Loading

என் உயிர் – 21 🧬

அரை நாள் பொழுதும் வந்து விட்டது. சுற்றி அங்கும் இங்கும் தேடியும் ஒன்றுமே கிடைக்கவில்லை. அப்பார்ட்மெண்ட் கேமராவிலும் கண்மணி சென்றதற்குரிய ஒரு காணொலியும் இல்லை. ஏன் வீட்டை விட்டு சென்றதற்கு உரிய தடயம் கூட இல்லை. அதன் பின்பே அனைவருக்கும் தோன்றியது கோயில் சென்று வந்து அப்பார்ட்மெண்ட்டில் காரிலிருந்து அவர் இறங்கிய பின் தான் காணவில்லை என்று .

அதனை வைத்து தேடிப் பார்த்தால், அவர் அனைவருடனும் இறங்கி சஞ்சய் வீட்டிற்கு சென்றது நன்றாகவே பதிந்து இருந்தது. அதன் பின் அவர் வெளியில் வந்து மேல் தளத்தில் உள்ள நிலவன் வீட்டிற்கு சென்று திரும்பி வந்ததும் பதிந்து இருந்தது. அதன் பின் அவர் சஞ்சய் வீட்டில் இருந்து வெளியில் வரவே இல்லை.

மகிலன் தாக்க முற்பட்ட பொழுது வந்த கார்ட்ஸ் இப்பொழுதும் வந்து நிற்க, சஞ்சய், நிலவன் தீரன் என ஆளுக்கொருவரிடம் விசாரித்தனர். அவர்களுக்குமே புரியவில்லை. அப்பொழுது தான் செல்விக்கு ஞாபகம் வந்தது சஞ்சய்யிடம் கார்ட்ஸ்ஸை பற்றி கேட்ட கேள்வி. இன்று கண்டிப்பாக அவனிடம் கேட்க வேண்டும் என்று நினைப்பதற்குள் செல்வியின் தகப்பனிடம் தீரன் ” இவங்க கார்ட்ஸ் அண்ணா, சந்திரன் சார்க்காக இருக்காங்க ! நானும் அவங்க காலேஜ்ல தான் வேலை பாக்குறேன் ! அதனால எனக்கும் இவர்களை பத்தி தெரியும் “என அவரே நீண்ட விளக்கவுரை கொடுக்க, செல்வி தயக்கத்துடன் அப்பதிலை ஏற்றுக் கொண்டார்.

அதற்கு மேல் யோசிப்பதற்கு இடம் அளிக்காமல் கண்மணியின் நியாபகம் மனதை அரித்துக் கொண்டிருந்தது .  கேமரா வேலை செய்யாமல் இல்லை, கேமரா ரூமில் எதுவும் தவறு நடக்கவில்லை. ஆட்களும் மாறவில்லை. அதனால் , எங்கு எதை வைத்து தேடுவது என்று அனைவரும் குழப்பத்திலேயே இருந்தனர்.

கவி அழுது அழுது மயங்கினாள் . வனஜா உள்ளுக்குள் புழுங்கியே மயங்கினார். செல்வியின் பெற்றோர்களும், சஞ்சய்யின் பெற்றோர்களும் உறுதுணையாக  இருந்ததால் அவர்களை விட்டுவிட்டு தீரன், நிலவன், சஞ்சய் , திருமலை நால்வரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றனர்.

அவர்கள் கமிஷனர் ஆபிஸில்  அமர்ந்திருக்க, உள்ளே டிஎஸ்பி வந்தார். வந்தவர் ஒரு அலைபேசியை நீட்டினார். அதனைத் திறந்து பார்க்க, சில புகைப்படம் இருந்தது. அதை பார்த்த கமிஷனர் அதிர்ந்து விட்டார்.

அதே அதிர்வோடு அவர்களிடம் அந்த அலைபேசியை நீட்ட , கவியின் ஊரான சாலமேட்டில் அவர்கள் வீட்டின் முன் அமர்ந்து இருந்தார் கண்மணி . அனைவருக்கும் ஆச்சர்யம். திருமலை பொறுக்காமல் ” ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் என் கூட இருந்தவ இப்போ எப்படி சார் அங்க போவாங்க… அதுவும் அவளுக்கு எப்படி போகனும்னு கூட தெரியாது ? “

“சார் அத நீங்க தான் சொல்லனும்! கேமராலையும் பதிவாகல ! எங்களுக்கே குழப்பம் !  விசாரனை உங்க கிட்ட இருந்து தான் ஆரம்பிக்கனும் ! முதல உங்க மனைவி பத்திரமா இருக்காங்கனு சொல்ல தான் இந்த ஃபோட்டோ ! ” நிதானமாக டிஎஸ்பி கூறினார்.

