872 views

சுடர் 5

“சாகர்…” என்று கத்தியவாறு எழுந்தமர்ந்தவளைக் கண்ட அந்த செவிலி, அவளருகே வந்து அவளின் பெயரைச் சொல்லி அழைத்தும் கூட, அவளின் கனவிலிருந்து வெளிவர முயற்சிக்கவில்லை அவள்.

அவள் மாயா.

ஜாதிவெறி பிடித்த தந்தைக்கும், கணவனின் சொல்லே வேதவாக்கு என்று எண்ணும் அன்னைக்கும் மகளாக பிறந்தவள். சில காரணங்களால், இப்போது தந்தையின் தம்பி குடும்பத்துடன் வசிப்பவள். அங்கும் அவளை நிம்மதியாக வாழவிடவில்லை அவளின் குடும்பத்தினர்!

அதற்கு சான்றாக அமைந்தது, அவளின் தற்போதைய மருத்துவமனை வாசம்.  இப்பிறப்பு, அவளின் பூர்வஜென்ம சாபமா என்று அவள் எண்ணாத நாளில்லை எனலாம்.

“மாயா, கொஞ்சம் இங்க பாரு மா.” என்று அந்த செவிலி அவளை ஒருவழியாக அவளை சமன்படுத்தி இருந்தார்.

மாயாவும் சிறிது நேரத்திலேயே அவளிருக்கும் சூழலை உணர்ந்து கொண்டாள். இருப்பினும், அவளின் உடல் நடுங்கியபடி தான் இருந்தது. அவள் மயக்கத்திற்கு செல்லும் முன்னே நடந்த நிகழ்வுகளின் தாக்கமே அவளின் நடுக்கத்திற்கான காரணம்.

அப்போது தான் அவளிற்கு தன் தம்பி தங்கையின் நினைவே வந்தது.

அங்கிருந்த செவிலியிடம், “என்.. என்னோட… தம்பி… தங்கச்சி…” என்று அவள் திணறியபடி பேசும்போதே, அவள் விசாரிப்பதை உணர்ந்த செவிலி, “அவங்க நல்லா இருக்காங்க மா. இப்போ தூங்கிட்டு இருக்காங்க. நீ அவங்களை நினைச்சு கவலைப்படாம கொஞ்சம் ரெஸ்ட் எடு.” என்று ஆறுதல் கூறினார்.

“இல்ல, அவங்க தனியா இருக்க பயப்படுவாங்க, நான் இப்போவே அவங்களை பார்க்கணும்!” என்று அழுதவளை சமாதானப்படுத்துவது செவிலிக்கு தான் பெரும்பாடாக இருந்தது.

“அவங்க நல்லா தூங்கிட்டு இருக்காங்க மா. இங்க பாதுகாப்பு அதிகம். நீ நினைக்கிற மாதிரி எல்லாம், யாராலையும் வந்து கடத்திட்டு போக முடியாது. அதனால, நீ தைரியமா தூங்கு. காலைல நானே உன்னை அவங்களை பார்க்க கூட்டிட்டுப்போறேன்.” என்று கூறி மாயாவை தூங்க வைத்தார். மாயாவின் உடலும் அப்போது ஒத்துழைக்காததால், அவளும் செவிலியின் ஆறுதலை கேட்டு உறங்கிப்போனாள்.

மாயா உறக்கத்திற்கு சென்றதை உறுதிபடுத்திக்கொண்ட செவிலி அந்த அறையை விட்டு வெளியே வர, அதற்காகவே காத்திருந்ததைப் போல, ஒருவன் அவரருகே வந்தான்.

“என்னாச்சு?” என்று அவன் வினவ, “ஏதோ கெட்ட கனவு கண்டுருக்கும் போல, எழுந்ததும் தம்பி, தங்கச்சியை தான் தேடுச்சு. இப்போ பார்க்க முடியாதுன்னு ஏதோ சொல்லி சமாதானப்படுத்தி இருக்கேன். டாக்டர் கிட்ட சொல்லி ஒரு முறை செக் பண்ண சொல்லணும்!” என்றார்.

