1,472 views


சுடர் 1

கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்

அதிகாலையின் முடிவும், காலையின் துவக்கமுமான அந்த வேளையில், எம்.எஸ் சுப்புலஷ்மியின் தெய்வீகக்குரலில் சுப்ரபாதம் ஒலித்துக்கொண்டிருக்க, அப்போது அந்த வீட்டிற்குள், தன் வழக்கமான வேக நடையில் நுழைந்தாள் அவள்.

தடதடவென்ற அவளின் ஸ்போர்ட்ஸ் ஷூ சத்தமும், அதற்கு ஏதுவாக காற்றில் அசைந்த, அலட்சியமாக போடப்பட்ட போனியும், அவளின் அவசரத்தை பறைசாற்றியது.

நடுவழியில் ஷூவை கழட்டிவிட்டு அவள் உள்ளே செல்ல முற்பட, அங்கு இடுப்பில் கைவைத்து முறைத்துக்கொண்டிருந்தார் அவளின் அன்னை. அவரின் முறைப்பிலேயே அதற்கான காரணத்தை அறிந்து கொண்டவளாக, அவரை நோக்கி சமாளிப்பு சிரிப்பை தந்துவிட்டு, கழட்டிப்போட்ட ஷூவை அதற்கான இடத்தில் வைத்தாள்.

“என்ன ம்மா, காலைலயே உங்க தரிசனம் கிடைச்சுருக்கு? எப்பவும் இந்த நேரத்துல கிச்சனுக்குள்ள தான தவம் இருப்பீங்க.” என்று அவள் வினவ, “நான் கிச்சனுக்குள்ள இருந்தா, நீ தப்பிச்சுருக்கலாம்னு தான நினைக்குற.” என்று முறைப்புடனே கூறி அவளின் அன்னை என்று நிரூபித்தார் அவர்.

‘இன்னைக்கு ஃபுல் ஃபார்ம்ல இருக்காங்க போலயே. எப்படி இவங்க அட்வைஸ்லயிருந்து எஸ்கேப் ஆகுறது?’ என்று அவள் யோசிக்கும் வேளையில், மீண்டும் அவரே பேச ஆரம்பித்தார்.

“காலைல நான் பேசிட்டு இருக்கும்போதே, எங்கடி கிளம்பி போன? நீ போனதே தெரியாம ரொம்ப நேரமா லூசு மாதிரி தனியா பேசிட்டு இருந்துருக்கேன்.” என்று திட்ட ஆரம்பித்து புலம்பலில் முடித்தார்.

அவரின் புலம்பலில் எழுந்த சிரிப்பை அடக்கிவிட்டு, “எதே ரொம்ப நேரமா தனியா பேசுனீங்களா? அவ்ளோ நேரம் நான் அமைதியா இருக்க மாட்டேன்னு உங்களுக்கே தெரிய வேண்டாம். இதுல என்னை குறை சொல்லிட்டு இருக்கீங்க.” என்று ஏதோ கூறி சமாளித்துவிட்டு, அங்கிருந்த நீள்சாய்விருக்கையில் சாய்ந்து கொண்டாள்.

“எனக்கு பொறந்த ரெண்டும் வெவ்வேறு ரகமா இருக்கு! ஒண்ணு வெளிய சுத்திட்டு அரட்டை அடிச்சுட்டு வருது. இன்னொன்னு எப்போ பார்த்தாலும் ரூமே கதின்னு கிடக்குது.” என்று முணுமுணுத்தவர், “அடியேய், காஃபி வேணும்னா நீயே வந்து போட்டுக்கோ. இத்தனை வயசாகுது, ஒரு நாளாவது தானே காஃபி போட்டு குடிக்குதான்னு பாரு.” என்று திட்டிக்கொண்டே சமையலறைக்குள் சென்றார்.

அவரை வால் பிடித்துக் கொண்டே அவளும் உள்ளே சென்றாள்.

