472 views

சுடர் 15

வீட்டிற்குள் நுழைந்த நிரஞ்சனை வெளியே நிற்க வைத்து, “எங்கடா போயிட்டு வர? எப்ப வருவன்னு போன் பண்ணி சொல்லணும்னாவது தோணுச்சா? நான் என்ன ஹோட்டலா நடத்திட்டு இருக்கேன்?” என்று கலைவாணி திட்டிக்கொண்டிருக்க, வெளியே நின்று அவர் கத்தியதால், வீதியில் செல்லும் சிலர் அந்த காட்சியை பார்த்து நமுட்டுச்சிரிப்புடன் கடந்து சென்றனர்.

அது நிரஞ்சனிற்கு சங்கோஜத்தை தர, “சித்தி உள்ள போய் பேசலாம்.” என்று மெல்லிய குரலில் கூற, “எதே பேசலாமா? உன்னை திட்டிட்டு இருக்கேன் டா. அது சரி, இதுக்கு தான் தனியா இருக்கேன்னு சொல்லிட்டு திரியிறியா? இதுக்காகவே ஒரு நாள் அங்க வந்து, நீ என்னென்ன செய்றன்னு பார்க்கணும் போல.” என்று கலைவாணி கூற, அவர் கூறியதைப் போல கற்பனை செய்து பார்த்தவன், “சுத்தம்!” என்று வாய்விட்டு சலித்துக்கொண்டான்.

என்னடா சொல்ற?” என்றவரை நகர்த்திக்கொண்டே வெற்றிகரமாக உள்ளே நுழைந்தான் நிரஞ்சன்.

அங்கு நடுகூடத்தில் அமர்ந்திருந்த நாராயணன் நடப்பதை சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருக்க, “யூ டூ தாத்தா!” என்ற அவரின் அருகே அமர்ந்தான்.

ப்ச், வந்ததே லேட்டு. அதுக்குள்ள தாத்தாவும் பேரனும் பேச உட்கார்ந்துட்டீங்களா? சீக்கிரம் சாப்பிட வாங்க.” என்று கலைவாணி சமையலறைக்குள் செல்ல, பேரனோ தாத்தாவை பார்த்து, “நீங்க இன்னும் சாப்பிடலையா தாத்தா? எத்தனை முறை சொல்றது சீக்கிரம் சாப்பிடுங்கன்னு.” என்றான்.

நீயே என்னைக்கோ தான் இங்க வர, அப்போ கூட உன்னோட சேர்ந்து சாப்பிடலைன்னா எப்படி? ஒருநாள் லேட்டா சாப்பிட்டா ஒன்னும் ஆகிடாது. நீ வா.” என்று கையோடு பேரனை அழைத்துச்சென்றார் அந்த தாத்தா.

நாராயணன் சாதாரணமாக அதை கூறியிருந்தாலும், ‘இப்படி சின்ன விஷயத்துக்கு கூட எதிர்பார்க்க வச்சுட்டேனோ!’ என்ற குற்றவுணர்வும் இப்போது சேர்ந்து கொண்டது நிரஞ்சனிற்கு.

மேலும், ‘எனக்கு இங்க வந்தா டிஸ்டர்ப்பாகுதுன்னு இவங்களை தனியா விட்டுட்டேனோ!’ என்றும் யோசிக்க ஆரம்பித்தான்.

டேய் நிரஞ்சா, சாப்பிடும் போதும் என்ன யோசனை? என்று அதட்டிவிட்டே பரிமாறினார் கலைவாணி.

தன் ஒவ்வொரு அசைவுகளும் எதிரிலிருப்பவர்களிடம் ஏற்படுத்தும் எதிர்வினைகளை கண்டவன், தற்காலிகமாக தன் குழப்பங்களையும் குற்றவுணர்வுகளையும் ஒதுக்கி வைத்து, தன் குடும்பத்தினருடன் ஐக்கியமாகி விட்டான்.

சீக்கிரம் இவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சுடனும் ப்பா. சொல்றவங்க சொன்னா தான் இவன் அடங்குவான்.” என்று கலைவாணி கூற, நிரஞ்சனோ சிரிப்புடன், “நான் தான் எப்பவோ ஓகே சொல்லிட்டேனே சித்தி. நீங்க தான் இன்னும் கல்யாண வேலையை ஸ்டார்ட் பண்ணவே இல்ல.” என்று கூறினான்.

