556 views

சுடர் 26

முன்னாள் முதலமைச்சரின் மருமகள் கொலைமுயற்சிக்காக பிரபல தொழிலதிபர் சர்வஜித் கைது செய்யப்பட்டார்!” என்பது தான் அன்றைய காலையின் சுடச்சுட செய்தியாக இருந்தது.

சில மணி நேரங்களுக்கு முன்னர்,

அஷ்வினியை அவளின் வீட்டில் விட்டுவிட்டு முதல் வேலையாக நிரஞ்சன் சாரதிக்கு தான் அழைத்தான்.

“என்னாச்சு சாரதி? எல்லாம் பிளான் படி நடக்குதா?” என்று வினவ, “ஆல் ஓகே டா மச்சான்.” என்றவன் முன்தினம் நிரஞ்சன் கூறிய திட்டத்தை  வைத்து அவர்கள் செய்ததை விளக்கினான்.

அவர்களுக்கு முக்கிய துருப்புச்சீட்டாக சிக்கியது அந்த போலிச்சாமியார் தான். ‘இவனெல்லாம் என்ன சொல்லப்போறான்’ என்று சர்வஜித் கவனக்குறைவாக இருந்ததால், அதை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொண்டனர்.

அந்த போலிச்சாமியாரோ இவர்களில் அடியில் துவண்டு, எதை செய்தாவது அங்கிருந்து விடைபெற வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கையில், “இப்போ நாங்க சொல்றதை செஞ்சா, அப்ரூவரா மாறிட்டன்னு உன்னோட தண்டனை குறையுறதுக்கு வாய்ப்பிருக்கு. இனியும் அந்த சர்வஜித்தை நம்புனா, அப்பறம் சேதாரத்துக்கு நாங்க பொறுப்பில்ல.” என்று சாரதி கூறியதும், என்ன வேலை என்று கூட கேட்காமல், உடனே ஒப்புக்கொண்டான்.

குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கும் முன்னாள் முதல்வரின் மருமகளான ஜான்வி, இந்த போலிச்சாமியாரை சந்தித்து பரிகாரங்கள் மேற்கொள்ளும் செய்திகள் ஊடங்கங்களின் வாயிலாக பரவியிருந்தன. அதை தங்களின் திட்டத்தில் உபயோகப்படுத்தி கொண்டான் நிரஞ்சன்.

அதன்படி, பரிகாரத்திற்காக ஜான்வியை யாரும் அறியாமல், சர்வஜித் பிரத்யேகமாக இவை போன்ற செயல்களுக்கு பயன்படுத்தும் இடங்களில் ஒன்றிற்கு வருமாறு அந்த போலிச்சாமியார் மூலம் தகவல் அனுப்பினர். ஜான்வியும் குழந்தை மோகத்தால், எதைப்பற்றியும் யோசிக்காமல் வர ஒப்புக்கொண்டாள்.

“என்னடா அந்த பொண்ணு உடனே ஓகேன்னு சொல்லிடுச்சு? எப்படி அந்த பொண்ணை இன்னும் உயிரோட விட்டுருக்கீங்க?” என்று சாரதி வினவ, அந்த போலிச்சாமியாரோ, “பெரிய இடம் சார்! அதுவுமில்லாம தலைவரோட மருமகப்பொண்ணு வேற. முதல் முறையா அந்த பொண்ணு என்னை பார்க்க வரது தெரிஞ்சதுமே, தலைவர் கூப்பிட்டு, மத்தவங்களுக்கு பண்ற மாதிரி எந்த ஃபிராடு வேலையும் அந்த பொண்ணுக்கிட்ட பண்ணக்கூடாதுன்னு எச்சரிச்சுட்டாரு.” என்று கூறினான்.

“ஓஹ், உங்க தலைவர் குடும்பம்னா மட்டும் உசத்தியா?” என்று அதற்கும் இரண்டடி அடித்த சாரதி, ”யோவ், அந்த சர்வஜித் நாம சொன்ன இடத்துக்கு, இன்னைக்கு போக மாட்டான்னு நல்லா தெரியுமா?” என்று வினவினான்.

அவனோ வலியுடன், “நல்லா தெரியும் சார். ஒவ்வொரு மாசமும் ஒவ்வொரு இடத்துல தான் சம்பவத்தை செய்வான். இன்னைக்கு, ***** தான் அவனும் அவனோட ஆளுங்களும் இருப்பாங்க.” என்றான்.