“ம்ம்ம் சரி, டாக்டர் என்ன சொன்னாலும், உடனே என்கிட்ட சொல்லுங்க.” என்று கூறியவாறு அவரிடம் விடைபெற்றான்.

தன்னை சுற்றி நடப்பதை அறியாமல் பேதையவளோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

*****

வீட்டிற்கு வந்ததும் எப்போதும் இல்லாத வகையில் அமைதியின் திருவுருவாக வந்த மகளை தந்தையும் தாயும் கண்டு ஆச்சரியப்பட்டனர். அஷ்வினியோ அதைக் கண்டுகொள்ளாமல் அறைக்குள் சென்று கதவை தாளிட்டாள்.

அவளைத் தொடர்ந்து உள்ளே நுழைந்த மகனிடம், “அவளுக்கு என்னடா ஆச்சு? ஏன் அமைதியா இருக்கா?” என்று சித்ரா வினவ, “ம்மா, அவ பேசுனா, ஏன் இவ்ளோ பேசுறான்னு கேட்குறீங்க. அமைதியா இருந்தா, ஏன் இவ்ளோ அமைதியா இருக்கான்னு கேட்குறீங்க.” என்று நமுட்டுச்சிரிப்புடன் அஷ்வின் கூறினான்.

“ஹ்ம்ம், ஒன்னு திறந்த வாய் மூடாம, லொடலொடன்னு பேசிட்டே இருக்க வேண்டியது. இல்லன்னா, கோந்து போட்டு ஒட்டுன்னா மாதிரி வாயை மூடிக்க வேண்டியது!” என்ற முணுமுணுப்புடன் மகனுக்கும் மகளுக்கும் சாப்பிட எடுத்து வரச்சென்றார்.

மகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நினைவுடன் மகனை அவனின் அறைக்கு செல்ல விடாமல், பார்வையாலேயே ‘என்னவென்று’ வினவினார் அந்த பாசமிகு தந்தை.

“ஒன்னுமில்ல அப்பா, அவ டீமுக்கு புதுசா ப்ராஜெக்ட் மேனேஜர் வந்துருக்காரு. ஏதோ வேலையை முடிச்சுட்டு தான் போகணும்னு சொல்லிருக்காரு போல. அதான் மேடம் கொஞ்சம் டென்ஷனாகிட்டாங்க.” என்று அஷ்வின் அவரை சமாதானப்படுத்தினான்.

அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, அவளின் அறையிலிருந்து வெளிப்பட்டவள், அந்த நீள்சாய்விருக்கையில் தந்தையின் அருகே அமர்ந்து அவர் மீது சாய்ந்து கொண்டு செல்லம் கொஞ்சினாள்.

அதற்கு மேல் தான் அங்கு நிற்க வேண்டாம் என்று எண்ணினானோ, இல்லை இதை விட்டால் அவன் அறைக்கு செல்ல முடியாது என்று எண்ணினானோ, அஷ்வின் வேகமாக அந்த இடத்தை விட்டு நழுவினான்.

“ஒழுங்கா எழுந்து குடி. எப்போ பார்த்தாலும் சாய்ஞ்சுட்டே இருப்பா.” என்ற அன்னையின் குரலும், “உங்க ஹஸ்பண்ட் மேல சாய்ஞ்சுருக்கேன்னு உங்களுக்கு பொறாமை ம்மா.” என்ற அஷ்வினியின் குரலும் அவனின் காதில் விழ, அவள் சரியாகி விட்டாள் என்று உணர்ந்தவன், சிறு சிரிப்புடனேயே அவனின் அறைக்குள் நுழைந்தான்.

*****

அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு செல்லும் வழியெல்லாம், எப்போதும் இல்லாத வகையில் உதடுகளில் புன்னகையை தவழ விட்டுக்கொண்டே சென்றான் நிரஞ்சன். அதனுடன் சேர்த்து இசைப்பானிலிருந்து கசிந்து கொண்டிருந்த மெல்லிய இசையும் அந்த சூழலை ரம்மியமாக்கியிருந்தது.

