Loading

என் ஆயுள் நீயே 35

பிரணவ்விடம் பேசிவிட்டு வீட்டிற்குள் வந்த நனியிதழ் நேராக சென்றது உதயனிடம் தான்.

உதயன் பால்கனியில் நின்றிருக்க, பிரணவ்வின் வாகனம் அவனின் கண்ணைவிட்டு மறைந்தது.

“அண்ணா.”

நனியிதழ் உதயன் அருகில் வர, திரும்பி பால்கனி கம்பியில் சாய்ந்து, மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு பார்த்தான்.

“சொல்லு பட்டு.”

“நான் இப்போ…” அவள் தயங்கிட,

“பிரணவ்வை பார்த்திட்டு வர” என்றான்.

“சாரி செல்வா” என்றவள் வேகமாக அவனது மார்பில் சாய்ந்தாள்.

“சாரி சொல்ல என்ன இருக்கு? என்னோட ஆசையும் இதுதான். நீ… உன்னோட லவ்… உன்னோட விருப்பம் சரியா அமையனும்” என்றான்.

“உன்கிட்ட சொல்லாம போயிட்டன்னு எதும்…”

“நீங்க ரெண்டு பேரும் பேசி எல்லாம் சரியானாலே போதும்” என்ற உதயன், “இப்போ ஓகேவா?” எனக் கேட்டான்.

“நாளைக்கு பொண்ணு பார்க்கப் போறோம்ல… அங்க போனா தான் தெரியும்” என்றாள்.

அவள் எதை நினைத்து சொல்கிறாள் என்பது புரிந்து அமைதியாக இருந்தான். இப்போது சொன்னால் பிரணவ் சொல்லிய சர்ப்ரைஸ் இருக்காதே!

நனியிதழும் இன்னும் பெண் கொடுத்து பெண் எடுப்பதாக, உதயன் விரும்பும் பெண்ணின் வீட்டில் சொல்லியதை உதயனிடம் யாரும் சொல்லவில்லை என்று நினைத்தாள். அவன் வைத்திருக்கும் ஆச்சரியம் தெரியாது, அவனுக்குத் தெரிந்திருந்தால் நிச்சயம் இது குறித்து தன்னிடம் பேசியிருப்பான் என்று நினைத்து, நாளை அங்கு அந்த பையனிடம் பேசிட வேண்டுமென்று தானெடுத்த முடிவில் உறுதி கொண்டாள்.

கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்த எழில் உதயனின் விஷயம் தெரிந்து தள்ளி குதித்து அவனை கேலி செய்து நேரத்தை இலகுவாக்கியிருந்தாள்.

நடந்து நிகழ்வுகளில் உதயன் எழில் விஷயத்தையே மறந்திருந்தான். நாளை மறுநாள் அவள் சொல்லிய பையனைப் பற்றி விசாரிக்க வேண்டுமென நினைத்துக் கொண்டான்.

பிரணவ் நனியிதழை பார்த்துவிட்டு நேராக சென்றது ஆர்யனை காணத்தான்.

சகோதரனின் வரவை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

“ஹாய் ப்ரோ…”

“ஒழுங்கா அண்ணா சொல்லுடா” என்று தம்பியை அணைத்து விடுத்த பிரணவ், “அஷ்மியை பொண்ணு பார்க்க வர்றாங்க. நீயும் இருந்தா நல்லாயிருக்கும். வர முடியுமா?” எனக் கேட்டான்.

“லாஸ்ட் மினிட் சொல்றீங்க. நான் யாரோ தானே உங்களுக்கு” என்று ஆர்யன் முகத்தை தூக்கி வைத்திட, “நீ போய் கிளம்பி வாடா. நான் வார்டன் பார்த்து சைன் பண்ணிட்டு வரேன். எல்லாம் போகும் போது சொல்றேன்” என்று ஆர்யனின் முதுகில் கை வைத்து விடுதி கட்டிடத்தின் உள் நோக்கித் தள்ளினான்.

பிரணவ் விடுதி காப்பாளரிடம் சொல்லிவிட்டு கையெழுத்திட்டு வர, அஷ்மிதா அழைத்திருந்தாள்.

“எங்கடா இருக்க? சீனியர் பார்த்து பேசிட்டியா? என்ன சொன்னாங்க?” என்று மூச்சு விடாது அடுக்கினாள்.

“ஹேய் ரிலாக்ஸ்” என்ற பிரணவ், “என் சைட் க்ளியர் தான். எல்லாம் நாளைக்கு சரியாகிடும்” என்றான்.

