737 views

சுடர் 7

மாயாவின் குடும்பத்தினரை அந்த பாழடைந்த இடத்திற்கு அழைத்து வந்த செய்தி கிடைத்ததும், நிரஞ்சன் கிளம்பிவிட்டான். அவன் இருக்கும் இடத்திலிருந்து கிட்டத்தட்ட மூன்று மணி நேர தொலைவையுடைய அந்த இடத்தை இரண்டு மணி நேரங்களிலேயே அடைந்துவிட்டான்.

அத்தனை வேகம் அவனிடம்! அவனுள் கனன்று கொண்டிருந்த பழியுணர்வின் தாக்கமோ என்பதை அவன் மட்டுமே அறிவான்.

அவன் வந்ததை அவனின் வாகனத்தின் ஒலி கொண்டு அறிந்த அவனின் நண்பன் சாரதி, “ஹே என்ன மேன் அதுக்குள்ள வந்துட்ட? அவ்ளோ ஸ்பீடாவா வந்த?” என்று அவனின் வேகத்தை சற்று தணிக்க முயன்றான்.

ஏனெனில், நிரஞ்சன் இதே வேகத்தில் உள்ளே சென்றால், உள்ளிருப்பவர்களின் நிலை என்னவாகும் என்று சாரதி நன்கறிவான்.

“ம்ம்ம்.” என்ற உறுமலுடன் அந்த கட்டிடத்திற்குள் நுழைந்தான் நிரஞ்சன்.

சாரதியும் ஒரு பெருமூச்சுடன் அவன் பின்னே சென்றான்.

நிரஞ்சனிற்கும் தன் வேகம் அப்போது தான் புரிந்திருக்க வேண்டும். அந்த கட்டிடத்தின் வரவேற்பறை போன்ற இடத்தில் நின்றவன், கண்களை மூடி பெருமூச்சை வெளியிட்டு தன்னைத்தானே சமன்படுத்திக்கொண்டான்.

“என்னால இப்போ அவங்களை நேரடியா விசாரிக்க முடியாதுன்னு நினைக்குறேன்.” என்று நிரஞ்சன் கூற, அவன் தோளில் கைவைத்த சாரதி, “புரியுது டா, நானே அவங்களை விசாரிக்கிறேன். நீ, இவங்களோட அந்த ரூமுக்கு போ. அங்கயிருந்து நான் விசாரிக்கிறதை பாரு.” என்று அவன் ஆட்களுடன் நிரஞ்சனை அனுப்பி வைத்தான்.

மாயாவின் குடும்பத்தினரை அடைத்து வைத்திருக்கும் இடத்தைக் காணும் வகையில் இருந்த மற்றொரு அறைக்குள் சாரதியின் ஆட்களுடன் சென்றான் நிரஞ்சன். அங்கிருந்து அந்த ஐவரின் உடல்மொழிகளையும், முகபாவனைகளையும் தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருந்தான்.

சாரதி அதற்குள், மாயாவின் குடும்பத்தினரை அடைத்து வைத்த அறைக்குள் சென்றான்.

அவனைக் கண்டதும், அந்த நடுத்தர வயதுடைய ஆண் (சபாபதி – மாயாவின் சித்தப்பா) சாரதியிடம், “சார், எங்களை எதுக்கு இங்க அடைச்சு வச்சுருக்கீங்க? எங்க பிள்ளைகளை காணோம்னு கம்ப்ளைன்ட் பண்ண போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டு போறேன்னு எங்கயோ கூட்டிட்டு வந்துருக்கீங்க?” என்று சத்தம் போட்டார்.

“எது, நீங்க உங்க பிள்ளைகளை காணோம்னு சொன்னீங்களா? நாங்களா வந்து விசாரிச்சதால சொன்னீங்க. அது சரி, உங்க பிள்ளைங்க மேல உண்மையான அக்கறை இருந்தா தான இதெல்லாம் எதிர்பார்க்க முடியும்!” என்று சபாபதிக்கு குட்டு வைக்க, அவரின் முகம் கறுத்து தான் போனது.

கணவனை அசிங்கப்படுத்துவதை தாங்க முடியாத மனைவியாக, “அப்போ எங்களுக்கு அக்கறை இல்லைன்னு சொல்ல வரீங்களா? அக்கறை இல்லாம தான் எங்க பிள்ளைகளுக்காக, நீங்க எங்க கூப்பிட்டாலும் உங்க பின்னாடியே வரோமா?” என்றார்.

“இந்த அக்கறை அவங்க காணாம போனப்போவே வந்துருக்கணும். அப்போ நீங்களும் காணாம போயிட்டு, இப்போ வந்து அக்கறைன்னு பேசுறதுல என்ன நியாயம்? அப்பறம் என்ன சொன்னீங்க, உங்க பிள்ளைங்க மேல இருக்க அக்கறையால, நாங்க சொல்ற இடத்துக்கு எல்லாம் வரீங்க, அப்படிதான? ஹான் நம்பிட்டேன்.” என்று கணவனிற்கு அளித்ததில் சற்றும் குறைவில்லாமல் மனைவிக்கும் அளித்தான் சாரதி.