இவற்றிற்கெல்லாம் காரணம் அஷ்வினி என்றால் அது மிகையில்லை. காலையில் அவளைப் பார்க்கும்போதே, அவளின் துருதுருப்பும் வாய் துடுக்கும் நிரஞ்சனை கவர்ந்தது என்று தான் கூற வேண்டும். மற்றபடி, பெண்களிடம் அவன் பேசும் நொடிகளை விரல் விட்டு எண்ணி விடலாமே..!

மேலும், அவளை தன்னுடைய குழுவில் கண்டவனிற்கு இன்னும் உற்சாகம் பிறக்க, அவ்வபோது அவளை சீண்டியபடி இருந்தான். மதியம் அவளின் சோர்ந்த முகத்தை கண்டவனிற்கு, அவளை எப்படியாவது சமாதானப்படுத்தி விட வேண்டும் என்ற உணர்வு விஸ்வரூபம் எடுக்க, அவளை சமன்படுத்தவே, மிகுதியான வேலைகளைக் கொடுத்தான். அவன் எண்ணப்படியே, அவனைத் திட்டுகிறேன் பேர்வழி, அவள் கவலையிலிருந்து வெளிவந்தாள்.

இவற்றை எல்லாம் நினைத்துக்கொண்டே வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்தவன், அப்போது தான் அவன் வீட்டையும் தாண்டி வந்து விட்டதை உணர்ந்தான்.

“யூ ஆர் டிரைவிங் மீ க்ரேஸி!” என்று முணுமுணுத்துக்கொண்டே வாகனத்தை தன் வீட்டை நோக்கி திருப்பினான்.

அவனின் வாகனம் அந்த குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. உள்ளே நுழையும்போதே அங்கிருந்த காவலாளியிடம் புன்னகையை வீசிவிட்டு, வாகன தரிப்பிடத்தில் வாகனத்தை நிறுத்தினான்.

தன் வீடிருக்கும் ‘பி பிளாக்’கிற்குள் சென்றவன், மின்தூக்கியின் மூலம் நான்காம் தளத்திற்கு சொல்லும்போதே, அவனின் அலைபேசி ஒலிக்க ஆரம்பித்து விட்டது.

சட்டென்று மணியை பார்த்தவன், “ச்சே, போன் பண்றேன்னு சொன்னதை மறந்துட்டேனே.” என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டே அழைப்பை ஏற்றான்.

“ஹலோ, நிரஞ்சா…” என்று மறுபுறத்திலிருந்து கேட்ட பாசமான அழைப்பில் எப்போதும் போல நெகிழ்ந்தவன், அதைக் காட்டிக் கொள்ளாமல், “சித்தி, நான் இப்போ தான் வீட்டுக்கு வரேன். ஃபர்ஸ்ட் டே கொஞ்சம் லேட்டாகிடுச்சு. நீங்க சாப்பிட்டீங்களா? தாத்தா சாப்பிட்டாரா? ரெண்டு பேரும் மாத்திரை எல்லாம் சரியா போட்டீங்களா?” என்று வரிசையாக கேள்விகளை அடுக்கினான்.

“என்னைப் பேச விடுடா.” என்று அவனின் சித்தி கலைவாணி அலுத்துக்கொள்ள, “ஹான் சித்தி, நான் கேப் விட்டுருந்தா நீங்களும் இதே மாதிரி தான கேள்விகளை அடுக்கியிருப்பீங்க. என்ன பண்றது நம்ம ஜீன்லேயே அப்படி இருக்கு போல.” என்று அவரிடம் இயல்பாக பேசிக்கொண்டே தன் வீட்டின் கதவை திறந்தான்.