“அப்போ ஓகே… வரும் போது ஆரியை கூட்டிட்டு வந்திடு. அவன் இல்லாம எப்படி?” என்றாள்.

“பாருடா தம்பி ஞாபகம்! அவன்கிட்ட நீ சொல்லலன்னு கோபமா இருக்கான். வீட்டுக்கு வந்ததும் பேசி அடிச்சிக்கோங்க” என்று வைத்திட்டான்.

இருவரும் வீடு வந்து சேர்ந்தபோது நேரம் பத்தை தொட்டிருந்தது.

பிரணவ் தன்னை பிரஷப் செய்து ஆடை மாற்றி கீழே வர, “வீட்டுக்கு போயாச்சா?” என உதயனிடமிருந்து தகவல் வந்தது.

“ஜஸ்ட் நௌ மாம்ஸ்” என்று பதில் அனுப்பிய பிரணவ், “உங்க ஆளு சேட்டை அவதாரம் லைவ் பார்க்குறீங்களா?” என்று கேட்டான்.

உதயனுக்கு பிரணவ் கேட்பது புரியவில்லை…

“வீடியோ கால்?” என்று கேள்வியாக அனுப்பினான்.

“அதே… அதே…” என்று சிரிக்கும் பொம்மைகளுடன் அனுப்பிய பிரணவ், அடுத்த நொடி யாரும் அறியாது வீடியோ கால் செய்து அலைபேசியை உதயன் சரியாக பார்க்கும் கோணத்தில் வைத்துக் கொண்டான்.

வரும் வழியிலேயே பிரணவ் ஆர்யனிடம் அஷ்மிதாவின் காதலை சொல்லியிருக்க, அர்யனுக்கு ஆச்சரியம் என்பதைவிட அவள் தன்னிடம் இதுவரை சொல்லவில்லையே என்று உரிமை கோபம் எட்டிப்பார்க்க, வீட்டிற்கு வந்ததும் அவளிடம் மல்லுக்கட்ட ஆரம்பித்துவிட்டான்.

ஜெயந்தன் அலுவலகம் சென்று வந்ததும் விமலா எல்லாம் சொல்லிவிட, மற்றவற்றை பேச பிரணவிற்காக பெரியவர்கள் மூவரும் காத்திருக்க, அதற்கு வாய்ப்பு கொடுக்காது இளையவர்கள் இருவரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இருவரின் சண்டையும் சுவாரஸ்யமாக இருந்திட உதயனுக்கும் நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கிறான் பிரணவ்.

“அதெப்படி என்கிட்ட சொல்லாம பொண்ணு பார்க்க வர வரைக்கும் நீங்க ஏற்பாடு செய்யலாம்?” ஆர்யன் முறுக்கிக் கொண்டு நின்றான்.

“அன் எக்ஸ்பெக்ட்டட்டா தம்பி.” முடிந்த வரை அமைதியாக சொல்லிய அஷ்மிதா அவன் விடுவதாக இல்லையென்றதும் தானும் வாதம் செய்தாள்.

“உங்ககிட்ட எல்லாம் சொல்றேன் தானே! எதாவது மறைச்சு இருக்கேனா?” என்றான். ஆதங்கமாக.

“இது தப்பு தானே அஷ்மி. நீ தம்பிக்கிட்ட சொல்லியிருக்கணும்” என்று பேரனுக்கு சப்போர்ட் செய்தார் ராகவன்.

“நல்லா கேளுங்க தாத்தா. என் லவ் கூட உங்கக்கிட்டலாம் சொல்ல முன்னாடியே அக்காகிட்ட சொல்லிட்டேன். அப்போக்கூட இவங்க லவ் பண்றதை என்கிட்ட சொல்லல” என்றான். முகத்தை உம்மென்று வைத்தபடி.

“பாரு புள்ளை ரொம்ப ஃபீல் பண்ணியிருக்கான்.”

“பொய்… பொய்… பொய் சொல்றான் தாத்தா. லாஸ்ட் மந்த் ஃபிரண்ட்ஸ் கூட ரோட் ட்ரிப் போயிருக்கான். இன்ஸ்டா பிக்ஸ் வச்சு தான் எனக்குத் தெரியும். அதுவும் அண்ணா போகக் கூடாது சொல்லியும் இவன் போயிருக்கான். இவன் எல்லாம் என்கிட்ட சொல்றானாமா? சொல்ற மூஞ்சியைப் பாருங்க” என்று அஷ்மி அவனை வேண்டுமென்றே வம்புக்கு இழுக்க…

“அப்போ நான் உங்ககிட்ட எதுவுமே சொல்லல சொல்றீங்களா?” என்று அவளின் முன் வந்து நின்றான் ஆர்யன்.

