கஷ்டமான பாடம், எது எளிமையானது என்று பிரித்து, இனியாவின் மனநிலைக்கு ஏற்ப மிகத் தெளிவாகச் சொல்லிக் கொடுத்தாள். நித்திலாவின் கற்பித்தல் முறையில் கவரப்பட்ட இனியாவும், ஆர்வமாகப் பாடங்களைக் கவனிக்க ஆரம்பித்தாள்.
“அண்ணி பேசாம நீங்க என் காலேஜ்க்கு லெக்சரா வந்துடுங்க, சூப்பரா சொல்லி தறீங்க, எனக்கு தூக்கம் கூட வரல, இதே என் காலேஜ்ல இருக்க அந்த குண்டம்மா க்ளாஸ் எடுத்துச்சுன்னு வைங்களேன் கண்ணு சொருகி தூக்கம் வந்துடும்” இனியா சொன்னதில் சிரித்த இருவரும், அவள் தலையில் தட்டி, ஆசிரியரை அப்படியெல்லாம் சொல்ல கூடாது என்று சில புத்திமதிகளையும் கூறினர்..
மூவரும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த அந்த நேரத்தில், ஊர்மிளா அங்கு வந்து ஒரு மகிழ்ச்சியான செய்தியைச் சொன்னார். “சுமித்ரா… உன்னோட அம்மாவும் அப்பாவும் வந்திருக்காங்கம்மா!”
அவ்வளவுதான்! அந்த வார்த்தையைக் கேட்டதுமே சுமித்ராவின் முகம் ஆயிரம் வாட்ஸ் மின்சாரத்தில் பிரகாசித்தது போல மாறியது. நீண்ட நாட்களாகத் தன் பெற்றோரை எதிர்பார்க்கும் ஒரு மகளின் ஆர்வம் அவள் கண்களில் தெரிந்தது.
“நித்தி வா, நீ அம்மா அப்பாவை பார்க்கலன்னு சொன்னல்ல, இப்போ வா உன்னை அவங்க கிட்ட அறிமுகம் படுத்தி வைக்கிறேன்” என ஆசையுடன் நித்திலாவின் கரம் பிடித்து அழைத்துச் சென்றாள் சுமித்ரா.
வரவேற்பறையில் சுமித்ராவின் தாய் பார்வதியும், தந்தை மகேந்திரனும் அமர்ந்திருந்தனர். தன் மகளைக் கண்டதும் “சுமிம்மா!” என இருவரும் பாசமாக அணைத்துக் கொண்டனர்.
அதன் பிறகு,.. ”நித்தி… இவங்க தான் என் அம்மா, அப்பா,” என சுமித்ரா அறிமுகம் செய்ய, நித்திலா மரியாதையுடன் கைகூப்பி வணங்கினாள். ஆனால், சுமித்ரா அறிமுகத்தை முடிக்கும் முன்பே, “நித்திலா!” என அந்தப் பெரியவர்கள் இருவரும் ஒருசேர அவளது பெயரைச் சொல்ல, நித்திலா வியப்பில் உறைந்தாள்.
அவளது ஆச்சரிய பார்வையை கண்டு,.. ”எங்களுக்கு உன்னை எப்படித் தெரியும்னு பார்க்கிறியா? உன் கல்யாணத்துல பார்த்திருக்கோம். அப்புறம் சுமி போன் பண்ணும் போதெல்லாம் உன்னைப்பத்திப் பேசாம இருக்கவே மாட்டா. உண்மையைச் சொல்லணும்னா, எங்ககிட்ட அவ பேசுற பாதி விஷயம் உன்னைப்பத்தியே தான் இருக்கும்!” எனப் பார்வதி மென்னகையுடன் கூற, நித்திலாவின் மனம் நெகிழ்ந்து போனது. மகேந்திரனும் மிகவும் அன்பாக அவளிடம் உரையாடினார், சிறிது நேரத்திலேயே அவர்களுடன் ஒரு சொந்த மகளைப் போல ஒட்டிப் பழகத் தொடங்கினாள்
இதையெல்லாம் ஒரு ஓரமாக அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த அன்னலட்சுமியின் முகம் சிடுசிடுவென மாறியது. ‘இந்த இளைய மருமகளுக்கு அறிவே இல்லையா? ஏதோ அவளோட அம்மா அப்பா வந்த மாதிரி ஒட்டி உறவாடிக்கிட்டு இருக்கா! இவங்க போனதும் இவளை முதல்ல அடக்கணும்,’ எனத் தனக்குள் வன்மத்துடன் முணுமுணுத்துக் கொண்டார்.
