என் ஜன்னல் வந்த காற்றே…
இரயில் பயணங்கள் எல்லாம் அலாதி சுகத்தினைத் தரவல்லவை. அதிலும் ஜன்னலோரங்களில் தனி இருக்கையில் அமர்ந்து, வீசும் தென்றலை சுவாசிக்கும் பொழுதெல்லாம் ஈடு இணையற்ற மகிழ்வைத் தரும் தருணங்கள். இந்த வாழ்க்கை தான் எத்தனை அழகானது… இதனை ரசிப்பதற்கு இருவிழிகளும், இதழ்களில் இழையும் புன்னகையும், இளமையாய் ஒரு இதயமும் போதாதா என்ன? இருந்தும் ஏன் இந்த மனிதர்கள், இலக்கற்ற வாழ்வில் இடம், பொருள் மறந்து ஓடிக் கொண்டிருக்கின்றனர்? உலகினை உள்ளத்தில் நிறைக்க, ஒற்றை ரசனைப் பார்வை செலுத்த ஒரு கணம் இல்லையா இவர்களிடத்தில்…
இவ்வாறாக உலகத் தத்துவத்தை யோசித்துக் கொண்டிருந்தது ரயிலில் அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்த, அவனின் மூளை. கருப்பு நிற டிஷர்ட்டும், ஜீன்ஸும் அணிந்து அமர்ந்திருந்த, அவன் ப்ரணவ். எஞ்சினியரிங் முடித்த வேலையில்லா பட்டதாரி. மாநிறம், அடர்ந்த கேசம், குட்டி கண்கள், நீண்ட மூக்கு, சிவந்த இதழ்கள் என இயல்பான அழகுடன் இருப்பவன்.
அக்காவிற்கு குழந்தை பிறந்திருப்பதால், ஏற்கனவே அங்கு சென்றுவிட்ட, தன் அன்னைக்கு, ஒரு ஒத்தாசைக்காக அக்கா வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான். ஜன்னலோரத்தில் தனி இருக்கை அமைந்துவிட, தனியே அமர்ந்து இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தான்.
“உனக்கென்னப்பா வேலை, வெட்டியில்லாம டெய்லி வீட்டுல ஒக்கார்ந்து சாப்டுற, எப்ப வேணா ரசிப்ப… மத்தவங்கள்லாம் அப்டியா?” என அவனின் மனமே மானக்கேடாகக் கலாய்த்தது.
“நம்மளப் பெத்த விருமாண்டியோட சேர்ந்து சேர்ந்து, வர வர நம்ம மனசாட்சியும் நம்மளக் கேவலமா கால வார ஆரம்பிச்சுருச்சு. இத இப்டியே விட்றக் கூடாது ப்ரணவ்… நம்ம என்ன நாலு நாள்ல கெட்டுப் போற தக்காளி சோறா, நாலஞ்சு வருஷமானாலும் கெத்து போகாத தண்டச்சோறு…” எனப் பெருமையாக எண்ணிக்கொண்டவன்,
“ஹ்ம், படத்துல எல்லாம் ஹீரோ ட்ரெயின்ல போனா, எதிர்த்த சீட்ல அழகான பொண்ணு வந்து ஒக்காரும். நமக்கு அழகான பொண்ணு இல்லைனாலும், ஒரு அழகான ஆன்ட்டியாவது ஒக்காரக் கூடாது? இப்டி ஒரு எறா மீசயா வந்து ஒக்காரணும்? எல்லாம் விதி” எனத் தன் போக்கில் தலையில் அடித்துக் கொண்டான்.
அப்போது அவனால் எறா மீச என குறிப்பிடப்பட்டவரை ஒரு பெண் வந்து அழைக்க, “ஹிட்லர் மாதிரி அப்பனுங்களுக்கு தான், ஹீரோயின் மாதிரி பொண்ணு இருக்குது” எனப் பெருமூச்சு விட்டாலும், வஞ்சகமின்றி நன்கு சைட் அடித்தான் ப்ரணவ்.