அடப்பாவி, பாருங்க ப்பா இவனை. இத்தனை நாள் இழுத்தடிச்சுட்டு இப்போ நம்ம மேல பழியைத் தூக்கிப்போடுறான். இதுக்காகவே இன்னும் ஒரே மாசத்துல உனக்கு கல்யாணம் பண்ணி வச்சுடுறேன்.” என்று கலைவாணி சபதம் போட, கலகலப்பாக சென்றது அவ்வேளை.

*****

அடுத்த நாள் ஞாயிறு என்பதால், சிறிது சோம்பலாகவே விடிந்தது அஷ்வினியின் வீட்டில். அஷ்வினிக்கு என்று கூற வேண்டுமோ!

ஏனெனில், அவ்வீட்டில் இருந்த இளையவர்கள் கூட எழுந்து விட்டனர், அஷ்வினி எழுவதற்கான அறிகுறி எதுவும் இல்லை.

அஷ்வின் முதல் சம்பூர்ணா வரை அனைவரும் எழுப்பி பார்த்தும், அனைவருக்கும் பாரபட்சமின்றி, “ஃபைவ் மினிட்ஸ்என்ற பதிலே கிட்ட, அவளை எழுப்புவதற்கு சரியான ஆள் சித்ரா தான் என்பதால், அந்த பணி சித்ராவிடம் ஒப்படைக்கப்பட, அவர் சென்ற ஐந்தே நிமிடங்களில் தூக்கக்கலக்கத்துடன் கீழே இறங்கி வந்தாள் அஷ்வினி.

நடுகூடத்தில் நீள்சாய்விருக்கையில் அமர்ந்திருந்த அனைவரும் அவளையே சிரிப்புடன் பார்த்திருக்க, அவளோ தந்தையின் அருகே அமர்ந்து அவரின் மேல் சாய்ந்து கொண்டு விட்ட தூக்கத்தை துவங்கினாள்.

அதைக் கண்ட சம்பூர்ணாவிற்கு அஷ்வினியிடம் விளையாடிப்பார்க்க தோன்ற, “ஆண்ட்டி, வினிக்கா திரும்பவும் தூங்குறாங்க.” என்று மாடியிலிருந்த சித்ராவிற்கு கேட்க வேண்டும் என்று கத்தினாள்.

அட குட்டிவில்லி, என்னையே மாட்டிவிடுறியா!” என்று புலம்பியபடி அஷ்வினி விழிக்க, மாடியிலிருந்து அவளின் அன்னை, “நான் கீழ வரதுக்குள்ள அந்த சோஃபாவை விட்டு எழுந்திருக்கலன்னா, இன்னைக்கு ஃபுல்லா சோறே போட மாட்டேன் பார்த்துக்கோ.” என்றார்.

ம்மா, அவ ஏதோ உங்களை ஆன்ட்டின்னு கூப்பிட்ட உடனே, அவ சொல்றதெல்லாம் உண்மைன்னு நம்பாதீங்க. நான் அல்ரெடி பிரஷ் பண்ணிட்டேன்.” என்றவள் அப்போது தான் பல் துலக்க ஆயத்தமானாள்.

இப்படி அமர்க்களமாக ஆரம்பித்த அவர்களின் நாள் கலகலப்பாகவே சென்றது.

காலை உணவை முடித்து இலகுவாக அமர்ந்திருந்தனர் அவ்வீட்டினர்.

எப்போதும் அறைக்குள் தஞ்சமடையும் அஷ்வின் கூட நடுகூடத்தில் அமர்ந்திருப்பது, அவன் குடும்பத்தினருக்கு ஆச்சரியத்தையே அளித்தது.

ஒருபுறம் அஷ்வினிசம்பூர்ணா குழு எங்கெல்லாம் சுற்றலாம் என்று திட்டம் தீட்ட, இவர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த பாவப்பட்ட ஜீவன்கள் மாயாவும் நவீனும் தான்.

மறுபுறம் தந்தையும் மகனும் எதையோ தீவிரமாக பேசிக்கொண்டிருந்தனர். அங்கு வந்த சித்ராவோ இரு குழுவையும் பார்த்துவிட்டு அஷ்வினியின் பக்கம் செல்ல, அப்போதென்று பார்த்து, சம்பூர்ணாவும் அஷ்வினியும் விவாதித்துக்கொண்டிருக்க, “சின்ன பொண்ணுகிட்ட என்ன சண்டை உனக்கு?” என்றார் சித்ரா.

