447 views

சுடர் 21

மாடிப்படியில் நின்றிருந்த மாயாவை கண்டு அதிர்ந்த அஷ்வினி கத்தப்போக, அவளைப் பிடித்து அங்கிருந்து அவளின் அறைக்கு அழைத்து சென்றாள் மாயா.

அறைக்குள் வந்து கதவை அடைத்ததும் அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த அழுகை பீறிட்டு எழ, கால்களை மடக்கி கதறினாள் மாயா.

அவளின் கதறலை கண்டு ஒருநொடி திகைத்த அஷ்வினி, அவளை சமாதானப்படுத்தும் நோக்கத்துடன் அவளருகே அமர்ந்தாள்.

“என் ஒருத்தியால எத்தனை பேருக்கு கஷ்டம்? அவங்க சொல்ற மாதிரி உண்மைலேயே நான் ராசியே இல்லாதவ போல!” என்று மாயா கால்களை கட்டிக்கொண்டு அழ, அவளின் எதிர்வினையை கண்டு மேலும் அதிர்ந்தாள் அஷ்வினி.

“என்ன சொல்ற மாயா? ராசியெல்லாம் இதுல எங்க சம்பந்தப்பட்டுச்சு?” என்றவள், மாயா முகத்தைக் கூட காட்ட மறுத்து அழ, “முதல்ல அழுகையை நிறுத்திட்டு என்னை நிமிர்ந்து பாரு மாயா…” என்றாள் அஷ்வினி.

சொன்னவுடன் கேட்டு விடுவாளா மாயா! பல போராட்டங்களுக்கு பின்னர் தான் அழுதழுது சிவந்திருந்த முகத்தை அஷ்வினிக்கு காட்டினாள்.

“எதுக்கு இப்படி உன்னை நீயே பிளேம் பண்ணிக்கிற மாயா?’ என்ற அஷ்வினியின் கேள்விக்கு, மடை திறந்த வெள்ளமாக மனதில் வைத்து மறுகிக்கொண்டிருந்ததை கொட்டினாள் மாயா.

“சாகர்… சாகர் இறந்ததும் என்னால தான். இப்போ அஷ்வின் மனசு முழுக்க வலி சுமக்குறதும் என்னால தான் வினி. நான் ஒருத்தி அவங்க வாழ்க்கைல வரலைன்னா, இந்நேரம் சாகரும் உயிரோட இருந்துருப்பான். அஷ்வினும் எந்த கவலையும் இல்லாம ஹாப்பியா இருந்துருப்பான். இந்த பிரச்சனைக்கான மையப்புள்ளியே நான் தான் வினி. என் வாழ்க்கை முழுசும் சோகத்தை மட்டும் தான் சுமக்கணும்னு என் தலையில எழுதியிருக்க போல! ஜாதிப் பெயரை சொல்லி பிள்ளைங்க சந்தோஷத்தையும், மூட நம்பிக்கையால பிள்ளைங்க உயிரையும் பறிக்க நினைக்கிற குடும்பத்துல பிறந்த நான், கொஞ்சம் சந்தோஷமா இருந்தது காலேஜ் நாட்கள்ல தான். அதுவும் உங்க கூட ஸ்பெண்ட் பண்ண நேரம் மட்டும் தான் எந்தவித பயமும் இல்லாம இருந்துருக்கேன். அதுக்கு நன்றியை கூட செலுத்த விடாம, என்னை மையமா வச்சு உங்க சந்தோஷத்தையும் அந்த கடவுள் பிடுங்கிட்டாருன்னு நினைக்கிறப்போ, என் மேலேயே கோபமா இருக்கு வினி! எல்லாத்துக்கும் காரணம் நான் தான்.” என்று இடையில் அஷ்வினி சொல்ல வருவதை கூட கேட்க விரும்பாமல் புலம்பியபடி இருந்தவளை வேறு வழியில்லாமல் அடித்து தான் தன்னிலை வர வைத்தாள் அஷ்வினி.

அஷ்வினி தன்னை அடித்ததும் முதலில் அதிர்ந்த மாயா, “இப்படி அடிச்சாவது என் குற்றவுணர்ச்சியை போக்கு வினி.” என்று கூற, “லூசா மாயா நீ? அப்போலயிருந்து நான் சொல்ல வரதே கேட்காம உளறிட்டு இருக்க? குற்றவுணர்ச்சி குற்றவுணர்ச்சின்னு சொல்லிட்டு இருக்கியே, ஏன் உனக்கு மட்டும் தான் இருக்கா? எனக்கு இல்ல?” என்று கூறிய அஷ்வினியின் கண்கள் நிறுத்தி வைத்திருந்த கண்ணீரை பொழிய துவங்கின.