“ம்ம்ம், இதுக்கு சென்டிமென்ட் வேற!” என்று முணுமுணுத்து தலையிலடித்துக் கொண்டவன், “சரி, இப்போ நான் சொல்றதை கவனமா கேளு, அந்த பொண்ணு அங்க வந்ததும், நாங்க மயக்க மருந்து கொடுத்துடுவோம். கொஞ்ச நேரத்துல போலீஸுக்கும் தகவல் சொல்லிடுவோம். சோ நீ அந்த கேப்புல, சர்வஜித்தோட ஆளுக்கு கூப்பிட்டு, அந்த பொண்ணோட பேரெதுவும் சொல்லாம, அந்த இடத்துல இருக்குன்னு மட்டும் சொல்லணும். இதுல ஏதாவது தப்பா நடந்துச்சு, அப்பறம் நீ உயிரோட இருக்க மாட்ட!” என்று மிரட்ட, அது சரியாகவே வேலை செய்தது.

இவையனைத்தையும் கேட்ட நிரஞ்சன், “குட் ஒர்க் சாரதி. நான் நேரா அந்த இடத்துக்கு போயிடுறேன். உன்னோட ஆளுங்களை அனுப்பு. நீ அங்கயிருந்து அவன் சரியா தகவல் சொல்றானான்னு வாட்ச் பண்ணிக்கோ. அண்ட் நான் சிக்னல் கொடுத்ததும், போலீஸுக்கும் இன்ஃபார்ம் பண்ணிடு.” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

அவர்களின் திட்டப்படியே, ஜான்வி அவ்விடத்திற்கு வந்ததும் மயக்கமடைய செய்து, சாரதிக்கு சொல்ல, அவனும் காவல்துறைக்கு தகவலை சேர்ப்பித்தான்.

அதை தொடர்ந்து, அந்த போலிச்சாமியார் மூலம், பரிகாரத்திற்காக வந்த ஏதோ ஒரு பெண்ணை அந்த இடத்தில் வைத்திருப்பதாக சர்வஜித்தின் ஆளிடம் கூறச்செய்தான்.

சர்வஜித்தின் ஆட்களோ, தங்களின் தேடுதல் வேட்டைக்கான ஆள் கிடைக்காமல் அலைந்து கொண்டிருக்க, போலிச்சாமியாரிடமிருந்து இந்த தகவல் கிடைக்க, அதன் உண்மைத்தன்மையை கூட ஆராயாமல், சர்வஜித்திற்கு தாங்களே கண்டுபிடித்து அடைத்து வைத்திருப்பதாக கூறினர்.

‘போலிச்சாமியார் தான் தகவல் கூறியது’ என்று கூறியிருந்தால் சர்வஜித் சற்று சுதாரித்திருப்பான். ஏனெனில், அவனிற்கும் அவனுடம் இருக்கும் சிலருக்கு மட்டும் தான் அந்த போலிச்சாமியார் நிரஞ்சனிடம் சிக்கியிருப்பது தெரியும்.

சர்வஜித் நிரஞ்சனின் சதிவலையில் மாட்ட வேண்டுமென்பது தான் விதியோ..!

“ஏன்டா அங்க வச்சுருக்கீங்க? இன்னைக்கு ***** தான கொண்டு வந்துருக்கணும்!” என்று அவனின் ஆட்களை திட்டிய சர்வஜித், “சரி, நானே அங்க வந்து தொலைக்கிறேன். ச்சை இருபது பொண்ணுங்களை தூக்குறதே இந்த பாடா இருக்கு! அடுத்த முறை கவுண்ட் வேற ஜாஸ்தின்னு சொல்றாங்க. உங்களை வச்சுக்கிட்டு என்ன பண்ணப்போறேனோ?” என்று புலம்பியபடி அவ்விடத்திற்கு செல்ல ஆயத்தமானான்.

ஆம், கொலை மட்டுமல்ல, பெண்கள், குழந்தைகள், போதைப்பொருட்கள் ஆகியவற்றை கடத்தும் தொழிலிலும் சமீபத்தில் கால் பதித்திருந்தான் அந்த கயவன். சமீபமாக இவை போன்ற கடத்தல் செய்திகள் அதிகரித்திருப்பதற்கான காரணத்தை காவல்துறையினர் கண்டுபிடிக்க முடியாமல் திணற, சர்வஜித்தோ அதிகாரத்திலிருப்பவர்களின் உதவியுடன், இதை சர்வசாதாரணமாக நிகழ்த்திக்கொண்டிருக்கிறான்.