இவனின் பேச்சைக் கேட்ட மற்ற மூவரில் இருவர், ‘எதற்கு வம்பு’ என்று வாயை மூடிக்கொள்ள, மற்றவரோ நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. மற்றவர்களை விட, முதுகெலும்பே இல்லாத அந்த ஒருவரைக் காணும்போது தான் சாரதிக்கும் நிரஞ்சனிற்கும் கோபம் அதிகமானது.

அதைக் காட்டிக்கொள்ளாமல், “சரி, இப்போ எதுக்கு அதெல்லாம்? நம்ம விசாரணயைத் தொடங்குவோம்.” என்று கைகளை மேலே தூக்கி நெட்டி முறித்தபடி சாரதி கூற, அதைக் கேட்ட மற்றவர்களின் முகம் வெளிறிப் போனது.

“மாயா, நவீன், சம்பூர்ணா – இவங்க மூணு பேரும் உங்க குடும்பத்து வாரிசுங்க சரியா? என்று சாரதி கேட்க, “ஆமாங்க சார். மாயா என் அண்ணன் பொண்ணு. நவீனும் சம்பூர்ணாவும் என்னோட பசங்க.” என்று சபாபதி பம்மினார்.

“ம்ம்ம், இப்போ அவங்க எங்க?” என்று சாரதியிடமிருந்து அடுத்த கேள்வி வர, இப்போது வெளிப்படையாகவே நடுங்கியபடி, “அவங்களை தான் காணோம்னு சொன்னோமே!” என்று கூறினார் சபாபதி.

“ஓஹ்!” என்று சாரதி  நம்பாத பார்வை பார்க்க, அப்பார்வையினை தாங்க முடியாத சபாபதி, “நேத்து நைட்டு எங்க வீட்டுலயிருந்து காணோம் சார்.” என்று பதற்றமாக கூறினார்.

“அப்படியா? ஆனா, நீங்க நேத்து நைட்டு குடும்பத்தோட வெளிய போறதா அக்கம்பக்கத்துல இருக்குறவங்க கிட்ட சொல்லியிருக்கீங்க. ஓஹ், அப்போ இவங்க மூணு பேரும் உங்க குடும்பத்துல சேர்த்தி இல்லையோ?” என்று நக்கலாக வினவ, அந்த களேபரத்திலும் சபாபதியின் முகத்தில் கணப்பொழுதில் கோபம் தோன்றி மறைந்தும் போனது.

“அக்கம்பக்கத்துல சொன்னதுக்கு அப்பறம் ஒரு சின்ன பிரச்சனையால, பிள்ளைகளை வீட்டுல விட்டுட்டு நாங்க மட்டும் போனோம் சார்.” என்று சமாளித்தார் சபாபதி.

சாரதி வாய் விட்டு எதுவும் வினவாமல், ‘ஏன்’ என்று கண்களால் வினவ, “என் பொண்ணுக்கு கோவிலுக்கு வர முடியாத சூழ்நிலை, அதான் அவளை வீட்டுல விட்டுட்டு போனோம். துணைக்கு அவ தம்பி தங்கச்சியையும் கூட விட்டுட்டு போனோம்.” என்று இம்முறை பதில் வந்தது, இதுவரை நிமிர்ந்து கூட பார்க்காதவரிடமிருந்து!

“நீங்க தான் மாயாவோட அம்மா ரைட்?” என்று வேண்டுமென்றே நக்கலை வரவழைத்த குரலுடன் சாரதி வினவ, அது, “நீங்க எல்லாம் அவளோட அம்மாவா?’ என்பது போல அவருக்கு கேட்டிருக்க வேண்டும். அந்த சூழ்நிலையை எப்படி கையாள்வது என்று தெரியாமல் கூனி குறுகிப்போனார் பிரபாவதி, மாயாவின் அன்னை.

“சார், இப்போ எதுக்கு எங்களை விசாரிச்சுட்டு இருக்கீங்க? எங்க பிள்ளைகளை காணோம். எனக்கென்னவோ அந்த சிறுக்கி மேல தான் சந்தேகமா இருக்கு… சரியான சமயம் பார்த்து யாரோடவோ ஓடிப் போயிருப்பா. அதான் முன்னாடியே ஒருத்தனை கூட்டிட்டு வந்து நின்னாளே. அதனால அவளைப் பத்தி எங்களுக்கு கவலை இல்ல சார். மத்த ரெண்டு பேரை கண்டுபிடிச்சு கொடுங்க.” என்று அத்தனை நேரம் வாயை அடக்க படாதபாடு பட்டுக்கொண்டிருந்த மற்றொரு பெண் கூற, அவரருகே நின்றிருந்த மாயாவின் அன்னையின் கண்களில், ஏற்கனவே காய்ந்திருந்த கண்ணீர் தடத்தின் மேல் புதிதாக கண்ணீர் பெருகியது.