“என்னோட பிறந்தவன் என்ன மனநிலையில இருக்கான்னு தெரியாம ஹாப்பியா சுத்திட்டு இருந்துருக்கேன். அது மட்டுமில்லாம சாகர், படிப்புன்னு யோசிச்ச அவனை, உன்கிட்ட லவ் ப்ரோபோஸ் பண்ணுன்னு கம்பெல் பண்ணதே நான் தான். நீ அவனோட லவ்வை ஒத்துக்காம இருந்தப்போ, உன்னை பேசி கன்வின்ஸ் பண்ணதும் நான் தான். இப்படி எல்லா இன்சிடெண்ட்ஸ்லயும் என்னோட பங்கு தான் நிறைய இருந்துருக்கு மாயா. நியாயமா பார்த்தா இங்க நீங்க பிளேம் பண்றது என்னையா தான் இருக்கணும்.” என்று மாயா சற்று முன்னர் செய்ததை அஷ்வினி கையில் எடுத்துக்கொள்ள, அஷ்வினியின் கூற்றை கேட்ட மாயா இப்போது திகைப்பில் ஆழ்ந்தாள்.

“வினி, இதையெல்லாம் நீ எந்த தப்பான எண்ணத்துலயும் செய்யல. இதுக்கு ஏன் நீ பொறுப்பேத்துக்குற?” என்று மாயா கூற, “அப்போ நீ மட்டும் என்ன தப்பு செஞ்ச மாயா? லவ் பண்ணது ஒரு குத்தமா? இல்ல வாழ்க்கையை எப்படி வாழனும்னு தெரியாத அந்த காட்டுமிராண்டி கூட்டத்துல பிறந்தது உன் குத்தமா?” என்ற அஷ்வினியின் கேள்விகள் அந்த அறையில் எதிரொலிக்க, அதன்பின்னான சற்று நேரம் மௌனமாக கழிந்தது.

சில நொடிகளில் மீண்டும் அஷ்வினியே பேச ஆரம்பித்தாள்.

“இங்க பாரு மாயா, சாகர் இப்போ இல்லைன்னாலும், அவனோட நினைவுகள் நம்மள சுத்தி தான் இருக்கும். இப்படி நம்மள நாமே பிளேம் பண்ணிக்குறதை அவன் கண்டிப்பா விரும்பமாட்டான்.” என்று சுவரை வெறித்துக்கொண்டு கூறியவள், இப்போது மாயாவை நேராக நோக்கி, “அவனோட ஆசையில ஒன்னு, உன்னோட பயத்தைப் போக்கி, நீ சுதந்திரமா இந்த சமூகத்துல வாழ்றது. அதை நிறைவேத்துவியா மாயா?” என்று கண்ணீருடன் வினவ, மாயாவும் சம்மதமாக தலையசைத்தாள்.

பெண்கள் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருக்க, அஷ்வினி தான், “வா மாயா தூங்கலாம்.” என்று அழைத்தாள்.

அப்போது அவளின் கைகளைப் பிடித்துக்கொண்ட மாயா, “வினி, அஷ்வின்… லவ்…” என்று திணற, ஒரு பெருமூச்சுடன், “இல்ல மாயா. அவன் உன்கிட்ட காதலை எல்லாம் எதிர்பார்க்க மாட்டான். அவன் உனக்காக செய்யுறதும் எந்த பிரதிபலனையும் எதிர்பார்த்து இல்ல. அண்ட் நானும் ஒருமுறை செஞ்ச தப்பை இன்னொரு முறை செய்ய மாட்டேன் மாயா.” என்று உறுதிகொடுத்தாள் அஷ்வினி.

அவளின் உறுதியை கேட்ட மாயாவிற்கு மனதிற்குள் உறுத்த, “வினி, என்னை தப்பா நினைக்காத பிளீஸ். உன்னையோ அஷ்வினையோ நான் தப்பு சொல்லல.” என்று ஏதோ சொல்வதற்கு தயங்க, “மாயா, ஈஸி. நான் உன்னை தப்பா நினைக்கல. ஆனா, எனக்காக ஒன்னு பண்ணு மாயா. இந்த விஷயத்துக்காக நீ வீட்டை விட்டு வெளிய போக மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணு.” என்று அவள் தயங்கிய விஷயத்தை நேரடியாகவே கேட்டாள் அஷ்வினி.

