Loading

என் ஆயுள் நீயே 3

நேரம் நீண்டது.

இன்னும் சற்று நேரத்தில் பொழுது புலர்ந்திடும். வெள்ளி முளைக்கக் காத்திருந்தது.

இதயம் முழுக்க வலி பரவி வேரூன்றி இருக்க, போக்கும் மார்க்கம் தெரியாது கைகட்டி வேடிக்கை பார்க்கும் நிலை உதயனுக்கு.

அண்ணனுக்காக தன் வலி மறைத்து, தூரப்புள்ளியாய் அலை மிதக்கும் மிதவையை வெறித்திருந்தாள் நனியிதழ்.

“இந்த காதல் எனக்கு வராமலே இருந்திருக்கலாம் அண்ணா. உங்களையும் ரொம்ப கஷ்டப்படுத்துறேன்” என்று சொல்லிய தங்கையை தோளோடு சேர்த்து அணைத்த உதயன், “பார்த்துக்கலாம் விடுடா” என்று தேற்றினான்.

ஆனால் அவனுக்கும் அந்த பார்த்துக்கலாம் எனும் வார்த்தையை எப்படி நிறைவேற்றுவதென்று தெரியதில்லை.

காத்திருந்து எடுத்து வைத்த அடியே சறுக்கிவிட்டது. அடுத்து என்ன செய்து தங்கையின் வதை களைவது, சிந்தையில் ஒன்றும் உதிக்காது தடுமாறினான்.

“உங்களை அவமானப்படுத்திட்டேன். வருத்தமா அண்ணா?” தயங்கித்தான் கேட்டாள்.

பின்னே படிப்பு முடிந்து நான்கு வருடங்கள் ஆகியும் திருமணத்திற்கு பிடி கொடுக்காத நனியிதழ், இம்முறை மிகுந்த சந்தோஷத்தோடு தன் விருப்பம் தெரிவித்துவிட்டு, பையன் வீட்டார் முன்பு விருப்பமில்லை என்று சொன்னால், அவளது குடும்பத்தாருக்கு தலைகுனிவு தானே! அவளும் என்னை செய்வாள்?

அவளது நிலை உணர்ந்த உதயனிடம் பதில் எதுவுமில்லை.

வீட்டின் கடைசிவாரிசு எழிலினியாக இருப்பினும், அவளுக்கும் சேர்த்து அதிக செல்லம் நனியிதழ். அதிலும் கஜமுகன் தாத்தாவிற்கு அவள் மீது, உதயனைக் காட்டிலும் அதிக பாசம்.

நனி படிப்பை முடித்துவிட்டாள் என்றதும், அனைவரின் ஒரே ஆசையாக இருந்தது அவளின் திருமணம் தான்.

அவளுக்கு முன்பு வயதில் மூத்தவள் தன்யா இருப்பினும், நனிக்கு முன்பு உதயனுக்கு திருமணம் செய்திட முடியாதே! தன்யாவுக்கும் உதயனுக்கும் தான் திருமணமென்று சிறு வயதிலேயே முடிவு செய்தது. அதில் குமரிக்கு தான் அதீத மகிழ்வு.

தன்னுடைய அண்ணன் மகன். மொத்த ஊருக்கும் மரியாதைக்கு உரியவன். வேறென்ன வேண்டும் அவருக்கு. தன் பிறந்த வீட்டில் தன்னுடைய மகள் ராணியாக வாழ்வது அவரின் பெரும் ஆசை.

தன்யா ருதுவான சமயமே, குடும்பத்து ஆட்களிடம் தன்னுடைய விருப்பத்தையும் சொல்லியிருந்தார் குமரி.

உரிமையானவள் கேட்கும் போது, மற்றவர்களின் விருப்பமும் அதுவாகவே இருந்திட யாருக்கும் மறுக்க காரணமில்லாமல் போனது.

“என்ன நடக்கணும் இருக்கோ அதுதான் நடக்கும். கால நேரம் கூடி வரும்போது அதை பார்ப்போம்” என்று வீட்டின் மூத்த தலைமுறையான ஜெயலட்சுமி சொல்லிட, உதயனின் திருமணப் பேச்சிற்காக குமரி காத்திருக்கிறார்.

அவரின் காத்திருப்பு நனியின் படிப்பு முடிந்ததும் அதிகரித்தது.

மெல்ல தன்னுடைய அன்னை ஜெயலட்சுமியின் மூலமாக நனியின் திருமணப் பேச்சை துவங்கி வைத்தார்.

நனி மறுத்து கூறும் முன்பு,

“படிப்பு படிப்புன்னு இப்போ தான் ஃப்ரீ ஆகியிருக்காள். எனக்கு என் தங்கச்சிக்கூட கொஞ்சநாள் இருக்கணும். இப்போதைக்கு கல்யாணம் செய்து கொடுக்கிற எண்ணம் எனக்கில்லை” என்று அழுத்தமாகக் கூறினான்.