“சொல்றேன்னு சொல்லுவியா நீ?” எனக் கேட்ட அஷ்மி, “இதுதான் ரொம்ப முக்கியமானது. எல்லாரும் கவனமா கேளுங்க. அண்ணா நீயும்” என்றதோடு, “அந்த ஆந்திரா மீல்ஸ்” என்று ஆரம்பிக்க, ஆர்யன் வேகமாக அவளின் கழுத்தை ஒரு கையால் சுற்றி வளைத்து மறு கையால் அவளின் வாயினை மூடியிருந்தான்.

அஷ்மி திமிறி விலக பார்க்க… அவன் விடவில்லை.

“அக்கா பிளீஸ் சொல்லாதீங்க.”

“நான் சொல்லுவேன்… அண்ணா இவன்.” அவனின் கையை விலக்கிவிட்டு அவள் சொல்ல, மீண்டும் வாயினை மூடியிருந்தான்.

இருவரும் மாற்றி மாற்றி மல்லுக்கட்டி ஒரு கட்டத்தில் நீள்விருக்கையில் ஒருவர் மீது ஒருவர் விழுந்து உருள, ஆர்யனை வயிற்றிலே குத்தி அவன் நிலை குலைந்த சிறு இடைவெளியில் அவனை தனக்கு கீழ் தள்ளி அவன் மீது அமர்ந்து கொண்டாள்.

நடந்த விளையாட்டில் முகம் முழுவதும் முடி வழிந்திருக்க, ஒற்றை கையால் கோதி சரி செய்த அஷ்மிதா,

“இப்போ சொல்றேன் கேளுங்க” என்று ஆரம்பிக்க, “அக்கா வேண்டாம்” என்று அவளை சுழற்றி தள்ளி சடுதியில் அவள் மீது ஆர்யன் அமர்ந்து வாயினை மூடிட முயன்றான்.

“டேய் விடேன்டா. அதான் இப்போ தெரிஞ்சிடுச்சு தானே?” என்று விமலா இருவருக்கும் நடுவில் புகுந்து சிறியவனை அமைதியாக்க முயற்சித்திட அவர் களைத்துப் போனது தான் மிச்சம்.

“உனக்கு கோபமில்லை சொல்லு. நான் சொல்ல மாட்டேன்” என்று அஷ்மிதா டீல் பேசிட, ஆர்யனும் அவளிடம் சமாதானம் ஆகினான்.

சிரித்தபடி இருவரின் சேட்டையையும் பார்த்திருந்த பிரணவ், “அதென்ன ஆந்திரா மீல்ஸ்?” என்று மீண்டும் ஆரம்பிக்க…

“தெய்வமே” என்று ஆர்யன் தன் அண்ணனின் காலிலே விழுந்துவிட்டான்.

“சரி… சரி… நான் எதுவும் கேட்கல. எழுந்திருடா” என்று பிரணவ் சொல்லிய பின்னரே வீடு அமைதியாகியது.

நேராக கிச்சன் சென்று தண்ணீர் குடித்து தன்னை ஆசுவாசப்படுத்திய ஆர்யன், அஷ்மிக்கும் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க…

“இப்போதானே ரெண்டும் அப்புடி அடிச்சிகிட்டாங்க… அதுக்குள்ள பாசத்தை பாரு” என்ற விமலா,

“இதுங்க என்னமோ பண்ணட்டும். உனக்கு எல்லாம் மாப்பிள்ளை சொல்லிட்டார் தானே பிரணவ்?” என்றார் பெரிய மகனிடம்.

அவர் அவ்வாறு கேட்டதில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த அஷ்மிக்கு மாப்பிள்ளை என்ற வார்த்தை புரையேற வைத்தது.

“எதே மாப்பிள்ளையா?” என்றவள், “உதய் உன்கிட்ட பேசினாராடா?” எனக் கேட்டாள்.

“ஆமா. பேசினாங்க.”, பிரணவ்.

“மாமா நேம் உதய்யா?” ஆர்யன் இடைப்புகுந்தான்.

“நீ வேற ஏன்டா?” என்ற அஷ்மிதா, “என்ன பேசினாங்க?” என்றாள்.

“அதெல்லாம் சொல்றதுக்கில்லை” என்றான் பிரணவ்.

“ஏன்… ஏன்… ஏன்… சொல்லக்கூடாது.”