இப்போதும் மாயா தயங்க, விரக்தி சிரிப்புடன், “உனக்கு என் மேலயும் அஷ்வின் மேலயும் நம்பிக்கை இல்லன்னு தெரிஞ்சுடுச்சு மாயா. அட்லீஸ்ட் சாகர் ஆசையை நிறைவேத்திடு.” என்று அஷ்வினி கூற, “நான் வீட்டை விட்டு போகல வினி. அதுக்காக நம்பிக்கைன்னு பெருசா எதுக்கு பேசுற?” என்றவள், “வினி, எனக்கு தெரிஞ்சுடுச்சுன்னு அஷ்வினுக்கு தெரிய வேண்டாம்.” என்க, அஷ்வினியும் அதற்கு சம்மதித்தாள்.

இப்படி தன்னை பற்றிய பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதை அறியாத அஷ்வினோ இன்னும் இருளான வானத்தை வெறித்துக்கொண்டிருந்தான்.

இருளை நீக்கும் சுடரொளி வீசும் காலம் எப்போது இவர்களின் வாழ்வினில் வருமோ?

*****

கலைவாணியை குழப்பிவிட்டு தன்னறைக்கு வந்த நிரஞ்சன் உடனே அலைபேசியை எடுத்து சாரதியை அழைக்க முயன்றான்.

அப்போது தான் மணியை பார்த்தவன், ‘அவனை ரெஸ்ட் எடுக்க விடாம ரொம்ப தொல்லை செய்யுறேனோ!’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு புலனத்தில் செய்தி அனுப்பினான்.

அடுத்த நொடியே அவனிற்கு அழைத்து விட்டான் சாரதி.

“ஹே சாரிடா டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்று நிரஞ்சன் வினவ, “இல்ல மச்சான். நீ செக் பண்ண சொன்ன டீடெயில்ஸ் தான் பார்த்துட்டு இருக்கேன். இதுவரைக்கும் அந்த போலிச்சாமியாரோட டிரெக்ட் கான்டெக்ட்ல இருக்குறவங்களுக்கும் மாயா குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. இந்த ராஜேஷ் தான் சாமியார் கிட்ட போயிருக்கான். அவனை அடிச்சு கேட்டதுல ஒருத்தன் பேரை சொல்றான். ஆனா, அவனை டிராக் பண்ணிப்போனா அது டெட் என்ட்ல தான் முடியுது. இதுக்கு பின்னாடி யாரு இருக்காங்கன்னு அவனுக்கும் சரியா தெரியல போலடா. அண்ட் மோரோவர், நமக்கு சந்தேகம் வர எல்லாரையும் நம்மால தூக்கவும் முடியாது.” என்றான் சாரதி.

“ஹ்ம்ம், நீ சொல்றதும் சரி தான். இதுவரைக்கும் ஃபர்ஸ்ட் செட் ஆஃப் கான்டெக்ட்ஸ் தான செக் பண்ணியிருப்ப. இப்போ அவங்க பினாமி, சொந்தம்னு வேற ஏதாவது லூப் கிடைக்குதான்னு பாரு. நாளைக்கு வந்து நானும் ஜாயின் பண்ணிக்குறேன்.” என்றான் நிரஞ்சன்.

“அப்பறம் மச்சான், மாயா குடும்பத்தை சேர்ந்தவங்களை என்ன பண்றது? எவ்ளோ நாள் இங்கயே வச்சுருக்குறது?” என்று சாரதி வினவ, “ஒரு நாள் முழுக்க சாப்பிட எதுவும் கொடுக்காம, பணத்தை மட்டும் கண்ணு முன்னாடி வைக்க சொல்லு சாரதி. பணத்துக்காக தான இந்த மாதிரி கேவலமான காரியத்துல இறங்குனாங்க, அதை மட்டுமே வச்சு ஒரு நாள் எப்படி வாழ்றதுன்னு தெரிஞ்சுக்கட்டும். அப்பறம் அந்த ***** ராஜேஷை தனி ரூம்ல அடைச்சுடு. நாளைக்கு நான் வந்ததும் என்ன பண்ணலாம்னு டிசைட் பண்ணிக்கலாம்.” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான் நிரஞ்சன்.

*****

காலையில் முதலில் கண்விழித்தது அஷ்வினி தான்! தன்னருகே உறங்கும் மாயாவை பார்த்தவள், அவளின் நெற்றி சுருக்கங்களே, தூக்கத்திலும் யோசிக்கிறாள் என்பதைக் கூற, ஒரு பெருமூச்சுடன் கிளம்பச்சென்றாள்.