“உங்க அக்காக்கு வாய் சும்மாவே இருக்காது. இப்போ அவங்க அவ ஓடிப்போற கதையெல்லாம் கேட்டாங்களா? அவங்களாச்சும் கேள்வி கேட்டுட்டு விட்டுருப்பாங்க. இப்போ இப்படி பேசி இவங்களே நம்ம மேல சந்தேகம் வர வச்சுடுவாங்க போல. எல்லாம் அவங்க தறுதலை மகனை மாயா கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னதால! ஹ்ம்ம், எப்போ தான் திருந்த போறாங்களோ? பேரு மட்டும் அமிர்தா, பேசுறதெல்லாம் விஷம் தான்!” என்று சபாபதியின் மனைவி கன்னிகா அவரின் காதைக் கடித்தாள், சாரதிக்கு கேட்காது என்ற எண்ணத்தில்.

ஆனால், இதே துறையில் பல ஆண்டுகளாக இருப்பவனிற்கு இதெல்லாம் சர்வசாதாரணம் என்று அறியாது போனது அவளின் துரதிஷ்டமோ!

கன்னிகா இதை அறியவில்லை என்றாலும், சாரதியின் நிமிட நேர முகபாவனையைக் கொண்டு, அவரின் மனைவி பேசியதைக் கேட்டுவிட்டான் என்று அறிந்து கொண்டார் சபாபதி. “அக்காவை சொல்றதுக்கு முன்னாடி, நீ இப்போ என்ன பண்ணிட்டு இருக்கன்னு தெரிஞ்சுக்கோ. அக்காவை குறை சொல்ற இடமா இது?” என்று மனைவியை திட்டவும் மறக்கவில்லை.

“ஓஹ், அப்போ இது ஓடிப்போன கேஸா?” என்று மாயாவின் அன்னையைப் பார்த்து வினவியபோது, கண்ணீரைத் தவிர வேறு எந்த பதிலும் அவரிடம் இல்லை.

‘உஃப், இப்போயாச்சும் வாயைத் திறந்து அவங்க பொண்ணு தப்பு பண்ணலன்னு சொல்றாங்களா?’ என்று மனதிற்குள் எரிச்சல் பொங்கியது சாரதிக்கு.

“அதெல்லாம் எங்களுக்கு தெரியாது சார். எங்க பிள்ளைகளை காணோம்.  கண்டுபிடிச்சு கொடுங்க. அவ்ளோ தான்.” என்று மனைவி மேல் ஏற்பட்ட கோபம் நீங்காமல் இருக்க, அவரிடம் பயன்படுத்திய அதே த்வனியை சாரதியிடமும் பயன்படுத்தி விட்டார்.

“ஹ்ம்ம் அப்போ, ‘குடும்பத்துல இருக்குறவங்களே இருட்டு அறையில அடைச்சு எங்களை கொலை செய்ய பார்த்தாங்க’ன்னு மூணு பேர் கம்ப்ளைன்ட் கொடுத்துருக்காங்களே, அதுக்கு என்ன பதில் சொல்லப்போறீங்க?” என்று இதுவரையில்லாத கடுமையான குரல் வெளிவந்தது சாரதியிடமிருந்து.

அதைக் கேட்ட மற்றவர்களின் முகமும் இதுவரையில்லாத அளவில் வெளுத்துப் போனது. பிள்ளைகள் மூவரும் எங்கோ சென்று மறைந்து விட்டனர் என்று தான் இதுவரை நினைத்திருந்தனர். அதனாலேயே சாரதி அவர்களிடம் விசாரிக்கும்போதும், அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்தபோதும் மறுப்பு சொல்லாமல் கிளம்பியது அந்த குடும்பம்.

ஆனால், இப்போது சாரதி சொல்லியதை வைத்து பார்க்கும்போது, அம்மூவரும் இவர்களிடம் சிக்கி, தங்களையும் சிக்க வைத்திருக்கின்றனர் என்பதை அறிந்து கொண்டனர்.

சபாபதி மற்றும் கன்னிகா அதிர்ச்சியில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருக்க, பிரபாவதி மகளின் நிலையை அறிய முடியாத துரதிர்ஷ்டசாலியாக மௌனமாக அழுதார். அந்த சூழலிற்கு சற்றும் பொருந்தாதவாறு நின்று கொண்டிருந்தவர்கள், அமிர்தாவும் அவரின் மகன் ராஜேஷும் தான்.

‘இன்னும் அவங்க சாகலையா?’ என்ற பார்வையுடன் நின்றிருந்தவர்களை நொடிக்குள் கண்டுகொண்டனர் சாரதி மற்றும் நிரஞ்சன்.