“ரொம்பத்தான்! சரி, இன்னைக்கு காலைல தான போன, உன் திங்ஸ் எல்லாம் அடுக்கி வச்சுட்டியா? நைட் சாப்பாட்டுக்கு என்ன பண்ண போற? பெங்களூருல வேலை முடிச்சதும், உடனே அங்க போய் ஜாயின் பண்ணதுனால இவ்ளோ சிரமம். இதுக்கு தான் கொஞ்ச நாள் நம்ம ஊருக்கு வந்து ரெஸ்ட் எடுத்துட்டு போன்னு சொன்னது.” என்று சற்று முன்னர் அவன் கூறியதை நிரூபித்தார் அவனின் சித்தி.

அவனோ மெல்லிய சிரிப்புடன், “அவ்ளோ தான? நான் பதில் சொல்ல ஆரம்பிக்கலாமா?” என்று வினவ, “டேய், நீ கஷ்டப்படுறியேன்னு கவலைப்பட்டு பேசுனா, என்னையே கிண்டல் பண்றியா? இனி, உன்னைப் பத்தி எதுவுமே கேட்க மாட்டேன்.” என்று கலைவாணியும் முறுக்கிக்கொண்டார்.

“ஹ்ம்ம் எத்தனை நாளைக்குன்னு பார்க்குறேன்!” என்று நிரஞ்சனும் சளைக்காமல் அவருடன் வார்த்தையாடினான்.

“சரி சரி, தாத்தா உனக்கு வாட்சப்ல ஒரு போட்டோ அனுப்புனாரே. அதை பார்த்தியான்னு கேட்க சொன்னாரு.” என்று கலைவாணி வினவ, “இது தாத்தா கேட்க சொன்ன மாதிரி தெரியலையே.” என்று சந்தேகமாக வினவினான் நிரஞ்சன்.

“இப்போ என்னடா, நானே தான் உங்க தாத்தா போன்லயிருந்து போட்டோ அனுப்புனேன். இப்போ கூட நானே தான் போட்டோ பார்த்தியான்னு கேட்குறேன். இப்போயாச்சும் அந்த போட்டோ பார்த்து, ஏதாவது நல்லதா சொல்வியா? இல்ல, இதுக்கும் ‘நான் என் கேரியர்ல டெவலப் ஆகணும்’னு ஏதாவது சாக்குபோக்கு சொல்லிட்டு இருப்பியா?” என்றார் அவர்.

“ச்சு சித்தி, ஏன் இவ்ளோ டென்ஷனாகுறீங்க? இந்த முறை கண்டிப்பா உங்களுக்கு ஒரு நல்ல முடிவை சொல்வேன். ஆனா, அதுக்கு கொஞ்சமே கொஞ்சம் டைமாகும். அதுவரைக்கும் இப்படி தாத்தா போன்லயிருந்து திருட்டுத்தனமா போட்டோ எதுவும் அனுப்பாதீங்க.” என்றான் நிரஞ்சன்.

“ஹ்ம்ம், ஏதோ சொல்ற, நானும் நம்புறேன்! ஆனா, கணக்கே இல்லாம எல்லாம் உனக்கு டைம் கொடுக்க முடியாது. இன்னும் ரெண்டு மாசம் தான் உனக்கு டைம். அதுக்குள்ள நீயா அந்த ‘நல்ல’முடிவை சொல்லணும். இல்லனா, நானும் தாத்தாவும் சேர்ந்து உன்னை சொல்ல வைக்க வேண்டியதிருக்கும்.” என்று கலைவாணி கூற, “பார்றா, பயந்துட்டேன் சித்தி!” என்று கேலி செய்தான் நிரஞ்சன்.

பின்னர் அந்த அலைபேசி அவனின் தாத்தாவிடம் கைமாற, “நல்லா இருக்கியா நிரஞ்சா?” என்று வழக்கமான அலைபேசி உரையாடாலாக அது தொடர்ந்தது.

இதற்கு இடையிலேயே, இருப்பதைக் கொண்டு சுலபமான உணவை தயாரித்தவன், பேச்சின் நடுவே சாப்பிட்டும் முடித்தான்.