அன்றைய காலை வேளை வெகு அமைதியாக சென்றது. எப்போதும் வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருக்கும் அஷ்வினி கூட அமைதியாக இருப்பதை கண்ட சித்ராவுக்கே ஆச்சரியமாக இருந்தது.

அந்த சூழலை இலகுவாக்க, “மாயா, நேத்து என்னோட ஹையர் அஃபிசியல்ஸ் கிட்ட பேசுனேன். த்ரீ ரவுண்ட்ஸ் இன்டர்வியூ வச்சு செலக்ட் பண்ணலாம்னு சொல்லாயிருக்காங்க. சோ இன்னைக்கு இன்டர்வியூ வச்சா உனக்கு ஓகேவா?” என்று வினவினான் அஷ்வின்.

இரவு முழுவதும் யோசித்த மாயா, மற்ற பிரச்சனைகளை பின்னுக்கு தள்ளி முதலில் வேலைக்கு சென்று சாகரின் ஆசையை நிறைவேற்றலாம் என்று முடிவு செய்தாள். அதனால் ஏற்பட்ட தெளிவினால், நேர்காணலிற்கு சம்மதமும் தெரிவித்தாள்.

“ஏன் டா இதை முன்னாடியே சொல்ல மாட்டியா? இன்னைக்கே இன்டர்வியூனா பாவம் அவ ப்ரிப்பேர் பண்ண வேண்டாமா?” என்று சித்ரா மகனிடம் வினவ, “ம்மா, நேத்து அனுப்புன மெயிலுக்கு இன்னைக்கு தான் ரிப்ளை வந்துருக்கு.” என்று அன்னையிடம் கூறியவன், “மாயா, உனக்கு ஓகே தான?” என்று மீண்டும் வினவினான்.

“எனக்கு ஓகே தான் அஷ்வின்.” என்று மாயா கூற, “அவ எப்படி மதியம் தனியா வருவா?” என்று மேலும் கேள்வி கேட்க, இம்முறை அஷ்வினி சிரித்துவிட்டாள்.

அதில் சித்ராவின் கவனம் அஷ்வினியிடம் திரும்பியது. “என்னடி சிரிக்கிற?” என்றார் அவர்.

“இப்போலாம் உங்க செல்ல பையனை அடிக்கடி கேள்வி கேட்டு தொல்லை பண்றீங்களே, அதை நினைச்சேன் சிரிச்சேன்.” என்று கூறிவிட்டு மீண்டும் சிரிக்க, அவளின் தலையில் மெல்ல கொட்டியவர், “கோள்மூட்டி! இப்போ தான் அமைதியா இருக்கன்னு நினைச்சேன். எல்லாம் மாயா மேல இருக்க அக்கறைல தான் கேட்டேன்.” என்று சிலுப்பிக்கொண்டார்.

“ம்மா, மதியம் நானே வந்து கூட்டிட்டு போறேன்.” என்று கூறி மாயாவிடமும் தலையசைப்புடன் விடைபெற, அஷ்வினியும் அவன் பின்னேயே கிளம்பினாள்.

அலுவலகத்தில் நுழையும் முன்னர், “டேய் அண்ணா, மாயா நேத்து கொஞ்சம் ஃபீல் பண்ணிட்டு இருந்தா. சோ இன்டர்வியூ முன்னாடி கொஞ்சம் பார்த்துக்கோ.” என்று நடந்ததை முழுதாக கூறாமல், அவனிற்கு தெரிய வேண்டியதை மட்டும் அஷ்வினி கூற, அஷ்வினும் சம்மதமாக தலையசைத்தான்.

*****

அலுவலகத்தில் தன் வேலைகளை பார்க்க துவங்கினாலும் அஷ்வினியால் வேலையில் ஒன்ற முடியவில்லை. முன்னெப்போதும் இல்லாத வகையில்  பழைய நினைவுகள் அவளின் நிம்மதியை பறிக்க, முதல் நாள் பேசியவையும் அவற்றுடன் இணைந்து கொண்டன.

அவளின் சோர்ந்த முகத்தைக் கண்டு அக்ஷயும் ஜெனியும் வினவினாலும், அவர்களுக்கும் வேலைகள் அணிவகுத்து காத்திருந்ததால், ஒன்றுமில்லை என்று கூறி சமாளித்து விட்டாள்.