சாரதியின் பார்வையை சரியாக கண்டுகொண்ட அமிர்தா, “சார், என்ன சொல்றீங்க? நாங்க எதுக்கு எங்க வீட்டு பசங்களை அப்படி அடைச்சு  கொலை செய்ய முயற்சிக்கணும்? இதெல்லாம் அபாண்டமான குற்றச்சாட்டு… முதல்ல எங்க பிள்ளைங்க எங்கன்னு சொல்லுங்க. எனக்கென்னமோ, நீங்களே அவங்களை கடத்திட்டு இப்படி எங்களை மாட்டி விட முயற்சிக்கிறீங்களோன்னு தோணுது!” என்று பேச, அதுவரையிலும் இதிலிருந்து எப்படி வெளிவருவது என்று நினைத்துக்கொண்டிருந்த சபாபதிக்கு, அவரின் அக்கா வழியை மேலோட்டமாக போட்டுக்கொடுக்க, “ஆமா சார், நீங்க யாரு முதல்ல? போலீஸா இருந்தா, எங்களை ஸ்டேஷன் கூட்டிட்டு போகாம, இங்க எதுக்கு கூட்டிட்டு வந்துருக்கீங்க?” என்று கத்த ஆரம்பித்தார்.

“அக்காவும் தம்பியும் டாபிக்கை மாத்த நல்லாவே முயற்சி செஞ்சுருக்கீங்க, வாழ்த்துகள்!” என்று நக்கலாக கூறிவனின் அலைபேசி ஒலியெழுப்ப, அவர்களை தற்காலிகமாக தனியாக விட்டுவிட்டு, அந்த அறையை விட்டு வெளியே வந்து அலைபேசியிலிருந்த செய்தியை படிக்க ஆரம்பித்தான்.

அவன் சென்றதும் சற்றும் தாமதிக்காமல் சபாபதியின் அருகே வந்த அமிர்தா, “என்ன டா தம்பி, அதுங்க மூணும் இவங்க கைல சிக்கியிருக்காங்க போல. அதுவுமில்லாம, நம்ம பண்ணதையெல்லாம் சொல்லிட்டாங்க போல. இப்போ என்ன பண்றது?” என்று தன் கீச்சுக்குரலை சிரமப்பட்டு குறைவாக்கி பேசினார்.

“அதான் அக்கா எனக்கு ஒன்னும் புரியல. நாமளும் அவங்களை எல்லா இடத்துலயும் தேடிட்டோம். இவங்ககிட்ட எப்படி சிக்குனாங்கன்னு தான் தெரியல? அதுவுமில்லாம இவங்களைப் பார்த்தா போலீஸ் மாதிரியும் தெரியல.” என்று குழப்பமாக கூறினார் சபாபதி.

“ஹ்ம்ம், எனக்கென்னமோ அந்த சிறுக்கி செஞ்ச வேலை தான் இதுன்னு தோணுது. பிறந்ததுக்கு ஏதாவது உருப்படியா பண்ணனும்னு இருக்கா அவளுக்கு! முதல்ல காதலிக்குறேன்னு எவனையோ இழுத்துட்டு வந்து நம்ம மரியாதையை கெடுத்தா, இப்போ நம்ம அண்ணனைக் காப்பாத்தலாம்னு நினைச்சு நம்ம பரிகாரம் செஞ்சா, அதையும் கெடுத்து விட்டிருக்கா.” என்று புலம்ப, பிரபாவதிக்கு அவற்றை கேட்கவும் பிடிக்கவில்லை.

ஏற்கனவே, தன்னால் தானோ தன் மகளிற்கு இத்தனை துன்பங்கள் நேர்கிறது என்று தன்னையே நொந்து கொண்டிருப்பவருக்கு, அமிர்தாவின் குத்தல் பேச்சு எப்போதும் இல்லாத அளவிற்கு மிகுந்த எரிச்சலை உண்டாக்கியது உண்மையே.

அதற்காக, தன் பிறவிக் குணமான, ‘குட்டகுட்ட குனிவதை’ விட்டுவிட்டு எதிர்த்து பேசிவிடுவாரா என்ற கேள்வி வந்தால், அவரே கண்களை மூடிக்கொண்டு, ‘இல்லை’ என்று பதிலளிப்பார். பிறவிக் குணமாயிற்றே! அத்தனை எளிதில் அதிலிருந்து வெளிவந்து முடியுமா!

இவருக்கும் சேர்த்து கன்னிகா பேச முயன்றார். “அண்ணனை காப்பாத்தணும்னு நினைச்சா, அவங்க மகனை பலி கொடுக்க வேண்டியது தான. மத்தவங்க பிள்ளைன்னா, வாய் கிழிய பேச வேண்டியது.” என்று முணுமுணுக்க, “உன் பொண்டாட்டி பேசுறதைப் பார்த்தியா டா சபா, நான் என்னமோ, உன் பிள்ளைங்க மேல வஞ்சம் வச்சு இந்த பரிகாரத்தை செஞ்ச மாதிரி குதிக்கிறா! அந்த சாமியார் சொன்னப்போ இவளும் அங்க தான இருந்தா, அப்போவே இந்த பரிகாரம் வேண்டாம்னு சொல்ல வேண்டியது தான?” என்று நொடித்துக்கொண்டார் அமிர்தா.

