Loading

என் ஆயுள் நீயே 33

நனியிதழ் வர சொல்லிய இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே பிரணவ் உதயனின் வீட்டிற்கு முன்பு தன்னுடைய வாகனத்தை நிறுத்தியிருந்தான்.

அவனை எதிர்பார்த்து காத்திருந்த நனியிதழ், வெளியில் வண்டி நிற்கும் சத்தம் கேட்டதும் வேகமாக வாயில் கடந்து வந்தவள், பிரணவ் இறங்கும் முன்பு வண்டியில் ஏறி அமர்ந்திருந்தாள்.

“ஹேய் இதழ்.” அவளின் செயலை பிரணவ் எதிர்பார்க்கவில்லை.

“சீக்கிரம் வண்டியை எடுங்க… எடுங்க பிரணவ்” என்று வீட்டை பார்த்துக்கொண்டே அவனை துரிதப்படுத்தினாள்.

“வீட்ல பேச வேண்டாமா?”

“பேசணும்… ஆனால் இப்போ இல்லை. நீங்க முதலில் வண்டியை எடுங்க” என்றாள்.

“வெயிட்… வெயிட்…” என்ற பிரணவ், “இப்படியே வரியா நீ?” எனக் கேட்டான்.

“ஏன் என்ன?” என்று தன்னை குனிந்து பார்த்தவள், காலில் கை முட்டி ஊன்றி நெற்றியில் தட்டிக் கொண்டாள்.

வீட்டில் தனக்கு வசதியாக இருக்குமென்று அணியும் வகையிலான கணுக்காலுக்கு மேலான மிடி, கையில்லா பருத்தி சட்டை அணிந்து குழலை உச்சியில் முடிந்திருந்தாள். நெற்றியில் காதின் ஓரமெல்லம் கேசம் கலைந்து கிடந்தது.

“நீங்கதானே இருக்கீங்க… நாட் ஆன் இஷு… பர்ஸ்ட் இங்கிருந்து கிளம்புங்க” என்றவள் பக்கத்து வீட்டு மாடியில் குமரி நிற்பது தெரியவும், “அச்சோ அத்தை” என்று சட்டென்று அவன் பக்கம் சரிந்து குனிந்து கொண்டாள்.

அவளின் கை இரண்டும், ஹேன்ட் பிரேக்கில் படிந்திருந்த அவனது கையை இறுகப் பற்றியிருந்தது.

இருவரின் கையையும் மாற்றி மாற்றி பார்த்த பிரணவ் அடி மனதில் இதம் சேர்த்தான்.

“போ’ன்னா எங்கடி போறது?” ஹஸ்கியாய் ஒலித்தது அவனது குரல்.

“அச்சோ பக்கத்திலே எங்காவது போங்க” என்றவள், “டேய்… போடா” என்றாள். விட்டால் அழுதுவிடும் நிலை.

பிரணவ் வண்டியை இயக்கி அங்கிருந்து நகர, உதயனின் தார் அங்கு வந்து நின்றது.

தனக்கு முன் சென்ற வாகனத்தை சில நொடிகள் கூர்ந்து கவனித்த உதயன், சிறு சிரிப்போடு உள்ளே சென்றுவிட்டான்.

“வீட்டுல வந்து பேசுங்க சொன்ன… அழுதியேன்னு இவ்வளவு தூரம் வந்தா இப்போ பேச வேண்டாம் சொல்ற. இப்போ நான் என்ன பண்ணனும் இதழ்?”

ஊருக்கு தள்ளி கடற்கரை பகுதியில் காருக்குள் அமர்ந்திருந்தனர்.

“எனக்கும் என்ன பண்ணணும் தெரியல பிரணவ்” என்றவளின் பார்வை காரின் கண்ணாடியை தாண்டி தூரத்தில் ஒற்றையாய் தனித்து நின்றிருந்த தென்னை மரத்தில் படிந்திருந்தது.

“தெரியலன்னா?”

“எனக்கு உங்களை விட்டுகொடுக்க முடியாது” என்று அவன் பக்கம் திரும்பி கூறியவள், “செல்வா… அண்ணாவையும் விட்டுக் கொடுக்க முடியாது” என்றாள் கலங்கிய விழிகளுடன்.

“ம்ப்ச்…” என்று வேகமாக அவளின் கண்ணீரை துடைத்த பிரணவ், “அழமா பேசு” என்று அதட்டினான்.

“எதுக்கு இப்போ அதட்டுறீங்க… நானா வரவும் திரும்ப உங்க கெத்து காட்டுறீங்களா?” என்று எகிறினாள்.