“அப்பா அங்க ஒருத்தவங்ககிட்ட கேட்டேன், சீட் மாறிக்கிறாங்களாம். நீங்க அங்க வாங்க” எனக் கூறி அவரை, அப்பெண் அழைத்து செல்ல,
“அப்டியா, நல்லது நல்லது…” என சத்தமாகக் கூறியபடியே சென்றார் அவர்.
“லவுட் ஸ்பீக்கர முழுங்க ட்ரை பண்ணும்போது, தொண்டைலயே ஜாம் ஆகிருச்சு போல… என்னா சவுண்டுடா?” எனக் காதை அடைத்துக் கொண்டான் ப்ரணவ்.
“அடுத்து இங்க வந்து ஒக்காரப் போறதும், எப்டியும் எதாவது ஜான் சீனாவா தான் இருக்கும். எதுக்கு வீணா ஆசப்பட்டுக்கிட்டு?” என மனதைத் தேற்றிக் கொண்டவன், வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினான்.
நினைத்தது போலவே வந்து அமர்ந்தவர், முசோலினிக்கு மூன்றாவது சித்தப்பாவைப் போலிருக்க, “சத்திய சோதனடா…” என மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டவனின் கைப்பேசி இசைத்தது.
அன்நோன் நம்பராக இருக்கவே, புருவ முடிச்சுடன் எடுத்தவன், “ஹலோ…” என,
“ப்ரணவ்?” என அழுத்தமான ஒரு பெண் குரல் ஒலித்தது.
கண்களை சுருக்கி குழப்பமாக யோசித்தவன், “ப்ரகதி?” என கேள்வியாக இழுக்க.
“நானே தான்டா உல்பிஸ்…” என்றாள் ப்ரகதி.
“ஏ செம்மறி ஆடு, இன்னுமா இந்த பேர மறக்கல நீ?” என்று அவன் முறைப்புடன் கேட்க,
“ஆமா, நீ தான் எப்பவும் குள்ளநரி திருடக்கூடாதுன்னு சொன்னாலும் கேட்காம, குள்ளநரி மாதிரி, எல்லாரோட டிஃபன் பாக்ஸயும் எடுத்து சாப்புட்ருவியே? அதான் குள்ளநரியோட ஜூவாலஜிக்கல் நேம வச்சேன். நீ மட்டும் என்ன? இப்பவும் செம்மறி ஆடுனு தான கூப்டுற?” என்றாள் அவள்.
“ஆமா, ஒரு செம்மறி ஆடு பள்ளத்துல விழுந்தா, அடுத்து வர்றதெல்லாம் அதே மாதிரி விழும். நீ வேற க்ளாஸ் லீடரு… அதான், அந்த தலைமை ஆடு நீ தான்னு அந்த நிக்நேம வச்சேன்… உனக்கும் சூட்டபிளா இருக்குல்ல?” என,
“ஆமாமா சூட்டபிள் தான், எருமமாடே… இன்னும் ஸ்கூல்ல இருந்த மாதிரி தான் இருக்க நீ…” என்றாள் ப்ரகதி.
“இல்ல, அதவிட ஆறு வயசு அதிகமா இருக்கேன்” என ப்ரணவ் பல்லைக் காட்ட,
“ஐயோ” என தலையில் அடித்துக் கொண்டாள் அவள்.
“சரி சொல்லு ப்ளாக் ஷீப், எப்டி இருக்க? வீட்டுல எல்லாரும் எப்டி இருக்காங்க? குறிப்பா நம்ம தங்கச்சி எப்டி இருக்கா?” என அவன் கேட்க,
“எல்லாரும் நல்லாருக்கோம். குறிப்பா என் தங்கச்சி ரொம்பவே நல்லா இருக்கா… நீ எப்டி இருக்க? அம்மா, அப்பா, அக்கால்லாம் எப்டி இருக்காங்க?” என பதிலிறுத்துவிட்டு, அவனிடம் கேட்டாள் அவள்.