“ம்மா, எங்க உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க, நான் இதுவரைக்கும் போட்டதில்லயா? நீங்க மறந்துருக்கலாம் ம்மா.. ஆனா, நான் மறக்க மாட்டேன். அன்னைக்கு ஒரு நாள்… என்னையும் அப்பாவையும் சாப்பாட்டுக்கு தவிக்க விட்டுட்டு, நீங்களும் உங்க பிள்ளையும் உங்க பிறந்த வீட்டுக்கு போனீங்களே, அன்னைக்கு பாவம் அப்பான்னு, நானே என் கையால அவருக்கு காஃபி போட்டுக் கொடுத்தேனே… அதை அவ்ளோ சீக்கிரமா மறந்துட்டீங்களா ம்மா?” என்று சமையல் மேடையில் அமர்ந்து காலை ஆட்டிக்கொண்டே சினிமா வசனம் போல பேசினாள் அவள்.

“ஒரு நாள் காஃபி போட்டு குடிச்சுட்டு, அதை ஓராயிரம் தடவை சொல்லிக் காமிப்பா! என்ன சொன்ன, உங்களை சாப்பாட்டுக்கு தவிக்க விட்டேனா, அப்பாவும் பொண்ணும் மூணு வேளையும் வெளிய சாப்பிட்டுட்டு, இப்போ வந்து கம்ப்ளைன் பண்றீங்களா? ஒழுங்கா வெளிய ஓடிடு.” என்று சுடச்சுட குளம்பியை அவளின் கையில் திணித்தார்.

“உஃப் ஒரு காஃபிக்கு எவ்ளோ பேச்சு பேச வேண்டியதா இருக்கு!” என்று புலம்பியவாறே வெளியே வந்தாள்.

அப்போது அவளின் முன் நிழலாட, அது யாரென்று அறிந்து கொண்டவள் நிமிர்ந்து பார்க்காமலேயே, “ஹாய்டா அண்ணா, குட் மார்னிங்.” என்றாள்.

எதிரிலிருந்தவனோ அவளின் தலையில் அடித்து, “காலைலயே அம்மா கூட  என்ன சண்டை? உங்க சண்டையால இன்னும் எனக்கு காஃபி கூட கொடுக்கல.” என்றான்.

“அடேய், உன்னையும் ஒரு ஆளா மதிச்சு ‘குட் மார்னிங்’ சொன்னா, அதை மதிக்காம என்னையே அடிக்கிறியா, போ போ உள்ள உங்க அம்மா ரொம்ப நல்ல மூட்ல இருக்காங்க. போய் நீயே காஃபி வாங்கி குடிச்சுக்கோ.” என்று மீண்டும் அந்த நீள்சாய்விருக்கையில் தஞ்சமடைந்தாள்.

அவனும் அவளருகே அமர்ந்துவிட, “என்னடா அண்ணா, போய் காஃபி குடிக்கல?” என்று நக்கலாக வினவ, “நீ பண்ணி வச்சதுக்கு நான் எதுக்கு மாட்டிக்கணும்? யாராவது வாலண்டியரா உள்ள போவாங்க, அதுக்கப்பறம் போவோம்.” என்று அங்கிருந்த நாளிதழிலில் மூழ்கிப் போனான்.

அந்த ‘வாலண்டியர்’ வேலையை பார்ப்பதற்காகவே அங்கு வந்து சேர்ந்தார், அந்த வீட்டின் தலைவர்.

அவர் பெற்ற இரு செல்வங்களும் நடுகூடத்தில் அமைதியாக இருப்பதைக் கண்டு சுதாரித்திருக்க வேண்டும். ஆனால், மனிதருக்கு அவரின் காலை வேளை குளம்பி முக்கியமாக பட, பிள்ளைகளின் அமைதிக்கான காரணத்தை ஆராயாமல் சமையலறைக்குள் சென்றார்.

அதைக் கண்ட இருவரின் உதட்டிலும் புன்னகை விரிய, அவரின் பின்னே சென்ற அவர்களும் சமையலறைக்குள் மெதுவாக எட்டிப் பார்த்தனர்.

“இந்த வீட்டுல என்ன நடக்குதுன்னு கொஞ்சமாச்சும் அக்கறை இருக்கா உங்களுக்கு? ஒருத்தி என்னடான்னா, வீடுன்னு ஒண்ணு இருக்குறது சாப்பிடுறது தூங்குறதுக்கு மட்டும் தாங்கிற மாதிரி வெளியவே சுத்திட்டு இருக்கா. இன்னொருத்தன் அவன் ரூமே உலகங்கிற மாதிரி ரூமுக்குள்ளயே அடைஞ்சு கிடக்குறான். இதையெல்லாம் கேட்க மாட்டீங்களா?” என்று வினவ, அவரின் கணவரோ, மனைவியின் கையிலிருந்த குளம்பி கோப்பை தன் கைக்கு எப்போது இடம் மாறும் என்று பார்த்துக்கொண்டிருந்தார்.