ம்மா, திரும்ப திரும்ப சொல்றேன், இவ உங்களை ஆண்ட்டின்னு சொன்னதால ரொம்பத்தான் இவளுக்கு சப்போர்ட் பண்றீங்க. இப்போ கூட இங்க என்ன பேச்சு போயிட்டு இருக்குன்னு தெரியாம, என்னமோ நான் சண்டை போடுறேன்னு சொல்றீங்க. மேடமுக்கு டெயிலியும் வெளிய சுத்தனுமாம்எங்க இப்போ ஓகே சொல்லுங்க பார்ப்போம்.” என்று அஷ்வினி கூற, தனியாக விவாதித்துக்கொண்டிருந்த ஆண்கள் குழுவின் பார்வை கூட இப்போது இவர்களின் புறம் திரும்பியது.

சம்பூர்ணாவை திட்டுவதற்கு மாயா முற்பட, அதற்குள் பேச ஆரம்பித்திருந்தார் சரவணன்.

டெயிலி வெளிய போனா சம்மு பாப்பா எப்படி ஸ்கூல் போறதாம்?” என்று அவர் சம்பூர்ணாவிடம் வினவ, அதுவரை அவரிடம் பேசாமல் ஒதுங்கியிருந்த சம்பூர்ணா, “ஸ்கூல்லா! என்னோட ஸ்கூல் தான் ஊர்ல இருக்கே.” என்று மழலையில் கூறினாள்.

இங்க புது ஸ்கூல்ல பாப்பாவை சேர்த்துடலாமா? பாப்பா புது பிரெண்ட்ஸ் கூட ஜாலியா ஸ்கூலுக்கு போகலாம்.” என்று சரவணன் கூற உற்சாகத்துடன் தலையசைத்தாள் சம்பூர்ணா.

அதே கேள்வியை நவீனிடம் கேட்க, அவனோ மாயாவின் முகத்தை கண்டான்.

சரவணனும் சம்பூர்ணாவும் உரையாடியதைக் கேட்ட மாயாவிற்கு நெருடலாக இருந்தது. ஏற்கனவே, அஷ்வினியின் வீட்டில் இருப்பது அவர்களுக்கு சுமையாக இருக்குமோ என்று கவலைப்படும் மாயாவிற்கு, இப்போது தங்கை தம்பியின் பள்ளியைப் பற்றிய பேச்சு அவளின் தவிப்பை அதிகமாக்கியது என்பதே உண்மை.

அங்கிள்…” என்று தயக்கத்துடன் மாயா அழைக்க, அவளின் கசங்கிய முகத்திலிருந்தே அவள் என்ன சொல்ல விழைகிறாள் என்பதை சரவணனால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

அப்போது முந்தைய தினம் மகன் பேசியதும் நினைவிற்கு வந்தது.

*****

முதல் நாள், அஷ்வினி மற்ற மூவரையும் அவளின் அறைக்கு அழைத்துக் கொண்டு சென்ற வேளை.

அஷ்வின், அந்த பொண்ணுக்கு என்னாச்சுன்னு இப்போ முழுசா சொல்லு.” என்று சரவணன் வினவ, ஒரு பெருமூச்சுடன் நடந்ததை கூற ஆரம்பித்தான்.

அஷ்வினியிடம் கூறியதைப் போல, சாகரை பற்றி எதுவும் சொல்லாமல், மாயா அஷ்வினியின் தோழி என்று கூறினான். பின்னர், மாயாவின் தந்தையை பற்றி மேலோட்டமாக கூறிவிட்டு, தற்போது அவர் சிறையில் இருப்பதால் மாயாவின் குடும்பம் அவளின் சித்தப்பா வீட்டில் இருப்பதாக கூறினான்.

அதன்பின்னர் அஷ்வின் கூறிய செய்திகளை கேட்ட பெற்றோர் இருவரும் அதிர்ச்சியாகிப் போயினர்.

என்னடா சொல்ற? இப்படியெல்லாமா இருப்பாங்க?! பணத்துக்காக சொந்த குழந்தைகளை கொல்ற அளவுக்கு எப்படிடா இப்படி இருக்காங்க?” என்று பதற்றமானது சித்ரா தான்.