அவ்வறையில் இருந்த மற்றவர்களுக்கும் அதே ஆச்சர்யம். ஆனால், அவரை இங்கு அழைத்து வர வேண்டும் என நினைத்து நிலவன் , சஞ்சய் உடனே ப்ளைட்டில் டிக்கெட் புக் செய்து சென்று விட்டனர். கமிஷனர் கண் காமிக்க, தீரன் திருமலையை அழைத்து வீட்டுக்கு சென்றவர் “வழி தெரியாமல் சென்று விட்டார். கூப்பிட சஞ்சய், தீரன் சென்று உள்ளார் .” என்று மற்றவர்களிடம் கூறி விட்டார்.

அவ்விடம் செல்லவே இரண்டு மணி நேரம் ஆகும் என்று கூறியதால் இவர்களும் ஐந்து மணி நேரத்திற்கு மேல் காத்துக் கொண்டிருந்தனர்.

மாலை பொழுதில் சஞ்சய் , நிலவன் மற்றும் கண்மணியுடன் டிஎஸ்பியும் உள்ளே நுழைந்தார் . கண்மணியை கண்டவுடன் அழுது புலம்பினாள் கவி. திருமலை தூரத்தில் இருந்து கண் கலங்கி பார்த்தார். வனஜாவும் ஒன்றும் கூறாமல் கண்மணியையே கவலையுடன் பார்த்தார். கண்மணி அழுகாமல் அழும் மகளை தட்டி ஆறுதல் படுத்தியவர் சோஃபாவில்   அமர்ந்தவர் செல்வியிடம் ” ஒரு காபி எடுத்துட்டு வா! ரொம்ப பசிக்குது ” எனக் கூற, செல்வி பட்டென்று எழுந்து  சென்று விட்டாள்.

தீரனும் , திருமலையும் அதிர்ந்து பார்த்தனர். ஆனால் ஒன்றும் கூறவில்லை. வனஜா தான் ” உனக்கு வேறு யாரு செஞ்சு கொடுத்தாலும் பிடிக்காது . அதோட காபியே பிடிக்காதே ! ” என பொறுக்காமல் கேட்டார்.

” இல்லை! ரொம்ப டயர்டா இருக்கு! நானே எந்திரிச்சு போய் பண்ணுற அளவு தெம்பு கூட எனக்கு இல்லை ! அதோட எனக்கு இப்போ நிறைய கேள்விக்கு பதில் தெரியனும் ! அதுவே ஒரு மாதிரி இருக்கு ! “

“அம்மா மொத ரெஸ்ட் எடு மத்தது அப்புறம் பேசலாம் ! “

“ஹாஸ்பிட்டல் போகலாமா ரொம்ப முடியலைனா ? ” திருமலை கூறிக் கொண்டே எழ,

கண்மணி பதறி எழுந்து ” இல்லைங்க, எனக்கு தூங்கி எந்திரிச்சாலே போதும் . வேறு ஒன்னும் இல்லை” எனக் கூறி அறைக்கு செல்ல முற்பட,

“காபியை குடிச்சுட்டு போ! அதோடு அது கவி ரூம் ! நீ இந்த ரூமுக்கு போ “என வனஜா திருமலை தங்கி இருக்கும் அறையை காண்பிக்க, உள்ளே சென்று பார்த்து விட்டு வெளியில் வந்து “கவி ஒரு ரெண்டு நாளைக்கு அம்மா கூட படுக்கிறீயா ! எனக்கு ஒரு மாதிரி படபடப்பாவே இருக்கு ” எனக் கூறியவுடன் கவி எழுந்து உள்ளே சென்று விட்டாள்.