அன்னை மற்றும் தந்தை இருவருக்குமிடையே வாக்குவாதம் நடந்து கொண்டிருக்க, அவனோ அவர்கள் கவனிக்காத வேளையில் அவனுக்கான கோப்பையை எடுத்துக் கொண்டு மீண்டும் நடுகூடத்திற்கு வந்து அமர்ந்து கொண்டான்.

அவர்களின் அன்னையோ, அவரின் கணவரை நோக்கிய கேள்விக்கணைகளை நிறுத்தியபாடில்லை.

அங்கிருந்தால் எப்போது வேண்டுமானாலும், கணைகள் தன்னை நோக்கி திரும்பும் அபாயம் இருப்பதால், அவளும் அங்கிருந்து வெளியே வந்து விட்டாள்.

சில மணித்துளிகளில் கையில் குளம்பி கோப்பையுடன் வெற்றிகரமாக வெளியில் வந்த அவர்களின் தந்தை சோர்வுடன் இருவரின் அருகில் அமர்ந்துகொள்ள, அவரின் மகள் தான் உள்ளே நடந்தவற்றை பற்றி வினவினாள்.

“ஏன் வினி, அப்பா உன்னைத் தாண்டி தான உள்ள போனேன், அப்போவே உங்க அம்மா மூட் சரியில்லன்னு சொல்லியிருந்தா, நான் அப்டிக்கா போயிருப்பேன்ல. இன்னைக்கு ஏனோ கொஞ்சமா காஃபி குடிக்கணும்னு தோணுனது தப்பா போச்சு!” என்று புலம்ப, அதற்குள் அவரின் மனைவி, “என்ன அங்க சத்தம்?” என்று சமையலறையிலிருந்து வினவ, அவரோ ‘கப்சிப்’ என்று அமைதியாகி விட்டார்.

நடந்தவற்றை கவனித்தாலும், அதற்கு பெரிதாக எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல், எழுந்து தன்னறைக்கு சென்று விட்டான் அவன்.

அவன் செல்வதை கண்ட அவனின் தந்தையோ ஒரு பெருமூச்சுடன், “எப்படிடா, நம்ம குடும்பத்துல இவன் மட்டும் ஒரு தினுசா இருக்கான்?” என்று அவளிடம் வினவ, “அவனை பத்தி தான் தெரியுமே ப்பா, மீனு தண்ணியை விட்டு வெளிய வந்தா எப்படி துடிக்குமோ, அதே மாதிரி தான் சாருக்கு அவரோட ரூமை விட்டு வெளிய வந்ததும் எப்போடா அந்த ரூமுக்குள்ள அடைஞ்சுக்குவோம்னு இருக்கும். எனக்கென்ன டவுட்னா, இவன் எப்படி ஸ்கூல், காலேஜுக்கு அவன் ரூமை விட்டு போனாங்கிறது தான். இப்போ ஆஃபிஸ்ல பன்னெண்டு மணி நேரம் வேற வேலை பார்க்குறான். ஹ்ம்ம், எப்படி விட்டுட்டு இருக்கான்?” என்று அவள் சத்தமாகவே யோசிக்க ஆரம்பித்தாள்.

“ஷ் பாப்பா, அவன் காதுல விழுந்துடப் போகுது.” என்று அவர் தான் அமைதிபடுத்த வேண்டியதாயிற்று.

“அவனைக் குறை சொல்லலைன்னா உனக்கு நாள் விடியாதே!” என்று சமையலறையிலிருந்து வெளியே வந்தார் அவளின் அன்னை.

“இப்படி டையலாக் பேசி அவனை என்கிட்ட இருந்து காப்பாத்தலைன்னா உங்களுக்கும் நாள் விடியாதே!” என்று கேலிக் குரலில் கூறி தந்தையுடன் ‘ஹை-ஃபை’ அடித்துக்கொண்டாள் அவள்.