“க்கும்… அவரு சொன்னது மாயாவை மட்டும் தான். நவீனையும் பூர்ணாவையும் கோர்த்து விட்டது நீங்க தான?” என்று கன்னிகா கேட்டார்.

“ஓஹ், அப்போவே சொல்லியிருக்க வேண்டியது தான? காசுன்னதும் வாயைப் பிளந்துட்டு தான நின்ன! இப்போ என்ன பிள்ளைங்க மேல திடீர் பாசம்?” என்று அமிர்தா பேச, இப்போது நேரடி சண்டையாகிப்போனது இருவருக்கும்.

கன்னிகாவோ கணவனை முறைக்க, அத்தனை நேரம் இருவரின் சண்டையில் தலையிடாமல் இருந்த சபாபதி, இனியும் தாமதித்தால் தன் தலை தான் உருளும் என்ற எண்ணத்தில், “ப்ச், இப்போ இந்த சண்டை ரொம்ப முக்கியமோ? நாம எந்த சூழ்நிலைல இருக்கோம்னு புரிஞ்சுக்காம, ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டு இருக்கீங்களே!” என்று கூறியவர், “நீயாவது உங்க அம்மாக்கு சொல்லி புரிய வை டா.” என்று அத்தனை நேரம் நடந்து கொண்டிருந்த சண்டையை சுவாரசியமாக பார்த்துக்கொண்டிருந்த ராஜேஷை பார்த்துக் கூற, தன் பொழுதுபோக்கு பறிபோன கடுப்பில் தன் தாயை அழைத்துக்கொண்டு, சற்று தள்ளி நின்றான்.

அவர்கள் சென்றதும், “இந்த பேச்செல்லாம் எனக்கு தேவையா? எல்லாம் உங்களால தான. அன்னைக்கே நம்ம பிள்ளைகளை இதுல இழுக்க வேண்டாம்னு சொன்னப்போ பெருசா ‘நான் பார்த்துக்குறேன்’னு சொன்னீங்க, இப்போ என்னாச்சு?” என்று முகத்தை திருப்பிக்கொண்டார்.

மற்ற மூவரும் பேச பேச, தனக்கு தெரியாமல் இத்தனை நடந்துள்ளதா என்று திகைத்தார் பிரபாவதி. இவர்கள் சுயநலமானவர்கள் என்று தெரியும். ஆனால், இத்தனை தூரம் கொடூர உள்ளம் கொண்டவர்கள் என்று தெரியவில்லை பிரபாவதிக்கு. அதை தெரிந்து கொண்டபோது நெஞ்சமெல்லாம் பதைபதைத்தது, மகளின் நிலை எண்ணி!

அன்று கூட, குலதெய்வ கோவிலுக்கு, தன் கணவனிற்காக வேண்டிக்கொள்வதற்காக கூட்டிக்கொண்டு சென்றனர் என்று தானே நினைத்தார். தன்னை அங்கு கூட்டிச்சென்று, இங்கு தன் மகளை கொடுமை படுத்தியிருக்கிறார்களா என்று நினைத்தவரின் மனமும் முகமும் கசங்கியது.

‘முன்னரே, இதைப் பற்றி மாயா எச்சரித்தாளே, அப்போதெல்லாம் அவளின் மேல் தவறென்று எரிந்து விழுந்தேனே! அச்சோ என் பொண்ணு என்னென்ன பாடு பட்டாளோ?’ என்று தாயாகிய அவரின் மனம் முதல் முறை மகளுக்காக தவித்தது.

தாய் மனம் தவித்துக்கொண்டிருந்த வேளையில், சாரதி மீண்டும் அந்த அறைக்குள் நுழைந்தான்.

“க்கும்… அப்போ என்ன சொன்னீங்க? நாங்க உங்களை மாட்டி விட முயற்சிக்கிறோமோ? உங்க பிள்ளைங்க தான் உங்களை மாட்டி விட்டுருக்காங்க.” என்று கூறியவன், அவன் அலைபேசியிலிருந்த ஒலிப்பதிவை இயக்கினான்.

அதில் சம்பூர்ணாவின் மழலைக் குரல் கேட்டது.