“ஆமா நாங்க கெத்து காட்டி நீங்க மயங்கிட்டாலும்” என்ற பிரணவ், “நீ அழறது கஷ்டமா இருக்குடி” என்று தன் தலை கோதினான்.

அவனையே விழி அகலாது பார்த்த நனியிதழ், “மதியம் உங்களை டென்ஸ் பண்ணத்தான் வேண்டாம் சொன்னேன். சும்மா டீஸ் பண்ண ட்ரை பண்ணேன். அவ்ளோதான். இப்போ உண்மையிலேயே உங்க இடத்தில் இன்னொருத்தரா அப்படின்னு நினைக்கும் போது அதிகமா வலியாகுது” என்றாள்.

“அவ்ளோ பிடிக்குமா இதழ்?” அவளின் வார்த்தையில் அவன் உணர்வதெல்லாம் அப்பட்டமான காதல். அவள் சரியாக சொன்னாலோ இல்லையோ… அவன் அகம் கரைந்தான். மெய் சிலிர்த்தான். அவளின் காதலில்.

“நிறைய பிடிக்கும்” என்று அவனின் கண் பார்த்து சொல்லிய நனியிதழ், “அண்ணா பாவம்” என்றாள்.

“ஏன்?”

“எனக்குத் தெரிஞ்சு அண்ணா இது வேணும் அப்படின்னு கூட ஒன்னை ஆசைப்பட்டு கேட்டது இல்லை. முதல் முறையா கேட்ட விஷயம் அவரோட லவ்” என்று நிறுத்தி, “அண்ணாக்கு பொண்ணெடுத்து பெண்ணெடுக்கிற விஷயம் தெரியுமா தெரியல. தெரிஞ்சா கண்டிப்பா எனக்காக அவரோட லவ்வையும் தூக்கிப் போடுவார். ஆனால் இப்போ நான் என்ன பண்ணியிருக்கேன். கொஞ்சமும் யோசிக்காம, என் லவ் அப்படின்னு மட்டும் பார்த்து உங்களை இங்கவரை வர வச்சிட்டேன். செல்ஃபிஷ்ஷா திங்க் பண்ணிட்டேன்ல?” என்று முகம் சுருங்கக் கேட்டாள்.

“சோ?”

“நீங்க வேண்டாம் சொல்ல மாட்டேன். உங்களுக்காக என்னோட காத்திருப்பு அதிகம். நான் வேண்டாம் சொல்லி உங்களை இழக்க என்னால் முடியாது” என்று முகம் மூடி அழுதாள்.

உதயனுக்காக தன்னை வேண்டாமென்கப் போகிறாளென்று தான் பிரணவ் நினைத்தான். அதனால் என கேள்வியாக இழுத்து நிறுத்தினான். ஆனால் அவள் தன்னையும் விட முடியாதென மருகுவது பிரணவ்வுக்கு அவளின் காதலின் ஆழம் உணர்வதாய்.

உதயனை அவளுக்கு எத்தனை பிடிக்குமென்று அறிவான். அவனுக்காகக் கூட தன்னை விட்டுக்கொடுக்க முடியவில்லை என்றால்… அவளின் காதல் பேரன்பின் உச்சமல்லவா!

“உன்னை கட்டிக்கணும் தோணுதுடி.”

அழுது கொண்டே கண்களை துடைத்துக் கொண்டிருந்த நனியிதழ் அவனின் வார்த்தையில் பட்டென்று இருக்கையின் பின் சாய்ந்து காரின் கதவோடு ஒண்டினாள்.

“பதறாத… ரிலாக்ஸ்” என்ற பிரணவ், தன்னுடைய இரு உள்ளங்கையையும் பின் கழுத்தில் கோர்த்து தலையை உயர்த்தி கண்கள் மூடி அவளருகில் பொங்கும் தன்னுடைய நேச உணர்வுகளை அடக்கினான்.

சில நொடிகளில் தன்னை மீட்டு அவள் புறம் நன்கு திரும்பி அமர்ந்த பிரணவ்,

“உனக்கு பிடிக்காத எதையும் உன் அண்ணா செய்யமாட்டாங்க” என்றான்.

“எனக்கேத் தெரியும்.” சடுதியில் சொல்லியிருந்தாள்.

“அப்புறம் ஏன் வருத்தப்பட்டுட்டு இருக்க?”

“நான் சொல்ற நோ… அண்ணா லவ்வுக்கு எண்ட் ஆகிடுமே” என்றாள்.

“வேறென்ன டிசைட் பண்ணியிருக்க?”