“அவனை சொல்றதுக்கு முன்னாடி, அவனை மாதிரி பொறுப்பா இருக்கியான்னு பாரு. அவனெல்லாம் தானே எழுந்து, தானே கிளம்பிடுறான். உன்னை மாதிரியா, ஒவ்வொரு வேலை செய்யுறதுக்கும் என்னைக் கத்த வச்சுட்டு இருக்கான்?” என்று அவள் மீதுள்ள குற்றங்களை அடுக்கத் துவங்கினார் அவர்.

“ஷப்பா, பெரிய பொறுப்…பு… எங்களுக்கும் அந்த பருப்பு… சாரி பொறுப்பு இருக்கு. நாங்களும் தேவையான இடத்துல பொறுப்பா இருப்போம்.” என்று உதட்டை சுழித்துவிட்டு அவளின் அறை நோக்கி நடந்தாள் அவள், அஷ்வினி.

அவள் வேலைக்கு கிளம்புவதற்குள் அவளின் குடும்பத்தை பற்றி பார்த்துவிடலாம்.

*****

குடும்பத்தலைவராக இருப்பவர் திருவாளர். சரவணன். அவரின் மனைவி மற்றும் அந்த குடும்பத்தின் தலைவியாக பதவி வகிப்பவர் திருமதி. சித்ரா. இவர்களுக்கு பிறந்த இரட்டையர்கள் தான் அஷ்வின் மற்றும் அஷ்வினி.

இரண்டு நிமிடங்கள் கழித்துப் பிறந்ததால் அஷ்வினிற்கு தங்கையாகிப் போன அஷ்வினி முதல் அவன் அப்பா – அம்மா வரை சற்று முன்னர், அனைவரும் புலம்பியதைப் போல அவனின் அறையிலேயே தஞ்சம் இருப்பவன். தனிமை விரும்பி.  வெளியே செல்ல வேண்டும் என்றாலும், மக்கள் கூட்டம் இல்லாத இடங்களையே தேர்ந்தெடுப்பான்.

வீட்டினர் தவிர, சில சமயங்களில் அவர்களிடம் கூட சாதாரணமாக பேச மாட்டான். அவன் இயல்பாக பேசும் ஒரே ஜீவன், அஷ்வினி மட்டும் தான். நிறைய நண்பர்கள், இல்லை இல்லை, நண்பர்களே இல்லை என்று கூட கூறலாம். தன் நண்பர்களிடமாவது பேசி பழக வேண்டும் என்று அஷ்வினி வற்புறுத்துவதால், அவர்களிடம் மட்டும் ‘பட்டும் படாமல்’ ஒருவித நட்பு உருவாகியிருந்தது.

ஆனால், படிப்பு விஷயத்தில் அதிபுத்திசாலி தான். பொறியியல் துறையில், மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பிரிவை தேர்ந்தெடுத்து, அதில் நன்முறையில் தேர்ச்சி பெற்று, இப்போது பிரபலமான நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறான்.

அஷ்வினிற்கு நேரெதிர் குணம் கொண்டவள், அவனுடன் கருவறையைப் பகிர்ந்து கொண்ட அஷ்வினி. எப்போதும் பேச்சு, எங்கும் பேச்சு என்பது போல, அவள் அமைதியாக இருந்த நேரங்களை எண்ணி விடலாம்.

‘ஈர்ப்பு மையம்’ (centre of attraction) என்பார்களே, அப்படி அவளுடன் முதல் முறை பழகுபவர்களை கூட நொடியினில் ஈர்த்து விடுபவள் அவள்.

அதற்காக எப்போதும் கலகலப்பாகவே இருப்பவள் என்று இல்லை. எப்போது மகிழ்ச்சியாக இருப்பாள், எப்போது முகத்தை தூக்கி வைத்து ‘உம்மென்று’ இருப்பாள் என்று அவளை நன்கு அறிந்தவர்களால் மட்டுமே கண்டுகொள்ள முடியும். சில சமயங்களில், அவளிடமிருந்து வெளிப்படும் உணர்வுகள் இரு முனைக்கோடிகளையும் தொட்டுவிடும் அளவிற்கு அதிகமாக காணப்படும்.