“சரிம்மா நாங்க வந்து ரொம்ப நேரமாச்சு நாங்க கிளம்புறோம்” மகேந்திரன் சொல்ல,….”சரிப்பா,… ஆனா இன்னோரு நாள் கண்டிப்பா வரணும்,” என்றாள் நித்திலா….
“நாங்க வரது இருக்கட்டும், நீ நம்ம வீட்டை பார்த்தது இல்லைலம்மா சின்ன மாப்பிளை கூட கண்டிப்பா வரனும்” பார்வதி சொல்ல,…”கண்டிப்பா வரோம்மா” என்றாள் நித்திலா,….
“சுமிம்மா,… உன் தங்கச்சியை பார்த்துக்கோ, நீயும் உடம்பை பார்த்துக்கோ” தன் மகளிடம் சொன்னவர்கள் வீட்டினர்களிடமும் விடை பெற்று புறப்பட்டனர்,…..
அவர்கள் சென்றதும், நித்திலா தன் அறைக்குச் செல்ல முற்பட்டபோது, புயலென வந்து வழிமறைத்து நின்றார் அன்னம்.
”என்ன அத்தை… ஏதாச்சும் வேணுமா?” -°நித்திலா இன்முகத்துடன் கேட்க,..”அதெல்லாம் இல்ல! உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.” அன்னத்தின் குரலில் விஷம் ஏறியிருந்தது.
“ம்ம்ம்… சொல்லுங்க அத்தை” அவள் சொல்ல,…. “அந்தச் சுமித்ராவோட அப்பா அம்மாகிட்ட இருந்து கொஞ்சம் ஒதுங்கியே இரு. இன்னைக்கு உரிமை கொண்டாடுன மாதிரி இனி உறவாடாத!” -நேரடியாகவே தன் கட்டளையைப் பிறப்பித்தார்.
நித்திலா அதிர்ச்சியுடன், “ஏன் அத்தை அப்படிச் சொல்றீங்க? அவங்க அவ்வளவு பாசமா பேசும் போது, நானும் பேசுனேன். இதுல என்ன தப்பு இருக்கு?” என வினவினாள்.
”அவங்க பேச்சைப் பார்த்து அப்படியே நம்பிடாதே, பார்க்கத் தான் நல்லவங்க மாதிரி நடிப்பாங்க. ஆனா ஒரு நாள் இல்ல ஒரு நாள் நம்ம மேல விஷத்தைக் கக்கிடுவாங்க. அப்படிப்பட்ட குடும்பம் தான் அது!” -அன்னம் அபாண்டமாகப் பழி சுமத்த, நித்திலாவிற்குள் கோபம் எரிமலையாய் வெடித்தது.
சுமித்ரா அக்காவைப் பற்றியும், அவளது பெற்றோரைப் பற்றியும் அத்தை இப்படிப் பேசுவதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால், வீட்டின் அமைதி கருதி தன் கோபத்தை அடக்கிக் கொண்டாள்.
”என்னம்மா… நான் சொல்றது புரியுதா இல்லையா?” என அவர் அதட்ட, “எனக்கு வேலை இருக்கு அத்தை, நான் போகட்டுமா?” என அவருக்குப் பதில் சொல்ல விரும்பாமல் அங்கிருந்து நகர்ந்தாள்.
அவளை கண்களை சுருக்கி பார்த்தவர், அவளுக்கு வழிவிட, அவளும் சென்று விட்டாள்,…
’வந்ததுமே இவளையும் அடக்கி ஒடுக்கி இருக்கணுமோ? நாம தான் தப்பு பண்ணிட்டோமோ?’ எனச் செல்பவளின் முதுகையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்…
*******
விக்ராந்த், நித்திலாவின் மடியில் படுத்துக்கொண்டு அவளது கைகளைப் பற்றியிருந்தான். வழக்கமாக அவள் சொல்லும் அந்தச் சிறுவயதுக் கதைகளுக்காகக் காத்திருந்தவனுக்கு, இன்று அவள் முகத்தில் தெரிந்த கடுகடுப்பு ஏதோ இருப்பதாக உணர்த்த,.. ”என்ன பேபி… ஏதோ டென்ஷன்ல இருக்க மாதிரி இருக்கு?” என மெல்ல வினவினான்.