அந்த அழுத்தமே என் பேச்சை மீறி எதுவும் நடக்கக்கூடாது என்று சொல்வதைப்போல இருக்க, அடுத்து யாருக்கும் உதயனின் பேச்சை மீறும் துணிவில்லை.

கஜமுகன் கூட, “இப்போ தானே படிப்பு முடிஞ்சுது. பெண் பிள்ளைங்க பிறந்த வீட்டில் தானே அதிக சந்தோஷத்தோடு இருக்க முடியும். உதயன் சொல்ற மாதிரி கொஞ்சநாள் போகட்டும்” என்றுவிட, குமரிக்கு முகம் சோர்ந்தது.

மூன்று மாதம் பொறுமையாக இருந்த குமரி,

“தனுவுக்கு வயசாவுது. எல்லாரும் அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?” என்று ஆரம்பித்தார்.

உதயனின் அன்னை கங்காவிடம் மனக்குறையாக பேசிட, கங்கா தன் கணவர் இளங்கோவனிடம் பேச்சினை எடுத்துச் சென்றார்.

அன்றிரவு இளங்கோவன் உதயனிடம் தனித்துப் பேசினார்.

“நனிக்கு இப்போ செய்ய விருப்பமில்லைன்னா… உன் கல்யாணமாவது நடக்கட்டும் தம்பி. நனியை’விட தனு மூணு வயசு மூத்தவள். இப்போவே இருபத்தி நாலு வயசாவுதே” என்றார்.

அடுத்து உதயன் சொல்லியதில், இளங்கோவன் அமைதியாக சென்றுவிட்டார்.

அடுத்தநாள் உதயன் மறுத்த விடயமறிந்து குமரி நேரடியாகவே உதயனிடம் சென்று நின்றார்.

அப்போதுதான் உதயன் உணவு உண்ண அமர்ந்தான். காமாட்சி உணவு பரிமாறிக் கொண்டிருந்தார்.

குமரியின் முகம் கோபமாக இருக்க, எதுவும் பேசி வைத்து மகன் உணவு உண்ணாது எழுந்துவிடுவானோ என்று நினைத்த காமாட்சி,

“தம்பி சாப்பிடட்டும் அண்ணி. உட்காருங்க. பேசிப்போம்” என்றார்.

காமாட்சி அளவுக்கு கங்கா வாய் திறந்து பேசிடமாட்டார். அவர் கைகளை பிசைந்துகொண்டு நின்றிருந்தார்.

மூவரின் முகத்தையும் மாற்றி மாற்றி பார்த்த உதயன்,

“சொல்லுங்க அத்தை. என்ன பேசணும்?” எனக் கேட்டிருந்தான். உணவில் வைத்த கையை விலக்கி.

“இப்போ ஒன்னும் பேச வேண்டாம். நீங்க முதலில் சாப்பிடுங்க தம்பி” என்றார் காமாட்சி.

“அதான் என்னன்னு கேட்டாச்சே. நான் பேச வந்ததை பேசிடுறேன்” என்றார் குமரி.

உதயன் எழுந்துவிட்டான்.

“அறிவு மங்கிப்போச்சா குமரி உனக்கு?” என்று கேட்ட ஜெயலட்சுமி, “இந்த வீட்டுக்காக ஓடி ஓடி உழைக்கிற என் தெய்வத்தை ஒரு வாய் சாப்பிட விட முடியாம அப்படியென்ன பேசணும் அவசியம் உனக்கு?” என்று மகளை கடிந்தார்.

அதையெல்லாம் குமரி கண்டுகொள்ளவில்லை.

“எனக்கொரு முடிவு இன்னைக்குத் தெரிஞ்சாகணும்” என்றார்.

“குமரி என்னதிது?” கஜேந்திரன் அதிருப்தியைக் காட்டினார்.

உதயன் அவர்களுக்கு சிறியவனாக இருந்தாலும், யாரும் அவனிடம் குரல் உயர்த்தியோ, சத்தமிட்டோ பேசியதில்லை. அவன் முன் சென்று நேருக்கு நேர் நிற்கவே தயங்குவர். கஜமுகனுக்கே பேரனிடம் அவ்வளவு மரியாதை. அதனால் குமரி கோபமாக பேசுவது அங்கிருக்கும் யாருக்கும் பிடிக்கவில்லை.

அந்நேரம் ஜெயந்தன் அங்கு வந்தார்.

குமரியின் வீடு அருகில் தான் உள்ளது. அவர் தன் வீட்டில் இருந்ததை விட, பிறந்த வீட்டில் இருந்தது தான் அதிகம். ஒற்றையாக பிறந்து வளர்ந்த ஜெயந்தனுக்கு மனைவியின் பிறந்த வீட்டு ஒட்டுதல் புரிய, அவருக்கு ஏற்றார் போன்று நடந்துகொள்வார். அவ்வீட்டிற்கு ஏற்ற குணமான மருமகன் அவர். அவருக்கும் உதயனிடம் அன்பு கலந்த மரியாதை. அவரும் மீன் ஏற்றுமதி மற்றும் இறால் பண்ணை வைத்திருக்கிறார். தொழிலில் எந்தவொரு முடிவு எடுப்பதற்கு முன்பும் உதயனிடம் கலந்தாலோசித்தே எடுப்பார். அந்தளவிற்கு உதயன் மீது மரியாதை அவருக்கு.