“நாளைக்கு அந்தப் பையன் கிட்ட நேரா பேசிடுறேன். நம்ம லவ் பத்தி சொல்றேன். அதுக்கு அப்புறம் என்னன்னு பார்ப்போம்” என்ற நனியிதழ், “நம்ம லவ்வுக்காக அதிகம் யோசிச்சது அண்ணா தான். நமக்காக அண்ணா லவ் தோத்துப்போகக் கூடாது” என்றாள்.

‘நான்தான் அந்தப் பையன்.’ தொண்டை வரை வந்த வார்த்தைகளை அப்படியே விழுங்கினான்.

நாளை தெரியப்போகும் விஷயம், நடுவில் எதற்காக நனியிதழை இத்தனைக் குழப்ப வேண்டுமென்று நினைத்த பிரணவ்வுக்கு இக்கணம் உதயனின் எண்ணம் புரிந்தது.

விலகி இருப்பவர்களை பேச வைப்பதற்காக அவன் அடித்த பந்து இந்த குழப்பமென்று நன்கு புரிந்தது.

நேரில் பார்த்து சிறிது நேரம் மனம் விட்டு பேசினால் தீராத பிரச்சினைகளுக்கும் எளிதாக தீர்வு கிடைத்துவிடும்.

இங்கு இருவரும் தங்களின் காதலை நேரடியாக பகிர்ந்துக் கொள்ளவில்லை தான். ஆனால் அவள் அழைத்ததும் அவளுக்காக அவன் வந்து நின்ற வேகம், அவனின் காதலையும், தன் உறவுக்காக என்றாலும் அவனை விடமுடியாது அவனுக்காக அவள் சிந்தும் கண்ணீரில் அவன் மீதான அவளின் காதலை அவனும் நன்கு உணர்ந்து கொண்டனர்.

இருவரும் இதனை உணரத்தான் உதயன் இப்படியொரு ஆட்டமே ஆடினானோ?

‘உங்களை பார்க்கணும் தோணுதே மிஸ்டர்.உதயன்.’ மனதில் நினைத்த பிரணவ், நனியிதழின் விசும்பலில் தான் கவனம் பெற்றான்.

அவளின் கண்ணீர் நிற்காமல் வழிய, உண்மையை சொல்லிவிடலாமா என நினைத்த பிரணவ் நொடியில் வேண்டாமென்று முடிவெடுத்தான்.

‘சர்ப்ரைஸ்.’ மானசீகமாக கண்ணடித்துக் கொண்டான்.

“எப்படியும் நாளைக்கு அந்தப் பையன்கிட்ட பேசறதுன்னு முடிவு பண்ணியாச்சு. அப்புறமும் ஏன் அழற?” என்ற பிரணவ், “நமக்கு ஃபேவரா எதும் நாளைக்கு நடக்கலனா. அப்புறம் பார்த்துக்கலாம். அதுமட்டுமில்ல… இப்போ உன் அண்ணாக்கு தெரிஞ்சாலே பொண்ணு கொடுக்க சாம்திக்கமாட்டாங்க. ஃப்ரீயா விடு” என்றான்.

“ம்ம்…” என்ற நனியிதழ், “யோசிக்கத் தெரியாம யோசிச்சு… உங்களை இவ்வளவு தூரம் வர வச்சிட்டேன். சாரி” என்றாள்.

தற்போது அவள் முகத்தில் ஒரு தெளிவு.

“இவ்வளவு தூரம் வந்ததால் தானே மேடம் எவ்ளோ லவ் பண்றீங்க தெரிஞ்சுது. நமக்குள்ள இருந்த தூரத்தைவிட இப்போ வந்த தூரம் கொஞ்சம் தான்” என்றான். அவனின் பொருளிலும், பார்வையிலும் அவளுள் தடுமாற்றம்.

“போலாம்.” திக்கித் திணறிக் கூறினாள்.

“டூ மினிட்ஸ்” என்ற பிரணவ், “நமக்குள்ள இன்னும் பேசிக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்குல்ல. ஆனாலும் நம்ம லவ் ஃபீல் பண்ண முடியுது. லவ் யூ இதழ்” என்றான்.

“பிர…ண…வ்…”

“எஸ் இதழோட பிரணவ்” என்று வண்டியைக் கிளப்பினான்.

அவன் சொல்லியதில் நெஞ்சம் படபடக்க, கீழ் உதட்டை அழுந்த கடித்து விடுத்தாள்.

தன்னருகில் அவள் தன்னுடைய சுயமிழக்கிறாள். அவனுக்கு எப்படி இருக்கிறதாம்?