“எல்லாரும் நல்லா இருக்காங்க… நானும்… ஒரு மாதிரி, நல்லா தான் இருக்கேன்…” என அவன் கூறவும்,
“ஹ்ம்… அப்புறம் சார் என்ன பண்றீங்க?” என அவள் கேட்க,
“இங்க பாரு… இப்டில்லாம் கேட்ட, அப்புறம் ஃபோன வச்சிட்டுப் போயிருவேன், பாத்துக்க…” என்று மிரட்டினான் அவன்.
“ஓ, அப்ப நீ வி.ஐ.பியா இருக்கனு தெரிஞ்சுக்கலாம்…” என அவள் புன்னகையுடன் கூற,
“ப்ச், ஆமா…” என சலித்துக் கொண்டவன், “நீ என்ன பண்ற?” என அசுவாரசியமாகக் கேட்டான்.
“சின்னதா ஒரு இன்டீரியர் டெகோர் யூனிட் ரன் பண்ணிட்டு இருக்கேன், ஆறு பேர் வர்க் பண்றாங்க” என அவள் கூறியதில்,
“வாவ், சூப்பர்டி…” என உள்ளார்ந்த மகிழ்வுடன் கூறி விட்டு, “எனக்கும் அது படிக்கணும்னு தான் ஆசை, எங்க? எங்கப்பன் விருமாண்டியால போச்சு. எஞ்சினியரிங் படுகுழில விழுந்துட்டேன்” என அலுத்துக் கொண்டவன்,
சட்டென, “ஹே, அக்காக்கு பொண்ணு பிறந்துருக்கா. அங்க தான் போய்ட்டு இருக்கேன்” என உற்சாகமாகக் கூறினான்.
“என்னது? அக்காவுக்கு மேரேஜ் ஆகி, குழந்தையே பிறந்துருச்சா? பாவி, எதுக்காச்சும் ஒரு வார்த்த சொன்னியாடா நீ?” என அவள் கடுப்பாகக் கேட்க,
“சொல்ற அளவுக்கு நம்ம கான்டேக்ட்லயா இருந்தோம்?” என்றான் அவன்.
“நீ கான்டேக்ட்ல இல்லனு சொல்லு, நாங்க எல்லாருமே இப்ப வரைக்கும் பேசிட்டு தான் இருக்கோம். எத்தன தடவை உனக்கு கால் பண்ண ட்ரை பண்ணேன் தெரியுமா? உங்க பழைய வீட்டுக்கெல்லாம் போனேன். நீங்க வீடு மாறிட்டீங்கன்னு சொன்னாங்க” என,
“எல்லாருமே என்ன கான்டேக்ட் பண்ண ட்ரை பண்ணீங்களா? எனக்கு சத்தியமா தெரியாதுடி…” என அவன் வருந்தியதில்,
அவன் பேச்சை இடைவெட்டியவள், “இரு, இரு. எல்லாரும் இல்ல. நான் மட்டும் தான். இவரு அப்டியே இங்கிலாந்து இளவரசரு, எல்லாரும் வந்து தேடுறாங்க… ஆளப் பாரு” என முறைத்தபடி கூறினாள்.
“நீ தேடுனியா செம்மறி? எதுக்குத் தேடுன?” என ப்ரணவ் ஆர்வமாகக் கேட்க,
“வேற எதுக்குத் தேடப் போறேன்? எல்லாம் உனக்கு ப்ரப்போஸ் பண்றதுக்கு தான்” என கேசுவலாகக் கூறினாள் ப்ரகதி.