இங்கு குமரி உதயனை சாப்பிட விடாது பேசவுமே, எழிலின்பன் கண்காட்டிட, எழிலினி ஓடிச்சென்று ஜெயந்தனிடம் நடப்பதை சொல்லி அழைத்து வந்திருந்தாள்.

“என்ன குமரி இதெல்லாம். உன் சத்தம் வாசல் வரை கேட்குது” என்றார். குரலில் சத்தமில்லை, ஆனால் கடுமை சுமந்து வந்தது.

“என் பொண்ணு வாழ்க்கைக்கு என்ன பதிலுன்னு கேட்கிறேன்” என்றார் சளைக்காது.

“என்னால் தான் பிரச்சினை” என்று வாய்விட்டு சொல்லிய நனியை, பக்கவாட்டில் திரும்பிப் பார்த்த எழிலின்பன், தங்கையின் கையை ஆதரவாக பிடித்துக் கொண்டான்.

“இப்படி நினைக்கிறன்னு தெரிஞ்சாலே, அண்ணா ஃபீல் பண்ணுவாங்க” என்றான்.

“பேசாம நான் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிடவா?”

“உன்னால முடியுமா?” இன்பா கேட்டதும், கண்களில் நீர் நிரம்பிட, உதடுகள் துடிக்க இல்லையென்று தலையசைத்தாள் நனியிதழ்.

“எதுவும் யோசிக்காம அமைதியா இரு. அண்ணா பார்த்துப்பாங்க எல்லாம்” என்ற இன்பா, தன்யா அருகில் வரவும், தங்கையின் கையில் அழுத்தம் கொடுத்து நகர்ந்து சென்றான்.

தான் வந்ததும் விலகிச் செல்லும் இன்பாவை அடிபட்ட பார்வை பார்த்தாள் தன்யா.

“என் மகளுக்கு ஒரு பதில் சொல்லுங்க தம்பி” என்ற குமரியின் குரலில், நனி இடிக்க தன்யா நிகழ் மீண்டு நின்றாள்.

“இப்போதைக்கு பட்டுக்கு கல்யாணம் செய்யும் யோசனை எனக்கு இல்லை” என்று கூர்மையாக மொழிந்த உதயன், “வேற” என்றிட… “அப்போ உங்களுக்கும் தனுவு…” என அவர் முடிக்கும் முன்பு கைகாட்டி தடுத்திருந்தான்.

“எனக்கும் இப்போ கல்யாணம் செய்துக்க விருப்பமில்லை” என்றான்.

அடுத்து வேறென்ன கேட்டிட முடியும் குமரியால். திரும்ப அழுத்தமாகக் கேட்டு அவன், அவசரமென்றால் உன் மகளுக்கு வேறு பையன் பாருங்க என்று சொல்லிவிட்டால் என்ன செய்வார். உதயன் சொல்லக்கூடிய ஆள் தான். அதனால் அமைதியாக நின்றார் குமரி.

“வேற?”

குமரி ஒன்றுமில்லை என்பதைப்போன்று பார்த்தார்.

அங்கு நடக்கும் நிகழ்வு தனக்கு பாதகமாக அமைந்துவிடுமோ என்று பயத்தில் படப்டப்போடு நின்றிருந்த தன்யாவை அழுத்தமாக பார்த்தபடி வெளியேறினான் உதயன்.

“தம்பி… சாமி… சாப்பிடாம போறிங்களே” என்று ஜெயலட்சுமி, பின்னால் செல்ல… உதயன் வாயிலைத் தாண்டும் முன்பு…

“சாப்பிட்டுப் போங்கண்ணா” என்றாள் நனியிதழ்.

தங்கையின் சொல்லுக்கு அடுத்த அடி வெளி வைக்காது, திரும்பி உள்ளே வந்து உணவில் கை வைத்திருந்தான் உதயன்.

அங்கிருந்தால் குமரி வேறெதுவும் பேசி, குடும்பத்தின் அமைதி சூழலை குலைத்திடுவார் என்று கையோடு அழைத்துச் சென்றுவிட்டார் ஜெயந்தன்.

உதயன் அருகில் நனி செல்லவும் பெண்கள் அனைவரும் நகர்ந்து கொண்டனர். அவன் தங்கைக்கு மட்டும் தான் கட்டுப்படுவான் என்று எல்லோருக்கும் தெரியுமே! இருக்கும் சூழலில் அவளில்லாது தாங்கள் அருகிலிருந்தால், தட்டில் வைத்த உணவோடு முடித்துக்கொள்வான் என அறிந்து தான் தள்ளிச் சென்றனர்.