“ஓ காட்” என்று ஒற்றை கையால் பிடரியை வருடினான்.

இதுவரை அவனருகில் உணராத அவஸ்தை அவளிடம். அவனை பார்த்தும் பார்க்காது, விழிகளில் சடுகுடு ஆடிக் கொண்டிருந்தாள்.

‘பித்து பிடிக்க வைக்கிறாள்.’ மனதில் புலம்பிய பிரணவ், வண்டியை நிறுத்தியிருந்தான்.

வண்டி நின்றதில் சுற்றம் உணர்ந்த நனியிதழ், “அச்சோ… என்ன வீட்டு வாசலிலே நிறுத்திட்டிங்க” என்று பதறினாள்.

“பதறாம இறங்கி போ” என்ற பிரணவ், அவள் கதவில் கை வைக்கவும், “ஒருமுறை சொல்லிட்டு போடி” என்றான். பல வருட ஏக்கங்கள் சுமந்து.

தலையை மட்டும் அவன் பக்கம் திருப்பி சில கணங்கள் விழியோடு விழிகள் கலக்க விட்டவள்,

“ஐ லவ் யூ” என்று உயிர் உருக மொழிந்தாள். அத்தனை காதலையும் விழி வழி அவனுள் கடத்தியிருந்தாள்.

மனதில் தேனாய் அவளின் வார்த்தைகள் இறங்கிட, பல நாள் ஏக்கங்கள் விலகிட, “காட்” என்று இருக்கையில் பின் சாய்ந்து ஆசுவாசமாக கண்களை மூடிக் கொண்டான்.

அவனின் அத்தோற்றம் அவனது பல வருட வலியை அவளுக்கு பிரதிபலித்தது. அவன் முகம் காட்டிய காதல் வலியில் அவனின் நேசம் தனக்கு சற்றும் குறைந்ததல்ல என்பதை உணர்ந்தவள்,

“லவ் யூ பிரணவ்” என்று தன்னைப்போல் மீண்டும் மொழிந்திருந்தாள்.

“இறங்குடி. இல்லைன்னா இப்படியே கூட்டிட்டு போயிடுவேன்” என்றான். விழிகளைத் திறக்காது.

அவள் நேரடியாக சொல்லிய நேசத்தின் சுவடுகள் பதிந்த வார்த்தையில் அவனிடம் எத்தனை பெரும் ஆசுவாசம் குடி கொண்டதென்று அவளறிய வாய்ப்பில்லையே. இத்தனை நாள் தவிப்புகளுக்கு அவளை தன்னுடனே நிறுத்திக்கொள்ள அவனின் அகமும், புறமும் பரபரத்தது.

பிரணவ் சொல்லியதில் விழி விரித்த நனியிதழ்,

பிரணவ், “கிஸ் பண்ணனும் தோணுது” என்றதில் மின்னலாய் இறங்கி வீட்டிற்குள் ஓடி மறைந்தாள்.

அவள் சென்றுவிட்டாள் என்றதும் இமைகள் திறந்த பிரணவ், அவள் சென்ற திசை பார்த்து சன்னமாக முறுவலித்தான்.

தனது அறை பால்கனியிலிருந்து பிரணவ்வின் வண்டி வந்து நின்றது, நனியிதழ் அதிலிருந்து இறங்கி வீட்டிற்குள் நுழைந்தது என எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த உதயன், சத்தம் கேட்டு தன்னுடைய அலைப்பேசியை எடுத்துப் பார்த்தான்.

“தேங்க்ஸ் மாமா.” பிரணவ் அனுப்பியிருந்தான்.

 

 

என் ஆயுள் நீயே 34

உதயன் _ பிரணவ்…

இதுவரை பார்த்துக் கொண்டதில்லை. ஒரு வார்த்தை நேரில் பேசிக் கொண்டதில்லை.

இன்று மதியத்திற்கு மேல் தான் உதயன் பிரணவ்வுக்கு அழைத்து முதல் முறை அலைபேசி வழி பேசியதும் கூட.

அதுவும் உதயன், நனியிதழ் மற்றும் பிரணவ் தங்களது காதலை மேலும் சிக்கலாக்கிக் கொண்டால் இணைவது பெரும் கஷ்டமாகிவிடும் என்பதால், தன்னுடைய திருமணத்தை காரணமாக வைத்து இருவரையும் ஒன்றிணைக்க முடிவு செய்தான்.