“சரி தாத்தா, நீங்க தூங்குங்க, நாளைக்கு பேசுறேன்.” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான் நிரஞ்சன்.

இன்று தான் புதிதாக வந்ததால், வீட்டில் அவ்வளவாக எதுவும் அடுக்காமல் இருந்தது. இருக்கும் சோர்வில், அதை அடுக்க சோம்பியவன், தன் படுக்கையை மட்டும் சரிபடுத்திவிட்டு அதில் படுத்து விட்டான்.

படுத்தவுடன் அத்தனை எளிதில் தூக்கம் வந்துவிடுமா என்ன? அதுவும் பல நாட்களாக வராத தூக்கம், இன்று வந்துவிடுமா? வெட்டியாக இருந்தால், மனம் அதன் போக்கில் பழைய நினைவுகளை அலசி ஆராய்ந்து, அதன் மூலம் வருத்தத்தை தேடிக்கொள்ளும் என்பதாலேயே மனதை அதன்போக்கில் செல்ல விடாமல், அலைபேசியில் இழுத்துப் பிடித்துக்கொண்டிருந்தான்.

இணையத்திற்குள் நுழைந்து அலைந்து கொண்டிருந்தவனின் கைகள் தவறுதலாக புலனத்தில் அவன் தாத்தா எண்ணிலிருந்து வந்த புகைப்படத்தின் மீது பட, அது திறந்து கொண்டது.

அந்த புகைப்படத்தை பார்த்தவன் முதலில் பதறினாலும், பின்னர் இது அவனின் சித்தியின் திருவிளையாடலாக தான் இருக்கும் என்று நினைத்து சிரித்தான்.

அப்படி அந்த புகைப்படத்திலிருந்தது, முன்னிலிருந்த இரு பற்கள் விழுந்தும் அதைக் கண்டுகொள்ளாமல் விரிந்த சிரிப்புடன் இருக்கும் சிறுமியின் படம்.

அப்புகைப்படம் மீண்டும் அவனின் இதழில் சிரிப்பைக் கொண்டு வர, தன் சித்தியை நினைத்து, “’எப்படியும் இவன் ஒத்துக்க மாட்டான், சும்மா ஒரு போட்டோ அனுப்பி வைப்போம்’னு தான இதை அனுப்பியிருக்கீங்க? நாளைக்கு இதை வச்சே ஒரு ஷாக் கொடுக்குறேன்.” என்று வாய்விட்டே கூறினான்.

இன்றைய ‘திருமணம்’ பற்றிய பேச்சில், நிரஞ்சனின் மனம் அவ்வபோது அஷ்வினியிடத்தில் சென்று வந்தது உண்மையே.

‘உஃப், என்னாச்சு எனக்கு? நிரஞ்சா கண்ட்ரோல்! இன்னும் முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு.’ என்று தனக்குத்தானே கூறிக் கொண்டவன், கண்களை மூடிக்கொண்டான், கனவிலும் அவளின் முகமே அவனை படுத்தபோவதை அறியாதவனாக!

*****

அஷ்வினியின் வீட்டில், நால்வரும் இரவுணவை முடித்த சமயம், அஷ்வின்  அவன் அறைக்கு செல்லும்போது அவனிற்கு கேட்கும் வகையிலேயே, “ம்மா, உங்க அருமை மகனுக்கு போனஸ் போட்டுருக்காங்க. உங்களுக்கு அது தெரியுமா?” என்று வேண்டுமென்றே போட்டுக்கொடுக்க, அவனோ ஒரு நொடி நின்றவன், மீண்டும் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

சித்ரா சமையலறையிலிருந்து வெளிவரும் நேரம், அவன் அறைக்குள் நுழைந்திருக்க, அவரோ அஷ்வினியிடம், “போனஸா? உன் அண்ணனை பாரு, நல்லா வேலை செஞ்சதால போனஸ் வாங்குறான். நீயும் தான் அவனோட வேலைக்கு சேர்ந்த, இதுவரைக்கும் ஒரு முறையாச்சும் போனஸ் வாங்கிருக்கேன்னு சொல்லியிருக்கியா?” என்று அஷ்வினியை பேச, ‘அட தாய்குலமே! நல்ல பாயிண்ட்டா எடுத்து கொடுத்தேன். இப்படி அதை என்னை நோக்கி திருப்பி விட்டுட்டீங்களே!” என்று மனதிற்குள் புலம்பினாள்.