“மாமாவுக்கும் மச்சானுக்கும் நடுவில் ஆயிரம் இருக்கும்” என்ற பிரணவ் தங்கையின் முகம் போன போக்கில் வெடித்து வந்த சிரிப்பை கன்னக்கதுப்பில் ஒளித்தான்.

“ம்க்கும்… ரொம்பத்தான். என்னால தான் அவங்க உங்களுக்கு மாமாவாக்கும். எனக்கு உன்னைவிட உரிமை அதிகம் பிரணு” என்று அஷ்மி புருவம் உயர்த்திட, “அப்படிங்களா?” என்றவன், “அப்போ அவர்கிட்டவே கேட்டுக்கோ” என்று அலைபேசியை அவளின் கையில் கொடுத்துவிட்டு விமலா பக்கம் திரும்பிக் கொண்டான்.

“டேய் அண்ணா யாருகிட்ட?” என்று பார்த்த அஷ்மிக்கு திரை நிறைத்த உதயன் முகம் கண்டு மூச்சே நின்றது.

“எல்லாம் ஓகே மாம்” என்ற பிரணவ், “நாளைக்கே எல்லாம் ஃபிக்ஸ் பண்ணிடலாம்” என்றான். அதனைத் தொடர்ந்து பெரியவர்களுடன் பிரணவ் அடுத்தடுத்த நிகழ்வுகள் குறித்து பேசிட, இங்கு அஷ்மியின் நிலை சொல்லவும் வேண்டுமோ?

வெட்கம் பிடுங்க, முகத்தை ஒளிக்க முடியாது திணறிக் கொண்டிருந்தாள்.

“நீங்க அப்படி ஓரமா போய் வெட்கப்படுங்க. நான் மாமாகிட்ட பேசுறேன்” என்று அலைப்பேசியை பறித்த ஆர்யன், அறிமுகமே இன்றி இயல்பாய் உதயனிடம் பேச ஆரம்பித்துவிட்டான். உதயனும் அவனுக்கு ஏற்றார் போல் பதில் பேசிட, ஆர்யனுக்கும் உதயனை பார்த்ததும் பேசியதும் பிடித்தது.

“பக்கி அண்ணா கோர்த்தா விடுற… எவ்ளோ நேரமாடா பார்த்திட்டு இருக்காங்க?” பிரணவ்வின் தோளில் அடி ஒன்று வைத்தாள்.

“உங்க ஃபைட் ஸ்டார்ட் ஆனதிலிருந்தே.” அலுங்காது அவளின் தலையில் இடியை இறக்கினான்.

அஷ்மிதா, “அப்போவேவா” என்று அதிர, “அக்கா எனக்கு மாமா டபுள் ஓகே. இந்தாங்க” என்று அலைபேசியை அவளின் கையில் வைத்தான்.

“அச்சோ நானில்லை” என்று அஷ்மி பதற, “பேசிட்டு மொபைல் கொண்டுவா” என்று பிரணவ் எழுந்து சென்றிட, பெரியவர்களும் பேச வேண்டியதெல்லாம் பேசி முடித்ததால் நேராமகாவும் தத்தம் அறைக்கு சென்றனர்.

கூடத்தில் தனியாக நின்ற அஷ்மிதா வேகமாக தன்னுடைய அறைக்குள் நுழைந்து, உதயனை பார்க்க…

“பிடிச்சிருக்கு அஷ்மிதா” என்று இதயம் தேங்கிய ரசனையாய் மொழிந்தான் உதயன்.

“ஹான்…” இமைகள் படபடக்க அவளின் நடுக்கம் கூடியது.

“அமைதியான அஷ்மிதாவை விட, சேட்டைக்கார அஷ்மிதாவை ரொம்ப பிடிச்சிருக்கு… ரொம்ப ரொம்ப” என்றான்.

அஷ்மிதா இமைகள் தழைத்து உதடு மடிக்க…

“பியூச்சரில் என் மேலயும் உட்காரலாம். பெர்மிஷன் கிரான்ட்டட்” என்று உதயன் சிரியாது சொல்ல…

“அச்சோ உதய்” என்று ஒற்றை கையால் முகம் மூடினாள் அஷ்மிதா.

அவளின் இயல்பில் அவளை ரசித்து அகம் சேர்த்தவன், நாளைய முடிவில் அவளை அவளாகவே தனக்குள் ஶ்ரீஹரித்துக்கொள்ளத் தயாரகினான்.

 

என் ஆயுள் நீயே 36

அந்த காலை வேளையிலும் உதயனின் இல்லம் பரபரப்பாக இயங்கியது.