“அம்மா, அப்பா, பெரிம்மா, அத்த, அப்பறம் ராஜ் மாமா எல்லாரும் எங்கள விட்டுவிட்டு டாட்டா போயிட்டாங்க. அப்பறம் கொஞ்ச நேரத்துல எனக்கு தூக்கம் வந்துடுச்சு. தூங்கி முடிச்சு நான் எந்திரிச்சு பார்த்தேன். அண்ணா, மாயாக்கா, நான் மூணு பேரும் ஒரு பிளாக் ரூம்ல இருந்தோம். மாயாக்காவும் அண்ணாவும் தூங்கிட்டு இருந்தாங்க. எனக்கு பயமா இருந்துச்சு. நான் அண்ணாவ எந்திரி எந்திரின்னு சொன்னேன். ரொம்ப நேரம் கழிச்சு தான் எந்திரிச்சான். அப்போ அவனுக்கும் பயமா இருந்துச்சா ரெண்டு பேரும் ஓரமா உட்கார்ந்துட்டோம். அப்போ அந்த ரூமுக்கு வெளிய ராஜ் மாமா பேசிட்டு இருந்தாங்க. நான் அவங்களை கூப்பிடலாம்னு சொன்னப்போ, அண்ணா தான் என் வாயை இப்படி கைவச்சு மூடிட்டான்.” என்று நிறுத்தியிருந்தாள் சம்பூர்ணா.

“உங்க ராஜ் மாமா மட்டும் தான் பேசுனாங்களா?” என்று யாரோ வினவ, “இல்லையே, அப்பாவும் பேசுனாங்க. ஆனா, ராஜ் மாமா தான் சத்தமா பேசுனாங்க. அப்பறம், கொஞ்ச நேரத்துல அவங்களும் பேசலையா, எனக்கு இன்னும் பயமாகிடுச்சு. நான் அண்ணாட்ட ‘ராஜ் மாமாவை கூப்பிட்டு கதவை திறக்க சொல்லலாம்’னு சொன்னேன். ஆனா, ‘அவங்க கதவைத் திறக்க மாட்டாங்க’ன்னு அண்ணா சொல்லிட்டான். அப்பறம் நாங்க ரெண்டு பேரும் மாயாக்காவை எழுப்ப போனோம். மாயாக்கா எந்திரிச்சதும் தான் கொஞ்சம் பயம் போச்சு. கொஞ்ச நேரத்துல யாரோ அந்த டோர் ஓப்பன் பண்ணாங்க. அப்போ மாயாக்கா, அங்கயிருந்த பெரிய கட்டை வச்சு வந்தவங்களை அடிச்சாங்க. அவங்க ரொம்ப பேட் பாய்ஸ், அவங்க மாயாக்காவை கீழ தள்ளி விட்டாங்க. அப்பறம் ஒரு பெரிய கட்டை வச்சு மாயாக்காவை அடிக்க வந்தாங்க. நானும் அண்ணாவும் தான் அவங்களை தள்ளிவிட்டோம். அப்போ அவங்க எங்களையும் அடிச்சாங்க. ஆனா, மாயாக்கா தான் எங்களுக்கு முன்னாடி வந்து நின்னு அந்த அடியெல்லாம் வாங்குனாங்க. மாயாக்கா அவங்க எல்லாரையும் தள்ளிவிட்டு, எங்களையும்  அந்த ரூமை விட்டு வெளிய கூட்டிட்டு வந்து, அந்த ரூமை பூட்டிட்டாங்க.” என்று அவளிற்கு தெரிந்த வகையில் கூறினாள் சம்பூர்ணா.

அதைக் கேட்ட ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.

பிரபாவதி, தன் மகள் பட்ட காயங்களை எண்ணி கண்ணீர் சிந்த, அவருக்கு கொஞ்சமும் குறையாமல் கன்னிகாவும் இருந்தார். தன் மகவு என்று வந்தால் தான் கண்கள் கூட கண்ணீர் வடிக்குமோ!

மகளின் பேச்சைக்கேட்ட சபாபதி இறுகிப்போயிருந்தார். கன்னிகா கூறியதைப் போல, தன் பிள்ளைகளை இதில் இழுத்திருக்க கூடாதோ என்று எண்ணினார் அந்த தந்தை. தான் கூறியதை செய்யாமல் விட்ட, அக்கா மகனின் மேல் அப்போது கோபமாக வந்தது அவருக்கு. அப்போதும் அண்ணன் பெண் மேல் கருணை வரவில்லை போலும்!

அமிர்தாவோ, ‘இந்த சின்ன சிறுக்கி, என் பையன் பேரை இழுத்து விட்டுருக்காளே.’ என்று நினைத்து அதிலிருந்து எவ்வாறு வெளிவருவது என்று யோசிக்க ஆரம்பித்தார்.

அவருக்கு சட்டென்று சம்பூர்ணாவின் மழலைக்குரல் நினைவு வர, “சார், அது சின்ன குழந்தை சார். ஏதோ கனவு கண்டுட்டு பேசுது போல.” என்று சமாளித்தபடியே, சபாபதியை பார்க்க, அவரோ இன்னமும் மகளின் குரலிலிருந்து வெளிவரவில்லை. இதில் தம்பியின் உதவி கிடைக்காது என்று எண்ணியவர் தானே பேச ஆரம்பித்தார்.