உதயன் எவ்வளவு உட்கொள்வானோ அவ்வளவு உண்ட பின்பே நனியிதழ் அவனை எழ அனுமதித்தாள்.

தந்தை மற்றும் தாத்தாவிடம் போய் வருவதாக தலையசைத்து வெளியேறிய உதயன், கார் அருகில் சென்றதும், தன் பின்னோடு வந்த தங்கையின் தலையில் உள்ளங்கை வைத்து அழுத்தம் கொடுத்தான்.

“சாரி செல்வா!”

“அப்புறம்” என்ற உதயன், “எதுவும் நினைக்காம இரு. நான் பார்த்துக்கிறேன்” என்றான்.

சொன்னது போலவே தங்கையின் மனதின் வலி அடங்கக் காத்திருந்தான். அவளின் மன மாறுதலுக்காக வேலைக்கு செல்ல வீட்டிலிருப்பவரிடம் அனுமதி வாங்கிக் கொடுத்தான்.

தங்கை பழைய இயல்புக்கு வரும்வரை, பொருமையாகக் காத்திருந்தான். அதில் கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஓடியிருந்தன.

குமரியின் பொறுமையும் கரை உடைத்திருந்தது.

உதயனுக்கும் வரவேண்டிய சாதகமான சூழல் வந்திட, அதற்கேற்றவாறு காய்கள் நகர்த்தி, தங்கை விரும்பியவனே அவளை பெண் பார்க்க வர ஏற்பாடு செய்தான்.

“பட்டுவை நாளைக்கு பெண் பார்க்க வறாங்க” என்று உதயன் சொல்லிட, அனைவரும் அகம் மகிழ்ந்தனர்.

இப்போதாவது தன்யாவின் வாழ்வுக்கு குறுக்கே தடையாக இருந்த நனியிதழ் திருமணத்திற்கு தீர்வு வந்ததே என்று குமரிக்குத்தான் அதிக சந்தோஷம்.

விடயமறிந்த நனியிதழ் இரவு உதயன் வீட்டிற்கு வருவதற்காகக் காத்திருந்தாள்.

அவளாக வந்து தன்னிடம் பேசுவதற்கு முன்பே, உதயன் தங்கையிடம் பேச அவளின் அறைக்குச் சென்றான்.

“அண்ணா” என்று அதற்குமேல் சொல்ல முடியாது தவித்தவளை தன் அருகில் அமர்த்திய உதயன், “நாளைக்கு வரப்போறது பிரணவ்” என்றான்.

ஒற்றைப் பெயர் அவளின் தேகத்தை சிலிர்க்க வைத்திருந்தது.

“நிஜமாவா?” சடுதியில் முகத்தில் ஒளி கூடி, கண்கள் பிரகாசிக்க அவள் கேட்க, இந்த முகத்திற்காக… இக்கணம் முகத்தில் இருக்கும் இந்த மகிழ்வுக்காக எதுவும் செய்யலாம் என்று நினைத்தான்.

அவனின் வருகைக்கே துள்ளிக் குதித்தவள், சேரவே முடியாதோ என்ற வலியோடு அவனுக்காக தவமிருந்தவள், அனைவரின் முன்பும் தானே அவனை வேண்டாமென்று சொல்லியிருந்தாள்.

அந்த இடத்தில் நனியிதழ், அவளுக்காக பார்த்து பார்த்து செய்த உதயனை அவமானப்படுத்தி விட்டதாகவே தற்போது அதிகம் மருகுகிறாள். அவளுக்கு காதலின் வலி புதிதல்ல. தன்னால் உதயனுக்கு மன வருத்தமென்றே அதிகம் வலி கொள்கிறாள்.

அதனை கேட்கவும் செய்தாள்.

“உங்களை அவமானப்படுத்திட்டேன் தோணுதா அண்ணா?”

தங்கையை தன் உயிராக நினைப்பவன், எப்படி அவளின் செயலை அவமானமாக நினைப்பான்.

தங்கையை தன் தோள் சாய்த்துக் கொண்டான்.

உதயனுக்கு தன் தங்கை இந்த காதல் வலியிலிருந்து மீண்டுவிட்டால் போதுமென்று இருந்தது.

இன்றைய தினம் துவங்கிய நேரம் தங்கையின் முகத்தில் ஒளிர்ந்த மகிழ்வை நினைத்துப் பார்த்தான்.

 

என் ஆயுள் நீயே 4

உதயன் அறைக்குள் வர சுருண்டு படுத்திருந்த நனியிதழ் எழுந்து அமர்ந்தாள்.

ஏழு வருடங்களுக்கு மேலான காதல்.

எப்படி மறந்து வேறு வாழ்வில் அடி வைத்திடுவாள். முடியவில்லை.