குமரி தனுவின் திருமணத்திற்கு தாமதமாகிறது என்று சொல்லியதற்காகவும், நடுவில் வந்தனா செய்து வைக்கும் பிரச்சினைக்காகவுமே, இதுநாள் வரை தங்கைக்காக பார்த்திருந்த உதயன் தன்னுடைய திருமணத்திற்கு சம்மதம் வழங்கியிருந்தான்.

தன்னுடைய திருமணம் இரண்டு சிக்கல்களுக்கு தீர்வை வழங்கும் என்று நினைத்த போதே, தன் மனம் விரும்பும் பெண் அஷ்மிதா என்று கண்டுகொண்டதும், அஷ்மிதா தனது ஆசையாக பிரணவ் தான் தனக்கு எல்லாம் செய்ய வேண்டுமென்றதும், தன்னுடைய திருமணத்தை வைத்து சிறு ஆட்டம் ஆடிட முடிவு செய்தான்.

அதனை முதலில் அஷ்மிதாவிடம் சொல்லவும் செய்தான்.

“பெண்ணெடுத்து பெண் கொடுப்பது.”

“இது அவங்களை கார்னர் பன்ற மாதிரி ஆகாதா?”

உதயன் சொல்லிட அஷ்மிக்கு இப்படித்தான் கேட்கத் தோன்றியது. அதற்கு உதயன் விளக்கம் கொடுத்திடவே அவளுக்கும் இதுவே சரியெனப் பட்டது.

இத்திட்டம் உருவாகும் போது உதயனுக்கு நனியும் பிரணவ்வும் பேசிக்கொண்டது தெரியாது. இன்னமும் அவரவர் பார்வையில் விலகியிருப்பதாகத்தான் அறிந்திருந்தான். அதனால் நாளை பெண் பார்க்க பிரணவ் வீட்டிற்கு சென்றதும், அங்கு வைத்து இதனை சொன்னால், தன்னுடைய மற்றும் அஷ்மியின் காதலுக்காக… விருப்பமில்லை என்றாலும் நனி மற்றும் பிரணவ் திருமணத்திற்கு ஒப்புக்கொள்வர், அதன் பின்னரான அவர்களின் வாழ்வை அவர்களது அன்பே சேர்த்து வைக்கும் என்று எண்ணியே இப்படியொரு திட்டம் செய்தான்.

இதற்கு உதயனின் குடும்பமும், விமலா மற்றும் ராகவனும் சம்மதம் வழங்கிடவே சற்று நிம்மதி கொண்டான்.

தங்கைக்கு அடுத்து தான் தன்னுடைய வாழ்வென்று இருந்த உதயனுக்கு, நனியின் ஆசையை நிறைவேற்றாது தன்னுடைய திருமணம் நடப்பதில் விருப்பமில்லை. அஷ்மிதாவும் அவனுக்கேற்றார் போல் பிரணவ்வை முன்னிறுத்தி தனக்கு திருமணம் நடக்க வேண்டுமென்று சொல்ல, இருவரின் ஆசையையும் ஒற்றை திட்டத்தில் ஈடேற வைத்திட்டான்.

ஆனால் அவனே எதிர்பாராதது நனி மற்றும் பிரணவ் பேசிக் கொண்டது.

நனியிதழ் தனக்கும் பிரணவ்வுக்கும் இடையேயான உரையாடலை(விவாதம்) சொல்லியதும் உதயனுக்கு எங்காவது சென்று முட்டிக் கொள்ளாலாம் என்று தான் அக்கணம் தோன்றியது.

இருவரையும் எப்படியாவது சேர்த்திட வேண்டுமென்று அவனும் பலவித பாதைகள் அமைக்க அவற்றையெல்லாம் இருவரும் எளிதாக பாழ் செய்தால் அவனும் என்னதான் செய்வான். மானசீகமாக தன்னையே நொந்துக் கொண்டான்.

இனியும் தங்கையின் மனதை மட்டுமே கருத்தில் கொண்டு அமைதிகாத்தால் யாவும் சீர் பெறாது என்றே அவனின் அறிவு எடுத்துக்கூறியது.

அதனாலே உதயன் தங்கையிடம், “பிரணவ் உன்னை விரும்பியும் அன்னைக்கு உன்னையே வேணாம் சொல்ல வச்சதில் உனக்கு ஈகோ. உன்னோட ஈகோ சாட்டிஸ்ஃபை பண்ண இப்போ பிரணவ்கிட்ட பிளே பன்ற நீ” என்று சொல்லியதோடு, பிரணவ்விடம் மனம் திறந்து பேசுமாறு மறைமுகமாக எடுத்துக் கூறினான்.