திருச்செந்தூர் செல்ல அனைவரும் ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்.

“வேனிலே போயிடலாமா அண்ணா? காருன்னா மூணு, நாலு வண்டியை கிளப்பணும்” என்று இளங்கோவனிடம் ஆலோசனைக் கேட்டார் கஜேந்திரன்.

“நேத்து நைட்டே நம்ம டிராவல்ஸ்க்கு கால் பண்ணிட்டேன் இந்திரா. வேன் வந்திடும். டிரைவர் வேண்டாம் இன்பாவை ஓட்டச் சொல்லிடுவோம்” என்றார் இளங்கோவன்.

“சரிங்க” என்ற கஜேந்திரன், “குமரி இன்னும் வரலையே” என்றார்.

“அதெல்லாம் மாப்பிள்ளை கூட்டி வந்திடுவார்” என்று இளங்கோ சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ஜெயந்தன் தன் குடும்பத்தோடு வந்தார்.

குமரியின் முகம் இறுக்கமாக இருக்க,

“அங்க வந்து எதும் பேசி வச்சிடப் போறாண்ணா” என்றார் கஜேந்திரன்.

“மாப்பிள்ளை பார்த்துப்பார். கவலைப்படாத. நம்ம சாமியோட முதல் நிகழ்வு. சந்தோஷமா செய்வோம்” என்று பதில் வழங்கினார் கஜமுகன்.

அடுத்தடுத்து ஒவ்வொருவராக கிளம்பி கூடம் வர, அனைவரும் உதயனுக்கு காத்திருந்தனர்.

வேகமாக கீழே வந்த உதயன்,

“போயிட்டு கால் பண்ணுங்க தாத்தா” என்றான்.

“நீங்க வரலையா?” கங்கா கேட்க, “அரை மணியில சரக்கு கப்பல் கரை வருது. நான் இருக்கணும்” என்றான்.

“நீங்கயில்லாம எப்படி அப்பு?” காமாட்சியைத் தொடர்ந்து,

“நான் ஹார்பர் போறேங்க… நீங்க அங்க போறது முக்கியமாச்சே” என்றான் இன்பா.

“நேவி ஆபிசர்ஸ் ரிப்போர்ட்டில் நான் சைன் பண்ணனும் டா. நீங்க கிளம்புங்க. நான் வந்திடுவேன். கொஞ்சம் பின்ன ஆகும்” என்றான்.

“சரிங்க” என்ற கஜமுகன் நகர,

“அதெப்படி வர வேண்டிய ஆளு வராம நாங்க மட்டும் போறது. உங்களுக்குத் தான் அவங்களை நல்லாத் தெரியும்” என்று நல்லா என்ற வார்த்தையை அதீத அழுத்தத்தோடு கூறினார் குமரி.

ஜெயந்தன் மனைவியை கண்டனப் பார்வை பார்க்க,

தன் வீட்டு ஆட்களாகவே இருந்தாலும் திரும்பத் திரும்ப குமரியை கடிந்துகொள்ள யாருக்கும் மனம் வரவில்லை.

உறவென்று பார்த்து விட்டு வைப்பது தான் தவறென்று அவர்கள் அறியும் நேரமும் உண்டு.

“கிளம்பும் நேரத்தில் எதுக்கு தேவையில்லாத பேச்சு. அதுதான் கண்ணு வந்துடுவேன் சொல்றாங்களே! நாம நல்ல நேரத்தில் போய் சேருவோம்” என்று அனைவரையும் விரட்டினார் ஜெயலட்சுமி.

“வந்திடுவீங்க தானே அண்ணா?” கேட்ட நனியிடம், “கண்டிப்பாடா” என்றான் உதயன்.

எழில் மட்டும் இருக்கையில் உம்மென்று அமர்ந்திருக்க,

“என்னாச்சு?” எனக் கேட்டான், சிறியவளை காட்டி, பெரிய தங்கையிடம்.

“அவள் காலேஜ் போகட்டுமாம்” என்றாள் நனி.

“யார் சொன்னாங்க?”

“அத்தை தான். அவள் வயசுப்பொண்ணாம். அங்க எதுக்கு, பொண்ணு வீட்டுல ரெண்டு வயசு பசங்க இருக்காங்களாம்” என்று குமரி வந்ததும் கிளம்பி நின்ற எழிலைப் பார்த்து சொல்லியதை வார்த்தை மாறாது கூறிவிட்டாள் நனியிதழ்.