மாட்டிக்கொண்டால், அனைத்து கொலைகளையும் நரபலி என்று சொல்லி, அதற்கு காரணமானவன் என்று கைகாட்டுவதற்கு தான் பலியாடாக அந்த போலிச்சாமியார் இருக்கிறானே!

அதன்பின்னர் நடந்தவை எல்லாம் நிரஞ்சனின் திட்டப்படி சரியாக நடக்க, பாதிக்கப்பட்டது கனகசபையின் மருமகள் என்று தெரியவர, சர்வஜித் அவ்விடத்திலேயே கைது செய்யப்பட்டான்.

மேலும், ஊடகங்கள் இதை பெரிதுபடுத்த, ஏற்கனவே சர்வஜித்தினால் பாதிக்கப்பட்டவர்களும் இது தான் சாக்கென்று அவன்மீது பல புகார்களை கொடுக்க, மாநிலமே பரபரப்பாக இருந்தது.

அதற்கு காரணமானவனோ, இரவு முழுவதும் ஏற்பட்ட அலைச்சலினால், தூங்கிக்கொண்டிருந்தான்.

*****

இரண்டு நாட்களாக எங்கு திரும்பினாலும் சர்வஜித் பற்றிய செய்திகள் தான்.

பரிகாரம் என்ற பெயரில் கொலை செய்வது, நரபலி என்ற பெயரில் உறுப்புகளை கடத்துவது, பெண்கள், குழந்தைகள் ஆகியோரை வெளிநாட்டில் விற்பது போன்ற குற்றங்களுக்காக பிரபல தொழிலதிபர் சர்வஜித் மற்றும் அவரின் கூட்டாளிகள் நால்வரை போலீஸார் கைது செய்திருக்கின்றனர். இவர்களைப் பிடிப்பதற்கு காரணமாக இருந்த போலிச்சாமியார் அப்ரூவராக மாறியிருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும், தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்.

என்று ஒவ்வொரு சேனலும் தங்களின் டிஆர்பியை ஏற்றிக்கொள்வதற்கு, இதை வைத்தே பல நிகழ்ச்சிகளை வழங்கி, மக்களை பரபரப்பிலேயே வைத்திருந்தனர்.

*****

காலையில் அலுவலகத்திற்கு கிளம்பிக்கொண்டிருந்த நிரஞ்சனின் அலைபேசி ஒலியெழுப்ப, சாரதி தான் அழைத்திருந்தான்.

“டேய், நியூஸ் சேனல் பார்த்தியா? அந்த சர்வஜித் வெளிய வந்தா, **** கட்சி ஆளுங்க வெட்டுவேன்னு சொல்லியிருக்காங்க. ஹ்ம்ம் தலைமையோட கோபம் இப்படி வெளிப்படுது போல!” என்று சாரதி கூற, “ஹாஹா, தலைமையோட கோபம் இன்னும் வெளிப்படலடா. கேஸ் கோர்ட்டுக்கு போகும்போது வெளிப்படும்னு நினைக்குறேன்.” என்றான் நிரஞ்சன்.

“சூப்பர்டா, நீ பிளான் சொல்லும்போது இது எப்படி ஓர்க்கவுட்டாகும்னு யோசிச்சேன். ஆனா, அந்த சர்வஜித்தை மொத்தமா வச்சு செஞ்சாச்சு. எப்படி மச்சான், எக்ஸ் சி.எம் மேல ரொம்ப நம்பிக்கையோ? இப்படி ஜாமீன் கூட கிடைக்க விடாம பண்ணுவாருன்னு.”