இடையில் ஜெனி வந்து, அவளிற்கான தேநீரை கொடுத்துவிட்டு, “இன்னைக்கு நீ பிரேக் வராததால செம சீனை மிஸ் பண்ணிட்ட வினி. ***** டீம்ல இருக்க வினோத்தை உனக்கு தெரியும்ல, அவனும் அவன் டீம் மேட் அமிர்தாவும் இன் ரிலேஷன்ஷிப்பாம். ஹ்ம்ம் வாயே திறக்காத அந்த ரிசர்வ்ட் டைப் பையனுக்கு அமி மாதிரி ஒரு லொடலொட பொண்ணு எப்படி செட்டாச்சோ? இவனுங்க சும்மா இருந்திருந்தாலும், கூட இருக்க பிரெண்ட்ஸ் சேர்த்து வச்சு ஓட்டியே கோர்த்து விட்டிருப்பாங்க.” என்று அஷ்வினியின் கவனம் அவளிடம் இல்லை என்பது கூட தெரியாமல் கூறிக்கொண்டிருந்தாள்.

அப்போது அங்கு வந்த அக்ஷய், “ஜெனி, இன்னைக்கு ஹாட் டாப்பிக்கை நான் தான் சொல்லுவேன். நீ எதுக்கு அதுக்குள்ள அவகிட்ட சொன்ன?” என்று சிறு பிள்ளையென சண்டை பிடிக்க, ஏதோ முணுமுணுத்தபடி இருந்தாள் ஜெனி.

“ஜெனி… ஜெனி…” என்று அக்ஷய் ஜெனியை வேலை செய்ய விடாமல் தொல்லை செய்து கொண்டிருக்க, “என்னடா பக்கி?” என்று அவனை திரும்பியும் பார்க்காமல் கத்தினாள் ஜெனி.

“இல்ல, மத்த எல்லா டீம்லயும் ரீசன்ட்டா லவ் டாப்பிக் ஓடிட்டு இருக்கு. நம்ம டீம்ல மட்டும் தான் சிங்கிள்ஸ் கதையே ஓடிட்டு இருக்கு, நாம ஏன் மிங்கிள்ஸ் கதைக்கு ட்ரை பண்ணக்கூடாது?” என்று பல்லைக்காட்டினான் அக்ஷய்.

“இப்போ வாயை மூடிட்டு வேலை பார்க்கல, இளிக்கிற பல்லை உடைச்சுடுவேன்.” என்று திட்டவும் தான் அக்ஷய் அவனிடத்திற்கு சென்றான்.

“ச்சை, ப்ரோபோஸ் பண்ண தெரியுதா இந்த அரைவேக்காட்டுக்கு?” என்று முணுமுணுத்துக்கொண்டே அஷ்வினியை நோக்க, அவளோ அங்கு நடப்பது எதுவும் அறியாதவளாக கணனி திரையிலிருந்து பார்வையை சற்றும் விலக்காமல் அமர்ந்திருந்தாள்.

ஜெனி சற்று முன் கூறிய செய்தி, குற்றவுணர்வில் தத்தளித்துக் கொண்டிருந்தவளிற்கு மேலும் தண்ணீரை ஊற்றிவிட்டதைப் போல இருந்ததை அவள் எங்ஙனம் அறிவாள்?

“ஹே, ஒரே நாள்ல இப்படியெல்லாம் திருந்திடாதடி!” என்று ஜெனி அவளின் தோளில் கைவைத்து உலுக்க, ஏதோ கனவிலிருந்து வெளிவருபவளை போல அவள் விழிக்க, “என்னடி ஆச்சு?” என்று வினவினாள் ஜெனி.

“அது, நேத்து சரியா தூங்கலைடி, அதான்.” என்று அஷ்வினி மழுப்பலாக கூற, அதை நம்பாவிட்டாலும், “அதுக்காக கண்ணை திறந்து வச்சா தூங்குற?” என்று அவளிற்கான தனிமையை வழங்கிவிட்டு தன் வேலைகளை கவனிக்க சென்றுவிட்டாள் ஜெனி.

அஷ்வினியின் கவலைபடிந்த முகத்தை ஜெனி மட்டுமல்ல நிரஞ்சனும் கவனித்துக்கொண்டு தான் இருந்தான்.

‘என்னாச்சு இவளுக்கு? ப்ராஜெக்ட் பார்த்து பயந்துட்டாளா? இல்லையே நேத்து கூட நல்லா தான இருந்தா?’ என்று மனதிற்குள் நினைத்தாலும் அப்போது எதுவும் செய்ய முடியாத காரணத்தினால், தன் வேலைகளை கவனிக்க சென்றுவிட்டான்.

*****

சில நிமிடங்கள் கழித்து, அந்த ப்ராஜெக்டில் வேலை செய்யும் அனைவரையும் சிறிய கலந்துரையாடலுக்கு அழைத்தான் நிரஞ்சன்.