“எதே?” என அதிர்ந்தவன், “நீ ஏதோ சொன்ன… எனக்கு தான் அது தப்பா கேட்டுருச்சு…” என,
“கரெக்டா தான்டா கேட்டுச்சு. நா உன்ன ப்ரப்போஸ் பண்ண தான் தேடுனேன். கூடவே இருந்த வரைக்கும் ஒன்னும் தெரில. நீ எங்க இருக்க, என்ன பண்றன்னு கூட தெரியாதப்போ ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு. அப்ப கூட லவ்வுன்னு எல்லாம் தோணல. ஆனா, ஒவ்வொரு தடவையும் உன்னத் தேடி, நீ கிடைக்காதப்போ அப்டியே கண்ணெல்லாம் வேர்த்துரும். உன்மேல கோவம், கோவமா வரும். அப்போ தான் நீ இல்லாம, என்னால இருக்க முடியாதுன்னுத் தோணுச்சு. ஐ நோ, தட் ஐ’ம் ஃபாலிங் ஃபார் யூ. ஐ லவ் யூ ப்ரணவ்” என அலட்சியமாக ஆரம்பித்தவள், முழுக் காதலையும் குரலில் தேக்கிக் கூறி முடிக்க, ப்ரணவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
அவளே தொடர்ந்து, “யூ நோ வாட்? எனக்கு ரைட்டர் ஆகணும்னு தான் ஆசை. அதே மாதிரி ப்ளாக் ஆரம்பிச்சு, எழுதிட்டும் இருக்கேன். உனக்கு பிடிக்குமேன்னு தான் இன்டீரியர் டெக்கரேஷன் முடிச்சு இந்த யூனிட் ஆரம்பிச்சேன். நீ எப்டியும் இந்த லைன்ல போயிருக்க மாட்டன்னு தெரியும். அதான், நீ என்ன வேலை பாத்தாலும் அதுக்கு ஆப்பு வச்சு, உன்ன இங்கிட்டு இழுத்துட்டு வரலாம்னு பாத்தேன். பட், நல்லவேளை எனக்கு ஒரு வேலைய மிச்சம் பண்ண. சத்தியமா சொல்றேன், இந்த யூனிட் உருப்படாம தான் போய்கிட்டு இருக்கு. அதனால, நீ வந்து அத டேக் ஓவர் பண்ணிக்கோ. அப்டியே எனக்கு ஓகேவும் சொல்லு…” எனக் கட்டளையாக சொல்ல,
“என்னடி ஆர்டர் போடுற? அப்டில்லாம் ஓகே சொல்ல முடியாது. பிடிக்கலன்னா நோ தான் சொல்லுவேன். நா யோசிச்சு அப்புறமா சொல்றேன்” என அவன் கூறினான்.
“ப்ச், இப்பவே சொல்லுடா…” என அவள் துரிதப்படுத்த,
“ஃபோன்லல்லாம் சொல்ல முடியாது, போடி” என அவனும் பிடிவாதமாகக் கூறினான்.
“சரி, அப்ப நேர்ல சொல்லு. கதவுகிட்ட தான் நிக்குறேன்” என்றதில்,
தலையை முன்னும், பின்னும் திருப்பிப் பார்த்தவன், “எந்தக் கதவுடி?” என்றான்.
“அட, உனக்கு முன்னாடி, கம்பார்ட்மெண்ட் முடியுற இடத்துல இருக்க கதவு தான்” என ப்ரகதி அசால்ட்டாகக் கூற, ஃபோனை வைத்துவிட்டு வேகமாகக் கதவை நோக்கிச் சென்றான் ப்ரணவ்.
அங்கு, திறந்திருந்த கதவில் சாய்ந்தபடி, வெட்டப்பட்ட அலை, அலையான சிகை காற்றில் கலைந்து நெற்றியில் புரள, கோதுமை நிறத்தில், அளவான ஒப்பனையுடன், குறும்பு ததும்பும் மை பூசிய பெரும் விலோசனங்கள் வெளியே நோக்கியபடி, தன் ஸ்ட்ராபெர்ரி இதழ்களை ஈரப்படுத்தியவாறு, நின்றிருந்தாள் ப்ரகதி.