”ம்ம்ம்… எல்லாம் உங்க அம்மாவால தான்! நான் தெரியாம தான் கேட்கிறேன், சுமி அக்கா மேலயும் அவங்க குடும்பத்து மேலயும் அப்படி என்ன கோவம்? ஏன் அவங்களைக் கண்டாலே உங்க அம்மாவுக்குப் பிடிக்க மாட்டேங்குது?” நித்திலா தன் மனக்குமுறலைக் கொட்டினாள்.
விக்ராந்த் மிகச் சாதாரணமாக, “இதை நீ என் அம்மாகிட்டயே நேரடியா கேட்டுட வேண்டியதுதானே பேபி?” என்றான்.
”ஒரு நாள் இல்ல ஒரு நாள் நான் கேட்கத்தான் போறேன்! குழந்தை பிறக்கறது எல்லாம் கடவுள் கொடுக்கிற வரம், அதை விட்டுட்டு அக்காவை வாய்க்கு வந்தபடி பேசுறாங்க!” என ஆதங்கப்பட்டாள்.
“அம்மா அப்படி தான்,… நீ இதை நினைச்சு டென்ஷன் ஆகாத பேபி”
விக்ராந்த் அவளைச் சமாதானப்படுத்த முயல, நித்திலாவின் கோபம் அவன் பக்கம் திரும்பியது.
“எப்படி டென்ஷன் ஆகாம இருக்க முடியும்? சுமி அக்கா உங்க அண்ணி தானே, இத்தனை நாட்களா உங்க அம்மா கறச்சு கொட்டுறத பார்த்துகிட்டு தானே இருக்கீங்க, ஒரு நாளாச்சும் உங்க அம்மா கிட்ட இது தப்பு, அப்படியெல்லாம் பேசாதீங்கனு சொல்லிருப்பீங்களா” என்றாள் கோபத்துடன்….
”இப்போ ஏன் பேபி யார் மேலேயோ இருக்க கோபத்தை என் மேல காட்டுற? இதை விடு,” என அவன் பேச்சை மாற்ற முயல, நித்திலாவின் வார்த்தைகள் இன்னும் கூர்மையடைந்தன.
”உங்ககிட்ட போய் நியாயம் கேட்டது என் தப்புதான்! கட்டிக்கிட்டவளையே வெட்டி விட நினைக்கிறவரு தானே நீங்க!” நித்திலா அந்த ஆறு மாத ஒப்பந்தத்தைக் குத்திக் காட்டினாள்.
விக்ராந்தும் சளைக்காமல், “நான் முன்னாடியே சொன்னேன் பேபி, நீ தான் என் பேச்சைக் கேட்காம என்னைக் கட்டிக்கிட்ட… இப்போ என் மேல பழி போட்டா எப்படி?” என்றான்.
”ஆமா! உங்க அப்பா முகத்துக்காக என் வாழ்க்கையில நானே மண்ணை அள்ளிப் போட்டுக்கிட்டேன்!” என அவள் எரிச்சலடைய,.. “சரி… அதான் மண்ணைப் போட்டாச்சுல்ல? இனி அதை அள்ள முடியாது. வா, நம்ம வேலையை ஸ்டார்ட் பண்ணலாம்,” என அவன் குறும்புடன் அவளை நெருங்கினான்.