அஷ்வினி பாவமாக சரவணனை நோக்க, “விடுடா வினி, நீ கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதிக்கணும்னு இல்ல. உன் விருப்பப்படி வேலை செய்ற, செய்ற வேலைக்கு சம்பளம் வாங்குற, அது மூலமா உனக்கு எவ்ளோ சேடிஸ்ஃபேக்ஷன் கிடைக்குதுங்கிறது தான் முக்கியம்.” என்று தன்மேல் சாய்ந்திருந்தவளை தட்டிக்கொடுக்க, அஷ்வினியோ தன் அன்னையை மிதப்பான பார்வை பார்த்தாள்.

இவர்களின் பேச்சைக் கேட்ட சித்ரா, மானசீகமாக தலையிலடித்துக் கொண்டார்.

அப்போது அஷ்வின் பெரிய பைகளுடன் தன் அறையை விட்டு வெளியே வந்தான். மற்ற மூவரும் அவனையே பார்த்திருக்க, அவனோ அஷ்வினியை நோக்கி நக்கலாக சிரித்தவாறே கீழே வந்தான்.

நேராக சித்ராவிடம் சென்றவன், “ம்மா, வினி சொன்ன மாதிரி எனக்கு போனசா போட்டுருக்காங்க. ஆனா, அதை சாதாரணமா உங்ககிட்ட சொல்லாம, இப்படி உங்களுக்கு சேலை வாங்கிட்டு வந்து சொல்லணும்னு நினைச்சேன்.” என்று கையிலிருந்த பையை அவரிடம் நீட்ட, அன்னைக்கோ மகனின் செயல் எப்போதும் போல பெருமிதத்தையே தந்தது.

“ரொம்ப சந்தோஷம்டா.” என்று அவனை உச்சிமுகராத குறையாக அதை வாங்கிக்கொண்டார்.

அதைக் கண்ட அஷ்வினியோ, ‘அடப்பாவி, ஒரு சேரில கவுத்துட்டானே! இதை எந்த கேப்ல போய் வாங்கியிருப்பான்?’ என்று யோசித்துக்கொண்டிருந்தாள்.

அதற்குள் அஷ்வின் தந்தையிடம் அவருக்காக வாங்கியவற்றை கொடுத்துவிட்டு, அஷ்வினியின் அருகே வந்து அவளின் யோசனை முகத்தைக் கண்டுகொண்டு, அவளை அதிலிருந்து மீட்க, தலையில் கொட்டினான்.

“ஸ்ஸ் ஆ… எதுக்கு என்னைக் கொட்டுன?” என்று வலியில் அஷ்வினி கத்திவிட, மகன் வாங்கிக் கொடுத்த சேலையை ரசித்துக்கொண்டிருந்த சித்ராவோ, “எதுக்குடி இப்படி கத்துற? அவனை ‘டா’ன்னு சொல்லாதன்னு உனக்கு எத்தனை முறை சொல்றது?” என்று கூறினார்.

“போங்க ம்மா, ரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடி பிறந்தவனுக்கு எல்லாம் அண்ணான்னு மரியாதை கொடுக்க முடியாது!” என்று அவள் கூறிக் கொண்டிருக்கும்போதே, அவள் வெகு நாட்களாக கேட்டுக்கொண்டிருந்த ரோஸ்வுட் நிறத்திலான கைகடிகாரத்தை நீட்டியிருந்தான்.

உடனே அஷ்வினியின் பேச்சு நின்று போனது.