ம்மா, ரிலாக்ஸ்டா இருங்க. இதை விட மோசமா நார்த் சைட் நடந்துருக்கு. இப்போ கூட நியூஸ்ல ட்ரெண்டிங்ல இருக்கே, டெல்லில நடந்த குடும்ப தற்கொலை! அதை கம்பேர் பண்றப்போ இது எவ்ளோவோ பரவால தான்.” என்றான் அஷ்வின்.

சித்ராவிற்கு அந்த செய்தி பற்றி தெரிந்திருந்தாலும், “என்னமோ போடா, அந்த நியூஸ் கிடைச்சப்போ, நார்த் சைட்ல தானன்னு நினைச்சேன். இப்போ இங்க பக்கத்துல, அதுவும் நமக்கு தெரிஞ்சவங்க பாதிக்கப்படுறாங்கன்னு தெரியவும் படபடன்னு தான் இருக்கு.” என்றார்.

ம்மா, கொஞ்சம் அமைதியா இருங்க. இதுக்கு தான் முன்னாடியே உங்ககிட்ட சொல்லல. பாருங்க இவ்ளோ டென்ஷனாகுறீங்க!” என்றபடி அவரின் முதுகை ஆறுதலாக வருடினான்.

சரவணனிற்கும் இது புதிய செய்தி என்றாலும், ஏதோ யூகித்து வைத்திருந்ததால், சித்ரா அளவிற்கு பதறவில்லை.

ம்மா, மாயா கொஞ்ச நாளைக்கு நம்ம வீட்டுலயே தங்கட்டும். அவளுக்கு நடந்த நிகழ்வுகள்ல இருந்து இன்னும் வெளிய வரல. அவளும் சரி, அந்த ரெண்டு பிள்ளைங்களும் சரி, இன்னும் பயத்தோட தான் இருக்காங்க. அவங்க குடும்ப பின்னணியால, இந்த சமூகத்தை அவங்க பார்க்குற பார்வையும் வித்தியாசமா தான் இருக்கு. இந்த சூழல்ல அவளால, இந்த சமூகத்தை தனியா ஃபேஸ் பண்ண முடியும்னு எனக்கு தோணல மா.” என்றான் அஷ்வின்.

எதுக்குடா இவ்ளோ பெருசா பேசுற? ரெண்டு சின்ன பிள்ளைகளை வச்சுட்டு அந்த பொண்ணு என்ன பண்ணும்? இதெல்லாம் நீ சொல்லித்தான் எனக்கு தெரியணுமா? போடா போ, நான் உனக்கு அம்மாடா. உனக்கு இருக்க மனிதாபிமானம் கொஞ்சம் கூடவா எனக்கு இருக்காது. நான் முடிவு பண்ணிட்டேன். அந்த பொண்ணை இப்போதைக்கு வெளிய விடுறதா இல்ல.” என்றார் சித்ரா.

மனிதாபிமானமா?!’ என்று அஷ்வினின் மனம் கெக்கலித்துக்கொண்டதை சித்ரா அறிய வாய்ப்பில்லை.

*****

சரவணனும் சித்ராவும் நினைவுகளிலிருந்து மீண்டு வருவதற்கும், “நாங்கநாங்க வெளிய தங்கிக்கிறோம் அங்கிள்.” என்று தயங்கியபடி மாயா சொல்வதற்கும் சரியாக இருந்தது.

அஷ்வின் ஏதோ கூற வர, அவனை கண்களால் தடுத்த சித்ரா பேச ஆரம்பித்தார்.

ஏன் மா மாயா, எப்படி தனியா இந்த உலகத்தை ஃபேஸ் பண்ண போறேன்னு முடிவு பண்ணிட்டியா? அதுவும் இந்த ரெண்டு பிள்ளைகளை வச்சுக்கிட்டு.” என்று சித்ரா வினவ, மாயாவோ எதுவும் கூறாமல் தலை குனிந்து கொண்டாள்.

அவளருகே சென்றவர், “நீ எப்போ தலை நிமிர்ந்து இந்த கேள்விக்கு பதில் சொல்றியோ, அப்போ நானே உன்னை வெளிய அனுப்பி வைக்குறேன். போதுமா? இப்போ உன்னோட கவனமெல்லாம் சுயமா எப்படி எதிர்த்து நிக்க போறங்கிறதுல இருக்கணும்.” என்று குனிந்திருந்த அவளின் தலையை நிமிர்த்தியபடி கூறினார்.