”ச்சீ… நீங்க எல்லாம் மனுஷனா? நான் எவ்வளவு ஃபீலிங்ஸோட பேசிட்டு இருக்கேன், ஆனா நீங்க…? உங்களை எல்லாம் திருத்தவே முடியாது!” எனச் சினத்துடன் அவனை விட்டு விலகி வெளியே சென்றாள் நித்திலா. எப்போதும் அவளைத் தடுத்து நிறுத்தும் விக்ராந்த், அன்று அவளைத் தடுக்கவில்லை…
நாட்கள் வேகமாக கடந்தது,…. ரிமைண்டர் போல் ‘இன்னும் இவ்வளவு நாட்கள் தான் பேபி என்கூட இருக்க போற’, என சொல்லி சொல்லியே அவளை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தான் விக்ராந்த்,…. அதே சமயம் அவளை தாங்கோ தாங்கென்றும் தாங்கினான்,…
அவனது இந்தச் செயல் நித்திலாவிற்கு ஒரு பழமொழியைத் தான் நினைவூட்டியது ‘குழந்தையைக் கிள்ளி விட்டுத் தொட்டிலையும் ஆட்டி விடுவார்கள் என்பார்களே அவனுக்கு அந்த பழமொழி சரியாக பொருந்தியிருந்தது,….
விக்ராந்தின் தீண்டல்களுக்குத் தானும் முழுச் சம்மதத்துடன் சந்தோஷமாக வாழ்ந்தாலும், மற்ற நேரங்களில் அவன் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்தாள் நித்திலா.
அவனோ, “கோவமா இருந்தா நீ இன்னும் அழகா இருக்க பேபி!” என அவள் கன்னத்தைக் கிள்ளிச் செல்லம் கொஞ்சுவான். அவன் கொஞ்சலில் அவளுக்குள் இருக்கும் கோபம் பனி போலக் கரைந்தாலும், வெளியே முறுக்கிக் கொண்டு திரிவாள்,….
அன்று டைனிங் டேபிளில் குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்திருந்தனர். வழக்கம்போல நித்திலாவும், சுமித்ராவும் அனைவருக்கும் அன்போடு பரிமாறிக்கொண்டிருந்தனர்.
அன்னலட்சுமிக்குக் குழம்பு ஊற்ற வந்த சுமித்ராவின் கை எதிர்பாராமல் தடுமாற, குழம்பு அன்னத்தின் பட்டுப் புடவையில் சிதறியது. அவ்வளவுதான்! அன்னலட்சுமியின் உள்ளுக்குள் இருந்த வன்மம் எரிமலையாய் வெடித்தது.
”ஏய் அறிவு கெட்டவளே! கண்ணு இல்லடி உனக்கு? இப்படியா மேல வந்து கொட்டுவ?” என வசைபாடத் தொடங்கினார்.
சுமித்ரா பதறிப்போய், “மன்னிச்சிடுங்க அத்தை, தெரியாம பண்ணிட்டேன்,” என அழாத குறையாகக் கெஞ்சினாள்.
ஆனால் அன்னம் விடுவதாயில்லை. “நீ வேணும்னு தான்டி பண்ணிருப்ப! எதையாவது ஒழுங்கா செய்றியா நீ? உன்னால எங்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்ல… எங்கேயாச்சும் போய் தொலையேன்டி! ஏன் இங்க இருந்து எங்க உசுர வாங்கிட்டு இருக்க?” அவரது வார்த்தைகள் எல்லை மீறிச் சென்ற அந்த நொடி… ”போதும் நிறுத்துங்க!” நித்திலாவின் உறுமல் சத்தம் அந்த அறையையே அதிர வைத்தது
தன் மனைவிக்காகப் பேச நினைத்த வித்தார்த் உட்பட, அங்கிருந்த அனைவரும் நித்திலாவைப் பார்த்த பிரம்மிப்பில் அப்படியே உறைந்து போயினர்.
”உங்க மனசுல என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க? அக்காவைத் திட்டற உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது?” நித்திலா நிமிர்ந்து நின்று அன்னலட்சுமியின் கண்களை நேராகப் பார்த்துக் கேட்டாள்.
”நானும் இந்த வீட்டுக்கு வந்த நாளிலிருந்து பார்த்துட்டு இருக்கேன். அக்கா எப்போதெல்லாம் உங்க கண்ணுல படுறாங்களோ, அப்போதெல்லாம் அவங்களை வார்த்தையால குத்திக் குதறுறீங்களே… நீங்க எல்லாம் என்ன மனுஷி? நீங்களும் ஒரு பொண்ணு தானே? ஒரு பொண்ணா இருந்துகிட்டு இன்னொரு பொண்ணை இப்படிப் பேச உங்களுக்கு நாக்கு கூசல?” நித்திலாவின் வார்த்தைகளில் நியாயம் அனலாகத் தெரிந்தது.