அவளும் அஷ்வினை போலவே மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பிரிவில் பொறியியல் தேர்ச்சி பெற்றவள் தான். ஆனால், அஷ்வின் அளவிற்கு படிப்பில் கெட்டிக்காரி அல்ல. தட்டுத்தடுமாறி அஷ்வின் வேலை பார்க்கும் அதே நிறுவனத்தில், அவளும் வேலைக்கு சேர்ந்து விட்டாள்.

அஷ்வினியின் பொழுதுபோக்கே நண்பர்களுடன் வெளியில் செல்வது, அரட்டை அடிப்பது போன்றவைகள் தான். அவள் வீட்டில் இருந்தாலும், அவளின் குரல் அவ்வீடு முழுவதும் ஒலித்துக்கொண்டே தான் இருக்கும். தனிமையை அறவே வெறுப்பவள்.

இவ்வாறு வெவ்வேறு குணங்களை பிரதிபலிக்கும் பிள்ளைகளை வைத்துக்கொண்டு, அவர்களின் பெற்றோர்கள் தான் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

*****

அஷ்வின் கிளம்பி வந்து, சாப்பிட்டு முடித்தும் கூட, அஷ்வினியின் அறைக்கதவு திறந்த பாடில்லை

அஷ்வினோ அன்னையை முறைக்க, சித்ரா பதிலுக்கு ஐந்தாவது முறையாக அவளின் அறையை நோக்கி, ஏற்கனவே கத்தி கத்தி கட்டியிருந்த குரலை வைத்துக் கொண்டு, மீண்டும் கத்தினார்.

“எவ்ளோ நேரம் உனக்காக வெயிட் பண்ணுவான். சீக்கிரம் வாடி.” என்று சத்தமாக கூறியவர், “தினம் இதே பிரச்சனை தான். இவங்க கிளம்புறதுக்குள்ள என்னை ஒருவழியாக்கிடுவாங்க போல!” என்று முணுமுணுத்தார்.

அப்போதென்று சரவணன் காலை உணவிற்காக சாப்பாட்டு மேஜையில் அமர, “ஹ்ம்ம், காலைலயிருந்து ஒருத்தி கத்திட்டு இருக்காளே, அவளுக்கு உதவி பண்ணுவோம்னு இல்லாம, அவங்கவங்க அவங்கவங்க வேலையை சரியா பார்த்துட்டு வெளிய கிளம்பிடுறாங்க.” என்று அவருக்கு கேட்கும் வகையிலேயே புலம்பினார் சித்ரா.

சரவணனோ பாவமாக சித்ராவைக் காண, அவரோ கணவரின் பார்வையை எல்லாம் கண்டுகொள்ளாமல், அவரின் தட்டினை நிரப்புவதையே தலையாய கடமையென்று கருதி அதை செய்து கொண்டிருந்தார்.

சரவணனுக்கு, ‘இப்போது சாப்பிடுவோமா, இல்லை அங்கிருந்து விலகி சென்று விடுவோமா’ என்று குழப்பம் ஏற்பட, அதற்கும் மனைவியைக் காண, “இப்போ எதுக்கு என் முகத்தை பார்த்துட்டு இருக்கீங்க? சீக்கிரம் சாப்பிட்டு ஆஃபிஸ் கிளம்புற வழியைப் பாருங்க.” என்றார் சித்ரா.

‘இதைத் தான நானும் செய்ய நினைச்சேன்!’ என்று மனதிற்குள் முனகிவிட்டு சாப்பிட ஆரம்பித்தார் சரவணன்.

இதையெல்லாம் நமுட்டுச் சிரிப்புடன், நாளிதழ் படிக்கும் சாக்கில், பார்த்துக்கொண்டிருந்தான் அஷ்வின்.

அப்போது, “ஹாய் ப்பா, என்ன என்னை விட்டுட்டு சாப்பிட உட்கார்ந்துட்டீங்க?” என்றபடியே கீழே இறங்கினாள் அஷ்வினி.