நான்கு வருடங்களாக பொத்தி வைத்த காதலை, சொல்ல நினைத்து அருகில் சென்ற நொடியே, பிரணவ் நண்பனிடம் பேசியதை தற்செயலாகக் கேட்க நேரிட, அவனிடம் காதலை சொல்லி வலி அனுபவிக்கும் திடமில்லாது திரும்பி வந்திருந்தாள்.

அன்று அவள் கதறிய கதறல். இன்று நினைக்கவும் உதயனின் உள்ளம் பதறும். உடல் நடுங்கிடும்.

உதயன் அன்று பேசியதற்காக, மூன்று வருடங்கள் அமைதியாக இருந்த குமரி மீண்டும், தன்யாவின் வயதை காரணமாக வைத்து அவளுக்குத் திருமணம் செய்ய வேண்டுமென்று பேச்சினை கிளப்பிட, ஜெயலட்சுமியிடம் பேசிக் கொண்டிருக்க, அதனை காமாட்சி உதயனிடம் சொல்லிவிட்டார்.

அன்றே உதயனுக்கு ஏற்ற, அவன் காத்திருந்த தகவல் வந்திட, என்ன செய்ய வேண்டுமோ அதனை சரியாக செய்து முடித்து, அடுத்த மூன்றாம் நாள்,

“நாளை பட்டுவை பெண் பார்க்க வருகிறார்கள்” என்று சொல்லி தன் பணிக்கான சென்றுவிட்டான்.

அன்று இரவு பணி முடித்து விடியலில் தான் வீடு வந்த நனியிதழ் உறங்கி எழுந்து மதியம் போலத்தான் அறையிலிருந்து வெளியில் வந்தாள்.

அன்னை கங்காவின் மூலம் விடயம் அறிந்ததும் அண்ணனுக்கு அழைத்துவிட்டாள்.

ஏற்றுமதி விடயமாக துறைமுகத்தில் நின்றிருந்த உதயன், அழைப்பினை கவனித்த போதும் எடுக்கவில்லை.

கப்பல் சரக்குகளை ஏற்றி நகர்ந்ததும்,

“எப்போ எந்த நாட்டில் இருக்குன்னு கவனிச்சிட்டே இரு இன்பா” என்று தம்பிக்கு உத்தரவிட்ட உதயன், அங்கிருந்து இறால் பண்ணைக்கு வந்தான்.

சந்தைக்குப் போக வேண்டிய இறால்கள் முகடென குவிந்திருக்க, ஏற்றுமதிக்கு அனுப்ப வேண்டியவை பதப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தன.

“நைட் வந்து பேசுறேன் பட்டு” என்று தங்கைக்கு தகவல் அனுப்பியவன், அடுத்தடுத்து தன் பணிகளில் மூழ்கிப்போனான்.

இரவு நேரமாகியும் வீட்டிற்கு செல்லாது, தங்களது கோல்ட் ஸ்டோரோஜ் பிரிவில் நின்றிருந்தான் உதயன்.

அருகில் வந்த இன்பா,

“மதியமே நீங்க சாப்பாட்டுக்கு வரலைன்னு, அம்மாக்கள் ரெண்டு பேரும் எனக்கு போன் போட்டு படுத்துறாங்க அண்ணா. இங்க எல்லாம் பேக்கிங் முடியும் வரை நானிருக்கேன். நீங்க கிளம்புங்க” என்றான்.

அப்போதும் செய்து கொண்டிருக்கும் வேலையை சரிபார்த்துக் கொண்டிருந்தான் உதயன்.

“நனி நாலு தரம் எனக்கு கால் பண்ணிட்டாள். பையன் யாருன்னு இன்னுமே நீங்க யாருக்கும் சொல்லல. பட் எனக்கொரு கெஸ் இருக்கு… நான் நினைக்கிறது சரிதானா?” எனக் கேட்டான் இன்பா.

நிமிர்ந்து தம்பியின் முகம் பார்த்த உதயன், மென் முறுவல் ஒன்றை உதிர்த்து… “பார்த்துக்கோ” என அவனின் தோளில் தட்டிச் சென்றான்.

அதிலேயே தன்னுடைய கணிப்பு சரியென்று இன்பாவுக்கு புரிந்திட, உள்ளம் மகிழ்ந்தான்.

எழிலின்பனுக்கும் தெரியுமே காதல் வலி. அவனும் காதல் துளிர்த்த கணம் முதல், விலகி ஓடுகிறான். வேண்டாமென்று தடைகள் போட்டும் மனம் காதலில் நிலையாக நின்றிட, சொல்லவும் முடியாது, தள்ளி வைக்கவும் முடியாது, அவனுள்ளும் காதல் ரணம். அந்த ரணம் தன் தங்கைக்கு நீங்கவிருக்கிறது எனும் மகிழ்வு அவனிடம்.

“அண்ணா கிளம்பிட்டாங்க.” நனிக்கு தகவல் அனுப்பிவிட்டு தன் வேலையை பார்க்க நகர்ந்தான்.