“இல்லடா, நம்ம மீடியா மேல ரொம்ப நம்பிக்கை. எப்படியும் கிடைச்ச விஷயத்தை பெருசாக்க, சர்வஜித்தோட எல்லாத்தையும் நோண்டுவாங்கன்னு நினைச்சேன். என் கணிப்பு உண்மையாகி, அவனோட பழைய குற்றங்கள் எல்லாம் வெளிய வந்துச்சு. பயபுள்ள, ஆளுங்கட்சி ஆளுங்களோடவும் வம்பிழுத்திருப்பான் போல. ஜாமீன் கிடைக்காததுக்கு காரணம் அவங்களா கூட இருப்பாங்க.” என்று கூறும்போதே கலைவாணி அழைக்க, “சரி மச்சான், இப்போ வேலையிருக்கு. நீ நல்லா ரெஸ்ட் எடு, இந்த கேஸ்ல நீதான் ரொம்ப உழைச்சுருக்க.” என்று கூறி, சிலபல உரையாடலிற்கு பிறகு அணைப்பை துண்டித்திருந்தான்.

*****

அஷ்வினியின் வீட்டில், இந்த செய்திக்கான பிரதிபலிப்பு மாயாவிடம் மட்டும் சற்று அதிகமாக இருந்தது. நவீன் மற்றும் சம்பூர்ணாவிற்கு அந்த போலிச்சாமியாரை பற்றி தெரியாத காரணத்தினால் அவர்களுக்கு இது பத்தோடு பதினொன்றாவது செய்தியாக தான் இருந்தது.

அந்த செய்தியில் போலிச்சாமியாரையும், அவன் பின்னிலிருந்து இத்தனை குற்றங்களுக்கும் காரணமான சர்வஜித்தையும் காணும்போது, கோபமாக இருந்தது மாயாவிற்கு. ஆனால், அதையும் தாண்டி விரக்தி மனநிலை தான்.

தன் குடும்பம் இதையெல்லாம் நம்பாமல் இருந்திருந்தால், இத்தகைய நிலை வந்திருக்காதே என்று அப்போதும் குடும்பத்தின் மேல் தான் அவளின் கோபம் திரும்பியது. ஒருவேளை, சாகர் விஷயத்தில் சர்வஜித் தான் சூத்திரதாரி என்று தெரிந்திருந்தால், மாயாவின் எதிர்வினை வேறாக இருந்திருக்கலாம்.

இறுகிக்கிடந்த மாயாவை, இரட்டையர்கள் இருவரும் தான் இயல்பாக்கினர். ஆனால், அதுவும் தற்காலிகமாக தான்.

*****

மாயா அவர்களின் குடும்பத்தினரின் மீது புகார் அளித்திருந்தாள். அந்த விசாரணையின் போது, மாயா குழுவிற்கு எவ்வித சிரமமும் தராமல், அவர்களே குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனையை அளித்ததோடு மட்டுமல்லாமல், தண்டனை காலம் முடிந்ததும், நவீன் மற்றும் சம்பூர்ணா பெற்றோரிடம் வளர்வதற்கு, அப்போதைய பிள்ளைகளின் விருப்பம் கருத்தில் கொள்ளப்படும் என்றும் தீர்ப்பை வழங்கியது நீதிமன்றம்.

அந்த நீதிமன்றத்திலிருந்த முழு நேரமும், மாயாவின் குடும்பத்தினர், மன்னிப்பு கோரும் பார்வையுடன் மற்ற மூவரையும் பார்த்திருக்க, ஒருநொடி கூட அவர்களை திரும்பி பார்க்கவில்லை மூவரும். மாயாவின் குடும்பத்தினர் தங்களின் விதியை நொந்தபடியே, காவலர்களுடன் சென்றனர்.

இந்த வழக்கு, சர்வஜித் வழக்கிற்கு கிளை வழக்காக கருதப்பட்டதால், ஊடகத்தின் கவனம் இவ்வழக்கிலும் பதிந்தது. அதன் விளைவாக, நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த மாயாவை சூழ்ந்து கொண்டனர் ஊடகவியலாளர்கள்.

“இந்த கேஸ்ல கோர்ட் கொடுத்த தீர்ப்பு உங்களுக்கு திருப்தியா? இல்ல மேல்முறையீடு எதுவும் செய்யப்போறீங்களா?” என்று சுற்றிவளைத்து கேள்வி கேட்க, அந்த கூட்டத்தை பார்த்த மாயாவிற்கு முதலில் பயமாக இருந்தது.

அவளின் பயத்தை உணர்ந்த அஷ்வின், அவளின் கைகளை அழுத்தி, ‘உன்னால இதை ஃபேஸ் பண்ண முடியும்’ என்று கண்களால் செய்தி அனுப்ப, அதை சரியாக புரிந்து கொண்டவளாக, ஒரு பெருமூச்சுடன் அவர்களின் கேள்விக்கு பதில் கூற ஆரம்பித்தாள்.