“ஹோ” என்ற உதயன், ‘தனு வயசுப் பொண்ணில்லையாமா?’ என கேட்க நினைத்ததை இதென்ன தானும் அவரைப்போல பின்தங்கி யோசிப்பது என்று மானசீகமாக தலையில் தட்டிக் கொண்டான்.

“தனு, நனியெல்லாம் மட்டும் அப்போ வரலாமா அப்படின்னு சித்தி கேட்டதுக்கு… அவங்களுக்கெல்லாம் முடிவாகிப்போச்சேன்னு சொல்றாங்க” என்று அவன் கேட்காததையும் உணர்ந்தது போல பதில் வழங்கியிருந்தாள்.

நனிக்கு தனுவுடன் சேர்த்து தனக்கும் முடிவானதாக குமரி சொல்லிய பொருள் விளங்கியது. அந்நொடி எப்படியும் தனக்கென பார்த்திருக்கும் பையனிடம் அண்ணா வருவதற்குள் பேசிட வேண்டும் என்று நினைத்தாள்.

உதயன் குமரி சொல்லியதில் கோபத்தில் இருப்பதால் தனக்கு முடிவாகியிருப்பதை உணரவில்லை என்று எண்ணிக் கொண்டாள். உதயனுக்கா தெரியாது? அனைத்தும் அவன் கண் பார்த்தல்லவா நடந்து கொண்டிருக்கிறது.

உதயனும் அவள் போக்கிலேயே அதனை கவனியாது போல் காட்டிக்கொண்டான்.

“நம்ம பிள்ளையை நாம எப்படி பார்ப்போம் அப்படிங்கிறதுல தான் மத்தவங்க பார்வை இருக்கு” என்று குமரிக்கு கேட்கும்படி சற்று உரக்கச் சொல்லிய உதயன், “நீ கிளம்புடா” என்றான் எழிலிடம்.

எழில், குமரி திரும்ப வேறெதுவும் மனம் போகும்படி சொல்லி விடுவாரோ என்று அவரை பார்க்க…

“உனக்கு உன் அண்ணியை பார்க்கும் ஆசையில்லையா?” என்று உதயன் குமரியை பார்த்துக்கொண்டே அடர்த்தியாகக் கேட்க, அனைவருக்கும் முன்பு ஓடிச்சென்று வண்டியில் ஏறியிருந்தாள் எழில்.

“பொண்ணு முடிவானதுக்கே மொத்தமா சாஞ்சாச்சுப் போல” என்று மற்றவர்களுக்கு கேட்கும்படி முணுமுணுத்துக் கொண்டு நகர்ந்தார் குமரி.

“எதோ ஆதங்கம். ஆத்தமாட்டாம பேசுறாள் கண்ணு. மனசுல வச்சிக்காதீங்க.” கங்கா மகனின் கன்னம் பற்றிக் கூற, “புரியுதும்மா. அவங்க தூக்கி வளர்த்த பிள்ளை. சட்டுன்னு விட்டுடமாட்டேன்” என்றான்.

“குடும்ப ஒத்துமையை நினைச்சு அமைதியாவே போவனும் அவசியம் இல்லை தம்பி. கொடுக்க வேண்டிய பதிலை சரியா கொடுக்கணும். இல்லைன்னா நம்ம தலை தான் உருளும். உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. ஆதங்கம் பழியா மாறிடக் கூடாதுப் பாருங்க. நாளைக்கு வாழ வர புள்ளை சுணங்கி நிற்கக்கூடாது. பார்த்துக்கோங்க” என்று தாயாக அவனுக்கு அறிவுரை சொல்லிச் சென்றார் காமாட்சி.

“இவ ஒருத்தி போதும் கண்ணு உங்களுக்கு” என்று தன் மகனை அவளின் பிள்ளைக்கு முதலாய் நினைக்கும் ஓரகத்தியின் அன்பில் நெகிழ்ந்தார் கங்கா.

“சரிடா பார்த்துக்கோ” என்று நனியுடன் வெளியில் வந்த உதயன், அனைவரும் ஏறியதும் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த இன்பாவின் பக்கம் வந்து…

“பத்திரம் டா” என்றான்.

“ஆமா இன்பா. மெல்ல போனாலும் பரவாயில்லை” என்றார் கஜமுகன்.

மொத்த குடும்பமும் பிறர் கண் நிறைய ஒன்றாக செல்வது மகிழ்வோடு சிறு அச்சத்தையும் கொடுத்தது. நல்ல மாதிரி சென்று திரும்ப வேண்டுமென்று.