உதயன் வீட்டிற்கு வர, அன்னையர் இருவரும் அவனுக்காகக் காத்திருந்தனர்.

“என்ன தம்பி மதியம் சாப்பிட வரலையே?” காமாட்சி கேட்டிட, “எல்லாரும் சாப்பிட்டாச்சா?” எனக் கேட்டான்.

“ஆச்சுப்பா.”

“பட்டு?” கேள்வியாக நிறுத்தினான்.

“வரல. ரூமுக்கு கொண்டுப் போனேன், வேண்டாம் சொல்லிட்டாள்” என்றார் கங்கா.

“எடுத்து வையுங்கம்மா. வரேன்.”

நேராக தங்கையின் அறைக்குத்தான் சென்றான்.

“தம்பி வந்ததும் பையன் குடும்பத்தைப் பற்றி கேட்கணும், வந்து எழுப்புன்னு சொன்னாரு காமாட்சி. நான் போய் கூட்டியாரேன்” என்று கங்கா தன் கணவரை எழுப்பச் சென்றிட, “உதயன் வந்தாச்சா?” எனக் கேட்டபடி வந்தார் கஜமுகன். உடன் ஜெயலட்சுமி.

“வந்தாச்சு மாமா. ரூமுக்கு போயிருக்காங்க” என்ற காமாட்சி, “பையன் யாருன்னு விசாரிக்கணுமா?” எனக் கேட்டார்.

“ம்ம்… காலையிலும் ஒன்னும் சொல்லாம போயிட்டாங்க. நாளைக்கு அவங்க வர நேரமா கேட்க முடியும்?” என்ற ஜெயலட்சுமி, “எல்லாருக்கும் டி போடுத்தா” என்றார்.

உதயன் வண்டி சத்தம் கேட்டு, குமரி கூட ஜெயந்தனை கூட்டிக்கொண்டு அந்நேரத்தில் வந்துவிட்டார்.

“எவ்வளவு ஆவலாதி பாரு இவளுக்கு” என்ற லட்சுமி, “நனிக்கு அமைஞ்சிட்டா ரெண்டு கல்யாணத்தையும் ஒண்ணாவே கூட வச்சிடலாம்” என்றார்.

“முதலில் அவங்க நாளைக்கு வரட்டும். அப்புறம் பேசுவோம் அம்மா” என்று வந்தார் இளங்கோவன்.

கூடத்தில் பேச்சு சத்தம் கேட்டு, மற்றவர்களும் வந்துவிட்டிருந்தனர்.

அவர்களின் எதிர்பார்ப்புக்குரியவன் மட்டும் வரவில்லை. அந்நேரம் தங்கையின் முகத்தில் வெகு நாட்களுக்குப் பின்னர் தோன்றியிருக்கும் மனம் நிறைந்த புன்னகையை தாயுமானவனாக ரசித்திருந்தான்.

கதவினை தட்டிவிட்டு உதயன் அறைக்குள் வர, மெத்தையில் சுருண்டு படுத்திருந்த நனியிதழ் எழுந்து அமர்ந்தாள்.

அவளுக்கு அண்ணனிடம் கேட்கத் தயக்கம். தனக்காக தன் மனம் அமைதி கொள்வதற்காக, அவனுடைய திருமணத்தையும் தள்ளி வைத்து மூன்று வருடங்களுக்கு மேலாகக் காத்திருக்கிறான்.

அவனிடம் இனியும் வேண்டாமென்று சொல்லவும் முடியாது, அவன் சொல்லி மறுக்கவும் முடியாது என்று அண்ணனின் முகம் காணாது தலை கவிழ்ந்திருந்தாள்.

“பட்டு…”

ஒவ்வொரு முறையும் அந்த விளிப்பில் அன்பு மீதூறும். உயிர் நிறைந்த அழைப்பு நெஞ்சத்தை ஊடுருவும் தருணம், உதயனின் ஒட்டுமொத்த அன்பும் அந்த ஒற்றை வார்த்தையில் உணரப்படும்.

மெல்ல முகம் உயர்த்தி உதயன் முகம் பார்த்தாள்.

“எதாவது சொல்லணுமா?” தங்கையின் கரம் பற்றி தன்னருகில் அமர்த்திக் கொண்டான்.

“நீங்க என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம்.” உதடுகள் நடுங்க அவள் சொல்லிட, கண்ணிலிருந்து சரேலென கண்ணீர் வழிந்தது.

“நிஜமாவா?” கேட்ட உதயன், “அப்போ பட்டுக்கு மேரேஜ் ஓகே” என்றான்.

“அண்ணா…” தவிப்பாய் வெளிவந்தது அவளது குரல்.

“என்ன சொல்லணும் நீ? ஓபன் அப் யுவர் மைண்ட்” என்றான்.

“அவங்க இருந்த இடத்துல வேற யாரும் எனக்கும் வேணாம் அண்ணா.” எப்படிப்பட்ட வார்த்தைகள். வருடங்கள் பல கடந்த பின்பும் அவள் அதிலிருந்து மீண்டு வரவில்லை என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா என்ன?