அவளுக்கு எதிரே சென்று, கைகளைக் கட்டிக்கொண்டு நின்ற ப்ரணவ், “இங்க என்னடி பண்ற?” என,
அவனைப் பார்த்து, “ஹாய்…” என ஈறுகள் தெரிய அழகாகப் புன்னகைத்தவள், “என்ன பண்றன்னா? ட்ரெயினுக்கு ட்ராக்கா மாத்தி விடப் போறேன்? உனக்காக தான் வெயிட் பண்றேன்” என்றாள்.
“நா ட்ரெயின்ல இருக்கேன்னு எப்டி தெரியும்?” என,
“நேத்து தான் உன் ஃபோன் நம்பர் அட்ரஸ் கிடைச்சது. அதான் நேர்ல பாக்கலாம்னு உன் வீட்டுக்கு வந்தா, எங்கேயோ கெளம்பி போன. சரின்னு ஃபாலோ பண்ணிட்டு வந்தா, ஜங்க்ஷன்ல மறைஞ்சு போயிட்ட. அப்புறம் தான் ட்ரெயின் ஏறுனதப் பாத்தேன். ட்ரெயின் கிளம்புற மாதிரி இருக்கவும், என்ன பண்றதுன்னுத் தெரியாம ஏறிட்டேன். ரொம்ப கூட்டமா இருந்தனால தான், ஃபோன் பண்ணேன், இல்ல நேராவே வந்துருப்பேன்” என்றாள் அவள்.
“ட்ரெயின்ல ஏறுன சரி, டிக்கெட் எடுத்தியா?” என சிரித்தபடி கேட்க,
தலையை சொறிந்தவள், “இல்லடா. ஒரு வேகத்துல ஏறிட்டேன். டி.டி.ஆர் கேக்கவும் தான் ஞாபகமே வருது” எனப் பாவமாக சொல்ல, அவன் கலகலவென நகைக்கத் தொடங்கிவிட்டான்.
“சிரிக்காதடா, இப்ப தான் ஃபைனக் கட்டுனேன்…” என்றதில், அவனால் சிரிப்பை அடக்க முடியாமல் வாயில் கை வைத்து சிரிக்க,
அவன் தலையில் தட்டியவள், “அப்டியும் அடுத்த ஸ்டேஷன்ல இறங்க சொல்லிட்டாங்க. அதுக்குள்ள சொல்லு” என்றாள்.
“என்னா சொல்லணும்?” என அவன் தெரிந்துகொண்டே கேட்க,
“ஐ லவ் யூ தான்…” என அவள் இயல்பாக சொன்னாள்.
“அதெல்லாம் சொல்ல முடியாது…” என அவன் கூற,
“சரிஇஇஇஇஇ… லவ்வுக்கு தான் சொல்லல, ஜாபுக்காவது ஓகே சொல்லு” எனக் கடுப்புடன் கூறியவள், அவன் இதழ் மடித்து சிரிப்பதைக் கண்டு,
“அதுக்கும் ஓகே சொல்லலைனு வையேன். உங்கப்பாகிட்ட போய் ‘நானே தேடி வந்து வேலை குடுத்தும், உங்க பையன் வேணாங்குறான்’ அப்டினு சொல்லிருவேன்” என்றாள்.
அதில் காண்டாகி, அவளைக் கண்கள் சுருங்க முறைத்தவன், “ஸ்கூல்ல இருந்து, இப்ப வரைக்கும் போட்டுக் குடுத்துக்கிட்டே இருக்க, ப்ளாக் ஷீப் வேலைய விட மாட்டியா?” என்றான்.
“ப்ச், இப்ப முடிவா என்ன சொல்ற?” என அவள் சலிப்புடன் கேட்க,
“முடியாதுன்னு சொல்றேன்…” என அவனும் அதே பல்லவியைப் பாடினான்.