“பின்ன, நீ ஆடி அசைஞ்சு வரவரைக்கும் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்களா? ஒரு இடத்துக்கு கிளம்புனா, சீக்கிரம் கிளம்புனோமா, போனோமான்னு இருக்கணும். அதை விட்டுட்டு குளிக்க ஒரு மணி நேரம், கிளம்ப ஒரு மணி நேரம்னா செலவு பண்ணுவாங்க?” என்று ஆரம்பிக்க, “ஷப்பா, ம்மா உங்க புலம்பல்ஸ கொஞ்சம் நிறுத்துங்க. இப்போ நீங்க தான் ஒரு மணி நேரமா புலம்பிட்டு இருப்பீங்க போல.” என்றவாறே சாப்பிட அமர்ந்தாள்.

அதற்கும் ஏதோ முணுமுணுத்துவிட்டு, அவளுக்காக சூடாக தோசை வார்க்க சமையலறைக்கு சென்றார் சித்ரா.

அப்போது அருகில் அமர்ந்திருந்த தந்தையிடம், “எப்படி ப்பா, அம்மாவை சமாளிக்குறீங்க? செம டாமினேட்டிங் கேரக்டர்ல அம்மா.” என்று வினவ, அவரோ, “வினி, உங்க அம்மா படபடன்னு வெளிய பேசிடுவாளே தவிர மனசுல எதையும் வச்சுக்க தெரியாது. இப்போ கூட பாரு, உன்னை திட்டிட்டு, உனக்காக தான் தோசை ஊத்தப்போறா. அவ என்ன நம்மள மாதிரி வெளிய போறாளா, என்ன? அவளைப் பொறுத்தவரை நம்ம தான் அவளோட உலகம். அதனால தான் நம்மள ரொம்ப கேர் எடுத்துக்கிறா. அது நம்மளுக்கு டாமினேட்டிங்கா தெரியுது. மோரோவர், அப்படி டாமினேட்டிங்கா இருக்குறதுல என்ன தப்பு? இன்ஃபேக்ட் உங்க அம்மா கிட்ட எனக்கு பிடிச்சதே அவளோட படபட நேச்சர் தான்.” என்று கூற, அதை ரசித்துக்கொண்டிருந்தாள் அஷ்வினி.

அஷ்வினி, எப்போதுமே அன்னை தந்தையின் அன்யோன்யத்தை மிகவும் ரசிப்பாள். தந்தை கூறியதைப் போலவே, தாயின் படபடக்கும் இயல்பு அவளிற்கும் பிடிக்கும். அதற்காகவே அவரை கோபப்படுத்தி பார்க்கும் நேரங்களும் உண்டு. தந்தையிடம் இந்த கேள்வியைக் கேட்டால் பதில் இப்படியாகத் தான் இருக்கும் என்று தெரிந்து தான் கேள்வியைக் கேட்டு, அதற்கான பதிலையும் பெற்றுக்கொண்டாள்.

உள்ளே இருந்து வந்த சித்ரா, அஷ்வினியின் தட்டில் தோசையை வைக்க, அவளோ சித்ராவைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள்.

“எதுக்கு இப்படி முப்பத்திரெண்டு பல்லையும் காட்டி சிரிச்சுட்டு இருக்க?” என்று வினவ, அஷ்வினியோ குறும்பு சிரிப்புடன், “இங்க யாருக்கோ யாரு மேலயோ, லவ்ஸ் பொங்கி வழியுது ம்மா.” என்று கூற, சம்பந்தப்பட்ட இருவருக்குமே லேசான வெட்கம் எட்டிப் பார்த்தது.

சித்ராவுமே சரவணனின் பதிலைக் கேட்டுக்கொண்டு தானே இருந்தார்!

அடுத்த நொடியிலேயே சுதாரித்துக்கொண்டவர், “என்னத்தையாவது உளறிட்டு இருப்பா, பேசாம சாப்பிடு.” என்று முணுமுணுத்துவிட்டு, அடுத்த தோசை சுடும் சாக்கில் சமையலறைக்குள் சென்று மறைந்தார் சித்ரா.

அஷ்வினியும் சரவணனும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டே தங்களின் காலையுணவை முடித்தனர்.

“பார்த்து பத்திரமா போ. அண்ணா போற ஸ்பீட்ல தான் போகணும். ரொம்ப ஸ்பீட்டா போகாத.” என்று மகளிடம் கூறியவர், “டேய், நீயும் அவளுக்கு ஏத்த மாதிரி வண்டியோட்டிட்டு போ.” என்று மகனிடம் அறிவுறுத்தினார் சித்ரா.