“சோ?”

“உங்களையெல்லாம் கஷ்டப்படுத்தவும் விருப்பமில்லை” என்றாள்.

“அப்போ என்ன பண்ணப்போறீங்க?”

“அதான், நீங்க என்ன முடிவெடுத்தாலும்…”

சட்டென்று உதயன் பார்வை காட்டிய கூர்மையில் சொல்ல வந்ததை நிறுத்திக்கொண்டாள்.

“நீங்க வாழ்கை முழுக்க கஷ்டப்படலாம் டிசைட் பண்ணிட்டீங்க… ரைட்?” என்றான். ஒரு பக்க மீசை நுனியை திருகியவனாக.

“அண்ணா…” என்ற நனியிதழ், “நீங்க என்னை கஷ்டப்பட விடமாட்டிங்க தெரியும்” என்றாள்.

“அப்புறம் ஏன் நீ கஷ்டப்பட்டாலும் என் முடிவு ஓகேன்னு சொன்ன?”

அவனின் இந்த கேள்விக்கு அவள் என்ன பதில் சொல்லிடுவாள். அவளுக்காக வானத்தையும் காட்டி இழுத்து வருவானென்று அவளுக்குத் தெரியுமே!

“செல்வா…” மொத்தமாக உடைந்துப் போனாள்.

“நாளைக்கு வரப்போற பையன் பேரு பிரணவ்… குரு பிரணவ்” என்றான்.

சட்டென்று கண்களில் நீர் கோர்க்க…

தாவி அண்ணனின் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.

“நிஜமாவா?”

“ம்ம்” என்ற உதயன், “பட்டு சிரிக்கணுமே” என்று அவளின் தலையை பரிவாய் வருடினான்.

சடுதியில் முகத்தில் ஒளி கூடி, கண்கள் பிரகாசிக்க, மூரல்கள் பளிச்சிட நீண்டு இதழ் விரித்த தங்கையின் இந்த முகத்திற்காக… இக்கணம் முகத்தில் மின்னும் இந்த மகிழ்வுக்காக எதுவும் செய்யலாம் என்று நினைத்தான்.

“லவ் யூ செல்வா” என்றவளின் முகத்தில் சந்தோஷ ஆர்ப்பரிப்பு. கரை கடந்த பளிச்சிடல்.

“அவங்க ஓகே சொல்லிட்டாங்களா?”

துள்ளி குதித்து வினவினாள்.

“ஓகே சொல்லாமலா அவங்க வீட்டிலிருந்து வரேன்னு சொல்லியிருப்பாங்க?” என்ற உதயனுக்கு தங்கையின் சந்தோஷ முகம் காண காணத் தெவிட்டவில்லை.

“இப்போ இருக்க சந்தோஷம் உன் முகத்துல எப்பவும் இருக்கணும் டா.” அவளின் உச்சியில் கை வைத்து ஆசீர்வாதம் போல் மொழிந்தான்.

“நீங்க இருக்கும்போது என் சந்தோஷம் என்கிட்ட தான் இருக்கும்” என்றவள், “சரி சரி உங்களுக்காக மொத்த குடும்பமும் வெயிட்டிங். வாங்க போகலாம். பசிக்குது” என்று எழுந்து நின்று உதயன் கையை பிடித்து இழுத்தாள்.

“இவ்வளவு நேரம் பசி தெரியலையா?” எனக் கேட்டு, அவளின் அசட்டு புன்னகை பார்த்து தானும் சிரித்த உதயன், “ஃபைவ் மினிட்ஸ்” என்று தனதறை நுழைந்து, தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு மாற்றுடை உடுத்தி வந்தான்.

இருவரும் இப்படி சிரித்த முகமாக ஒன்றாக வருவதைப் பார்த்த குடும்பத்தினருக்கு, இவர்களை இப்படிப் பார்த்து எத்தனை நாளாயிற்று என்று தான் தோன்றியது.

“நானு… நானு…” என்று இருவருக்கும் நடுவில் ஓடி நின்ற எழிலினி, “என்னை விட்டுட்டு அக்காக்கு மட்டும் சாக்கி வாங்கிக் கொடுத்தீங்களா?” என்று உதயனிடம் கேட்டாள்.

“ஆமா… பத்து சாக்லேட்” என்ற நனியிதழ், “உனக்கில்லை” என்றாள்.

“நினைச்சேன். உங்க முகம் லைட் ஹவுஸ்க்கு இணையா இப்படி ஒளிவீசும் போதே நினைச்சேன். அண்ணா எனக்கு” என்று உதயனிடம் கை நீட்டினாள் எழில்.

“ஹேய் எழில் நான் சும்மா சொன்னேன்.” அவள் கை நீட்டி, உதயன் இல்லையென்று சொல்லிவிட்டாள் ஏமாந்துவிடுவாள் என்று பட்டென்று உண்மையை சொல்லியிருந்தாள் நனியிதழ்.