ஆனால் நனி அதற்கு பிரணவ்வை சீண்டி விளையாட நினைப்பதாக சொன்னாலும், இருவரும் பயன்படுத்திய வார்த்தைகளுக்கு வீரியம் இருக்குமே! அது நிகழ்வின் பாதையை மாற்றி அமைத்துவிட்டால் இருவருக்கும் வலி கூடுமே தவிர குறையாது என்று சரியாக சிந்தித்த உதயன், நனி மற்றும் இன்பாவிடம் பேசிவிட்டு ஹார்பர் செல்வதாக கீழே வந்த சமயம், கஜமுகனிடம்…

“நாளைக்கு அங்க வைத்து சொல்லலாம் இருந்ததை இப்போ பட்டுகிட்ட சொல்லுங்க தாத்தா” என்று சொல்லி வெளியேறியதோடு, விமலாவுக்கும் அழைத்து நனியிடம் இப்போதே சொல்வதாக சொல்லி வைத்திட்டு, அவரிடமே பிரணவ்வின் அலைபேசி எண்ணை வாங்கி அவனுக்கு அழைத்தும் இருந்தான்.

ஒலி முழுதாக முடியும் தருவாயில் அழைப்பை ஏற்றிருந்த பிரணவ், உதயன் தன்னை அறிமுகம் செய்துகொள்ளும் முன்பே,

“சொல்லுங்க மிஸ்டர்.உதயன்” என்றிருந்தான் பிரணவ்.

பிரணவ் அவ்வாறு சொல்லியதும் தன்னை எப்படி அவனுக்குத் தெரியும், தான்தானென்று எப்படி கண்டுபிடித்தான் என்றெல்லாம் உதயன் ஆச்சரியம் அடையவில்லை.

இப்போதிருக்கும் நவீன வளர்ச்சியால் அழைப்பது யாரென்று அவர்களின் எண்ணை மட்டும் வைத்து வரலாற்றையே கண்டறிய முடியுமே. அது உதயனுக்கும் தெரியவே சாதாரணமாகவே எடுத்துக் கொண்டான்.

உதயன் எண்ணியது போல, ட்ரூ காலரில் வந்த உதயச்செல்வன் என்கிற பெயரை வைத்துதான் பிரணவ் உதயனை கண்டுகொண்டிருந்தான்.

“உங்ககிட்ட பேசணும் பிரணவ்” என்ற உதயன், முதலில் தான் அஷ்மிதாவை விரும்புவதாகத்தான் கூறினான்.

பிரணவ் நெற்றி சுருங்கியது இந்த திடீர் காதலின் காரணம் என்னவாக இருக்குமென்று. பிரணவ்வுக்கு உதயனைப்பற்றி எதுவும் தெரியாதே! அவன் தெரிந்தது எல்லாம் கல்லூரி நாட்களில் நனியிதழ் தன்னுடைய செல்வா அண்ணா என்று சொல்லி தான் கேட்டறிந்த விஷயங்கள் மட்டுமே. அதனை மட்டும் வைத்து குணத்தை அறிந்துகொள்ள முடியாதே. அதனால் வந்த யோசனை இது.

“உங்க தங்கச்சி லவ்வுக்காக பேசுவீங்க நினைச்சேன்” என்ற பிரணவ், “உங்க தங்கச்சி லவ் சேர்த்து வைக்க என் தங்கச்சியை லவ் பண்றேன்னு சொல்றீங்களா?” எனக் கேட்டான்.

உதயன் வாய்விட்டு சத்தமாக சிரித்திட…

“உங்களுக்கு அப்படித் தோணுதா?” எனக்கேட்டு, “இப்படியொரு எண்ணம் இருந்திருந்தா, உங்களை என் வீடு வரை பெண் பார்க்க வரவழைத்திருக்க மாட்டேன்” என்றான்.

அப்போது தான் முன்னர் நடந்த பெண் பார்க்கும் படலம் உதயனால் ஏற்பாடு செய்யப்பட்டதென்று பிரணவ்வுக்குத் தெரிந்தது.

“சாரி…”

உதயனை தவறாக எண்ணி அவ்வாறு கேட்டது தவறு என்றதும் யோசிக்காத மன்னிப்பைக் கேட்டிருந்தான் பிரணவ்.

“நானும் உங்க இடத்தில் இருந்திருந்தால் இதைக் கேட்டிருப்பேன்…” என்று தன்மையாக அதனை ஒதுக்கிவிட்டான் உதயன்.

அதிலே பிரணவ்வுக்கு உதயனை வெகுவாக பிடித்துவிட்டது.