“இந்த தீர்ப்போ, இல்ல தண்டனையோ, நாங்க அனுபவிச்ச வேதனைக்கு  ஈடாகாது. அதுவும் எங்க குடும்பமே எங்களுக்கு எதிரா நின்னது, நாங்க கனவுல கூட எதிர்பார்க்காதது. சொந்த அப்பா அம்மா, கொல்ல நினைப்பாங்கன்னு எந்த பிள்ளைங்க யோசிப்பாங்க? இதுக்கெல்லாம் காரணம் என்ன? மக்களிடையே வளர்ந்துட்டு இருக்க பேராசையும் மூடநம்பிக்கையும் தான்! சொந்த பிள்ளைகளை கொலை செய்யிற அளவுக்கு அப்படி என்ன பணம் மேலயும், அதிகாரத்துக்கு மேலயும் அவ்ளோ ஆசை. இப்படி பணத்துக்கு பின்னாடி ஓடுறவங்களா இருந்தா, தயவுசெஞ்சு குழந்தை பெத்துக்காதீங்க. இனிமே, இப்படி மூடநம்பிக்கைங்கிற பெயர்ல, மக்கள் ஏமாறாம இருந்தா, அது தான் எங்களுக்கு கொஞ்சமாச்சும் மனநிம்மதியை தரும். அதுக்கு முதல்ல, இவனை மாதிரி போலிச்சாமியார்கள் வளர்வதை தடுக்கணும். மீடியாகிட்ட நான் கேட்டுக்குறது ஒன்னு தான், உங்க வியூஸ் அதிகரிக்க, இது மாதிரி ஆசாமிகளை இன்டர்வியூ பண்றேன்னு, சாமானிய மக்களுக்கு இவங்களை கொண்டு போய் சேர்க்காதீங்க. போலிச்சாமியார்னு தெரிஞ்சா, அப்படியே முத்திரை குத்தி அவங்க குற்றங்களை வெளிய சொல்லுங்க. அப்படியாவது, இது மாதிரி மக்களை ஏமாத்திட்டு திரியுற ஜென்மங்களுக்கு பயம் வருதான்னு பார்க்கலாம்!” என்றவள் அதற்கு மேல் பேச முடியாமல் அஷ்வினை பார்க்க, அவன் அவளை அங்கிருந்து அழைத்து சென்றான்.

நவீன் மற்றும் சம்பூர்ணாவை, நிரஞ்சனின் யோசனைப்படி அஷ்வினி பின்வழியாக அழைத்து சென்றிருந்தாள். மாயாவையும் பின்வழியில் அழைத்து செல்வதாக தான் இருந்தது. ஆனால், அஷ்வின் தான், இதன்மூலமாவது அவள் மனதில் அடைத்து வைத்திருப்பதை வெளியேற்றிவிடட்டும் என்று தன்னுடன் அழைத்து வந்திருந்தான்.

வாகனத்தில் அமர்ந்ததும், எதிரே காவல்துறை வாகனத்தில் மாயாவின் குடும்பத்தினர் செல்வதை கண்டவளின் கண்களிலிருந்து சில கண்ணீர்த்துளிகள் வெளியேற, ஆதரவாக அவளின் கரம் பற்றிக்கொண்டான் அஷ்வின்.

*****

அதன்பிறகான நாட்களில் மாயாவை பழைய கசடுகளிலிருந்து மீட்டது அஷ்வின் தான். அலுவலகத்தில் நிறைய வேலைகளை கொடுத்து அவளின் கவனம் திசை திரும்பாமல் பார்த்துக்கொண்டான் என்றால், வீட்டிலோ எந்நேரமும் யாராவது அவளுடனே இருப்பது போன்ற சூழலை ஏற்படுத்திக்கொடுத்தான்.

அஷ்வினியே, “டேய் அண்ணா, முடியல டா உன்னோட!” என்று அலுத்துக்கொள்ளும் அளவிற்கு இருந்தது அவனின் செயல்கள்.

அதை கண்டுகொள்ள வேண்டியவளிற்கும் தெரிந்து தான் இருந்தது. அஷ்வினின் காதல் பற்றி அறியாமல் இருந்திருந்தால், தற்போதைய செயல்களை நட்பின் அடிப்படையில் எடுத்திருப்பாளோ என்னவோ. ஆனால், அஷ்வினின் காதல் ஒன்றே அவளின் மனதை உறுத்திக்கொண்டிருந்தது.