”அக்கா குழந்தை உண்டாகல அப்படிங்கிற ஒன்னைக் காரணம் காட்டி, அவங்களை மனசு நோகும்படி பேசுறீங்களே… உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்து, அவளும் இந்த நிலைமையில இருந்தா இப்படியெல்லாம் பேசுவீங்களா?”
”என்ன சொன்னீங்க? அக்காவால எந்தப் பிரயோஜனமும் இல்லையா? எனக்குத் தாய், தந்தை, உடன் பிறந்தவர்கள்னு இல்லாத குறையைப் போக்குனது என் சுமி அக்கா தான்! இந்த வீட்டுல உள்ள ஒவ்வொருவருக்கும் எது பிடிக்கும், பிடிக்காதுன்னு பார்த்துப் பார்த்துச் செய்யுறதும் இவங்க தான். இப்பேர்ப்பட்டவங்களைத் தொலைஞ்சு போன்னு சொல்ல எப்படி உங்களுக்கு மனசு வந்தது போறதா இருந்தா நீங்க தான் போகணும், சுமி அக்கா இல்ல!” – ஆதங்கத்துடன் நித்திலா முடிக்க, அன்னலட்சுமி ஆத்திரத்தில் துடித்தார்.
”ஏய்! யாரடி போகச் சொல்லுற? இது என் வீடு! நான் ஏன்டி இங்கிருந்து போகணும்?” என அவர் உரும, “உங்களுக்கு எப்படித் தன்மானம்னு வரும்போது கோவம் வருதோ, அப்படித் தானே மத்தவங்களுக்கும் இருக்கும்!” எனப் பதிலடி கொடுத்தாள் நித்திலா.
“இங்க வீட்டுக்கு வந்த ஒருத்தி என்னை இந்த போடு போட்டு பேசுறா, உங்க யாருக்குமே கேள்வி கேட்கணும்னு தோணல இல்ல” அன்னத்தின் கோபம் இப்போது தன் குடும்பத்தினரிடம் திரும்பியது,
சுற்றிலும் பார்த்த அன்னலட்சுமிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கணவர் லட்சுமணனோ, மகன்களோ யாரும் தனக்கு ஆதரவாகப் பேசாமல் மௌனமாக இருந்ததை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
”ச்சே!” என அவர்களை அருவருப்பாகப் பார்த்தவர், நித்திலாவை ஒரு குரோதப் பார்வையால் அளவெடுத்தார். ‘என்னையே அசிங்கப்படுத்திப் பேசிட்டல்லடி… உன்னைச் சும்மா விடமாட்டேன்!’ எனத் தன் மனதிற்குள் வஞ்சினத்தைக் கருவியபடி அங்கிருந்து நகர்ந்தார் அன்னம்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
16
+1
+1
1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


விக்ராந்த் என்னமோ பண்ற நீ … என்னன்னு தான் தெரியல … அதான் மண்ணை போட்டாச்சுல … இனி அள்ள முடியாது 😜😜😜😜
நித்தி சூப்பர் மா … நல்லா தான் பேசுன … ஆனா ஒரு வில்லி உருவாகிட்டாங்களே … உன்னை உன் புருஷன் வீட்டை விட்டு அனுப்பும் போது அன்னம் தான் அவனுக்கு சப்போர்ட் பண்ணுவாங்க போல …
சுமியை போலவே அவள் அப்பா அம்மாவும் அன்பானவர்களாக உள்ளனர். நித்திலாவை சொந்த மகள் போல் எண்ணுகின்றனர்.
விக்ராந்த் 🤣🤣
அதானே! அவன் தான் தெளிவா சொன்னானே நீயா தானே wanted da வந்து குழிக்குள்ள விழுந்த நித்திலா. இப்போ வந்து மண்ணு ஒட்டுச்சு, கண்ணு உறுத்துதுனு சொல்லிகிட்டு. சின்னப்புள்ளதனமா 🤣🤣
பொறுத்து பொறுத்து பார்த்த நித்திலா இன்னைக்கு பொங்கிட்டா. என்ன அன்னம் உங்க மகன்கள் கூட கண்டுக்காம சாப்பிட்ராங்க.