அதற்கு சம்மதமாக தலையாட்டியவளிற்கு, அவர்களிடமிருந்து அனைத்தையும் ஓசியில் பெரும் எண்ணமில்லை. அதை அவர்களின் மனம் நோகாமல் கூறுவது எப்படி என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.

அவளின் சிந்தனையை கவனித்த சரவணன், “இன்னும் என்ன மா யோசனை? எப்படி எல்லாத்தையும் இவங்க கிட்டயிருந்து சும்மா வாங்கிக்குறதுன்னு யோசிக்கிறியா?” என்று சரியாக யூகிக்க, “ஆமா அங்கிள், பட் பிளீஸ் என்னை தப்பா நினைக்காதீங்க.” என்று மாயா கூறினாள்.

இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு மா. உன்னோட தன்மானத்தை பார்த்து சந்தோஷமா தான் இருக்கு.” என்றவர், “அதுக்காக பிள்ளைங்களோட படிப்பை வீணாக்க வேண்டாம். பணத்தை விட நாம அவங்களுக்கு கொடுக்குற பெரிய சொத்து படிப்பு தான். எனக்கு தெரிஞ்ச ஸ்கூல் இருக்குஇப்போ அங்க இவங்களுக்கு அட்மிஷன் போட்டுடலாம். நானே இவங்க ஃபீஸ் கட்டுறேன். அப்பறமா உனக்கு எப்போ முடியுதோ, அப்போ திருப்பி கொடு, அதை வாங்கிக்குறேன். இது ஓகேவா?” என்றார் சரவணன்.

தயக்கத்தோடு என்றாலும் சம்மதித்தாள் மாயா. சரவணன் கூறியது போல, தம்பி தங்கையின் படிப்பு விஷயமாகிற்றே!

அவர்களின் தீவிர உரையாடலை அமைதியாக கவனித்துக்கொண்டிருந்த அஷ்வினி, மாயாவின் முகம் தெளிவில்லாமல் இருப்பதைக் கண்டு, “இன்னும் இங்க என்ன ஓடிட்டு இருக்கு மாயா?” என்று அவளின் தலையை தொட்டு வினவினாள்.

இதெல்லாம் சமாளிக்கணும்னா நான் வேலைக்கு போகணும் வினி. அதைத்தான் யோசிட்டு இருக்கேன்.” என்று மாயா கூற, “உன்னோட செர்ட்டிஃபிகேட்ஸ் எல்லாம் எங்க இருக்கு மாயா? அதைக் கொடுத்தா, என்னோட கம்பெனிலேயே வேலைக்கு ட்ரை பண்ணலாம்.” என்றான் அஷ்வின்.

செர்ட்டிஃபிகேட்ஸ்என்றதும் மாயாவின் கண்கள் கலங்க, அதற்கான காட்சியும் படமாக விரிந்தது அவளின் மனதில்.

*****

சாகர் மலையிலிருந்து விழுந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கடந்திருந்த சமயம்

தன்னால் தானேஎன்ற குற்றவுணர்வின் பிடியில் சிக்கித் தவித்த மாயா, சோகமே உருவாக நடமாடிக் கொண்டிருக்க, அதைக் கூட பொறுக்க முடியாதவராக சந்தானமூர்த்தி, அவளைக் காணும்போது எல்லாம் திட்டித்தீர்க்க துவங்கினார்.

இப்படி காலம் முழுக்க என்னை திட்டுறதுக்கு, அவனோட என்னையும் கொன்னுருக்கலாம்!’ என்று நினைத்தவளிற்கு அதை வெளியில் கூறும் தைரியம் தான் வரவில்லை.

ஒருநாள், மாயா நடந்ததை நினைத்து அவளின் அறையில் அமர்ந்திருக்க, கோபமாக அந்த அறைக்குள் வந்தார் சந்தானமூர்த்தி. அவரின் கோபத்திலேயே பயந்து ஒடுங்கிய மாயாவின் கண்கள், அவரின் கைகளில் அகப்பட்டிருந்த மதிப்பெண் சான்றிதழ்களை வெறித்தன.