பழைய வேதனையான நிகழ்வுகளை நினைப்பதில்லை தான். அதற்கு பதில், தனித்து இருக்கும் வெகு சில நேரங்களிலும் அஷ்வினை பற்றி சிந்தித்தே, பொழுதைப்போக்கினாள்.

ஒரு காலத்தில் ஆடவன் விரும்பியதை போல, பெண்ணவள் மாற, அதை அவன் அறிந்து கொண்டானா என்பது அவனிற்கே வெளிச்சம்!

*****

இரண்டு வாரங்களுக்கு பிறகு, சர்வஜித்தின் வழக்கு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. அந்த இரண்டு வார நேரத்திற்குள் பல புகார்கள் சர்வஜித்தின் மேல் பதிவாகியிருக்க, அவனிற்கு குறைந்தபட்ச தண்டனையே ஆயுள் தண்டனையாக இருக்கலாம் என்று விவாதிக்கப்பட்டு வந்தது.

சர்வஜித்தோ, தன் பெற்றோர் சரியாக இருந்திருந்தால், தனக்கு இந்நிலை ஏற்பட்டிருக்காது என்று தன்னிறக்கம் கொண்டும் வருந்தினான். சிறைவாசம் அவனை பக்குவப்படுத்தி இருந்தது.

என்ன தான், அவன் மனம் மாறினாலும், இத்தனை தவறுகள் செய்தவனிற்கு தண்டனை கிடைக்காமல் போகுமா!

சர்வஜித் தரப்பினர், சாட்சியின் மீது சந்தேகங்கள் இருக்கின்றன என்றும் அதை நிரூபிக்க சிறிது நாட்கள் வேண்டும் என்று தீர்ப்பை ஒத்திப்போடும் வேலைகளில் ஈடுபட, நீதிபதியும் அடுத்த வாரம் விசாரணை தொடரும் என்றார்.

காவல்துறையினர் சர்வஜித்தை வெளியே கூட்டி வரும் சமயம், சிறிது சலசலப்பு ஏற்பட, அவர்கள் சுதாரிக்கும் முன்னரே, சர்வஜித்தின் உடலை பதம் பார்த்திருந்தன தோட்டாக்கள்.

சிறிது நேரத்தில், அந்த இடமே பரபரப்பாக காட்சியளிக்க, நீதிமன்றத்திற்கு வெளியே நின்றிருந்த ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் என்று அனைவரும் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்க, சர்வஜித்தை சுட்டவர் யாரென்று காவலர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

யாரை சந்தேக்கப்படுவது? சந்தேகப்பட வேண்டும் என்றால், பெரிய தலைகளிலிருந்து சாதாரண மக்கள் வரை அனைவரையும் அல்லவா சந்தேக்கப்பட வேண்டும்! அப்போதே காவலர்களுக்கு தெரிந்து போனது இந்த வழக்கு ‘கோல்ட் கேஸ்’ஸாக மாறுவதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன என்று.

*****

வழக்கம்போல, அவசரமாக கிளம்பி, அம்மாவிடம் ஏதோ கூறி சமாளித்து, சந்தேகமாக பார்த்த அஷ்வினை மாயாவின் பெயர் கொண்டு அடக்கி, வெற்றிகரமாக நிரஞ்சனின் வாகனத்தில் ஏறியிருந்தாள் அஷ்வினி.

வழக்குவிசாரணைக்கு இடையே ஒருமுறை, அஷ்வினியின் மிரட்டல் தாங்க முடியாமல், சாகரை பார்த்துவிட்டு வந்தனர். இதோ இப்போதும் அங்கு செல்வதற்கான ஆணையை பெண்ணவள் போட்டுவிட, அதை மீறத்தான் முடியுமா நிரஞ்சனால்.

“உனக்கு டைம் மேனேஜ்மென்ட்டே தெரியாதா?” என்று நிரஞ்சன் வினவ, “ஹலோ மிஸ்டர். ரோபோ, ஆஃபிஸ்ல மட்டும் தான் நீங்க ரூல்ஸ் போட அல்லோவ்ட். இப்போ என்னையே பார்க்காம, ரோட்டை பார்த்து வண்டியோட்டுங்க.” என்றாள் அஷ்வினி.