“ஹாய் கைஸ். இன்னைக்கு மார்னிங் செஷன் ஸ்டேட்டஸ் கேட்க தான் இந்த சின்ன மீட்டிங். எவ்ளோ கம்ப்ளீட் ஆகியிருக்கு?” என்று ஒவ்வொருவரிடமும் கேட்டான்.

அவர்களின் பதிலை கேட்டவன், “இதெல்லாம் நேத்தே முடிக்க வேண்டியதாச்சே?” என்று நிரஞ்சன் வினவ, “நேத்து முடிச்சதுல ஒரு சின்ன இஸ்யூ வருது நிரஞ்சன். அதைத்தான் செக் பண்ணிட்டு இருக்கோம்.” என்றான் அக்ஷய்.

“ஓஹ், என்ன இஸ்யூன்னு எனக்கு மெயில் பண்ணுங்க அக்ஷய்.” என்றவன் அஷ்வினியை தான் பார்த்துக்கொண்டிருந்தான். நியாயமாக அவள் தான் நிரஞ்சனின் கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அவளிருந்த நிலையை கண்டால், அவனின் கேள்விகளை கூட உள்வாங்கி இருக்க மாட்டாள் என்று தான் தோன்றியது நிரஞ்சனிற்கு.

அந்த அறையை விட்டு வெளியேறியதும், “என்ன வினி, நிரஞ்சன் நீ ஆன்சர் பண்ணுவன்னு எக்ஸ்பெக்ட் பண்ணி உன்னையே பார்த்துட்டு இருந்தாரு. ஆனா, நீ எங்கயோ பராக்கு பார்த்துட்டு இருக்க?” என்றான் அக்ஷய்.

“அது, வந்து…” என்று அஷ்வினி திக்கும்போதே கலந்துரையாடல் அறையிலிருந்து வெளிவந்த நிரஞ்சன், “அஷ்வினி, என்னோட ரூமுக்கு வாங்க.” என்று கூறிவிட்டு சென்றான்.

அதைக்கேட்ட அஷ்வினி விழிக்க, “சீக்கிரம் போ. அதுக்கும் ஏதாவது சொல்லப்போறாரு.” என்றாள் ஜெனி.

“ஹ்ம்ம், நேத்து தான் ரெண்டு பேருக்குள்ள சண்டை வராம இருந்துச்சேன்னு நினைச்சேன்!” என்று புலம்பினான் அக்ஷய்.

*****

அறைக்குள் நுழைந்தவளை தன் கணினியை காணும்படி வரச்செய்தவன், “இந்த கோடிங் யாரு சேஞ் பண்ணா?” என்று கேட்டான்.

அது காலையில் அஷ்வினி மாற்றியது தான் என்பதை அதை பார்த்ததும் கண்டுகொண்டாள்.

“நான் தான்…” என்று அவள் இழுக்க, “இதனால தான் மத்தவங்களுக்கு அடி வாங்குது.” என்று நிரஞ்சன் கூற, அஷ்வினி எதுவும் பேசாமல் தலை குனிந்து நின்றாள்.

அவளின் நிலையைக் கண்டவன் ஒரு பெருமூச்சுடன், “லுக் அஷ்வினி, நான் உன்னை தப்பு சொல்றதுக்காக இதை சொல்லல. பட், இந்த இஸ்யூனால இன்னைக்கு மத்தவங்க ஒர்க்கும் பாதிச்சுருக்கு. என்னாச்சு? நேத்து நல்லா ஆக்டிவ்வா தான இருந்த?” என்று வினவினான் நிரஞ்சன்.

அஷ்வினி எதுவும் சொல்லாமல் தலை குனிந்தே இருக்க, “அஷ்வினி லுக் அட் மீ ஃபர்ஸ்ட். பெர்ஷ்னல் இஸ்யூஸ் வேலையை பாதிக்காத மாதிரி பார்த்துக்கணும். என்மேல நம்பிக்கை இருந்துச்சுனா, என்ன நடந்துச்சுன்னு என்கிட்ட சொல்லலாம். உன் மைண்ட்டும் ரிலாக்ஸாகும்.” என்று பொறுமையாக கூறினான் நிரஞ்சன்.

ஏனோ அந்த குரலும் அதிலிருந்த பரிவும் அஷ்வினியை பேச தூண்டியது. சாகரின் நட்பில் ஆரம்பித்து, சாகர் – மாயா காதல், சாகர் மலையிலிருந்து விழுந்தது என்று அனைத்தையும் கூறினாள்.

இதை நிரஞ்சன் ஏற்கனவே அறிந்திருந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், புதிதாக கேட்பதை போலவே கேட்டுக்கொண்டிருந்தான்.