“அப்போ இல்லையா?” என்று எழில் முகம் சுருக்க… “எங்காவது காலேஜ் படிக்கிற பொண்ணு மாதிரியா நடந்துக்கிற?” என்றாள் நனி.

“உங்ககிட்ட நான் நானா இருக்கேன். இதுக்கு காலேஜ் படிச்சா என்ன? கெழவி ஆனாதான் என்ன?” என்று கேட்டவளின் முகம் பார்த்து சிரித்த உதயன், அணிந்திருந்த ட்ராக் பாண்டிலிருந்து பெரிய சாக்லேட் ஒன்றை எடுத்து நீட்டினான்.

“வாவ்… தேங்க்ஸ் அண்ணா” என்றவள் உதயன் கையை பிடித்துக் கொண்டு குதிக்க, தங்கையை ஆதுரமாக பார்த்து நின்றான் உதயன்.

மூவரும் மாடிப்படிகளின் இறுதியில் நின்று பேசிக் கொண்டிருக்க, பிள்ளைகளின் சிரித்த முகம் குமரியைத் தவிர்த்து மற்றவர்களுக்கு காண கண் போதவில்லை.

‘தங்கச்சிங்கன்னு ரொம்ப தான் பாசம் உருகி ஓடுது’ என நினைத்த குமரிக்கும் கூட தனது குடும்பம் மற்றும் குடும்பத்தினர் மீது அலாதி பாசம் தான். யாவும் மகள் என்று வரும்போது அடிபட்டுப் போகிறது.

அப்போதே கங்கா அடுப்படிக்கு சென்று, கை நிறைய கல் உப்பு அள்ளி வர, இன்பாவும் வீட்டிற்குள் நுழைந்தான்.

“வாய்யா… வந்து இப்படி அண்ணன், தங்கச்சிங்க பக்கத்துல நில்லு” என்றார்.

“சரிங்க பெரியம்மா” என்று உதயன் அருகில் வந்து நின்ற இன்பா, “என்னவாம்… நீங்க சிரிச்சிங்களாக்கும்?” என்று உதயன் காதில் கிசுகிசுத்தான்.

“அதே… அதே…” என்று எழில் கூற, “பேசாம நில்லு எழிலு” என்றவர், “தனுவும் இருந்திருக்கலாம்” என நால்வருக்கும் திருஷ்டி சுற்றி, உப்பை நிறை குடத்தில் போட்டு வந்தார்.

“மறக்காம காலையில அந்த குடத்து தண்ணியை செடிகளுக்கு ஊத்திடனும். நினைவூட்டு காமாட்சி” என்றார்.

அதற்குள் உதயன் மற்றும் இன்பா உணவு உண்ண அமர, காமாட்சி எடுத்து வைத்தார்.

குமரி கண்காட்டிட, “கொஞ்சம் பொறு” என்று அடக்கினார் லட்சுமி.

சாப்பிட்டு வந்து கஜமுகன் அருகில் அமர்ந்த உதயன்,

“பையன் பேரு குரு பிரணவ். திருச்செந்தூர். பிரணவ் குரூப் ஆஃப் கம்பெனிஸ் கேள்வி பட்டிருப்பீங்களே அவங்க குடும்பம் தான்” என்றான்.

“அவர் விஜயன் தானே” என்ற இளங்கோ, “அவரைத் தெரியுமே, நம்ம தேங்காய் பேக்டரி டிசைன் செய்து கட்டி கொடுத்தது அவர் தானே! என்ன இருபது வருஷத்துக்கு மேல ஆகிப்போச்சு. நல்ல நேர்மையான மனிதர். அதான் இவ்வளவு உயரம் வந்திருக்கிறார்” என்று பெருமையாகவே பேசினார்.

“பையன் என்ன பண்றாங்க?” கஜேந்திரன் வினவினார்.

“தனியா சாப்ட்வேர் கம்பெனி ரன் பண்றாங்க. சக்சஸ் குரௌத். அவர் ஃபீல்டில் நல்ல பெயர். விசாரிச்சிட்டேன்” என்றான் உதயன்.

இளங்கோவே நல்ல குடும்பம் என்று சொல்லியதோடு, உதயனும் பிரணவ் நல்ல மாதிரி என்றிட, அனைவரும் இந்த இடம் தகைய வேண்டுமென்று மனமார நினைத்தனர்.

“பிரணவ் போட்டோ” என்று உதயன் தன் அலைப்பேசியை கஜமுகனிடம் காட்டிட, ஒரு சுற்று வந்து மீண்டும் அலைபேசி உதயன் கை வந்தது.

அங்கு விமலா அலைபேசியில் காண்பித்த நனியிதழின் படமும் பிரணவ் கை சேர்ந்திருந்தது.

 

Epi 5 and 6

என் ஆயுள் நீயே 5 ம 6

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
11
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்