வனஜாவும் திருமலையும் தான் யோசனைக்கு சென்றனர். திருமணம் ஆனதிலிருந்து திருமலையும் கண்மணியும் வெளி ஊரில் விசேஷம் இருந்தாலும் அரை மணி நேரம் இருவரும் இரவு பேசி விட்டு தான் உறங்க செல்வர். இது வழக்கமாக நடக்கும் . அதுவும் வனஜாவிற்கு நன்றாகவே தெரியும்.

இப்பொழுது வந்ததிலிருந்து திருமலையை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. உடம்பு அலுப்பு என்று நினைத்து ஓரம் கட்டினர். டிஎஸ்பியும் கண்மணியின் நடவடிக்கையும், வீட்டில் உள்ளவர்களின் குழப்பத்தையும் கண்டு பிறகு விசாரிக்கலாம் என்று வெளியேறி விட்டார்.

வாரங்கள் தான் ஓடியது. ஆனால், அவரின் குணம் மாறவில்லை. இருபத்தி நாலு மணி நேரம் கவி மற்றும்  செல்வி உடனேயே நேரத்தை செலவழித்தார். உணவு தயாரிப்பதற்கும் உதவி தான் செய்தார். முழுதாக ஈடுபடவில்லை. தனியாக அமர்ந்து சிந்தித்து கொண்டே இருந்தார். யாராவது பேச வந்தாலும் நைசாக நகன்று விடுவார். அதுவும் ஆண்கள் என்றால் முகத்திற்கு நேராகவே கத்தரித்து விட்டு சென்று விடுவார்.

இதில் திருமலை, நிலவன், தீரன் தான் மிகவும் வருந்தினர். இவர்கள் மூவருக்குமே கண்மணி முக்கிய பங்கு. ஆனால், அவரின் ஒதுக்கம் மனதை வருத்தியது. ஆனால், வனஜா தான் மூவருக்கும் ஆறுதல் கூறி கண்மணியை அணுக முயற்சித்தார். வனஜாவை ஒதுக்கவில்லை அதே போல் சேர்க்கவும் இல்லை. கேட்டதற்கு ஆம் இல்லை என்ற பதிலே கொடுத்தார்.

இவ்வாறே சென்றால் மனம் பாதிக்கும் என்று அவரை மன நல மருத்துவரிடம் கூட்டி செல்ல ஏற்பாடு செய்தனர். சொன்னால் ஒத்துக் கொள்ள மாட்டார் என நினைத்து கவியிடம் கூறி வெளியே அழைத்து செல்வது போல் அழைத்து சென்றனர்.

அப்பார்ட்மென்டின் கார் பார்க்கிங்கில் காரை எடுக்க நிலவன் செல்ல, கவி செல்வி மற்றும் கண்மணி அப்பார்ட்டுமெண்டின் வாயிலில் நின்று பேசிக் கொண்டிருக்க, சட்டென்று ப்ரேக் இல்லாத ஒரு கார் வேகமாக வாயிலில் பாய, அதனை முதலில் கண்ட செல்வி அருகில் இருந்த கவி மற்றும் கண்மணியை இழுக்க, கண்மணி சுதாரித்து இருவரையும் தள்ளி விட, கண்மணியின் மேல் பாய்ந்தது. வீசி எறிந்தார்.

அரை நொடிக்குள் நடந்ததில் அதிர்ந்து விட்டனர். சத்தம் கேட்டு அனைவரும் ஓடி வர, நிலவனும் வந்தான்.

நிலவன் தூரத்தில் இருந்தே கண்மணி ஒரு புறம் விழுந்து இருப்பதும், கவி அதிர்ந்து நிற்பதும், செல்வி பதட்டத்துடன் கண்மணியின் அருகில் ஓடுவதையும் கண்டவன் கவியை பார்த்துக் கொண்டே கண்மணியிடம் சென்றான்.

செல்வியிடம் கவியை பற்றி கூறிவிட்டு , ஆம்புலன்ஸ் வரும் வரை காத்துக் கொண்டு இருக்காமல் அப்பார்ட்மெண்ட் நண்பரின் உதவியோடு அழைத்து சென்று விட்டான்.