தந்தையோ மகளின் பயத்தையெல்லாம் பொருட்படுத்தாமல், அவரின் கோபத்தை மகளை அடித்து உதைத்து வெளிப்படுத்தி, “கழுதைக்கு மார்க் ஷீட் ஒன்னு தான் கேடு! படிச்ச திமிர்ல தான, நம்ம ஊர்ல ஒருத்தரும் செய்ய துணியாததை செய்ய பார்த்த, உன்னையெல்லாம் படிக்கவே வச்சிருக்க கூடாது. உங்க அம்மா கெஞ்சிக்கேட்டதால தான் இந்த தலைகுனிவு எனக்கு ஏற்பட்டுருக்கு. உன்னை கவனிச்சுட்டு அவளுக்கும் இருக்கு. இங்க பாரு, உன் கண்ணு முன்னாடியே நீ படிச்சு வாங்குன எல்லாத்தையும் கொளுத்துறேன்.” என்று காட்டுக்கத்து கத்தியவர், சொன்னது போலவே அனைத்து சான்றிதழ்களையும் தீக்கு இரையாக்கினார்.

படிப்பு, சான்றிதழோடு முடிவதில்லை என்பது அந்த ஜாதிவெறி மனிதருக்கு எப்படி புரியும்!

தந்தையின் கோர ஆட்டத்தினால், மாயாவின் உடலில் பல இடங்களில் இரத்தம் கட்டியிருந்தது. அவர் தள்ளிவிட்டதால் அங்கிருந்த கட்டிலில் மோதி தலையிலும் அடிபட்டு மயக்க நிலைக்கும் முந்தைய நிலையில் இருந்ததால், அவளால் அதை தடுக்க இயலவில்லை. சுயநினைவில் இருந்திருந்தாலும், அதை தடுத்திருப்பாளா என்பது சந்தேகமே!

*****

கண்கள் பழைய நினைவில் கலங்க, அதைக் கண்ட அஷ்வினி, “ஹே மாயா, என்னாச்சு?” என்று வினவினாள்.

அஷ்வினியின் குரலில் சுயநினைவை அடைந்த மாயா, கண்களை துடைத்துக்கொண்டே, “என்னோட செர்ட்டிஃபிகேட்ஸ் எல்லாம் எரிஞ்சுடுச்சு.” என்றாள்.

அவளின் கண்ணீரே அவை எரிந்து போனதிற்கான காரணத்தை கூற, அதைக்கேட்டு அவளை மேலும் வருத்தப்பட செய்ய வேண்டாம் என்று கருதியவர்கள் அமைதியாக இருந்தனர்.

டோன்ட் வொரி மாயா. செர்ட்டிஃபிகேட்ஸ் தொலைஞ்சு போச்சுன்னு யூனிவர்சிட்டில கேட்டா, புது செர்ட்டிஃபிகேட்ஸ் தருவாங்க.” என்று ஊக்கப்படுத்தினான் அஷ்வின்.

அவளின் மனமாற்றத்திற்கு தான் இவையெல்லாம் என்பதை உணர்ந்த மாயாவும் நன்றியுடன் கூடிய புன்னகையை அவனை நோக்கி வீசினாள்.

சில நிமிடங்களாகவே சூழ்நிலை வெகு தீவிரமாக சென்று கொண்டிருப்பதை உணர்ந்த அஷ்வினி அதை இலகுவாக்கும் பொருட்டு, “ம்மா, உங்க பையன் என்னைக்காவது இப்படி மோட்டிவேட்டிங்கா என்கிட்ட பேசியிருக்கானா?” என்று ரகசியம் போல பேசினாலும், அது அனைவருக்கும் கேட்கத்தான் செய்தது.

அவளின் முயற்சி உணர்ந்த சித்ராவும், “நீ என்னைக்காவது, அவன் சொல்படி நடந்துருக்கியா?” என்று அவளையே கேலி செய்தார்.

ப்ச், உங்ககிட்ட போய் சொன்னேன் பாருங்க! ப்பா, நீங்க சொல்லுங்க.” என்று தாயிடம் கிட்டாத ஆதரவை தந்தையிடம் எதிர்நோக்கினாள்.

வினி மா, உங்க அம்மா சொல்றதும் சரி தானடா?” என்று தந்தையும் தாயின் பக்கம் சாய்ந்து விட, “ப்பா…” என்று பாவமாக சிணுங்கினாள் அஷ்வினி. அதைக்கண்ட மற்றவர்களின் சிரிப்பு சத்தம் அந்த வீட்டையே அலங்கரித்தது.