“ம்மா, இவனோட போகக்கூடாதுன்னு தான், நான் ஸ்கூட்டி வாங்குனதே. ரெண்டு நிமிஷம் முன்னாடி பிறந்ததுல அண்ணாவாம் அண்ணா!” என்று அஷ்வினி சலித்துக்கொள்ள, அஷ்வினோ, “இவளுக்கு நான் செக்யூரிட்டி வேலை வேற பார்க்கணுமா?” என்று சலித்துக்கொண்டான்.

“அப்போ ரெண்டு பேரும் பஸ்ல போங்க.” என்று அவர்களின் அன்னை தீர்ப்பளித்ததும், இருவரும் ஒருவரையொருவர் முறைத்துக்கொண்டே அவரவர்களின் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினர். அதை அவர்களின் பெற்றோர் சிறுசிரிப்புடன் கண்டனர்.

அப்போது சித்ரா சரவணனிடம், “ஏங்க, அஷ்வினி இப்போ நடந்துக்குறதை பார்த்தா, அவ அதை மறந்துட்டான்னு தோணுது.” என்றார்.

“இல்ல சித்ரா. அதை அவ்ளோ சீக்கிரம் அவளால மறக்க முடியாது. இப்போ சிரிச்சு பேசுறது கூட, நமக்காகவா தான் இருக்கும்.” என்றவர் பெருமூச்சுடன், “என் பொண்ணு எப்போ பழைய மாதிரி சிரிக்கப்போறான்னு தெரியல!” என்றார் சோகமாக. அவரை தேற்றும் விதமாக அவரின் தோளில் கைவைத்து அழுத்தினார் அவரின் மனைவி.

*****

மயிலக்குறிச்சி (கற்பனை ஊர்) என்ற ஊரில், ஒரு குடும்பத்தின் வாரிசுகளை அவர்களின் குடும்பத்தினரே நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் அவ்வூர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
33
+1
2
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  Your email address will not be published. Required fields are marked *

  22 Comments

  1. Archana

   சரவணன் ரொம்ப பாவம் பா🤣🤣🤣 இப்படியா மனுஷனே சாப்பிட விடாம பண்ணுவீங்க. நான் ஆல்ரெடி கெஸ் பண்ணது சரியா போயிடுச்சு இதுங்க ரெண்டு ட்வின்ஸே😍😍😍😍.

   1. vaanavil rocket
    Author

    ஆமா பாவம் அவரு…😂😂😂 சூப்பர் சிஸ்…😍😍😍

  2. kutti sairan

   வாவ் சூப்பர் அ இருக்கு. . அண்ணன் தங்கச்சி இரண்டும் எம்புட்டு நடத்துதுங்க 🤣

  3. Janu Croos

   பாவம் அந்த மனுஷன்….காலங்காத்தாலயே இம்புட்டு டோஸ் வாங்குறார்னா…ஒரு நாள்ல எம்புட்டு டோஸ் வாங்குவாரோ…..தப்பே பண்ணாம மனுஷன் திட்டு வாங்குறாருப்பா…..
   ஒண்ணா பிறந்ததுங்க….ஆனா இரண்டோட சுபாவமும் இரு துருவமாவுல இருக்கு…அவன் அமைதி அமைதி…அமைதியோ…அமைதி… அமைதிக்கெல்லாம் அமைதினு இருக்கான்…..இவள் என்னடானா தகரடப்பாவுக்குள்ள கல்ல போட்டு குலுக்கின கணக்கா லொட லொடனு இருக்கா….இதுங்கள எப்படித்தான் சமாளிக்குறாங்களோ….
   கலகலனு சிரிச்சு பேசுற அஷ்வினிக்கும் பின்னாடி ஏதோ ஒரு ஃப்ளாஷ்பேக் இருக்கு போலயே….என்னவா இருக்கும்..
   இதுல கடைசியில அந்த நரபலி மேட்டர்…ஒரே மர்மமாவே இருக்கே…..

   1. vaanavil rocket
    Author

    😁😁😁 எனக்கும் பாவமா தான் இருந்துச்சு…

    எப்போ?