“மேற்கொண்டு பேசலாமா?” என்ற உதயன், நனி தன்னிடம் அவளின் காதலை சொல்லியது முதல், இதுவரை தங்களது இரு குடும்பமும் சேர்ந்து பேசி எடுத்து வைத்திருக்கும் முடிவு வரை அனைத்தும் சொல்லிவிட்டான்.

அனைத்தும் கேட்ட பிரணவ்வுக்கு உதயன் அத்தனை உயர்ந்து தெரிந்தான்.

தங்கைக்காக, அவள் மீது கொண்ட அன்பிற்காக எத்தனை தூரம் அவன் யோசித்திருக்கிறான் என்று பிரமிப்பாக உணர்ந்தான்.

உதயன் தான் சொல்லியதில் அஷ்மியின் காதலை சொல்லவில்லை. ஆனால் அவள் மூலமாகத்தான் பிரணவ்வின் நடவடிக்கைகளை கவனித்ததை சொல்லியிருந்தான்.

அதனால் பிரணவ்வுக்கு தன்னால் பெண் பார்க்கும் நிகழ்வு வீணானதில் அஷ்மிதா கொண்ட கோபத்திற்கான காரணம் சரியாக விளங்கியது. ஆதலாலே அஷ்மிதா வந்து எல்லாம் சொல்லும் போது பிரணவ்வால் எளிதாக எடுத்துக்கொண்டு அவள் பக்கம் பார்க்க முடிந்தது. அவளை ஆதுரமாக அணைத்துகொள்ளவும் முடிந்தது.

“இப்போ நான் என்ன பண்ணனும்?”

பிரணவ் கேட்க, உதயனிடம் மீண்டும் புன்னகை.

“நனிகிட்ட நீங்க பேசணும்” என்றான்.

“போங்க பாஸ் நீங்க வேற” என்று சலிப்பாக மொழிந்தான் பிரணவ்.

உதயன் இயல்பாக பேசிட பிரணவ்வுக்கு அவனிடம் தானாக ஒரு நெருக்கம் வந்திருந்தது.

“பேசிட்டேன். மேடம் ரொம்ப கோபமா இருக்காங்க போல” என்றான்.

உதயன் தன்னிடம் நனியிதழ் கூறியதை பகிர்ந்துகொண்ட உதயன், “அவளை இப்போ உன்கிட்ட ஃப்ரீயா பேச வைக்கணும்” என்று தான் நினைத்ததைக் கூறினான்.

“நிச்சயம் உங்களுக்காக யாருன்னு தெரியாத பையனுக்கு அவள் ஓகே சொல்லிடுவாள் மாம்ஸ்” என்றிருந்தான். தன்னைப்போல் உதயன் நீட்டியிருந்த உறவை இறுகப் பற்றியிருந்தான் பிரணவ்.

“அவளுக்கு நான் முக்கியம் தான். ஆனால் நீயும் ரொம்பவே முக்கியம். எப்படியும் ஒரு பதட்டம் வருமே! அதில் உன்கிட்ட பேசணும் நினைப்பாள். வன்ஸ் நேரில் பார்த்துட்டால் ரெண்டு பேருமே ரிலாக்ஸ் ஆகிடுவீங்க” என்றான் உதயன்.

பிரணவ்வே உறவு வைத்து அழைத்திட, உதயனுக்கு உரிமையா ஒருமையில் பேச தடையில்லாமல் போனது. இதுவே பிரணவ் தன்னைவிட பெரியவனாக இருந்திருந்தால், மரியாதை கலந்து உரிமையை காட்டியிருப்பான்.

“நீங்க வேணா பாருங்க… விட்டது தொல்லைன்னு ஓகே சொல்லிடுவாள்” என்றான் பிரணவ்.

இருவரிடமும் காதலிருக்கும் அளவுக்கு புரிதல் இல்லை என்னது உதயன் அறிந்தது தான். அதனை தற்போது பிரணவ்விடம் சொல்லவும் செய்தான்.

“எனக்கே தெரியும் மாம்ஸ். பட் என்ன பண்றது? பேசினா தானே புரிதல் வரும். அதுக்குதான் அவள் தயாரில்லையே. நான் வேண்டான்னு எங்கிட்டவே அவ்ளோ ஈசியா சொல்றா. எவ்ளோ கோபம் வந்துச்சு தெரியுமா?” என்றான்.