*****

இரவில், சம்பூர்ணா கீழேயே உறங்கிவிட, அவளை சரவணன்சித்ரா அறையில் விட்டுவிட்டு, அஷ்வினியும் மாயாவும் ஒரு அறையிலும், அஷ்வினும் நவீனும் ஒரு அறையிலும் படுத்துக்கொண்டனர்.

அனைவரும் நன்கு உறங்கிய வேளை, அந்த அறையில் மின்விசிறி சுழன்று கொண்டிருந்ததை தவிர வேறெந்த சத்தமும் இல்லை.

அப்போது திடீரென்று மாயா, “சாகர்…” என்று கத்திக்கொண்டே எழ, அருகிலிருந்த அஷ்வினி பயத்துடன் எழுந்தமர்ந்தாள்.

நொடியில் சுதாரித்த அஷ்வினி மாயாவிடம், “என்னாச்சு மாயா?” என்று கேட்க, அது எதிரிலிருப்பவளின் காதில் விழுந்ததா என்று தான் தெரியவில்லை.

மாயா அழுதுக் கொண்டே ஏதோ புலம்ப, பயந்து போன அஷ்வினி அஷ்வினை அழைப்பதற்காக, அவளின் அறைக்கதவை திறக்க, அங்கு நின்றிருந்தவனை கண்டு அதிர்ந்தாள்.

தொடரும்…

வணக்கம் நட்பூஸ்…😍😍😍 நான் தான் உங்க 🌈🔥 ஷப்பா ஒருவழியா அடுத்த எபி போட்டுட்டேன்… நானெல்லாம் அடுத்த நாளே, அதுவும் 1500 வார்த்தைகள் கொண்ட எபி போடுற ஆளே கிடையாது… அப்படிப்பட்ட இந்த க்ரீன் சேன்ட், அடுத்த எபி போடுறேன்னா அதெல்லாம் யாருக்காக… உங்களுக்காக தான் மை டியர் ரீடர்ஸ்.. சோ நீங்களும் சமர்த்தா உங்க கமென்ட்ஸை வாரி வழங்குவீராக…😁😁😁

போன எபிக்கு போட்ட கமென்ட்ஸுக்கே இன்னும் ரிப்ளை வரலைன்னு சொல்ற நட்பூஸ் வெயிட்டிஸ்… உங்க கமெண்ட்ஸ் எல்லாம் படிச்சுட்டேன்… சீக்கிரமே அதுக்கு ரிப்ளையும் போட்டுடுவேன்…😊😊😊

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
8
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  Your email address will not be published. Required fields are marked *

  8 Comments

  1. Interesting ud sis super ashwin ne thani track la dha poitu iruka pola vini kita eppa matta poranu dha therila super sis nice ud

   1. vaanavil rocket
    Author

    Tq so much sis😍😍😍 Haha avan maatta pogum kaalam vegu tholaivil illai😜😜😜

  2. Archana

   யார் அந்த பிளாக் ஷீப்🤔🤔🤔🤔🤔 அஷ்வின் மனிதாபிமானத்துக்கா பண்ணுறான்🤣🤣🤣🤣🤣

   1. vaanavil rocket
    Author

    Blacksheep 🤔🤔🤔 Haha adhana avane epo track kedaikum nu wait pannitu irukan… Idhu theriyama irukanga avanga amma🤣🤣🤣

  3. Janu Croos

   அஷ்வின் என்ன காரணத்துக்காக இப்படி எல்லாம் பண்றான்…முதல்ல மாயா மேல அவனுக்கு லவ் ஏதாவது இருக்குமானு தோணிச்சு… இப்போ அவன் ஃபோன்ல ரகசியமா பேசாறது மனிதாபிமானதுக்கானு யோசிக்குறது எல்லாம் பாத்தா நல்ல படியா யோசிக்க முடியலயே….இதுல எங்கயோ ஒரு கருப்பு ஆடு வேற இருக்கு…அவன் யாரு….அவன் எல்லாருக்கும் தெரிஞ்சவனா? அவனுக்கும் அஷ்வினுக்கும் ஏலாவது தொடர்பு இருக்கா?

   1. vaanavil rocket
    Author

    அஷ்வின் லவ் தான் பண்றானாம்😂😂😂
    அந்த கருப்பு ஆடு யாருன்னு கெஸ் பண்ணுங்களேன்…😊😁😜

  4. Sangusakkara vedi

   Athu sagar Thane….. Acho pavam maya …. Nalla vela Chitra avangala purunjukittanga ilena rmba kastam…. Super sis …