    சித்ரா கிட்டயிருந்து காஃபி வாங்கிட்டு தான் வெளிய போவேங்கிற மாதிரி மனுஷன் நின்னதைப் பார்த்து பரிதாபமா தான் இருந்துச்சு…😛😜😜

    ஆமா, ரெண்டும் வீட்டுல இருந்தா, அம்மா அப்பா தான் பாவம்…😂😂😂

    ஃபிளாஷ்பேக் கண்டிப்பா உண்டு… என்னன்னு நீங்க யோசிச்சிட்டே இருங்க…😜😜😜

    என்ன மர்மம்னு இனி வர அத்தியாயங்கள்ல தெரிஞ்சிப்போம்…😁😁😁

  4. Nancy Mary

   அருமையான சுவாரஸ்யமான ஆரம்பம் சூப்பர்😃
   சரவணன் அப்பா இப்படியா வாலண்டியரா போய் வாங்கி கட்டிப்பீங்க ஆனா மனைவியை இப்படி ஐஸ் மழையில நனைக்குற வித்தையை சரியா பயன்படுத்துறவரை உங்களை யாராலயும் அசைச்சிக்கவே முடியாது வேற லெவலு😂😂😂😂😂
   அஸ்வின் அஸ்வினி இவனுங்க குணமும் எதிரெதிரா இருக்குனு பார்த்தா குடும்ப சூழ்நிலையும் எதிரெதிரா இருக்கே இவ்ளோ சந்தோஷமான குடும்பத்தை பார்த்து சந்தோஷபட்டா அது உண்மையான சந்தோஷம் இல்லற மாதிரி கொண்டு போறாங்க இதுல கதைக்களமும் எதிரெதிரா மகிழ்ச்சியான கதையோட்டத்துல அதிர்ச்சியையும் கலக்குறாங்களே இதெல்லாம் எங்க போய் முடியுமோ அமைதி புயலா மாறுமா இல்ல புயல் சூறாவளியாகுமா பொறுத்திருந்து பார்க்கலாம்😃😃😃👏👏👏👏👏

   1. vaanavil rocket
    Author

    நன்றி சிஸ்😍😍😍 மனைவி கிட்ட திட்டு வாங்கி, சமாதானப்படுத்துறதை எல்லாம் கரெக்ட்டா செய்வாரு அப்பா…😂😂😂 அமைதி புயலுக்கு வாய்பில்லைன்னு தான் நினைக்கிறேன்… சூறாவளியை எதிர்பார்க்கலாம்…😜😜😜

  5. Brinda Vijayakumar

   Super.. ரெண்டும் ரெண்டு விதமா இருக்கும் போல .. ரொம்ப கஷ்டம் , ஆனா நல்லா manage பண்றீங்க சித்ரா மா, வீட்லயே இப்ட, office la enna Panna porangalo, pappon …

   1. vaanavil rocket
    Author

    நன்றி சிஸ்😍😍😍 ஹிஹி ஆமா, ரெண்டையும் மேனேஜ் பண்றது கஷ்டம் தான்…😜😜😜

  6. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான குடும்பக் கதை. நகைச்சுவையும், அழுத்தமும் கொண்ட சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.

  7. Sangusakkara vedi

   Ultimate epi ….. Epdi ivlo late ah padika aarambichene teriyala…. Semma y airunthathu epi…. Padapada Amma, appavi ya dose vankura appa, amithiyin uruvam anna, oor vaya mothama vachurukura thangachi nu…. Ella character um manusula nindruchu…. Vini flash back enna va irukum nu guess pannave mudiyalaya …. Ithula narabali Vera nadula varuthu…. Eager ah iruku sis…. All the best…. Vetri pera vazhthukkal….

   1. vaanavil rocket
    Author

    Tq so much sis😍😍😍 Ashwini kudumbam sarba extra nandrigal😜😜😜 Nalla vela guess panna mudiyalaya😉😉😉

  8. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதல் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  9. Nallarundudu ka episode .. thittitae irundalum Ella veetlayum amma ipdi dan ka naama dan avangaluku ulagam.. Saravanan chitra amma initimacy super.. ashwin kum sethu ashwini semmma vaalu.. super ah irukku

  10. Meenakshi Subburaman

   Wow starting ehh super ahh iruku,paavam chitra Amma vum naanum same category 😜😜,en paiyan mariye intha Ashwini kathikite irukanum

  11. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.