“ஓஹ், அப்போ யாரு சொல்றதை தான் நம்புவீங்க நீங்க?” என்று சாரதி வினவ, ‘மத்த ரெண்டு பேரையும் பேச வச்சு எடுத்திருப்பானோ?’ என்று யோசித்த அமிர்தா, “இதெல்லாம் அந்த மாயாவோட வேலை தான் சார். எங்க பிள்ளைங்க ரெண்டு பேரையும் ஏதேதோ சொல்லி மயக்கியிருக்கா.” என்று அமிர்தா பேச, அவரை முதல் முறையாக முறைத்தார் பிரபாவதி.

‘என்னடா இது இவங்க எதுக்கெடுத்தாலும் மாயா பேரை சொல்றாங்க?’ என்று எரிச்சலாக நினைத்தான் சாரதி. அப்போது மீண்டும் அவனிற்கு அழைப்பு வர, அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அந்த அறைக்கு வெளியே வந்தான்.

அவன் வரவிற்காகவே காத்திருந்ததைப் போல அந்த அறைக்கு வெளியே சற்று தள்ளி நின்றிருந்தான் நிரஞ்சன்.

“என்ன மேன் இது? நீ சொன்ன மாதிரி அந்த ஆடியோவை போட்டுக் காமிச்சா, அவங்க வாயிலயிருந்து ஏதாவது உண்மை வெளியவரும்னு பார்த்தா, அந்த அம்மா எதுக்கெடுத்தாலும் மாயா தான் காரணம்னு சொல்லுது. விட்டா, ரீசன்ட்டா பெஞ்ச மழைக்கும் வெள்ளத்துக்கும் கூட மாயா தான் காரணம்னு சொல்லுவாங்க போல.” என்று அலுத்துக்கொண்டான்.

“ஹ்ம்ம், படிச்சவங்களா இருந்தும் சுயபுத்தி இல்லாத இவங்ககிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்?” என்று காட்டமாக கூறியவன், “இவங்க வாயிலயிருந்து தானா எதுவும் வராது… அதுக்கு மாயாவோட அத்தை விடவும் மாட்டாங்க. அவங்க சொன்ன அந்த சாமியாரைப் பத்தி விசாரிப்போம். அதுவரைக்கும் இங்கயே இருக்கட்டும். மேபி அவங்க தனியா இருக்க நேரத்துல ஏதாவது லூஸ் டாக் விடுவாங்க. சோ அதை கேர்ஃபுல்லா கவனிக்க சொல்லு. அந்த சாமியார் பத்தி தகவல் தெரிஞ்சதும் சொல்லு. இப்போ நான் கிளம்புறேன்.” என்று வேகவேகமாக கூறியவன், சாரதியிடமிருந்து எந்த பதிலையும் எதிர்பார்க்காமல் வெளியே சென்று விட்டான் நிரஞ்சன்.

நிரஞ்சனின் இந்த செயலை பார்த்த சாரதி, ‘இதுக்கு எதுக்கு இவன் இவ்ளோ தூரம் வரணும்?’ என்று நினைத்தாலும், அவனின் இழப்பையும் அதற்கு காரணமான குடும்பத்தை நேரில் பார்க்கும்போது அவனின் மனநிலையையும் கணித்தவன் ஒரு பெருமூச்சுடன் அடுத்தகட்ட பணியை பார்க்கச்சென்றான்.

வாகனத்தை கிளப்பிய நிரஞ்சனின் மனமும் தன் கடந்த காலத்திற்கு பின்னோக்கி சென்றது. அவனின் சிறுவயதிலேயே அவனின் பெற்றோர் அவனை விட்டு விண்ணுலகம் சென்றபோதிலும் கூட, அது அவனை பெரிதாக தாக்கிவிடாமல் பாதுகாத்த அவனின் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்த காலங்கள் அது.

அவன் எதிர்பார்த்த சிறு பிரிவினை, அவனே எதிர்பார்க்காத நிரந்தர பிரிவினையை உருவாக்கும் என்று அப்போது தெரியவில்லை அவனிற்கு. தெரிந்திருந்தால், தன் கனவை கனவாகவே கலையவிட்டு, குடும்பத்திற்காக நாடு தங்கியிருப்பானோ!