மருத்துவமனையில் அனுமதித்த பின்னரே நினைவு வந்து தீரனுக்கு அழைத்து விவரத்தை கூற, கவியின் நிலை மாறாமல் இருப்பதில் பயந்த செல்வி, தனது கையில் அலைபேசியும் இல்லாதததால் வாட்ச் மேனிடம் கூறுமாறு கூறிவிட்டு கவியுடன் நின்றாள். வாட்ச் மேன் வந்ததும் , நிலவன் கூறுவதும் ஒரு நேரமாக இருக்க, அனைவரும் பதட்டத்துடன் இறங்கி கவி மற்றும் செல்வியையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர்.

அங்கு நிலவன் தலையில் கைவைத்து குனிந்து இருந்த கோலம் அனைவருக்கும் மனதை அச்சுரித்தியது. எதுவும் தப்பாக நேர்ந்து விடக் கூடாது என்று அனைவரும் யோசிக்கும் நொடி கவி நிலவனின் தோளில் கை வைத்து “அம்மா போச்சு இல்லையா ! எனக்கு தெரியும் அம்மா இனிமே வர மாட்டாங்கனு ! போச்சு அம்மா போச்சு “என்று கூறிக் கொண்டே இருக்க, திருமலை நிலவனை தான் கண்டார்.

அவன் மறுபேச்சு பேசாமல் இருப்பதே மனம் திக்கென்று இருந்தது. பரமேஸ்வரி தான் திருமலையை கண்டு கவியின் வாயை மூடி இழுத்தார். அதற்குள் ஒரு மருத்துவரும் வர , தீரன் ,வனஜா , திருமலை, கவி, நிலவன், செல்வி, அனைவரும் ஒரு நிலையில் இல்லாமல் இருப்பதை உணர்ந்து சஞ்சய்யே அணுகினான்.

அவரோ ” சார் ! வரும் போதே உயிர் போயிடுச்சு ! சாரி சார் ! “

வனஜா அப்பொழுதே இடக்கை மற்றும் வாயில் வாதம் போல் இழுக்க, அப்படியே சரிந்தார். அதனை பார்க்கும் நிலையில் கவி, செல்வி, திருமலை, தீரன், நிலவன் யாரும் இல்லை. சீமா மற்றும் பரமேஸ்வரியின் உதவியோடு அவரை அனுமதித்து விட்டு , கண்மணியின் மற்ற வேலைகளை சஞ்சய்யே பார்த்தான்.

வனஜா கண் முழிக்க இரு நாட்கள் ஆனது. அதற்குள் அனைத்தும் முடிந்து இருந்தது. தனக்கு வாதம் வந்தததால் தான் இறுதியாக கூட மருமகளை பார்க்க முடியவில்லை என்று மேலும் வெதும்பினரர். திருமலை மற்றும் கவியை பற்றி கூறி கூறியே அவரை தெளிவடைய வைத்தார் பரமேஸ்வரி. இருந்தும் அவரின் வயோதிக்கத்தால் காலத்திற்கும் படுத்தே தான் இருக்க வேண்டும் என்று கூறி விட்டனர்.

அதனால் அவரை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டனர். அவரோ யாரையும் பார்க்க விரும்பாமல் கண்களை இறுக்க மூடிக் கொண்டார்.

சஞ்சய்யின் பெற்றோர்களும், பரமேஸ்வரியும் தான் அனைவரையும் பார்த்துக் கொண்டனர். செல்வியின் தாய் மற்றும் கூடவே இருந்தார். அவளின் தந்தை வந்து வந்து சென்று கொண்டிருந்தார். ஆனால் , இருவரும் செல்வியிடமோ சஞ்சய்யிடமோ, சந்திரன் மோகினியிடமோ பேசவே இல்லை. உதவி மட்டுமே செய்தனர்.

இவ்வாறு நாட்கள் அதன் போக்கில் ஓட, கண்மணி இறந்து மூன்று மாதங்கள் ஆகி விட்டது.

தீரனும், நிலவனும் பேருக்கு வேலைக்கு சென்றனர். திருமலை சுத்தமாகவே யாரிடமும் பேசவில்லை. கவி நினைத்து நினைத்து அழுது உருகினாள். செல்வி தான் அவளுக்கு ஆறுதல் கூறினாள்.

ஒரு நாள், மோகினி மற்றும் சந்திரன் வீட்டிற்கு வந்து திருமலையிடம் பேச, தன் பிள்ளைகளை கண்டு கண் கலங்கினார்.

கீர்த்தி ☘️

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்