“ஹான்…” என்ற உதயன், “இப்போ அவளே உனக்கு கால் பண்ணுவா. எல்லாம் ஸ்மூத்தா முடியும்” என்ற உதயன், “உன் லவ், உன் பெயின் அப்படின்னு பார்க்காத. அவளோட லவ், அவளோட பெயின் அப்படின்னு பாரு. இப்போ சொன்னியே அவள் வேண்டாம் சொன்னது கோபம் வந்துச்சுன்னு. ஆனால் அப்படி சொல்ல சொன்னது யாரு? நீதான? அப்கோர்ஸ் எனக்கு உன் பக்கமிருந்தும் புரியுது. நீயும் அதை ஈசியா சொல்ல சொல்லியிருக்கமாட்ட… ஒருமுறை எதிரில் இருக்கவங்க பக்கமிருந்து ரெண்டு பேருமே பாருங்க. கூடவே உங்களுக்குள்ள என்னியிருக்கோ வெளிப்படையா பேசுங்க” என்றான்.

“இப்படி எடுத்து சொல்ல ஆளில்லாம தான் நிறைய சொதப்பி வச்சிட்டேன் போல” என்ற பிரணவ், “எனக்கு உங்களை ரொம்ப பிடிக்குதே மாம்ஸ். மீட் பண்ணலாமா?” எனக் கேட்டான்.

“அடேய்…” என்று சிரித்த உதயன், “இப்போ என்கிட்ட சொன்னதை உன் ஆளுகிட்ட சொல்லுடா” என்றான்.

“என் ஆளு” என்ற பிரணவ், “மீன்ஸ்… உங்க தங்கச்சியா?” என்றான்.

“ஆமா ஆமா என் தங்கச்சி தான்” என்ற உதயனிடம், “இன்னொரு முறை சொல்லுங்க மாம்ஸ். நீங்களே உன் ஆளுன்னு சொல்லும் போது நல்லாயிருக்கு” என்றான்.

“டேய்… அவளுக்கு நான் அண்ணா டா.”

“எனக்கு இப்படியொரு அண்ணா கிடைக்கலையே. கிடைசிருந்தா இந்நேரம் உங்களை மாமா ஆக்கியிருப்பேன்” என்றான்.

“கற்பனை எல்லாம் நல்லாதான் இருக்கு” என்ற உதயன், “அதான் அண்ணாக்கு பதில் தங்கச்சி இருக்காங்களே” என்றான்.

“எஸ்… எனக்காக நிறைய யோசிப்பாள். என்னவும் செய்வாள்” என்றான் பிரணவ்.

அதிலே உதயனுக்கு பிரணவ் அஷ்மிதாவின் மீது வைத்திருக்கும் பாசம் உதயனுக்கு விளங்கிவிட்டது.

அதன் பின்னர் இருவரும் சகஜமாக சில நிமிடங்கள் உரையாடிவிட்டு பேச்சினை முடிக்க, அஷ்மிதா வந்து அனைத்தும் கூறினாள்.

ஏற்கனவே உதயன் வாயிலாக எல்லாம் தெரிந்திருந்தாலே பிரணவ்வால் அதிகம் அதிர்வோ ஆச்சரியமோ காட்டாது சாதாரணமாக யாவற்றையும் ஏற்க முடிந்தது. அத்தோடு அஷ்மியிடமும் புதிதாக தெரிந்துகொள்வதைபோல் காட்டிக்கொள்ள முடிந்தது.

உதயன் சொல்லியது போலவே நனியிதழ் அழைத்து தன்னுடைய காதலை வெளிப்படையாக சொல்லியதோடு அவனை நேரில் அழைக்கவும்,

அஷ்மிதாவிடம் இப்போது தான் எல்லாம் அறிந்தது போல காட்டிக்கொண்டு தன்னவளை பார்க்க நேரில் சென்றிருந்தான்.

செல்லும் வழியிலே உதயனுக்கு அழைத்து, “எப்படி மாம்ஸ்?” என்றவன், “வீட்டில் வந்து பேசனுமாம்” என்றான்.

உதயனும்… “வந்து பேசுடா. இப்போ தான் அவளுக்கு உன்கிட்ட லவ் சொல்லவே தைரியம் வந்திருக்கு போல” என்று வைத்திட்டான்.

அதன் பின்னர் நனியை சந்தித்து நனியிடமும் எதுவும் தெரியாததைப் போன்று அவளின் மனதில் தனக்கு இருக்கும் இடத்தை அறிந்து கொண்டு, தன் இதயத்தில் அவளிருக்கும் இடத்தையும் உணர்த்திவிட்டு, தங்கள் காதல் சேர முக்கிய காரணமாக இருந்த உதயனுக்கு நன்றி தெரிவித்திருந்தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
48
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்