“சோ, சாகர் இறந்ததுக்கு உன்னையே நீ பிளேம் பண்ணிக்கிறியா? சாகருக்கு அப்படி நடக்கணுங்கிறது விதி. இதுல நீயோ, மாயாவோ, ஏன் சாகரோ கூட ஒரு கருவி தான். அதுக்காக நீங்க உங்களையே வருத்திக்கிறது எந்த விதத்துலயும் நியாயம் ஆகாது.” என்று விளக்கினான் நிரஞ்சன்.

“ஹ்ம்ம், இப்படி தான் இந்த ஒன்றரை வருஷமா நானும் என்னுள்ள எழுற குற்றவுணர்ச்சியை மறைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா, நேத்து அஷ்வினும் மாயாவை லவ் பண்ணது தெரிஞ்சு இன்னும் கொஞ்சம் கில்டியாகிடுச்சு.” என்றாள்.

“வாட்? அஷ்வின் மாயாவை லவ் பண்ணானா?” என்று நிரஞ்சன் முணுமுணுத்தது, வருத்தத்தில் தன்னையே மறந்து புலம்பிக் கொண்டிருந்தவளிற்கு கேட்கவில்லை.

தன்னிச்சையாக அஷ்வின் முந்தின இரவு தன்னிடம் பகிர்ந்ததையும், மாயாவுடன் நடந்த உரையாடலையும் நிரஞ்சனிடம் கூறினாள்.

அவற்றை பொறுமையாக கேட்டவன், “மாயாக்கு அழகா எக்ஸ்ப்ளேயின் பண்ணிட்டு, நீ ஏன் இப்படி குழம்பிட்டு இருக்க? அஷ்வினும் இந்த விஷயத்துல க்ளியரா தான் இருக்கான். சாகர் அண்ட் அஷ்வின் விஷயத்துக்கு நீ பொறுப்பாக முடியாது. சாகர் கொஞ்சம் அவசரப்படாம இருந்துருக்கணும். அஷ்வின் ரொம்ப லேட் பண்ணாம இருந்துருக்கணும். காலம் ரொம்ப பிரிசியஸ் அஷி. சரியான நேரத்துல செய்யாம இருக்க செயலாலயும், தப்பான நேரத்துல செய்யுற செயலாலயும் பாதிப்புகள் ரொம்ப அதிகம்.” என்றான்.

அவன் கூறுவதை கவனமாக கேட்டவளின் மூளைக்குள் அவன் அழைத்த ‘அஷி’ பதிந்தாலும், மனமோ மூளையின் கட்டுப்பாட்டில் இல்லாத காரணத்தினால் அதை அவள் உணரவே இல்லை. ஆக, சொன்னவனும் உணரவில்லை, கேட்டவளும் உணரவில்லை.

“புரியுது பாஸ்.” என்றவள் நீண்ட பெருமூச்சை விட்டு மனதிலுள்ளவற்றை வெறியேற்றிவிட்டு, “தேங்க்ஸ் பாஸ்.” என்றாள் சிரிப்புடன்.

அவளின் சிரிப்பு கண்களை எட்டவில்லை என்றாலும், முன்பிருந்ததிற்கு இப்போது பரவாயில்லை என்பது போலான தோற்றம்.

“ஹ்ம்ம், மேடம் இனிமேலாச்சும் சரியா வேலையைப் பார்ப்பீங்களா? இல்ல இப்படி ஏதாவது அழுகாச்சி கதை சொல்லி ஓப்பி அடிப்பீங்களா?” என்று கிண்டலாக வினவ, அவனிடம் மனதுவிட்டு பேசியதலோ அஷ்வினிக்கு முன்பு போல கோபம் வரவில்லை.

“ஆஹான், அப்படியே ஓப்பி அடிச்சாலும், எங்க பாஸ் ஃப்ரீயா விட்டுட்டு தான் மறுவேலை பார்ப்பாரு! உங்க கேலண்டர்ல குறிச்சு வச்சுக்கோங்க, இந்த ப்ராஜெக்ட்டை வெற்றிகரமா முடிச்சு, இப்போ என்னைக் கிண்டல் செய்யுற உங்க வாயாலேயே என்னை பாராட்ட வைக்கல…” என்று சபதத்தை சொல்லும்போதே இடைவெட்டியவன், “உன் பேரை மாத்திக்க போறியா? அதுவே சுமாரா தான் இருக்கு!” என்றான்.

அண்ணனிற்கும் தம்பிக்கும் ஒரே அலைவரிசை போலும். ஆனால், புரிய வேண்டியவளிற்கு புரியவில்லையே!