“அண்ணா வந்துடுங்க.” இன்பா சொல்ல, “உன் ஃப்ரண்ட் பார்க்கப்போறியா இல்லை உன் அண்ணனுக்கு பார்த்திருக்கும் பொண்ணை பார்க்கப்போறியா?” எனக் கேட்டான் உதயன்.

என்ன பதில் சொல்வதென்று தெரியாது இன்பா திருதிருக்க…

“போடா போ… ஸ்டார்ட் பண்ணு” என்று சிரித்தான் உதயன்.

இருவரும் என்ன பேசி சிரித்துக் கொண்டனரென்று மற்றவர்களுக்குத் தெரியவில்லை என்றாலும், அவர்களின் ஆணி வேராய் திகழும் உதயனின் புன்னகையில் மன நிறைவோடு புறப்பட்டனர்.

உதயன் தங்களுடன் வராதது குறையாக இருந்தாலும், குடும்பமாய் ஒன்றாக செல்வதை ரசிக்கவே செய்தனர்.

அனைவரும் கலகலத்து பேசி சிரித்தபடி சென்று கொண்டிருந்தனர்.

ஊர் எல்லையை தாண்டும் நேரம் சட்டென்று இன்பா அடித்த பிரேக்கில் எல்லோரும் வேகமாக முன் இடித்து பின்னால் சரிந்தனர்.

“இன்பா” என்று அதட்டலாக அவன் பக்கம் வந்த கஜேந்திரன், “பார்த்து ஓட்டுடா. மொத்த குடும்பமும் இருக்கு” என்றார்.

“என்னப்பா சூதானம ஓட்டுய்யா” என்று இளங்கோவும் வர,

“நான் மெதுவா தான் பெரியப்பா ஓட்டினேன். ஆனா” என்று வெளியில் பார்த்தான்.

யாரென்று வண்டியின் முன் கண்ணாடி வழி பெரியவர்கள் இருவரும் எட்டிப் பார்க்க வந்தனா நின்றிருந்தாள்.

“இந்தப் பொண்ணு ஏன் இங்க நிக்குதுங்க” என்ற கஜேந்திரன் கீழே இறங்க முற்பட, “எதும் கோபமா பேசிப்புடாத இந்திரா” என்று தானும் தம்பியின் பின் இறங்கினார் இளங்கோ.

சன்னல் வழி யாரென்று எட்டிப் பார்த்த எழில், “இவங்களுக்கு பேச வேற இடமே கிடைக்காதா? எப்போ பாரு வழியை மரிச்சு நின்னுட்டு” என்றாள். தன் பக்கம் அமர்ந்திருந்த நனியிதழிடம்.

“யாரு எழிலு?”

“அந்த வந்தனா தான்க்கா” என்று எழில் சொல்லியதும், “கல்யாண அத்தனை சுலுவா நடக்காது போலயே” என்று குமரி. அவரின் பேச்சில் கேலி இருந்ததோ?

லட்சுமியின் பார்வையில் மேவாயை தோளில் வெட்டிக் கொண்டு திரும்பிக் கொண்டார் குமரி.

“என் பொண்ணால குடும்பத்துக்குள்ள பிரச்சினைன்னு ஒன்ன உருவாக்கிடாத பகவதி தாயே” என்று மேலோக்கி வணங்கிய லட்சுமி, “போற வழி பகவதி கோவில் கிட்ட நிறுத்து இன்பா” என்றார்.

(கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தியப்பெருங்கடல், அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா எனும் முக்கடல்கள் கூடுமிடத்தில், இந்தியாவின் தென்முனையில் அமைந்துள்ளது. சக்தி பீடங்களில் ஒன்று.)

“இப்போ கோவிலுக்குள்ள நுழைஞ்சு சீக்கிரம் வெளியில் வர முடியாது அத்தை” என்றார் காமாட்சி.

“ஆமா அத்தை டூரிஸ்ட்டர் கூட்டமே நிறைய இருக்குமே” என்றார் கங்கா.

“என் வீட்டு குலசாமிக்கு நல்ல விஷயம் பேசப் போறோம். மனசுல சடைச்சிக்கிட்டே வராளே. கொடி மரத்துகிட்ட நின்னாவது கும்பிட்டு கிளம்புவோம்” என்றார் லட்சுமி.

“என்னம்மா இது. இப்படித்தான் ஓடுற வண்டி முன்ன வந்து குறுக்க நிப்பாங்களா?” என்று இளங்கோ கேட்க, “அவன் சட்டுன்னு பிரேக் போடாம… ஒன்னு கெடக்க ஒன்னு ஆச்சுன்னா யாரு பதில் சொல்றது?” என்று காட்டமாகப் பேசினார் கஜேந்திரன்.