“அண்ணா, இதை எப்போ வாங்குன?” என்று குரலில் பாசத்தை லிட்டர் கணக்காக வழியவிட்டு வினவ “இன்னைக்கு நீ ரொம்ப சின்சியரா வேலை செஞ்சுட்டு இருந்தப்போ தான்.” என்று அஷ்வின் கூறினான்.

ஆனால், அதை நின்று கேட்பதற்கான பொறுமை தான் அஷ்வினியிடம் இல்லை. அஷ்வின் கொடுத்த கைகடிகாரத்தை எடுத்துக்கொண்டு அவளின் அறைக்கு சென்றிருந்தாள்.

சித்ராவும் சரவணனும் இந்த காட்சியை சிரிப்புடன் பார்த்திருந்தனர்.

அஷ்வினி அறைக்கு சென்று விட்டாள் என்று உறுதிபடுத்திக்கொண்ட சித்ரா மகனிடம், “என்னடா ரொம்ப வேலையா அவளுக்கு?” என்று வினவினார்.

‘முதலில் தந்தை, இப்போது தாயா?’ என்ற நினைத்தவன் தந்தையிடம் கூறிய அதே பதிலைக் கூறினான்.

“அவளைப் பார்த்துக்கோடா. வரும்போது வெயிட் பண்ணி அவளையும் கூட்டிட்டு வா.” என்று சித்ரா அறிவுறுத்த, “அதெல்லாம் நான் பார்த்துக்குறேன் ம்மா…” என்று அவரை சமாதானப்படுத்தினான்.

பின்னர் என்ன நினைத்தானோ, “இது மாதிரி நிறைய ஒர்க் இருந்தா, அவ பாஸ்ட் மறக்குறதுக்கு யூஸ்ஃபுல்லா தான் இருக்கும். சோ, கவலைப்படாதீங்க ம்மா.” என்றான்.

அவனின் பெற்றோரும் அதை ஆமோதிக்கும் விதமாக அமைதியாக இருந்தனர்.

அவளைச் சுற்றியுள்ள அனைவரும், அவள் இறந்த காலத்தை மறக்க வேண்டும் என்று எண்ண, சம்பந்தப்பட்டவளோ, அதை மீண்டும் நினைவு படுத்தும் விதமாக, அவளின் டைரியின் பக்கங்களை புரட்டிக்கொண்டிருந்தாள்!

*****

அப்போது தான் விழிகளை மூடியிருந்த நிரஞ்சனின் அலைபேசி ஏதோ அறிவிப்பு வந்ததற்கான ஒலியை எழுப்ப, அதை எடுத்துப்பார்த்தவனின் தூக்கம் பறந்து தான் போனது.

‘ஃபவுண்ட் தி ஃபேமிலி’ என்று சுருக்கமாக வந்திருந்த செய்தியைக் கண்டவன் யோசிக்க கூட அவகாசம் எடுத்துக் கொள்ளாமல், அந்த எண்ணிற்கு அழைத்து விட்டான்.

“ஹலோ, எங்க இருக்கீங்க இப்போ?”

“….”

“ஓகே, அவங்களை நம்ம பிளேஸுக்கு கூட்டிட்டு வா. அண்ட் எந்த சந்தேகமும் வரக்கூடாது. இப்போ போலீஸ்னு சொல்லி தான விசாரிச்சுட்டு இருக்கீங்க?”

“….”

“குட்!” என்று அவன் முடிப்பதற்குள் எதிர்புறமிருந்து கேள்வி வந்திருக்க, “நோ நோ, இப்போதைக்கு அவங்க போலீஸ் பாதுகாப்புலேயே இருக்கட்டும். மாயா திரும்ப முழிச்சதும், அவங்க கண்டிஷன் என்னன்னு பார்த்துட்டு மேல என்ன செய்யலாம்னு யோசிக்கலாம்.” என்று கூறி அழைப்பை துண்டித்தான்.

அழைப்பு துண்டிக்கப்பட்டாலும், நிரஞ்சனின் விழிகள் அந்த அலைபேசியிலேயே நிலைத்திருந்தன. அதில் தெரிந்த புகைப்படத்தைக் கண்டவனின் மனம், அவன் ஆற்றப்போகும் காரியத்தையும் அதன் வீரியத்தையும் எடை போட்டுக்கொண்டிருந்தது.