“ஹ்ம்ம், சொல்ல மாட்டேன் செஞ்சு காட்டுவேன்.” என்று பழிப்பு காட்டிவிட்டு வெளியே செல்ல, நிரஞ்சனும் சிரித்துக்கொண்டான்.

நிரஞ்சனின் அறையையே நொடிக்கு ஒருமுறை பார்த்துக்கொண்டிருந்த ஜெனிக்கும் அக்ஷய்க்கும், அஷ்வினி சிரித்துக்கொண்டே வருவதைக் கண்டு மயக்கமே வந்துவிட்டது.

தன்னிடத்திற்கு வந்தும் இவர்களை கண்டு கொள்ளாமல் அஷ்வினி தன் கணினியை தட்டிக்கொண்டிருக்க, “ஜெனி என் கையை கிள்ளேன்.” என்றான் அக்ஷய்.

அதைக் கேட்டதும், “என்ன டா ஓவரா சீன் போட்டுட்டு இருக்க?” என்று அப்போதும் அவனை பார்க்காமல் வினவினாள் அஷ்வினி.

“ஹ்ம்ம், இதை தான் நல்லதுக்கே காலம் இல்லன்னு சொல்லுவாங்க போல. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நாலஞ்சு கப்பல் ஒன்னா கவுந்த மாதிரி இருந்தவ, இதுக்கு முன்னாடி ‘ரோபோ’ன்னு திட்டிட்டு இருந்தவரோட ரூமுக்குள்ள போயிட்டு சிரிச்சிட்டே வெளிய வந்ததை நம்ப முடியாம பார்த்தா, மேடமுக்கு நான் சீன் போடுறேனாம்!” என்று நீட்டி முழக்க, “அதெல்லாம் அப்படி தான்.” என்று தோளை குலுக்கினாள் அஷ்வினி.

*****

அஷ்வினி கூறியதை போல, அதன்பின்னான வேலைகள் வேகமாக முடிய, எட்டு மணிக்கெல்லாம் கிளம்பியிருந்தனர். முன்தினம் நடந்த குளறுபடியால், அஷ்வினே காத்திருந்து அஷ்வினியை அழைத்து சென்றான்.

அவள் கிளம்பியதும் கால் மணிநேரம் கழித்து கிளம்பிய நிரஞ்சன் சென்றது சாரதி இருக்கும் இடத்திற்கு தான்.

“என்னடா ஆச்சு? எனி நியூஸ்?” என்றவாறே உள்ளே நுழைந்தான் நிரஞ்சன்.

“ம்ம்ம், இப்போ தான் கொஞ்சம் ஸ்ட்ரேஞ்சான தகவலை கண்டு பிடிச்சுருக்கேன்.” என்ற சாரதி நிரஞ்சனை நோக்கி, “நம்ம தேடிட்டு இருந்த ஆளுக்கு மாயா குடும்பத்தோட எந்த கனெக்ஷனும் இல்ல. ஆனா, சாகர் குடும்பத்தோட கனெக்ஷன் இருக்கு.” என்றான்.

சரியாக அதே சமயம் உள்ளே நுழைந்த அவன், “ஹே ஹாய், நான் இல்லாம என்ன டிஸ்கஷன் ஓடிட்டு இருக்கு?” என்று மற்ற இருவரையும் பார்த்து வினவினான்.

யார் அவன்?

தொடரும்…

வணக்கம் நட்பூஸ்…😍😍😍 சீக்கிரமா போட வேண்டிய எபி… ஆனா, எழுத எழுத வந்துட்டே இருந்ததால லேட்டாகிடுச்சு…😁😁😁 கதையை படிச்சுட்டு உங்க கருத்துக்களை ரியாக்ஷன்ஸ் மூலமாவோ, காயின்ஸ் மூலமாவோ, கமெண்ட்ஸ் மூலமாவோ சொல்லுங்க நட்பூஸ்…😊😊😊

இப்படிக்கு

உங்க 🌈🔥

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
12
+1
2
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  Your email address will not be published. Required fields are marked *

  4 Comments

  1. Archana

   யார் அந்த இன்னொரு ஆளு🤔🤔🤔🤔 சாகர் ஃபேமிலினா அவங்க அப்பாவா இருக்குமோ😶😶😶😶

   1. vaanavil rocket
    Author

    Yaru nu neenga dhan kandupidikkanum… Ungalukana task adhu…😜😜😜
    Irukumo🤔🤔🤔

  2. Interesting ud sis nice super ashwin ah irukumo