“நீ கொஞ்சம் சும்மா இரு இந்திரா” என்று தம்பியின் கையை பிடித்துக் கொண்ட இளங்கோ,

“எதுக்கு வண்டியை நிறுத்தின?” எனக் கேட்டார்.

“ஏன் உங்களுக்குத் தெரியாதா?” வந்தனாவின் தோற்றத்தில் பேச்சில் ஒருவித திமிர்.

கஜேந்திரன் பல்லைக் கடிக்க, அவரை பார்வையால் அடக்கினார் இளங்கோ.

“சொன்னா தான் தெரியும்” என்றார் இளங்கோ.

“எங்கப் போறீங்க எல்லாரும்?” மிதப்பாகக் கேட்டாள்.

“ஹேய் என்ன? பெரியவங்க மரியாத இல்லாம” என்று இறங்கி வந்த இன்பா அவளை அடித்து விடும் பாவனையில் எகிற…

“அடேய் நீயுமாடா. கொஞ்சம் பொறுமையா நில்லுடா” என்று மகனை அதட்டினார் இளங்கோ. அவரால் முறுக்கிக் கொண்டு சீறும் இருவரை சமாளிக்க முடியவில்லை.

“என் பேச்சுக்கு மரியாதைன்னா அமைதியா நில்லுங்க” என்று இளங்கோ சொல்லிய பின்னர் இருவரும் முகத்தை உர்ரென்று வைத்து தள்ளி நின்றனர்.

“ம்க்கும்… இன்னைக்கு போய் பொண்ணு பார்த்த மாதிரி தான்” என்ற குமரி, “வாடி தனு நாம இறங்கி வீடு போவோம்” என்றார்.

அதுவரை கஜமுகன் அருகில் அவருக்கு ஆதரவாக அமர்ந்திருந்த ஜெயந்தன்,

“என்னை அடிக்க வச்சிடாத குமரி” என்று விறைத்துக் கொண்டு குரல் கொடுக்கவும், அமைதியாக முகம் திருப்பிக் கொண்டார் குமரி.

“இளங்கோ பொறுமையும் கொஞ்ச நேரம் தான் ஜெயந்தா… நீயும் போ என்னன்னு பாரு” என்று கஜமுகன் சொல்ல, ஜெயந்தன் வண்டியை விட்டு இறங்க, உதயனின் கருநிற தார் வந்து நின்றது.

முன்னால் வேன் நிற்பதால் இறங்கி வந்த உதயன், அப்போது தான் வண்டியை விட்டு இறங்கிய ஜெயந்தனிடம்,

“என்ன மாமா வண்டியை நிறுத்திட்டீங்க?” என்று முன்னால் எட்டிப் பார்க்க விடயம் புரிந்தது.

ஒற்றை கையை இடை குற்றிஆயாசமாக உதயன் மற்ற கையால் நெற்றி வருட,

“மருதன் பொண்ணை கண்டிக்கவே மாட்டானா?” என்று புலம்பினார் ஜெயந்தன்.

அங்கு அவளிடம் இளங்கோ என்ன பேசிக் கொண்டிருந்தாரோ… அத்தனை நேரம் அமைதியாக இருந்தவர் சட்டென்று வந்தனாவை அடிக்க கை ஓங்கியிருந்தார்.

ஆண்கள் நால்வரும் பதறி அவரின் அருகில் செல்ல…

“சின்னப் பொண்ணுன்னு எல்லாம் பார்த்திட்டு இருக்கமாட்டேன். புரியாம பண்றேன்னு பார்த்தாக்க… இதென்னப் பேச்சு” என்று கொதித்த இளங்கோ, “இவள் நின்னா நிக்கட்டும். வண்டியை மேலவே ஏத்துடா” என்று வண்டியில் ஏற நகர்ந்தவரின் அடி மகனை கண்டு விட்டு நின்றது.

“ஒண்ணுமில்லைங்க. நீங்க வேலையை முடிச்சிட்டு சீக்கிரம் வாங்க” என்று ஏறினார்.

மற்ற ஆண்கள் முறைத்துக் கொண்டிருந்த வந்தனாவை அழுத்தமாகப் பார்த்தபடி நின்றிருக்க, அவளின் முகம் கூட காணவில்லை உதயன்.

வந்தனா நின்றிருந்த பக்கம் வண்டியை சரித்து சீராக்கி இரு வண்டியும் சென்றிருந்தது.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
30
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்