அதற்குள் அடுத்த ஸ்டேஷனின் நடைமேடை வரத் தொடங்க, தவிப்புடன் அவன் முகத்தை ஏறிட்டவள், “அடுத்த ஸ்டேஷன் வந்துருச்சு ப்ரணவ்…” என்றாள்.
“வரட்டும்…” என அவன் அலட்சியமாகத் தோளைக் குலுக்க,
“இது சின்ன ஸ்டேஷன் தான். ட்ரெயின் டக்குனு கிளம்பிரும். நானும் பக்கத்துலயே பஸ்ஸப் பிடிச்சு, என் வீட்டுக்கே போயிருவேன்” என அழுத்திக் கூறினாள் ப்ரகதி.
“போன்னு தான சொல்றேன்…” என மீண்டும் அவன் கூற, ரயில் சிறிது, சிறிதாகத் தன் ஓட்டத்தை நிறுத்தியபடி இருந்தது.
“ட்ரெயின் வேற நிக்கப் போகுதுடா” என அவள் சற்று பதறியபடி கூற,
“நின்னதும் வீட்டப் பாத்துப் போ” என்றான் ப்ரணவ்.
ரயிலும் நின்றுவிட, கண்ணில் வலியுடன் அவனைப் பார்த்தவள், “அவ்ளோ தானா?” என,
அவளின் உயிர் உருக்கும் பார்வையிலும் அசராதவன், “அவ்ளோ தான்…” என வாசல்புறமாகக் கையைக் காட்டினான்.
விழியில் துளிர்க்க இருந்த நீரை, விடாமல் உள்ளேயே விழுங்கிக் கொண்டவள், அவனைப் பாராது தலையைக் குனிந்தபடி, “சாரி…” என்றவாறு இறங்கப் போக, அவளைப் பின்னோடு இடைபற்றி இழுத்தவன், தன்னோடு சேர்த்து அணைத்தபடி, அவள் கழுத்தில் ஆழமாகத் தன் இதழ்களைப் பதித்திருந்தான்.
ஒரு மோன நிலையில், இதழ்களை விலக்காமல், அவன் அதே நிலையில் இருக்க, ரயிலும் வேகமெடுத்து ஓடத் தொடங்கியது.
“ப்ரணவ்…” என அவள் மெலிதாய் குரல் நடுங்க அழைக்க, நிமிர்ந்தவன் நீர் துளிர்த்திருந்த, அவள் இமையில் அடுத்த முத்தத்தைப் பதித்திருந்தான்.
அவள் விழி மூடியபடி இருக்க, அவளை அணைப்பிலிருந்து விலக்காமல், அவள் தோளில் தாடையைப் பதித்தவன், “நீ என்னத் தேடுவன்னு நா நெனைச்சதேயில்ல. அதே மாதிரி உன்னத் தேடணும்னும் நெனைச்சதில்ல. எனக்கு உன்ன மாதிரி லாங் டெர்ம் லவ் ஒன்னும் கிடையாது. காலைல ஜங்க்ஷன்ல தான் நீ என்ன ஃபாலோ பண்ணதப் பாத்தேன். அப்போ நீ என்னத் தேடுனப்ப உன் கண்ணுல தெரிஞ்ச, காதலும், தவிப்பும்… ப்பா, ஓப்பனா சொல்றேன், மொத்தமா விழுந்துட்டேன். அந்த நிமிஷம் தான் தோணுச்சு, என் லைஃபோட ஜர்னி முழுக்க உன்கூட தான்னு. அதான் அப்பவே உனக்கும் சேர்த்து, கரண்ட் புக்கிங்ல டிக்கெட் எடுத்துட்டேன்” என்றான்.