 

தொடரும்…

வணக்கம் நட்பூஸ்…😍😍😍 உங்க கமெண்ட்ஸ் பார்த்து நான் ரொம்ப ஹாப்பி…😁😁😁 இதோ “என் காதல் சுடர் நீயடா(டி)” கதையின் அடுத்த அத்தியாயம் போட்டாச்சு… கதையைப் படிச்சுட்டு உங்க கருத்துக்களை காயின்ஸ் மூலமாவோ, கமெண்ட்ஸ் மூலமாவோ, ரியாக்ஷன்ஸ் மூலமாவோ பகிர்ந்துக்கோங்க…😊😊😊

இப்படிக்கு,

உங்க வானவில் ராக்கெட்🌈🔥

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
21
+1
1
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  Your email address will not be published. Required fields are marked *

  13 Comments

  1. Archana

   நிரஞ்சன் யாருன்னு சீக்கிரமா சொல்லிடுங்க😁😁😁 ஒரே சஸ்பென்சா போகுது🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️

   1. vaanavil rocket
    Author

    சீக்கிரம் சொல்லிடுறேன் சிஸ்😁😁😁

  2. Janu Croos

   அப்போ அந்த மலையில இருந்து தள்ளிவிட்டு விழுந்த ஜீவன் சாகரா? சாகர நினைச்சிட்டே கத்திட்டு எழுந்திருக்காள்னா…அப்போ சாகர் விழுந்தப்போ பக்கத்துல இருந்த பொண்ணு மாயாவா தான் இருக்கனும். மாயக்கும் சாகருக்கும் என்ன சம்பந்தம்? சாகர் பேர கேட்டாலே அஷ்வினி அப்சட் ஆகுறாளே! அப்போ அஷ்வினிக்கும் சாகருக்கும் என்ன சம்மந்தம்? ஜெனி அக்ஷய் அஷ்வின் எல்லாருக்கும் சாகர தெரிஞ்சிருக்கு….அப்படினா சாகர் யாரு?
   நிரஞ்சன் ஏன் யாரையோ தேடிட்டு இருக்கான்? ஒண்ணுமே புரியலயே…சஸ்பென்ஸ் மேல சஸ்பென்ஸ் ஆ போகுதே….

   1. vaanavil rocket
    Author

    Nice guess 👍👍👍 Triangle love story ah irukumo🤔🤔🤔 Next epi la irundhu ovvoru question ka answer kidaikum 😍😁😁

  3. Sangusakkara vedi

   Happadi Nan kooda Niranjan jodi ilayonu ninachuten…. Ashwini ku Niranjan thana….. Sagar um Maya vum lovers ah … Maya appa jhaadi nu solli piruchutara? Niranjan police ah irukumo…. Apdina chiti sollirukanume….bsollalaye…. Athu entha family sagar family ya irukumo? Ila Maya vodatha irukumo? Ethna qus varuthu enaku….. Ellathayum seekaram clear pannunga sis….. Super ud….

   1. vaanavil rocket
    Author

    Aww evlo questions😜😜😜 Kandippa seekiram clear pannidalam😁😁😁 Tq so much sis😍😍😍

  4. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். சமூக கருத்தை வலியுறுத்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  5. Ennadan robo maari irundalum Ashwin kulla pasam irukka dan seiyudhu neraya per ipdi dan ullukulla ton kanakka pasatha vachukitu velila ummanaamoonjiya irupanga.. hmm apdi enna past ashwini kutty ku… Idhula Niranjan vera CBI range ku build up.. enna marmamoo puriala

   1. vaanavil rocket
    Author

    Aama Ashwin character ae adhu dhan😊😊😊 Ashwini past enava irukum unga guesses sollunga😉😉😉 Niranjan unmailaye CBI ab irundha😜😜😜

  6. நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல். பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க முடிந்தது.