தொடரும்…

வணக்கம் நட்பூஸ்…😍😍😍 லேட்டா எபி போட்டதுக்கு முதல்ல சாரி… அப்பறம் இந்த எபில நீங்க ஆவலுடன் (!!!) எதிர்பார்த்த அஷ்வினி கேங் வர மாட்டாங்க… அதுக்கு பதிலா நம்ம மாயா குடும்பத்தை இன்ட்ரோ கொடுத்துருக்கேன்… படிச்சுட்டு உங்க கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க நட்பூஸ்…😁😁😁 இதுவரை உங்க கருத்துக்களை பகிர்ந்துக்கிட்ட அனைவருக்கும் நன்றி…🙏🙏🙏

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
17
+1
1
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  Your email address will not be published. Required fields are marked *

  14 Comments

  1. Janu Croos

   அடப்பாவிகளா… காசுக்காக பெத்த புள்ளைங்களறே ஏதோ ஒரு டுபாகூர் சாமியார் சொன்னான்னு இருட்டு அறைக்குள்ள பூட்டி வச்சிருக்குதுங்க….அண்ணன் ளேல பாசம் இருக்கனும் தான் அதுக்காக அண்ணன் பொண்ணையும் தான் பெத்த புள்ளைங்களையும் பலி குடுக்குற அளவுக்கா பாசம் இருக்கது…..இதுல அந்த போண்டா வாயன் ராஜேஷுக்கு மாயா அவன கல்யாணம் பண்ணலன கடுப்புல அவளையும் இருட்டு அறைக்குள்ள போட்டு வச்சிருந்திருக்கான்…..
   மாயா யாரையோ காதலிச்சானு சொன்னாங்களே அது சாகர் தானா…அவன தான் மலையில இருந்து தள்ளி விட்டாங்களா….அப்போ நிரஞ்சனுக்கும் சாகருக்கும் என்ன சம்பந்தம்…. சாகருகக்கு நடந்ததுக்காக தான் நிரஞ்சன் பழிவாங்க நினைக்குறானா? பல விஷயங்கள் மர்மமாவே இருக்கு ….இதுக்கெல்லாம் பதில் தெரியனும்னா முத்ல்ல அந்த டுபாகூர் சாமியார புடிச்சு உதைக்கனும்…..

   1. vaanavil rocket
    Author

    Very bad parents😏😏😏 Adhu annan mela paasam ila vera ena matter nu ini vara epi la theirnjupom😊😊😊 Maya – Sagar – Niranjan ivangalukulla ena relation num ini vara epi la therinjupom😁😁😁

  2. Sangusakkara vedi

   1. காதல் , மர்மம், சஸ்பென்ஸ், காமெடினன்னு எல்லாம் கலந்த கலவையா ஒரு நிமிசம் கூட போர் அடிக்குதேங்குற எண்ணம் இல்லாம ரொம்ப அழகா இருந்த கதை நகர்வு சூப்பரோ சூப்பர்.

   2. எல்லா கதாபாத்திரங்களும் ஏதோ ஒரு வகைல எங்களை அவங்களை நோக்கியே வச்சுருக்குறது கேரக்டர்ஸ்ஸோட சிறப்பு.

   3. அஸ்வினி அதிரடி, அஸ்வின் அமைதி, நிரஞ்சன் கன்ஃபூஸிங் காய், க்யூட் பைட்டிங் லவ்வரா அம்மா அப்பா எல்லாரும் அடுத்த கதை எப்ப வரும்னு பேஜ் ரிஃபரஸ் பண்ண சொல்லுது.

   குறைன்னா

   நீங்க கொஞ்ச நாளாக காணாம போனது தான். இனி எங்கேயும் போகாம ரெகுலர் ரா போடுங்க.வேற குறையை நானும் தேடி தேடி பார்க்குறேன் ஒன்னும் கிடைக்கல.

   1. vaanavil rocket
    Author

    நன்றி சிஸ்😍😍😍 கதையும் கதை மாந்தர்களும் உங்களுக்கு பிடித்தது மகிழ்ச்சி😊😊😊 ஆமா இடையில கொஞ்சம் கேப்பாகிடுச்சு… இனி அதை ஃபில் பண்ணிடுவோம்…😁😁😁

  3. Archana

   ஆமா, இந்த குடும்பத்துக்கும் நிரஞ்சன்னுக்கும் என்ன சம்மந்தம்🤔🤔🤔🤔 அடேய் சித்தப்ஸ் உன் பசங்கன்னா மட்டும் உனக்கு ரத்தம் அண்ணன் பொண்ணுனா தக்காளி சட்னியா😡😡😡😡😡 காசுக்காக இப்படி பரிகாரம் பண்ணுறேன் பனியாரம் சுடுறேன்னு ஏன் டா இப்படி குட்டி பசங்களையும் வயசு பொண்னையும் கொல்ல பார்க்குறீங்க…..

   1. vaanavil rocket
    Author

    நிரஞ்சன் – மாயா என்ன சம்பந்தம்னு இனி வர எபில தெரிஞ்சுப்போம்…😊😊😊 காசுக்காக என்னென்ன அநியாயம் பண்றானுங்க இவனுங்க…😏😏😏

  4. அருமையான சமூகம் சார்ந்த கதை. மேலும் பல படைப்புகளை எழுத வாழ்த்துகள்.

  5. நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல். பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க முடிந்தது.

  6. நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல். பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க முடிந்தது.