சட்டென அவன்புறம் திரும்பியவள், காலரைக் கொத்தாகப் பற்றி, “அடப்பாவி டிக்கெட் எடுத்தியா? முன்னாடியே சொல்றதுக்கென்ன? ஐநூறு ரூவா தண்டம் கட்டாம இருந்துருப்பேன்ல… என்ன பண்ணலாம் உன்ன?” என,
சிரிப்புடன் அவள் மூக்கில், தன் மூக்கால் உரசியவன், “வேணும்னா டீப்பா ஒரு கிஸ் குடுத்து பனிஷ் பண்ணு” என்றான்.
“லவ் சொல்லி ஒரு மணிநேரம் ஆகல. அதுக்குள்ள எப்டி பேசுற நீ?” என அவள் கேட்க,
மீண்டும் சிரித்தவன், “அப்புறம் ஜாபுக்கு எவ்ளோ சேலரி குடுப்பீங்க மேடம்?” என்று கேட்டான்.
“ஒன்னும் குடுக்கமாட்டேன்…” என அவள் முறைக்க,
“சரி, அப்போ நானே எடுத்துக்குறேன்…” என்றவன், தன் இதழ் கொண்டு, அவள் இதழை மிருதுவாய் பற்றியிருந்தான். அவனின் முத்தத்தை முடித்து வைத்து விலகியவள், அவன் முகம் பார்த்து சிரிக்க, தானும் சிரித்தபடி அவள் நெற்றியில் முட்டியவன், “லவ் யூ ப்ரகதி…” என்றான்.
அவன் அணைப்புக்குள் சாய்ந்து கொண்டவள், அவனின் இதயத் துடிப்பைக் கேட்டவாறு, “எப்ப யூனிட்டப் பாக்குற?” என்றாள்.
அவளின் உச்சந்தலையில் கன்னத்தை வைத்திருந்தவன், “டூ டேஸ்ல… ஆனா, ஒன்னு, நா சேலரி வாங்கிட்டு தான் வேலை பாப்பேன். எந்த இடத்துலயும், நீ என்ன ப்ரியரைஸ் பண்ணக்கூடாது” என,
நிமிர்ந்து அவனை ஒருமாதிரி பார்த்தவள், ‘என்கிட்டயேவா?’ என எண்ணிக்கொண்டு, “ஓகே, ஆனா, வன் இயர்ல நல்ல டர்ன் ஓவர் காட்டுனா, ஃபிஃப்டி பர்செண்ட் ஷேர்ஸ உன் பேர்ல மாத்திருவேன். அதுக்கு ஒத்துக்கிட்டா வா” என்றாள்.
யாரோ வரும் அரவத்தில், அவளைத் தள்ளி நிறுத்தியவன், “ஃப்ராடுடி நீ…” என அவள் தலையில் கொட்டினான்.
“உனக்கெல்லாம் அப்டி இருந்தா தான் கரெக்டு…” என்றவள், படியில் காலைத் தொங்கப்போட்டு அமர்ந்துகொண்டு, அருகிலிருந்த இடத்தை அவனுக்குக் கண்ணால் காட்டினாள்.
அவள் அருகில் அமர்ந்தவன், “ஏண்டி என்ன இவ்ளோ லவ் பண்ற?” என்றான்.
“ஏன்னா உன்ன மாதிரி ஒரு இளிச்சவாயன், இந்த ஜென்மத்துல எனக்குக் கெடைக்க மாட்டான், அதான்…” என அவள் சிரிப்புடன் கூறியதில், அவனுக்கும் சிரிப்பு வந்தது.
உரிமையுடன் அவனின் தோளில் அவள் சாய்ந்துகொள்ள, அவனும் அவளின் இடக்கையைத் தன் வலக்கைக்குள் அடக்கிக் கொண்டான். இருவரின் வதனத்தில் நிறைந்திருந்த, புன்னகையை சமிக்ஞையாகப் பெற்று, அவர்களின் காதல் இரயில், தன் முடிவுறா பயணத்தைத் தொடங்கியது.
-முற்றும்-
-லக்ஷா-
Super story…
Thanks a lot sis…
கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான காதல் கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.
Thank u so much sis…