“ரூல்ஸ் போட்டா மட்டும் அதை ஃபாலோ பண்ற மாதிரி தான்!” என்று முணுமுணுத்தவனை தன் பேச்சினால் அடக்கினாள். இப்படியே பேச்சும் சிரிப்புமாக முடிந்தது அந்த பயணம்.

எப்போதும் போல சாகரிடம் அஷ்வினி பேசிக்கொண்டிருக்க, நிரஞ்சன் இடையில் சாகரின் உடல்நிலை பற்றியும் அவன் இன்னும் சிறிது நாட்கள் அங்கு தங்கவேண்டியதைபள் பற்றியும் கூறிவிட்டு, சாகருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவரை பார்க்க சென்றுவிட்டான்.

சாகர் பெரிதாக வருந்தவில்லை என்றாலும், அஷ்வினிக்கு தான் ஒருபுறம் நண்பனை நினைத்தும், மறுபுறம் உடன்பிறந்தவனை நினைத்தும் கவலையாக இருந்தது.

“சகு, உங்க அண்ணா, இன்னும் இங்கயே தங்க சொல்றாங்களே, அது ஏன்னு கேட்கவே மாட்டிங்குற. ஏன்டா?” என்று அஷ்வினி வினவ, சாகரோ சிரிப்புடன், “அண்ணா அப்படி சொன்னா, ஏதாவது ரீசன் இருக்கும் வினி. மேபி, சேஃப்ட்டி பர்பஸ்ஸா இருக்காலம். அந்த சர்வஜித் மாதிரி வேற யாராவது இருக்கலாம்.” என்று சாதாராணமாக கூறினான்.

அவன் முகத்தை தன்னை நோக்கி திருப்பியவள், “அப்போ, உனக்கு என்ன ரீசன்னு தெரியாது. அதை நான் நம்பனும் அப்படி தான?” என்று கூற, அவனோ எதுவும் கூறாமல் திரும்பிக்கொண்டான்.

“உனக்கு உன்னை தெரியுறதை விட எனக்கு நல்லா தெரியும் சகு!” என்று கூறி அங்கிருந்து எழுந்து செல்ல முயன்றாள் அஷ்வினி.

அப்போது “ரீசன் என்னன்னு எனக்கு தெரியும் வினி.” என்று கூறி நிறுத்தியவன் ஒரு பெருமூச்சுடன், “மாயா…” என்றான்.

அவன் குரலே அவனிற்கு அனைத்தும் நினைவிற்கு வந்துவிட்டது என்பதை உணர்த்த, நடந்த நிகழ்வுகளை எப்படி எடுத்துக்கொண்டான் என்று அஷ்வினிக்கு தான் வருத்தமாக இருந்தது.

“எப்படி ஞாபகம் வந்துச்சு சகு?” என்று அவள் வினவ, “அன்னைக்கு நீயும் அண்ணாவும் பேசிட்டு இருந்தப்போ, மாயா பத்தி கேட்டுச்சு. அப்போலயிருந்து மாயா யாருன்னு யோசிச்சேன். முதல்ல ஞாபகம் வரல. அப்பறமே கொஞ்சம் கொஞ்சமா தான் எல்லாம் ஞாபகத்துக்கு வந்துச்சு.” என்றான்.

“அப்பறம் ஏன் எங்ககிட்ட இதை சொல்லல சகு?”

“எல்லாத்தையும் எனக்கு ஞாபகப்படுத்துன அண்ணா, இதைப் பத்தி எதுவும் சொல்லலைன்னா, அது எனக்கு தெரிய வேண்டாம்னு நினைச்சுருப்பாரு. அதான், ஞாபகம் வந்த மாதிரி காட்டிக்கல.” என்றவனின் தோளில் சாய்ந்தவளின் கண்ணீர் அவனின் தோளை நனைக்க, “எதுக்கு லூசு உன் டேமை ஓப்பன் பண்ற? லுக், மாயா – அஷ்வின் லவ் சக்ஸசானவொடனே அங்க வந்துடுவேன் ஓகேவா?” என்று அவளின் கண்ணீரை துடைத்தான்.

“மாயா – அஷ்வின்…” என்று அவள் ஏதோ கூற வர, “தெரியும் வினி. அன்னைக்கு நீங்க பேசுனப்போ அதையும் தான் கேட்டேன். அப்போ அஷ்வினை மட்டும் தான் தெரிஞ்சுது. ஞாபகம் வந்ததுக்கு அப்பறம் தான் புரிஞ்சுது, அஷ்வின் வில் பி தி பெஸ்ட் சாய்ஸ்!” என்று கூறினான். இறுதி வரிகளில் அவன் குரல் பிசிறியது என்னவோ உண்மை தான்.

“எப்படிடா, எப்படி உன்னால இப்படி பேச முடியுது? ஐ’ம் சாரி சகு, எனக்கு இதுக்கு யாரு பக்கம் நிக்கணும்னு எதுவும் புரியல! ஆனா, இந்த கன்ஃபியூஷனுக்கு நிறைய விதத்துல நான் காரணமா இருந்துருக்கேன்.” என்று அஷ்வினி அழ, சாகர் தான் அவளை சமாதானப்படுத்தினான்.

“இங்க பாரு வினி, இனி இதை பத்தி பேசி வருத்தப்படுறதுல எந்த யூஸும் இல்ல. இப்போ தான் மாயாவும் அவ லைஃபை சந்தோஷமா லீட் பண்ண ஆரம்பிச்சுருக்கா. சோ எல்லாம் நல்லபடியா நடக்கட்டும். இப்போதைக்கு என்னோட எண்ணமெல்லாம், அவங்க பழசையெல்லாம் மறந்துட்டு கூடிய சீக்கிரம் ஒன்னு சேரணும்!” என்றான்.

அவனின் தோளில் தஞ்சமடைந்த அஷ்வினியோ, “யூ டிசர்வ் பெட்டர் சகு.” என்றாள்.

“ஹ்ம்ம், எனக்குன்னு ஏதோ ஒரு பொண்ணு (ரச்சுஸ்ரீ) வராமலா போயிடும்?” என்று அவன் கூறினான்.

அவன் கூறுவதும் சரியென்று நினைத்தவள், “அண்ணிகிட்டயே லவ் பண்ணுவேன்னு சொல்ற உனக்கு என்ன தைரியம் என்று விளையாட்டாக பேசி, தன்னியல்பை வெளிக்கொண்டு வந்தாள் அஷ்வினி.

“ஃபர்ஸ்ட் கல்யாணம் ஆகட்டும் அண்ணி அவர்களே!” என்று அவனும் கிண்டலில் இறங்க, சோக மயமாக காட்சியளித்த அந்த அறையில் சிரிப்பு சத்தம் கேட்க ஆரம்பித்தது.

அதை வெளியே நின்று பார்த்துக்கொண்டிருந்த நிரஞ்சனின் மனமோ, தம்பியின் புரிதலில் நிறைந்து தான் போனது.

தொடரும்…

வணக்கம் நட்பூஸ்…😍😍😍 உங்க 🌈🔥 வெற்றிகரமா அடுத்த எபி போட்டுட்டேன்… இன்னும் ஒரு எபி தான்… அதுவும்… இல்லல்ல நான் எதுவும் சொல்லல… சொன்னா எதுவும் நடக்க மாட்டிங்குது…😔😏😑 எல்லா சஸ்பென்ஸும் ரிவீல் பண்ணிட்டேன்னு நினைக்குறேன்… உங்களுக்கு ஏதாவது தோணுச்சுனா, கமெண்ட்ல சொல்லுங்க…😊😊😊

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
15
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  Your email address will not be published. Required fields are marked *

  6 Comments

  1. Archana

   Akshay, jeni nu rendu pera matum thaa katla matha padi reveal aga vendiyathellam aiduchunu tha nenaikure😝😝😝

   1. vaanavil rocket
    Author

    Evlovo prachanai ku nadula avanga silmisham pannanga nu oru epila varume 🤣🤣🤣 Silmisham nu sonnadhum perusa nenaikka koodadhu🤭🤭🤭 Last epila avanga layum kootitu vandhudalam🤣🤣🤣

  2. Interesting ud sis nice super

  3. அருமையான குடும்பம் சார்ந்த காதல் கதை. மேலும் பல படைப்புகளை எழுத வாழ்த்துகள்.

  4. அருமையான சமூகம் சார்ந்த கதை. மேலும் பல படைப்புகளை எழுத வாழ்த்துகள்.